Tuesday, November 22, 2005

நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா

உலகெங்கும் ஒரே பதட்டம். மனித முயற்சிகள் அத்தனையும் இயற்கையின் முன்னே ஒன்றுமில்லை என்பதை மீண்டும் ஒரு முறை இயற்கை நிரூபிக்கிறது. கி.பி.2505. உலகத்தின் தட்பவெட்ப நிலையே மாறிப் போயிருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் மழை. எங்கு பார்த்தாலும் மழை. எல்லாம் கடந்த ஐம்பதாண்டுகளாகத்தான். உலகில் சுற்றுப்புறச் சூழல் மிகவும் கெட்டு பூமிப்பந்தே கொதித்துக் கிடந்தது. பனிமலைகள் எல்லாம் உருகத் தொடங்கின. உலகெங்கும் நீர்மட்டங்கள் உயர்ந்தன.

அப்படி நீர்மட்டம் உயர்ந்ததால் பல இடங்கள் நீரில் போயின. அங்கிருந்த மக்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கிப் போயினர். யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனாலும் பல இடங்கள் தப்பிப் பிழைத்தன. சில இடங்களில் கடல் உள்ளே போய் நிலம் வந்தது. கடுமையான தட்பவெட்ப நிலையைச் சமாளிக்க மாட்டாமல் மக்கள்தொகை குறைந்து கொண்டே வந்தது. இந்தியாவின் மக்கள் தொகை இருபத்தைந்து கோடியாகக் குறைந்தது. அறிவியல் ஆராச்சிகள் பல செய்து இன்னும் ஐம்பதாண்டுகளில் உலகெங்குமே நீருக்கடியில் போய் விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்.

உலக மக்கள் பயந்து போனார்கள். எப்படித் தப்பிப் பிழைப்பது என்று யோசித்தார்கள். ஒருவழியும் உருப்படியாகப் பிடிபடவில்லை. நிலாவிற்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் போய்ப் பிழைக்க முடியுமா என்று யோசித்தார்கள். அதுவும் முடியுமென்று முடிவு கட்டி சோதனை முயற்சிகள் பல செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டிலிருந்தே நிலாவிற்கு மனிதர்கள் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் அங்கு மானிடர்கள் வாழத் தேவையான அடிப்படை வசதிகளை விதைக்கத் தொடங்கினார்கள். நீர் வளத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். முதலில் செயற்கை மேகங்களை உருவாக்கினார்கள். அதில் மழையைப் பொழிய வைத்தார்கள். ஒரு ஐம்பதாண்டு காலம் அப்படியே போனது. பிறகு ஒரு கட்டத்தில் தானாகவே மேகங்கள் உருவாகத் தொடங்கின. மழையும் பொழியத் துவங்கின. அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்பொழுது பெய்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கழிந்த பின்னே தாமாகவே மழை பொழியத் தொடங்கின.

மழை அடிக்கடிப் பெய்யத் தொடங்கியதால் மண் பக்குவப் பட்டது. அது விவசாயத்திற்குத் தக்கதானது. அனைத்தும் அறிவியலாளர்களின் உழைப்பு. அமெரிக்கா இதில் முன்னிலை வகித்தது. ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவும் இந்தியாவும் சைனாவும் சில அரபு நாடுகளும் தங்களது கனிசமாக உழைப்பைக் கொட்டியிருந்தன.

இத்தனை முன்னேற்றங்கள் நடந்ததால் மண்ணில் இருந்து பார்க்கும் பொழுது நிலாவின் தோற்றம் மாறிப் போயிருந்தது. பால் வெண்ணிலா என்று கவிஞர்கள் புகழ முடியாமல் போயிற்று. மேகங்கள் சூழும் போது நிலா கருஞ்சாம்பல் நிறத்தில் தெரிந்தது. மேகங்கள் விலகிய பொழுதுகளில் பச்சை வெளிகளால் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் சில வேளைகளில் ஒளி வெள்ளங்களை அங்கே உருவாக்கிக் கொண்டிருந்ததால் அம்மாவாசைகளில் கூட நிலாவில் ஆங்காங்கே வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன.

ஆனாலும் கவிஞர்கள் விட்டுக் கொடுக்காமல் புதுப்புது விதங்களில் நிலவைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அதுதான் மனித வாழ்க்கையைக் காப்பாற்றப் போகிறது என்பதால் அதைக் காதலியாகப் பார்ப்பதை விடுத்து தாயாகப் பார்த்தார்கள். தமிழர்கள் சென்னைக் கடற்கரையில் மிகப்பெரிய சந்திராலயம் கட்டினார்கள். அங்கு கூட்டம் குவியத் தொடங்கியது. சந்திரனிலிருந்து பார்த்தாலும் தெரிகிறது என்று அங்கிருந்து புகைப்படங்களை வேறு எடுத்து அனுப்பினார்கள். அந்தப் படங்களை தங்கள் உடைகளில் அச்சிட்டுக் கொள்வது பிரபலமானது.

கிட்டத்தட்ட முந்நூறு வருட கடின உழைப்பிற்குப் பின்னர் நிலா என்பது மற்றொரு பூமி என்றாகி விட்டது. மனிதகுலம் காப்பாற்றப் படுமென்று உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ஆனால் அதுவும் நீண்டு நிலைக்கவில்லை. காரணம்? அடிக்கடி நிலாவிற்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்த அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியையும் கொடுத்து, ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தனர். இது மிகவும் ரகசியமாக நடந்தது.

கிட்டத்தட்ட முக்கால்வாசி நிலவை அவர்கள் வளைத்திருந்தனர். கடுமையான காவல் போடப் பட்டது. அங்கிருந்த மற்ற நாட்டு விஞ்ஞானிகளையும் வழிக்குக் கொண்டு வந்திருந்தனர். ஆகையால் விஷயம் மற்ற நாடுகளை அடையவில்லை. மொத்தமாக மூன்று கோடிப் பேர்கள் அங்கு போக முடியும் என்று உலக விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். எந்தெந்த நாடுகளிலிருந்து எத்தனை பேர்களை அனுப்புவது என்று முடிவு செய்ய ஐக்கிய நாட்டுச் சபையைக் கூட்டினர்.

அப்பொழுதுதான் பிரச்சனைகள் வெடித்தன. இரண்டு கோடிப் பேர்களை அனுப்பவும் பாதுகாக்கவும் அமெரிக்கா அங்கு ஏற்பாடு செய்திருப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிற்கு இரண்டு கோடிப் பேர். மற்ற அனைத்து நாடுகளுக்கும் சேர்த்தே ஒரு கோடிப் பேரா! ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விடவும் தான் செலவழித்திருப்பதை ஆதாரத்தோடு எடுத்துச் சொன்னது அமெரிக்கா. இத்தனை காலம் அமெரிக்காவின் உதவியுடன் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பல நாடுகள் தங்கள் பங்கு வெறும் உடல் உழைப்பு என்றாகிப் போனதைக் கண்டு நொந்தன.

இரண்டு கோடி அமெரிக்கர்களை இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா அனுப்பும் என்று தன்னிச்சையாக அறிவித்தது. அப்படி அனுப்பப் பட வேண்டியவர்களை அமெரிக்கா பட்டியலிடத் தொடங்கியது. அறிஞர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சிறந்தவர்களாக தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக முப்பதிலிருந்து நாற்பது வரை வயதுள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைத்தது. அவர்களுக்காக அங்கே ஒரு நாடாளுமன்றத்தைக் முன்னேற்பாடாக அமைத்தனர். அந்த நாடாளுமன்றத்தில் பணியாற்ற அமெரிக்க அதிபர் அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தார். அவருக்காக அங்கே ஒரு வெள்ளை மாளிகை உண்டாகப்பட்டது.

பல ஏற்பாடுகள் நடந்தன. கடைசியாக முதற்கட்டமாக ஆள் அனுப்பும் நாளும் நெருங்கியது. அமெரிக்காவில் இதற்காகவே ஒரு நிலா நிலையம் கட்டப்பட்டது. ஐநூறு பயணிகள் செல்லும் வகையில் மூன்று நிலாக் கப்பல்கள் கட்டப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கவும் பட்டன. அடிக்கடி மழை பெய்து கொண்டிருந்த போதிலும் நிலாக் கப்பலின் பயணத்தைப் பார்க்கப் பலர் குவிந்திருந்தார்கள். தொலைக்காட்சிகளிலும் ஆயத்தங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எங்கும் பலத்த பாதுகாப்பு.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து ஐநூறு பேர்களுக்கு மக்கள் ஆராவார விடை கொடுத்தனர். ஷாம்பெயின் பாட்டில் உடைக்கப்பட்டு நிலாக்கப்பல்கள் ஒவ்வொன்றாக மேலெழும்பின. எந்தத் திசையிலும் திரும்பும் வகையில் அமைந்தவை அந்தக் கப்பல்கள். மொத்தக் கப்பலும் தலைகீழாகத் திரும்பினாலும் கூட உள்ளே அமர்ந்திருப்பவர்கள் நேராகவே உட்கார்ந்திருப்பார்கள். அத்தனை வசதிகள் நிறைந்தவை. நெருப்பை உமிழும் பழைய ராக்கெட்டுகளைப் போன்றவை அல்ல இந்தக் கப்பல்கள். கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு விமானங்கள் போல பார்வைக்கு இருக்கும்.

பிரச்சனை என்னவென்றால் மற்ற நாடுகளின் நிலாக் கப்பல் சோதனை இன்னும் முழுமையாக வெற்றியடையவில்லை. அமெரிக்காவிடம் மட்டுமே ஒழுங்கான நிலாக் கப்பலின் தயாரிப்புத் திட்டங்கள் இருந்தன. ஆனால் அந்தத் திட்டங்களை வைத்துக் கப்பல்களைச் செய்ய வேண்டுமென்றாலும் மற்ற நாடுகளுக்குப் பத்து வருடங்கள் ஆகும். மேலும் முதலில் நிலா நிலையம் ஒன்று அமைக்க வேண்டும். அதற்கே ஐந்து வருடங்களுக்கு மேலாகும். அதோடோ அல்லது அதன் பின்னரோ நிலாக் கப்பல் செய்ய வேண்டும். எவ்வளவு செலவு பிடிக்கும்! எவ்வளவு அறிவியல் மூளை வேண்டும்!

அமெரிக்க அதிபர் நிலாவிலுள்ள வெள்ளை மாளிகையில் இவர்களை வரவேற்கக் காத்திருந்தார். ஏழு நாட்களில் அவர்கள் நிலவை அடைந்து விடுவார்கள் அல்லவா. நிலாக் கப்பல்கள் மேலெழும்பும் காட்சியை அவரது கணினியில் பார்த்தார். ஒவ்வொன்றாக மேலெழும்பும் காட்சி மிக அழகாக இருந்தது. பெருமை மிக்க அமெரிக்கர்களுக்கு அவர் உரையாற்றினார்.

அப்பொழுதுதான் அந்த விபரீதம் நடந்தது. மேலெலும்பிய மூன்று கப்பல்களும் திசைமாறி நிலா நிலையத்தை நோக்கியே திரும்பின. நேரிலும் தொலைக்காட்சியிலுமாகப் பார்த்துக் கொண்டிருந்த மொத்த உலகமும் ஸ்தம்பித்தது. நிலா நிலையம் மூன்று பகுதிகளை உடையது. பயணியர் பகுதி. கட்டுப்பாட்டுப் பகுதி. நிலாத் தொடர்புப் பகுதி. ஒவ்வொரு கப்பலும் ஒவ்வொரு பகுதியை நோக்கித் திரும்பியது. மிகுந்த வேகத்தில் வந்து மூன்று பகுதிகள் மேலும் மோதின.

பெருத்த ஓசை. பயங்கர ஓலம். ஒவ்வொரு பகுதியின் கட்டிடங்களும் பொலபொலவென உதிர்ந்தன. ஏன் அப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லாம் பாதுகாப்பாகத்தானே இருந்தது. பிறகெப்படி. கட்டிடங்களிலிருந்து பலர் தப்பிப்பதற்காகக் கீழே குதித்தனர். அந்தோ பரிதாபம்! அந்த உயரத்திலிருந்து குதித்தால் எதுவும் மிஞ்சுமா! பேரிழப்பு! மிகப் பெரிய இழப்பு! மொத்தத்தில் நிலாக் கனவு நிலாச்சோறானது.

பி.கு : இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனையே. எந்த நாட்டையும் இனத்தையும் மட்டம் தட்டுவதற்காக எழுதப் பட்டது அல்ல.

அன்புடன்,
கோ.இராகவன்

24 comments:

said...

இராகவன் கற்பனையெல்லாம் நல்லாயிருக்கு, நிலாவா அப்படிங்கறதுதான் சந்தேகமா இருக்கு. ஏன்னா நிலா ஒன்னுக்கும் உதவாதது.

said...

மோகன்தாஸ், அதுவும் அப்படியோ! தெரியாமப் போச்சே! ராகவா! மாட்டிக்கிட்டு முழிக்கிறயே. பேசாம தெரிஞ்சத எழுதக் கூடாதா!

said...

கற்பனை நல்லாதான் இருக்கு.
அது எப்படி மூணூ கப்பலும் மோதிக்கிச்சு?

அதுக்குள்ளே ஒரு ...... ஏஜெண்ட் எதாவது குழப்பம் செஞ்சுவச்சுட்டான்னு முடிக்கலையா?:-))))

said...

சுவாரஸ்யமான கற்பனை. கற்பனைக்கு எனது பாராட்டுகள்.

இது போன்று விசயங்களை கையாளும் போது அங்கத தொனியை பயன்படுத்தி இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.(உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை .உரைநடை கொஞ்சம் சோர்வைத் தருகிறது. என்னாச்சு ராகவன் பைனல்களில் விளையாடும் இந்தியா மாதிரி பண்ணுகிறீர்கள்) சமூகங்களுக்குள் நடக்கும் சுரண்டல்களையும், அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைதனத்தை நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். இது கற்பனைக் கட்டுரை என்றாலும் சரி, கற்பனை கதை என்றாலும் சரி இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

இந்த நட்சத்திர வாரத்தில் உங்கள் படைப்புகளின் மீதான எனது விமர்சனம் வெறும் வாழ்த்துகளோடு நின்றுவிடாது.

said...

// கற்பனை நல்லாதான் இருக்கு.
அது எப்படி மூணூ கப்பலும் மோதிக்கிச்சு?

அதுக்குள்ளே ஒரு ...... ஏஜெண்ட் எதாவது குழப்பம் செஞ்சுவச்சுட்டான்னு முடிக்கலையா?:-)))) //
அதுவும் ஒரு நிகழ்விலிருந்து எடுத்த கற்பனைதான்.

முடிவுல ட்விஸ்ட் எதிரி பாத்திருக்கீங்க. ஏஜெண்ட்டு குழப்பமுன்னு எழுதலை. வண்டியக் கடத்தீட்டுப் போயி மோதீட்டாங்கன்னு வெச்சுக்கோங்களேன்.

said...

// சுவாரஸ்யமான கற்பனை. கற்பனைக்கு எனது பாராட்டுகள்.//
நன்றி. அமெரிக்காவை எதிர்க்கும் கற்பனை உங்களுக்குப் பிடிக்கும் என்றே நினைத்தேன்.

// இது போன்று விசயங்களை கையாளும் போது அங்கத தொனியை பயன்படுத்தி இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.(உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை .உரைநடை கொஞ்சம் சோர்வைத் தருகிறது. என்னாச்சு ராகவன் பைனல்களில் விளையாடும் இந்தியா மாதிரி பண்ணுகிறீர்கள்) //
கண்டிப்பாக அடுத்த பதிவில் முன்னேற்றிக் கொள்கிறேன்.

// சமூகங்களுக்குள் நடக்கும் சுரண்டல்களையும், அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைதனத்தை நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். //
அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்று இந்தக் கதையை எழுதவில்லை. ஏனென்றால் சாட்டாம்பிள்ளைத் தனங்களை நான் பல இடங்களில் பார்க்கிறேன். எங்கெல்லாம் இருக்கிறதோ....அதையெல்லாம் நிச்சயமாக எதிர்த்து எழுதத்தான் செய்வேன். என்னை இழிவு கழிவு என்று சொன்னாலும் செய்வேன்.

//இது கற்பனைக் கட்டுரை என்றாலும் சரி, கற்பனை கதை என்றாலும் சரி இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

இந்த நட்சத்திர வாரத்தில் உங்கள் படைப்புகளின் மீதான எனது விமர்சனம் வெறும் வாழ்த்துகளோடு நின்றுவிடாது. //
கண்டிப்பாக. உங்கள் விமர்சங்களை எதிர்பார்க்கிறேன்.

said...

//அதுக்குள்ளே ஒரு ...... ஏஜெண்ட் எதாவது குழப்பம் செஞ்சுவச்சுட்டான்னு...//

அவன் இவன் என்ற ஏகவசனம் யாரைப்பற்றி என்று சொல்லமுடியுமா?

;-)


Moon-க்கு அனுப்ப மூனு கப்பல்! என்ன நியூமராலஜியா! :-)

comment by: Agent 8860336 ஞானபீடம் + NJ

said...

கற்பனை அருமை ராகவன்.

said...

இப்போ தோணின கற்பனை மாதிரி தெரியலியே, பாம்பாட்டி காலத்திலிருந்து ஆரம்பிச்சு, இணையத்துக்கு ஏத்ததா டெவலப் பண்ணிட்டீங்களா?

said...

முத்துக்குமரன் என்ன சொல்லவரீங்க, அவருடைய கதை சோர்வளிப்பதாக இருந்தால் அதை சொல்லுங்கள்,

என்னவோ நட்சத்திர பதிவராக இருந்தால் இன்னும் தீவிரமாக பதியவேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் தேவையில்லாதது.

//என்னாச்சு ராகவன் பைனல்களில் விளையாடும் இந்தியா மாதிரி பண்ணுகிறீர்கள்//

இது தேவையில்லாதது.

ஒரு வகையான வாய்ப்பு அவ்வளவே, பைனல்ஸ் எல்லாம் ஒன்றும் கிடையாது. இதில் சாதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. புரிந்துகொள்ளுங்கள்.

said...

நல்ல கற்பனைய்யா.
ஆனா பிரியன் சொன்ன மாதிரி உரைநடை கொஞ்சம் சோர்வைத்தான் தருது.
அடுத்த பதிவுகள் கலக்கட்டும்.

said...

நண்பர் மோகன்தாஸிற்கு, நான் கதையின் நடை சோர்வளிப்பதாகத்தான் சொல்லி இருக்கிறேன். தீவிரமாகத்தான் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.
ராகவன் எழுத்துகள் எனக்கு முன்பே நன்கு அறிமுகமானதே. நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை என்று....
( வலைப்பூக்களில் மட்டும் சாதிப்பது சாதனை ஆகிவிடாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்).

இது உரிமையின் பால் சொல்லப்பட்ட விசயம்....இப்படித்தான் விமர்சனம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு எதையும் பண்ணுவதில்லை. எனக்குத் தோன்றியதை நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவே. இது குறித்தான உங்கள் கருத்துகளையும் அதே நோக்கில்தான் எடுத்துக்கொள்கிறேன்......

said...

வாங்கய்யா பிரதீப். இத்தனை நாளா காணம போயிருந்தவரை மீண்டும் வர வைத்ததற்காக ஒரு சிறப்பு நன்றி ராகவனுக்கு....

பிரதீப் உங்க பழைய பாசத்திற்கு நன்றி.
(தமிழ்மன்றம்.காமில் பிரியன் என்ற பெயரில் இயங்கி இருக்கிறேன்....)

அன்புடன்

பிரிய-முத்துகுமரன்

said...

நட்சத்திர வாரத்தில் சரியாக எழுதாதது குறை என்பதைப்போல் ஒரு தோனி இருந்தது உங்கள் பின்னுட்டத்தில் அதனால் தான் சொன்னேன் அப்படி.

said...

மோகன்தாஸ் said...
நட்சத்திர வாரத்தில் சரியாக எழுதாதது குறை என்பதைப்போல் ஒரு தோனி இருந்தது உங்கள் பின்னுட்டத்தில் அதனால் தான் சொன்னேன் அப்படி

அது அவர்மீது நான் வைத்திருக்கும் எதிர்பார்ப்பின் காரணமாகக்கூட இருக்கலாம்......

said...

நண்பர்களே, இருவருமே எனக்காகப் பேசுகின்றீர்கள். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. உங்களுக்கு என்னால் முடிந்ததை இன்னமும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகமே எனக்கு வருகிறது. இந்த உத்வேகத்தை எனக்குத் தந்த என் நண்பர்களுக்கு நான் உரிமையெடுத்துக் கொண்டு நன்றி சொல்லப் போவதில்லை. :-)

அன்புடன்,
கோ.இராகவன்

said...

பாராட்டிய மூர்த்தி அண்ணனுக்கு நன்றி.

ஞானபீடம் நியூவா இருக்கட்டுமுன்னு நியூமராலஜி பாக்காம விட்டுடேனே........நீங்க சொன்னதுந்தான் எனக்கே தெரியுது!

தாணு, பாம்பாட்டி காலக் கற்பனைகளை என்னால் எழுத்தில் வடிக்க முடிந்தால் உண்மையிலேயே சந்தோஷப்படுவேன். ம்ம்ம்ம்...முடியலையே.

said...

//உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை .உரைநடை கொஞ்சம் சோர்வைத் தருகிறது. //

இராகவன். நானும் இதை வழிமொழிகிறேன். மிக நல்ல கற்பனை. ஆனால் அவசரமாய் எழுதியது போல் இருக்கிறது. இது கதையா? கட்டுரையா? என்றும் கேட்க வைக்கிறது.

நட்சத்திர வாரத்தில் மட்டும் அல்ல. எப்போதும் விமர்சனம் செய்ய வேண்டும். அது தான் எழுதுபவருக்கு நல்ல ஊக்கம் தரும். விமர்சனமும் பாராட்டும் எழுத்தை ஆழ்ந்து படித்தால் தானே வரும்? அதனால் இரண்டுமே தேவை. இரண்டும் வந்தால் தான் நாம் எழுதுவதை நான்கு பேராவது படிக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் இன்னும் அதிகமாய் எழுதத் தோன்றும்.

முன்பே கேட்டது போல் சுஜாதாவாய் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது இருக்கிறதா? Sci-Fi கதைகளில் ஆர்வம் காட்டுகிறீர்களே?

இந்தக் கதையை ஆழ்ந்து சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது ஆங்காங்கே தெரிகிறது - பல வண்ண நிலவு ஒரு உதாரணம். :-)

said...

அதென்னப்பா...இவ்வளவு பேர் படிக்கிறீங்க...நல்லா இருக்குன்னு சொல்றீங்க...ஆனா யாரும் ஓட்டு போட்டதாத் தெரியலயே...எல்லாரும் தவறாம + குத்திட்டுப் போங்க...ன்னு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஹே யாருப்பா அது...அடுத்தவன் இலைக்கு பாயாசம் கேக்கறான் குமரன்னு சவுண்டு விடுறது?....

said...

அடடா.... ஞான்ஸ்,

இப்பத்தான் நினைவுக்கு வருது இந்த 'ஏஜண்ட்' விவகாரம்!

இந்த 'ஏகவசனம்' வேற ஒரு உண்மையான ஏஜெண்ட்'க்கு வச்சுக்கலாம்.

ஆமா, நீங்க எந்த நாட்டோட ஏஜண்ட்? சொல்லிட்டீங்கன்னா அடுத்த பின்னூட்டத்துலே கவனமா இருப்போம்லெ.

said...

//அடடா.... ஞான்ஸ்,
ஆமா, நீங்க எந்த நாட்டோட ஏஜண்ட்?//
- துளசி கோபால்

சர்வம் ரகஸியாம்!

said...

// இராகவன். நானும் இதை வழிமொழிகிறேன். மிக நல்ல கற்பனை. ஆனால் அவசரமாய் எழுதியது போல் இருக்கிறது. இது கதையா? கட்டுரையா? என்றும் கேட்க வைக்கிறது. //
உண்மைதான் குமரன். அவசரமாக எழுதியதுதான் இது. அதனால்தான் கட்டுரைக்கும் கதைக்கும் இடையில் பிறந்த குழந்தை போல இருக்கிறது. இதே கதையை இன்னமும் சிறப்பாக எழுத முடியும். எழுதுவேன்.

// முன்பே கேட்டது போல் சுஜாதாவாய் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது இருக்கிறதா? Sci-Fi கதைகளில் ஆர்வம் காட்டுகிறீர்களே? //
நிச்சயமாக இல்லை. இன்னொரு சுஜாதாவாக மாற எனக்கு விருப்பமில்லை. என்னை அளவுகோலாக வைத்து இன்னொரு ராகவன் வந்தால் அதுதான் எனது வெற்றி.

// இந்தக் கதையை ஆழ்ந்து சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது ஆங்காங்கே தெரிகிறது - பல வண்ண நிலவு ஒரு உதாரணம். :-) //
இந்தக் கதைக்கான சிந்தனை எக்கச்சக்கம். ஏனென்றால் இந்தக் கதையை தொடர்கதையாக கொண்டு செல்லும் அளவிற்கு யோசித்து வைத்திருக்கிறேன். ஆனால் கதையின் வடிவம் கைவரவில்லை. மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

said...

//என்னை அளவுகோலாக வைத்து இன்னொரு ராகவன் வந்தால் அதுதான் எனது வெற்றி.
// அப்டி போடுங்க :-)

//இந்தக் கதையை தொடர்கதையாக கொண்டு செல்லும் அளவிற்கு யோசித்து வைத்திருக்கிறேன்// விஷ்ணுசித்தனைப் பார்த்தா எப்படி சின்ன கதையை தொடர்கதையா எழுதுறதுன்னு ஒரு ஐடியா கிடைக்கும் :-)

said...

காளங்கள் மாரினாலும் காட்சிகள் மாரினாலும், மனிதர்கள் மாரமாட்டார்கள் என்பதை ஆனித்தரமாக சொல்லிவிட்டீர்கள் ராகவன். உன்மைதான் மனிதன் உருப்படியாக மாரியுருந்தாள் னிலவுக்கு னாம் ('NA' உதவிதேவை தயவுசெயுங்கள்- எந்தப்பொத்தானை அளுத்த வேண்டும்) செல்லவேண்டிய அவசியம் இல்லைதானெ.

மதி