Sunday, November 27, 2005

அரசனும் நானும்

அரசனும் நானும்

நான் பார்த்து ரசித்த திரைப்படங்களில் ஒன்றை உங்களுக்காக விமர்சிக்கிறேன்.

தி கிங் அண்ட் ஐ

ஆயிரத்துத் தொள்ளாயிரது ஐம்பத்தாறில் வந்த திரைப்படம் இது. ஐந்து ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் கொண்ட அற்புதப் படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கலைப்படம்.

யூல் பிரைனர் எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில நடிகர் என்று சொன்னால் மிகையில்லை. அற்புதமான நடிப்பாலும் உடலசைவுகளாலும் முகபாவங்களலாலும் பாத்திரமாகவே மாறிவிடும் சிறப்பான கலைஞர். டென் கமேண்ட்மென்ட்ஸ் பார்த்தவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். ராம்சிஸ் எனப்படும் வில்லனாக வந்து சிறப்பாகச் செய்திருப்பார். இந்தப் படத்தில் அவர் கதாநாயகன்.

ராட்ஜர்ஸ் அண்ட் ஹேமெர்ஸ்டெய் என்பவர்கள் நம்ம ஊர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி போல. தொட்டதெல்லாம் சிறக்கும் சிறந்த இசையமைப்பாளர்கள். தி சவுண்ட் ஆ·ப் ம்யூசிங் என்பது இவர்களது சிறந்த இசைக்கோர்ப்புகளில் ஒன்று. இந்தப் படத்திற்கும் இவர்கள்தான் இசை.

ஒரு மேடை நாடகம்தான் திரைப்படமாகியிருக்கிறது. கதை ஆயிரத்து எண்ணூறில் நடப்பதாக வருகிறது. யூரோசெண்ட்ரிக் உலகம். அதாவது ஐரோப்பாவை மையமாக வைத்து உலகம் இயங்கி வந்த காலகட்டத்தில் நடந்த கதை.

இங்கிலாந்திலிருந்து கணவனை இழந்த பெண் தனது மகனுடன் சயாமிற்கு வேலைக்குச் செல்கிறாள். அவளுக்கு மாதம் இருபது பவுண்டு சம்பளம் (இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட இருபதாயிரம் பவுண்டு). அப்படியென்ன வேலை? சயாம் அரசரின் பிள்ளைகளுக்கும் ராணிகளுக்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்து உலக அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் வேலை.

சயாம் ஒரு கட்டுப்பாடான தேசம். அரசரை அங்கு தெய்வத்திற்கு சமமாக மதிக்கிறார்கள். பௌத்தத்தைப் பின்பற்றும் நாடு. அரசரின் தலைக்கு மேல் யார் தலையும் இருக்கக் கூடாதென்று எழுதாத சட்டம். அவர் உட்கார்ந்தால் எல்லாரும் உட்கார வேண்டும். அவர் படுத்துவிட்டால் எல்லாரும் படுத்துவிட வேண்டும்.

வேலைக்கு வந்த அந்தப் பெண் ஆனா (டெபரா கெர் - ஜூஹி சாவ்லா பார்பதற்கு இவரைப் போல இருப்பார்) அரண்மனையிலேயே தங்க நேரிடுகிறது. அவருக்கும் மதகுருவிற்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகிறது.

சரி....அரசரின் பிள்ளைகளுக்குத்தானே பாடம்....எத்தனை பிள்ளைகள்? மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருபத்தாறு பிள்ளைகள். அடுத்த மாதம் இன்னமும் ஐந்து பிறக்க இருக்கின்றன. பத்துக்கும் மேற்பட்ட ராணிகள். மூத்த ராணியின் மூத்த பிள்ளை அடுத்த பட்டத்து இளவரசன்.

சயாமே உலகம் என்றிருந்த அனைவருக்கும் உலகத்தில் சயாம் என்ற உண்மையை போதிக்கிறாள். அவளது சீர்திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரண்மனையில் பரவுகின்றன. மன்னனும் அவைகளிலிருந்து தப்ப முடியவில்லை.

கொஞ்சம் பிடிவாதக்கார மன்னன் (யூல் பிரைனர்) சண்டை போட்டாலும் ஆனாவிடம் மதிப்பாகவே நடக்கிறார். எடுத்துச் சொல்லும் சீர்திருத்தங்களை முடிந்த வரை ஏற்றுக் கொள்கிறார். மன்னனின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருவருக்கும் உண்மையான நட்பு மிளரத் தொடங்குகிறது.

பிரச்சனை என்று ஒன்று வந்தால்தானே கதை நகரும். அந்த அரண்மனையில் பர்மாவிலிருந்து வந்த ராணி ஒருத்தி இருக்கிறாள். காதலனைப் பிரிந்து அரண்மனையில் வாழ்கிறவள். அவளுக்கு மகிழ்ச்சியேயில்லை. ஒருமுறை ஒரு நாடகம் நடத்தி நாடகத்தின் முடிவில் காதலனுடன் ஓடிப் போகிறாள்.

ஆனால் பாவம் பிடிபட்டு விடுகிறாள். காதலன் தண்ணீரில் விழுந்து இறந்து போகிறான். அவளை இழுத்து வந்து அரசன் முன் நிறுத்துகிறார்கள். அவளைக் கீழே படுக்க வைத்து பெரிய சவுக்கால் அடிக்கப் போகிறான் மன்னன். அப்பொழுது தடுக்கிறாள் ஆனா. இருவருக்கும் பெரிய வாக்குவாதம். ஆனால் சீர்திருத்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்ட மன்னனால் அவளை அடிக்க முடியவில்லை. சவுக்கைக் கீழே போட்டு விட்டு போய் விடுகிறான்.

மதகுரு ஆனாவைத் திட்டுகிறார். ஆனா சயாமிற்கு வராமலேயிருந்திருக்கலாம் என்று சொல்கிறார். "நானும் அதையேதான் விரும்புகிறேன்" என்று ஆனாவும் பதிலுக்குச் சொல்கிறாள். அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் உடனே ஊருக்குப் புறப்பட அனைத்து ஆயத்தங்களையும் செய்கிறாள்.

சவுக்கை கீழே போட்டது ஆனைக்கு அடி சறுக்குவது போல ஆயிற்று மன்னனுக்கு. படுக்கையில் வீழ்ந்து விடுகிறான். சறுக்கி விழுந்த ஆனையால் எழுந்திருக்க முடியாது. எழுப்பவும் முடியாது. அதே நிலைதான் மன்னனுக்கும்.

சொல்லிக் கொள்ளாமல் இங்கிலாந்திற்குக் கிளம்புகிறாள் ஆனா. ஆனால் மூத்த ராணி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆனா படுக்கையில் வீழ்ந்த மன்னனைக் பார்க்கப் போகிறாள்.

அவளை பத்திரமாக ஊருக்குப் போகச் சொல்கிறான் மன்னன். பிள்ளைகள் எல்லாம் கதறுகின்றன. குழந்தைகளின் பாசமும் மன்னனின் நிலமையும் ஆனாவின் மனதை மாற்றுகின்றன. கடைசியில் ஊருக்குப் போவதை கைவிடுகிறாள் ஆனா. அதற்காக நன்றி கூறுகிறான் மன்னன். அப்படியே அவளது சம்பளத்தை மாதத்திற்கு இருபத்தைந்து பவுண்டுகளாக கூட்டுகிறான். அந்தோ பாவம்! நன்றி சொல்லி முடித்து விட்டு இறந்து போகிறான் மன்னன்.

உடனேயே அடுத்த இளவரசன் பட்டத்திற்கு வருகிறான். அவனால் கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தங்கள் உள்ளே நுழையத் தொடங்குகின்றன.

இதுதான் கதை. ஆனால் படத்தைப் பார்க்க வேண்டுமே........அடடா! என்ன வகையான அரங்கமைப்புகள். சயாமிலேயே இருப்பது போலத் தோன்றும். அரங்கமைப்பிற்கும் உடையலங்காரத்திற்கும் கூட ஆஸ்கார் கிடைத்தது என நினைக்கிறேன்.

இசையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிகவும் சிறப்பாக இருக்கும். அருமையான பாடல்கள்.

ஆனால் படம் முழுக்க நிறைந்திருப்பது யூல் பிரைனர்தான். அமெரிக்கராகிய அவர் சயாமியர் போல உருவத்தை மாற்றிக் கொண்டு....அடடா! (யூல் பிரைனரின் தாய் ரஷ்யர் என்று நினைக்கிறேன். விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.)

ஆனாக வரும் டெபரா கெர்ரும் மிகவும் அருமையாக செய்திருப்பார்.

இங்கிலாந்துதான் உலகம் என்றும் எலிசபெத் அரசிதான் பெரியவர் என்று வரும் ஒன்றிரண்டு வசனங்களை விட்டு விட்டால் மிகவும் அருமையான படம். கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் The King and I.

அன்புடன்,
கோ.இராகவன்

8 comments:

said...

ராகவன்,
இதே கதையில் ஜோடி ஃபாஸ்டர் மற்றும் சொ-யுன்-பாட் நடிக்க சில வருடங்களுக்கு முன் ஒரு படம் பார்த்ததாய் நினைவு. "அன்னா அண்ட் தி கிங்'?

said...

ஆமாம். இராமநாதன். சரியாகச் சொன்னீர்கள். ஆனால் புதுப்படம் பழைய படத்தின் நூற்றில் ஒருபங்கு கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். யூல் பிரைனரையும் டெபரா கெர்ரையும் பார்த்த கண்கள் மற்றவர்களை ஒத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் பார்த்தீர்களா?

said...

ராகவன்,

சரியாக்ச் சொன்னீர்கள். என்னதான் சௌ-யுன் - ஃபாட் ஐயும் ஜோடி ஃபாஸ்டரையும் பிடிக்குமென்றாலும் பழைய படந்தான் டாப்.

யூல் பிரைனரைப்பற்றித் தனியாக ஒரு பதிவே போடலாமே! அத்தனை விதயங்கள் இருக்குல்ல? பிளஸ் திரையில் தெரியும் ஆளுமையும்..

இப்பகூட டென் கமாண்ட்மெண்ட்ஸில் அவரைத்தான் சட்டென நினைக்கத் தோன்றுகிறது.. மோசஸாக நடித்த சார்ல்டன் ஹெஸ்டனை பென்ஹரில் பிடித்திருந்தாலும்.. சார்ல்டன் ஹெஸ்டனை மைக்கேல் மூரின் documentaryஇல் பார்த்தபிறகு பிடிக்காமல் போனது தனிக்கதை. :)

-மதி

said...

இராகவன்,

நானும் இரண்டு படங்களையும் பார்த்துள்ளேன். முதலில் சமீபத்தில் வந்ததைத் தான் பார்த்தேன். அதை மறுமுறை பார்ப்பதற்காக எடுத்துவந்தது தவறுதலாக பழைய படமாய் இருந்தது. ஆனால் அந்த தவறு நன்மையில் முடிந்தது. இரண்டு versionஐயும் பார்க்க முடிந்ததே. இன்னும் ஒரு முறை கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். :-)

said...

சரியாகச் சொன்னீங்க மதி. யூல் பிரைனர் இருந்தால் அவர் மட்டுந்தான் இருப்பார். மத்தவங்களாம் நாங்களும் இருந்தோமுன்னு சொல்லிக்கலாம்.

ஆகா நான் மட்டுந்தான் யூல் பிரைனரோட விசிறின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். தொணைக்கு நீங்களும் இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சார்ல்டன் ஹெஸ்டனை மோசசாகப் பிடித்திருந்தது. ஆனால் பென்ஹரில் அவரை ஏனோ ரசிக்க முடியவில்லை. போதும் என்றே தோன்றியது.

said...

என்ன நீங்கள் நட்சத்திர வாரத்திற்கு முடிவுரை எழுதாமலேயே விட்டுவிட்டீர்கள்?

said...

ஓ பாத்துட்டீங்களா குமரன். ரொம்ப நல்ல படம் இல்லையா. அரட்டி உருட்டி மிரட்டும் சயாம் ராஜாவாக இருக்கும் பொழுதும் சரி. கையில் தூக்கிய சாட்டையைக் கீழே வீசி விட்டு மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமானகப் படுக்கையில் இருக்கும் பொழுதும் சரி....அடடா! யூல் பிரைனர்...யூல் பிரைனர்தான்.

said...

// என்ன நீங்கள் நட்சத்திர வாரத்திற்கு முடிவுரை எழுதாமலேயே விட்டுவிட்டீர்கள்? //

எழுதுறேன். எழுதுறேன். கண்டிப்பா எழுதுறேன். :-)