Wednesday, May 17, 2006

பரபரப்புப் புத்தகமும் பக்குவமற்ற கொள்கைகளும்

டாவின்சி கோடு புத்தகம் பரபரப்பான புத்தகந்தானே. அது வந்த பொழுது எத்தனை விதமான விமர்சனங்கள். ஏற்புகள். மறுப்புகள். ஆனாலும் புத்தகம் விற்பனையில் புதுச் சாதனை படைத்தது. நானும் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். என்னைப் பொருத்த வரையில் அந்தப் புத்தகத்தில் கலை மதிப்பு என்பது சுழி. அதாவது அந்தப் புத்தகத்தில் கொஞ்சமும் கலைத்தன்மை இல்லை என்கிறேன். ஆயினும் தொடர்ந்து படிக்க வைக்கும் நடை. முடிவில் காத்திருக்கும் பரபரப்புத் தகவல். இவையிரண்டுந்தான் அந்தப் புத்தகத்தின் சிறப்புகள்.

விற்பனையில் சிறந்த புத்தகங்கள் திரைப்படங்களாவது ஆங்கிலத்தில் நிறைய உண்டு. அந்த வகையில் டாவின்சி கோடு புத்தகத்தைப் படமாக்குவதில் எந்தத் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மறுகருத்து இருக்கப் போவதில்லை. ஆகையால்தான் மிக விரைவிலேயே திரைப்படமும் தயாரானது. வெளியாக இருக்கிறது. நானும் ஆவலுடன் காத்திருந்தேன். பொதுவாகவே ஆங்கிலத்தில் நான் படித்த புத்தகங்கள் படங்களாக வந்திருக்கின்றன. அவைகளை ரசித்தும் இருக்கிறேன். விலக்கியும் இருக்கிறேன். டாவின்சி கோடை மற்றும் வரவேற்காமல் போவேனா?

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய இருக்கும் பொழுதுதான் படத்தைத் தடை செய்து விட்டதாகச் செய்தி. தணிக்கைக் குழுவா மத்திய அரசா என்று முதலில் தெரியவில்லை. பிறகுதான் தணிக்கைக் குழு படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த பிறகும் அரசு அதைத் தடை செய்திருப்பது தெரிந்தது.

என்ன காரணம் என்று கேள்விப்படுகையில் சிரிப்பும் வேதனையும் கலந்து வந்தன. கிருத்துவ மதச் சாமியார்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுதான். அதுவும் சாகும் வரை உண்ணாவிரதம். உடனே அரசாங்கமும் அவர்கள் அனுமதியின்றி படத்தை வெளியிட மாட்டோம் என்று கேணத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.

கேணத்தனம் என்று சொல்வதற்காக யாரும் ஆத்திரப் படத் தேவையில்லை. கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவனைப் பற்றிப் பேசும் வரைக்குந்தான் என்ற நிலைக்கு அரசாங்கம் நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. வலைப்பூவிலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றியெல்லாம் பேசி இந்தப் படத்தைத் தடை செய்தது சரியென்று வாதம்.

கீமாயணம் எழுதிய பொழுது பெரியாருக்குக் கருத்துச் சுதந்திரதிரத்தைக் கொடுக்கவில்லையா? என்னைக் கேட்டால் அவர் கீமாயணம் எழுதியது சரி என்பேன். அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதார். ஏற்பவர் ஏற்கட்டும். ஏற்காதல் ஏற்காமல் போகட்டும். அவ்வளவுதான் விஷயம். எது எப்படியோ....ராமாயணத்தைப் பெரிதாக நினைக்கின்றவர்களது மனது புண்படுமே என்று பலரும் நினைக்கவில்லை.

இராமாயணம் பொய் என்று நிரூபிக்கத்தான் பெரியார் கீமாயாணம் எழுதினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒரு செய்தி. பைபிளில் சொல்லியிருப்பது பொய் என்று நிரூபிக்கத்தான் இந்தக் கிருத்துவக் டாவின்சிக் கோடாயணம் எழுதப் பட்டிருக்கிறதாம். பெரியாருக்கு இருந்த சுதந்திரம் டேன் பிரவுனுக்கும் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கும் வலைப்பூவில் இந்துக் கடவுள்கள் கடவுள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் மற்றவர்கள் மனம் புண்படும் என்று வருத்தப்படாதவர்கள் இப்பொழுது இந்தப் படத்தால் குறிப்பிட்டவர்கள் மனம் புண்படும் என்று சொல்லும் நிலைதான் இப்பொழுதைய உண்மையான நிலை.

அர்ச்சகர்களாக யாரும் வரலாம் என்ற சட்டம் மிகச் சரிதான். அதை அரசாங்கம் கொண்டு வந்ததும் சரிதான். அதை எதிர்ப்பவர்களை எதிர்க்க எத்தனை பேர் கச்சை கட்டிக் கொண்டு வந்தீர்கள். ஒவ்வொரு மதத்திலிருந்தும். எந்த மதத்தில் இல்லாதவர்களும் கூட.

படத்தினை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தணிக்கைக் குழுவும் சொல்லி விட்டது. அதற்குப் பிறகு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சில சாமியார்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எத்தனை பேர் வந்து கேட்டீர்கள்? ஒரே ஒரு பதிவுதான். அதிலும் கூட இந்தத் தடை தேவையில்லாதது என்று பட்டும் படாமல்தான் ஒரு சிலரால் சொல்ல முடிந்தது. தவறு என்று கூடச் சொல்லும் துணிவு ஒரு சிலரைத் தவிர யாருக்கும் இல்லை.

கிருத்துவ மதம் பிறந்து வளர்ந்து செழித்தோங்கி இருக்கும் நாடுகளில் எல்லாம் தடை இல்லை. எந்தச் சாமியாரும் கேட்கவில்லை. ஏன்? அவர்களுக்கு இருக்கும் பக்குவம். ஒரு முறை வலைப்பூவில் ஜோசப் சார் சொன்னார். "இது போல நிறைய ஏடுகள் கிடைத்திருக்கின்றன. அவைகள் நிரூபித்தவை ஒன்றுமில்லை" என்று. (யூதாஸ் தொழுகை ஏடுகள் தொடர்பாக.) அது நம்பிக்கை. அது பக்குவம். அதுதான் சகிப்புத்தன்மை. "நீ சொல்வதைச் சொல்லிக் கொள். எனக்குத் தெரியும் எது உண்மையென்று." ஆகையால்தான் கிருத்துவ நாடுகளில் இந்தப் படத்திற்குத் தடையை யாரும் கோரவில்லை. வாடிகன் அதிகார மையமும் அமைதி காக்கிறது.

ஆனால் இந்தியாவில் எழுகிறது பிரச்சனை. சகிப்புத்தன்மையும் பக்குவமும் கருத்துச் சுதந்திரமும் இன்றி. இது போராட்டத்திற்கான நோக்கத்தையே ஐயத்திற்குள்ளாக்குகிறது.

ஃபயர், வாட்டர் பிரச்சனையில் தணிக்கைக் குழு இருக்கிறது என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்றைக்குத் தணிக்கைக் குழு இருக்கிறது என்று சொல்ல அன்றைக்கு வந்த குரல்கள் வரவில்லை.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.

போராடுகின்றவர்களே.....இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது. இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருட்டு டீவிடியில் எந்த வெட்டும் இன்றி முழுப்படமும் காணக் கிடைக்கப் போகிறது. தியேட்டரில் போய்ப் பார்க்க நினைத்தவர்கள் வீட்டிலேயே பார்க்கப் போகிறார்கள். அதுவும் அவர்களிடமே அந்த டீவிடி சொந்தமாக இருக்கப் போகிறது. இதுதானா உங்கள் எண்ணம்? இந்தப் படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை நீங்களே தேடித் தந்துவிட்டீர்கள். நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, May 14, 2006

8. கழுகுமலை

இந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ஆனா இந்தக் கோயிலோட பெருமையும் பழமையும் ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் குறைவுன்னே நெனைக்கிறேன்.

தமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்னு. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுத்த முடியாது. ஏன்னா சாமிய குகைச் சுவத்துல செதுக்கீருப்பாங்க. அதுனால சுத்துனா முழு மலையையும் சுத்தனும். திருப்பரங்குன்றத்துலயும் மலைவலம் வருவாங்க. கழுகுமலைலயும் அப்படிச் செய்வாங்க.

தமிழ்நாட்டுல பெரிய கோயில்கள் எல்லாமே அரசாங்கத்தோட அறநிலையத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. ஒரு எட்டப்பன் தவறு செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு முன்னும் பின்னும் இருந்தவங்க நல்லாவே ஆட்சி செஞ்சிருக்காங்க. இந்தக் கோயிலையும் இன்னமும் நல்லாவே பராமரிச்சிக்கிட்டு வர்ராங்க.

வறண்ட பூமிதான். ஆனா கழுகுமலைக் கோயில் கொளத்துல நான் தண்ணியில்லாமப் பாத்ததில்லை. அதுல எறங்கி நின்னா குளுகுளுன்னு வெயிலுக்குச் சொகமா இருந்துச்சு. அப்படியே கால் கழுவீட்டுப் போனோம். கோயிலோட பழமையும் குளுமையும் ஒன்னா வரவெத்தது. இங்க மயில் மேல உக்காந்த முருகன். வழக்கமா மயில் வலப்பக்கமா திரும்பீருக்கும். இங்க இடப்பக்கமா திரும்பீருக்கும். அமைதியா கூட்டமில்லாம இருந்துச்சு. பொறுமையாக் கோயிலச் சுத்திப் பாத்துட்டு வெளிய வந்தோம்.


கழுகுமலைக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் இருக்கு. அங்க சமணர்கள் வாழ்ந்த இடம் இன்னமும் இருக்கு. அதாவது பழைய சமணக் கோயில். இப்ப இருக்குற ஊர விட்டு ஒதுக்குப் புறமா இருக்கு. ஆனா நாங்க போக முடியலை. காரணம் நேரமில்லாமைதான்.

அண்ணாமலை ரெட்டியார்னு கேள்விப் பட்டிருப்பீங்க. காவடிச் சிந்து எழுதுறதுல ரொம்பப் பெரிய ஆளு. எல்லாம் முருகன் கொடுத்ததுதான. முருகன் மேல அத்தன காவடிச் சிந்து எழுதீருக்காரு. ஒன்னொன்னும் தமிழருவிதான். அவரோட சொந்த ஊர் கழுகுமலைதான்.

வண்ண மயில் முருகேசன்
குற வள்ளி பதம் பணி நேசன்
உரை வளமே தரு
கழுகாசலபதி கோயிலின்
வளம் நான் மறவாதே

இப்படி எழுதியிருக்காரு அவரு காவடிச் சிந்துல. நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.

கோயில்பட்டீல இருந்து நேராப் போனா திருநெல்வேலி. ஆனா கோயில்பட்டி தாண்டி கொஞ்ச தூரத்துலயே இடப்பக்கமா திரும்பி உள்ள போனா கழுகுமலை வரும். அங்கிருந்து அப்பிடியே நேராப் போனா சங்கரங்கோயில் வரும். அப்படியே திரும்பி வளைச்சிக்கிட்டு போனா நேராத் திருநெல்வேலிக்கே கொண்டு போயிரும்.

கோயில்பட்டீல இருந்து நேரா திருநெல்வேலி போனா வழியில கயத்தாறு வரும். கட்டபொம்மனத் தூக்குல போட்ட எடத்தப் பாத்திருக்கலாம். ஆனா நாங்க கழுகுமலை சங்கரங்கோயில்னு போனதால அதப் பாக்கல. நாங்க சங்கரங்கோயில் போறப்போ கிட்டத்தட்ட 11.30 மணி. நல்ல வெயில். 12 மணிக்கு நட வேற சாத்தீருவாங்க. அதுனால விறுவிறுன்னு வண்டிய நிறுத்தீட்டு கோயிலுக்குள்ள போனோம்.

சங்கரங்கோயிலும் பழைய கோயில்தான். அந்தக் காலத்துல நெற்கட்டுஞ்செவல் சமீனுக்குச் சொந்தமா இருந்திருக்கு. கோயிலுக்குள்ள போகும் போது பூலித்தேவனை நெனைக்காமப் போக முடியாது.

நெற்கட்டும் செவல் சீமைக்குத் தலையா இருந்தவர் பூலித்தேவர். இவரு கூடதான் வெள்ளக்காரன் மொதமொதலா இந்தியாவுல சண்ட போட்டான். ஆனா அத வரலாறுல படிக்கிறதே இல்லை. சிப்பாய்க் கலகத்துல இருந்துதான் தொடங்குவாங்க. மொதப் போர்ல பூலித்தேவருக்குத்தான் வெற்றி. அடுத்த போர்ல வஞ்சகமாக் காட்டிக் குடுத்தான் கான் சாகிப்ங்குறவன். அட...அதாங்க கமலோட வாழ்க்கை லட்சியப் பாத்திரம் மருதநாயகம். கமலுக்கு வேணும்னா இவர் கதாநாயகனா இருக்கலாம். ஆனா வரலாற்றுக்கு எதிர்நாயகன்.

இப்ப வெள்ளக்காரன் பூலித்தேவரப் பிடிச்சாச்சு. கொண்டு போறாங்க. எதுக்கு? பேருக்கு விசாரணைன்னு வெச்சு தூக்குல போடத்தான். வழியில சங்கரங்கோயில். குலதெய்வத்தக் கும்புட அனுமதி கேட்டாரு பூலித்தேவர். வெள்ளக்காரனும் கோயிலச் சுத்திக் காவல் போட்டு இவர உள்ள அனுப்புனான். உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை. அவர் காணாமப் போன எடத்தைக் குறிச்சி மரப்பந்தல் போட்டு வெச்சிருக்காங்க. இவரக் காணம்னு ரெக்கார்டுல எழுதிக் கேச மூடீட்டான் வெள்ளக்காரன். ஆனா ஒன்னு...அடுத்து பக்கத்தூரு பாஞ்சாலங்குறிச்சிக்காரனப் பிடிச்சப்ப...எங்கயும் நிப்பாட்டலை. நேரா கயத்தாறு. விசாரணை. தூக்கு. வெள்ளக்காரன் சுதாரிச்சிக்கிட்டான்.

தொடரும்.

Thursday, May 11, 2006

அலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிஞ்சிருச்சி. முடிவுகளும் தெரிஞ்சிரிச்சி. இப்ப என்ன பண்றது? இந்த முடிவுகள்ள இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னு அலசிப் பாக்க வேண்டியதுதானே.

மொதல்ல வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவங்க வருத்தப்பட வேண்டாம். மக்கள ஏமாத்த நமக்கு வாய்ப்புகள் கிடைச்சிக்கிட்டே இருக்கும். காத்துக்கிட்டிருங்க. பலன் கிடைக்கும்.

தேர்தல் தொடங்குனப்பவே எனக்கு ஆசதான். அதாவது கூட்டணி ஆட்சிதான் வரனும்னு. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஒரே மாதிரிதான் வெச்சிருந்தேன். ரெண்டு பேரும் ஆட்ச்சிக்கு வர்ரது ஏனோ பிடிக்கல. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரையும் விட்டா வேற வழியே இல்லைங்கறதால, கூட்டணி ஆட்சி வந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். நல்ல வேளையா அப்படியே நடந்துருச்சு.

இந்த முடிவுகள்ள இருந்து ஒன்னு நல்லாப் புரியுது. திமுக அதிமுக ரெண்டும் மக்கள் ஒரே மாதிரிதான் பாக்குறாங்கன்னு. யாரு நெறையா கூட்டணி சேக்குறாங்களோ....அவங்களுக்கு கூடுதல் ஓட்டு. அவ்வளவுதாங்க விஷயம்.

இந்தத் தேர்தல் முடிவுகள்ள மூனு தகவல்கள் எனக்கு வியப்பத்தான் குடித்துச்சி. அதுவும் நான் எதிர் பார்க்காத வகையில.

மொதல்ல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது விஜயகாந்த். இவர நான் ஒரு பொருட்டாவே தேர்தல்ல மதிக்கலை. அதுக்காக தமிழ்மணத்துல இருக்குற பல நண்பர்களைப் போல அசிங்கமாவும் நாகரீகமில்லாமலும் திட்டலை. அது தப்பு. எதிரியாயிருந்தாலும் மரியாதைக் கொறவா பேசக்கூடாது. இத்தன நியாயம் பேசுற நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள் இது. நீங்க பேசுற நியாயங்களோட இதையும் சேத்துக்கோங்க.

சரி. விஜயகாந்துக்கு வருவோம். அவருக்கு ஒரு ஓட்டு வங்கி இருக்குன்னு நிரூபிச்சிட்டாரு. அதுதான் உண்மை. லேட்டாவும் லேட்டஸ்டாவும் வர்ரேன் போறேன்னு சொல்லாம ஒரு முடிவோட எறங்குனதுக்கான பலன் கிடைச்சிருக்கு. அவரத் தோக்கடிக்க அத்தன வழிமுறைகளையும் பாமக செஞ்சது. நாலு விஜயகாந்த் போட்டி போட வைக்கிறது. அத நம்ம வலைப்பூ நண்பர்கள் கூட கிண்டலாச் சொல்லிச் சிரிச்சது......வேண்டாங்க. நம்மள்ளாம் கொஞ்சம் படிச்சவங்க. இதெல்லாம் நமக்கு வேண்டாம்.

இவர் ஜெயிக்க மாட்டார்னு நான் நெனைக்கலை. ஆனா நம்புனேன். நல்ல ஓட்டு வாங்கி மூனாவது எடத்துக்கு வருவாருன்னு நெனச்சேன். ஆனா முதலிடங்க. இவர மட்டும் ஜெயலலிதா கூட்டணில சேத்திருந்தாங்க (முயற்சி செஞ்சாங்கன்னு கேள்விப் படுறோம்.)..ஜெயிச்சிருந்திருக்கலாம். ஓட்டுக் கணக்கு சொல்லுதே. ஊருருக்கு ஓரளவு நல்லாவே வாங்கீருக்காங்க. பாராட்டுகள் விஜயகாந்த். விருத்தாச்சலத்த நீங்க விருத்தி பண்றதுலதான் உங்க தெறமைய புரிய வைக்கனும். இது வரைக்கும் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தவங்கள்ளாம் நெடுநாள்த் திட்டங்கள்னு எதுவுமே யோசிக்கலை (குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் யோசிச்சாங்க. பதவிக்கு வர்ரதுக்கும் இலவசத்ததான் யோசிச்சாங்க). நீங்க என்ன பண்ணப் போறீங்களோ.

பாமகவுக்கு இங்க ஒரு வேண்டுகோள். விஜயகாந்த் விருத்தாசலத்துக்கு நல்லது செஞ்சா(!) ஒத்துழைப்புக் குடுக்கலைன்னாலும் குழப்பம் பண்ணாதீங்க. பண்ணலாம்....அது விஜயகாந்த்துக்குத்தான் உதவும்.

அடுத்தது வைகோ பங்கு. இவருடைய பங்கு ஒன்னுமே இல்லைன்னு சொல்ல முடியாது. தமிழகத்துல ஆறும் புதுவைல ஒன்னும்(!). கடைசி நேரத்துல இவரு எடுத்த முடிவுக்கு இவ்வளவு கிடைச்சது மட்டுமல்ல..........தோத்த இடங்கள்ள உள்ள வாக்கு வித்தியாசமும் சொல்லும் உண்மையான நெலமையை. அன்பழகனுக்கே நானூறு ஓட்டு வித்தியாசந்தான். பல இடங்கள்ள கொறஞ்ச வாக்கு வித்தியாசத்துல தோத்ததும் மதிமுகவுக்கு இருக்குற ஓரளவு பரவலான செல்வாக்குக்கு எடுத்துக்காட்டு. அதிமுகவும் மதிமுகவும் ஒருத்தருக்கொருத்தர் ஒழுங்கா உதவியிருக்காங்க. அதுவும் பல தொகுதிகள்ள தெரியுது. சென்னையிலேயே மூன்று தொகுதிகள்ள மதிமுக வாக்குகள் எதிர் பார்த்ததை விடவும் அதிகம். சென்னை திமுகவின் கோட்டைங்கறது இனிமே மாயைதான். ஸ்டாலினுக்கே ரெண்டாயிரம் ஓட்டுதான் வித்தியாசம். பல திமுக தலைகள் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றப்போ சென்னைல இப்படி ஒரு நெலமைங்குறது திமுகவுக்கு நல்லதில்லை.

இன்னொரு விஷயம். வைகோ நெனச்சத சாதிச்சிட்டாருன்னு சொல்வேன். வைகோவும் கூட்டணியில இருந்திருந்தா நிச்சயமா இத விடவும் அதிக தொகுதிகள் திமுகவுக்குக் கிடைச்சிருக்கும். பெரும்பான்மை கூட கிடைச்சிருக்கலாம்னு ஓட்டுக் கணக்கு வெச்சுப் பாக்கும் போது தெரியுது. திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால வைகோவுக்குப் பின்னால பலன் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. இன்னைக்குப் பொழுதுக்கு ஆக வேண்டியதப் பாத்தாச்சு. நாளைக்கு நடக்கப் போறது யாருக்குத் தெரியும்? விடாம போராடுங்க. ஒங்களுக்கும் வாய்ப்பு வரலாம். ஆனா ஒன்னு, இந்தத் தேர்தல்ல நீங்க கொடுத்தது பெரிய விலை. அதிமுக கூட்டணிக்குப் போனதச் சொல்றேன். மத்தவங்கள்ளாம் யோக்கியங்கன்னு சொல்ல வரலை. அவங்கள்ளாம் மொதல்ல இருந்தே கெட்டவங்க. புதுசா தப்பு செய்ற நீங்க கெட்டவங்களாகி அவங்கள்ளாம் நல்லவங்களாயிட்டாங்க பாத்தீங்களா....இன்னமும் ஒன்னும் கெட்டுப் போகலை. அடுத்தடுத்து பொறுமையா யோசிச்சு எடுக்குற முடிவை முதல்லயே எடுங்க. கடைசீ நேரத்துல எடுக்காதீங்க.

மூனாவது காங்கிரஸ். கருணாநிதி அத்தன சீட்டு அள்ளிக் கொடுத்தப்ப, காங்கிரஸ் எப்படிப் பொழைக்கப் போகுதோன்னு நெனச்சேன். ஆனா கொடுத்த வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. இன்னைக்கு காங்கிரஸ் இல்லாம ஆட்சியமைக்க முடியாதுங்கறதுதான நெலமை. காங்கிரஸ்காரங்களா...வாழ்த்துகள். அடுத்த தேர்தல்ல சிதம்பரத்த உள்ள எறக்கப் பாக்கலாம். வாய்ப்பு பிரகாசமா இல்லைன்னாலும் நெறைய சீட்டுகள அள்ள வாய்ப்பிருக்கு. அது அடுத்த தேர்தல் நிலவரத்தப் பொறுத்துதான். ஒருவேளை இப்ப இருக்குற மத்திய அரசுக்கும் திமுகவுக்கும் சண்டைன்னு வெச்சுக்கோங்க. அப்ப காங்கிரசும் பாமகவும் நெனச்சா ஜெயலலிதாவையே முதல்வர் ஆக்கலாம். ஆனா..நடக்குற காரியமா அது? இன்னைக்குத் தமிழகத்துல இருக்குற எல்லாத் தலைவர்களுமே கூட்டணி ஆட்சிய ஓரளவுக்கு நல்லா கொண்டு போக முடியும். ஆனா முடியாத ஒரே ஆளு ஜெயலலிதாதான். தின்னாத் தனியிலை. இல்லைன்னா பட்டினிங்குறதுதான் அவரோட கொள்கை. ஒருவேளை பசி வந்தா பத்தும் பறந்து போகுமோ என்னவோ!

மத்த படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு ரெண்டு இடம் கிடைச்சிருக்கு. பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிறப்பா செஞ்சிருக்காங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.

ஜெயலலிதாவுக்கு இப்பவாவது எல்லாரையும் அணைச்சிக்கிட்டுப் போறதுன்னா என்னன்னு தெரிஞ்சா நல்லது. இல்லைன்னா திண்டாட்டந்தான். சண்டை போட்டுக்கிட்டேயிருந்தா எப்பிடி. அடுத்தவங்களை மதிக்கக் கத்துக்கனும். மனுசனை மனுசனா நடத்தக் கத்துக்கனும். வேன்ல உக்காந்துக்கிட்டு டயரத் தொட்டுக் கும்பிடுறவங்களை ஆசி குடுக்குற அசிங்கங்கள் நிக்கனும். ஒங்களுக்குன்னு வாக்கு வங்கி நல்லாவே இருக்கு. அதைப் பெருக்குறதும் கரைக்கிறதும் ஒங்க கையிலதான் இருக்கு.

கடைசியா கருணாநிதிக்கு. திரும்ப முதல்வராகப் போறீங்க. வாழ்த்துகள். ஆனா இந்தப் பதவிக்கு வர்ரதுக்கு நீங்க எடுத்த இலவச வாள் மேல எனக்குக் கொஞ்சம் கூடப் பிடித்தம் இல்ல. இந்த இலவசங்க உங்களுக்குத் தேர்தல்ல உதவீருக்கு. இதெல்லாம் சாத்தியம்னு சிதம்பரம் புள்ளி விவரக் கணக்கு சொல்லலாம். ஆனா இந்தத் தேர்தல்ல நீங்க தொடங்கி வெச்ச இலவசக் கூத்து எல்லாரையும் எப்பிடிப் பைத்தியமாக்குச்சு பாத்தீங்களா. போன தேர்தல் வரைக்கும் ஒங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இந்தத் தேர்தல்ல ஓட்டே போடல. யாருக்குப் போடுறோமோ இல்லையோ...ஒங்களுக்குப் போடக் கூடாதுன்னு நான் முடிவு செஞ்சிருந்தேன்.

மத்தவங்க வேணும்னா ஜெயலலிதாவை விட நீங்க செம்மல்னு நிருபிக்க ஆயிரம் சொல்லலாம். ஆனால் என்னுடைய மதிப்புல நீங்க கொறஞ்சுதான் போயிட்டீங்க. நான் ஒருத்தன் மட்டும் தமிழ்நாடு இல்லை. ஆனா என்னைப் போல நெறையப் பேரு நெனக்கத் தொடங்குனா அது உங்க கட்சிக்கு நல்லதில்லை. இந்த ஆட்சியில ஒங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர் பார்க்கலை. ஏன்னா உங்க தேர்தல் அறிக்கைல உண்மையான தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமே இல்லை. ஏதாவது செஞ்சீங்கன்னா நிச்சயம் பாராட்டுவேன். இல்லைன்னா.....எது எப்படியோ திரும்ப முதல்வரானதுக்கு என்னோட வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்

Monday, May 08, 2006

7. கதிரேசன் கோயில்

கோயில்பட்டீல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு ஃபோன் போட்டு ஒரு நல்ல லாட்ஜுல ரூம் போடச் சொன்னோம். காலைல எறங்கிக் குளிச்சிட்டு எட்டு மணிக்கு மேல கோயில்பட்டிக் கதிரேசன் கோயில், அப்புறம் கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலிய முடிக்கிறதாத் திட்டம். அதுக்கு ஒரு வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன்.

எல்லாம் குளிச்சிக் கெளம்புற வேளைல அவங்க வீட்டுல காலைல டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுக்கு முந்துன ராத்திரிதான் நாங்க கோயமுத்தூர்ல தாக்கப்பட்டிருந்தோம். அதோட தொடர்ச்சி கோயில்பட்டியிலயும் தொடந்துச்சு. தகதகன்னு மஞ்சமஞ்சேர்னு கேசரி. ஒரே அளவா இட்டிலிகள் (அதெப்படி ஊத்துறாங்களோ!). காய்கறியெல்லாம் போட்டுக் கிண்டுன உப்புமா. வீட்டுல சுட்ட மெத்துத் தோசை. இதுகள்ளாம் தனியாப் போகக் கூடாதுன்னு தொணைக்குத் தொவையலு, சாம்பாரு, பொடின்னு ஒரு கூட்டம். முடிஞ்சதும் ஆளுக்கொரு வாழப்பழமும் டீயும். ஒரு வயிறுதான இருக்குன்னு வருத்தப்படத்தான் முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவே சாப்பிடத் தேவையில்லைன்னு எல்லாரும் முடிவு கட்டுனாங்க....ஆனா நா மட்டும் இல்ல....மதியம் சங்கரங்கோயில்ல சாப்பிடுவேன்னு உறுதியாச் சொன்னேன் (சங்கரங்கோயில்காரங்க இங்க இருந்தா நான் என்ன சொல்ல வர்ரேன்னு தெரிஞ்சிருக்கும்,)

வீட்டு மாடீக்குப் போனோம். லட்சுமி மில்ஸ் காம்பவுண்டுல மரங்க நெறைய இருந்துச்சு. அதுல அங்கங்க மயில்கள். இந்தப் பக்கந் திரும்புனா மல மேல கதிரேசன் கோயில். கோயில்பட்டீல இருக்குற பழைய கோயில் கதிரேசன் கோயில். அதுவும் ஒரு சின்ன மலை மேல. பாழடஞ்சி போயி ஆளும் பேரும் போகாம சிதஞ்சு போய் இருந்துச்சு. அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.

மலைல ஏற்ற படியெல்லாம் செதஞ்சு போய் மண்ணாகி அதுல இருட்டு வேளைல நெறையப் பேரு அசிங்கஞ் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. என்னையப் போலவே நெறையப் பேரு நெனச்சிருப்பாங்க போல. அந்தக் கோயிலுக்கும் ஒரு விடிவு காலம் வந்துருச்சு. இப்ப பழைய சிதைவுகளைத் தட்டி விட்டுட்டு புதுக் கோயில் கட்டியிருக்காங்க. உள்ள முருகன் சிலை கெடையாது. வேல்தான். கதிர்காமத்துலயும் செல கிடையாது. கதிரேசன் கோயில்லயும் செல கெடையாது. இப்பக் கோயில்ல புதுசா பெரிய வேல்தான் நட்டீருக்காங்க. அதே போல மலைவலம் வர்ரவங்களுக்கு நல்ல தார்ச்சாலையும் போட்டிருக்காங்க. ஏற மாட்டாதவங்களுக்காக வண்டிய நேரடியா மேல கொண்டு போற வசதியும் உண்டு.

எல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாமி கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.

என்ன கொடுமை பாத்தீங்களா! அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.

பொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்களுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.

அந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.

தொடரும்

Tuesday, May 02, 2006

6. மருதமலையில் அல்பப் பண்டம்

கோவைக் குற்றாலம் முடிஞ்சதும் நேரா மருதமலைதான். ரொம்பச் சின்னப் பிள்ளைல மருதமலை பாத்த நெனவு. அதுக்கப்புறம் போனதேயில்லை. அப்பக் கீழ இருந்து மேல நடந்தே ஏறுனோம். பொதுவா முருகங் கோயில் மல மேல இருந்தா நடந்துதான் ஏறுறது வழக்கம். ஆனா மருதமலை அடிவாரம் வந்தது தெரியாம வண்டிக்குள்ள உக்காந்திருந்தேன். வண்டி மலைல ஏறத் தொடங்கீருச்சு.

நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்கன்னு கத்தி எறங்கீட்டேன். கூடவே நாலு நண்பர்களும் எறங்கீட்டாங்க. அப்படியே படியில ஏறிப் போனோம். நல்ல காத்து. உறைக்காத வெயில். ஏற்கனவே ரொம்பச் சுத்துனதுனால கொஞ்சம் களைப்பு. ஆனாலும் ஏறுனோம். வழியில முழுக்க மண்டபங்கள். அத்தனையும் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பாத் தேவர் கட்டுனது. அருமையான முருக பக்தர் அவர். கருப்புப் பணமே வெச்சிருக்காத நல்ல திரைத்துறைக்காரர்.

அப்படியே ரெண்டு மூனு போட்டோ பிடிச்சிக்கிட்டு மலையேறுனோம். ஏறுனப்புறந்தான் தெரிஞ்சது தங்கத் தேர் பொறப்பட இருக்குறது. சரி. தேர் நகர்ரதப் பாத்துட்டு முருகனப் பாக்கலாம்னு தேர் கிட்ட போனோம். தங்கத் தேர் இழுக்க நமக்கும் ஆசைதான். ஆசையிருக்கு அம்பாரி ஏறன்னு பழமொழியே இருக்கே. தேர் நகரல. எல்லாரும் வந்து தள்ளுங்கன்னு கூப்டாங்க. ஆகா வந்ததுடா வாய்ப்புன்னு தேரப் பிடிச்சித் தள்ளுனோம். திடீர்னு ஒருத்தர் வந்து நகருங்க நகருங்கன்னாரு. என்னடான்னு நகந்துகிட்டோம்.

அப்புறம் தேர் நகரலை. அங்கையே நின்னுச்சு. இழுத்து இழுத்துப் பாக்குறாங்க....ம்ஹூம்...கடைசீல சங்கிலி ஏதோ மாட்டிக்கிட்டு சிக்கிக்கிட்டு இருக்கு. தேரப் பாக்கனும்னு நெனச்சோம். பாத்தாச்சு. இழுக்கனும்னு நெனச்சோம் தள்ளியே விட்டாச்சு. இப்ப கோயிலுக்குள்ள போவோமுன்னு உள்ள போனோம். கூட்டமில்லை. நல்ல தரிசனம். தமிழில் சொல்லாகி, அந்தச் சொல்லுக்கும் மதிப்பைத் தரும் பொருளாகி எல்லாமுமாகி நிற்கிறவனைக் கண்டு தொழுது வணங்கிகோம்.

அப்புறம் அப்படியே பாம்பாட்டிச் சித்தர் குகைக்குப் போனோம். அது கொஞ்சப் படிக கீழ எறங்கனும். அங்க போகும் போதுதான் எங்க கூட வந்தவரு மலைக்கு மேல இருக்குற பழைய முருகங் கோயிலைப் பத்திச் சொன்னாரு. அதுக்குக் காட்டுக்குள்ள போகனுமாம். முந்தி ஒரு நண்பர் வந்து போகனும்னு அடம் பிடிச்சாராம். இவங்கள்ளாம் என்னடான்னு வேண்டா வெறுப்பாக் கூடப் போனாங்களாம். ஆனா தண்ணி கிண்ணி எடுத்துக்காம. எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டுத் தவிச்சுப் போயி தவங்கிப் போயி வந்திருக்காங்க. ஆனா அங்க போகனும்னு ஒத்தக்கால்ல நின்னவரு நல்லா ஜம்முன்னு ஏறி எறங்கீட்டாராம்.

இதப் பேசிக்கிட்டே வந்து அங்க பிரசாதக் கடைல முறுக்கு, தினைமாவு எல்லாம் வாங்கிக் கிட்டோம். எறங்குற எடத்துலயே ஒரு ஓட்டல். உள்ள போயி ஆளுக்கொரு காப்பி. நல்லா இருந்தது. சின்னக் கடைன்னாலும் கமகமன்னு ஆவி பறக்கக் காப்பி சுகமா இருந்துச்சு. ரசிச்சுக் குடிச்சிட்டு கீழ எறங்குனோம்.

அப்பத்தான் என் கண்ணுல பட்டுச்சு அது. அதாங்க எலந்தவடை. தூத்துக்குடிப் பக்கமெல்லாம் கெடைக்காது. நாங்க கரூர்ல இருந்தப்பதான் எலந்தவடை எங்களுக்கு அறிமுகம் ஆச்சு. பத்துகாசுக்கு ஒரு சின்ன பாலித்தீன் பாக்கெட்டுல கருப்பாக் களிம்பா கிடைக்கும். அதுக்குள்ள எலந்தக் கொட்டைகளும் முழுசாவோ ஒடஞ்சோ கெடக்கும். அதப் பல்லால கடிச்சு பைக்குள்ள இருக்குறத வாய்க்குள்ள எடுத்துக்கனும். சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு கொட்டையெல்லாம் மெல்ல முடிஞ்சா மெல்லலாம். இல்லைன்னா துப்பீறலாம். அதுதான் எலந்த வடை. எலந்தப் பழமும் புளியும் வெல்லமும் போட்டு இடிச்சிச் செஞ்ச நம்மூர் அமுதம்.

அது சிட்ட சிட்டயா ஒரு கடைல தொங்குச்சு. அத வாங்குனேன். அப்பயே ஒன்னப் பிச்சித் தின்னு என்னோட பழைய மறந்து போன சுவையத் தெரிஞ்சிக்கிட்டேன். அடடா! எலந்த வடையோ எலந்த வடை!

அப்புறம் இருட்டு வேளை. படபடன்னு லாட்ஜுக்குப் போயி துணிமணிகள எடுத்துக்கிட்டு நண்பனோட அக்கா வீட்டுக்கு வலுக்கட்டாயமா கடத்தப் பட்டோம். அங்க இட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு ஒரு வழியா தப்பிச்சி பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டில வந்து விடியக் காலைல நாலரை மணிக்கு எறங்குனோம்.

தொடரும்.

Wednesday, April 26, 2006

தேன்கூட்டின் தேன்மழை

இன்னைக்குக் காலைல கொஞ்சம் நேரங்கழிச்சி எந்திரிச்சேன். ஏன்னா நேத்து ராத்திரி வீட்டுக்கு வரும் போது நடுநிசி. மயில்களை எல்லாம் பாக்கலாம்னு உக்காந்தா பொன்ஸ் கிட்ட இருந்து ஒரு மயில்......ராகவன்...சதி நடக்குது....ஒங்கள சாமியார் ஆக்கப் பாக்குறாங்கன்னு....தேன்கூட்ட ஒடனே பாக்கச் சொன்னாங்க....நானும் படக்குன்னு போய்ப் பாத்தேன். அட! வாசகர் பரிந்துரைன்னு மகரந்த வலைத்தளத்த இன்றைய பரிந்துரைல போட்டிருக்காங்க. அதுவும் படத்தப் போட்டு. நன்றி தேன்கூடு. தேன்மழைதான் இந்தப் பரிந்துரை. பரிந்துரை செஞ்ச அந்த நண்பருக்கும் நன்றி.

என்னப் பத்தி என்ன சொல்லீருக்காங்கன்னு கீழ குடுத்திருக்கேன். அதுக்கு நடுவுல என்னோட குறிப்புகளும் இருக்கு. ஊதா நிறத்துல.

திருமணம் ஆகாத அழகான இளைஞர். தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் கணிப்பொறி வல்லுநராக இருக்கிறார்.

போட்டுத் தாங்கீட்டாங்க. அழகுல தொடங்கி வல்லுனர்ல முடிச்சிருக்காங்க. :-) தூத்துக்குடி நாம் பொறந்த ஊராச்சே.....சின்ன வயசுல ஓடியாடி திரிஞ்ச ஊராச்சே....அதுனாலதான் மத்த ஊர்கள விட தூத்துக்குடி மேல பாசம் நெறைய.

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு, அதிலும் முருகக்கடவுள் மீது தீராத அன்பு.

உண்மைதாங்க. அந்த அன்பும் முருகன் தந்ததுதான். எல்லாம் தமிழ் காட்டிய வழி.

பழமையை உடைத்தெறிந்து புதிய பாதையில் உலகை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், தன் கருத்தை கடைப்பிடிப்பவரும் கூட.

இந்தக் கருத்தைச் சொன்ன நண்பருக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்கு. ஐயா, யாருய்யா நீங்க...எனக்கு ஒரு மயிலாவது தட்டி விடுங்க gragavan at gmail dot com. முடிஞ்ச வரைக்கும் சொல்றதச் செய்யனும்னு நெனப்பேன். நெனச்சத முடிஞ்ச வரைக்கும் செய்வேன். என்னைய ஒருத்தன் அடிக்கக்கூடாதுன்னு நெனச்சேன்னா...நானும் அடுத்தவன அடிக்கக் கூடாதுன்னு நெனக்கிறேன். இவ்வளவுதாங்க.

பல தளங்களில் எழுதியிருக்கிறார், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதை வைத்து எழுதிய நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமானது.பட்டிமன்றத்தில் இளம்வயதிலேயே நடுவராக பணி புரிந்த அனுபவம் உண்டு.நல்ல சமையல் கலைஞரும் கூட, தினம் தினம் எதையாவது புதிதாக சமைக்க முயற்சி செய்வார்.நட்பு பாராட்டுவதிலும் வல்லவர். விரைவில் இமயமலைக்கு ஆன்மீகப்பயணம் செல்லும் எண்ணமும் உண்டு.

வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திய வெச்சு எழுதுன விக்கிரமாதித்தன் கதை நகைச்சுவைக் கதை. மாரப்பன்,அரசகுமார், இளங்கோ (இளைய மகன்) மேல் பாசம் கொண்ட அன்புச்செல்வர், வெற்றிச்செல்வி எல்லாரும் வருவார்கள். இவங்கள்ளாம் யாருன்னு தெரியுதுல்ல. அப்போ எழுத இடங்கொடுத்தது Forumhub. அதுலதான் எழுதினேன். பலர் விரும்பிப் படிச்சாங்க.

அதே மாதிரி பட்டிமன்றம்....இது தினம் ஒரு கவிதைக் குழுவுக்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றம். அதை நடத்தி வந்த நாகா வாய்ப்பு கொடுத்தார். அடுத்து மகேந்திரன் என்ற நண்பர் வழியா பாரதியா பிறந்த நாள் விழாவுக்கு பெங்களூர் டவுன்ஹாலில் நடந்த பட்டிமன்றத்தில் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்புகள் கிடைக்கக் காரணமான நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.


இமயமலைக்கா? நான் ஏற்கனவே போயிருக்கேனே...தூரத்துல இருந்து K-2 சிகரத்தையும் பாத்திருக்கேனே....ஆனா அது ஆன்மீகச் சுற்றுலா இல்ல. நல்ல இன்பச் சுற்றுலாதான். ஆகஸ்ட்டுல Valley of flowers போக வேண்டியது. மூனு மாசம் சென்னைக்குப் போக வேண்டியிருக்கிறதால போக முடியாது. :-(

அருணகிரி நாதரின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிய சொல்ல சொல்ல இனிக்குதடா புகழ் பெற்ற பதிவு.இதற்கு மேலே உங்களுக்கே தெரியும் தானே :)

இதச் சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க....அதுனால நீங்க யாருன்னு தெரிஞ்சி போச்சு.....நேத்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போ தெரியாயது இப்பத் தெரிஞ்சி போச்சு. :-)

சுமார் ஓராண்டுக்கும் மேலாகத் தமிழ் இணையத்திலும், வலைப்பதிவுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வரும் கோ.ராகவனின் வலைப்பதிவு:
மகரந்தம்

நன்றி: #வாசகர் பரிந்துரை (27/04/06)


தேன்கூட்டிற்கும் என்னை ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கும் நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, April 21, 2006

5. கோவைக் குற்றாலமும் ஜான் அப்ரஹாமும்

காலைல கோவைக் குற்றாலத்துக்குப் போகைல உள்ள விடல....எல்லாம் ஆனைக பண்ணுன அட்டகாசம்னு சொன்னேன். அப்புறமா பூண்டி முருகன் கோயில், வெள்ளியங்கிரி மலை, ஈஷா தியானலிங்கம் எல்லாம் பாத்துட்டு திரும்ப வரும் போது எங்கள உள்ள விட்டாங்க. ஜீப்பிலேயே கொஞ்ச தூரம் உள்ள போனா வண்டிகள எல்லாம் நிப்பாட்ட எடம் இருந்தது. அங்க வண்டியப் போட்டுட்டு ஒன்ற மைலு உள்ள நடக்கனும்.

வண்டிக நிக்குற எடத்துல ஒரு பெரிய மரத்தை வெட்டி அதோட அடி மட்டும் இன்னும் இருந்துச்சு. பள்ளிக்கூட நெனப்புல அதுல ஏறி நின்னுக்கிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். :-)

அப்புறம் நடப்பாதைல எல்லாரும் நடந்து போனோம். நல்ல வேளைக்குத் தண்ணி பாட்டில்களும் நொறுக்குத் தீனிகளும் வாங்கி வெச்சிருந்தோம். ஆனா போறப்போ எங்களுக்குத் தேவைப்படல. நாங்க போறப்போ நெறைய பேரு திரும்ப வந்துகிட்டு இருந்தாங்க. நாலு மணிக்கு மேல அங்க இருக்க விட மாட்டாங்க. அதுனால மொதல்ல போனவங்க குளிச்சிட்டு வந்தாங்க.

மலைப்பாதைல போறது நல்லாயிருந்தது. ஊதாப்பூக்கள் நெறைய தென்பட்டது. பச்சை எலைகளும் ஊதாவும் வெள்ளையும் கலந்து பாக்க நல்லாயிருந்தது. ஒரு பக்கம் மலை. மறுபக்கம் பள்ளத்தாக்கு. இந்த மாதிரி இயற்கை அழகுள்ள எடத்துக்குப் போனாலே ஒரு சந்தோஷம் வரும். அடிக்கடி இந்த மாதிரி எடங்களுக்குப் போறதும் உள்ளத்துக்கு நல்லது. ஒரு மாறுதலாவும் இருக்கும்.

அப்படியே நடந்து போய் அருவிக்குப் போனோம். பெரிய அருவீன்னு சொல்ல முடியாது. சிறுசுதான். ஆனாலும் ஒரு அழகோட இருந்தது. ஆனாலும் அங்கங்க பிளாஸ்டிக் கவர்களும் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளுமா இருந்தது. ஒரு அப்பாவும் மகனும் குளிச்சிட்டு ஈரத்துண்டோட உக்காந்திருந்தாங்க. ரெண்டு பேர் கைலயும் பிளாஸ்டிக் தட்டு. அதுல தக்காளிச் சோத்த எடுத்துப் போட்டுக்கிட்டு இருந்தாங்க அம்மா. மூனு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு அந்தத் தட்டுகள அப்படியே ஒரு ஓரமாவே போட்டுட்டாங்க. அவங்க இருக்கிற எடத்துல குப்பையாக்கலை. தமிழன் கிட்ட பல கெட்ட பழக்கங்க இருக்கு. அதுல ஒரு கொடுமையான பழக்கம் துப்புரவா வெச்சிருக்கத் தெரியாமை. பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.

தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்குப் போங்க......தமிழ்நாடு தாண்டுற வரைக்கும் குப்பையா இருக்கும். அதுக்கப்புறமா துப்புரவா இருக்கும். பண்பாடு பண்பாடுன்னு வாய் கிழியப் பேசுறோம். ஆனா தமிழ்நாட்டையே குப்பையாக்கி வெச்சிருக்கோம்.


சரி. நம்ம கதைக்கு வருவோம். அங்க அருவி ரெண்டு அடுக்கா அமைச்சிருக்காங்க. மேலடுக்கு பெண்களுக்கு. கீழடுக்கு ஆண்களுக்கு. கீழடுக்குல இருந்து சறுக்கிக்கிட்டே போனா தடாகம். அதுலயும் பலர் குளிச்சிக்கிட்டு இருந்தாங்க.

இந்தி சினிமாவுல ஜான் அப்பிரஹாம்னு ஒருத்தர் நடிக்கிறாரே. பெரும்பாலும் துணியே போடாம வந்து வயசுப் பிள்ளைக தூக்கத்தக் கெடுக்கிறாரே.....அவரு துணியப் போட்டும் போடாமலுந்தான் காட்சி குடுப்பாரு. இந்திக்கு அவர் ஒருத்தர்தான். நம்மூர்ல நெறையப் பேரு அப்படி இருக்காங்க. கோவைக் குற்றாலத்துல பாத்தேன்.

வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு பாறைகள்ள அப்படியே படுத்துக்கிட்டு சூரியக் குளியல் நடத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு கூட்டம். நல்ல வேளை தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாரும் கற்புக்கரசிகள். இல்லைன்னா இந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு தப்புப் பண்ணீருவாங்க இல்லையா. ஆனா பெண்கள் மட்டும் உடம்பை மூடிக்கனும். அடக்கமா ஒடுக்கமா இருக்கனும். அவங்க அரைகுறையா வந்தா ஆண்கள் தப்புப் பண்ண வாய்ப்பாயிரும். ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா!

பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.

ஆனாலும் ஒருத்தனையாவது கெளப்பி விடனும்னு தோணிச்சு. கூட வந்த நண்பர்களோட சேந்து பேசி....ஒரு ஜான் அப்பிரஹாமப் பாத்து வேணுக்குமின்னே கிண்டல் பண்ற மாதிரி சிரிச்சோம். கொஞ்ச நேரத்துல அவனுக்கே ஒரு மாதிரி ஆகி ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு ஒழுங்கா போனான். இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. தலையெழுத்து.

சரி. இப்ப நம்ம குளிக்கனும்ல. நல்ல ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டுதான் குளிச்சோம். கீழடுக்குல அருவி ஒரே சீரா விழுந்துச்சு. அதாவது பெரிய டேம் நெறைஞ்சி வழியிற மாதிரி. அதுக்குள்ள தலையக் கொடுத்தோம். விழுகுற தண்ணிக்கும் அருவிக்கும் நடுவுல கொஞ்ச எடவெளி இருந்தது. அதுக்குள்ள நின்னுக்கிட்டோம். இப்போ எங்களுக்குப் பின்னாடி மலை. முன்னாடி சீரா விழுகுற தண்ணி. அந்தத் தண்ணியத் தாண்டி ஆளுகளும் மரம் மட்டைகளும் தெரியுது. ரொம்ப நல்லாயிருந்தது அந்த அனுபவம். இப்பிடி உள்ள இருந்து பாக்கும் போது தெளிவில்லாம தெரிஞ்சது. ஆனா வெளியருந்து உள்ள பாத்தா தண்ணிக்குள்ள யாரு நிக்கிறாங்கன்னு தெளிவாத் தெரிஞ்சது. ரொம்ப நேரம் தண்ணீல வெளையாண்டோம்.

சரியா நாலு மணிக்கு விசில் ஊதி எல்லாரையும் பத்துனாங்க. நாங்களும் தொடச்சிட்டு துணியப் போட்டுக்கிட்டு பொறப்பட்டோம். தண்ணீல ரொம்ப நேரம் வெளையாண்டுதலயோ என்னவோ எல்லாருக்கும் பசி. மசாலாக் கடலையும் நேந்திரங்காய் சிப்சும் பகபகன்னு பசிக்குற வயித்துல கபகபன்னு போச்சு. தண்ணியக் குடிச்சிட்டு நடந்தோம். ஒரு புத்துணர்ச்சி இருந்தது உண்மைதான். அருவீல குளிச்சதால இருக்கும்னு நெனைக்கிறேன்.

அது சரி....அந்த நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் பைகள என்ன செஞ்சோம்னு சொல்லவேயில்லையே. எல்லாத்தையும் ஒரு பைல போட்டுக்கிட்டு ராத்திரி லாட்ஜுக்குத் திரும்புனப்புறம் ரூம்ல இருந்த குப்பைத் தொட்டீல போட்டோம்.

அப்புறம் வண்டீல ஏறி நேரா மருதமலைக்குப் போனோம்.........

தொடரும்......

Sunday, April 16, 2006

4. தியானமும் கம்பங்கூழும்

ஈஷா தியான லிங்கமுன்னு நான் சமீப காலமாகத்தான் கேள்விப் பட்டிருக்கேன். அதோட சேத்து ஜிக்கீங்கறவரையும் சேத்துச் சொல்வாங்க. இவ்வளவுதான் எனக்கு இருந்த அறிமுகம். பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை. அதுனால அங்க போறதுக்கு எனக்கு அவ்வளவா ஆர்வம் இருக்கல. ஆனா கூட வந்தவரு கண்டிப்பா போய்ப் பாருங்கன்னு சொன்னதால போனோம்.

நல்லா ரெண்டு பக்கமும் மரங்கள். நடுவுல வழி. ரோடெல்லாம் இல்லை. ஆனாலும் துப்புரவா இருந்தது. வண்டிய நிப்பாடீட்டு இறங்கினோம். பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு. நல்ல உயரமான கூரை. அதுல நல்ல பெரிய சதுரத் தூண்கள். அந்தத் தூண்களும் கூரையும் சந்திக்கிற இடத்துல கருகருன்னு நாகப்பாம்புக தொங்கீட்டிருந்துச்சு. பொம்மப் பாம்புகதான். ஆனா மரத்துல செஞ்சி நல்லா பாலீஷ் போட்ட மாதிரி பளபளன்னு இருந்துச்சு.



அங்க ரெண்டு பெரிய வட்டமான பாத்திரத்துல தண்ணிய நெரப்பி அதுல ஒரு அக்கா செந்தாமரைப் பூக்கள லேசா விரிச்சாப்புல விரிச்சி வெச்சுக்கிட்டிருந்தாங்க. பாக்கவே ரொம்ப அழகா இருந்தது. பக்கத்துல இன்னொரு பொண்ணு அதே வேலைய ஆனா இன்னொரு சட்டில செஞ்சிக்கிட்டிருந்தாங்க. செக்கச் செவேல்னு ரொம்ப அழகா இருந்தது தாமரப் பூக்கள். அத அப்படியே கேமராவுல அப்பீட்டோம்.

வரவேற்புப் பகுதி ரொம்ப நல்லா அமைஞ்சிருந்தது. செடி கொடிகள் வெச்சி...ஓலைக் கூரை போட்ட அழகான கலையம்சமா இருந்துச்சு. அங்கேயே சாப்பிடவும் சின்னதா ஒரு கடை இருந்துச்சு. பன், கேக், ஊறுகாய் வகைகள் இருந்துச்சு. தகவல் புத்தகங்களும் நிறைய இருந்துச்சு. நாங்கள்ளாம் காலைக் கழுவிக்கிட்டு பக்கத்துல இருக்குற கோயில் பகுதிக்குப் போனோம். அதுக்கு முன்னாடி அங்க ஒரு பலகைல செல்போன்களை இங்கே ஒப்படைக்கவும்னு எழுதியிருந்துச்சு. நான் கண்டுக்கலை. என் கூட வந்தவங்களுந்தான்.

கோயில் பகுதியில் நுழைவுல ஒரு பெரிய கல்மரம். (கொடிமரம் போல). அதுல அனைத்து மதச் சின்னங்களும் இருந்துச்சு. இந்தப் பக்கமா ஒரு பெரிய வரைபடம். அதாவது ஈஷாவின் முழுப்பரப்பும் வரைபடமா வழிகளோடு இருந்தது வர்ர போறவங்களுக்குப் பயனாயிருந்தது. நாங்க அதப் பெருசாக் கண்டுக்காம நேரா கோயிலுக்குள்ள போனோம்.

ரெண்டு பக்கமும் சொவத்துல கல்லுல நல்ல கதைகளைச் செதுக்கி வெச்சிருந்தாங்க. கர்நாடகத்துல அக்கம்மாதேவீன்னு ஒரு சிவபக்தை. அவங்கள அவமானப் படுத்த நினைக்கிறான் அரசன். அவைக்கு வரச்சொல்லி அத இதச் சொல்லி துணியெல்லாம் உருவச் சொல்றான். துணி உருவத் தொடங்குன அந்த நொடியிலேயே தன்னுடைய உணர்வுகள் முழுவதும் மொத்தமா எடுத்து இறைவன் மேல வெச்சிர்ராங்க. அதுனால அவங்க துணிய எடுத்ததும் எடுக்காததும் அந்தம்மாவுக்கு ஒன்னுதான். குழந்தை துணியில்லாம இருந்தாலும் துணியோட இருந்தாலும் ஒன்னும் விகல்ப்பமா நெனைக்காதில்லையா. அந்த மாதிரி உள்ளம் வந்திருச்சு அவங்களுக்கு. அதுக்குப் பெறகு அவங்க செஞ்சதெல்லாம் இறையருளால நன்மைகள்தான். அவங்க புகழும் பரவுச்சு. அந்த அம்மாவோட கதையையும் அங்க படமா வெச்சிருந்தாங்க. பூசலார் கதையும் இருந்துச்சு.

அதப் பாத்துக்கிட்டே உள்ள போனோம். வட்ட வடிமான பெரிய அறை. அரைக்கோளத்த எடுத்து அதுக்குக் கூரையா வெச்ச மாதிரி அமைப்பு. அந்த வட்ட அறையின் நடுவுல பெரிய சிவலிங்கம். அதைச் சுற்றிக் கொண்டு ஒரு பாம்பு. ரொம்பவே நேர்த்தியா இருந்தது. அதோட தலைக்கு மேல உச்சீல வெளிய இருக்குற வெளிச்சம் உள்ள வர்ர மாதிரி ஆனா மழைத்தண்ணீ உள்ள வராத மாதிரியான தெறப்பு. இந்தச் சிவலிங்கத்துக்கு முன்னாடி அழகான அமைப்புல அடுக்கி வெச்ச பூக்களும் பூஜைப் பொருட்களும்.

வட்டமான அறைன்னு சொன்னென்லயா...அதோட சுத்துச் சொவர்ல குழிகுழியா இருந்துச்சு. அதுக்குள்ள உக்காந்து அமைதியா தியானம் செய்யலாம். ஒரு சத்தம் கிடையாது. நெறையப் பேரு குழிக்குள்ளயும் குழிக்கு வெளியவும் அமைதியா உக்காந்திருந்தாங்க. நானும் ஒரு குழிக்குள்ள உக்காந்து கண்ண மூடிக்கிட்டேன். அமைதியா இருக்குறதும் எவ்வளவு ஆனந்தம். அந்த அமைதிய ரசிச்சிக்கிட்டேயிருந்தபதான் எனக்கு ஒன்னு தோணிச்சு. என்னோட செல்போன கையோட கொண்டு வந்துட்டேனே....ஒருவேள அதுல யாராவது கூப்புட்டாலோ அல்லது மெசேஜ் வந்தாலோ என்னாகும்! அந்த அமைதியான அறை முழுக்க எதிரொலிக்குமில்லையா....அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். வர்ர வழியில திருநீறு குங்குமம் வெச்சிருந்தாங்க. நம்மளே தொட்டு வெச்சிக்கலாம்.

நா வெளிய வர்ரதப் பாத்துட்டு கூட வந்த எல்லாரும் வெளிய வந்துட்டாங்க. ரொம்பவே அமைதியான சூழல். அப்படியே வெளிய வந்து வரவேற்புப் பகுதிக்குத் திரும்ப வந்தோம். பசிவேளையில்லையா....அதான் ஏதாவது சாப்பிடலாம்னு. ஆனா எங்க நேரம் அங்க கேக்கு பன்னு வகையறாக்களும் லஸ்ஸியும் இருந்துச்சு. வழக்கமா இருக்குற தயிர்ச்சோறு கூட அன்னைக்கு இல்ல. ஆனா பாருங்க அங்க ஒரு அட்டைல கம்பங்கூழ் கிடைக்கும்னு எழுதித் தொங்க விட்டிருந்தாங்க.

ஒடனே நமக்குள்ள இருந்த பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க. மத்தவங்க எல்லாம் லஸ்ஸி ஜூசுன்னு கொண்டாடுனப்போ நா கம்மங்கூழ்னு கேட்டேன். கூட மாங்க ஊறுகாயோட கெடச்சது கம்மங்கூழு...அடடா! உண்மையிலே சொகமோ சொகம். ஒரு வாய்க் கூழு. ஒரு தொட்டு ஊறுகா. குடிச்சப்புறம் ஒரு நெறைவு.

அப்புறம் அங்கயிருந்து பொறப்பட்டு திரும்பவும் கோவைக் குற்றாலம் போனோம். அதுக்குள்ள நான் கோயில்பட்டீல என்னோட சொந்தக்காரங்களுக்கு ஃபோன் போட்டு அடுத்த நாள் காலைல நாங்க வர்ரோம்னு சொல்லீட்டேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜ்ல ரூம் போடச் சொல்லீட்டேன். இப்பக் கோயில்பட்டிக்குப் போறதுக்கு டிக்கெட் எடுக்கனுமே.....அதுக்கு நம்ம கூட வந்த நண்பரே உதவி செஞ்சாரு. அவரு ஆஃபீஸ் பையனுக்குப் ஃபோன் போட்டு விவேகம் டிராவல்ஸ்ல எல்லாருக்கும் டிக்கெட் வாங்கி வெக்கச் சொல்லீட்டாரு. உதவி எப்படியெல்லாம் வருது பாருங்க!

இப்பப் போனப்ப கோவைக் குற்றாலத்துக்குள்ள ஆளுங்கள விட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுனால நாங்க ஜம்முன்னு உள்ள போனோம்.

தொடரும்..............

Monday, April 10, 2006

நான் இந்து மதத்திற்கு எதிரியா?

சென்ற பதிவில் நான் தொடரும் போடவில்லை. காரணம் இந்தப் பதிவு. நான் எழுதியதை நம்பிக்கை வைத்துப் படித்த அனைத்து நண்பர்களுக்கும் முதற்கண் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து வெளிப்படையாக உரிமையோடு உங்கள் பின்னூட்டங்களை இட்டதிற்கும் நன்றி. உண்மையில் இரண்டாவதிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லாம் என்று கொண்டிருக்கும் நம்பிக்கை. மிகமிக நன்றி. சரி. விஷயத்திற்கு வருவோம்.

ஒரு இந்து என்று என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் நான் இந்து மதத்திற்கு எதிரியா? இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முன் இந்து மதம் என்றால் என்னவென்று நான் கொண்டிருக்கும் கருத்தினை விளக்கியே ஆக வேண்டும்.

இந்து மதம் என்று இன்றைக்கு வழங்கப்படுவது பல மதங்களின் கூட்டமைவு. பல பண்பாடுகளின் கூட்டணி. கலாச்சாரங்கள் கலந்த நிலை. இன்றைக்கு ஒவ்வொன்றிற்கும் தொடர்பு சொல்லப்பட்டு எல்லாம் ஒன்று போலக் காட்சி தந்தாலும் அதன் தனித்துவங்கள் அங்கங்கு வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவில் தங்கமணி அவர்கள் அழிக்கப்படும் பன்முகத்தன்மை என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டிருந்தார். அவர் இந்தியாவை மட்டும் குறிப்பிடாமல் உலகளாவிய வகையில் நடக்கும் இந்தப் பன்முக அழிப்பைக் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் நடக்கும் இந்த ஒற்றுமைப் படுத்துதல் என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் பல குழுக்களின் இனங்களின் பண்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் ஆடு கோழி பலியிடத் தடைச்சட்டம் வந்த பொழுது என்னுடைய வங்காள நண்பனுடன் அதைப் பற்றி உரையாடினேன். வங்காளத்தில் பிராமணர்கள் கடல் பூ என்று சொல்லிக் கொண்டு மீனைச் சாப்பிடுகிறார்கள் என்று எல்லாரும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பன் அதைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லையாம். ஏனென்றால் அங்கு சைவ உணவுப் பழக்கம் என்பதே பெரும்பாலும் அறியப் படாதது. கடல் பூ என்று சமாதானம் சொல்லிச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அந்த நண்பன் சட்டோபாத்யாய் என்ற வகுப்பைச் சார்ந்தவன். அதாவது பிராமண வகுப்பு. ஆனால் அவர்கள் வீட்டில் அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். நானும் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ருசித்து ரசித்திருக்கிறேன்.

அவனிடத்தில் அந்தத் தடைச் சட்டத்தைப் பற்றிச் சொன்னதும் அது சரியே என்று சொன்னான். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை நேரடியாகச் சொன்ன பொழுது அவன் சொன்ன காரணம் என்னைத் திகைக்க வைத்தது. அவனுடைய கருத்துப் படி பலர் வந்து போகும் இடத்தில் இப்படி கோழிகளையும் ஆடுகளையும் வெட்டினால் அது நன்றாகவா இருக்கும். அங்கு வரும் குழந்தைகளின் நிலையையும் பலவீனமான இதயமுள்ளவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டுமாம். வேண்டுமென்றால் ஒரு அறைக்குள் வெட்டிக் கொள்ளட்டுமே என்பது அவனது கருத்து. அவன் கூற்றை ஏற்றுக் கொண்ட நான் அவனிடம் சொன்னேன். "இதோ பாரப்பா ஆடு-கோழி வெட்டுகின்ற கோயில்களுக்குப் போகின்றவர்களுக்கு அங்கு ஆடும் கோழியும் வெட்டுவார்கள் என்று நன்றாகத் தெரியும். அவைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குலத்தாரால் வழங்கப்படும் திருக்கோயில்கள். அதை எப்படித் தடை செய்ய முடியும்? எல்லாரும் போகின்ற பெரிய கோயில்களில் அப்படி யாரும் செய்வதில்லை. அப்படியிருக்க இந்தத் தடைச்சட்டம் சரிதானா?"
அவனும் நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டான்.

இதுவும் ஒருவகை பன்முக அழிப்புதான். ஆனால் இந்தத் தடைச்சட்டத்தின் மூலமாக மட்டுமே பன்முக அழிப்பு நேராது. ஒருவேளை இந்தத் தொந்திரவு தாளாமல் மதம் மாறி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் அவர்கள் பண்பாடு மாறும். அவர்கள் புதிதாகப் போகின்ற கோயிலின் வாசலில் போய் கிடா வெட்டப் போவதில்லை. ஆகையால் அந்த வகையான பன்முக அழிப்பையும் நான் ஆதரிக்கப் போவதில்லை.

அப்படியென்றால் என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொருவனும் தன்னைப் பற்றியும் தனது முன்னோர்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்தால் தன்னைக் காத்துக் கொள்ளவும் அறிவான். தன்னை அறிந்துத் தன்னை மதிக்கின்ற அதே வேளையில் அடுத்தவனையும் நிச்சயம் மதிக்க வேண்டும். நாமெல்லாம் தமிழர்கள் என்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்பாட்டு வழக்கங்கள் கொண்டவர்கள். நான் நானாகவே இருக்க நீ நீயாகவே இருக்க நாம் நாமாகவே இருப்போம் என்று எல்லாரும் நினைக்க வேண்டும். அசைவம் சாப்பிட விரும்பினால் சாப்பிடலாம். இல்லையென்றால் விட்டு விடலாம். அசைவம் சாப்பிடுவது எப்படிக் குற்றமாகாதோ அப்படியே சாப்பிடாதும் குற்றமாகாது. அதது அவரவர் விருப்பம்.

இப்படிக் கலப்புகளும் பழக்க வழக்கங்களும் பல கொண்ட இந்து மதத்தின் என்ற பெயர் நிச்சயம் புதிதுதான். வெளியூர்க்காரன் கொடுத்ததுதான். அதனால் என்ன? வெளிநாட்டுப் பணம் கசக்கவா செய்கிறது? இந்தப் பெயரே இருக்கட்டும்.

நிச்சயமாக நாம் வந்த வழியில் இரத்தச் சுவடுகளும் சமூக அவலங்களும் இருக்கின்றன. அந்த உண்மையை ஏற்றுக் கொள்வோம். இறந்த காலத்து உண்மையை வருங்காலத்துப் பொய்யாக்குவோம். நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் உறவோடு இனிமையோடு வாழ்வோம். பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் எனக் கொள்வோம். அடுத்தவரை மதித்து வாழ்வோம். அதில் தவறினால் வீழ்ச்சிதான்.

இன்றைய இந்து மதத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. எங்குதான் இல்லை? எங்களிடம் இல்லை என்று சொல்கின்றவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் எனக்குத் தெரிந்த வரையில் உலகம் முழுவதும் பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் நாம் நமது பிரச்சனைகளைக் களைவதற்கு வழி காண்போம். அடுத்தவனைச் சொல்லாமல் நமது பிரச்சனைகளை மட்டும் சொல்கிறேனே என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு செய்தி. ஏதோ ஒரு வீட்டில் கொலையே விழுந்தாலும் பதறாத நாம் நமது வீட்டில் நூறு ரூபாய் களவு போனால் பதறுகிறோம் அல்லவா.

அதே நேரத்தில் மதம் எந்த அளவிற்கு அரசியலில் விலை போகிறதோ அந்த அளவிற்கு விலை போகும் இன்னுமிரண்டு சரக்குகள் மொழியும் இனமும். நமது மொழியும் இனமும் பெரிதுதான். யார் இல்லையென்றார்? ஆனால் அதை மேம்படுத்துவதற்கு நிச்சயமாக நேர்மையான வழிமுறையை நாட வேண்டும். குறுகிய காலப் பலனை விட நீண்ட காலப் பலனை நாடுங்கள். அதுவும் நற்பலனை. ஆகையால் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளை நம்புவதை விட தமிழறிஞர்களை நம்பலாம். தங்கள் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள் வங்காளிகளும் மலையாளிகளும். ஆனால் அவர்கள் மொழியை வளர்க்க அரசியல்வாதிகளை நம்புவதில்லை. பொறுப்பை அவர்கள் ஊர் எழுத்தர்களும் அறிஞர்களும் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சரி. நாம் இந்து மதத்திற்கு வருவோம். பல நம்பிக்கைகள் இருக்கும் இந்து மதத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அந்த ஒவ்வொரு நம்பிக்கையும் நான் மதிக்கவே விரும்புகிறேன். ஒன்றைத் தாழ்த்தி இன்னொன்றை உயர்வு செய்ய முடியாது. அதது அவரவர் வழி. வேதத்தின் வழியில் வாழ்வோம் என்று சொல்கின்றவர்களுக்கு அந்த உரிமை நிச்சயம் உண்டு. இல்லை.....தமிழ் மொழியில் இல்லாத செல்வமா என்று அதன் வழியில் வாழ விரும்புகின்றவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. சாமியாவது பூதமாவது என்று வாழ்வதற்கும் உரிமையுண்டு. ஆனால்.....எப்படி வாழ்ந்தாலும் அடுத்தவரையும் மதித்து வாழ வேண்டும். அப்படி வாழத பொழுது எப்படி வாழ்ந்தாலும் பயனில்லை. உலகம் அன்பு மயமானது. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தான். அன்பே சிவம். அதைத்தான் நான் கற்ற தமிழ் நூல்கள் கூறியுள்ளன. ஆகையால்தான் முடிந்த வரை எனக்குத் தெரிந்தவைகளை நான் சொல்கிறேன்.

கந்தனைத் தொழும் எனது உள்ளம் கண்ணனையும் கொண்டாடத்தான் செய்கிறது. வாடிகன் சிட்டியில் ஏசுவை மடியில் ஏந்திய அன்னை மேரியைக் கண்டதும் உள்ளம் உருகுகிறது. குரானும் சைவ சித்தாந்ததும் ஒத்துப் போகும் சில விஷயங்களில் ஈடுபாடு உண்டாகிறது. அப்படியிருக்கையில் நான் எப்படி எந்தக் குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரியாக முடியும்? ஆத்திகத்தை ஆதரிக்கும் நான் நாத்திகத்திற்கும் எதிரி இல்லை.

ஒரு இந்து என்கிறவன் இன்றைய கணக்குப் படி இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு பண்பாட்டைப் பின்பற்றுகின்றவன். தனது தாய்மொழி எதுவோ அதைக் காதலிக்கின்றவன். அதே நேரத்தில் மற்ற மொழிகளை மதிக்கின்றவன். சாதி மத வேறுபாடுகள் பார்க்காதவன். தனது கருத்துகளை நாகரீகமாக எடுத்து வைக்கத் தெரிந்தவன். குறைந்த பட்சம் முயல்கின்றவன். ஆண்-பெண் சரி நிகர் சமானம் பேணுகின்றவன். பிரச்சனைகளை ஆக்கபூர்வமாகத் தீர்க்க வேண்டும் என்று விரும்புகின்றவன். இது போக எந்தத் தெய்வத்தையும் எந்த வகையிலும் எந்த மொழியிலும் வணங்கிக் கொண்டு எந்த உணவையும் உண்டு கொள்ளட்டும். இதுதான் நான் விரும்பும் இந்து மதம். இந்த நல்ல நிலை நோக்கித்தான் எனது பயணம். என்னோடு கை கோர்த்து வருவீர்களா? இதற்கு மேலும் நான் இந்தப் பதிவின் தலைப்பில் எழுதிய கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமா?

கடைசியாக சொல்ல விரும்புவது....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்க் கவர்ந்தற்று

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, April 09, 2006

நான் இந்துவா?

இப்பொழுது தமிழ்மணத்தில் பிரபலமாக இருக்கும் சர்ச்சை இதுதான். இந்தக் கேள்வியை யாருக்கும் சொல்வதற்காக கேட்கவில்லையானாலும் நான் எனக்காகக் கேட்டுக் கொண்டேன். அப்படிக் கேட்டு எனக்குத் தோன்றியதை ஒரு பதிப்பாகப் போடுகிறேன்.

என்னைப் பொருத்த வரை என்பது இந்து என்றே என்னுடைய சான்றிதழ்கள் சொல்கின்றன. ஆனால் அந்தச் சொல்லுக்கு நான் கொண்டுள்ள பொருள் என்ன?

இந்து மதம் என்று நான் சொல்வது பல மதங்களின் பல பண்பாடுகளின் பல பழக்கவழக்கங்களின் கூட்டே. அந்த வகையில் அந்தப் பெயரை எனது அடையாளத்திற்காக பயன்படுத்துகிறேன்.

நான் இந்து என்பதால் என்னை யாரும் வேதத்தையும் கீதையும் அல்லது வேறெந்த நூலையும் மதிக்க வேண்டும் என்று கட்டாயத்திற்கு நான் கட்டுப் பட மாட்டேன். கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு. அந்தத் தேடலைத் தமிழைக் கொண்டே நான் துவக்கினேன். தமிழ் நூல்கள்தான் எனக்கு வழிகாட்டி. அந்த நூல்களைப் படித்து அவற்றில் எனக்குப் பிடித்த வகையில்தான் நான் வழிபடுகிறேன். இறைவனை நம்புகிறேன்.

நான் இந்து என்று சொல்லிக் கொள்வதால் எக்குறிப்பிட்ட வேதங்களையும் எக்குறிப்பிட்ட இனத்தாரையும் மதித்து நடக்க வேண்டும் என்று என்னை யாருக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் என்னுடைய மதம் என்பது கீரனாரும் அருணகிரியாரும் அப்பரும் சம்பந்தரும் புனிதவதியாரும் வள்ளுவரும் வாழ்ந்து காட்டிய வழி. யாருக்கும் யாரும் அடிமையில்லை. எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் ஓர் நிறை.

நான் மதம் மாற வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் நான் எந்த வழியில் போனாலும் போகுமிடம் ஒன்றுதான் என்று நம்புகிறவன். முன்பே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். சிலர் அரிசையைப் பொங்கித் தின்கிறார்கள். சிலர் இட்டிலியாக்கியும் சிலர் தோசையாக்கியும் சிலர் புட்டு சுட்டும் உண்கிறார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் தின்கிறேன். நான் இப்பிடித்தான் தின்ன வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஆகையால் இறைவனை அடையவும் நல்வழி பெறவும் நான் மதம் மாறத் தேவையில்லை. ஈஷ்வரு அல்லா தேரே நாம்.

ஆகையால்தான் The Passion என்ற திரைப்படத்தைப் பார்த்து அதில் ஏசுவைக் காட்டியிருக்கும் விதத்தைப் பார்த்து அந்த இயக்குனர் மேல் ஆத்திரம் வருகிறது. என்னுடைய வழியில் போனால்தான் இறைவனை நீ அடைய முடியும் என்று சொல்கிறவரைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது. இறைவனை என்னால்தான் அடைய முடியும் என்று சொல்கிறவர்கள் நகைச்சுவையாளர்களாகத் தெரிகின்றனர். தானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் கடவுள்-மனிதர்கள் கோமாளிகளாகத் தெரிகின்றார்கள்.

கோயிலுக்குப் போவேனா? போவேன். கோயிலுக்குப் போகத்தான் வேண்டுமா என்றால் எனது விடை இல்லை என்பதே. ஆனாலும் போவது பலர் கூடும் இடத்தில் இறைவனை நினைப்பதற்கே. திருநீறு இட்டுக் கொள்வேன். குங்குமமும் இட்டுக் கொள்வேன். என்னுடைய முகத்திற்கு அது கொடுக்கும் பொலிவை உணர்கிறேன் நான்.

அசைவம் உண்பேனா? உண்பேன். கோயிலுக்குப் போகும் முன்னும் உண்டிருக்கிறேன். பின்னும் உண்டிருக்கிறேன். கிடா வெட்டப்படும் கோயில்களிலும் உண்டிருக்கிறேன். அசைவம் என்பது உணவுப் பழக்கம். அதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறவன் நான். வள்ளுவரோடு நான் வேறுபடுவது இங்கு மட்டுந்தான்.

சிலை வணக்கம் என்பது.....அடக்கடவுளே....நான் சிலையையா வணங்குகிறேன்! எங்கும் நிறைந்த இறைவன் அந்தச் சிலையில் இல்லாமல் போவானா? புல்லினும் பூண்டிலும் அனைத்திலும் இருப்பவனை எப்படியெல்லாம் உணர்ந்து வழிபட முடியுமோ அப்படியெல்லாம் வழிபடலாம். வழிபடாமலும் இருக்கலாம். ஏனென்றால் சும்மா இரு என்பதைப் போன்ற சிறந்த அறிவுரை எதுவுமில்லை.

தமிழ். தமிழ். அதுதான் எனக்கு ஆன்மிக உணர்வைத் தந்து விளக்காக என்றும் சுடர் விட்டு எரிந்து ஒளி காட்டுவது. அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் வழிபாடு செய்கிறேன். அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் இறைவன் திருவடியை அடியும் வகை கொண்டேன். இதற்கெல்லாம் தடை சொல்வார் யாராயினும் மதியேன்.

அனைவரும் எனது சகோதரர்களே. உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். என்னுடைய நம்பிக்கையை நீங்கள் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மதத்தால் மொழியால் இனத்தால் அல்லது வேறு ஏதேனும் வழியில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்வதை ஏற்கிலேன். இதுதான் எனது வழி. இதுதான் என்னுடைய சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் இந்து சொல்லுக்கு நான் கொண்டிருக்கும் பொருள். இதற்கு மற்றவர்கள் கொண்ட பொருள் எதுவாயினும் எனக்குக் கவலையில்லை. இந்தச் சொல் எந்த வழியில் தோன்றியது என்றாலும் எனக்குக் கவலையில்லை. இந்து என்பதற்குப் பதிலானத் தமிழ் மதம் என்றும் சொல்லிக் கொள்ளலாம். அத்தோடு இந்து என்ற இந்தச் சொல்லோ கிருஸ்துவன், புத்தன், முஸ்லீம் என்ற வேறு எந்தச் சொல்லுமோ என்னைக் கட்டுப் படுத்த முடியாது. கட்டுப் படுத்தவும் விட மாட்டேன். உங்கள் வழி உங்களுக்கு. எனது வழி எனக்கு.

இவ்வளவுதானா என்று என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைய கொள்கைகள் உள்ளன. இப்பொழுதைக்குத் தோன்றியவை இவ்வளவுதான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, April 06, 2006

3. படிப்படியா மலையிலேறி

ஆனையால பிரச்சனைன்னு சொன்னேல்ல....அது என்னன்னு இப்பச் சொல்றேன்.

கோவைக் குற்றாலங்குறது கோயமுத்தூருக்குப் பக்கத்துல இருக்கக் கூடிய காட்டருவி. கொஞ்சம் மலைக்காட்டுக்குள்ள போயி அருவீல குளிக்கனும். அதுக்குக் கோவைலருந்து பஸ்சும் போகுது. ஆனாலும் வண்டி வெச்சுக்கிட்டு போறது நல்லது. வழியில நல்ல இயற்கைக் காட்சிகள் உண்டு. அழகான பச்சை மலைகள். மலைக்குக் கீழ பச்சை வயல்கள். ரொம்ப நல்லாருந்தது பாக்க.

நாங்க பேரூர் கோயில முடிச்சிக்கிட்டு நேரா கோவைக் குற்றாலத்துக்குப் போனோம். வழியில காருண்யா காலேஜ் நல்லா எடத்த வளைச்சுப் போட்டுக் கட்டீருக்காங்க. அங்கயே ஜெபக் கூடம் எல்லாம் இருக்கு. நாங்க அதெல்லாம் கண்டுக்காம இயற்கை அழக ரசிச்சிக்கிட்டே மலையடிவாரத்துக்குப் போய்ச் சேந்தோம்.

எங்களுக்கு முன்னாடியே ஒரு பஸ்சும் சில வேன்களும் நின்னுக்கிட்டு இருந்திச்சு. ஆனா யாரையும் உள்ள விடல. ஒரு தூக்குத் தூக்கி கதவு (சினிமா செக் போஸ்ட்டுல பாத்திருப்பீங்களே) கீழ இறக்கியிருந்தது. சரீன்னு வண்டிய விட்டு எறங்கி கொறிக்கிறதுக்கும் குடிக்கிறதுக்கும் (பச்சத் தண்ணிதாங்க) வாங்கிக் கிட்டோம்.

நெறைய முன்னோர்கள் இருந்தாங்க. என்ன துறுதுறுப்பு. என்ன சுறுசுறுப்பு.அவங்கள வெரட்டிக்கிட்டு கடைக்காரங்க நல்ல வியாபாரம் பண்ணீட்டிருந்தாங்க. நாங்க நேரா டிக்கெட் கவுண்டருக்குப் போய் விசாரிச்சோம். அப்பத்தான் அந்த ஆனைப் பிரச்சனை தெரிஞ்சது.

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஆனை உள்ள வந்து ஒரு சின்னப் பிள்ளைய கீழ தள்ளி விட்டுருச்சாம். அப்புறம் எங்கயோ உள்ள ஓடிப் போயிருச்சு போல. அதே போல இன்னைக்குப் பன்னெண்டு ஆனைக உள்ள வந்துருச்சாம். அதுல பிரச்சனையில்லை. ஒத்த ஆனையா இருந்தாத்தான் பிரச்சனை. கூட்டமா வந்தாக் கூட்டமா அமைதியாப் போயிருமாம். ஆனா பாருங்க...இந்தப் பன்னெண்டுல ஒன்னு மட்டும் வழிமாறிப் போயிருச்சாம். அத தெச திருப்பிக் காட்டுக்குள்ள வெரட்ட ஆளுங்க போயிருக்கிறதால யாரையும் உள்ள விட மாட்டாங்களாம்.

எப்ப உள்ள விடுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாததால....அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சோம். நண்பனோட அண்ணந்தான் பூண்டியையும் ஈஷா தியான மண்டபத்தையும் மொதல்ல பாத்துட்டா சாப்பாட்டுக்கு அப்புறமா திரும்ப வந்து பாப்போம்னு சொன்னாரு. சரீன்னு வண்டிய பூண்டியப் பாத்துத் திருப்புனோம்.

போற வழியிலேயே ஒரு பக்கமாத் திரும்புனா ஈஷா தியான மண்டபம் வரும். ஆனா நாங்க நேரா பூண்டிக்குப் போனோம். நல்ல வெயில். புளியமரங்க நெறைய இருந்திச்சு. அந்த எலைகளும் சில புளியம் பிஞ்சுகளும் ரொம்பக் காஞ்சதுகளும் அங்கங்க கெடந்தது. அதையெல்லாம் கண்டும் காணாம நேரா கோயிலுக்குள்ள போனோம். நடுவுல சிவன். இந்தப் பக்கம் அம்மன். அந்தப் பக்கம் பிள்ளையாரு. இங்க ஐயருங்க பூஜை கெடையாது. கவுண்டர்கள்தான். நிர்வாகமும் அவங்க கிட்டதான் இருக்குது. இங்க மட்டும் இல்லாம பொதுக்கோயில்கள்ளயும் இது போல எல்லாச் சமூகத்தாரும் பாகுபாடு இல்லாம பூஜை செய்ற நெலம வரனும். (இது பத்தி இன்னொரு பதிவு போடனும். அதுனால இங்க நிப்பாட்டிக்கிரலாம்.)

அங்க சாமியக் கும்புட்டுட்டு திரும்பிப் பாத்தா நெறையப் பேரு கைல மூங்கில் கழியோட நிக்குறாங்க. வயசானவங்க இல்ல. இளவட்டங்களும் நல்லா கெதியா இருக்குறவங்களும் கூட கழியோட இருந்தாங்க. என்னன்னு கேட்டா மலையக் காட்டுனாங்க. செங்குத்தா கற்படிகள் போகுது. அதுல நாலு மணி நேரம் படிப்படியா மலையிலேறிப் போனா அங்க ஒரு குகைக்கோயில் இருக்காம். அதுக்குள்ள ஒரு சிவலிங்கமும் இருக்காம். பெரும்பாலும் ராத்திரி மலையேறி விடியக்காலைல சாமியப் பாத்துட்டு காலைலயே கெளம்பி மதிய வேளைக்கு கீழ வந்துருவாங்களாம்.

நாங்க போனது மதியங்கறதுனால கீழ எறங்குறவங்களத்தாம் பாத்தோம். மொத்தம் ஏழுமலையத் தாண்டிப் போகனுமாம். அந்தக் குகைல ஒரு ஓட்டை இருக்காம். அதுல தேங்காய உருட்டி விட்டா நேரா மலையடிவாரத்துக்கு வந்துருமாம். நாங்க மேல போகலையா அதுனால தேங்காய உருட்டி விடலை.

வந்தது வந்துட்டோமேன்னு கொஞ்ச தூரம் ஏறுனோம். செங்குத்தா இருக்குறதால மூச்சு வாங்குச்சு. கம்பில்லாம ரொம்ப ஏற முடியாதுன்னு தெரிஞ்சது. சரீன்னு ஒவ்வொருத்தரா கீழ எறங்கினோம். இப்போ இன்னமும் கஷ்டமா இருந்தது. நிதானமா எறங்குனோம். வழியில ஒரு பக்கத்துல சின்ன ஒத்தையடிப் பாத மாதிரி தெரிஞ்சது. அப்பிடியே அதுல உள்ள போனேன். ஒரு பயலும் கூட வரல. உள்ள போனா அங்க ஒரு சின்ன ஓட்ட. சின்ன குகை வாசல் மாதிரி இருந்தது. குனிஞ்சி உள்ள எட்டிப் பாத்தேன். உள்ள பத்துப் பன்னிரண்டு பேரு நிக்கவும் உக்காரவும் வசதியுள்ள ஒரு குகை. அதுல என்ன இருக்குங்குறீங்க? ஒரு சிவலிங்கம்.

குகைக்குள்ள நேரா நுழைய முடியாது. தரையோட தரையா குனிஞ்சி போகனும். சட்டைய அழுக்காக்க வேண்டாம்னு உள்ள போகல. அதுக்குள்ள நண்பர்கள் ரெண்டு பேரும் என்னமோன்னு வந்துட்டாங்க. அவங்களும் குனிஞ்சி குகையப் பாத்துக்கிட்டாங்க. ஒரு நண்பனோட ஃபிலிம் கேமராவுல கொஞ்ச ஃபோட்டோக்கள் எடுத்துக்கிட்டோம்.

கீழ எறங்கி அங்க இருந்த கொழாயில கையக் காலக் கழுவிக்கிட்டு வண்டீல ஏறி நேரா ஈஷா தியான லிங்கத்துக்குப் போனோம். போற வழியில ரெண்டு பக்கமும் மரங்கள் ரொம்ப அழகா இருந்தது. எறங்கி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். ரெண்டு பக்கமும் மரங்கள் இருந்த அந்த வழியில கடைசீல இருந்தது ஈஷா தியான மண்டபம்.

தொடரும்...

Sunday, April 02, 2006

2. ஆனைய உரிச்சு..............

புதுசா ஒரு ஐடியா வந்ததுன்னு போன பதிவுல சொன்னேன். அத ஒடனே பெஞ்சமினுக்கும் ஃபோன் போட்டுச் சொன்னேன். அவரும் அது நல்ல திட்டமுன்னு ஒத்துக்கிட்டாரு. அதை நண்பர்களும் முழு மனசோட ஒத்துகிட்டாங்க. நானும் எல்லாரையும் தூங்கப் போகச் சொல்லீட்டு செல்போன்ல காலைல அஞ்சர மணிக்கு அலாரம் வெச்சேன்.

புதுத்திட்டம் என்னன்னா கோயமுத்தூர்ல எறங்கிக்கிறது. காலைல ஆறு மணிக்குப் போய்ச் சேரும். சேந்ததும் குளிச்சிட்டு செஞ்சிட்டு வண்டியப் பிடிச்சி சுத்திப் பாக்கலாம்னு திட்டம். பாத்துட்டு ராத்திரி புறப்பட்டு மதுரைக்கோ இல்லைன்னா நேரடியா கோயில்பட்டிக்கோ போயிர்ரது. அப்புறம் வழக்கம் போல கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலி, திருச்செந்தூர்னு போயிரலாம்னு சொன்னேன். நாகர்கோயில் இல்லைன்னாலும் கோயமுத்தூர் வந்ததுல எல்லாரும் ஒரு திருப்திதான்னு வெச்சுக்கோங்களேன்.

அதுல பாருங்க ஒரு நண்பனோட சொந்தக்காரங்க கோயமுத்தூர்ல இருக்காங்களாம். அதுனால அவங்ககிட்ட எங்கெங்க போறதுன்னு கேட்டுக்கிற முடிவு செஞ்சோம். அஞ்சரைக்கு அலாரம் வெச்சேனே ஒழிய தூக்கம் ஒழுங்கா பிடிக்கலை. தொடக்கமே இப்பிடி இருக்கே முழுக்க எப்படி இருக்குமோன்னு கொஞ்சம் கலக்கம். அப்பனே முருகா...எது எப்படியோ திருச்செந்தூர்ல மொட்ட போடனும்னு வேண்டிக்கிட்டேன். அரமணிக்கு ஒரு வாட்டி எந்திரிச்சி மணி பாத்தேன். ஈரோடு வந்ததுக்கு அப்புறம் தூக்கம் வரல. எந்திரிச்சி உக்காந்துகிட்டு வெளிய பாத்துக்கிட்டிருந்தேன்.

அப்பதான் தெரிஞ்சது இன்னும் ரெண்டு பேரு தூக்கமில்லாம இருந்தது. ரெண்டு பேரும் பெர்த்துல இருந்து இறங்கி வந்து கூட உக்காந்துகிட்டாங்க. அவங்களுக்கு எனக்குத் தெரிஞ்ச இடங்களையும் வழிகளையும் பத்திச் சொன்னேன். பேசிக்கிட்டேயிருக்கிறப்ப கோயமுத்தூர் வந்திருச்சி. படபடன்னு எறங்கி ஸ்டேஷன விட்டு வெளிய வந்தோம். பக்கத்துலயே ஒரு லாட்ஜ்ல ரெண்டு ரூம் போட்டோம். யாருக்கும் தூக்கமும் இல்லை. நண்பன் அவனோட சொந்தக்காரங்க வீட்டுக்குப் போன் போட்டு சுத்திப் பாக்க வெவரம் கேட்டான். தகவல்கள் கொஞ்சம் வந்தது.

சரி. குளிச்சிட்டு காம்ளிமெண்ட்ரி பிரேக்பாஸ்ட்ட கட்டு கட்டீட்டு குவாலிஸ் புக் பண்ணலாம்னு நெனச்சோம். ஆனா அதுக்கு அவசியம் வெக்காம நண்பனோட அக்காவே ஒரு வண்டியை ஏற்பாடு பண்ணி அவங்க அண்ணனையும் கூட அனுப்பி வெச்சாங்க. வாழ்க வளமுடன்.

அதுக்குள்ள எல்லாரும் குளிச்சி தயாரா இருந்தாங்க. அவங்கள சாப்பிடக் கூட்டீட்டுப் போனேன். பொங்கலும் இட்டிலும் தேங்காய்ச் சட்டினி, தக்காளிச் சட்டினி சாம்பாரோட பரிமாறுனாங்க. நல்லா இருந்தது. அதுக்குள்ள அந்த அண்ணனும் வண்டியோட வந்துட்டாரு. அவரே ஒரு திட்டமும் வெச்சிருந்தாரு. நேரா பேரூர் கோயில். (மொதல்ல பத்மநாபபுரம் அரண்மனைன்னு முடிவு செஞ்சிருந்தோம். ஆனா அது தானா கோயிலாயிருச்சு. அதுதான் ஆண்டவன் விருப்பம் போல.) அப்புறமா கோவைக்குற்றாலம். பெறகு பூண்டி கோயில். (இன்னொரு கோயில்). அப்புறம் ஈஷா தியான மண்டபமாம். (இந்தப் பேரை எங்கயோ கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.). அப்புறம் மருதமலையாம். (என்னடா என்னைக் கடைசியா பாக்க வர்ரியான்னு மொத நாள்ளயே முருகன் முந்திக்கிட்டாரோ என்னவோ!).

சரீன்னு எல்லாரும் வேண்டிய துணிமணிகளையும் தண்ணி பாட்டில்களையும் எடுத்துக்கிட்டு வண்டீல ஏறுனோம். பெங்களூர்க்காரங்களான எங்களுக்கு கோயமுத்துரோட துப்புரவான ரோடுகளும் மிகவும் மென்மையான தூய காத்தும் ரொம்பச் சுகமா இருந்தது. ரசிச்சிக்கிட்டே இருக்கும் போது பேரூர் கோயில் வந்திருச்சி.






வண்டீலயே செருப்ப விட்டுட்டு கீழ எறங்குனோம். கோயில் பழைய கோயில். வழக்கமான கல்கட்டிடம். பேரூர் பட்டீசுவரர் கோயில்னு எழுதீருந்தது. வாசல்லயே ஒரு பெரிய தேரு. வாசல்ல இருந்து நேராப் பாத்தாலே சிவலிங்கம் தெரிஞ்சது. இருட்டு அறைக்குள்ள சிவலிங்கத்துக்குப் பின்னாடி வட்ட வடிவமா சிறுவிளக்குகளை அலங்காரமா வெச்சிருந்தாங்க. அவ்வளவுதான் கருவறை வெளிச்சம். நம்ம குடியிருந்த கருவறைக்குள்ளயும் இருட்டுதான. அதுல இருந்து வெளிச்சத்துக்கு வர்ரதுதான பிறப்பு.

வெள்ளிக்கிழமையானலும் கோயில்ல கூட்டம் குறைச்சலா இருந்தது. வாய் விட்டு நமச்சிவாய வாழ்க செய்யுளைச் சொன்னேன். தீபாராதனை காட்டி மணியடிக்கும் போது கண்கள் மூடின. கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லாம் மறஞ்சு ஒரு பரவசம். சிவசிவான்னு சொல்லித் திருநீறு வாங்கிப் பூசிக்கிட்டு கோயிலைச் சுத்தி வந்தோம். கோயில் முழுக்க சிற்ப அற்புதங்கள். ஒவ்வொன்னயும் விளக்கிச் சொல்ல ஒவ்வொரு பதிவு வேணும். எடுத்துக்காட்டுக்கு ஒன்னு ரெண்டு சொல்றேன்.

கோயில்ல ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு டிசைன். அதாவது ஒரு தூணின் இரண்டு பாகங்களை இணைக்கும் இடைவெளியில் செய்திருக்கும் வேலைப்பாடுகள் ஒரு தூணில் இருப்பது போல மறுதூணில் இல்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை. அடுத்து பேரூர் கோயிலுக்குப் போகின்றவர்கள் சரியாகப் பாருங்கள்.

அதே மாதிரி இன்னும் பல சிற்ப அற்புதங்கள். ஆனையுரிபோர்த்தவர் என்று ஒரு சிலை. எதுக்க வந்த ஆனையைக் கொன்னு அதோட தோலச் சிவபெருமான் போத்திக்கிற காட்சி. இதச் சிற்பமாச் சொல்லனும். எப்படிச் சொல்றது. ஆனையக் குப்புறத்தள்ளி அதோட தலைல ஏறி நின்னுக்கிட்டு வயித்தப் பிடிச்சிக் கிழிச்ச தோலை ரெண்டு கையாலயும் விரிச்சுப் போத்திக்கிட்டா! இப்ப ஆனையோட வாலு சிவனோட தலைக்கு மேல போயிருமில்லயா? கிழிச்ச தோலோட ரெண்டு பக்கத்துலயும் ரெண்ரெண்டு கால்கள் தெரியுமில்லையா? இதக் கற்பனைல நெனச்சுப் பாருங்க. ஆனைத்தலை மேல சிவன். ரெண்டு கையையும் விரிச்சுத் தோலைப் பிடிச்சிருக்காரு. தலை கீழ இருக்கிறதால வாலு மேல இருக்கு. பாத்த கண்ண எடுக்க முடியல. அவ்வளவு அழகான சிற்பம். போர்வ மாதிரி விரிஞ்ச தோல்ல ஒரு மேடு பள்ளம் கெடையாது. அவ்வளவு நேர்த்தி.

அத விட இன்னொன்னு கண்டிப்பாச் சொல்லனும். கூரைல இருக்கிற சிற்ப அலங்காரம். தாமரப் பூ பெரிசா விரிஞ்சிருக்கு. கீழ இருந்து பாத்தா தலைகீழா தெரியும். கிளிகள் அந்தத் தாமரைப் பூவோட இதழ்கள்ள தலைகீழா உக்காந்துக்கிட்டு பூவுக்குள்ள கொத்திக்கிட்டு இருக்குற மாதிரி சிற்பம். ரொம்ப நுணுக்கமா...அழகா...நேர்த்தியா..திறமையா செஞ்சிருக்காங்க. ஆனா பாருங்க...அப்பேற்பட்ட கற்சிற்பத்துல பெயிண்ட் அடிச்சு வெச்சிருக்காங்க. இயற்கை அழகை மறைக்கிறதுல தமிழனை மிஞ்சிக்கிறதுக்கு ஆளில்லை.

இந்தத் தாமரைப் பூவச் சுத்தி பாம்புக படமெடுத்தாப்புல இருக்கு. அந்தப் பாம்புகள்தான் கொக்கிகள். அந்தக் கொக்கிகள்ள இருந்து சங்கிலிக தொங்குது. நாலு பக்கமும் நாலு பாம்புக் கொக்கி. அந்தக் கொக்கிகள்ள கற்சங்கிலி. அந்தச் சங்கிலிகள்ள என்ன சிறப்பு தெரியுமா? ஒவ்வொரு சங்கிலியிலயும் கடைசி ரெண்டு வளையங்கள்ள அந்தச் சிறப்பு இருந்தது. கடைசி வளையம் ஆணைக் குறிக்கும் சின்னம் போல இருந்தது. வட்டத்துல அம்புக்குறி போடுவாங்களே. அந்த மாதிரி. கடைசி ரெண்டு வளையங்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்த மாதிரி தெரிஞ்சது.

இன்னும் நெறைய அழகான சிற்பங்கள். சொல்லச் சொல்ல நேரம் பத்தாது. சிவபெருமானையும் பச்சை நாயகியையும் தண்டாயுதபாணியையும் கும்பிட்டுட்டு வெளிய வந்தோம். ஆளுக்கொரு எளநி குடிச்சிட்டுக் கோவைக் குற்றாலத்துக்குப் பொறப்பட்டோம். போற வழியிலதான் நடிகர் சூர்யாவோட சொந்த ஊரான மாதம்பட்டி இருக்கு. அதத் தாண்டிக் கோவைக் குற்றாலத்து அடிவாரத்துக்குப் போனோம்.

நாங்க போன நேரம்.....யாரையும் உள்ள விடல. அது ஒரு ஆனைப் பிரச்சனை.........

தொடரும்.....

Wednesday, March 29, 2006

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

"சரி. சரி. அவரு ஸ்டேசனுக்கு வந்துருவாரா....அப்பச் சரி.....ஓட்டலுக்கு அவரே கூட்டீட்டுப் போயிருவாரா....சரி. சரி. அப்ப...அங்க போயிட்டு ஒங்களுக்குப் ஃபோன் போடுறேன். சரிதானாய்யா! சரி. பாக்கலாம்." நண்பர் பெஞ்சமின் கிட்டதான் பேசுனது. நாகர்கோயில் போய் எறங்குனதும் கார் ஏற்பாடு செஞ்சி தங்க ஓட்டலும் ஏற்பாடு செஞ்சிருக்காரே.

நாங்க நண்பர்கள் ஆறு பேரு. தமிழ்நாட்டுத் தமிழர் ரெண்டு பேரு. பெங்களூர்த் தமிழன் ஒருத்தன். கன்னட கவுடா ஒருத்தன். பெங்களூர்த் தெலுங்கன் ஒருத்தன். ஒரிசாக்காரன் ஒருத்தன்னு ஆறு பேர் மொத்தம். ஆனை, குதிரை, பூனை, சிங்கம், புலி, ஆடு ஏல்லாத்தையும் ஒரு தேருல கட்டுன மாதிரி பயணத் திட்டம்.

போன வருசம் மூனு பேரு சேந்து தஞ்சைப் பக்கமா போய்ட்டு வந்தோம். அந்த மூனு இந்த வருசம் ஆறாகிப் பயணமும் தெக்க திரும்புச்சு. வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூனு நாளுக்கும் பயணத் திட்டம். வெள்ளிக்கெழம நாகர்கோயில். சனிக்கிழமை திருநெல்வேலி, சங்கரங்கோயில், கழுகுமலை, கோயில்பட்டி. ஞாயிறு திருச்செந்தூர்னு பெரிய திட்டமே போட்டாச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நாகர்கோயில் ஏற்பாடை நண்பர் பெஞ்சமின் கிட்டயும் கோயில்பட்டி ஏற்பாட்டை என்னுடைய உறவினர் கிட்டயும் விட்டாச்சு.

திட்டப்படி காலைல பதினோரு மணிக்கு நாகர்கோயிலுக்கு வண்டி சேரனும். நேரா ஓட்டலுக்குப் போயி குளிச்சிட்டு பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, குமாரகோயில், சுசீந்திரமுன்னு திட்டம். அருவியில குளிக்க வேண்டிய துணிமணிகளையும் எடுத்து வெச்சுக்கிட்டாச்சு.

கன்னட கவுடா மொதல்ல வர்ரதாவே இல்லை. பெங்களூர் மராட்டி ஒருத்தன் வர்ரதாத்தான் இருந்துச்சு. ஆனா அவன் கடைசி நேரத்துல கால வாரி விட்டுட்டான். அதுனால அவனுக்கு மாத்தா இந்த பெங்களூர் கவுடா உள்ள வந்தான். ஆறு பேர் கணக்கு சரியாப் போச்சு.

இதுல நான் திருச்செந்தூர்ல மொட்ட போடப் போறதா இன்னொரு திட்டம். கர்நாடகாவுல இருக்குற காட்டி சுப்பிரமணியாவுல போட வேண்டியது. தள்ளிக்கிட்டே போனதால....திருச்செந்தூருல போடுறதா முடிவு செஞ்சாச்சு. அதுனால என்ன...அடுத்த வருசம் காட்டி சுப்பிரமணியாவுல போட்டாப் போச்சு.

நாங்க ஆறு பேரும் ஆறு வெவ்வேறு ஆபீசுல வேல பாக்குறோம். அத்தன பேரும் வீட்டுக்குப் போயி கெளம்பி ஸ்டேஷனுக்கு வந்துரனும்னு திட்டம். அதே போல சரியான நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம் பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.

வண்டில பட்டியல் பாத்தோம். அதுல ஒரு நண்பனுக்கு அடுத்து ஆரியாதேவி வயசு 58ன்னு போட்டிருந்தது. அத வெச்சி அந்த நண்பனைக் கொஞ்ச நேரம் கிண்டலடிச்சோம். பெறகு கொஞ்சங் கொஞ்சமா வண்டியில கூட்டம் ஏறி நெரம்புச்சு. நெறைய மலையாளிகள் இருந்தாங்க. நாங்க யாரையும் கண்டுக்காம UNO அப்படீங்குற விளையாட்டை ஆடுனோம். ரொம்பச் சுவாரசியமாப் போச்சு.

ஆரியாதேவின்னு மொதல்ல சொன்னேனே....அவங்க வீட்டுக்காரரோட வந்திருந்தாங்க. அவருக்கு ஒரு அறுவத்திச் சொச்சம் இருக்கும். பத்தரை மணிக்கெல்லாம் அவங்களுக்குத் தூக்கம் வந்துருச்சு. படுக்கனும்னு சைகைல சொன்னாங்க. சரீன்னு பெர்த்துகளை மாட்டினோம். அவங்க எங்க போறாங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆவல் வந்துச்சு. மலையாளத்துலயே கேட்டேன். "நிங்ஙள் எவிடே போகுன்னு?"

அவரும் ஒடனே சொன்னாரு...."ஞங்ஙள்.....திருவனந்தபுரம்....."

என்னது திருவனந்தபுரமா! எனக்குத் தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்தது. திருவனந்தபுரம் வழியாப் போகுதா அல்லது நாகர்கோயில் வழியா திருவனந்தபுரம் போகுதான்னு ஒரு சந்தேகம். ஆனா வண்டியோ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். அப்புறம் எப்படி திருவனந்தபுரம் போகும்!

பிடி டீ.டீ.ஆரை. அவர்கிட்ட வெளக்கமா கேட்டதுக்கு அப்புறந்தான் ஒரு விஷயம் புரிஞ்சது. நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. என்னோட நண்பன் டிக்கெட் பதிஞ்ச கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. நான் பாத்தது வாரத்துக்கு மூனு நாளுதான் போகுது. அதுதான் பதினோரு மணிக்கு நாகர்கோயில் போகும். இது சாந்தரம் அஞ்சு மணிக்கு மேலதான் நாகர்கோயில் போகுது. என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை. ஒரு நா முழுக்க ரயில்ல இருக்கனும். கேரளா முழுக்க ரயில்லயே பாத்திரலாம். ஆனா அது சரியா? நண்பர் பெஞ்சமினுக்கு ஒரு ஃபோன் போட்டுப் பேசினேன். அவரும் கொஞ்ச ஐடியாக்கள் குடுத்தாரு. அவரு கிட்ட பேசீட்டு சைடு பெர்த்துல ஜன்னலோரமா கால நீட்டீட்டு உக்காந்து யோசிச்சேன். பட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. ஒடனே எல்லார் கிட்டயும் சொன்னேன். சொன்னதும் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.

தொடரும்...

Thursday, March 02, 2006

சுபா

இப்ப என்னோட கைல இருக்குறது சுபா கொடுத்த கிரீட்டிங் கார்டு. அது மேலதான் இப்ப என்னொட வெரலு ஓடுது. மெத்துன்னு அதுல ஒரு சின்னப் பூ. வெரல் வழியா அப்படியே கரண்ட்டு பாஞ்ச மாதிரி இருக்கு. சுபா கொடுத்த எதத் தொட்டாலும் கரண்டு பாயுது. அதுவும் சந்தோஷம்.

அடடா! சுபா யாருன்னே ஒங்ககிட்ட சொல்லலையே! சுபா என்னோட காதலி. ஐயோ! உங்க கிட்ட சொல்லும் போதே எனக்கு லேசா வெக்கம் வருது.

காலேஜ்ல எங்கூட படிக்கிற பொண்ணுதான் சுபா. அப்பிடியோ இப்பிடியோ எப்பிடியோ எங்களுக்கும் காதல் வந்துருச்சி. ஐயோ! மறுபடியும் எனக்கு வெக்கம் வந்துருச்சி. இந்தப் புன்னகையக் கூட என்னால அடக்க முடியல. சுபா பத்தி பேசுனாலே நா வெக்கப்படுறேன்னு எல்லாரும் சொல்றாங்க. இந்த வெக்கத்தக் கொறைக்கனும். சரி. இப்பிடி வெக்கப் பட்டுக்கிட்டேயிருந்தா எப்படி? என்னோட காதல ஓங்ககிட்டச் சொல்ல வேண்டாமா!

கொஞ்சம்....ம்ஹூம்...ரொம்பவே பெரிய இடத்துப் பொண்ணு அவ. ரொம்பச் செல்லம் வீட்டுல. நானோ நடுத்தரக் குடும்பம். ஆனாலும் பாருங்க காதல் வந்துருச்சி. தெனமும் கார்லதான் வருவா. அதே காரு சாந்தரமும் வந்து அவளக் கூட்டீட்டுப் போகும். அப்பிடி ஒரு சொகுசு. நமக்கெல்லாம் பஸ்தான். ஆனாலும் அந்தப் பணக்காரத்தனமெல்லாம் அவளுக்குக் கிடையாது. எல்லார் கிட்டயும் நல்லாப் பழகுவா. அதே மாதிரி எல்லாரும் அவகிட்ட நல்லாப் பழகுவாங்க. அவ்ளோ நல்ல கொணம்.

அவ பாட்டுத் தெறமையப் பத்திச் சொல்லாம விட முடியுமா! அடேங்கப்பா! என்ன உணர்ச்சிப்பூர்வமாப் பாடுவா தெரியுமா! பழைய பாட்டு, புதுப்பாட்டு அத்தனையும் பாடுவா. நாள் பூராவும் அலுக்காம கேட்டுக்கிட்டேயிருக்கலாம். அப்பிடி ஒரு பாவம். எல்லாங் கேள்வி ஞானந்தான். இருந்தாலும் அப்பிடி அமைஞ்ச குரல்.

எனக்குப் பி.சுசீலா பாடுன பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் சுபா பாடுனா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். பெஸ்ட் ஆஃப் சுபான்னு என்கிட்ட கேட்டா படகோட்டிப் பாட்டத்தான் சொல்வேன்.
"பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்பாயோ!
துள்ளி வரும் வெள்ளலையே நீ தூது செல்ல மாட்டாயோ!"
இந்தப் பாட்ட பி.சுசீலா பாடுன அதே பாவமும் ராகமும் மாறாமப் பாடுவா. ஆனாலும் அதுல சுபாவோட டச் இருக்கும். எது எப்பிடியோ! கடைசில இந்தப் பாட்டெல்லாம் கேட்டுக் கேட்டு பைத்தியமா இருக்குறது நாந்தான்.

காலேஜ்ல தொடங்கி வளந்ததுதான் எங்க காதல். பலாப்பழத்தை மூடி வெக்க முடியுமா? ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயம் தெரிஞ்சி போச்சு. சினிமாவுல நாவல்ல பல பேரோட நெஜ வாழ்க்கைல நடக்குற மாதிரி இல்லாம ரெண்டு வீட்டுலயும் எங்க காதல மறுப்பு சொல்லாம ஏத்துக்கிட்டாங்க. கல்யாணமும் முடிவு பண்ணீட்டாங்க. நிச்சயமும் ஆகி தேதியும் குறிச்சாச்சு. ஆச்சரியமா இருக்குல்ல. ஆனா அதுதான் உண்மை. இன்னும் ஆறு மாசம் இருக்கு.

ஆஆஆஆஆஆஆறு மாசம். அதுக்குப் பெறகு சுபாவுக்கு நான். எனக்குச் சுபா. அதுவும் எல்லாரும் ஒத்துக்கிட்டு. பட்டுன்னு ஆறு மாசமும் ஆறு நொடியாப் பறந்துறக் கூடாதான்னு ஆசையா இருக்கு. ஆனா அது நடக்காதில்லயா! சரி. காத்திருக்க வேண்டியதுதான்.

அடடா! பேச்சு மும்மூரத்துல ஒங்ககிட்ட இன்னொரு விஷயத்தச் சொல்லவே மறந்துட்டேன். இன்னைக்கு எங்க வாழ்க்கைல மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள். ஆமா. ஏ.ஆர்.ரகுமான் இசைல பாடுறதுக்கு சுபாவுக்கு வாய்ப்புக் கெடச்சிருக்கு. அவ குரலுக்குத் தகுதியான வாய்ப்புதான் அது.

எந்த நாட்டு இசையா இருக்கட்டுமே. ஒரு வாட்டிக் கேட்டாப் போதும். அப்பிடியே அச்சுப் பெசகாமப் பாடுவா. அன்னைக்கு இப்பிடித்தான் எங்க காலேஜுக்கு அயர்லாண்டுல இருந்து ஒரு பாடகரு வந்தாரு. அவங்க நாட்டுப் பாரம்பரியப் பாட்டு ஒன்ன ஆலாபனை பண்ணுற மாதிரி பாடுனாரு. அத அப்பிடியே ஜம்முன்னு பாடிக் காட்டி அசத்தீட்டா சுபா. அவரும் பிரமிச்சுப் போயிட்டாரு. அவள இன்னும் ரெண்டு மூனு மெட்டு பாடச் சொல்லி சாம்பிள் மாதிரி ரெக்கார்டு பண்ணிக்கிட்டாரு. அவரு என்னவோ ஆல்பம் போடப் போறாராம். அதுக்குத் தேவப்பட்டா இவளும் போக வேண்டியிருக்குமாம்.

சுபா கொஞ்சம் அசடு. நானுங் கூட வந்தாத்தான் வெளிநாடு போவாளாம். வீட்டுல ஒத்துக்குவாங்களா? கல்யாணம் முடிஞ்சிட்டாலும் போகலாம். அதுக்கு முன்னாடியே வரச்சொல்லிக் கூப்புட்டா? நல்லவேளை. இதுவரைக்கும் அந்தாளு கூப்புடலை. அவரு என்னவோ இசையாராய்ச்சி செய்றாராம். அந்த ஆராய்ச்சி முடிவுகள வெச்சித்தான் ஆல்பமோ ஆப்பமோ போடப் போறாராம். ஆராய்ச்சிதான் மொதல்ல முடியனுமாம். மெதுவா முடியட்டுமே. எனக்கொன்னும் அவசரமில்ல.

அட! ஒன்னச் சொல்லும் போதே இன்னொன்னுக்குத் தாவுறேன். ஏ.ஆர்.ரகுமான் ரெக்கார்டிங் பத்தித்தான சொல்லிக்கிட்டு இருந்தேன். நேத்து ராத்திரி பத்து மணிக்கெல்லாம் பொறப்பட்டுப் போனவா இன்னைக்குக் காலைலதான் திரும்ப வந்தாளாம். என்னையும் ரெக்கார்டிங்குக்கு கூப்புட்டா. நாந்தான் போக முடியல. வீட்டுல சின்ன விசேஷம். அதான்.

ரெக்கார்டிங் முடிச்சுக் காலைல திரும்ப வந்ததும் எனக்குப் ஃபோன் பண்ணீட்டா. அங்க நடந்ததெல்லாம் ஒன்னு விடாம சொன்ன பெறகுதான் அவளுக்கு நிம்மதி. இப்பிடித்தான் எதையெடுத்தாலும் எங்கிட்ட வந்து ஒப்பிச்சிருவா. மண்டு மண்டுன்னு எத்தன தடவ திட்டுனாலும் கேக்க மாட்டா.

இப்பக் காலேஜ்ல அவளுக்காக காத்திருக்கேன். வந்ததும் அங்க என்ன பாடுனாளோ அதப் பாடச் சொல்லனும். ஊருல ஒலகத்துல எல்லாரும் கேக்குறதுக்கு முன்னாடியே அவ பாட்ட நான் கேக்கனும். கேக்கக் கூடாதா? அந்த ஆசை எனக்கிருக்கக் கூடாதா? நீங்களே சொல்லுங்க!

சரி. அத விடுங்க. இந்த வாய்ப்பு எப்படிக் கெடச்சதுன்னு சொல்லவே இல்லையே. அவளோட அண்ணனுக்கு வேண்டப்பட்டவங்க வழியாக் கெடச்ச வாய்ப்பு. யார் வழியா வந்தா என்ன! கடவுள் வழியா வந்ததுதான். சுபா ஒரு பெரிய பாடகியா வரனும். அந்த வளர்ச்சிதான் எனக்கு முக்கியம். பெருமை. மேல மேல ஏத்தி விட்டு தாங்குற தூணா நா இருக்கனும். எங்க சுத்துனாலும் எங்கிட்ட வர்ரவளுக்கு இது கூடவா செய்யக் கூடாது. செய்வேன். கண்டிப்பாச் செய்வேன். நீங்களும் அதப் பாக்கத்தான் போறீங்க.

அது கெடக்கட்டும். இந்த கிரீட்டிங் கார்டு எப்படி வந்துச்சுன்னு சொல்லவேயில்லையே! நேத்து எனக்குப் பொறந்த நாளு. அதுக்கு சுபா தந்ததுதான் இந்தக் கார்டு. அதத்தான் இப்ப கைல கதை பேசிக்கிட்டு இருக்குறது. என்னோட பொறந்த நாளன்னைக்கு அவளுக்கு ரெக்கார்டிங் இருந்தது அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

"சுந்தர்........................." வேற யாரு? சுபாதான். என்னோட பேரக் கத்திக் கிட்டேதான் வருவா. போகும் போதும் அப்பிடித்தான். பேரச் சொல்லிக் கத்தக் கூடாதுன்னு எத்தன வாட்டி திட்டினாலும் கேக்க மாட்டா. அதுவுமில்லாம அந்தக் கத்தல் எனக்கும் பிடிக்கும். என்னோட பேரச் சொல்லிக் கத்துறதே ஒரு பாட்டாக் கேக்கும்.

பாருங்க....இப்பிடித்தான் வந்ததும் என்னோட கையப் பிடிச்சுக்குவா! இப்பிடியெல்லாம் நடந்துதான் எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயம் சீக்கிரமே தெரிஞ்சு போச்சு. அப்புறம் நடந்ததெல்லாம் ஒங்களுக்குச் சொன்னேன்.

"என்னடா! நான் கொடுத்த கார்டத் தடவிப் பாத்துக்கிட்டு இருக்க! நானும் தடவிப் பாக்குறேன்!" அவதான் கேக்குறது.

"அட மண்டு. கார்ட நம்மால தடவத்தான முடியும். பாக்க முடியாதுல்ல." நான் சொல்லி வாய மூடல. என்னோட கன்னத்தத் தடிவித் தேடி முத்தம் குடுத்தா சுபா.

அன்புடன்,
கோ.இராகவன்

(இது கதைதான். கதைதான். கதைதான்.)

Thursday, February 23, 2006

நாலே நாலா ஏதோ நாலா

ஜோசப் சார் என்னை இப்பிடி இழுத்து விட்டுட்டீங்களே.....நாம் பாட்டுக்குச் செவனேன்னு இருந்தேன்.....சரி....நானும் எதையாவது சொல்லி வெக்கேன். யாருஞ் சண்டைக்கு வராதீங்க...

பிடித்த நான்கு பெரியவர்கள்

1. வாரியார் சுவாமிகள் - தமிழ்ப் பெருங் கடல். நல்ல செய்தியோடு போய் நின்றால் உடனே வாழ்த்து வெண்பா பாடக் கூடிய தமிழறிவு. ஊர் ஊராக நாடு நாடகப் போய்த் தமிழ் தொண்டும் தமிழ்க் கடவுளுக்குத் தொண்டும் செய்த பெருமகனார். ஆன்மீக இலக்கியச் செம்மல். நகைச்சுவையும் தத்துவமும் கலந்து கதைக் கருத்து சொல்லும் இவரது பாங்கிற்கு இன்று வரை போட்டியில்லை.

2. காயிதே மில்லத் - ஒப்பற்ற இஸ்லாமியத் தலைவர். இஸ்லாம் எங்கள் சமயம். தமிழ் எங்கள் மொழி என்று முழங்கிய தமிழர். ஒரு குற்றம் என்று இவரைக் கை காட்ட முடியுமா! தூயவர். அரியவர். என்றும் நினைத்துப் போற்றத் தக்கவர். அனைவருக்கும் பொதுவானவர்.

3. காமராஜர் - உண்மையிலேயே மதிய உணவுத் திட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர். கல்விக் கண் திறந்த ஞானச் சுடர். இந்த அளவிற்கு தமிழகத்தில் கல்வி உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்ட பெருமை இவரையே சேரும். இன்னொரு கர்ம வீரர் இன்னும் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

4. உ.வே.சா - கால் தேய்ந்தாலும் தேயட்டும்.....என் தமிழ் தேயக் கோடாது என்று....தெருத் தெருவாக அலைந்து அலைந்து ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து பல அரிய தமிழ் நூல்களை நாம் அறியத் தந்த அற்புதத் தமிழர். ஒவ்வொரு தமிழனும் ஒருமுறையாவது நன்றி சொல்ல வேன்டிய உழைப்பாளி. தமிழ்த் தொண்டின் தலைமைப் பதவி இவருக்குப் பின்னால் இன்னமும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பிடித்த நான்கு உணவு வகைகள்

1. தோசை - இதுக்குதான் முதல் இடம். எந்தக் கூட்டணியிலும் சேரக் கோடிய O-ve உணவு. சைவமா இருந்தாலும் சரி. முன்னாடி அ போட்ட சைவமா இருந்தாலும் சரி....நல்லா பொருந்தி வரும். ஒன்னுமில்லையா...கூட்டணி இல்லாமலேயே ருசிக்கும் மசால் தோசையும் உண்டு.

2. கோதுமை ரவைக் கதம்பம் - இது எனது கண்டுபிடிப்பு. இதுக்கு இங்க குறிப்பும் கொடுத்திருக்கேன். பாதி நாட்களில் இரவு உணவு இதுதான். கோதுமை ரவையில் செய்தது. ஆனால் அரிசி வகைக்கான சுவை.

3. மீன் - குழம்பு...பொரிச்சது...இல்லை பாலக்கோட போட்டு செய்றது....எதுவானலும் எனக்குப் பிடிக்கும். சீலா மீனு, வெறால் மீனு, நெத்திலி மீனு, ஜிலேபிக் கெண்டை (ரொகு) - இந்த நாலு மீன்களும் ரொம்பப் பிடிக்கும். (இதுலயும் நாலா!)

4. கீரை - இதுவும் ரொம்பப் பிடிக்கும். கீரைக் குழம்போ...மசியலோ..பொரியலோ...எப்படி இருந்தாலும் கீரை எனக்குப் பிடிக்கும். எல்லாக் கீரைகளுமே பிடிக்கும். காலி ஃபிளவர் அடியில் இருக்கும் கீரையாகட்டும் முள்ளங்கியில் மேலே இருக்கும் கீரையாகட்டும்....எதையும் விட்டு வைப்பதில்லை.

எனக்குப் பிடித்த நான்கு கலைஞர்கள்

1. நடிகர் திலகம் - பெயரைச் சொல்லவே தேவையில்லை. அந்தக் காலத்திற்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்தார். இந்தக் காலத்திற்கு வந்த பிறகு என்ன தேவையோ அதைச் செய்தார். கேட்டதைக் கொடுக்கும் நடிப்பு வள்ளல். சந்தேகமேயில்லை. இப்படி ஒரு தமிழன் இருந்தான் என்று பெருமிதம் கொள்ளலாம்.

2. அனிதா ரத்னம் - பாரம்பரியக் கலையை அப்படியே வைத்துப் பராமரிப்பவர்களுக்கு நடுவில் அதில் கூடுதல் புதுமைகளைச் சேர்க்கும் ஆடலார். நாட்டிய நிகச்சிகளில் கதை சொல்லும் விதங்களின் புதிய முறைகளைக் காட்டுகிறவர். இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

3. இளம்பிறை மணிமாறன் - தூத்துக்குடிக்காரர்களுக்கு இவரை நிச்சயம் தெரிந்திருக்கும். அங்கு ஒரு பெரிய கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். சரி. என்ன கலை என்று கேட்கின்றீர்களா? இவர் ஒரு தமிழ் சொற்பொழிவாளர். அதுவும் ஆன்மீகத்தில். தமிழிலும் ஆன்மீகத்திலும் இவர் தொடாதது இல்லை. ஒரு விஷயம் தெரியுமா? இவர் ஒரு கிருஸ்துவர். ஆனாலும் மக்கள் இவரை ஆன்மீகச் சொற்பொழிவாளராக ஏற்றுக் கொண்டார்கள். அதுதான் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பு. உண்மையான மதச்சார்பின்மை.

4. எல்.ஆர்.ஈஸ்வரி - எனக்கு இவரை விடப் பிடித்த பாடகர்கள் இருந்தாலும் இவரையே குறிப்பிட விரும்புகிறேன். இவருக்கு முன்னும் பின்னும் பல பெரிய பாடகர்கள் பாரம்பரிய இசைப் பிண்ணனியிலிருந்தோ படித்திருந்தோ வந்தார்கள். அல்லது வெளிமாநிலத்திலிருந்து வந்தார்கள். அவர்களையும் நான் கொண்டாடினோம். கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் எந்த விதப் பிண்ணனியும் இல்லாமல் ஒரு கிருஸ்துவக் குடும்பத்திலிருந்து வந்து, எந்த இசைமுறையையும் கற்றிராமல், தன்னறிவைக் கொண்டே முன்னுக்கு வந்த தமிழச்சி. இவர் கிளப் பாடகி என்று எளிதாக கிண்டலடித்து விடலாம். ஆனால் இவர் இல்லாமல் தமிழ்நாட்டில் பல வீடுகளில் கல்யாணமும் நடப்பதில்லை. ஆடி மாதத்தில் மகமாயி கூழை ஏற்றுக் கொள்வதும் இல்லை. முதலில் சொன்னது "வாராயென் தோழி வாராயோ" பாடலைப் பற்றி. அந்தப் பாடலைப் பெரும்பான்மையான கல்யாண வீடுகளில் கேட்கலாம். லூர்து ஆர் ஈஸ்வரியாக இருந்தாலும் அம்மன் பாடல்கள் என்றால் ஈஸ்வரிதான் என்று முத்திரை கொண்ட இந்தப் பாடகியும் போற்றப்பட வேண்டியவரே.

விடுமுறைக்குச் செல்ல விரும்பும் நான்கு இடங்கள்

1. கேரளா - சேர நாட்டின் அழகைச் சொல்லவும் வேண்டுமா....பச்சை வயல்களும்...உயர்ந்த மலைகளும்.....ஆறுகளும்...ஏரிகளும்....வனப்பும் வளமையும் இயற்கையும் எங்கும் நிறைந்த கேரளம். ஏற்கனவே சென்றிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டும்.

2. Valley Of Flowers - இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நண்பர்கள் சென்று வந்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் சென்றதில்லை. டெல்லி சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். ஒரு பயணத்திட்டம் நீண்ட நாட்களாக ஊறிக்கொண்டு இருக்கிறது. என்று நடக்குமோ!

3. ஜெர்மெனி - போயிருக்க வேண்டியது. போக முடியாமல் போய் விட்டது. இன்னொரு முறை வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக போக விரும்பும் நாடு ஜெர்மெனி.

4. கிரீஸ் - கதைகளில் நிறைய படித்த நாடு. ஒடிசியும் பெனிலோப்பும் மகிந்திருந்த நாடு. ஹெலன் என்ற அழகு தேவதையால் நிறைய இழந்த நாடு. நிச்சயம் பார்க்க வேண்டும்.

நான் அழைக்க விரும்பும் நால்வர்

1. பரஞ்சோதி

2. இளவஞ்சி

3. சிவா

4. இராமநாதன்

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, February 06, 2006

ணின் பின்புறத்தில் ஓங்காரம்

என்ன தலைப்பு தப்பா இருக்குன்னு தோணுதா? அப்ப "பெண்"னுங்குற சொல்ல முன்னாடி போட்டுக்கோங்க. அதிர்ச்சியாகாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா விஷயத்துக்கு வருவோம்.

இது நடந்து சரியா அஞ்சு வருசம் ஆச்சு. நடந்தது பெல்ஜியத்துல. அப்ப பெல்ஜியத்தோட ஆண்ட்வெர்ப் நகரத்துல தங்கீருந்தோம். நான் இருந்த நகரங்கள்ளயே எனக்கு ரொம்பப் பிடிச்ச நகரம் அதுதான். வசதிக்கு வசதி. சுத்தத்துக்குச் சுத்தம்.

வார நாட்கள்ள வேல. சனி-ஞாயிறுன்னா ஊரு சுத்த வேண்டியதுதான. அப்படி அந்த வாரக்கடைசீல ஹண்சூர் லெஸ்ஸே (Han-Sur-Lese) போலான்னு முடிவு செஞ்சோம். ஊர்ப் பேரு நினைவிருக்கு. ஆனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் இருக்கலாம்.

முதலில் ஜெமிலி என்ற இடத்துக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஹண்சூர் லெஸ்ஸேக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். ஹண்சூர் லெஸ்ஸேயில் அழகான சுண்ணக் குகைகள் இருக்கின்றன. உள்ளேயே படகிலும் போக முடியும். வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரங்களும் செய்திருப்பார்கள். ஐரோப்பாவில் இருப்பவர்கள் ஒருமுறையேனும் போக வேண்டும். மழைக் காலத்தில் போகக் கூடாது. ஏனென்றால் குகைக்குள் தண்ணீர் வரத்து அதிகாம இருக்கும். உள்ளே நுழைவதே கடினம்.

சரி. விஷயத்துக்கு வருவோம். ஹண்சூரப் பாத்துட்டு திரும்பி வந்து ஜெமிலியில ரயிலப் பிடிக்கக் காத்திருந்தோம். இன்னும் ஒன்னர மணி நேரம் இருக்கு. ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள கதகதன்னு இருக்கு. ஜம்முன்னு உக்காந்திருந்தோம்.

அப்போ பக்கத்துல கொஞ்சம் தள்ளி உக்காந்திருந்த ஒரு பெரிய அக்காவுக்கு கோக்கு குடிக்கிற ஆச வந்து எந்திருச்சு நடந்தாங்க. கோக்கு மெஷின் எங்களுக்கு முன்னாடிதான் இருந்தது. அந்த அக்கா கோக்கு மெஷின்ல ஃபிராங்க்ஸ்கள தள்ளும் போதுதான் அதக் கவனிச்சோம்.

அந்தக்கா போட்டிருந்தது ஒரு பாவாடையும் தொளதொளன்னு ஒரு சட்டை மாதிரியும். அந்தப் பாவாடையோட டிசைன் என்ன தெரியுமா? தமிழ் எழுத்துகள். உயிரெழுத்து உயிர்மெய்யெழுத்துன்னு எதையும் விடலை. ஆயுத எழுத்தும் இருந்தது. எங்கன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா....நமக்கு முக்கியம் குடிலைதான்.

குடிலைன்னா ஓம். ஓங்காரத்துக்குத்தான் குடிலைன்னு பேரு. இந்தக் குடிலை அந்தப் பெண்ணோட பின்புறத்துல நட்ட நடுவுல இருந்தது.

இத மொதல்ல நான் கவனிக்கலை. அலஞ்ச அலுப்புல லேசா அசந்தாப்புல இருந்தேன். கூட இருந்த மலையாளி நண்பன் தான் இதப் பாத்து எனக்குச் சொன்னான். எனக்கு அலுப்பெல்லாம் போச்சு.

இந்தப் பாவாடைய எங்க வாங்கீருப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தேன். ஒன்னும் தோணலை. நம்மூர்ல நெஞ்ச பாவாடையாக்கூட இருக்கலாம். இல்லைன்ன டிசைனரு வேருன்னு யாராவது புது டிசைனரு, இந்த ஐடியா மூளைல உதிக்கவும் நெஞ்சதா இருக்கலாம்.

எதுவா இருந்தா என்ன? ஓங்காரங்குறது இறை தத்துவம். அதப் பின்னாடி வைக்கிறதான்னு மொதல்ல ரத்தம் கொதிச்சது. சைவ சித்தாந்தத்துல என்னதான் முருகா சிவனேன்னு இருந்தாலும் கடைசீல எல்லாம் ஓங்காரந்தான்.

சேவல் ஓங்காரத்தோட ஒலி வடிவம். மயில் ஒளி வடிவம். அதுதான் நாத விந்து. நாதம் சேவல். விந்து மயில். மயில்தோகை விந்து வடிவத்துலதான இருக்கு. இப்பிடி இன்னும் நெறைய அதப் பத்திச் சொல்லலாம்.

எப்பிடிக் கும்பிட்டாலும் எல்லாம் கடைசீல ஓங்காரத்தான். அந்த ஓங்காரத்தைப் பாவாடைல...அதும் பின்னாடியா?

சரி. கழுத. இதென்ன வெறும் குறியீடுதான. இதப் பாவாடைல போட்டதால என்ன கொறஞ்சு போச்சு! அங்க இருக்குறதால இதோட மதிப்புக் கொறஞ்சு போகுமா! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! இப்பிடியெல்லாம் சொல்லிக் கண்டுக்காம விட்டுட்டேன்.

"தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"னு படிச்சது நினைவுக்கு வந்தது. அட! தாய் தடுத்தாத்தான! நம்ம தாய்தான் ஊருக இருக்காங்களே. தடுக்கலைலன்னு பேசாம விட்டுட்டேன்.

அடுத்த வாட்டி "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது"ன்னு ஓதும் போது அந்த அக்காவோட பின்புறமோ அந்த ஓங்காரமோ நினைவுக்கு வரலை. மறந்தே போச்சு.

சரி. இத எதுக்கு இப்ப சொல்றேன்னு கேக்குறீங்களா! என்னவோ தெரியலை. சொல்லமுன்னு தோணிச்சு. நேத்து ராத்திரி ஒரு விஷயத்தை யோசிக்கும் போது இது நினைவுக்கு வந்தது. அதான் சொல்றேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, February 02, 2006

சேப்பாக்கமும் சிலப்பதிகாரமும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு இருக்கத்தான் செய்கிறது. எப்படியோவது...இல்லையென்றால் சேப்பாக்கத்தைப் பற்றிச் சொல்ல வருகையில் சிலப்பதிகாரம் உள்ளே நுழையுமா?

ஜனவரி கடைசி வாரக்கடைசியில் குடியரசு தினத்தை ஒட்டி சென்னைக்குச் சென்றிருந்தேன். அங்கு நண்பர்களோடு சந்திக்கச் சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை கிரிக்கெட் கிளப்பிற்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததுமே உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா?

என்னுடைய உடையலங்காரந்தான். வட்டக்கழுத்து டி-ஷர்ட் அணிந்திருந்தேன். இது போன்ற பெரிய கிளப்களில் உடைக்கட்டுப்பாடு உண்டு. சென்ற முறை சென்றிருந்த பொழுது ஒழுங்காக நல்லதொரு சட்டையை மாட்டிக் கொண்டு சென்றேன். இந்த முறை நாலு இடங்களில் சுற்றி விட்டுப் பிறகு கிளப்பிற்குச் சென்றதால் எனக்குத் தோன்றவேயில்லை.

பிறகு அங்கு எங்களை அழைத்துச் சென்ற நண்பர் உடனே வீட்டிற்கு ஃபோன் செய்து கிளம்பிக் கொண்டிருந்த அவரது துணைவியாரை ஒரு சட்டையைக் கொண்டு வரச் சொன்னார். அந்தச் சட்டை வந்த பிறகு கிளப்பிற்குள் சென்றோம்.

நல்ல இடம். மாலைப் பொழுதுகளில் நண்பர்களோடு பொழுது போக்கச் சிறந்த இடம். Under-19 குழுவினர் ஒளி வெள்ளத்திலும் வியர்வை வெள்ளத்திலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் என்னென்ன கனவுகளோ. ஆசைகளோ. சிறுவயதிலேயே விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் இந்த வயதிலேயே எல்லாருக்கும் நல்ல உடல்வாகு வந்திருந்தது.

அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கு ஏதுவாக நாற்காலிகளை அமைத்துக் கொண்டோம். முதலில் மசால்வடைகளையும் முட்டைக்கோஸ் வடைகளையும் கொண்டு வரச்சொன்னோம். போட்டி பலமாக இருக்க உருளை போண்டாவையும் கொண்டாவென்றோம்.

சொன்னவை வந்து (அல்லது வெந்து) கொண்டிருக்கும் நேரத்தில் சுற்றிப் பார்க்கையில் என் கண்களில் பட்டார் பேராசிரியர் ராஜகோபாலன். தொலைக்காட்சியில் வரும் தமிழ்ப் பட்டிமன்றங்களைப் பார்ப்பவர்களுக்குப் பேராசியர் ராஜகோபாலனைத் தெரியாமல் இருக்காது. நக்கீரன், இளங்கோ, கம்பன் என்று கரைத்துக் குடித்த கலியுக அகத்தியர். வெறும் வெற்றுப் படிப்பல்ல. ஒவ்வொரு இலக்கியத்தையும் படித்து ஆய்ந்து அதன் பாத்திரங்களைத் தெளிந்த அறிஞர்.

அவருடைய பேச்சைத் தொலைக்காட்சியில் கேட்டுதான் நான் சிலப்பதிகாரத்தில் ஈடுபாடு கொண்டேன். தென்னவன் தீதிலன் என்ற கதையை எழுதியதற்குக் காரணமே அவர் மேற்கோள் காட்டிய சிலப்பதிகார வரிகள்தான். ஆகையால் அவரிடம் நேரில் சென்று மரியாதை செய்வதே தமிழுக்கு நான் செய்யும் மரியாதை என்று எண்ணி அப்படியே செய்தேன். அவரும் மிகவும் மகிழ்ந்து போனார். அவர் பேசியதையும் அதிலிருந்து நான் எடுத்ததையும் சொல்லச் சொல்ல அவர் கண்களில் சில மகிழ்ச்சிப் பொறிகள் பறந்ததை என்னால் காண முடிந்தது. அவருக்கு நன்றி கூறி விட்டு அவரை அவரது நண்பர்களோடு அளவளாவ விட்டுவிட்டு நான் நமது மன்றத்தினரோடு சேர்ந்து கொண்டேன்.

சிலப்பதிகாரத்தில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் ஒன்று உண்டென்றால் அது கண்ணகி. மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் உண்டென்றால் அது பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் மனைவி கோப்பெருந்தேவியையும் சொல்லலாம். கண்ணகி வெறும் அடங்கிக் கிடந்த மனைவி பாத்திரமல்ல என்று வாதங்களோடு நிரூபித்தவர் பேராசிரியர் ராஜகோபாலன் அவர்கள். அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியாரும் கூட கவனியாது விட்ட விஷயங்கள் இவை. நான் படித்த வேறெந்தச் சிலப்பதிகார ஆய்வு நூலிலும் இதைச் சொல்லவில்லை. நேற்று எழுதியவர்கள் முதற்கொண்டு. ஆகையால்தான் நான் சிலப்பதிகாரத்தை முடிந்த வரையில் ஆழமாகப் படித்து வருகிறேன்.

இப்பொழுது சொல்லுங்கள். சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் விட்ட குறை தொட்ட குறை உண்டுதானே?

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 24, 2006

நட்சத்திரக் குமரனுக்கு ஒரு வாழ்த்து

நமது குமரன் கொடுத்த பொறுப்பு மிகப் பெரிய பொறுப்புதான். பின்னே ஒரு செய்யுளை எழுதி அதில் அவரது கதையைச் சொல்லி அதற்கு என்னையும் விளக்கம் சொல்லச் சொன்னால் அது மிகப் பெரிய பொறுப்புதானே. அதையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு என்னால் முடிந்ததை மயிலாரோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். மயிலார் யாரென்று எல்லாருக்கும் தெரியும்தானே! சரி. முதலில் கவிதையைப் பார்ப்போம்.

நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்றுத் தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினைந்து அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்

மயிலார் : இதென்ன கவிதையா செய்யுளா?

நான் : இது செய்யுள் மாதிரி இருக்குற கவிதை. தமிழ் இலக்கியத்தில் புது வடிவம் என்று சொல்லலாம். மரபுக் கவிதை மாதிரி இருக்கும். ஆனா மரபுக் கவிதை கெடையாது. கவிதை மாதிரி இருக்காது. ஆனா கவிதை.

மயிலார் : அப்ப நீ சொல்லப் போற விளக்கத்துல விஷயம் இருக்குற மாதிரி இருக்கும். ஆனா இருக்காது. ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கும். ஆனா ஏதாவது புரியும்.

நான் : (வழிந்த படி). சரி. சரி. குமரன் கோவிச்சுக்கப் போறாரு. நம்ம செய்யுளுக்கு வருவோம்.

மயிலார் : கவிதைக்கு வருவோம்னு சொல்லு.

நான் : (இன்னும் வழிந்தபடி) ஆமாமா. கவிதைக்கு வருவோம். இந்தக் கவிதைல மூனு பத்திகள் இருக்கு. ஒவ்வொரு பத்தியும் குமரனோட வாழ்க்கைல ஒவ்வொரு பகுதியச் சொல்லுது.

முதல் பத்தி குமரன் பிறந்ததையும் அவருக்குப் பேரு வெச்சதையும் சொல்லுது. இரண்டாவது பத்தி அவரோட திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு எல்லாம் சொல்லுது. மூன்றாம் பத்தி அவர் இப்போ இருக்குற இடத்தைப் பத்தியும் தமிழ் வாழ்த்தும் சொல்லுது.

மயிலார் : ஒவ்வொரு பத்தியும் அவரோட பொறப்பப் பத்தியும் வாழ்க்கையைப் பத்தியும் இருப்பைப் பத்தியும் சொல்லுதா! அப்ப நாலு பத்தி.

நான் : (அவசர அவசரமாக) இல்ல மூனு பத்தி.

மயிலார் : ஏற்கனவே மூனு பத்தி. அந்த மூனும் அவரப் பத்தி சொல்றதால நாலு பத்தீன்னு சொன்னேன். அவசரக்குடுக்கையா இருக்கையே! சரி ஒவ்வொரு பத்தியப் பத்தியும் சொல்லு. கேட்டுக்கிறேன்.

நான் : சரி. சரி. "நான்மாடக் கூடலாம் மதுரையம் பதியில்." அதாவது நான்கு மாடங்களை உடைய கூடங்களை உடைய மதுரையம்பதியில்....

மயிலார் : இரு இரு....ஏன் இப்படி மாடத்தையும் கூடத்தையும் உடைக்கிற?

(எனக்கு ஆத்திரத்தில் கண்ண இருட்டிக்கிட்டு வருது. அத அடக்கீட்டு தொடர்ரேன்.)

நான் : சரி. நான்கு மாடங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட கூடங்கள் நிறைந்த ஊர் பாண்டி நாட்டு மதுரையம்பதி. அந்த மதுரையம்பதியில் "நாயகனின் திருவளினால் நானன்று தோன்றினேன்" என்கிறார் குமரன். இங்க நாயகன்னா முருகப் பெருமான்.

(முருகன் பெயரைச் சொன்னதுமே மயிலார் உணர்ச்சி வசப்பட்டு படக்கென்று தோகையை விரிக்கிறார். அந்தத் தோகை இடித்து மேசையிலிருந்த எவர்சில்வர் டம்ளர் தரையில் உருளுகிறது.)

நான் : நாயகன்னா இங்க முருகப் பெருமான். முருகப் பெருமானுக்குரிய பங்குனி மாதத்து உத்திரத் திருநாளில் பிறந்தவர். அதுனால அவருக்கு முருகன் பெயரான குமரனையே வெச்சிட்டாங்க. இதைத்தான் சுருக்கமா "நாயகனின் திருவருளினால் நானன்று தோன்றினேன். நலமுடைக் குமரனெனும் நல்ல பெயர்தனை அருளினான்" அப்படீன்னு குமரன் சொல்லீருக்காரு.

இதுல சிறப்பம்சன் என்னன்னா....நல்ல பெயர்தனை வைத்தனர்னு சொல்லலை. அப்படிச் சொல்லீருந்த அது பெத்தவங்களும் பெரியவங்களும் வெச்சதா இருந்திருக்கும். அருளினான்னு சொல்றதால, அது முருகப் பெருமானே பெத்தவங்க வழியா வைத்து அருளினான்னு பொருள் கொள்ளனும்.

(மயிலார் ரொம்பவே பக்தியா கேட்டுக்கிட்டு இருக்காரு.)

நான் : இப்ப ரெண்டாவது பத்திக்குப் போவோம்.

மயிலார் : அது எங்க பக்கத்தூர்லயா இருக்கு?

நான் : (திடுக்கிட்டு) என்ன...பக்கத்தூரா?

மயிலார் : ஆமா. நீதான் பத்திக்குப் போவோம்னு சொன்னியே.

நான் : (எரிச்சலுடன்...ஆனால் காட்டாமல்.) அதாவது பார்ப்போமுன்னு பொருள். இப்ப குமரனுக்கு என்ன வயசுன்னு மொதல்ல சொல்றாரு. முப்பத்து மூனு வயசாகுதாம். அதை நேரடியா சொல்லாம ஒரு கணக்கு வழியா சொல்றாரு. "அகவையோ மூவாறு பதினைந்து". (மயிலாரைப் பார்த்து) மூன்று ஆறும் பதினைந்தும் சேந்தா என்ன வரும்?

மயிலார் : (நக்கலுடன்) மூனு ஆறும் பதினைந்தும் சேந்தா வெள்ள நிவாரண நிதி வரும்.

நான் : (சற்றுக் கடுகடுப்புடன்). மயிலார். இது குமரனோட வாழ்க்கைச் செய்யுள்...இல்ல...கவிதை. இத இப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது. அவரு நொந்து போயிருவாரு. அதுனால கொஞ்சம் முனைப்பா கவிதையப் பாக்கலாம்.

(கொண்டை அழகாக அசையுமாறு மயிலார் தலையை ஆட்டுகிறார்.)

நான் : மூவாறு என்றால் பதினெட்டு. பதினெட்டும் பதினைந்தும் சேர்ந்தால் முப்பத்து மூன்று அதுதான் அவர் வயது. அடுத்து வீட்டுல அவரோட துணைவியார்தான் எல்லாம் பாத்துக்கிறார்னு சொல்றாரு. (மெல்லிசா மதுரைன்னு மயிலார் கமெண்ட் அடிக்கிறார்). அழகுடைய அகமுடையாள் மனைமாட்சியாம். இங்க புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் தரலை. அகத்தின் அழகுதான் பெருசூன்னு சொல்றாரு. அழகும் அறிவும் உடைய திருமதி குமரன்தான் வீட்டை ஒழுங்காக பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறாராம். அடுத்து மகளப் பத்திச் சொல்றாரு.

மயிலார் : (குறுக்கிட்டு) குழந்த தேஜஸ்வினியப் பத்தியா....அடடா! அவளோட பெயர்க்காரணம் தெரியுமா ஒனக்கு. அடடா! முருகா!

நான் : (சற்றுக் கடுப்புடன்) நான் இண்டெர்நெட் படிக்கும் போது எட்டிப் பாக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லீருக்கேன்.

மயிலார் : (முணுமுணுப்புடன்) பெரிய இண்டெநெட். எட்டிப் பாத்துட்டாலும். எனக்குத் தெரியாத சமாச்சாரமா! சரஞ்சரமா எடுத்து விடுவேன்.

நான் : "மகிழ்ச்சியுறத் தேசு பெறும் மகளுடையேன்." தேசுன்னா ஒளி பொருந்திய அழகு. அதான் தேஜஸ்வினி. அதுதான் தனது மகளின் பெயர்னு சொல்றாரு. "மனைமுழுதும் மன்னன் மகள் அவளாட்சியாம்." வீடு முழுக்க குழந்தை தேஜஸ்வினியோட ஆட்சிதானாம். மண்வீடு மட்டுமல்ல மனவீடுமுன்னு சொல்றாரு குமரன். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே அல்லவா.

மயிலார் : ஆமாமா. கொண்டாடும் இடத்துலதான். குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம். சரி. அடுத்த பத்தியப் படிச்சுச் சொல்லு.

நான் : இப்ப அவர் எங்க இருக்காருன்னு இங்க சொல்றாரு. அமெரிக்க நாட்டிலே மீனாசோட்டா மாகாணத்திலே....

மயிலார் : நிறுத்து நிறுத்து. அது மீனாசோட்டா இல்ல. மினசோட்டா. இதுக்கு மேல நீ விளக்கம் சொல்ல வேண்டாம். நானே சொல்றேன். அமெரிக்க நாட்டின் ஐம்பது மாகாணங்களில் ஒன்றான மினசோட்டா மாகாணத்திலே கணிப்பொறியில் மெலாளராகப் பணிபுரிந்து அங்கேயே குடும்பத்துடன் குமரன் இன்பமாக வசித்து வருகிறார். "வாழ்க தமிழ்! வாழ்க தமிழே! வாழ்வு பெற நானும் வந்தேனே" என்று முடித்திருக்கிறார். தமிழ் மீது அவர் கொண்ட அன்பு தெரிகிறது. அந்தத் தமிழும் நீடு வாழ்ந்து அந்தத் தமிழால் தானும் நீடு வாழ விரும்புவதை தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழ்க்கடவுளின் சார்பாக குமரனையும் அவர்தம் குடும்பத்தாரையும் நீடு நிலைத்து இன்புற்று வாழ நான் வாழ்த்துகிறேன்.

நான் : நானும் வாழ்த்துகிறேன். (கூட்டத்தோட கோவிந்தா.)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, January 19, 2006

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி

போன வாரம் மயிலாரைக் கூட்டிக் கொண்டு மீண்டும் forum mallக்குப் போனேன். அப்போது landmark கடையில் ஒரு ஒரிஜினல் தமிழ்க் குறுந்தட்டு வாங்கினேன். மயிலார் வம்பு செய்யாமல் இருக்க அவருக்குக் கந்தன் கருணைக் குறுந்தட்டும் வாங்கிக் கொடுத்தேன். நான் வாங்கியது டௌரி கல்யாணம் என்ற திரைப்படம். மிகச்சிறு வயதில் மதுரைக்கு விடுமுறையில் சென்றிருந்த பொழுது விஜயலட்சுமி திரையரங்கில் பார்த்தது. அப்பொழுது புரியாமலேயே படம் ஏனோ பிடித்திருந்தது. அந்த நினைப்பில் குறுந்தட்டை வாங்கி விட்டேன்.

விசு நடித்து இயக்கிய படம். சென்னைப் புறநகர்க் கிராமங்களான தின்னனூர் எனப்படும் திருநின்றவூரை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். விசு, விஜயகாந்த், ஸ்ரீவித்யா, விஜி மற்றும் எஸ்.வீ.சேகர் நடித்தது. எளிமையான கதை. எளிமையான பின்புலம். அழகான வசனங்கள். தேவையான அளவு நடிப்பு. படமும் வெற்றி அடைந்ததில் வியப்பில்லை. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

சரி. கதைக்கு வருவோம். அந்தப் படத்தில் விசுவின் சகோதரி விஜி. விசுவின் குடும்ப நண்பர் விஜயகாந்த். விஜயகாந்த் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள். விஜியைத் தங்கை போல நினைப்பவர். விஜிக்கும் அவர் அண்ணனைப் போல. அடிக்கடி வீட்டுக்கு வந்து விஜயகாந்தின் மகளைப் பார்த்துக் கொள்வார். இதைப் பார்த்த விஜயகாந்தின் மாமியார் விஜயகாந்தின் அம்மாவிடம் சொல்லி விஜியை விஜயகாந்திற்குக் கட்டி வைக்கச் சொல்வர். இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எல்லாரும் ஒரு திருமணத்திற்குப் போக வேண்டி வரும்.

திருமணத்தைப் பார்த்ததும் விஜயகாந்திற்குக் கற்பனை பிறக்கும். தங்கை விஜிக்குத் திருமணம் செய்து வைக்கும் அண்ணனாகக் கனவு காண்பார். காட்சி ஊட்டிக்குத் தாவும். விஜி பட்டுச் சேலையில் இருப்பார். இவர் சட்டையும் பேண்ட்டும் அணிந்து பாடுவார். மெல்லிசை மன்னர் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவார்.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே என்று தொடங்கும் பாடல். நல்ல மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைப்பேன் என்று பாடுவார்.

அடுத்து விஜியின் கற்பனை. அண்ணன் விஜயகாந்த்திற்கு நல்ல அண்ணியைக் கொண்டு வருவதாக கற்பனை செய்து பாடுவார். இப்பொழுதும் கற்பனையில் ஊட்டி. ஆனால் விஜயகாந்த் பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஒரு துண்டும் தோளில் போட்டுக் கொண்டு வருவார். பாவாடை தாவணி அணிந்து கொண்டு விஜயகாந்தின் மகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடுவார். இப்பொழுது வாணி ஜெயராமின் முறை.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே
ரம்பைகளைச் சபைக்களைத்து கண்ணகியைக் கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
பிஞ்சு மகள் கொஞ்சும் மொழி பஞ்சனையில் கேளாமல்
நெஞ்சினிலே தாலாட்டுவேன்...ஓஓஓஓஓஓஓஓஓ
நெஞ்சினிலே தாலாட்டுவேன் (ஸ்ரீராமன் ஸ்ரீதேவி...

அடுத்த காட்சியில் விஜயகாந்தின் தாயார் யோசிப்பார். விஜயகாந்தின் மாமியார் என்னவென்று கேட்க. இருவரையும் ஜோடியாக வைத்துப் பார்ப்பதாகச் சொல்வார். இப்பொழுது மறுபடியும் பாடலின் தொடர்ச்சி ஊட்டியில். விஜயகாந்தும் விஜியும் மேற்கத்திய உடைகளை அணிந்து கொண்டு பாடுவார்கள். இந்த முறை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணிஜெயராமும் இணைந்து பாடுவார்கள்.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே....

சரி. சரி. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கின்றீர்களா? ஒரு குறைந்த செலவுப் படத்தில் வருகின்ற ஒரு பாடல் காட்சியை இப்பொழுது சொன்னேன். அந்த ஒரு பாடலில் எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று பார்த்தீர்களா? இந்தக் காட்சியை மெல்லிசை மன்னருக்கும் ஆலங்குடி சோமுவிற்கும் விசு விளக்கமாகச் சொல்லியிருப்பார். அவர்களும் அந்தச் சூழ்நிலைக்குத் தேவையானதை இசையிலும் பாடலிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். பாடலைக் பார்த்தால் ஒவ்வொரு பகுதிக்கும் வித்தியாசங்கள் காட்டியிருப்பது தெளிவாகவும் அழகாகவும் தெரியும்.

என்னதான் சொல்ல வருகிறேன்? இன்றைக்குத் திரைப்படங்களில் பாடல் காட்சிக்கான சூழ்நிலையை எப்படி இயக்குனர்கள் விளக்குவார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஆறு சூழ்நிலைகளுக்குள் பெரும்பாலான பாட்டுகளை அடக்கி விடலாம்.
1. கதாநாயகன் அறிமுகப் பாட்டு
2. கதாநாயகி தனியாக ஆடும் பாட்டு
3. காதல் பாட்டு
4. குத்துப் பாட்டு
5. Western Style பாட்டு
6. நகைச்சுவை நடிகர்/நடிகை பாட்டு

இதற்கு மேலும் காட்சிகள் வெகுசில இயக்குனர்களின் படங்களில் மட்டுமே வருகின்றன. சேரன், பாலா, தங்கர் என்று ஒரு சிலரே. ஏனிப்படி? பாடல்கள் என்பவையே இயல்புக்கு அப்பாற்பட்டவைதான். ஆனால் அதிலும் எத்தனை வகையான சூழ்நிலைகளைக் காட்டியிருக்கிறார்கள். இது மாதிரி புதுமாதிரி சூழ்நிலைகள் ஏன் இன்றைக்கு நமக்குக் கிடைப்பதில்லை. இன்றைய பாடல்கள் எனக்கும் பிடித்திருக்கிறது. ரசிக்கிறேன். தாளம் போடுகிறேன். ஆனாலும் கதைகளில் மாறுபட்ட சூழ்நிலைப் பாடல்களுக்கான தேறுதல் இல்லை என்பதும் உண்மைதான். சேரனின் பொற்காலம் படத்தில் வரும் "கருவேலங் காட்டுக்குள்ள" பாடலும் எவ்வளவு உணர்வுப் பூர்வமாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இன்னும் நிறைய அடுக்கலாம்.

நல்ல கதைகளுக்குத் திரைப்படத்தில் இடமில்லாமல் போனது வருத்தம்தான். வித்தியாசமான கதைகளைப் படமாக எடுத்தால் பார்க்க மாட்டர்கள் என்று இல்லை. அதை எடுக்கும் துணிவு பலருக்கும் இல்லை என்பதே உண்மை. பணமும் குறிக்கோள் என்றிருந்த நிலையிலிருந்து பணம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. இதற்கு மேலும் என்ன செய்ய முடியும்? என் காதில் இன்னமும் ஸ்ரீராமன் ஸ்ரீதேவி என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணிஜெயராமும் பாடுவது கேட்கிறது. பழையதோ புதியதோ இது போன்று வித்தியாசமான சூழ்நிலைப் பாடல்கள் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா?

அன்புடன்,
கோ.இராகவன்