Wednesday, November 23, 2005

திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. கடற்கரைக் காற்று குளுகுளுவென வீசியது. உப்புக் காற்றாய் இருந்தாலும் சுகமாக இருந்தது. தொலைவில் ஒரு வட்ட நிலா கடலைத் தொட்ட நிலாவாகக் கரைந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரையில் ஆங்காங்கே ஆட்கள். சிலர் கடலில் காலை நனைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊடாக நாய்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. சில படுத்துக் கொண்டிருந்தன.

சுக்குத்தண்ணி விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன். கருப்பட்டி போட்ட சுக்குத்தண்ணி. தம்ளர் மூன்று ரூபாய். ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கண்ணாடித் தம்ளர்களை ஊறப் போட்டிருந்தான். பிளாஸ்டிக் தம்ளர்களும் அவனிடம் இருந்தன. ஆளைப் பார்த்து தம்ளரைத் தேர்ந்தெடுப்பான் போல. குளிர்காற்றிற்கும் கடற்கரை மணலிற்கும் அந்தச் சுக்குக் தண்ணி சிலருக்குத் தொண்டையில் இதமாக இறங்கியது. வாயைத் திறந்து பாராட்ட விரும்பாமல் தலையை ஆட்டி தங்களுக்குள் சுக்குத்தண்ணியை பாராட்டினார்கள். அவர்கள் குடிப்பதையே ஒரு நாய் பார்த்துக் கொண்டிருந்தது. நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.

நாளிக்கிணற்றிற்குப் போகும் பாதை மலைப் பாம்பு போல இருட்டில் தெரிந்தது. அதன் ஓரத்திலேயே சில சிமிண்ட் பெஞ்சுகள். கடற்கரை மணலில் உட்காரச் சங்கோசப் பட்ட சிலர் அதில் உட்கார்ந்திருந்தார்கள். பனங்கிழங்கைப் பிய்த்து மென்று கொண்டிருந்தார்கள். இந்த வேளையிலா?

கோயிலுக்கும் கடற்கரைக்கும் நடுவில் ஒரு போலீஸ் காவல் வைக்கப்பட்டிருந்தது. சுனாமி வந்ததிலிருந்து இப்படித்தான். அருகில் பளிச்சென்று மூன்று சோடியம் வேப்பர் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செயற்கைப் பகலாக இருந்தது கடற்கரை.

கடற்கரையிலிருந்து கோயிலைப் பார்த்தேன். நிலவொளியைப் பூசிக் கொண்டு மினுமினுப்பாகத் தெரிந்தது. வலப்பக்கத்தில் தருமபுரி ஆதீன மண்டபம் கடலை ஒட்டி இருந்தது. பெரிய மண்டபம். இடப்பக்கம் கடைகள் வரிசையாக இருந்தன. நான் இடப்பக்கம் திரும்பினேன். மூடப்பட்டிருந்த கடைகளின் ஓரமாக நடந்து சென்றேன். ஒரு வளைவில் திரும்பினால் கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி. பெண்யானை. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி லேசாகப் பிளிறியது.

அப்படியே திரும்பி கோயிலின் முன்பக்கத்திற்கு வந்தேன். அதே சுக்குத்தண்ணி விற்பவன். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. சரியாக விற்கவில்லை. அவனிடம் சுக்குத்தண்ணி வாங்கிக் குடிக்க முடிவு செய்தேன். "சுக்குத்தண்ணி குடுங்க." என்னைப் பார்த்தான். வாளியிலிருந்து தம்ளர் எடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் சுக்குத்தண்ணியை ஊற்றிக் கொடுத்தான்.

வெறும் வியாபாரமாக இல்லாமல் இரண்டொரு வார்த்தை பேசினேன். "கருப்பட்டி போட்டிருக்கீங்க போல! வாட ஜம்முன்னு இருக்கு!"

"ஆமாங்க. நயங்கருப்பட்டி. வெல வேற கூடிப்போச்சு. இருந்தாலும் மொத்தமா வாங்குனா கொஞ்சம் கொறைக்காங்க."

நான் வாங்கிக் குடிக்கத் தொடங்கியதும் சிலர் வந்தார்கள். கார் டிரைவர்கள். ஒவ்வொரு ஊரிலிருந்து வந்தவர்கள். அங்கே வந்து பேச்சுத் துணைக்குப் பழகிக் கொள்வது. ஒரு ஐந்து நிமிடத்தில் பத்து பேர் வந்து சுக்குத்தண்ணி குடித்தார்கள். விற்பவன் முகத்தில் மலர்ச்சி வந்தது. நான் மூன்று ரூபாய் சில்லரையை அவன் கையில் கொடுத்து விட்டு நடந்தேன்.

கோயிலைச் சுற்றி சின்னப்பாத் தேவர் கட்டிய மண்டபம். அந்தப் பிரகாரத்தில் நடந்தேன். அது கோயிலைச் சுற்றி வரும். மறுபடியும் கடல் கண்ணில் பட்டது. பிரகாரத்திலேயே மேலும் நடக்க தருமபுரி ஆதீன மண்டபம் மறுபடியும் கண்ணில் பட்டது. மண்டபம் மட்டுமா! அங்கு நடந்ததும் கூடத்தான். வெளியூராள் அங்கே படுத்துக் கொண்டிருக்க, போலீஸ் அவனை அங்கிருந்து நகட்டுவதிலேயே குறியாக இருந்தது.

"ஏய்! எந்தி! இங்க படுக்கக் கூடாதுல்லா. நகருவேய்." லத்திக் கம்பை மண்டபத் தரையில் தட்டினார் போலீஸ். படுத்திருந்தவனுக்கு அது கவுரவக் குறைச்சலாகப் பட்டிருக்க வேண்டும். முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான். அவன் எழுந்து நடந்ததும் போலீஸ் வேறு பக்கம் ரோந்து நடக்கத் தொடங்கியது.

கோபத்தில் குமைந்து கொண்டிருந்தான் எழுப்பப் பட்ட ஆள். "எய்யா முருகா! பாத்தியால அக்குரமம். இவனுகள என்னங்க! இதெல்லாம் கேக்காம இருக்குயே. செவுட்டுல விழலையா. அப்படியே கடலு பொங்கி மொத்தத்தையும் கொண்டு போயிரய்யா. அப்பத்தான் இவனுக அட்டூழியம் ஒழியும். எம்முருகன் கோயில்ல படுக்க விட மாட்டேங்குதானுகளே. கேப்பாரில்லாமப் போச்சு. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சும்மாருக்கியே. நா என்ன ஓட்டல்லயா தங்க? ஒங்கோயிலுக்கு வந்தேன். இங்கன தங்க விடமாட்டேங்கானுகளே. அக்குரமம் பிடிச்சவனுக"

சத்தமாகவே பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான். எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. அந்த ஆள் "முருகா முருகா" என்று புலம்பிக் கொண்டிருந்தான். நான் அருகில் போய்க் கேட்டேன். "என்னாச்சு?"

"இங்க கெடந்து தூங்க விடமாட்டேங்குதானுக. குச்சியக் கொண்டு தட்டி எழுப்புதானுக. கோயிலுக்கு எதுக்கு வர்ரோம். சாமியப் பாக்கத்தான. பாக்க விடாம இவனுக தடுக்கானுக. ரெண்டு அப்பு அப்பீருப்பேன். முருகங் கோயிலாச்சேன்னு விட்டேன். ஓட்டல்லயா நாம் படுத்துத் தங்க. அங்கன ரெண்டு நாயி படுத்துக் கெடக்கு. அதப் பத்த மாட்டேங்கானுக. எம்மேல பாயுதானுக."

அவருக்கு விளக்கம் சொன்னேன். "அவங்க அங்க படுக்கக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? எல்லாம் பாதுகாப்புக்காகத்தான். இருட்டு வேளை. கடலோரம் வேற. அதுனாலதான். சுனாமி வந்ததுன்னு சொல்றாங்களே. அதுனாலதான் இந்தப் பாதுகாப்பு."

"இப்படி வெளக்கமாச் சொன்னாத்தானே தம்பி. லொட்டு லொட்டுன்னு தட்டுதானுகளே. எந்தி எந்தீன்னு பத்துதானுகளே. முருகங் கோயில்ல இப்படி நடக்கானுகளேன்னு எனக்கு வருத்தம். அவ்வளவுதான் தம்பி. ஏந்தம்பி, சுனாமியா! இது திருச்செந்தூரு. இங்க கடலு உள்ள வந்துருமா? என்ன தம்பி பேசுறீங்க! அத்தன ஊருல வெள்ளம் அடிச்சப்ப இங்க மட்டும் கடலு உள்ள போச்சு. தெரியுமுல்ல. பேப்பருல எல்லாம் போட்டுருந்துச்சுல்லா!"

அவருடைய நம்பிக்கை எனக்கு வியப்பளிக்கவில்லை. நம்பினால்தானே கடவுள்.

அவருடைய புலம்பல் தொடர்ந்தது. "இங்க படுக்கவிடாம தடுத்துட்டானுக. எங்க போய்ப் படுக்க? ஓட்டலுக்குக் குடுக்கக் கொட்டியா கெடக்கு? நானே கைக்காசு சேத்து உவரீல இருந்து வந்துருக்கேன். புள்ளக நல்லாப் படிக்கனுமுன்னு வேண்டிக்கிட்டுப் போக வந்தேன். எல்லாரும் வரச் செலவுக்கு ஆத்த மாட்டமத்தான் நா மட்டும் வந்தேன்."

"ஒங்க நம்பிக்க வீண் போகாது. ஒங்க பிள்ளைங்க நல்லா படிச்சு முன்னுக்கு வந்து ஒங்களக் காப்பாதுவாங்க. நீங்க நம்புற முருகன் கைவிட மாட்டான்."

"ரொம்ப நல்லது தம்பி. படிச்சவக சொல்றீங்க. எல்லாம் பலிக்கட்டும். நமக்கென்ன. பிள்ளைக நல்லாருந்தாச் சரிதான். கடைசி பஸ்சுக்கு வந்தேன். காலைல கும்புட்டுட்டு அப்படியே பொறப்பட்டு போலாமுன்னு பாத்தேன். இந்தப் பயலுக தூங்க விடல. இப்ப ராத்திரி முழுக்க இப்பிடியே நடக்கவா?"

"தேவையில்ல. கொஞ்சம் முன்னாடி போனீங்கன்னா ஆறுமுக ஆசாரி கலையரங்கம் வரும். அங்க படுத்துக்கலாம். பாதுகாப்பா இருக்கும். அங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. காலைல சீக்கிரமா எந்திரிச்சு சாமியப் பாத்துருங்க. அப்புறம் கூட்டம் வந்துரும்."

"ஆகட்டும் தம்பி. இப்படித் தெளிவாச் சொன்னாதான தெரியுது எங்களுக்கு. இதுக்குதான் படிக்கனுங்கறது. இனிமே நமக்கு எங்க? ஆமா. ஒங்க பேரு என்ன தம்பி?"

"எம்பேரு முருகன்."

பேருக்கும் ஊருக்கும் இருக்கும் தொடர்பை உணர்ந்து சொன்னார். "சந்தோசம் தம்பி. சாமி பேரு. அதான் இம்புட்டுப் பேசுறீக. அந்த முருகன் ஒங்கள நல்லா வெச்சிக்கிறட்டும். வர்ரேன் தம்பி!" சொல்லி விட்டு அந்த ஆள் கலையரங்கத்தில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டார். உடனே தூங்கியும் விட்டார். கள்ளமில்லாத மனது.

திரும்பி நடந்தேன். காலையில் சீக்கிரமாக இவரை எழுப்பி விட வேண்டும். பின்னே. மெனக்கெட்டு என்னைப் பார்ப்பதற்கு உவரியிலிருந்து வந்திருக்கின்றாரே. கூட்டம் வருவதற்கு முன்னால் என்னைப் பார்த்து விட்டால் அவன் என்னிடம் கூடக் கொஞ்சம் பேசுவான் அல்லவா!

அன்புடன்,
கோ.இராகவன்

52 comments:

said...

நல்லாருக்கு ராகவன்,
உண்மைதான். கடவுள் மனித ரூபத்தில் பல சமயம் வந்தாலும், அந்த நேரத்தில் நமக்கு அது உறைப்பதில்லை.

திருச்செந்தூரில் பழநி, இராமேஸ்வரம் மற்றும் திருப்பதியைப் போல ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது. என் அனுபவத்தில் எவ்வளவு பயணக்களைப்பு இருந்தாலும், இந்த ஊர்களின் எல்லையில் இருந்து கோபுரத்தை பார்த்துவிட்டால் போதும். களைப்பெல்லாம் நீங்கி உற்சாகம் பிறந்துவிடும்.

---
உவரின்னு ஊரா? எங்க இருக்கு?

said...

இதத்தாம்யா எதிர்பார்த்தோம்...
உங்களுக்கு சிறப்பே மயக்கும் நடைதான். அந்த நடையில் மீண்டும் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது...

இறைவன் குடியிருக்கும் இடம் எது? பெரிய கோயில்களிலா? இல்லவே இல்லை. அடியார்களின் நெஞ்சம்தான் அவனது இல்லம்.

உங்கள் ஆன்மீகப் பதிவுகள் என்றாலே அது கல்கண்டுதான்.....

திருச்செந்தூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர். கடல் கடலோரம் கோயில் என எனோ மனதை மயக்கிவிடுகிறது

said...

// நல்லாருக்கு ராகவன்,
உண்மைதான். கடவுள் மனித ரூபத்தில் பல சமயம் வந்தாலும், அந்த நேரத்தில் நமக்கு அது உறைப்பதில்லை. //
உண்மை ராமநாதன். முழுக்க முழுக்க. நமக்கு அந்நேரம் உறைப்பதில்லை. எல்லாம் அவன் நாடகம்.

// திருச்செந்தூரில் பழநி, இராமேஸ்வரம் மற்றும் திருப்பதியைப் போல ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது. என் அனுபவத்தில் எவ்வளவு பயணக்களைப்பு இருந்தாலும், இந்த ஊர்களின் எல்லையில் இருந்து கோபுரத்தை பார்த்துவிட்டால் போதும். களைப்பெல்லாம் நீங்கி உற்சாகம் பிறந்துவிடும். //
திருச்செந்தூர் கோயிலுக்குள்ளேயே போக வேண்டாம். கோயிலுக்கு வெளியிலேயே சுற்றினால் போதும். உற்சாகமும் அமைதியும் கூடிக் கொண்டு தேடி வரும். தூத்துக்குடியில் பிறந்தவன் என்ற வகையில் திருச்செந்தூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர்.

ஆமாம். நீங்கள் அங்கு போய் வந்தீர்களே....அந்த அனுபவத்தில் ஏதேனும் நினைவில் இருக்கிறதா? இருந்தால் பதியுங்களேன்.

said...

// இதத்தாம்யா எதிர்பார்த்தோம்...
உங்களுக்கு சிறப்பே மயக்கும் நடைதான். அந்த நடையில் மீண்டும் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது... //
நன்றி முத்துக்குமார்.
அந்தக் கதையும் நன்றாக இருந்திருக்கும். அவசர அவசரமாக எழுதாமல் இருந்திருந்தால்.

// இறைவன் குடியிருக்கும் இடம் எது? பெரிய கோயில்களிலா? இல்லவே இல்லை. அடியார்களின் நெஞ்சம்தான் அவனது இல்லம். //
அப்படியில்லை முத்துக்குமரன். இறைவன் கோயில்களிலும் உண்டு. எங்கும் உண்டு. காண்பவர் கண்களால் கண்டால் தெரியமாட்டான். அன்போடு கண்டாலே தெரிவான்.
கண்ணதாசனின் பாட்டு உண்டே. "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்"

said...

அவன் தன்உள்ளுக்குள் இருப்பவனைத்தானே அந்த கல்லில் காண்கிறான். அப்படி என்றால் அவர் வசிப்பது எங்கே?

said...

அருமையா இருந்துச்சு... அப்படியே பிரகார்த்துல்ல நடக்கிறத பார்க்கிறமாதிரி.

//உவரின்னு ஊரா? எங்க இருக்கு?
திருச்செந்தூருக்குப் பக்கத்துல... அங்கு கப்பல் போல கீழேயும், விமானம் போல் மேலேயும் ஒரு சர்ச் உண்டு... அது என்னுடைய சிறுவயதுப் பிரமிப்பு!

said...

// அவன் தன்உள்ளுக்குள் இருப்பவனைத்தானே அந்த கல்லில் காண்கிறான். அப்படி என்றால் அவர் வசிப்பது எங்கே? //
தனக்கு உள்ளேயும் வெளியேயும் எங்கும் நிறைந்திருக்கிறார் கடவுள். அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் தமிழ் அவரைக் கடவுள் என்கிறது. கடவுளுக்கே யோசித்துப் பெயர் வைத்த மொழி தமிழ்.

said...

அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் தமிழ் அவரைக் கடவுள் என்கிறது.

ஆ... அருமையான தகவல். நன்றி.

said...

பாம்பாட்டியாரே!அருமையாக 'புன்னாகவராளி' வாசித்திருக்கிறீர்கள்!! மயங்கித்தான் போனேன்.

said...

// அருமையா இருந்துச்சு... அப்படியே பிரகார்த்துல்ல நடக்கிறத பார்க்கிறமாதிரி.

//உவரின்னு ஊரா? எங்க இருக்கு?
திருச்செந்தூருக்குப் பக்கத்துல... அங்கு கப்பல் போல கீழேயும், விமானம் போல் மேலேயும் ஒரு சர்ச் உண்டு... அது என்னுடைய சிறுவயதுப் பிரமிப்பு! //
நன்றி அன்பு. உவரி பத்தி ராமநாதன் கேட்டதுக்கு சொல்ல மறந்துட்டேன். அந்தக் கப்பல் விமான சர்ச்சுதான் அங்க பேமசு. அந்த ஊரின் பேர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

said...

// பாம்பாட்டியாரே!அருமையாக 'புன்னாகவராளி' வாசித்திருக்கிறீர்கள்!! மயங்கித்தான் போனேன். //

என்ன ஏஜெண்டு பட்டமே கொடுத்துட்டீங்களா! மயங்கீட்டீங்கன்னா...நீங்க நாகலோக ஏஜெண்டா?

said...

கடைசியில வச்சீகளே ஒரு போடு.
அது சூப்பரு
முருகன் மட்டுமில்ல அவங்கப்பனும் அப்படித்தான்.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.

said...

நல்லா வந்திருக்கு. இப்படிதான் முடியும் என்று கண்டுப்பிடிக்க முடியவில்லை. பிடியுங்கள் வாழ்த்தை!

said...

கோயில் வெளி பிரகாரமும், உள் பிரகாரமும் சுத்தச் சுத்த திகட்டாத இடங்கள் இல்லையா ராகவன்? மற்ற எல்லா முருகன் கோயில்களையும்விட திருச்செந்தூரின் விஸ்தீரணமும் அழகும் அதிகம்தான்.
உண்மையாகவே கருப்பட்டி விலை சர்க்கரை விலையைவிட ரொம்ப அதிகம்தான், கிலோ ரூ.45/-. சொல்ல வந்த விஷயத்தை, எளிமையா, அழகா, அலங்கார வார்த்தைகளின்றி சொல்ற உங்க நடை ரொம்ப நல்லாயிருக்கு.

said...

ராகவன்

யாருமே பாராட்டாத மாதிரி பாராட்டுறது எப்படி?

அழகா இருக்கு, அருமையா இருக்கு.....
கடவுளை இப்பவெல்லாம் அடிக்கடி எழுதிப் பார்க்கும் ஆர்வம் வந்திருக்கிறது காரணம் நீங்களாக கூட இருக்கலாம்.

said...

இராகவன் அண்ணா, அட்டகாசமான பதிவு, அழகான எழுத்துநடை. படிக்க படிக்க இனிமை.

திருச்செந்தூர், முருகன் இந்த இரண்டையும் எப்போ கேட்டாலும் மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.

தடுக்கி விழுந்தால் நான் திருச்செந்தூரில் தான் இருப்பேன். கடற்கரை மணலில் கோபுரம் கட்டுவது, கடலில் விளையாடுவது, வள்ளிக்குகைக்கு போய் இருட்டில் உள்ளே போய் வருவது, மேடிலிருந்து கீழே சர்ரென்று இறங்குவது, அங்கே தண்ணீர் தொட்டியில் மோர் கொடுப்பாங்க, மணிக்கு ஒரு முறை போய் வாங்கி குடிப்பது.

கோயிலில் இருக்கும் படங்களை பார்த்து கதை படிப்பது, சுவற்றில் காதை வைத்து ஓங்கார ஒலியை கேட்பது எல்லாமே நினைவுக்கு வருது.

அடுத்த முறை உங்களை கண்டிப்பாக பார்க்க சக்தியோடு வருவேன்.

said...

// நல்லா வந்திருக்கு. இப்படிதான் முடியும் என்று கண்டுப்பிடிக்க முடியவில்லை. பிடியுங்கள் வாழ்த்தை! //
நன்றி உஷா. முருகன் என்று பேரைச் சொல்லும் பொழுது கண்டு பிடித்து விடுவார்களோ என்று நினைத்தேன். யாராவது கண்டுபிடித்தீர்களா?

said...

// உண்மையாகவே கருப்பட்டி விலை சர்க்கரை விலையைவிட ரொம்ப அதிகம்தான், கிலோ ரூ.45/-. சொல்ல வந்த விஷயத்தை, எளிமையா, அழகா, அலங்கார வார்த்தைகளின்றி சொல்ற உங்க நடை ரொம்ப நல்லாயிருக்கு. //

நன்றி தாணு. கருப்பட்டிக்கு ஆசப்பட்டு நெறைய வாங்கி பெங்களூர்ல ஸ்டாக் வெச்சிருந்தேன். இங்க இருக்குற ஈரப்பதத்துக்கு அது கொழகொழத்து பூசனம் பிடித்து விட்டது. :-( மனமில்லாமல் தூக்கிப் போட்டேன். பிறகுதான் கார்ன் பிளேக்சில் சேர்க்க பனங்கற்கண்டு வாங்கி வைத்துக் கொண்டேன்.

said...

// அழகா இருக்கு, அருமையா இருக்கு.....
கடவுளை இப்பவெல்லாம் அடிக்கடி எழுதிப் பார்க்கும் ஆர்வம் வந்திருக்கிறது காரணம் நீங்களாக கூட இருக்கலாம். //

நன்றி கணேஷ். அப்ப அடுத்து உங்க கிட்ட இருந்து என்ன எதிர் பார்க்கலாம்?

said...

// கோயிலில் இருக்கும் படங்களை பார்த்து கதை படிப்பது, சுவற்றில் காதை வைத்து ஓங்கார ஒலியை கேட்பது எல்லாமே நினைவுக்கு வருது.

அடுத்த முறை உங்களை கண்டிப்பாக பார்க்க சக்தியோடு வருவேன். //

கண்டிப்பாக தம்பி. என்னைப் பார்க்க நீ வா. முருகனைப் பார்க்க நாம் போவோம். சரியா?

said...

//அந்த ஆள் "முருகா முருகா" என்று புலம்பிக் கொண்டிருந்தான். நான் அருகில் போய்க் கேட்டேன். //

இராகவன், இந்த இடத்தில் தான் எனக்குப் பொறிதட்டியது. ஆஹா...நம்ம ஆளு இந்த திசையிலயா கதையைக் கொண்டு போறார்ன்னு. அப்புறம் பேர் முருகன்னு சொன்னவுடனே ஆச்சு. :-)

நன்றாய் இருந்தது. வழக்கம் போல 'வட்ட நிலா கடலைத் தொட்ட நிலா' எல்லாம் நன்றாய் இருந்தது.

//இதத்தாம்யா எதிர்பார்த்தோம்...
உங்களுக்கு சிறப்பே மயக்கும் நடைதான். அந்த நடையில் மீண்டும் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது...

உங்கள் ஆன்மீகப் பதிவுகள் என்றாலே அது கல்கண்டுதான்.....
//

முத்துகுமரனை இந்த பித்தக்குமரன் வழிமொழிகிறேன். (இப்பல்லாம் வழிமொழியுறது ரொம்பப் பிடிக்குது). :-)

//முருகன் என்று பேரைச் சொல்லும் பொழுது கண்டு பிடித்து விடுவார்களோ என்று நினைத்தேன். // மேல சொன்ன மாதிரி அதுக்கு முன்னாடியே க்ளு கொடுத்துட்டீங்களே?

said...

96ல் திருச்செந்தூருக்கு உறவினர்களுடன் வந்திருக்கிறேன். சித்தி மகனுக்குப் பெயரும் செந்தூரன் என்பதால் அவனைக்கூப்பிடும்போதெல்லாம் நினைவில் வந்துபோகும் ஊர். கூடவே எங்களூரில் அதிகாலை வேளையில் வானொலியில் கேட்கும் பாடலொன்றால் நினைவில் நிற்கும் ஊர். பாடலைத்தான் நீங்களும் தலைப்பாக வைத்திருக்கிறீர்களே..

தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த விதயங்களில் ஒன்று கோவில்களுக்கு உலா போவது. அங்கே ஏதோ இனந்தெரியாத அமைதி கிடைப்பதுபோன்ற புரிதல். சரித்திரம் பிடிக்கும் என்பதாலும் போகப்பிடிக்கும்.

திருச்செந்தூருக்கு நள்ளிரவு நேரத்தில் போய் இறங்கி ஏதோவொரு விடுதியில் தங்கினோம். அதிகாலை வேளையில் சாமி தரிசனம் கிடைத்தது. திருச்செந்தூரை நினைத்தால் இப்போதெல்லாம் மனதில் நிற்பது முருகனின் தோற்றந்தான். வெளியூர்க்காரங்க என்பதால் தொந்தரவு செய்யாமல் கிட்ட நிற்க விட்டார்கள். அந்த சாந்தமான புன்னகை கூடிய முகத்தை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். எழுதலாம்னு எத்தனையோ தடவை தோன்றியிருக்கிறது. ஆனால் கோவிலின் பிரகாரங்கள் போன்றவை அவ்வளவாக மனதில் இல்லாததால் அடுத்த முறை ஊருக்கு வரும்போது போய்விட்டு எழுதலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

இப்பகூடப் பாருங்க..

என் மனதில் நிற்கும் அந்த சாந்தமான புன்னகையோடு கூடிய முகத்தை எழுதலாம்னுதான் வந்தேன். ஆனால், மனதில் வரும் உணர்வுகளை வார்த்தையால் வடிக்க முடியவில்லை. :(

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ராகவன். எனக்கு 'முருகன்' என்று பெயர் சொல்லும் இடம் வரைக்கும் ஏதோ பயணக்கட்டுரை போலத்தான் தோன்றியது. அதற்குப்பிறகு அட கதையா என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே படித்துக்கொண்டு வந்தேன். அதைத்தாண்டி யோசிக்கிறதுக்குள்ள முருகன், கடவுள் முருகனாயிட்டார்.

-மதி

said...

ராகவன்,

கையைக் கொடுங்க இப்படி.அருமையா இருக்கு. கடைசிப்பாராவுக்கு
கொஞ்சம் முந்தி லேசா யூகிச்சேன்.

வாழ்த்துக்கள். நல்லா இருங்க.

said...

நன்றாக இருந்தது. எனக்கென்னவோ அந்டஹ் கோவிலையும் விட மகிழ்ச்சியுடன் பொங்கிவரும் அலைகள் பிரியமானது. நாங்கள் சென்றபோதுகூட இரவு தங்கி இருந்தோம். பார்க்க பார்க்க பல வித எண்ணங்களை உருவாக்கும் அலைகள்.

said...

வெளியூரிலிருந்து திருச்செந்தூர் வருபவர்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து நடக்க நடக்க கோயில் வந்து கொண்டே இருக்கும், இரு பக்கமும் கடைகளும், பெரிய பெரிய தூண்களும், மக்களும், ஜோசியம் பார்ப்பவர்களும், அப்பப்பா நினைத்தாலே இனிமையானவை, யாருக்கும் மறக்கவே மறக்காது.

அங்கே தேங்காய் வாங்குமிடத்தில் நம்முடைய செருப்புகளை பத்திரமாக வைத்திருப்பாங்க, அன்பாக பேசுவாங்க.

said...

நானும் போயிருக்கேன்..........திருச்செந்தூருக்கு...என்ன இழுவைங்கிறிகளா?., போனது நம்மாளு வீட்டு ஆளுகளோட., இதுக்கு மேல என்னத்த சொல்றது?., அடுத்த தடவ போகும்போதாவது அந்த முருகன ஒழுங்காப் பாக்கணும். கதை நல்லா இருக்கு.

said...

ஒண்ணு சொல்ல மறந்து போச்... இந்தக் கதையப் படிச்ச உடனே என்னமோ தெரியலை., பா.நீலகண்டன்., சாண்டோ சின்னப்ப தேவர்... இராம. நாராயணன் எல்லாம் வரிசையா நினைவுல வந்துட்டு போனாக!!!. ஆனா., கதை நல்லா இருக்கு.

said...

// கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி. பெண்யானை. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி லேசாகப் பிளிறியது. //

நீங்கள் யார் என்று தெரிந்துவிட்டதா(லா) ?;-))

said...

திருச்செந்தூரை மறக்க முடியாது, கல்யாணம் கட்டி, முதமுதல்லா போன கோவிலு, கடற்கரையும் கோவிலும், போயிட்டு வந்தது ஒரு ஆனந்தம்அப்புறம் அங்க பக்கத்தில நாடி ஜோசியம் பாத்தது ஞாபகம். எந்த ஊருன்னு ஞாபகமில்லை.
நீங்க செந்தூரனை பத்தி சொல்லிட்டீங்க, முருகனை, நம்ம வயலூரனை பத்தி அப்புறம் சொல்லுதேன்!

said...

ராகவன்! திருச்செந்தூர் பேரை பார்த்ததும் ஓடி வந்து பார்த்தேன். நல்ல எழுதியிருக்கீங்க. எங்க ஊர்ல இருந்து திருச்செந்தூர் ரொம்ப பக்கம். நடந்தே விழாக்காலங்களில் எங்க ஊர் மக்கள் போய்விடுவார்கள். எனக்கு மிகவும் உற்ச்சாகத்தையும் சந்தோசத்தையும் கொடுக்கும் கோவில் இந்த செந்தூர் ஆண்டவன் கோவில் தான். உங்கள் பதிவுக்கு நன்றி.

said...

// நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ராகவன். எனக்கு 'முருகன்' என்று பெயர் சொல்லும் இடம் வரைக்கும் ஏதோ பயணக்கட்டுரை போலத்தான் தோன்றியது. அதற்குப்பிறகு அட கதையா என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே படித்துக்கொண்டு வந்தேன். அதைத்தாண்டி யோசிக்கிறதுக்குள்ள முருகன், கடவுள் முருகனாயிட்டார். //

நன்றி மதி. என்னுடைய பூஜையில் நடுநாயகமாக நிற்பது திருச்செந்தூராந்தான். கையில் மலரை வைத்துக் கொண்டு வாழ்வை மலர வைப்பேன் என்று உறுதி கூறிக்கொண்டு அமைதி தவழும் அற்புத முகத்தோடு....சொல்லிக் கொண்டே போகலாம்.

said...

// கையைக் கொடுங்க இப்படி.அருமையா இருக்கு. கடைசிப்பாராவுக்கு
கொஞ்சம் முந்தி லேசா யூகிச்சேன்.

வாழ்த்துக்கள். நல்லா இருங்க. //

கை இந்தாங்க டீச்சர். பிரம்பு வெச்சி அடிக்கப் போறீங்களா?

ஊகிச்சுட்டீங்களா டீச்சர். டீச்சராச்சே.


// நாங்கள் சென்றபோதுகூட இரவு தங்கி இருந்தோம். பார்க்க பார்க்க பல வித எண்ணங்களை உருவாக்கும் அலைகள். //
உண்மை தேன் துளி, மாலை ஏழு மணிக்குச் செல்ல வேண்டும். கூட்டத்தோடு கூட்டமாக தரிசனம் முடித்து விட்டு, கடலில் கொஞ்ச நேரம். கடையில் கொஞ்ச நேரம் என்று பொழுது போக்கி விட்டு, விடியற்காலையில் எழுந்து தரிசனம் முடிப்பது சிறப்பு.

said...

// கதையப் படிச்ச உடனே என்னமோ தெரியலை., பா.நீலகண்டன்., சாண்டோ சின்னப்ப தேவர்... இராம. நாராயணன் எல்லாம் வரிசையா நினைவுல வந்துட்டு போனாக!!!. ஆனா., கதை நல்லா இருக்கு. //

அப்படிப் போடுங்க.

// நீங்கள் யார் என்று தெரிந்துவிட்டதா(லா) ?;-)) //
கண்டு பிடித்து விட்டீர்களே. அதுவுமில்லாம நான் அந்த ஆனையைப் பாத்திருக்கேன். அது யார் போய் நின்னாலும் தும்பிக்கையைத் தூக்காது. ஆனா ஒரு சிலர் வந்தா தூக்கிப் பிளிறுது. என்னவோ இருக்கு.......

// முருகனை, நம்ம வயலூரனை பத்தி அப்புறம் சொல்லுதேன்! //
கண்டிப்பா வெளிகண்டநாதர். வயலூர் முருகன் புகழ் கேட்கக் காத்திருக்கிறோம்.

said...

// எங்க ஊர்ல இருந்து திருச்செந்தூர் ரொம்ப பக்கம். நடந்தே விழாக்காலங்களில் எங்க ஊர் மக்கள் போய்விடுவார்கள். //
எந்த ஊர் சிவா? வீரபாண்டியன் பட்டணமா?

said...

என்ன இராகவன் நானும் பின்னூட்டம் விட்டுருக்கேன். பாத்தீங்களா? இல்லை என்னை Boycott பண்றீங்களா? :-) Just kidding

said...

மொத்தக்கதையும் ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக்கல் பதக்கம் இருக்கனும் இல்லையா? அது இதுதான்..
//நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.//
ஏதோ எனக்கு பிடிச்சது! :)

தெளிவான எழுத்துநடைங்க.. கலக்கல்! இவ்வளவு படிச்ச அப்பனுக்கே பாடம் சொல்லிக்குடுத்த முருகருக்கு ஏன் அப்பாம்மா கிட்ட கோவம் மட்டும் பொசுக்குன்னு வருதுன்னு தெரியலை! இன்னைக்கும் வீடுகள்ல இளையபயக இப்படித்தான் இருக்கறாங்க..

said...

ராகவன்.

சூப்பர். அப்படியே ஒரு திருச்செந்தூர் கோயில், மண்டப படங்களும், முருகனின் படமும் எடுத்துப் போட்டிருந்தால் இன்னும் எங்களை நேரே லொகேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும். நல்ல நடை. தொடரட்டும் தங்கள் முருகன் பணி !

- அலெக்ஸ்

said...

இராகவன்
இனிய நடை.
கதை நன்று.

ஹோட்டலில் குலோப்ஜாமூன் கூட உப்பா இருக்குப்பான்னு பேசியது .

இரவில் திருச்செந்தூர் கடல் அருகே
"அலைகடல் ஓரத்திலே என் அன்பானசண்முகனே,
அலையா மனம் தருவாய் உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்" னு பாடினது நினைவுக்கு வருகிறது.

தேவரின் தெய்வம்,
இன்னும் முருகனின் திரைப்படங்கள் எல்லாமே மாற்றி மாற்றி நினைவை சுற்றி சுற்றி வருகுதய்யா.
(சிவாஜி சொல்வது போல் வாசிங்க)

தாத்தா இருக்கும் வரை தங்கத்தேர் இழுப்பார்.
ஆனால் அந்த சமயத்தில் ஒருமுறைகூட நான் சென்றதில்லை.

மணலும்,பிரகாரமும்,அலைகடலும்
ஏம்ப்பா பழைய நினைவுகளை கிளறிவிடுறீங்க?

இராகவன் இன்னும் இன்னும் நிறைய உங்களால் எழுத இயலும்.
செய்யுங்கள்.

said...

ரொம்ப நல்லாயிருக்கு ராகவன்.

தூ..டியிலருக்கும் சமயத்தில் நான் மனைவி என் மூத்த மகள் (அப்ப அவளுக்கு மூனு வயசு)என் மனைவியின் சகோதரர் என நான்கு பேர் திருச்செந்தூர், மணப்பாடு, உவரி போன்ற இடங்களுக்கு வந்திருக்கிறேன்.

உங்க பதிவை படிச்சதும் அந்த இனிமையான பழைய நினைவுகள் திரும்பி வந்து மனசுல ஒரு சந்தோஷம் நிறையுது ராகவன்.

உங்க உணர்ச்சிபூர்வமான நடை.. ரொம்ப நல்லாருந்திச்சி ராகவன்.

said...

//ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக்கல் பதக்கம்//

முத்து மாலைல வைரக்கல் பதக்கமா.?..., உங்க நகை சென்ஸ் நல்லாருக்கு இளவஞ்சி!. ஆனாலும் உங்க வீட்டம்மா ரொம்பப் பாவம் !!!.

said...

உங்கள் கதையில் செந்தில்நாதன் அரசாங்கம் நன்றாகவே தெரிந்து, பழைய திருச்செந்தூர் நினைவுகளைக் கொண்டு வந்தது.

(கோயில் வெளிச் சுற்றாலையில் (தேவர் கட்டியது)கடலலைகள் அடிக்கின்ற இடத்தில் உட்கார்ந்து ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா?)

ஒரு 14/15 ஆண்டு தூத்துக்குடி வாழ்க்கை உங்களின் பதிவுகளைக் கவனித்துப் படிக்க வைத்தது.

தொடரட்டும் உங்கள் பங்களிப்பு. எல்லா வளமும் சிறக்க!

அன்புடன்,
இராம.கி.

said...

முருகா......உங்களுக்கு புண்ணியமா போகும் போங்க ரொம்ப நாளா செந்தூர் போகனும்னு ஆசை . உஙகள் பதிவால செந்தூர கண் முன்னாடி கொன்டு வந்துட்டீங்க . நன்றி வாழ்த்துக்கள்!

said...

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்க, தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்.

said...

// இராகவன், இந்த இடத்தில் தான் எனக்குப் பொறிதட்டியது. ஆஹா...நம்ம ஆளு இந்த திசையிலயா கதையைக் கொண்டு போறார்ன்னு. அப்புறம் பேர் முருகன்னு சொன்னவுடனே ஆச்சு. :-) //
ஆகா! குமரன் கண்டு பிடிச்சிட்டாரே. குமரங்குறதாலயா?

// நன்றாய் இருந்தது. வழக்கம் போல 'வட்ட நிலா கடலைத் தொட்ட நிலா' எல்லாம் நன்றாய் இருந்தது. //
அதுக்குள்ள வழக்கம் போல ஆயிருச்சா...ராகவா....கவனம். கவனம்.

said...

// மொத்தக்கதையும் ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக்கல் பதக்கம் இருக்கனும் இல்லையா? அது இதுதான்..
//நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.//
ஏதோ எனக்கு பிடிச்சது! :)//
உண்மையச் சொல்லட்டுமா இளவஞ்சி, மொத்தக் கதையையும் எழுதி முடிச்சதும் கடைசியா சேத்த வரி அது. :-)

// தெளிவான எழுத்துநடைங்க.. கலக்கல்! இவ்வளவு படிச்ச அப்பனுக்கே பாடம் சொல்லிக்குடுத்த முருகருக்கு ஏன் அப்பாம்மா கிட்ட கோவம் மட்டும் பொசுக்குன்னு வருதுன்னு தெரியலை! இன்னைக்கும் வீடுகள்ல இளையபயக இப்படித்தான் இருக்கறாங்க.. //

நன்றி இளவஞ்சி. எல்லாம் நடிப்புங்க. அதுனால நமக்குப் பாடம் சொல்றது. வாரியார் சொல்வார். விரல் விட்டு எண்ணுவது எப்படீன்னு வாத்தியார் சொல்லித் தருவார். வாத்தியாருக்கே விரல் விட்டுதான் எண்ணத் தெரியுமுன்னு மாணவன் சொல்வான். நாம மாணவர்கள். அவன் வாத்தியார்.

said...

// சூப்பர். அப்படியே ஒரு திருச்செந்தூர் கோயில், மண்டப படங்களும், முருகனின் படமும் எடுத்துப் போட்டிருந்தால் இன்னும் எங்களை நேரே லொகேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும். நல்ல நடை. தொடரட்டும் தங்கள் முருகன் பணி ! //
நன்றி அலெக்ஸ் பாண்டியன். இப்போதைக்குப் படம் போட முடியாது. கொஞ்ச நாள் போகட்டும். வீட்டுல நெட் கனெக்ஷன் வந்ததும் போடுறேன்.

// மணலும்,பிரகாரமும்,அலைகடலும்
ஏம்ப்பா பழைய நினைவுகளை கிளறிவிடுறீங்க?

இராகவன் இன்னும் இன்னும் நிறைய உங்களால் எழுத இயலும்.
செய்யுங்கள். //
நன்றி மதுமிதா. உங்களைப் போலவே பலரும் திருச்செந்தூர் நினைவுகளில் மூழ்கி விட்டார்கள். நம்ம ஜோசப் சாரும் கிருஷ்ணனும் அதைச் சொல்லித்தான் பாராட்டியிருக்காங்க. இத்தனை பேரோட நினைவலைகளைத் தூண்டி விட்டிருக்கோமேன்னு சந்தோஷமா இருக்கு.

// முருகா......உங்களுக்கு புண்ணியமா போகும் போங்க ரொம்ப நாளா செந்தூர் போகனும்னு ஆசை . உஙகள் பதிவால செந்தூர கண் முன்னாடி கொன்டு வந்துட்டீங்க . நன்றி வாழ்த்துக்கள்! //
நன்றி செயக்குமார். சிற்பிகள் கல்லில் ஆண்டவனைக் காட்டுவார்கள். பாடகர்கள் இசையில் ஆண்டவனைக் காட்டுவார்கள். ஓவியர்கள் திரையில் ஆண்டவனைக் காட்டுவார்கள். நான் எழுத்தன். எழுத்தில் முயற்சிக்கிறேன். அனைத்திலும் அடங்கியும் அடங்காமலும் இருப்பவனை இப்படி அடக்க முயன்று அதில் சிறிதளவேனும் வெற்றி கிட்டினால் பேரானந்தமே.

// திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்க, தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம். //
சத்தியவாக்கு மூர்த்தியண்ணா.

said...

ராகவன்,
அருமையான பதிவு.

பாராட்டுக்களும், நன்றியும் !

said...

இராகவன்,

கருத்தில் உடன்பாடு இல்லையென்றாலும்,
கதையை இரசித்தேன்!

பாராட்டுக்கள்!!

அருட்பெருங்கோ.

said...

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். ராகவன் உங்கள் பதிவில் அதனை காணும் போது எனக்கு உற்சாகம்.

said...

// ராகவன்,
அருமையான பதிவு.

பாராட்டுக்களும், நன்றியும் ! //

பாராட்டிய பாலாவிற்கு நன்றி பல.

// இராகவன்,
கருத்தில் உடன்பாடு இல்லையென்றாலும்,
கதையை இரசித்தேன்!
பாராட்டுக்கள்!!
அருட்பெருங்கோ. //
அருட்பெருங்கோ. கருத்துகள் வேறுபடலாம். ஆனால் அதைப் பெரிதாக நினைக்காமல் எழுத்தைப் பாராட்டிய உங்களது நற்பண்பிற்கு நான் தலைவணங்குகிறேன்.

// திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். ராகவன் உங்கள் பதிவில் அதனை காணும் போது எனக்கு உற்சாகம். //
நன்றி என்னார். உங்கள் ஊக்கம் நிச்சயமாக எனக்கு ஆக்கம்.

said...

Dear Raghavan,
unmayaga kadaysi variyay padikkum varay muruganai kandu pidikka mudaiyavillay. ithu enakku tholviye, anal ungalukku vertri.kathay yagha parthal murugan theriyavillay, muruganay parthal kathay thiryavillay.Marathil maraythathu mamatha yanay,marathay maraythathu
mamamatha yanay. anban TRC

said...

நன்றி TRC. உங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. :-)