Wednesday, November 02, 2005

பொற்சிலையும் சொற்குவையும்

பொற்சிலையும் சொற்குவையும்

நிற்பதற்கு அன்றைக்குத் தில்லையின் எல்லையில் கூட இடமேயில்லை என்ற நிலை. பின்னே! மாமன்னர் ராசராசன் வருகின்றானே! அதுவும் ஒரு பெரிய பிரச்சனையை முன்னிட்டு. தில்லைக்கு ராசராசன் வருகின்றான் என்றால் உடன் தமக்கை குந்தவை நாச்சியாரையும் அழைத்து வரத்தான் போகிறான். பாலோடு சுவை வருவது போல உடன் வருவார் வந்தியத்தேவர். ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் வேறு உடன் வருகின்றார்கள். இளங்குழவிகளாகிய ராசேந்திரனும் குந்தவையும் கூட வருவதைக் காண்பதற்கே கூட்டம் கூடியிருந்தது.

ஆனால் வழக்கமாய் இறைவணக்கத்திற்கு மட்டும் வருகின்ற மன்னன் இந்த முறை வழக்கிற்கு வருகின்றான். மேலோட்டமாகப் பார்த்தால் பிரச்சனையே இல்லையென்று தோன்றும். ஆனால் அதில் தமிழின் மானமே அடங்கியிருந்தது. எல்லாம் ராசராசன் நம்பியாண்டார் நம்பியைச் சந்தித்ததால் வந்த வினை.

நம்பியோ தமிழ்த் தும்பி. அவரும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆசை கொண்டு ராசராசனிடம் வெளியிட்டார். ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் இறைவனைத் தமிழில் வணங்க விரும்பியதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலம். அதிலும் தேவாரத் தீந்தமிழ்ப் பாக்களைத் தொகுத்து நாள்தோறும் இறைவனை வழிபட விரும்பினார். ஆனால் அவரறிந்தவை ஒரு சில தேவாரப் பண்களே.

மற்றவை எல்லாம் எங்கே போயின? அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் ஊரூராகச் சென்று திருக்கோயில் பல ஏறிப் பாடிய அருந்தமிழ்ப் பண்கள் எங்கே? கதவு திறக்கவும் மூடவும் பாடிய தெய்வப் பதிகங்கள் எங்கே? பூம்பாவைக்கு உயிர் தந்த அமுதப் பாக்கள் எங்கே? எல்லாம் மறைந்து கரைந்து போயினவா! இல்லை. பூட்டப்பட்டன. இறைவணக்கத்திற்க்கு தகுதி அற்றவை எனக் குற்றம் சாட்டப் பட்டன. தில்லை வாழ் அந்தணர் கையிலிருந்த அந்த அற்புத ஓலைச்சுவடிகளுக்கு பலர் பாடிய உரிமை போய் மூடிய அறையே கிடைத்தது. அவைகளை நாடியவரும் தேடியவரும் சோர்ந்து ஓடிடும் நிலை.

இதென்ன கொடுமை! தமிழுக்குத் தமிழகத்திலேயே தாழா! இத்தனை காலம் பெரியவர்கள் பாடியதெல்லாம் பாழா! நம்பியால் இதைப் பொறுக்க முடியவில்லை. ஆண்டவன் அருட்பாக்களைக் காக்க ஆள்பவனை நாடினார். தமிழுக்கு எதிரான வங்கொடுமையைச் சாடினார். நிலமையை உணர்ந்து தமிழுக்கு இடப்பட்ட விலங்கை உடைக்க ராசராசனும் விரும்பினான். தமக்கையோடு கூடி ஆலோசித்துத் தில்லை சென்றான். பெரிய சிவாச்சாரியிடம் பதமாகவே சொன்னான். தேவார ஓலைச்சுவடிகளைத் தருமாறு வேண்டினான்.

ஆனால் சிவாச்சாரிக்கு ஓலைச்சுவடிகளை வெளியே விட விருப்பமேயில்லை. எப்படித் தடுப்பது என்று எண்ணி ஒரு குயுக்தியான மறுமொழி கொடுத்தார். "சோழர் பெரும! தாங்கள் அறியாததல்ல. தேவாரப் பண்கள் சமயக் குரவரால் பாடப் பட்டவை. தெய்வத் தன்மை பொருந்தியவை. அப்படிப்பட்ட பாக்கள் இந்த அறைக்குள் எப்படிச் சென்றன என்று அறியோம். பன்னெடுங்காலமாக இப்படி மூடிக்கிடக்கின்றன. இதைத் தில்லை வாழ் அந்தணர்களாகிய நாங்கள் சமயக்குரவர்களின் விருப்பமாகவே எண்ணுகிறோம். இறைவனோடு ஒன்று கலந்த அவர்களுக்கே இந்த ஓலைச்சுவடிகள் மீது உரிமையுண்டு என்பதே எங்கள் நம்பிக்கை. அவர்களே வந்துதான் இந்த அறையைத் திறந்து ஓலைச்சுவடிகளை எடுக்க வேண்டுமென்று இறைவன் விருப்பம் கொண்டுள்ளதாகவே தினமும் இறைத்தொண்டு புரிந்து வரும் நாங்கள் நம்புகிறோம். அதையும் மீறித் திறந்தால் நாட்டிற்கும் மன்னர்களுக்கெல்லாம் மன்னராகிய தங்களுக்கும் ஏதேனும் குறை நேறுமோ என்று அஞ்சுகின்றோம். உங்கள் மீதும் நாட்டின் மீதும் நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் உணர்ந்து எங்களை இதற்கு மேலும் வற்புறுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்."

சர்க்கரை தடவிய பேச்சில் அக்கறை தெரிந்தாலும் வெல்லத்தை உதட்டிலும் கள்ளத்தை உள்ளத்திலும் வைத்த பெரிய சிவாச்சாரியின் எண்ணத்துப் பொருட்கறையை ராசராசன் உணர்ந்தான். அப்பொழுதைக்கு அவர்களை ஒன்றும் கேட்காமல் தஞ்சை திரும்பினான். ஆணையிட்டுத் திறந்திருக்கலாம். அப்படித் திறந்து எடுத்தால் பின்னால் ஏது நேர்ந்தாலும் அந்தணர் பேச்சை மீறி அறையைத் திறந்த குற்றம் தன் மேல் என்று பொதுமக்களும் எண்ணக்கூடும் என்பதையும் அறிந்திருந்தான் மன்னன்.

குறிப்பிட்ட நல்ல நாளொன்றில் தானும் சமயக்குரவர் மூவரும் வந்து ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்வதாக ஓலையொன்றை தில்லையர்களுக்கு அனுப்பினார். பெரிய சிவாச்சாரி உண்மையிலேயே திகைத்துப் போனார். மன்னன் எண்ணத்தைக் கொஞ்சமும் அவரால் ஊகிக்க முடியவில்லை. "மறைந்த அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் வரவா போகின்றார்கள்! மன்னனால் எப்படி அழைத்து வர முடியும். மானிடன் முடிக்கக் கூடிய செயலா அது! சரி. வரட்டும் பார்க்கலாம்!" சிவாச்சாரிக்கும் தாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

அப்படி ராசராசன் குறிப்பிட்ட நந்நாளில்தான் தில்லையில் கூட்டம் நிறைந்திருந்தது. ஆறு குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் ராசராசனும் அவனது தேவியர் இருவரும் வந்தனர். உடன் வந்த மற்றொரு தேரில் குந்தவை நாச்சியாரும் வந்தியத் தேவரும் இருந்தனர். அவர்களோடு ராசேந்திரனும் குந்தவையும். அடுத்து வந்த தேரில் நம்பியாண்டார் நம்பி இருந்தார். பின்னால் மூன்று பெரும் பல்லக்குகள் வந்தன. அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பல்லக்குகள் பட்டுத்திரைச்சீலைகள் கொண்டு மூடப்பட்டிருந்தன. அந்தத் திரைச்சீலைகளில் ஐந்தெழுத்து மந்திரமும் ஆவுடையாரும் எழுதப்பட்டிருந்தன. அவைகளுக்குப் பின்னால் பெரிய பட்டத்தானை வந்தது. அதில் பொன்னம்பாரி ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் அதில் யாரும் இருக்கவில்லை.

இருமருங்கிலும் நின்று மன்னனை வாழ்த்தி மக்கள் ஆர்ப்பரித்தனர். சோழ வளநாட்டைப் புகழ்ந்து குரலெழுப்பினர். அனைவருக்கும் தனது கையை அசைத்து அன்பைத் தெரிவித்த ராசராசன் நேராகத் தில்லையம்பலம் சென்றான். அந்தணர் கூட்டமே புனித நீர்க்குட மதிப்பளிக்க நின்று கொண்டிருந்தது. அவைகளை ஏற்றுக் கொண்ட மன்னன், உடன் வந்தவரோடும் பல்லக்குகளோடும் பட்டத்தானையோடும் கோயிலுள் நுழைந்தான். மூன்று பல்லக்குகளும் இறக்கி வைக்கப்பட்டன. நடப்பவைகளை ஒன்றும் புரியாமல் பெரிய சிவாச்சாரி பார்த்துக் கொண்டிருந்தார். மன்னன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடும் குழப்பத்தோடும் காத்திருந்தார். மக்களும்தான். ஆனால் நீண்ட நேரம் காக்க வைக்கவில்லை ராசராசன்.

"தில்லையூர் அந்தணர்களின் தலைவரும் தில்லைக் கோயில் பொறுப்பாளியுமாகிய பெரிய சிவாச்சாரியிடம் நான் ஒப்புக் கொண்ட வகையில் நாடெங்கும் சென்று தீந்தமிழ் பாடி இறைவனோடு கலந்த சமயக் குரவர் மூவரையும் அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் ஒப்புக் கொண்ட படி தேவாரச் சுவடிகளைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்."

அசந்து போனார் சிவாச்சாரி. "அப்பரா வந்திருக்கிறார்! சுந்தர் வந்திருக்கிறார் என்றாலும் நம்ப முடியவில்லையே! ஞானசம்பந்தர் உண்மையிலே வந்து விட்டாரோ! சரி யார் வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கலாம்!" இப்படி மனதில் நினைத்தவர் அரசனிடத்தில் இப்படி கேட்டுக் கொண்டார். "மாமன்னரே! மும்முடிச் சோழராகிய தாங்கள் கங்கையும் கொண்டான். தங்கள் மனம் நினைத்தால் நடவாதது ஒன்றில்லை. ஆனாலும் வந்தவர்கள் தேவாரப் பாடல்களைத் தந்தவர்கள்தானா என்று அறிய எனது மனம் ஆவலில் ததும்புகிறது. சமயக்குரவர் மூவரையும் எங்கள் கண்குளிரக் காட்டுங்கள்." பேச்சில் மட்டும் இதமும் பதமும் இருந்தது.

"ஆகட்டும்" என்று மட்டும் சொன்ன ராசராசன் தானே பல்லக்குகளின் அருகில் சென்றான். முதற் பல்லக்கின் அருகின் நின்று சொன்னான். "கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் நமசிவாய என்ற சொல்லைக் காட்டிக் கரை கண்ட பெருந்தொண்டர்! தாயும் தந்தையுமாய் ஆண்டவனைத் தொழுது என்றும் திருக்கோயில்களில் புற்களை உழுது செம்மைப் படுத்திய பெருந்தகை! அப்பர் என்று மதிப்புடன் போற்றப் படும் திருநாவுக்கரசர்! இதோ உங்களுக்காக வந்திருக்கிறார்!" பல்லக்கின் சீலையைத் திறந்தான். உள்ளே அப்பரைப் போலவே ஒரு பொற்பாவை இருந்தது.

இரண்டாவது பல்லக்கின் அருகில் சென்றான். "குழந்தையின் அழுகை கூடத் தொழுகை என்று உமையம்மை ஏற்று ஞானப்பால் புகட்டிய தமிழ்க் குழந்தை! கை தட்டித் தட்டிப் பாடினால் குழந்தையின் கை சிவக்கும் என்று பொன்னில் தாளம் தந்த ஓசை கொடுத்த நாயகியின் செல்லப் பிள்ளை! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று கருதித் தமிழில் பாடி பூம்பாவைக்கு உயிர் கொடுத்த ஞானசம்பந்தப் பெருமான் மீண்டும் தமிழுக்காக வந்துள்ளார்!" பல்லக்குத் திறக்கவும் உள்ளே பொற்சிலையாக நின்றார் திருஞானசம்பந்தர்.

"இறைவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய ஊரூராய் நடந்தவர் உண்டு. ஆனால் தனது காதலுக்காக இறைவனே தூது நடக்கப் பெற்ற சுந்தரர்! சித்தமெங்கும் நிறைந்த இறைவனை பித்தன் என்று வைத வன்தொண்டர்! அந்தப் பித்தன் என்றை சொல்லையே வைத்துத் துவக்கிப் பண் சமைத்த நம்பி ஆருரன் இன்று இங்கு வந்து தான் முன் சமைத்த பண்களைக் கேட்கின்றார்." மூன்றாம் பல்லக்கின் திரையும் விலகி உள்ளிருந்த நம்பி ஆரூரனின் பொற்சிலையைக் காட்டியது.

அசந்து போனார் சிவாச்சாரி. "மன்னா! இது முறையா! பொய்யும் பொய்த்துப் போய் உண்மை உய்த்த நாவினராகிய தங்கள் வாய்ச்சொல் பிழையாதல் முறையா! சமயக் குரவர் மூவரையும் அழைத்து வருகிறேன் என்று சொல்லி மூன்று பொற்சிலைகளைக் கொண்டு வந்தால் எப்படி? இதை எப்படி ஏற்றுக் கொள்வது?"

சிவாச்சாரி சொன்னதும் சிரித்து விட்டான் ராசராசன். சிவாச்சாரி தொலைந்தார் என்றே எல்லாரும் முடிவு கட்டி விட்டார்கள். ஆனால் ராசராசன் இதமாகச் சொன்னான். "தில்லையரே! இந்த அம்பலத்தில் ஆவுடையாராக நீங்கள் வணங்குவது யாரை?"

"எல்லாம் வல்ல ஈசனைத்தான் ஆவுடையாராக வணங்குகிறோம்."

அடுத்த கேள்வியும் வந்தது மன்னனிடமிருந்து. "ஒற்றைக் காலைத் தூக்கிக் கற்றைச் சடையை விரித்து பற்றைப் பழிக்கும் உடுக்கையைத் தட்டிக் கொண்டு அம்புலியின் கீற்றையும் ஆற்றையும் சூடியாடுகின்றனாக நீங்கள் வணங்குவது யாரை?"

"அதுவும் ஈசனைத்தான்!"

"அப்படி இருக்க, இந்தப் பொற்சிலைகள் மட்டும் ஏன் சமயக் குரவர்கள் ஆகா? நீங்கள் ஏற்க மறுக்க நியாயமான காரணம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை."

"சோழர் பெரும! சமயக் குரவர் மூவரும் பெருமைக்குரியவர்கள். அவர்களை நேற்றுத் தட்டிய பொற்சிலை என்றால் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?"

"சிவாச்சாரி! சமயக் குரவர்கள் இப்பொழுது எங்கே என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?" படக்கென ஒரு கேள்வி ராசராசனிடமிருந்து.

"ஆண்டாண்டு காலமாய் ஆண்டவனைத் தொழுது பாடித் தொண்டாற்றியவர்கள் இறைவனோடு கலந்தனர் என்பது கருத்து."

"சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். நீங்கள் வணங்கும் சிலை இறைவனா? இல்லை இறைவன் சிலையா? இதற்கு விடை சொல்லுங்கள் சிவாச்சாரி!"

சிவாச்சாரி ஒரு நொடி திகைத்துப் போனார். ஆனாலும் அவருக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னார். "மன்னா! இறைவனே சிலை. சிலையே இறைவன்."

சிவாச்சாரி சொன்னதை விளக்கச் சொன்னான் ராசராசன்.

"எங்கும் நிறைந்த இறைவன் இந்தக் கல்லில் நிறைந்திருக்கிறான். ஆகையால்தான் அப்படிச் சொன்னேன்."

"நல்லது. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?"

"ஆம். மன்னா! அப்படித்தான் நான் நம்புகிறேன்." சிவாச்சாரியார் உறுதியாகச் சொன்னார்.

"அப்படியானால் எங்கும் நிறைந்த இறைவன் இந்தப் பொற்சிலைகளிலும் நிறைந்திருக்கின்றான் என்றுதானே பொருள். அப்படி இந்தப் பொற்சிலைகளில் இறைவன் நிறைந்திருக்கிறான் என்றால் இறைவனோடு இரண்டறக் கலந்த அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் இந்தப் பொற்சிலைகளிலும் நிறைந்தவர்கள்தானே. ஆகையால் மீண்டும் சொல்கின்றேன். சமயக் குரவர்கள் தங்கள் பாக்களைக் கேட்கிறார்கள். கொடுக்கின்றீர்களா?"

சிவாச்சாரியாருக்குப் பேச்சு வரவில்லை. என்ன சொன்னாலும் மன்னன் விட மாட்டான் என்று தெரிந்து போனது. எதற்கு நாடாளும் வேந்தனோடு வீண்வம்பு என்று தெளிந்து திறவுகோலைக் கொடுத்தார்.

திறவுகோலைக் கம்பீரமாகப் பெற்றுக் கொண்ட ராசராசன் பூட்டியிருந்த அறையை நோக்கிச் சென்றான். கதவு கூட துடைக்கப் படாமல் இருந்தது. திறவுகோல் பட்டதும் பூட்டு நெகிழ்ந்து விழுந்தது. நாள்பட்ட பூச்சு துருப்பிடித்து இற்றுப் போயிருந்தது. கதவைத் தள்ளித் திறந்து ஒட்டடை நிறைந்த அறைக்குள் நுழைந்தார். நம்பியாண்டார் நம்பியையும் அழைத்தார்.

அந்த அறைக்குள்ளே பைந்தமிழ்ப் புதையலைக் காணவில்லை. மாறாக கரையான் புற்று மட்டும் பெரிதாக வளர்ந்திருந்தது. வெற்றி கொண்டோம் என்று நினைத்து மகிழ்ந்த வேளையில் அந்த வெற்றியெல்லாம் அற்றுப் போனதே எனச் சோர்ந்தான். நம்பி தான் ராசராசனுக்குத் தெம்பூட்டினார். "சோழ மன்னா! பற்றை விலக்கினால் இறை கிடைக்கும். புற்றை விலக்கினால் உன் தமிழ்ப் பசிக்கு இரை கிடைக்கலாம். தேடுக."

மன்னனும் ஆலவாயண்ணலை உள்ளத்தில் நிறுத்தி புற்றைத் தட்டினான். மண் உதிரவும் உள்ளிருந்து பழம் ஓலைச் சுவடிகள் சிதறின. சேற்றில் விழுந்த பொற்காசுகளை அள்ளுவது போல ஓலைச் சுவடிகளை அகமும் முகமும் மலர்ந்து அள்ளினான் ராசராசன். அந்தோ பரிதாபம். ஒன்று நன்றாக இருந்தால் ஒன்று பழுதாகி உதிர்ந்தது. இப்படி பாதிக்குப் பாதி பூதியாகியிருந்தது. "ஆண்டவா!" தன்னை மறந்து கதறினான் ராசராசன்.

அவன் அழுகைக்கு உடனே ஆறுதல் கிடைத்தது. ஆம். மங்கலப் பொற்சலங்கையின் ஒலி எழும்பியது. ஈசன் குரல் எழுப்பினார். "ராசராசா! இருப்பவைகளைக் கொள்க. பழையன கழிந்தன. என்றும் புதியன நிலைத்தன. வருந்தற்க."

பெருமகிச்சிக் கடலில் மிதந்தான் மன்னன். மக்கள் அனைவரும் இன்பமாய் ஆர்ப்பரித்தனர். சிவாச்சாரி வெலவெலத்துப் போயிருந்தார். இப்படியும் நடக்குமோ என்று வியந்து வியந்து குமைந்து போனார். அவர் கண்முன்னேயே பிழைத்த ஓலைச்சுவடிகள் எடுத்துச் செல்லப் பட்டன. இறைவன் திருவடிகளில் வைத்து வழிபடப் பட்டன. அவரை எதிர் நோக்குவார் யாருமில்லை. இறைவனே சொன்ன பிறகு மறுபேச்சேது.

பொற்பேழையில் அந்த ஓலைச்சுவடிகள் அடுக்கப்பட்டு பட்டத்தானையின் பொன்னம்பாரியில் ஏற்றப்பட்டன. ராசராசனும் ஆனையேறி அம்பாரியின் பின் அமர்ந்து வெள்ளிப் பிடியும் மாணிக்கங்களும் பதிக்கப்பட்ட கவிரியைக் கொண்டு வீசினான். ஆனை தஞ்சையை நோக்கித் திரும்பியது. தமிழ் தனக்கான இடத்தை மீண்டும் மீண்டு கொண்டது.

அதே நேரத்தில் பூரிப்போடு தனது கணவன் வந்தியத்தேவருக்கு முகவியர்வை போக்கிக் கொண்டிருந்தாள் குந்தவை நாச்சியார். பின்னே இன்றைய நாடகத்தின் மையப் பாத்திரமே அவர்தானே. குந்தவையும் ராசராசனும் போட்ட திட்டப்படி திருக்கோயிலுள் ஒளிந்து நின்று பொற்சிலம்பை ஒலித்ததும் குரல் கொடுத்ததும் அவர்தானே.

அன்புடன்,
கோ.இராகவன்

41 comments:

said...

மிக அருமையான பதிவு. நல்ல தமிழ் நடையில் சொல்லி இருக்கிறீர்கள். தமிழகத்தின் பக்தி இலக்கியங்கள் பல இயற்கையோடு கலந்து போய்விட்டது. நாம்தான் அதிகம் சுவைக்கவில்லை. ஆனால் பஞ்ச பூதங்கள் பலமுறை சுவைத்திருக்கின்றன..
அப்படிப்பட்டதிலிருந்து ஒரு நிகழ்வை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. இருக்கும் இலக்கியங்களே இத்துணை சுவை என்றால் முழுதும் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் சொல்லை அர்த்தப்படுத்தவதற்காகத்தான் இழந்தோமோ என்ன? இறைவன் எங்கும் இருப்பான். அடியாரின் தூய உள்ளத்தை போன்று அவன் விரும்பும் இடம் வேறெதுவும் கிடையாது. அறியா மாந்தர்கள்தான் ஆண்டவனை தங்கள் எல்லைக்குள் வலைக்குள் வைத்திருப்பதாக கருதிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது அங்கிருப்பது வெறும் அஃறினை கல்தான் என்று

said...

ராகவன்! ஏதோ எனக்கு ஒரு பக்தி படம் பார்த்த மாதிரி இருக்கிறது. கண்முன்னே நடப்பது போல இருக்கிறது, உங்கள் எழுத்து நடை. தொடருங்கள். நன்றி.

said...

பின்னுறிங்களே இராகவன்?.,

said...

Raghavan,

could you pls write to me?

my address: mathygrps at gmail dot com.

nandri.

-Mathy

said...

// ராகவன்! ஏதோ எனக்கு ஒரு பக்தி படம் பார்த்த மாதிரி இருக்கிறது. கண்முன்னே நடப்பது போல இருக்கிறது, உங்கள் எழுத்து நடை. தொடருங்கள். நன்றி. //

சிவபுராணம், அதுல ராசராசனா யார் நடிச்சாங்க? பெரிய சிவாச்சாரியாராக யார் நடிச்சாங்க? அதையும் அப்படியே சொல்லுங்களேன்.

படித்துப் மகிழ்ந்தமைக்கு நன்றி.

said...

// பின்னுறிங்களே இராகவன்?., //

அப்படிப் போடுங்க அப்படிப் போடு. :-)

// Raghavan,

could you pls write to me? //
கண்டிப்பா மதி. உங்களுக்கு இன்னைக்கு மெயில் அனுப்புறேன்.

said...

நண்பர் ராகவன்...இந்தப் பதிவிலும் கலக்கிப் போட்டீர்கள். நன்றாய் இருக்கிறது. எதுகையும் மோனையும் பின்னி எடுக்கிறீர்கள்.

தில்லையின்
எல்லையில் கூட இடமே
இல்லை

பாலோடு சுவை வருவது போல

நம்பியோ தமிழ்த் தும்பி

தமிழுக்குத் தமிழகத்திலேயே தாழா
இத்தனை காலம் பெரியவர்கள் பாடியதெல்லாம் பாழா

ஆண்டவன்
ஆள்பவன்

சர்க்கரை தடவிய பேச்சில் அக்கறை

வெல்லத்தை உதட்டிலும்
கள்ளத்தை உள்ளத்திலும்

ராசராசன் சமயக்குரவர் மூவரையும் அறிமுகப்படுத்தச் சொல்லும் அவர்தம் புகழ்

இப்படி நான் ரசித்தவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

சீக்கிரம் நீங்கள் தமிழ்மணம் நட்சத்திரம் ஆகிவிடுவீர்கள் போல் தெரிகிறது. நிலவின் பார்வையும் இறைவன் கந்தசாமியின் அருளும் கிடைத்திருப்பதைப் பார்த்தால் அடுத்த வாரமே நீங்கள் தமிழ்மண நட்சத்திரம் என்று சொன்னால் நான் ஆச்சரியப்படப் போவதில்லை.

said...

ராசராசன் வாழ்ந்ததும் உண்மை. நம்பியாண்டார் நம்பி ராசராசன் காலத்தில் சைவத் திருமுறைகளைத் தொகுத்ததும் உண்மை. ஆனால் இந்தக் கதை நடந்தது உண்மையா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு.

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று தான் தம்பிரான் தோழன் சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருமுறையைத் தொடங்குகிறார். பார்ப்பனர் தமிழை சூத்திர மொழி என்று வசை மொழிந்து இறைவழிபாட்டிலிருந்து தள்ளிவைத்தனர் என்பது வரலாற்று உண்மையாயினும், தில்லை வாழ் அந்தணர் தமிழ்ப் பதிகங்களைப் பூட்டிவைத்தனர் என்பதை நம்ப முடியவில்லை. அவர் தம் பெருமை பாடும் இந்தப் பதிகங்களை ஏன் மறைக்கவேண்டும்?

இந்தக் கதை செவிவழியில் மட்டும் வருகிறதா இல்லை ஏதாவது இலக்கியச் சான்று உண்டா என்று தெரியவில்லை. எப்படியோ இந்தக் கதை இராஜ இராஜச் சோழன் திரைப்படத்திலும் இப்போது உங்கள் கற்பனையிலும் வந்து விட்டது.

நீங்கள் எழுதிய முறை மிக நன்றாய் இருக்கிறது. சொற்சுவை மிகுதியா பொருட்சுவை முகுதியா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

ஆனால் முடித்த விதம் ஏனோ பிடிக்கவில்லை. வலிந்து கொண்டு வந்த தேவையில்லாத திருப்பம் போல் தோன்றியது வந்தியத்தேவர் இறைவனைப் போல் சலங்கையொலித்து குரல் கொடுத்தார் என்பது. கற்சிலை பேசாது என்பது தான் உங்கள் ஆழ்மன எண்ணமுமோ?

said...

குமரன், இதற்குச் சான்று என்று பார்த்தால் என்னிடம் ஒன்றுமில்லை. ஒருசில கல்வெட்டுகளில் ராசராசன் தட்டியது உள்ளது என்று கேள்விதான் பட்டிருக்கிறேன். ஆகையால் இந்தக் கதை வரலாறு அல்ல. கதைதான்.

// ஆனால் முடித்த விதம் ஏனோ பிடிக்கவில்லை. வலிந்து கொண்டு வந்த தேவையில்லாத திருப்பம் போல் தோன்றியது வந்தியத்தேவர் இறைவனைப் போல் சலங்கையொலித்து குரல் கொடுத்தார் என்பது. கற்சிலை பேசாது என்பது தான் உங்கள் ஆழ்மன எண்ணமுமோ? //

நிச்சயமாக இல்லை குமரன். கல்லா பேசும்? கல்லுக்குள்ளும் இருக்கும் கடவுள் அல்லவா பேசுவார். என்னுடைய ஆழ்மன எண்ணத்தில் இறைவனை எங்கும் எதிலும் கண்டு கொண்டிருக்கின்றேன். நிச்சயாமாக கல்யானை கரும்பு தின்றது என்றால் நம்பத்தான் தோன்றுகிறது. மோசஸ் கடலைப் பிரித்தார் என்பதையும் நம்பத்தான் தோன்றுகிறது.

ஆனாலும் அப்படி நான் முடித்தது ஒரு சிறு புதுமை வேண்டியே. மேலும் நம்மை வழி நடத்தும் அத்தனை எண்ணங்களும் இறைவனின் எண்ணங்களே என்றும் கருதுகிறேன். நன்மை தீமை என்று நமக்குத் தோன்றுவதிலெல்லாம் கூட ஏதேனும் பின் விளைவாக நன்மையை வைத்துத்தான் ஆண்டவன் அப்படிச் சிந்திக்க வைக்கிறான் என்று தோன்றுகிறது.

அந்தச் சிந்தனையின் படி, குந்தவையோடு பேசி ராசராசன் முடிவு செய்ததும் வந்தியத்தேவர் அப்படிச் செய்ததும் இறைவனின் எண்ணமல்லாது வேறெது. தமிழைத் தாழ் நீக்க வேண்டுமென்ற இறைவனின் கருணை எண்ணத்தைத்தான் நான் அந்தச் செயல்களில் காண்கிறேன்.

உங்கள் கருத்தை ஆணித்தரமாகவும், மனம் நோகாமல் நாகரீகமாகவும் சொல்லும் பாங்கை நான் பாராட்டுகிறேன். மகிழ்கிறேன்.

said...

இராகவன்,
நல்ல கதை.

குமரன் சொன்னது / தந்தது மாதிரியே உங்களிடம் தமிழ் புகுந்து விளையாடுகிறது. படிக்கவே இனிக்கிறது.

தொடருங்கள்

said...

ராகவன்,
பொன்னியின் செல்வன் கதை பின்புலத்தில் நிழலாடியதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் தங்கள் தனித்தமிழும், அதன் அழகும் காட்சிகளைக் கண்முன்னே நடந்தேறும் நாடகக் காட்சிகளாக்கி விட்டன.

said...

ரசித்துப்படித்தேன்! Hats Off! நன்றாக உள்ளது.

said...

படித்துப் பாராட்டிய தருமிக்கும் கே.எஸ்ஸிற்கும் நன்றி.

said...

ராகவன் ரசித்துப்படித்தேன்.
தேனாக இனித்தது தமிழ்.

கல்கியை நினைவு கூர வைத்துவிட்டீர்கள்.
நன்றி.

குமரா நன்றி

said...

படித்துப் பாராட்டிய மதுமிதாவிற்கும் ஆதவனுக்கும் எனது நன்றி.

said...

செறிய தமிழ், அழகு உரைநடை கவிதை போன்ற தொகுப்பு! ரசித்து த்மிழ்முதம் பருகினேன் நன்றி, வாழ்த்துக்கள் ராகவா!

said...

ராகவன்,

மீள்பதிவுக்கு நன்றி.

அருமையான நடை.

இன்னும் சிவாச்சாரியார்கள் திருந்தவில்லை (-:

said...

வாங்க டீச்சர். நிலமை ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் மாறவில்லை. அவர்கள் மடமையும் தீரவில்லை. அன்றைக்கு ராஜராஜனின் அரசியல் வென்றது. இன்று? ஆனால் ஒன்று. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். உறுதியாக.

said...

ராகவா,

உங்க நடையும் சொல்லழகும் பற்றி நான் தனியா ஒண்ணும் சொல்லத் தேவையில்லை. இறைவனை எப்படித் தொழுதால் என்ன? தமிழ்தான் இறைவன் இறைதான் தமிழ் என்று கொண்டிருக்கும் நாட்டில் தமிழ்ப் பண் கொண்டு இறைவனைக் கொண்டாடத் தடுத்தவர்தான் அறிவிலி. ராஜராஜன் பற்றிப் பல்வேறு கதைகள் உண்டு. அதில் ஒரு கதை இது. அதை நீங்கள் சொன்ன விதம் புதிது.

கல் யானை கரும்பு தின்றதும், கற்பசு புற்கள் மென்றதும் அதைப் பொறுத்த வரை வெகு சமீபத்திய நிகழ்வுகள்.

ஆனால் இன்னொரு பக்கம் பார்த்தால், நின்று தெய்வம் கொன்றால் என்ன கொல்லாவிட்டால் என்ன என்ற எண்ணம் மிகுவதைத் தடுக்க முடியவில்லை. இன்றைக்கெல்லாம் அன்றே கிடைத்தால்தான் தண்டனைக்கே அர்த்தம்.

said...

யப்போவ், இந்த சமயத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது ராஜ ராஜன் இப்போ இருந்தா சொல்லுங்க, சிதம்பரம் கூட்டிட்டு போலாம்...

said...

good piece of work..

said...

// Udhayakumar said...
யப்போவ், இந்த சமயத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது ராஜ ராஜன் இப்போ இருந்தா சொல்லுங்க, சிதம்பரம் கூட்டிட்டு போலாம்... //

நம்ம எல்லாருமே ராஜராஜன்கள்தான். எல்லாரும் இந்நாட்டு மன்னர். எல்லாரும் சிதம்பரம் போகலாமா?

said...

// saaral7 said...
good piece of work.. //

படித்து மகிழ்ந்ததிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

said...

ராகவன் ஒரு ஆறுமுகசாமி matterஏ இப்படி சூடு கிளப்புகிறது. பலர் கூடி செல்லலாம் என்று சொல்லுகிறீர்களே?

said...

அருண்மொழி....அன்று மதுரை மீனாட்சியம்மல் திருக்கோயிலுக்கு ராஜாஜியின் தலைமையில் பலர் கூடித்தானே சென்றார்கள். அது மாதிரி இது இருக்கக்கூடாதா!

said...

//சர்க்கரை தடவிய பேச்சில் அக்கறை தெரிந்தாலும் வெல்லத்தை உதட்டிலும் கள்ளத்தை உள்ளத்திலும் வைத்த//
நன்னடை மென்னடை உன் நடை தமிழ் நடை பயிலும் எனக்கு வழி நடை காட்டிய சொல்லடை ஆகா கொள்ளை கொண்டாய்.
போரில் வாளெடுத்த வீசும் மாவீரன் அந்தணரிடம் சொல்லெடுத்து வீசி சொல்லிலும் வீரன் என அடக்கமாக வாய்கொண்டு வீரம் பேசியதைக் கண்டபோது சிவாஜி கணேசன் தான் என் கண்முன்னே தொன்றினார்.

said...

ராகவன்...

பதிவில் தமிழ்த் தாண்டவமாடுகிறது...
எதுகையும் மோனையும் இயல்பாய் வந்து வாசிக்கும்போதே இசை சேர்க்கிறது...

இரண்டுமுறை படித்தேன் :)

said...

// ENNAR said...
//சர்க்கரை தடவிய பேச்சில் அக்கறை தெரிந்தாலும் வெல்லத்தை உதட்டிலும் கள்ளத்தை உள்ளத்திலும் வைத்த//
நன்னடை மென்னடை உன் நடை தமிழ் நடை பயிலும் எனக்கு வழி நடை காட்டிய சொல்லடை ஆகா கொள்ளை கொண்டாய்.
போரில் வாளெடுத்த வீசும் மாவீரன் அந்தணரிடம் சொல்லெடுத்து வீசி சொல்லிலும் வீரன் என அடக்கமாக வாய்கொண்டு வீரம் பேசியதைக் கண்டபோது சிவாஜி கணேசன் தான் என் கண்முன்னே தொன்றினார். //

என்ன செய்வது என்னார்...அவர் அத்தனை பாத்திரங்களை ஏற்றுச் செய்திருக்கிறார். ஆகையால் அவரது நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.

said...

// அருட்பெருங்கோ said...
ராகவன்...

பதிவில் தமிழ்த் தாண்டவமாடுகிறது...
எதுகையும் மோனையும் இயல்பாய் வந்து வாசிக்கும்போதே இசை சேர்க்கிறது...

இரண்டுமுறை படித்தேன் :) //

வாங்க அருட்பெருங்கோ. காதற் கவிஞனின் பாராட்டுகள் மகிழ்ச்சிதான்.

said...

ஆகா,

இனிமையான நடையுடன் காட்சியைக் கண்முன்னே விரிக்கும் எழுத்து. இரண்டரை வருடம் முன்பு வந்ததா? இன்றுதான் வாசிக்கிறேன். உங்களுக்கு ஜீரா என்ற பெயர்ப்பொருத்தம்தான் என்னே!
-ஜிலேபி ரசிகன்.

said...

இன்றைய தினமணியில் வந்து இருக்கும் கட்டுரையில் நீங்கள் கூறிய விஷயங்களை முழு பூசணிக்காயை மறைப்பது போல் மறைத்துவிட்டார் இந்து வீரர் ஒருவர்.

//மூவர் பாடிய தேவாரம் இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மாமன்னன் ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பிகள் துணையோடு தில்லைவாழ் அந்தணர்களின் சம்மதத்தோடு தேவார பதிக ஓலைகளை மீட்டெடுத்து தமிழ்கூரும் நல்லுலகம் எங்கும் பரவச் செய்தான். //

said...

காட்சி விரிக்கும் எழுத்து.நல்ல நடை.

//தமிழுக்குத் தமிழகத்திலேயே தாழா!//
தாளா? என்று எழுத நினைத்தீர்களா????

தாழ்வெனில்,தாழ்வா'தானே சரி....

said...

அறிவன், அது தாழ்வு இல்லை. தாழ்ப்பாள்.

said...

pl read utaiyar - part 3
page from 490..

said...

// Kasi Arumugam - காசி said...
ஆகா,

இனிமையான நடையுடன் காட்சியைக் கண்முன்னே விரிக்கும் எழுத்து. இரண்டரை வருடம் முன்பு வந்ததா? இன்றுதான் வாசிக்கிறேன். உங்களுக்கு ஜீரா என்ற பெயர்ப்பொருத்தம்தான் என்னே!
-ஜிலேபி ரசிகன். //

வாங்க காசி. எப்படி இருக்கீங்க? ஆமாங்க எழுதி ரெண்டரை வருசத்துக்கும் மேலையே ஆச்சு. நான் நட்சத்திரமா ஆகுறதுக்கு முன்னாடியே. நீங்க ஜிலேபி ரசிகரா :) ரொம்ப சந்தோஷம். :)

// அருண்மொழி said...
இன்றைய தினமணியில் வந்து இருக்கும் கட்டுரையில் நீங்கள் கூறிய விஷயங்களை முழு பூசணிக்காயை மறைப்பது போல் மறைத்துவிட்டார் இந்து வீரர் ஒருவர்.

//மூவர் பாடிய தேவாரம் இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மாமன்னன் ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பிகள் துணையோடு தில்லைவாழ் அந்தணர்களின் சம்மதத்தோடு தேவார பதிக ஓலைகளை மீட்டெடுத்து தமிழ்கூரும் நல்லுலகம் எங்கும் பரவச் செய்தான். // //

வாங்க அருண்மொழி...அந்தக் கட்டுரை சொல்வது மிகத் தவறு. வாரியார் கூட நான் சொன்ன வகையிலேயேதான் எழுதியிருக்கிறார். அந்தணர்களின் சம்மதம் இருந்திருந்தால் அது ஏன் கோயிலுக்குள் மூடப்பட்டுக் கிடக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லையே!

said...

காற்றை தாழிட்டு அடைக்க முடியுமா.
தமிழை பூட்டி ஒடுக்க முடியுமா.

தமிழ் வெல்லும் தடைகளை தகர்த்து.

நன்றி.

said...

இராகவன்,
என்னே தமிழ்!!! படிக்கச் சுவைத்திடும் பழச்சுவைத் தமிழாலான பதிவு. இந் நாள் வரை இப் பதிவைப் படித்திலேன். நண்பர் குமரன் தந்த சுட்டியின் மூலம் இங்கு வந்தேன்.



/* இப்படி பாதிக்குப் பாதி பூதியாகியிருந்தது. "ஆண்டவா!" தன்னை மறந்து கதறினான் ராசராசன்.
*/
எனக்க்குக் கூட இந்த வரியைப் படித்த போது மனம் சங்கடமானது. எத்தனை அரிய பாடல்களை எல்லாம் நாம் இழந்தோமோ யாரறிவார்?!!!

நினைக்க நினைக்க் மனம் வெதும்புகிறது.

தொடர்ந்தும் இப்படியான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

said...

//அறிவன், அது தாழ்வு இல்லை. தாழ்ப்பாள்.//

குமரன்,மன்னிக்கவும்,தாழ்ப்பாளெனில் தாள்'தான் சரி.

said...

அறிவன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.


இதில் 'தாழ்' தானே வருகிறது!

said...

குமரனின் சுட்டி மூலம் இங்கு வந்தேன். படித்தேன் - மகிழ்ந்தேன் - ராசராசசோழன் திரைபடம் கண் முன்னே ஓடியது. நடிகர் திலகம் தில்லைக் கோவிலில் மூவருடன் வந்து நூற்சுவடிகளைப் பெற்றுச் சென்ற காட்சி காணக் கண் கோடி வேண்டும். அருமை அருமை

அழகு தமிழ் கொஞ்சி விளை யாடுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும், இறைவன் சிலையா, சிலை இறைவனா, நம்பி, தும்பி, தில்லை, எல்லை, வெல்ல உதடும் கள்ள உள்ளமும், ஒற்றைக்கால், க்ற்றைச்சடை, பற்றைப் பழிக்கும் உடுக்ககை, கீற்றையும், ஆற்றையும் அணிந்தவன்

அப்பப்பா - என்ன தமிழ் என்ன தமிழ் - புனித நீர்க்குட மதிப்பு - புதிய சொல்லாட்சி - அருமை அருமை

நன்று - நன்றி

said...

கல்கியின் பொன்னியின் செல்வனை படிக்கிறேனோ என்று பதிவைப் படிக்கும்போதுத் திகைத்துப்போனேன். வாழ்த்துக்கள் :)