Thursday, October 06, 2005

கடவுளும் காதலும் (சிலேடை)

நல்லவை தீயவை
நயப்பது உண்டு
இல்லை என்பார்
இகலில் உண்டு
கவலை கூடிடுங்
கைவிடக் கண்டு
பாவலர் பன்முறை
பண்ணிற் படைத்தும்
ஆவலெப் பொழுதிலும்
அடங்கிட மறுக்கும்
மடமுடை மானிடர்
மனதில் நின்றும்
வடமிடும் வாழ்க்கையின்
வளத்திற் கென்றும்
தடமது கண்டிலர்
தரணியி லின்றே
கடவுளும் காதலும்
கருத்தினி லொன்றே

நண்பர்களே, கடவுளுக்கும் காதலுக்கும் நான் எழுதிய சிலேடை இது. புரியும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் சொல்லுங்கள். நானே விளக்குறேன்.

இது ஆசிரியப்பாவின் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதியது. எழுதி நாலரை வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது ஆசிரியப்பாவின் இலக்கணமே மறந்து விட்டது.

அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

ராகவன் நீங்களே விளக்கிடுங்க... நம்மால முடியல

said...

சரி கணேஷ். உங்களுக்காக.

நல்லவை தீயவை
நயப்பது உண்டு
நல்லவை தீயவைகளுக்குக் கடவுளே காரணம் என்போம்.
காதலாம் நல்லதும் உண்டு. தீயதும் உண்டு என்போம்

இல்லை என்பார்
இகலில் உண்டு
கடவுள் இல்லை என்பாரும் உலகில் உண்டு.
காதல் இல்லை என்பாடும் உலகில் உண்டு

கவலை கூடிடுங்
கைவிடக் கண்டு
கடவுள் கைவிட்டாலும் கவலைதான்.
காதல் கைவிட்டாலும் கவலைதான்.

பாவலர் பன்முறை
பண்ணிற் படைத்தும்
ஆவலெப் பொழுதிலும்
அடங்கிட மறுக்கும்

புலவர்கள் கடவுளைப் பலமுறை பாடியிருந்தாலும், இன்னும் ஒருமுறை பாட வேண்டுமென்ற ஆவல் எப்பொழுதும் அடங்கிட மறுக்கும்
கவிஞர்கள் காதலைப் பலமுறை பாடியிருந்தாலும், இன்னும் ஒருமுறை பாட வேண்டுமென்ற ஆவல் எப்பொழுதும் அடங்கிட மறுக்கும்

மடமுடை மானிடர்
மனதில் நின்றும்
வடமிடும் வாழ்க்கையின்
வளத்திற் கென்றும்
நமது மனதில் நின்று நிலைத்து வாழ்க்கையின் வளத்திற்கு என்றும் கடவுளே காரணம்.
நமது மனதில் காதல் நின்று வாழ்க்கையின் இன்ப வளத்திற்கு என்றும் காரணம்.

தடமது கண்டிலர்
தரணியி லின்றே
கடவுள் எங்கே என்ற தடம் கண்டவர் இன்று தரணியில் உண்டா?
காதல் எங்கே என்ற தடம் கண்டவர் இன்று தரணியில் உண்டா?

கடவுளும் காதலும்
கருத்தினி லொன்றே
ஆகையால் கடவுளும் காதலும் கருத்தினில் ஒன்றே!

said...

raghav,
is this really asiriappa...aachiriyakuriappa...anyway its really good...


thank you for sharing my concerns on naming babies in tamilnadu

said...

ஆசிரியப்பான்னா என்னென்னு நாலு வருஷம் முன்னாடியும் தெரியாது.. இப்பவும் ஹூஹூம்...

எப்படியும், "அனுபவிக்கணும். ஆராயக்கூடாது" இல்லியா?

கவித கவித!

said...

ராகவன்,

இது எப்படி இருக்கு...??

http://weblogimages.com/static/gBV390586QY6.jpg

said...

முத்து,

இது உண்மையிலேயே ஆசிரியப்பாதான். நான் வரிகளை ஒழுங்காக அலைன் செய்ய முயன்றேன். முடியவில்லை. tab எப்படி போடுவது?

// எப்படியும், "அனுபவிக்கணும். ஆராயக்கூடாது" இல்லியா? //
அனுபவிச்சீங்களா! நன்றி ராமநாதன். புரிஞ்சதுல்ல? ;-)

said...

// இது எப்படி இருக்கு...??

http://weblogimages.com/static/gBV390586QY6.jpg //

சுந்தர் இந்தக் கவிதையும் தினம் ஒரு கவிதையில் 2001ல் வந்ததுதான். நீங்களும் அதில் இருந்தீர்களா? உங்களை இங்கும் சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி.

உங்கள் கவிதையும் பிரமாதம். படித்த நினைவு இருக்கின்ற மாதிரியும் இருக்கிறது. புதுக்கவிதை என்பதால் இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மரபுக் கவிதையை நான் சோதனை முறையில் எழுதிப் பார்த்தேன். நான் தேர்ந்த மரபுக் கவிஞன் அல்லன்.

said...

ராகவன் சார் கவிதை நன்றாக இருக்கிறது.

ஆசிரியப்பா இலக்கணம் என்ன என்பதையும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். இல்லையேல் வெண்பா ஆசிரியப்பா இவைகளுக்கான இலக்கணத்திற்கு ஏதேனும் சுட்டி இருந்தால் கொடுத்தருளுங்கள்.

said...

// ராகவன் சார் கவிதை நன்றாக இருக்கிறது.//
நன்றி கணேஷ். விடுப்பில் இருந்ததால் உங்கள் பதிவைப் பார்க்கவில்லை. சரி. கோதுமைக் களவாணி படித்தீர்களா?

//ஆசிரியப்பா இலக்கணம் என்ன என்பதையும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். இல்லையேல் வெண்பா ஆசிரியப்பா இவைகளுக்கான இலக்கணத்திற்கு ஏதேனும் சுட்டி இருந்தால் கொடுத்தருளுங்கள். //
இதற்கான சுட்டிகள் நிறைய இருக்கின்றன. கண்டிப்பாகக் கொடுக்கிறேன். ஆனால் அருள்வது ஆண்டவன் கையில் இருக்கிறது.