Thursday, November 24, 2005

பெங்களூரி ஒரு நாள்.........சும்மா திக்குன்னு இருக்கு......

இது நடந்து ஆறு வருஷம் இருக்கும். இப்ப நெனச்சாலும் கொஞ்சம் திக்கு இருக்கும்.

ஒரு பிரச்சனை. பெங்களூர் சிட்டி பஸ் டிரைவர் ஒருத்தன ஏத்திக் கொன்னுட்டான். விபத்துதான். அதுக்கு அந்த டிரைவருக்கு கோர்ட் தண்டனை கொடுத்திருச்சு. அத எதுத்துதான் போராட்டம். எல்லா பஸ் டிரைவர்களும் கண்டெக்டர்களும்.

எந்த பஸ்சும் ஓடல. எல்லாம் அப்படியே நிக்குது. அப்போ ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரனும். சிவாஜி நகர் பஸ்டாண்ட் வரைக்கும் நடந்து வந்தாச்சு. அங்கயிருந்து சஞ்ஜய நகருக்குப் பஸ் பிடிக்கனும். ஆனா பஸ் இல்லை. ஒரே கூட்டம். கொஞ்ச நேரங்கழிச்சி பஸ் கிளம்புமுன்னு பெருங் கூட்டம் காத்திருக்குது.

ஆட்டோக்கள்ல ஏறிப் போறவங்க போய்க்கிட்டே இருக்காங்க. கையில இருந்தது கொஞ்சப் பணம்தான். மீட்டர் போட்டுப் போனா போயிறலாம். ஆனா யாருமே அன்னைக்கு மீட்டர் போட மாட்டேங்குறாங்க. அதுனால ரெண்டு மூனு பேரு சேந்து ஆட்டோல போறாங்க.

ஒவ்வொரு ஆட்டோக்காரனும் ஏரியா பேரச் சொல்லிக் கத்துறான். ஆனா சஞ்ஜய நகருக்கு எவனும் கத்த மாட்டேங்குறான். எவ்வளவு நேரந்தான் காத்திருக்கிறது. ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டு சஞ்ஜய நகரு போகனுமுன்னு சொன்னேன். டிரைவரு முடியாதுன்னு சொல்லீட்டாரு. கங்கா நகர் வரைக்கும் போனா அங்கிருந்து நடந்துரலாமுன்னு கங்கா நகருக்குக் கேட்டேன். சரீன்னு ஒத்துக்கிட்டு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா குடுக்கனுமுன்னு சொன்னாரு. அதுக்கு நானும் ஒத்துக்கிட்டேன்.

வண்டி என்னைய ஏத்திக்கிட்டு கொஞ்சம் முன்னாடி போச்சு. அப்ப இன்னொருத்தன் வண்டிய நிறுத்தி சுல்தான்பாளையான்னு கேக்குறான். போறவழிதான். ஆனா கொஞ்சம் விலகனும். ஆட்டோ டிரைவர் ஒத்துக்கிட்டு அவனையும் ஏத்தியாச்சு.

ஏறுனதுக்குப் பெறகுதான் தெரிஞ்சது அவன் தண்ணி போட்டிருக்குற விஷயமே. அப்பவே எனக்குக் கொஞ்சம் பயம். ஒருவேளை ரெண்டு பேரும் பேசி வெச்சுக்கிட்ட ஆளுங்களோன்னு. அடிச்சுப் போட்டுட்டா? கடத்தீட்டுப் போயிட்டா! எதுக்கு வம்புன்னு நான் பேசாம வெளிய பாத்துக்கிட்டு வந்தேன். மழை வேற தூறிக்கிட்டேயிருந்தது.

பக்கத்துல உக்காந்திருந்தவன் பேச்சத் தொடங்கினான். கன்னடத்துலதான். கர்நாடகா போனதுமே வெளியில கன்னடம் பேசனுமுன்னு முடிவு செஞ்சி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டிருந்தேன். அதுனால அரைகொற கன்னடத்தில் நானும் ரெண்டொரு பேச்சு பேசினேன்.

ஆட்டோக்காரர் ஒரு இஸ்லாமியர். ஏறுனவன் குடிவெறியில தாறுமாறா அவரப் பேசுறான். மொதல்ல ஒருத்தர தாறுமாறா பேசுறதே பிடிக்காது. அதுல இப்படி ஒரு பேச்சு தேவையா.

"பாயினு மூச்சுகொண்டு சும்னே பன்னீ"ன்னு சொன்னேன். (வாய வெச்சுக்கிட்டு சும்மா வாங்க)

"ஹே! ஏனு மாடு பிடுத்தானே? பாம் ஹாக்தானா! நாவு சும்னே இரல்லா. கொத்தா?" (ஹே! என்ன செஞ்சிருவான்? குண்டு போடுவானா? நாங்க சும்மா இருக்க மாட்டோம். தெரியுமா?)

நா முடிவே பண்ணீட்டேன். வீட்டுக்கு ஒழுங்கா முழுசா போய்ச் சேந்தா போதுமுன்னு. அதுலயும் வழியில இருக்குற ஆர்.டீ.நகரும், அந்த ஆள் போக வேண்டிய சுல்தான் பாளையாவும் இஸ்லாமியர்கள் நிறைய இருக்கும் இடங்கள். இவன் எக்கச்சக்கமா பேசி ஏதாவது ஒரு பிரச்சனையானா என்ன பண்றதுன்னு பயந்துகிட்டு இருந்தேன். ஏன்னா! கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கிரிக்கட் விவகாரத்துல இந்து-முஸ்லீம் பிரச்சனையாயிருச்சு. அந்த ஏரியா வழியாத்தான இப்பப் போகனும்.

ஆனா அந்த ஆட்டோ டிரைவர் பொறுமையா வந்தாரு. நான் பேசாம இருந்தேன். கொஞ்ச நேரங் கழிச்சு பேச்ச எங்கிட்ட திருப்புனான் அந்த குடிகாரன்.

"நீவு யாவூரு சார்? தெலுகா?" (நீங்க எந்த ஊரு சார்? தெலுங்கா?) என்னையப் பாத்து தெலுங்கான்னு கேட்ட மொத ஆளு இவந்தான். என்னையப் பாத்ததுமே டிபிக்கல் தமிழியன்னு எல்லாரும் சொல்லீருவாங்க. நெத்தீல எழுதியிருக்கும் போல.

அந்தக் குடிகாரன் கேட்டதும் தமிழ்நாடுன்னு துணிச்சலா சொல்லீருப்பேன்னு நெனைக்கிறீங்க? ஏற்கனவே காவிரி பிரச்சனை. அதுல இப்படி ஒரு ஆளு. நானும் ஊருக்குப் புதுசு. ஒரு பயந்தான். பொய்யச் சொன்னேன்.

"நாவு பெளகாமு." (எனக்கு பெளகாம்.)

"ஒள்ளேதாயுத்து சார். ஈக எல்லாக்கடேயிந்தனும் பர்த்தாரே. அதுக்கே கேளிதே!" (நல்லதாச்சு சார். இப்ப எல்லாப் பக்கத்துலயிருந்தும் வர்ராங்க. அதுக்குதான் கேட்டேன்.)

எப்படியோ ஒரு அஞ்சு நிமிசம் பொழுத ஓட்டுனேன். அதுக்குள்ள சுல்தான் பாளையா வந்துருச்சு. ஆட்டோவ விட்டு எறங்குன குடிகாரன் டாடா சொல்லீட்டு போய்க்கிட்டேயிருக்கான். ஆட்டோ டிரைவர் எறங்கி அவனப் பிடிச்சுக் காசு கேக்குறாரு. அவன் நடுரோட்டுல நின்னுகிட்டு கத்துறான். அவனோட ஏரியான்னு சொல்லி மெரட்டுறான்.

நான் ஒடுங்கிப் போயிருந்தேங்குறது உண்மைதான். பைய மடியில வெச்சுக்கிட்டு கம்முன்னு உக்காந்திருந்தேன். இறங்கிப் போயிறலாமுன்னும் நெனச்சேன். ஆனா முடியலை. ஆட்டோக்காரனுக்குப் பணம் கொடுக்கனுமே.

குடிகாரங் கிட்ட என்ன நியாயம் எதிர் பார்க்க முடியும். ஆட்டோ டிரைவர் வெறுத்துப் போய் வந்தாரு. அவன திட்டிக்கிட்டே ஆட்டோவ ஓட்டுனாரு. நான் கங்கா நகருல எறங்கிக்கிட்டு பேசுன காசக் குடுத்துட்டு நடந்தே வீடு வந்து சேந்தேன்.

இப்ப இத்தன வருசம் இங்க இருந்தப்புறம் துணிச்சலும் இருக்கு. கன்னடப் பழக்கமும் நல்லாயிருக்கு. ஆனா அந்த சமயத்துல புதுசா அப்படி ஒரு அனுபவம். இன்னைக்கு நெனச்சாலும்....சும்மா திக்குன்னு இருக்கு......

இப்ப நான் கேக்க வர்ரது என்னன்னா? நான் செஞ்சது சரியா? நீங்களா இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அவ்வளவுதான் கேள்வி. விடைகள அள்ளி வீசுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

நானும் அதையே தான் செஞ்சிருப்பேன் ராகவன். (இது எதுனா ஜோசியம் பாக்குற வேலையா, பாக்யா பத்திரிகையில் வர்ரமாதிரி?)

said...

ஆஹா...அருமையான அனுபவம். இதை சொல்லிட்டு கேள்விகள வேறக் கேக்கிறீங்க? நல்லா இருக்கே?

நான் என்ன...எல்லாருமே அந்தமாதிரி சந்தர்ப்பத்துல அப்படிதான் செஞ்சிருப்போம்னு நினைக்கிறேன்.

said...

I can say this is a No. 1 post of urs. It has lot of messages. I like to get some more clarrifications reg. this. Pl. let me know ur id. My id is Ramki@Rajinifans.com

said...

இந்த மாதிரி சமயங்களில் நான் சொல்லும் ஊர் சித்தூர். சித்தூர் மக்கள் எங்க இருந்தாலும் வாழ்க.

said...

எல்லாரும் இதைத்தான் செஞ்சிருப்பாங்க. செய்யணும்.

இதுலே என்ன தப்பு? முதல்லே தாய்தந்தைக்குப் பிள்ளை. அப்புறந்தான் நாட்டுக்கு!

said...

நம்ம பெருமையச் சொல்றதுக்கு ஆயிரம் இடமிருக்கு. நிறைகுடத்துகிட்ட சொல்லி என்னா புண்ணியம்?. விடுங்க. நீங்க செஞ்சது சரி,

said...

// நானும் அதையே தான் செஞ்சிருப்பேன் ராகவன். (இது எதுனா ஜோசியம் பாக்குற வேலையா, பாக்யா பத்திரிகையில் வர்ரமாதிரி?) //
ஜோசியத்துக்கும் எனக்கும் ரொம்பத் தூரம். நான் அதெல்லாம் பாக்குறதில்லை காசி. இந்த நிகழ்வு பத்தி நம்மவங்க கருத்து கேக்கலாமுன்னுதான். "நாட்டை விட்டுத் துரத்துவேன்னு" யாராவது சொன்னா.....நமக்கு அது எந்த அளவிற்கு உளவியல் அச்சம் கொடுக்கும் என்பதற்குதான். என்றைக்கும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் மற்றவர்களிடம் பழக வேண்டும். நமது மொழியைப் பேசாதவனை, நமது மதத்தைப் பின்பற்றாதவனை, நமது சாதி இல்லாதவனை, நமது கருத்தைக் கொள்ளாதவனைக் கேவலமாக நினைப்பது மாறி, அடுத்தவரை மதித்து நடக்கக் கற்றுக் கொண்டால் எங்கும் இன்பமே.

said...

// ஆஹா...அருமையான அனுபவம். இதை சொல்லிட்டு கேள்விகள வேறக் கேக்கிறீங்க? நல்லா இருக்கே? //
ஆகா! குமரன், இது அருமையான அனுபவமா? அன்னைக்கு வீட்டுக்குப் போனதுந்தான் எனக்கு மூச்சே வந்தது.

// நான் என்ன...எல்லாருமே அந்தமாதிரி சந்தர்ப்பத்துல அப்படிதான் செஞ்சிருப்போம்னு நினைக்கிறேன். //
அப்படித்தான் எனக்கும் பட்டது. இதில் இன்னொரு ஜோக் என்னான்னா என்னை ஆந்திராக்காரன்னு அந்தாளு நெனச்சிட்டான். என்னயப் பாத்ததுமே "r u from chennai?" அப்படித்தான் கேப்பாங்க. மொகத்துல எழுதி ஒட்டீருக்கும் போல.

said...

// இந்த மாதிரி சமயங்களில் நான் சொல்லும் ஊர் சித்தூர். சித்தூர் மக்கள் எங்க இருந்தாலும் வாழ்க. //

ஓ ஒங்களுக்குச் சித்தூரா! நல்லது. நல்லது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.

கர்நாடகாக்காரங்களும் நான் தமிழ்நாடுன்னு கண்டுபிடிச்சிருவாங்க. ஆனாலும் அவங்களுக்கு ஒரு டவுட்டு வரும். "நீவு ஹுட்டி பெளகித்து பெங்களூரல்லா?" (நீங்க பொறந்து வளந்தது பெங்களூரிலா?)

இப்ப கன்னடம் வாய் வந்த பிறகு, இந்த மாதிரி நிகழ்வுகள் ஏற்படவில்லை.

said...

துளசிகோபால், நிறைகுடம் - நீங்க சொல்றதுதான் சரி. இனிமே நம்ம தமிழர்களாவது இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

said...

எல்லாரும் அதைத்தான் செஞ்சிருப்போம் ராகவன், பின்னூட்டங்களில் நீங்கள் சொல்கிற கருத்துக்கு முற்றிலும் உடன்படுகிறேன்.. உலகமே சுருங்கி வருகிற நிலையில் மாநில, சாதி மத பாகுபாடுகளை அனைவரும் களைய வேண்டும்....

said...

ஆட்டோ காரரும் வாய் பேசியிருந்தால் சும்மா கூட வந்ததற்கு கலரத்தில் சிக்கியிருப்பீர்கள். அதோடு குடிகாரர்கள் என அவரகள் கண்டு கொள்வதில்லை. அதனால் தப்பீத்தீர்கள். என்ன நடக்குமோ என்ற அச்சம் கொடுமை.

என் அனுபவம் இன்னும் பயங்கரம். நானும் இதுபோல ஒரு ஆட்டோவில் ஏறினேன் ஒரு 8 மணி சுமாருக்கு. கொஞ்ச தூரம் வந்தவுடன் 2 பையன்கள் ஆட்டோவை கைகாட்டி ஏறினார்கள். எனக்கு உங்கள் அளவுக்கு கூட கன்னடம் வராது. சீதா ஹோகி டர்ன் மாடி போல சிலவற்றை தவிர. ஹிந்தியை பற்றி கேட்கவும் வேண்டாம். அதோடு ஆட்டோவில் ஒற்றையாக போகும்போது நான் விளிம்பில் தான் அமர்வேன். இது எதற்கென்றால் நம்மை ஓரத்தில் பார்க்கும் எவரும் சட்டென்று நானும் வருகிறேன் என சொல்ல மாட்டார். யாரும் கேட்டாலும் மறுத்துவிடுவேன். சின்னப்பையன்கள் என்று நினைத்துவிட்டேன்.

ஆனால் நான் எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தேன். என்னால் வெளியேவும் குதிக்க முடியாது. அவர்கள் ஏதோ பேசிக் கொண்டே வந்தார்கள்.
கொஞ்சம் தூரம் சென்ற பிறகு வழக்கமான வெளிச்சமான பாதையை விட்டு இருட்டான ஒரு சந்திற்குள் ஆட்டோவை திருப்பினார்.
எனக்கு பொறி அடித்துவிட்டது. நிப்பாட்டுய்யா ஆட்டோவை என கத்தினேன. கூட இருந்த பையன்கள் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். எதுக்கு இறங்குனங்கிற என்று. நான் காதில் வாங்கவில்லை. நான் கத்திய கத்தில் ஆட்டோவை நிறுத்தினான். பின்னர் எகிறி குதித்து வந்தேன்.

ஆட்டோவில் செல்லும்போது கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

said...

ஐயோ கேக்கவே பயமா இருக்கே தயா..........நல்ல வேளை தப்பிச்சு வந்தீங்க.....