Monday, February 25, 2008

தங்க மரம் - 7

முன்கதைச் சுருக்கம்

கதிரவனும் சித்திரையும் ஆலமரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு பெட்டியையும் செங்கோலையும் சேர்த்து வைத்து உரசினார்கள். அப்பொழுது...
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5
பாகம் - 6


பாகம் - 7

கிணிகிணியென்ற மணியோசையும் துண்டு துண்டாக வந்து விழுந்த சொற்களும் இருவரையும் குழப்பியது. உரசிக்கொண்டிருக்கும் பொழுதே பெட்டியும் கோலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. அப்படி ஒட்டிக்கொண்டதும் பளீர் என்று ஒளிக்கீற்று செங்கோலில் இருந்து புறப்பட்டது. அது கண்ணுக்குத் தெரியாத வட்டவடிமான மாயத்திரையில் பட்டு காட்சிகள் தெரிந்தன. வியப்பின் உச்சியில் இருவரும் காட்சிகளைக் காணத் தொடங்கினர்.

காட்சியில் முதலில் ஆலோர் வந்தது. அந்தப் பின்னணியில் அழகிய பெண்ணின் முகம் தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கையில் பொலிவும் அறிவும் அருளும் அன்பும் நிரம்பிய தெய்வீகம் தெளிந்தது. ஒளிவீசும் செந்நிறக் கண்களும் சுற்றியும் ஜொலிக்கும் பொன்னிற ஒளியும் பார்த்த பொழுதிலேயே கதிரவனின் உள்ளத்திலும் சித்திரையின் உள்ளத்திலும் ஒரு மதிப்பை எழுப்பின. அந்த அருளுடைப் பெண்ணே பேசினார்.

"வணக்கம். நான் லிக்திமா. ஆலோர் கிரகத்து ஒளியரசி. சுடர்மகள் என்றும் என்னைச் சிறப்பித்து அழைப்பார்கள். உங்களுக்கு இந்தப் ஒளிப்படக் கருவியை அனுப்பியிருப்பது ஒரு உதவியை வேண்டித்தான். என்ன உதவி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆலோரின் தோற்றத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன். பிறகு உதவியைச் சொல்கின்றேன்.''

இப்பொழுது காட்சி மாறியது. ஆலோரின் சுவற்றில் இருக்கும் ஒரு கோபுரத்தின் உள்ளிருந்த அறை தோன்றியது. அந்த அறையின் ஒரு தங்கத் தொட்டிலில் சின்னஞ்சிறு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. ஒளியின் பிறப்பிடம் போலச் சுடர் விட்டுக்கொண்டிருந்த லிக்திமா உலகின் எந்த இசைக்கருவியும் இசைக்கலைஞரும் தோற்றுப் போகும் இனிமையுடன் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். அவருடைய மாணிக்கக் கண்களும் கழுத்துச் சங்கியில் தொங்கிக் கொண்டிருந்த முத்தும் ஆனந்த ஜோதியை வீசிக் கொண்டிருந்தன. சட்டென்று உள்ளே நுழைந்தார் சாண்டா. பொன்னாடை இடுப்பில் மினுக்க வைரம் நெஞ்சில் மினுக்க நுழைந்தார். கதையைப் படிக்கின்றவர்களுக்கு அவர்தான் ஊழிவாயன் என்று அழைக்கப்பட்டவர் என்பது இப்பொழுதே புரிந்திருக்கும்.

"லிக்திமா........ ஒரு வாரமாக நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த முத்தைக் கொடுப்பதில் உனக்கென்ன குறைந்து விடப் போகின்றது? நான் யார் என்பது உனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது தானே?"

"கணவனே..நீ யார்? சாண்டா. மண்ணின் மகன் என்று ஆலோர் போற்றும் மேலோன். ஆதியில் ஒன்றுமில்லாமல் இருந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆதியின் சோதியால்தான் எல்லாம் உண்டானது. அதாவது ஆதியே அனைத்துமாய் ஆனது. அந்த எல்லாவற்றிலும் ஆலோர் கிரகமும் ஒன்று. உலகின் மற்ற கிரகங்களைப் போலில்லாமல் தட்டைக் கிரகமாக ஆலோரை உண்டாக்கினார் ஆதி.

ஆலோரைப் பார்த்துக் கொள்ள தன்னிலிருந்தே நான்கு ஆற்றல்களை உண்டாக்கி அற்புத சக்திகளையும் கொடுத்தார். முதலில் மண்ணைப் பார்த்துக்கொள்ள உன்னை உருவாக்கினார். சாண்டா என்று பெயரும் இட்டு...உறுதியில் சிறந்து மக்களையும் மற்ற உயிர்களையும் தாங்கும் வலிமையைக் குறிக்க உனது நெஞ்சில் வைரம் பதித்தார். அடுத்து என்னை உண்டாக்கினார். ஒளியும் ஆற்றலும் என்னிடம் இருந்து நீங்கள் பொறுப்பேற்றுள்ள மண்ணின் உயிர்களுக்கு உண்டாகட்டும் என்று பணியும் கொடுத்தார். என்னைச் சிறப்பிக்க செவ்வொளி பரப்பும் மாணிக்கக் கண்களைக் கொடுத்தார். எனது ஒளியைக் கூட்டிக் குறைத்து இரவையும் பகலையும் உண்டாக்கினார். அதே போல நீருக்கு மெரிமாவையும் காற்றுக்கு விண்டாவையும் உருவாக்கினார். மெரிமாவிற்கு நீலக் கல்லை நாவில் பதித்தார். விண்டாவிற்கு மரகதத்தைக் இரண்டு உள்ளங்கைகளிலும் பதித்தார். நீரின்றி அமையாது உலகு என்பதால் மெரிமாவிற்கு நீர்மகள் என்ற சிறப்புப் பெயர். காற்றின்றி எதுவும் வாழாது என்பதால் விண்டாவிற்கு தென்றலன் என்ற சிறப்புப் பெயர்.

ஆலோர் சுற்றுச் சுவற்றில் நான்கு கோபுரங்கள் அமைத்து நம் நால்வருக்கும் கொடுத்தார். அங்கிருந்து நாம் ஆலோரைக் காத்து வருகையில் உனக்கு என்னையும் விண்டாவிற்கு மெரிமாவையும் மணம் செய்து வைத்து வாழ்வளித்தார். அன்றிலிருந்து நாம் ஆலோரைக் காத்துப் பராமரித்துக் கொண்டு வருகின்றோம். சரிதானே!"

"கேட்ட கேள்வி என்ன? சொல்லும் விடை என்ன? நான் யார் என்று கேட்டால் ஆலோரின் வரலாற்றையும் ஆதியின் பெயரையும் சொல்லி நானும் நீயும் ஒன்று என்று கதையளக்கின்றாயா?"

"குடும்பம் என்று வந்தால் கணவனும் மனைவியும் ஒன்றுதானே? இதில் பெரியோர் சிறியோர் என்ற பேதம் ஏது?"

"ஆகா...அழகான பேச்சு...ஆனால் அது மறக்கடிப்பது உன்னுடைய ஆணவத்தை. சுடர்மகள் அல்லவா...அதனால் என்னுடைய சிறப்பை இருளில் தள்ளவும் உன்னுடைய பெருமையை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தெரிந்திருக்கிறது."

"சாண்டா! என்ன பேசுகின்றாய்? எனக்கு ஆணவமா? உன்னை விட என் சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றேனா? சுடர்மகளாக என்னுடைய கடமையையும் மனைவியாக என்னுடைய வாழ்க்கையையும் ஒழுங்காக நடத்தியதால்தானே இரண்டு பரிசுகள் கிடைத்திருக்கின்றன."

"அந்த இரண்டு பரிசுகளை நீ பெற்றதால் என்னிலும் பெரியவள் நீ என்ன மமதையில் பேசுகின்றாய். கணவன் மனைவிக்குள் பெரியவர் இல்லையென்று சொல்லி விட்டு உன்னை உயர்த்திக் காட்டும் அந்த முத்தை என்னிடம் கொடுக்க மறுக்கிறாய். அதன் மூலம் நால்வரில் பெரியவள் நீ என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறாய். நீ ஒரு புகழ் விரும்பி."

ஆட்டிக் கொண்டிருந்த தொட்டிலை நிறுத்தி விட்டு எழுந்தார் லிக்திமா. அவருடைய பேரொளி சற்றுக் குன்றியது போலத் தோன்றியது. ஆனாலும் மிடுக்கிற்குக் குறைவில்லை.

"நானா புகழ் விரும்பி? சாண்டா..... இந்த முத்து ஆதி பரிசளித்தது. நமது மகள் தனிமா பிறந்த பொழுது கிடைத்த பரிசு. பகலில் நான் ஒளிரும் பொழுது இந்த முத்து வெள்ளொளி வீசும். மாலை வரவர நீலமாகி இரவிலோ அடர்ந்து ஒளிவீசும். ஆற்றலை நான் வெளிப்படுத்துகையில் அதைச் சீர்மை செய்யவும் உதவுகிறது இந்த முத்து. அதைக் கேட்டால் எப்படித் தருவது? உனது நெஞ்சிலே பதித்திருக்கும் பெரிய வைரத்தை யாரேனும் கேட்டால் தர முடியுமா?"

லிக்திமாவின் பேச்சு சாண்டாவிற்கு ஆத்திரத்தையே கூட்டியது. "நான்கு தெய்வங்களும் ஆளுக்கு ஒன்று என்று கற்களை வைத்திருக்கையில்...உனக்கு மட்டும் ஏன் இரண்டு? நமக்குள்ளே பாகுபாடு காட்டத்தானே?"

"சாண்டா... கொடுத்தது ஆதி. நாளையே உனக்கும் ஒரு பரிசு கிடைக்கலாம். அப்பொழுது மற்றவர்கள் பொறாமைப் பட வேண்டுமா? பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் நாம். வெறும் வெறுப்பில் இருந்தால் சரியாகுமா?"

"லிக்திமா. பேச்சைக் குறை. உனக்கான ஒன்று என்னிடம் இருந்தால் என்ன? என்னுடைய கழுத்தை இந்த முத்து அலங்கரித்தால் என்ன வந்துவிடப் போகிறது?"

"ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்?"

சாண்டாவின் ஆத்திரம் வைரத்தில் தெரிந்தது. செக்கச்செவேல் என்று நெருப்பாய் ஜொலித்தது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அந்த இடத்தில் இருந்து விலகி தன்னுடைய கோபுரத்திற்குச் சென்று விட்டான். மெரிமாவும் விண்டாவும் நிகழ்ச்சிகளைக் கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெய்வங்களுக்குள்ளே சண்டை எழுந்தால் ஆலோரை யார் காப்பாற்றுவது. ஆதியே வந்துதான் இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். பிரச்சனைக்குள் தலையிடாவிட்டாலும் தொடர்ந்து மெரிமாவும் விண்டாவும் நடப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தன்னுடைய கோபுரத்திற்குச் சென்ற சாண்டாவின் உள்ளத்தில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது. அதைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு தவறான எடுத்துக்காட்டாக தான் மாறப்போவது தெரியாமல் திட்டம் தீட்டினான் சாண்டா.

தொடரும்

பி.கு - படம் வரைந்து தரும் கிரண் பணிப்பளுவினால் இந்த வாரம் திட்டமிட்ட படி படம் தரமுடியவில்லை என்றும் அடுத்த வாரம் கண்டிப்பாக செய்து தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

17 comments:

said...

என்ன ஜிரா இது? லைட்டா டல்லடிக்கிறாப் போல இருக்கு! கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டுங்க, சென்ற பதிவைப் போல!

//ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்//

அதானே! அத வச்சிக்கிட்டு சாண்டோ என்னப் பண்ணப் போறான்-ன்னு தெளிவாச் சொன்னாவாச்சும் பரவாயில்லை! கொடுத்து தொலைக்கலாம்!

சும்மானாங்காட்டியும் கொடு கொடு-ன்னா, எப்படிக் கொடுப்பதாம்? என்னமோ போங்க! எல்லா மன்னர்களையும் வரம்புக்கு மீறிய வெத்து ஆசை தான் பாடாய்ப் படுத்துது, அன்றைய காவியங்களிலும் சரி, உங்க கதையிலும் சரி!

said...

வேண்டுகோள்:
பாத்திரங்களின் பெயர்களை ஒரு குடும்ப மர வரைபடமாப் (family tree) போட்டு சைட் பாரில் வச்சா, பேர் மறக்காம தொடர்ந்து வரும் பகுதிகளைப் படிக்க ஏதுவா இருக்கும்!

//ஆதியில் ஒன்றுமில்லாமல் இருந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக் கொண்டிருந்தது.//

நாத விந்து கலாதீ தத்துவமா? ஹிஹி! நடுவுல கொஞ்சம் கதைக்காக உடான்ஸ் பண்ணிட்டீங்க போல! ஆனாலும் கலக்கல்! வாழ்த்துக்கள் :-)

said...

நல்ல விறுவிறுப்பாகத் தான் செல்கின்றது. தொடருங்கள்!

said...

நல்லா கொசுவர்த்தி சுத்தறாங்களே இந்த சுடர்மகள். ஒரு கேள்வி கேட்டா சரித்திரமே சொல்லிட்டாங்களே!!

said...

கொஞ்ச நாள் இங்க வரல.. அஅனா பின்னிப் பெடலெடுத்திட்டிருக்கீங்க..

:)

Just scanned through.. really great imagination.

said...

விறுவிறுப்பாப் போகுது.

அங்கேயும் பொறாமை & போட்டியா?


விண்டா, மெரினா பெயர்கள் எல்லாம் சூப்பர்.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
என்ன ஜிரா இது? லைட்டா டல்லடிக்கிறாப் போல இருக்கு! கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டுங்க, சென்ற பதிவைப் போல! //

அதாவது இந்த வாரம் கொஞ்சம் வரலாறு சொல்ல வேண்டியதாப் போச்சுல்ல. அதான். :)

////ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்//

அதானே! அத வச்சிக்கிட்டு சாண்டோ என்னப் பண்ணப் போறான்-ன்னு தெளிவாச் சொன்னாவாச்சும் பரவாயில்லை! கொடுத்து தொலைக்கலாம்! //

என்ன செய்வான்? கழுத்துல மாட்டிக்கிட்டு அவன் வேலையப் பாப்பான்.

// சும்மானாங்காட்டியும் கொடு கொடு-ன்னா, எப்படிக் கொடுப்பதாம்? என்னமோ போங்க! எல்லா மன்னர்களையும் வரம்புக்கு மீறிய வெத்து ஆசை தான் பாடாய்ப் படுத்துது, அன்றைய காவியங்களிலும் சரி, உங்க கதையிலும் சரி! //

ஆமா. அதான் லிக்திமா குடுக்க மாட்டேன்னு சொல்லீட்டாங்க. :)

said...

கதை நல்லா சுவையா போகுது இராகவன். எனக்கு இந்தப் பாகமும் விறுவிறுப்பா போற மாதிரி தான் இருக்கு.

said...

ஒவ்வொரு வாரமும் புதிரோட முடிக்கிறிங்க..சூப்பர் ஜிரா ;))

\\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வேண்டுகோள்:
பாத்திரங்களின் பெயர்களை ஒரு குடும்ப மர வரைபடமாப் (family tree) போட்டு சைட் பாரில் வச்சா, பேர் மறக்காம தொடர்ந்து வரும் பகுதிகளைப் படிக்க ஏதுவா இருக்கும்!
\\

இந்த வேண்டுகோளை வழிமொழிகிறேன் ;)

said...

கலக்கலறீங்க பேரெல்லாம் ‍எங்கயிருந்து புடிக்கறீங்க நல்லா இருக்கு

said...

// தமிழ் பிரியன் said...
நல்ல விறுவிறுப்பாகத் தான் செல்கின்றது. தொடருங்கள்! //

நன்றி தமிழ்ப் பிரியன். தொடர்ந்து வந்து படிச்சுக் கருத்து சொல்லுங்க.

// இலவசக்கொத்தனார் said...
நல்லா கொசுவர்த்தி சுத்தறாங்களே இந்த சுடர்மகள். ஒரு கேள்வி கேட்டா சரித்திரமே சொல்லிட்டாங்களே!! //

ஹி ஹி என்ன செய்றதுங்க. படிச்ச பெண் கிட்ட வாயைக் குடுத்தா இப்பிடித்தான் கதை கேக்கனும் :)

// சிறில் அலெக்ஸ் said...
கொஞ்ச நாள் இங்க வரல.. அஅனா பின்னிப் பெடலெடுத்திட்டிருக்கீங்க..

:)

Just scanned through.. really great imagination. //

என்ன சிறில்.... உங்களை விடவா நான் எழுதீட்டேன். :)

said...

// துளசி கோபால் said...
விறுவிறுப்பாப் போகுது.

அங்கேயும் பொறாமை & போட்டியா? //

எங்கதான் இல்லை? கணவன் மனைவுக்குள்ள வர்ரப்பத்தான் பிரச்சனை பெருசாகுது..


// விண்டா, மெரினா பெயர்கள் எல்லாம் சூப்பர். //

ஹி ஹி.. ஆமாங்க டீச்சர். எனக்கே பிடிச்சிருந்தது. அப்புறம் அது மெரிமா... மெரினா கடற்கரை நினைவில் இருக்கு போல டீச்சருக்கு. ஒரு டூர் போட்டுருங்க.

// குமரன் (Kumaran) said...
கதை நல்லா சுவையா போகுது இராகவன். எனக்கு இந்தப் பாகமும் விறுவிறுப்பா போற மாதிரி தான் இருக்கு. //

நன்றி குமரன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும்ல ..அந்த மாதிரி ரவிக்கு இதுல கொஞ்சம் சுறுசுறுப்பு கொறைச்சலா இருக்கு. அவருக்கு அசைவம் வேணும். கொஞ்சம் ரத்த ருசி பாத்தாத்தான் விறுவிறு சுறுசுறுன்னு இருக்கும் அவருக்கு.

said...

//என்ன சிறில்.... உங்களை விடவா நான் எழுதீட்டேன். :)//

இதெல்லலம் ரெம்ப ஓவர். :)
பாசம் உங்க கண்கள மறைக்குது.:)

said...

ராகவன் = இணைய விட்டலாச்சாரியா!

ம்ம்.. கலக்குங்க!

said...

கதா பாத்திரங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிற மாதிரி தெரியுதே.
ஆனால் பெயர்கள் ஒவ்வொன்றும் மிக அருமை
நல்லாருக்கு.

said...

ராகவா,சூப்பர்மேன் மாதிரி யாரையாவது கதைக்குள்ளே விடுங்க... :)
ஒரு பைட் சீன் பார்க்கணும்.. :P

said...

//ஹி ஹி என்ன செய்றதுங்க. படிச்ச பெண் கிட்ட வாயைக் குடுத்தா இப்பிடித்தான் கதை கேக்கனும் :)//

நீங்க யார்கிட்ட கதை கேட்டீங்க? :))

பேர்லாம் நல்லா வைக்கிறீங்க!