Friday, October 28, 2005

தீபாவளியும் தீபாவலியும்

தீபாவளியும் தீபாவலியும்

தீபாவளி வந்தாச்சு. என்னென்னவோ கொண்டாட்டங்கள். குதூகலங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொன்னு மாறிக்கிட்டே வருது. தீபாவளி கொண்டாடும் முறையும்தான். இந்த ஆண்டு தீபாவளிக்கு எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பரிசு world space radio. ஆபீஸ்ல ஒரு ஆஃபர் சேல்ஸ் போட்டிருந்தான் ஆர்டர் கொடுத்துட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வந்து இன்ஸ்டால் பண்ணீருவாங்க.

இத்தன தீபாவளி கொண்டாடிருக்கமே...எத்தன தீபாவளி நெனவிருக்குன்னு பாத்தா.....கணிசமா கொஞ்ச தீபாவளிகள் தனியா வரிசைல வந்து நிக்குதுங்க.

தீபாவளிக்கும் எனக்கும் உறவு ரொம்ப நல்லவே இருந்ததுன்னு பொய் சொல்ல விரும்பல. ஏன்னா....எனக்கு ஆன விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்கோ அல்லது தீபாவளியை ஒட்டியோதான் ஆயிருக்கு.

விளாத்திகுளம் பக்கத்துல புதூர். அதுதான் எங்க மூதாதையார் ஊர். இப்பவும் அந்தூர்ல எங்க சித்தப்பா குடும்பமும் மத்த சொந்த பந்தங்களும் இருக்காங்க.

தீபாவளி வந்துச்சுன்னா.....சொந்தக்கார சாதிக்கார பொம்பளைங்களெல்லாம் வெரதம் இருந்து பூஜை செய்வாங்க. இந்த வெரதத்துல பலவிதம் இருக்கு. அத இன்னோரு சமயம் பாப்போம்.

தீபாவளி இரவில் அருப்புக்கோட்டை ரோட்டுல உள்ள ஜின்னிங் பாக்டரி வாசல்ல இருக்குற வில்வ மரத்தடியில பூஜை பண்ணுவாங்க. மரத்தடியில செலை எதுவும் இருக்காது. களிமண் கொண்டாந்து அதப் பெசைஞ்சி சுத்துச் சுவரு மூணு அடுக்கு வெச்சி (எல்லாம் தோராயந்தான்) நடுவுல உருண்டை பிடிச்சி வெப்பாங்க. அதுக்குக் குங்குமமும் மஞ்சளும் வெச்சா சாமி தயார்.

பூஜைக்குள்ள ஏற்பாடுகள் வீட்டுல நடக்கும் பாருங்க...அப்பபா......விரதம் இருக்குற ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தட்டு. அதுல 21 அதிரசம், 21 வாழப்பழம், 21 வெல்லக்கட்டி (மண்ட வெல்லம் கெடையாது. வெல்லக்கட்டின்னு சின்னதா இருக்கும்.), 21 முடி போட்ட நோம்புக் கயிறு, 21 வெத்தல, 21 பாக்கு, காதோலை கருகமணின்னு நெறைய அடுக்கி வெச்சிருப்பாங்க.

காதோலை கருகமணின்னா தெரியுமா? அடிக்கிற மிட்டாய் ரோஸ் கலர்ல ஓலையைச் சுருட்டி அதை ஒரு சின்ன கருப்பு வளையல்ல செருகீருப்பாங்க. அதுதான் காதோலை கருகமணி. (இதப்பத்தியும் ஒரு தனி பதிவு போடனும்.)

அப்புறம் பூவு, சூடம், வெளக்கு, மாவெளக்குன்னு எடுத்துக்கிட்டு போவாங்க. கொழுக்கட்ட வெளக்கு வைக்கிறவங்களும் உண்டு. பெரிய சுமங்கலிப் பெண் (அநேகமா ஒரு பெரிய பாட்டி) வந்து பூஜையைத் துவக்குவாங்க.

மந்திரமும் தெரியாது. ஆகமும் தெரியாது. ஆனா ஆத்மார்த்த பூஜை நடக்கும். தமிழில் அச்சடிச்ச ஒரு கதை புத்தகம் இருக்கும். அதைப் படிப்பாங்க. அதுக்கப்புறம் அம்மனோட போற்றி இருக்கும். அதைச் சொல்லுவாங்க. அப்புறம் சூடம் காமிச்சி, பூஜை முடியும். அந்நேரம் ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்குற சீதாராமு டாக்கிசில் படமும் முடிஞ்சிருக்கும்.

பூஜையெல்லாம் முடிஞ்சதும் எல்லாரும் மரத்தைச் சுத்துவாங்க. அந்த மரம் ரொம்பவே பழைய மரம். ஆகையால ஊர்ப் பொம்பளைகளுக்கு அந்த மரம்னா ஒரு செண்ட்டிமெண்ட்டு. (இராமநாதன், சென்ட்டிமென்ட்டுன்னு தொடர்ந்து அடிச்சா செந்த்டிமெந்த்டு அப்படீன்னு வருது. அதான் செண்ட்டிமெண்ட்டுன்னு லேசா அடிச்சிட்டேன். ஹி ஹி)

நானும் சின்னப்பய, எல்லோரோடையும் சேந்து மரத்தச் சுத்துனேன். ரெண்டு மூணு மரம் ஒன்னாச் சேந்து வளந்த மரம் அது. வேணுக்குமுன்னே ரெண்டு மரத்துக்குள்ள நசுங்கி நெளிச்சி போனேன்.

எல்லாரும் ஒழுங்கா மரத்தச் சுத்திக்கிட்டு இருந்தாங்க. நடுராத்திரி. திடீருன்னு நான் அம்மான்னு கத்துறேன். எல்லாரும் ஓடி வந்து பாத்தாங்க. ஒரு பெரிய பாட்டில் துண்டு பாதத்தைக் கிழிச்சிக்கிட்டு ஆழமாப் போயிருக்கு. ரத்தம் சொளுசொளுன்னு ஊத்துது.

என்னையத் தூக்கிக்கிட்டு அங்க இருக்குற ஆஸ்பித்திரிக்கு ஓடுறாங்க. அந்த டாக்டர் எனக்கு அக்கா முறை வேணும். ஊசீல மருந்து ஏத்துறாங்க.....எனக்கு ஊசீன்னா பயம்.....வலி வேற. மூனு பேரு என்னைய அழுத்திப் பிடிச்சிக்கிட்டதும் ஊசி மருந்தோட ஏறுச்சு. ஓஓஓஓஓஒன்னு கத்துனது இன்னும் நல்லா நெனவிருக்கு. பக்கத்துல இருந்த சோடா பாக்டரிக்காரரு தூக்கத்துல எந்திரிச்சி வந்துட்டாரு.

இப்படிப் போச்சு அந்தத் தீபாவளி. அடுத்த வருசம் என்னாச்சு தெரியுமா? ஒன்னும் ஆகலை. தீபாவளி நல்லபடியாப் போச்சு. தீபாவளிக்குப் பின்னாடியே கார்த்திகை வரும். தூத்துக்குடி புதுக்கிராமத்தில் எல்லா வீட்டுலயும் வெளக்கு ஏத்தி வெச்சிருப்பாங்க. ரொம்ப அழகா இருக்கும்.

எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருந்தவங்க தூத்துக்குடி காமராஜ் காலேஜ் ஃபுரபசர் குடும்பம். அவங்களுக்கு ஊருல இருந்து வெடிகள் நெறைய வரும். அந்த வீட்டுப் பையன் என்னோட நண்பன். அன்னைக்கும் வீட்டுல நெறைய அகல் வெளக்குகள ஏத்தி வெச்சிட்டு காத்துல அணையாம வாசல்ல உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன்.

அப்ப பக்கத்து வீட்டுலயும் வெளக்கு வெச்சிருந்தாங்க. அங்க போய்ப் பாக்கலாமுன்னு வேகமா வெளிய ஓடி பக்கத்து வீட்டுக்குள்ள வேகமா நொழஞ்சேன். ஆஆஆஆஆஆஆஆஆஆன்னு அலறிக்கிட்டே கீழ விழுந்தேன்.

பின்னே...என்னோட ஒரு தொடையே வெந்துருச்சே. என்னோட நண்பன்னு சொன்னேனே அவன் பென்சில் பிடிச்சிக்கிட்டு இருந்தான். அவன் வாசல்ல நின்னத நான் பாக்கல. நான் வேகமா வந்தத அவன் எதிர்பாக்கல. சர்ருன்னு தொடைல பட்டு தொடை வெந்துருச்சு.

அப்ப ஸ்டெச்சிலான் கால்சட்டை ரொம்ப பேமஸ். கலர்கலரா இருக்கும். அதுதான் போட்டிருந்தேன். அது தீயில உருகி தோலில் ஒட்டிக்கிச்சு வேற.

அதப் பாத்ததும் எங்கத்தைக்கு மயக்கம் வந்துருச்சு. கிறுகிறுன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பக்கத்து வீட்டு ஃபுரபசர்தான் என்னை சைக்கிள்ள தூக்கீட்டுப் போயி டாக்டர் கிட்ட காட்டுனாரு.

அந்த டாக்டரும் ஒரு ஊசில மருந்த ஏத்தி சினிமா டாக்டரு மாதிரி மேல பாத்து அமுக்குனாரு. அந்த வலியிலயும் நான் கதறுனேன். ஊசிய புண்ணப் பாத்துக் கொண்டு வந்தாரு. "ஐயோ டாக்டர். வேண்டாம். புண்ணுல ஊசி போடாதீங்க வலிக்கும்"....நாந்தான் கதறுனது.

ஆனா அவரு புண்ணுல ஊசி போடல. அந்த மருந்த புண்ணுல பீச்சி அடிச்சாரு. அப்புறமா தொடச்சு மருந்து போட்டு கட்டு கட்டினாரு.

ரொம்ப நாள் நான் கஷ்டப்பட்டு (மூனாவது படிச்சப்ப) நடந்தேன். உக்கார முடியாது. ஓட முடியாது. தூக்கத்துல தொடை மேல் அடுத்த கால் பட்டுட்டா எரியும். அப்புறம் ஒடனே தூக்கம் வராது. இன்னும் நெறைய.

இன்னும் நெறைய தீபாவளிகள் இருக்கு. இப்ப இவ்வளவு போதும். இதுனால நான் சொல்ல வர்ரது என்னன்னா....

1. அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
2. வெடி வெடிக்கும் போது பாத்துப் பத்திரமா வெடிங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

தீபாவளி வாழ்த்துக்கள் ராகவன் உங்களுக்கும்!

said...

யப்பா...ரொம்ப பயமுறித்தீயளே......

said...

தீபாவளி நல்வாழ்த்துகள்.

said...

ராகவன், மூர்த்தி உங்களுக்கு வாழ்த்துக்'கள்' சொல்லியிருக்கார்...கள் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ?

said...

(ச)கோ(தரர்).ராகவன்,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,

said...
This comment has been removed by a blog administrator.
said...

இராகவன்,
"கள்" இல்லா தீபாவளி வாழ்த்துகள்! :)

சரியா குமரன்?

said...

மிக்க சரி இராமநாதன் (இன்னும் இராமநாதன் தானா, இல்லை இராமநாதர்ன்னு பேர மாத்திட்டீங்களா?).

வாழ்த்துகள் தான் ராகவனுக்கு கள் போல...நாமும் வாழ்த்துக்கள் சொல்லலாம் தப்பில்ல.

said...

யப்பா!! அடிபட்ட அனுபவங்கள் பயங்கரமா இருக்கு..

நல்ல விஷயங்களுக்காக நினைவில் வைத்துக் கொள்ள கூடிய தீபாவளி அமைய வாழ்த்துகள். (குமரன், இராமநாதன், இன்னாபா கன்பூஸ் பண்றீங்க..அது வாழ்த்துக்கள் இல்லீயா?)

said...
This comment has been removed by a blog administrator.
said...

// களிமண் கொண்டாந்து அதப் பெசைஞ்சி சுத்துச் சுவரு மூணு அடுக்கு வெச்சி (எல்லாம் தோராயந்தான்) நடுவுல உருண்டை பிடிச்சி வெப்பாங்க. அதுக்குக் குங்குமமும் மஞ்சளும் வெச்சா சாமி தயார். //

அந்த காலத்துல நாம கும்பிடற சாமி நமக்கு அதிக செலவு வைக்கக்கூடாதுன்னு நிறைய பேர் நினைப்பாங்களாம். அதனால தான் பிள்ளையார் சிலை வைக்கிறதா இருந்தா திருடிட்டு வந்து வைக்கணும்னு சொல்வாங்க. இதில எந்தளவிற்கு உண்மை உண்டுன்னு தெரியாது.

//1. அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.//
உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள் ராகவன்.

//2. வெடி வெடிக்கும் போது பாத்துப் பத்திரமா வெடிங்க.//
இங்க (டெல்லியில்) பெரிய பெரிய வெடியா வெடிக்கிறாங்க. சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க...:-(

said...

ராகவன்,

வலி இல்லாத தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

கள்ளோடும் கள்ளில்லாமலும் வாழ்த்துக் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.

என்னுடைய தீபாவளி நன்றகக் களிந்தது. கள்ளின்றிக் களிந்தது. அந்தப் பழக்கம் எனக்கு இல்லை.

// பிள்ளையார் சிலை வைக்கிறதா இருந்தா திருடிட்டு வந்து வைக்கணும்னு சொல்வாங்க. இதில எந்தளவிற்கு உண்மை உண்டுன்னு தெரியாது. //
கணேஷ், இதுவும் மூடநம்பிக்கைன்னு நினைக்கிறேன். இதற்கும் எந்த அறிவார்ந்த பழக்க வழகத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்று தெரியவில்லை.

// இங்க (டெல்லியில்) பெரிய பெரிய வெடியா வெடிக்கிறாங்க. சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க...:-( //
கணேஷ். இங்க பெங்களூரிலும் இந்த வருசம் சத்தம் அதிகம். வானவேடிக்கைகளும் அதிகம். நான் வெடியே போடலை.