Tuesday, November 22, 2005

கிழவியின் கவிதை

நண்பர்களே. இந்த நட்சத்திர வாரத்தில் இரண்டு கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒன்று கிழவியின் கவிதை. இது நான் பெங்களூர் தமிழ்ச் சங்க மேடையில் சொல்லியது. மற்றொன்று தினம் ஒரு கவிதை குழுவில் இட்டது. இரண்டையும் உங்களுக்குக் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கொஞ்சம் கஷ்டப்பட்டாவது ஒரு முறை படியுங்கள். (குறிப்பாக துளசி டீச்சர்).

கிழவியின் கவிதை

படிப்பு
(படிப்பதற்காக விடுதிக்குச் செல்லும் பேரனிடம் கிழவி சொல்கிறாள்.)

குச்சிகள அடுக்கி வெச்சி
கூடு ஒன்னு கெட்டி வாழ
குருவிக் கூட்டம் படிச்சதாக
கதையேயில்ல!

ஒத்தக் காலில் நின்னுக்கிட்டு
ஒத்த மணி காத்திருந்து
வந்த மீன கொத்தித் திங்க
கொக்குகளும் படிச்சதாக
கேட்டதேயில்ல!

மண்ணுலதாம் பொறந்த பின்னே
கண்ணு ரெண்டும் தெறந்த பின்னே
நிக்க நடக்க ஓட செய்ய
மாட்டுக் கன்னு படிச்சதாக
ஏட்டுல இல்ல!

பசிச்சி சாகக் கெடந்தாலும்
திங்காத பச்சப் புல்ல
நோவு நொடி வந்து நொந்தா
மருந்தாகத் திங்கனுன்னு
புலிகளுமே படிச்சதாக
படிச்சதுமில்ல!

பாழும் மனுசப் பொறப்ப எடுத்தோம்
வாழும் வகைக்கு படிக்கனுமே!
நிமிந்து நிக்க உட்கார,
சோத்தப் பெணஞ்சு வாயில் வெக்க,
காலக் கழுவ, குளிச்சி மொழுக,
காசு பணஞ் சேகரிக்க,
சேத்ததையுங் கட்டிக் காக்க,
வீடு மாடு காடு வாங்க,
வாங்குனத வெச்சி வாழ,
காச்ச கீச்ச வந்தா மீள,
அத்தனைக்கும் படிக்கனுமே
பருவம் இருக்கையிலே!

காமனாரு பூசையால
பருவத்துல ஆச வரும்
ஆசையோட ஆளும் வரும்
அது நெருங்கி நேசம் வரும்
அப்படியே போனாலோ மோசம் வரும்
மாட்டிக்கிறாத!
மாணவப் பருவத்துல
வீணாத் தாம் போனா,
மானத்தோடு வாழுறது
ரொம்பவுஞ் செரமம்!

சேக்காளி சரியில்லாட்டி
போக்கிடமுந் தப்பாகும்!
தப்பான எடம் போனா,
சரசுவதி வரமாட்டா
அறிவ அவளுந் தரமாட்டா!
நல்லாப் பாத்துக்கோ சாமி!
நல்லபடி படிச்சுக்கோ சாமி!
அதுபடி நடந்துக்கோ சாமி!

இதையெல்லாஞ் செஞ்சாலே,
உத்தமமாய் இருந்தாலே,
நியாயப்படி நடந்தாலே,
ஊரு உலகம் மதிச்சி நிக்கும்!
உறவெல்லாந் தேடி வரும்!
லட்சுமியும் வருவா! பொருளெல்லாந் தருவா!
மீனாட்சி வருவா! நெஞ்சுல ஒரந் தருவா!
நல்லாப் பாத்துக்கோ சாமி!
நல்லபடி படிச்சுக்கோ சாமி!
அதுபடி நடந்துக்கோ சாமி!


கரை

இக்கரையில்
இவர்கள் இருவரும்
அல்லாடும் தடுமாற்றம்
அக்கரையில்
அவர்கள் அனைவரும்
ஆனந்தக் கொண்டாட்டம்

அக்கரைக்குப் போவதில்
இவர்களுக்கு
விருப்பமோ இல்லையோ
அவர்களுக்கு
அக்கறையில்லை
இக்கரைக்கு வருவதில்
அவர்களுக்கு
விருப்பமோ இல்லையோ
இவர்களாசைக்குக்
குறைவேயில்லை

ஆண்டவன் பழநி முருகன்
டாலர்தான்
இவர்களுக்குப் பெருஞ் சொத்து
ஆள்பவன் அமெரிக்கன்
டாலர்தான்
அவர்களுக்குப் பெருஞ் சொத்து

அத்தகையச்
சொத்தைத் தேடியே
சொத்தைகளான
அக்கரைவாசிகளின்
வித்தைகளுக்குக்
கத்தை கத்தையாகக்
கொட்டிக் கொடுத்த
இக்கரைவாசித்
தந்தைகளும் தாயார்களும்
கந்தைகளாகக் கசங்கி
இப்போது தனிமையில்

இக்கரையில்
செக்கு மாடுகளாய்ச்
சுற்றுகின்றவர்களுக்கு
அக்கரையின்
செக்குத் தாள்கள்
சுற்றமாகுமா சுகமாகுமா

இவர்களுக்கு
வாரத் தொலைபேசிகளே
வரமாய் இருந்தன
அவர்களுக்குப்
பாரமாய்க் கட்டணங்கள்
மின்னஞ்சல் வசதிகள்
இருபுறத்திலும்
வாராத் தொலைபேசிகள்
ஊமைகளாயின

நோவையுஞ் சொல்லாது
நோக்கங் குழம்பிப்
பாவைகளாய்க் கிடக்கும்
இவர்களின் தலையெழுத்திற்கும்
அவைகளை உணராது
ஆக்கங் கெட்டக்
கூவைகளாய் வாழும்
அவர்களின் தலையெழுத்திற்கும்
ஒன்றே காரணம்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை

அன்புடன்,
கோ.இராகவன்

16 comments:

said...

முன்னையது பேச்சு வழக்கில் அமைந்த அருமையான கிழவிக் கவிதை.

பின்னையது இக்கரைக்கு அக்கரையை பசுமையாய்க் காட்டும் டாலரைச் சொல்லிற்று.

அருமையாய் செல்கிறது உங்கள் வாரம்.

said...

//ஆக்கங்கெட்ட கூவை// அப்பாடி ஒரு வழியா தூத்துக்குடி வாசம் வந்திடுச்சு.
`பாட்டி பேச்சைத் தட்டாத ' பேரனா படிச்சுட்டு வந்தீங்களா?

said...

ராகவா கவிதை சூப்பர்
நானும் எழுத நினைப்பேன் பாதி எழுதுவேன் பிறகு அழித்துவிடுவேன் என் கவிதையைப் படிக்கும் நண்பர்கள் பாவம் என்று

said...

முதல் கவிதை/பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு...

said...

இராகவன். வசன கவிதைகள் நன்று. அங்க இங்க எதுகை மோனைகளும் பொருட்சுவையும் நன்றாய் இருந்தன.

//கவிதையைப் படிக்கும் நண்பர்கள் பாவம் என்று// என்னார் சொன்ன மாதிரி எல்லாம் பாவம் பார்க்கும் வழக்கம் இல்லை உங்களுக்கு என்று நினைக்கிறேன். :-)

said...

அதிலயும் கெழவி சொல்றாளே
படிக்கிற வயசில அதை மட்டும் பாருங்கடான்னு...
என்னைக் கவர்ந்தது இதுதான்.
ஆனா உங்க தனிப்பட்ட கருத்தை இங்க கெழவி சொல்லலையோ?

said...

//என்னார் சொன்ன மாதிரி எல்லாம் பாவம் பார்க்கும் வழக்கம் இல்லை உங்களுக்கு என்று நினைக்கிறேன். :-)//

அதாகப்பட்டது

நான்....... இல்லை.......வந்து......

கருத்து எதுவும் சொல்லவிரும்பவில்லை.(No Comments):-):-)

said...

// அப்பாடி ஒரு வழியா தூத்துக்குடி வாசம் வந்திடுச்சு.
`பாட்டி பேச்சைத் தட்டாத ' பேரனா படிச்சுட்டு வந்தீங்களா? //
அது அப்பப்ப எட்டிப் பாத்துருது தாணு :-)

பாட்டி சொல்லைத் தட்டாதே......இல்லை தாணு. எங்க பாட்டிக்கு இவ்வளவு விவரம் பத்தாது. அதுவுமில்லாம நாங்கள்ளாம் பட்டணக்கரையாச்சே.

// ராகவா கவிதை சூப்பர்
நானும் எழுத நினைப்பேன் பாதி எழுதுவேன் பிறகு அழித்துவிடுவேன் என் கவிதையைப் படிக்கும் நண்பர்கள் பாவம் என்று //
நன்றி என்னார். அடுத்த முறை கவிதையை அழித்து விடாதீர்கள். சேமித்து வையுங்கள். நாளப்பின்ன பயனாகும்.

said...

// முதல் கவிதை/பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு... //
நன்றி அன்பு

//இராகவன். வசன கவிதைகள் நன்று. அங்க இங்க எதுகை மோனைகளும் பொருட்சுவையும் நன்றாய் இருந்தன.

//கவிதையைப் படிக்கும் நண்பர்கள் பாவம் என்று// என்னார் சொன்ன மாதிரி எல்லாம் பாவம் பார்க்கும் வழக்கம் இல்லை உங்களுக்கு என்று நினைக்கிறேன். :-) //
நன்றி குமரன். பாவம் பார்ப்பது......ம்ம்ம்ம்ம்......நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனா நீங்க ஏன் இப்படி கேட்டீங்கன்னு சொல்லியே ஆகனும்.

said...

// ஆனா உங்க தனிப்பட்ட கருத்தை இங்க கெழவி சொல்லலையோ? //
இல்லை. இல்லை. பொதுவாக நான் என்னுடைய கருத்தைப் பாத்திரங்கள் வழியாகச் சொல்வதில்லை. ஒன்றிரண்டு கதைகளைத் தவிர. அந்தச் சூழ்நிலையில் அந்தப் பாத்திரம் என்ன சொல்லியிருக்கும் என்றுதான் நான் சிந்திப்பேன்.

said...

//அக்கரைக்குப் போவதில்
இவர்களுக்கு
விருப்பமோ இல்லையோ
அவர்களுக்கு
அக்கறையில்லை
இக்கரைக்கு வருவதில்
அவர்களுக்கு
விருப்பமோ இல்லையோ
இவர்களாசைக்குக்
குறைவேயில்லை//

கரையில இதுதானப்போ உண்மை! இவர்களாசை!! பாசம் லேது!!!

said...

கிழவிக்கவிதை அருமை போங்க!
கரைக்கவிதை கரை சேர்ந்திடும்!

said...

ஒரு புத்தாண்டுக்காக என் தந்தை எழுதிய கவிதையிலும் இதே போன்ற ஒரு சிந்தனை!
"இக்கரைக்கு அக்கரைப் பச்சையென
அக்கரை சீமையிலே பசை தேடுவான்
அக்கரையோடு உழைத்தால்
இக்கரை பசுமை அறிவானே!"

அமெரிக்கா வந்துவிட்ட எனக்காகத்தான் எழுதினாரா என்று அவர் சொல்லவில்லை ;-)
முழுக்கவிதையும் இங்கே

said...

அப்படிப் போட்ட அப்படிப்போடுவிற்கும் பாராட்டிய வெளி கண்ட நாதருக்கும் நன்றி.

// "இக்கரைக்கு அக்கரைப் பச்சையென
அக்கரை சீமையிலே பசை தேடுவான்
அக்கரையோடு உழைத்தால்
இக்கரை பசுமை அறிவானே!" //
ரங்கா உங்கள் தந்தையார் இன்னமும் சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார். நான் கவிதையில் பிரச்சனையை மட்டுமே சொல்லியிருந்தேன். அவர் தீர்வும் சொல்லியிருக்கிறார். இந்தத் தீர்வு எல்லாருக்கும் பொருந்தாது என்று நினைக்கிறேன். சில குடும்பங்களின் பொருளாதாரத் தேவையும் முன்னிற்கின்றதே.

இந்தக் கவிதை எனது நெருங்கிய நண்பனின் வாழ்க்கையை அப்படியே சொல்லும். அவர்கள் தமிழர்கள் அல்லர். ஆனாலும் கவிதைக்காக தமிழ்க் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

said...

கிழவிக் கவிதை அருமை ராகவன்....
ராஜ் தாணு அவர்களுக்கு அளித்த பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.
"Education is progressive understanding of our own ignorance"
சரி தான் போல

இக்கரைக்கு அக்கரைப் பச்சை.... யதார்த்தம் பேசுகிறது.....

said...

// கிழவிக் கவிதை அருமை ராகவன்.... //

நன்றி கணேஷ். நீங்கள் சொல்லும் கருத்தும் நியாயமானதே. மறுக்க முடியாதது.