Monday, October 24, 2005

சிகப்பு ரோஜாக்கள்

சிகப்பு ரோஜாக்கள்

சிகப்பு ரோஜாக்கள்
அவளுக்குப் பிடிக்கும்
அவளும் ரோஜா
அவள் பெயரும் ரோஜா

ஒவ்வோர் ஆண்டும்
திருமண நாளில்
அவள் வீட்டு வாயிலில்
பூங்கொத்தொன்று
சிகப்பு ரோஜாக்களாய்
அவள் கணவன் பரிசாய்
நாற்பதாண்டுகளாய் அப்படித்தான்

இந்த ஆண்டிலோ
அவன் இல்லை
வராத வழி போயினான்
ஆயினும் வந்தது
அவள் வீட்டு வாயிலில்
பூங்கொத்தொன்று
சிகப்பு ரோஜாக்களாய்

வழக்கம் போல
அவனது அழகான கையெழுத்தில்
"அன்பே ரோஜா!
இந்த ஆண்டும்
இரட்டிப்பானதடி
உன் மேல் அன்பு!
இந்த ஆண்டும்
பெருகியதடி
உன் மேல் காதல்!
என் செல்லக் கண்ணே!"

அவளுக்கு வியப்பில்லை
அவனை அவளே அறிவாள்
முன்னதாகவே
எதையும் செய்து முடிப்பவன்
விட்டுச் செல்லும் முன்பே
கட்டிச் சென்றால்
கடையில் முன்பணத்தை

தெரிந்து செய்தானோ
தெரியாது செய்தானோ
நினைக்க நினைக்க
உப்பளமாகின அவள் கண்கள்

சீராக நறுக்கினாள்
ரோஜாத் தண்டுகளை
அழகான தொட்டியிலிட்டு
அவன் படத்தின் முன்னிட்டாள்
கண்ணீர்க் கால்வாய்களில்
காதலும் சோகமும் உடைப்பெடுத்தது

இன்னொரு ஆண்டும் கழிந்தது
அவனன்றி ஓரணுவும் அசையவில்லை!


அன்புடன்,
கோ.இராகவன்

5 comments:

said...

கண் கலங்க வைத்துவிட்டீர்கள் ராகவன்....

said...

ராகவன்...

நெகிழ்வான கவிதை....
இதே மாதிரி இரு விஷயம் மின்னஞ்சலில் வந்ததாக ஞாபகம். உங்களுக்கும் அது தான் அகத்தூண்டுதலா?

said...

nice one...

said...

நன்றி குமரன். கண்கலங்க வைத்ததற்கு மன்னியுங்கள். என்ன செய்வது. கவிதை அப்படி.

// நெகிழ்வான கவிதை....
இதே மாதிரி இரு விஷயம் மின்னஞ்சலில் வந்ததாக ஞாபகம். உங்களுக்கும் அது தான் அகத்தூண்டுதலா? //
அப்படியா கணேஷ். எனக்கு நினைவில்லை. இந்தக் கவிதையை இரண்டாண்டுகளுக்கு முன்பு எழுதினேன். பழைய குப்பையைக் கிளறும் பொழுது கிடைத்தது. பதித்து விட்டேன்.

// nice one... //
நன்றி மோகன்.

said...

மனச தொட்டுட்டீங்களே ராகவன்.