Wednesday, November 09, 2005

தீபாவளி - 2005

தீபாவளி - 2005

சின்ன வயசு தீபாவளிகளையும் அதனால் கிடைத்த வலிகளையும் ஒரு பட்டியல் போட்டப்புறம் இந்த வருசம் தீபாவளி எப்படி இருந்ததுன்னு எழுதனுமுன்னு தோணிச்சு. அதான் இந்தக் கட்டுரை.

பண்டிகைன்னாலே திங்குறதும் கொண்டாடுறதும் தான. ஆகையால தீபாவளிப் பலகாரகங்களைப் பத்தி மொதல்ல பாப்போம்.

ஊர்ப் பலகாரங்களிலேயே எனக்கு அதிரசமும் சுசியமும் ரொம்பப் பிடிக்கும். அப்படீன்னா என்னன்னு எல்லாருக்கும் தெரியுமுன்னு நினைக்கிறேன். அதிரசம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. சுசியத்துக்கு ஊரூருக்கு ஒவ்வொரு பேரு. உருண்டைய இருக்கும். உள்ள இனிப்பா பூரணம் இருக்கும். அதுதான் சுசியம். எண்ணெய்ல பொரிச்சி எடுக்குறது.

அதிரசம் கொஞ்சம் சிரமம். ஆகையால இந்த தீபாவளிக்குச் சுசியம் செய்யலாமுன்னு ஆசை. ஆனா எப்படிச் செய்யுறதுன்னு தெரியாது. இனிப்பு உருண்டைய மாவுல முக்கி எண்ணெயில போடுறத பாத்துருக்கேன். முழுப் பாசிப்பருப்புல செஞ்சதுன்னு தெரியும். ஆகையால நானே என்னுடைய ஆராய்சியைத் தொடங்கி சுசியம் சுடலாமுன்னு நெனச்சேன். ஒருவேளை ஆராய்ச்சி தோல்வியாயிட்டா? அதுக்குதான இருக்கு ரவாலட்டு. நானொரு ரவாலட்டு ஸ்பெஷலிஸ்ட். அப்படியே அம்மாகிட்ட இருந்து வந்தது. ரவாலட்டும் செய்வோமுன்னு முடிவு செஞ்சேன். அப்பத்தான் ஒன்னு போனாலும் இன்னோன்னு இருக்குமுன்னு தீபாவளிக்கு மொத நாள் சாங்காலமே ஏற்பாடுகளைத் தொடங்கினேன்.

மொதல்ல பாசிப்பருப்பைக் கொஞ்சமா தண்ணி ஊத்தி குக்கர்ல வெச்சாச்சு. அப்படியே ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா வறுத்து ஆற வெச்சாச்சு. ஆற வெச்ச ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா அரைச்சுக்கிட்டு அதுக்குப் பாதிக்குக் கொஞ்சம் குறைவா சீனியை அரைச்சிக்கிட்டாச்சு. ரெண்டையும் கலந்து ஒரு சட்டியில எடுத்துக்கிட்டேன். அப்புறம் நெய்யக் காய்ச்சி அதுல முந்திரியும் திராட்சையும் போட்டு, அந்த நெய்யை அப்படியே ரவைக் கலவைல கொட்டி, சூடு ஆறும் முன்னாடியே உருண்டை பிடிச்சாச்சு. கமகமன்னு வாடை. பக்கத்து வீட்டுக்கே போயிருச்சு. அவங்களுக்கு ஒரு அஞ்சு உருண்டை.

அடுத்தது வெல்லத்தப் பொடிச்சு வேக வைத்த பாசிப்பருப்புல கலந்தேன். என்னவோ கோளாறு. கொழகொழன்னு இருந்தது. கட்டியா இருந்தாதானே உருண்டை பிடிக்க வரும். சரி. ஆண்டவன் விட்ட வழின்னு, கொஞ்சம் அரிசிமாவையும் மைதா மாவையும் கலந்து கரைச்சிக்கிட்டேன். சஃபோலா கரடி ஆயிலை ஊத்திக் காயவெச்சு, உருண்டைய மாவுல முக்கிப் போட்டா..........எல்லாம் ஒடஞ்சு போயி எண்ணெய்யோட கலந்திருச்சி.

ஒரே சோகம். ச்ச. ஒரு பலகாரம் செய்ய வரலையேன்னு வருத்தப்பட்டு அடுப்ப அணைச்சாச்சு. இப்ப ரெண்டு இனிப்பு ஆச்சு. ஒன்னு ரவாலட்டு. ரெண்டாவது இனிப்புப் பருப்பு. பின்னே அந்தப் பருப்பை என்ன செய்வது?

தீபாவளி அன்னைக்குக் காலைல ஏழு மணிக்கெல்லாம் ஃபோன். அப்பாதான். வாழ்த்துகள் சொல்லத்தான் எழுப்புனாரு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துச் சொல்லீட்டு மறுபடியும் படுத்தாச்சு. அப்படியே ஒரு எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தீபாவளி மெசேஜ் டைப் பண்ணி, அனுப்ப வேண்டியவங்களுக்கெல்லாம் மொபைல்ல அனுப்பினேன்.

அப்படியே குளிச்சி முடிச்சிட்டு பூஜைய முடிச்சேன். அரளிப்பூவும் குட்டிக்குட்டியா ரோஜாப்பூக்களும் இருந்தது. சாமி ஷெல்ஃபைத் தொடச்சு மறுபடியும் அடுக்கி விளக்கேத்தி சாமியும் கும்பிட்டாச்சு. அப்புறமென்ன சாப்பிட வேண்டியதுதான.

பக்கத்துல தங்கீருக்குற ரெண்டு நண்பர்களை தீபாவளிக் காலைச் சாப்பாட்டிற்கு வரச் சொல்லீருந்தேன். வந்தவங்கு இனிப்பு வகைகளையும் தோசையும் குடுத்து திருப்திப் படுத்தியாச்சு. அதுல பாருங்க, அந்த இனிப்புப் பருப்பை ரெண்டாவது வாட்டி கேட்டு வாங்கிச் சாப்பிட்டாங்க.

பெறகு கொஞ்ச நேரம் டீவி. ஆனா ஒழுங்கா டீவி பாக்க யார் விட்டா? ஒரே வேட்டுச் சத்தம். போன வருசத்தை விட இந்த வருசம் சத்தம் கூடியிருக்கு. சின்ன வயசில் இருந்தே அதிர் வேட்டுகளை விட வேடிக்கை வானங்களிலே ஈடுபாடு உண்டு. அதுனால இந்த வருசம் ஒன்னும் வாங்கலை. ஆஃபீசுல தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்துல வான வேடிக்கைகள் காட்டுனாங்க. அது ரொம்ப நல்லா இருந்தது. அதுலயே திருப்தி வந்துருச்சு.

சன் டீவிய அப்படியே விட்டுட்டு ஜெயாவைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்ததே. இளையராஜாவுக்கு வயசாச்சுன்னு இந்த நிகழ்ச்சி பாத்துதான் தெரிஞ்சது. ஜெயச்சந்திரன் வந்து பாடுவாருன்னு காத்திருந்தேன். ஆனா நான் காத்திருக்குற வரைக்கும் அவரு வரலை. மதியம் அத்தை வீட்டுக்குச் சாப்பிடப் போகுற நேரம் ஆச்சே. டீவியை நிப்பாட்டீட்டு கெளம்பியாச்சு. ரவாலட்டோடதான். விட முடியுமா?

ஒரு பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம். பைக்குல ஒருவழியா போய்ச் சேந்தேன். ரோடுகள் ரொம்ப மோசம். பாத்ததும் மாமா கேட்டுட்டார். வேற எத? என்னப்பா வெயிட் போட்டிருக்கன்னுதான். கடந்த ரெண்டு மாசத்துல கொஞ்சம் பூசுன மாதிரி ஆயிட்டேன். அதான்.

மாமா வடகர்நாடகாவைச் சேர்ந்தவர். அதுனால அன்னைக்கு அவங்க முறைப்படி சாப்பாடும் பூஜையும். ஊரிலிருந்து அவங்க சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. ஆகையால அவங்களே சமைச்சிருந்தாங்க.

கோதுமைப் போளி கடலைப் பருப்பு வெச்சதுதான் அவங்களுக்கு பிரதானம். ஹோளிகே-ன்னு சொல்வாங்க. அதுல நெய்யையும் பாலையும் ஊத்திச் சாப்பிடனும். எனக்கு நெய் தொண்டையில எறங்காது. என்னோட எலையில பெரிய போளிய வெச்சு, மறுக்க மறுக்க நெய்யக் கொட்டுனாங்க. வேற வழி! முடிச்சதும் அப்பளமும் வெங்காய பஜ்ஜி வந்தது. இது அத்தை ஸ்பெஷல். கூட ஊறுகாய். அப்பத்தான் நெறைய ஹோளிகேயைத் திகட்டாம திங்கலாமாம். ஊறுகாய் இல்லாமலேயே திகட்டாமச் சாப்பிட்டான் மச்சினன்.

கேக்கக் கேக்க விடாம இன்னும் ரெண்டு ஹோளிகேகளையும் அதோட அதுகளுக்கு நெய்க்குளியல் வேற. "முருகா! இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை"ன்னு சொல்லி மனசைத் தேத்திக்கிட்டேன்.

அத்தோட விட்டாங்களா? எலைல விழுந்தது ரெண்டு சப்பாத்தியும் சென்னா கறியும். அட ஆண்டவா! வயிறா! வண்ணாந்தாழியா! அப்புறம் சோறு வேறு. இதில் விஷயம் என்னன்னா....ஒரு வாட்டி மட்டும் சோறு போடக்கூடாதம். ஒரு கரண்டி போட்டதும் கண்டிப்பா இன்னொரு கரண்டி போடனுமாம். ஆம்பரான்னு ஒன்னு. நம்மூரு ரசம் போல. அத ஊத்திச் சாப்பிட்டாச்சு. அப்புறம் தயிர். அடேங்கப்பா. எந்திரிக்க முடியல.

அப்புறம் கொஞ்ச நேரம் பேசீட்டு இருந்திட்டு வீட்டுக்குக் கெளம்புனேன். விஜய் டீவியில மிஸஸ்.டவுட்பயர் ஓடிச்சு. தமிழில். நல்லாவே இருந்தது. அத முழுசும் பாத்தேன். அப்புறம் ஜெயா டீவியில் விட்டு விட்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.

மதியம் அவ்வளவு சாப்பிட்டாலும் ராத்திரி பட்டினியா கிடக்க முடியும்? மூனு தோசையச் சுட்டுச் சாப்பிட்டேன். தொட்டுக்க வெங்காயம் தாளிச்சுப் போட்ட தயிர். அந்த நேரத்துல வான வேடிக்கைகள் நல்லா இருந்தது. மாடியில நின்னு ரசிச்சுப் பாத்தேன்.

அப்புறம் சிஸ்சும் பில்லும் ஃபோன் பண்ணினாங்க. சிஸ்-பில்லுன்னா தெரியும் தானே. சிஸ் - சிஸ்டர். பில் - பிரதர் இன் லா. அவங்ககிட்ட கொஞ்ச நேரம் கத பேசீட்டு வெச்சாச்சு.

அட! ஒரு விஷயத்தைச் சொல்லலையே. பெங்களூர்ல பெஞ்ச மழைல ரோடெல்லாம் சகதி. பைக்லயும் ஒரே சகதி. வண்டியப் பாத்த அத்த, "என்ன ராகவா! வண்டி பழசு மாதிரி தெரியுது"ன்னு வேற சொல்லீட்டாங்க. சாங்காலமா வாளில தண்ணி எடுத்துட்டு வந்து கழுவினேன். நல்லாக் கழுவி வண்டியோட மானத்தைக் காப்பாத்தினேன். (அதுக்கப்புறம் பெஞ்ச மழைல மறுபடியும் வண்டி சகதியானது வேறு கத.)

நெறைய வெடி போட்டதுல, ஏழெட்டு மணி வாக்குல பயங்கர ஹீட். வீட்டுக்குள்ளயும் வெளியேயும் ஒரே வெக்கை. வெடி மருந்து நாத்தம் வேற. என்னடா வேதனைன்னு நெனைக்கும் போதே மழை பேஞ்சு அத்தனையையும் அமத்தீருச்சு. வருணபகவானுக்கு மானசீக ஃபோன் போட்டு நன்றி சொல்லீட்டுப் படுத்துத் தூங்கியாச்சு. இப்படித்தாங்க போச்சு என்னோட தீபாவளி.

கடைசியா ஒரு விஷயம். தீபாவளி முடிஞ்சு ரெண்டு நாளைக்கு எனக்கு வயிறு சரியில்லைங்க. எல்லாம் ஹோளிகேயின் நெய் வண்ணமுன்னு நெனைக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

10 comments:

said...

ராகவன்... ஏதோ எங்கயும் சுட்டுக்காம தீபாவளி கொண்டாட்டீங்களே அது போதும்.

என்னோட தீவாளி எப்படி போச்சுன்னு தனியா ஒரு பதிவு போட முடியாது...வீட்டுல இருந்திருந்தாத் தானே? அன்னைக்கு ஆபிஸ் போயாச்சே....அதான் பின்னூட்டமாய் போட்றலாம்னு.

தீபாவளியை முன்னிட்டு வீட்டுல முறுக்கு சுடலாம்ன்னு ஆரம்பிச்சோம்...எங்க பொண்ணு தேஜஸ்வினிக்கு முறுக்குன்னா ரொம்பப் பிடிக்கும். ரெடிமேட் மாவு எடுத்து அளவா போட வேண்டியதெல்லாம் போட்டு கலந்து குடுத்துட்டாங்க துணைவியார்....முறுக்கு சுடறது நம்ம வேலை...அம்மாவும் பொண்ணும் உக்காந்து நான் சுட்டு கொடுக்க கொடுக்க எடுத்து சாப்பிட்டுத் தீர்த்துட்டாங்க...ஒரே நாளில் சுட்டதெல்லாம் காலி. இனிப்பு செய்யணும்ன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க; ஆனால் முடியலை. தீபாவளி அன்னிக்கு காலையில எந்திருச்சு வழக்கம் போல குளிச்சு சாமி கும்பிட்டு நாங்க ரெண்டு பேரும் ஆபிஸ் போயிட்டோம்...தேஜஸ்வினி டேகேர் போயிட்டா...அன்னைக்கு முத நாளே எங்க வீட்டுக்கும் மாமனார் வீட்டுக்கும் போன் பண்ணி வாழ்த்துகள் சொல்லியாச்சு....இவ்வளவு தான் எங்க வீட்டு தீவாளி இந்த வருஷம்.

said...

நல்லாருந்தது உங்க தீபாவளி அனுபவம். இன்னும் ஒரு 20 வருசம் கழிச்சி இத படிச்சா எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க...

//"முருகா! இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை"ன்னு சொல்லி மனசைத் தேத்திக்கிட்டேன்.// ;-)))

அடுத்த தடவை மாமா என்னப்பா வெயிட் போட்டிருக்கன்னு கேட்டா காரணம் சொல்றது சுலபமாச்சே...

said...

ராகவன் என்னோட தீபாவளி ரொம்ப சந்தோஷமா ரூம் நண்பர்களோட கழிஞ்சது. படையப்பா இளையராஜா கூடவே எதிர் வீட்டு ஜன்னல் என ரொம்ப குஜாலா போச்சு.

நாங்க ஸ்வீட் காரம் எல்லாம் முயற்சி பண்ணறதேயில்லை. ஏனா ஏதாச்சும் முயற்சி பண்ணினா அப்புறம் எங்களுக்கும் வயிறு சரியில்லாம போகும்னு தெரியும். உங்களுக்க்காவது மாமா பக்கத்திலிருக்காங்க அவங்க மேல பழியைத் தூக்கி போட முடியுது (அட அவங்க தந்த ஹோளிகே மேல) நமக்கு அந்த வசதியும் இல்லை...

said...

// ராகவன்... ஏதோ எங்கயும் சுட்டுக்காம தீபாவளி கொண்டாட்டீங்களே அது போதும். //

ஆமாமா! அதுவே பெரிய விஷயம்.

// தீபாவளி அன்னிக்கு காலையில எந்திருச்சு வழக்கம் போல குளிச்சு சாமி கும்பிட்டு நாங்க ரெண்டு பேரும் ஆபிஸ் போயிட்டோம்...தேஜஸ்வினி டேகேர் போயிட்டா...அன்னைக்கு முத நாளே எங்க வீட்டுக்கும் மாமனார் வீட்டுக்கும் போன் பண்ணி வாழ்த்துகள் சொல்லியாச்சு....இவ்வளவு தான் எங்க வீட்டு தீவாளி இந்த வருஷம். //
வெளிநாடுகளில் இவ்வளவுதான் செய்ய முடியும். இந்த அளவு செய்ததே பெரிதுதான். இல்லையா! மகிழ்ச்சியுடன் இருக்கதான் பண்டிகைகள். அன்றைக்கு மகிழ்ச்சியோடு இருந்தீர்கள். அதுதான் பெரிது.

said...

// நல்லாருந்தது உங்க தீபாவளி அனுபவம். இன்னும் ஒரு 20 வருசம் கழிச்சி இத படிச்சா எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க... //

சந்தோஷமாத்தான் இருக்கனும் முகமூடி. ஏன்னா...முந்தி எழுதுனதெல்லாம் எடுத்துப் படிச்சா சந்தோஷமாத்தான் இருக்கு.

// அடுத்த தடவை மாமா என்னப்பா வெயிட் போட்டிருக்கன்னு கேட்டா காரணம் சொல்றது சுலபமாச்சே... //

இது நல்ல ஐடியாவா இருக்கே..........

said...

// ராகவன் என்னோட தீபாவளி ரொம்ப சந்தோஷமா ரூம் நண்பர்களோட கழிஞ்சது. படையப்பா இளையராஜா கூடவே எதிர் வீட்டு ஜன்னல் என ரொம்ப குஜாலா போச்சு. //

ஆகா! கணேஷ் மாட்டிக்கிட்டாரு. அதென்ன எதிர் வீட்டு ஜன்னல்? அடுத்த வீட்டுப் பெண் மாதிரி? விளக்கம் தேவை? ;-)

// உங்களுக்க்காவது மாமா பக்கத்திலிருக்காங்க அவங்க மேல பழியைத் தூக்கி போட முடியுது (அட அவங்க தந்த ஹோளிகே மேல) நமக்கு அந்த வசதியும் இல்லை... //

பக்கத்துல இல்ல கணேஷ். 14 கிலோமீட்டர் தள்ளி. குண்டும் குழியுமா இருக்குற பெங்களூர் ரோடுகள வெச்சிச் சொன்னா 60கிமி தள்ளின்னுதான் சொல்லனும். அங்க போயிட்டு வர்ரதுக்குள்ள தாவு தீந்திரும். அனேகமா அதுக்குதான் ஹோளிகே குடுத்தாங்களோ என்னவோ!

said...

ராகவன்,

தீபாவளி அருமையாத்தான் கொண்டாடியிருக்கீங்க. அடுத்தவருடம் இன்னொரு ஆள்கூட சேர்ந்து கொண்டாடப்போறீங்கன்னு மனசுக்குள்ளே ஒரு குரல் கேக்குது:-)

பயத்தம்பருப்பை குக்கர்லே வைக்காம ச்சும்மா அடுப்புமேலேயே வேகவச்சு,கிள்ளுப் பதமா வந்தவுடனே தண்ணீரை வடிச்சுறணும். ஆறுனபிறகு மிக்ஸியிலே ஒரு சுத்து.

வாணலியிலே வெல்லப்பாகு வச்சுட்டு அதுலே அரைச்ச பருப்பு, தேங்காய்த்துருவல் போட்டுக் கொழக்கட்டைப் பூரணம்போல கிளறி ஏலக்காய் சேர்த்து உருண்டை பிடிச்சு, மாவுலே முக்கி சூடான் எண்ணெயிலே பொரிச்சா உங்க சுகியன் ரெடி.

said...

சூடான் இல்லே சூடான என்று திருத்தி வாசித்துக் கொள்ளணும்.

said...

// அடுத்தவருடம் இன்னொரு ஆள்கூட சேர்ந்து கொண்டாடப்போறீங்கன்னு மனசுக்குள்ளே ஒரு குரல் கேக்குது:-) //

ஆகா! கேட்டுருச்சா! உங்க வாக்கு பலிக்குதான்னு அடுத்த வருசம் பாத்திருவோம். :-)

// சூடான் இல்லே சூடான என்று திருத்தி வாசித்துக் கொள்ளணும். //

நல்ல வேள. எங்க எண்ண வாங்க சூடான் வரைக்கும் போகனுமோன்னு பயந்துட்டேன். வயத்துல எண்ணைய...சாரி...பால வார்த்தீங்க.

said...

:-)