Tuesday, March 10, 2009

பட்டாம்பூச்சி பறக்கும் இடத்தச் சொல்லடி...

பதிவு எழுதியே நாளாச்சுன்னு இருக்குற சமயத்துல தொடர்பதிவு எழுத வெச்சிட்டாங்க மதுமிதாம்மா.

பட்டாம்பூச்சி விருதை அவங்க வாங்கினது பொருத்தம். அதை எனக்கும் கொடுத்தது அவங்க அன்புக்குப் பொருத்தம். ஓசீல குடுத்தா ஓலப்பாயச் சுருட்டிக் கொண்டாருவோம். இதுல விருது குடுத்தா விருந்தே குடுத்த மாதிரியாச்சே! விட முடியுமா?



சரி. பட்டாம்பூச்சிக்கு வருவோம். பட்டாம்பூச்சி பறக்கும் இடத்தச் சொல்லடி? இது ஏ.ஆர்.ரகுமான் இசையமைச்ச பாட்டுல வரும். வாடி சாத்துக்குடிங்குற பாட்டு... புதிய மன்னர்கள் படத்துக்காக.

பட்டாம்பூச்சி பறக்கும் இடமா? எங்க பறக்கும். எல்லா மனிதர்களும் நாலு எடங்கள்ள பட்டாம்பூச்சி பறக்குறத உணர்ந்திருப்பாங்க. அதென்னன்னு கெக்குறீங்களா?

வயிறு, நெஞ்சு, கண், ...இந்த மூனு எடங்கள்ளயும் பட்டாம்பூச்சி பறக்கும். அப்படி எனக்குப் பறந்த அனுபவங்களைச் சுருக்கமாச் சொல்றேன்.

மொதல்ல வயிறு. இதுவும் சின்ன வயசுல நடந்ததுதான். தூத்துக்குடிக்காரங்க யாராச்சும் இதப் படிச்சீங்கன்னா....நான் சொல்ற புதுக்கிராமம் ஒங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். புதுக்கிராமத்துக்காரங்க யாரும் இதப் படிச்சீங்கன்னா நான் சொல்லப்போற எக்ஸ்டென்ஷன் மிடில் ஸ்கூலும் சிவசாமி கடையும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்.

அங்க எங்கத்த டீச்சரா வேலை பாத்தாங்க கொஞ்ச நாள். அந்தப் பள்ளிக்கூடத்துல நானும் நாலு வருசம் படிச்சேன். இது ரெண்டாவது...ம்ம்ம்.. ஆமா...அப்பத்தான். அந்தப் பள்ளிக்கூடத்துல ஆண்டாள் டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க ரொம்பக் கண்டிப்பான டீச்சர். விறைப்பா வருவாங்க போவாங்க. ஒருநாள் சிவசாமி கடைக்கு அத்தையோட போனேன். அங்க இருந்த மேடைல என்னையத் தூக்கி உக்கார வெச்சிட்டு வீட்டுக்குத் தேவையானத வாங்கீட்டிருந்தாங்க. அப்ப வந்தாங்க ஆண்டாள் டீச்சர். அத்தைட்ட ரெண்டு பேச்சுப் பேசிட்டு...என்னடா ராகவா எப்படி இருக்கன்னு கன்னத்தத் தொட்டாங்க. என்னன்னு தெரியலை... படக்குன்னு அந்த டீச்சரோட கன்னத்துல அறைஞ்சிட்டேன். அப்புறந்தான் என்ன பண்ணேன்னே புரிஞ்சது. அப்ப வயித்துல பட்டாம்பூச்சி பறந்துச்சு. ஆனா அந்த டீச்சர் நல்லவங்க. அதைப் பெருசாவே எடுத்துக்கலை. கண்டுக்கவும் இல்லை.

வயித்துல இருந்து நெஞ்சுக்கு வருவோம். நெஞ்சுக்கு நீதின்னு சொல்வாங்க. நமக்குப் பீதி வராம இருந்தாலே பெரிய விஷயம். ஆனா நம்ம நாட்டுல பலருக்கு நெஞ்சுக்கு ஜாதின்னு இருக்குறது வருத்தமான விஷயம். என்னுடைய நட்பு வட்டாரத்துலயே ஜாதி மொழியைத் தாண்டிய திருமணங்கள் உண்டு. அதெல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வுகள். அவர்கள் நீடு வாழ ஆண்டவனை வணங்குகிறேன். ரொம்ப விவரமாச் சொல்லாம சுருக்கமா சொல்றேன். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நண்பனுடைய காதலுக்குத் தூது போனப்போ நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறந்துச்சு.

அடுத்து கண்ணுக்கு வருவோம். ரொம்பச் சந்தோஷமா இருந்தாலும் ரொம்ப அழுதாலும் கண்கள்ள பட்டாம்பூச்சி பறக்கும். என்னுடைய வாழ்க்கையில் ஒரு முறை....ரொம்ப அழுதேன். ஏன் எதுக்குன்னு சொல்ல விரும்பலை. கிட்டத்தட்ட ஆறேழு வருசம் இருக்கும். அப்பக் கண்ணுல பட்டாம்பூச்சி பறந்தது. ஆனா... அதுக்கப்புறம்தான் எனக்கு வாழ்க்கையை எதிர் நோக்குற பக்குவமே வரத்தொடங்குன்னு நெனைக்கிறேன்.

சரி... பட்டாம்பூச்சி பதிவு எழுதியாச்சு. அடுத்து மூனு பேருக்கு இந்த விருதைக் குடுத்துப் பதிவுக்கு அழைக்கனுமாமே. அழைச்சிருவோம்.

இசைப்புதிர் கானாபிரபா.... இவருக்கு நான் அறிமுகம் சொல்ல வேண்டியதில்லை. பிரபா...வந்து பதிவு போடுங்க.

கலக்கல் கைப்புள்ள.... கைப்புள்ளன்னு இவருக்குப் பேருதான். ஆனா இப்ப இவருக்கு உண்மையிலேயே கைப்புள்ள இருக்கு. வாங்கய்யா வாங்க.

கண்ணன் கனியமுது கே.ஆர்.எஸ்.... ராமாயணம் சொல்ற இடத்துல எல்லாம் அனுமாரு இருப்பாருன்னு வைணவர்கள் சொல்வாங்க. ஆனா கே.ஆர்.எஸ் இருக்குற எடத்துல எல்லாம் அனுமார் இருப்பாருன்னு அவருடைய பதிவுகளின் பக்திச் சுவையை அனுபவிச்சவங்க சொல்வாங்க. வாங்க. வாங்க. வாங்க.

மதுமிதாம்மா பதிவுல இருந்து வெட்டு ஒட்டு. அதாங்க... தொடர்பதிவு விதிகள்.

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

23 comments:

said...

இப்பிடியா அசத்தறது ஜீரா... கே ஆர் எஸ்ஸைக் கூப்பிடுவீங்கன்னு தெரியும்:)
நீங்க அவரைக் கூப்பிடணும்னுதான் எதிர்பார்த்தேன் செல்வமே... நன்றி ஜீரா


கண்ணிலே மட்டும் இன்னொரு பட்டாம்பூச்சி பறக்க வேணாம்.(அப்படி பறக்கணும்னா அது காதல்ங்கற பட்டாம்பூச்சியா இருக்கட்டும்;))) ) எப்பவும் மகிழ்ச்சியாக இருக்கணும்னு வாழ்த்தறேன்.

said...

ஜீரா அங்கே வந்து பதிவுல இந்த பதிவோட லிங்க் குடுத்துட்டு போகணும். அது விதி சொல்லிட்டேன்.... ஆமா:)

said...

சாரிப்பா ஜீரா. உங்க லிங்க் இருக்கு. அதைப் பார்த்துட்டுதான் வந்தேன்.

அங்கேயே இணைக்கிற லிங்க் இருக்குமிலையா... அதுக்கு என்ன பெயர்
சொல்லுவாங்க தெரியலியே...

Links to this post

அப்பிடின்னு ஜீவா பதிவில கொடுத்துருக்கிறாப்பில நான் எப்படி கொடுக்கணும்னு தெரியல. அதைச் சொல்லறேன்.

said...

:D தூத்துக்குடி

said...

என்ன ராகவா இது? அடியேனுக்கு விருது மேல விருது? :))

"மகரந்தம்" வலைப்பூக்காரரு எனக்கு "பட்டாம்பூச்சி" கொடுக்கறாரா? ஜூப்பரு! :)

நன்றி! வாங்கிக்கறேன்! ஆனா பதிவெல்லாம் போடச் சொல்லக் கூடாது! ஆமா! :)

said...

//அந்த டீச்சரோட கன்னத்துல அறைஞ்சிட்டேன். அப்புறந்தான் என்ன பண்ணேன்னே புரிஞ்சது//

அடப்பாவீ! எதுக்கு அடிச்சே-ன்னு சொல்லவே இல்லையே?
நல்ல வேளை, "ஆண்டாள்" டீச்சர் கன்னத்துல வேற எதுவும் குடுக்காம இருந்தியே! :)

//நண்பனுடைய காதலுக்குத் தூது போனப்போ நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறந்துச்சு//

நல்ல விசயம்! நல்லா இருப்பா ராசா!

said...

என் தமிழ்மண இரண்டு விருதுகளைக் கூட மதுமிதா அக்காவுக்கு கொடுத்துருவேன்!

பின்னே...ராகவன் ஒரு வழியா...பதிவு போட்டுட்டான்-ல? :)

இப்படி விருது குடுத்து, விருது குடுத்துத் தான் உன்னைய பதிவு போட வைக்க முடியுமா ராசா? :)

கைப்ஸ் அண்ணே! காபி அண்ணாச்சி! வாழ்த்துக்கள்!

said...

//ஆனா கே.ஆர்.எஸ் இருக்குற எடத்துல எல்லாம் அனுமார் இருப்பாருன்னு அவருடைய பதிவுகளின் ...//

இதுல என்ன குத்து இருக்கு-ன்னு ஒன்னுமே புரியலையே! :)
"ஆண்டாள்" டீச்சரை அப்பவே அடிச்சான்!
"கண்ணன்" கனியமுதை இப்ப போட்டுத் தாக்குறான்!

என்னா ஒரு வைணவ அன்பு நம்ம ராகவனுக்கு! :)
ராகவன் வாயால் "அனுமார்"-ன்னு வந்துச்சே! அதுவே சந்தோசம்! :)))

said...

மயில் இறகு விருது தான் உங்களுக்கு கொடுத்து இருக்கனும். சரி பரவாயில்லை.

வாழ்த்துக்கள் ஜி.ரா. :)

கைப்புள்ள நான் ஏற்கனவே விருது கொடுத்துட்டேன். அதுக்கே அந்த தல அமைதி காக்குது. அதுக்கு பதில் சொல்லாம இதுக்கு பதில் சொல்லட்டும். அப்புறம் இருக்கு அவருக்கு ;)

said...

யப்பா..சாமி கண்ணை திறந்துடுச்சி ;)))

பதிவு போட்டாரு ஜீரா ;)

உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

said...

ஆகா உங்க அனுபவம் "ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே" ;)

எனக்கும் பட்டாம்பூச்சி தந்ததற்கு நன்றி, பாட்டுத் தொகுப்பில் தான் பதில் சொல்லணும் போல :)

said...

//உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)//

ரிப்பீட்டேய்!

said...

// Blogger மதுமிதா said...

இப்பிடியா அசத்தறது ஜீரா... கே ஆர் எஸ்ஸைக் கூப்பிடுவீங்கன்னு தெரியும்:)
நீங்க அவரைக் கூப்பிடணும்னுதான் எதிர்பார்த்தேன் செல்வமே... நன்றி ஜீரா //

உங்க எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்றதுக்காகவே அவரைக் கூப்டேன். :-) இப்ப மகிழ்ச்சிதானே. பட்டாம்பூச்சி விருது நீங்க குடுத்ததாச்சே. அதுக்குக் கொஞ்சமாவது ஏத்தாப்புல நடந்துக்க வேண்டாமா!

said...

// நிலாக்காலம் said...

:D தூத்துக்குடி //

வாங்க நிலாக்காலம். தூத்துக்குடின்னு சொல்லி நிப்பாட்டீங்களே. ஏன்? என்னாச்சு?

said...

பட்டாம்பூச்சி நம்ம பக்கம் பறந்து வந்தா என்ன என்ன எழுதலாம்ன்னு நினைச்சேனோ அதையெல்லாம் நீங்க எழுதிட்டீங்க. :-( பட்டாம்பூச்சி மகரந்தத்தைத் தேடித் தான் முதல்ல வரும்ன்னு தெரிஞ்சிருக்கணும். :-)

நீங்க எதுக்குங்க அனுமாருக்கு இந்த விருதைக் குடுத்தீங்க? ஏற்கனவே தமிழ்மணம் விருது கிடைச்சிருச்சுன்னு அனுமார் கணக்கா தாவிக்கிட்டு இருக்காரு. இப்ப இந்த விருது வேறையா? இனிமே ஆளைப் பிடிக்க முடியாது. :-)

said...

//தூத்துக்குடிக்காரங்க யாராச்சும் இதப் படிச்சீங்கன்னா....//

நீங்க சொன்ன இடம் எனக்குத் தெரியாது. ஆனா, தூத்துக்குடின்னு பார்த்ததும் சந்தோஷமா இருந்துச்சு. அதான்.. :D

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

என்ன ராகவா இது? அடியேனுக்கு விருது மேல விருது? :)) //

அடி ஏன்னு கேட்டு வாங்கிக்கிற ஒங்க நல்ல உள்ளத்துக்காகவே விருது குடுக்கனும்னு தமிழ்ச் செம்மல் குமரன் சொன்னாரு. ஆகையால விருது குடுத்துட்டோம்.

// "மகரந்தம்" வலைப்பூக்காரரு எனக்கு "பட்டாம்பூச்சி" கொடுக்கறாரா? ஜூப்பரு! :) //

பட்டாம்பூச்சி குடுக்கலை. பட்டாம்பூச்சி விருது. :)

said...

//தமிழ்ச் செம்மல் குமரன்//

ரொம்ப நன்றி இராகவன். ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருந்தேன். ஆன்மிகத்தை விட தமிழைப் பத்தி தான் நான் நிறைய பேசுறேன். ஆனா என்னை ஆன்மிகத்தோட இணைச்சு தான் எல்லாரும் சொல்றாங்க; யாருமே தமிழோட இணைச்சுச் சொல்றதில்லைன்னு. இப்ப அந்த ஏக்கம் தீர்ந்தது. :-)

தமிழ் செம்மல் சரியா? தமிழ்ச் செம்மல் சரியா? ஒற்று மிகுமா?

said...

//தமிழ் செம்மல் சரியா? தமிழ்ச் செம்மல் சரியா? ஒற்று மிகுமா?//

தமிழ்ச் செம்மல்-ன்னு சொல்லிய பிறகும் நீங்களே இந்த ஐயத்தைக் கேட்டா எப்படி குமரன்? :))

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகும்!

இராகவனைக் கேட்டா...
இரு பெயரொட்டு நண்புத் தொகையில் வலி மிகும்!-ன்னு சொல்லுவாரு! :))

said...

வாழ்த்துகள்

said...

// நாகை சிவா said...

மயில் இறகு விருது தான் உங்களுக்கு கொடுத்து இருக்கனும். சரி பரவாயில்லை.

வாழ்த்துக்கள் ஜி.ரா. :) //

நன்றி சூடானாரே. வெயிலில் சூடானோரே.

// கைப்புள்ள நான் ஏற்கனவே விருது கொடுத்துட்டேன். அதுக்கே அந்த தல அமைதி காக்குது. அதுக்கு பதில் சொல்லாம இதுக்கு பதில் சொல்லட்டும். அப்புறம் இருக்கு அவருக்கு ;) //

அட.. அமைதின்னாலே காக்கப்பட வேண்டியதுதானே. அதான் அவரு காக்குறாரு. ஆகையால பதிவு போட்டா நம்ம ரெண்டு பேர் பேரையும் சேத்துத்தான் சொல்வாரு. அப்படிச் சொல்லலைன்னாலும்... என் பேரைப் போட வேண்டாம்.. ஒங்க பேரையே போடச் சொல்லீர்ரேன். சரியா? முதமரியாதை ஒங்களுக்குத்தான். :-)

said...

பட்டாம்பூச்சி இராகவனாரே,
இதோ விருது பெற்று, ஏற்புரை! :)
http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html

விருது வாங்கி, விருது கொடுத்த கையோட, நீங்க பிரியாணி விருந்து போட்டதையும் பார்த்தேன் - அடுத்த பதிவில்! :)

said...

nice post...