ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.
ஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே! இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான்.
"எக்ஸ்கியூஸ் மீ" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.
பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.
அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். "வாட் இஸ் யுவர் நேம்?" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.
"பேர் சொல்லும்மா." மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.
"எம் பேர் புண்ணிம்மா" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.
"அவ பேர் பூர்ணிமா." மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.
"பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்." தத்துவமாக நினைத்தது மனது.
இரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "குழந்தைதானே. இருக்கட்டும்."
"சாரி." அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.
"பூர்ணிமா! சாக்லேட் சாப்பிடுவையா? மாமா தரட்டுமா?" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். "வேண்டாம்" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.
அதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.
அதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் "நான்வெஜ்" கேட்டார். நானும் "நான்வெஜ்" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.
உணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.
அவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.
அந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை ·போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த ·போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் ·போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.
நான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க."
என்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற்குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.
இறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.
யாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். "தாத்தா" என்று சைகை காட்டினாள். "போய்ட்டு வர்ரோம்" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.
காரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.
"ஏன் ரகு? நமக்கு மட்டும் இப்படி? டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான்? நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா? நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா? அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு?" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
கருத்து சொல்ல வார்ததை எதுவும் வர்றல்ல.. அதான் நட்சத்திரத்தைச் சொடுக்கிட்டேன்
வாழ்த்துகள் ராகவன்.
சிறப்பான கதை. உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
மெலிதாக ஆரம்பித்து இறுதியில் அழகாக கனத்தை சேர்த்திருக்கிருக்கிறீர்கள். அது கதைக்கு ஒரு அழுத்தத்தை தந்திருக்கிறது.
இறுதி வரிகளில் இன்னம் கொஞ்சம் வலி ஏற்றி இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
அன்புடன்
முத்துகுமரன்
அட இது கதையா? நிஜமா? படித்து முடித்தபொழுது மனதை ஏதோ செய்கிறது. சற்று முன்னர் செய்தியில் கொச்சி விமானம் 1 மணிநேரம் தாமதம் அதற்கு காரணம் மாமியார் மருமகள் சண்டை என்பதை கேட்டவுடன் சிரிப்பதா? அழுவதா? தெரியவில்லை. ம்மமம... அப்படியும் நடக்கிறது, இப்படியும் நடக்கிறது.
கதையா...! நான் நிசமாவே நடந்ததுன்னு நினைச்சேன். இறுதியை ஏதாவது இன்னும் கொஞ்சம் எப்பிடி சொல்லுறது. ம்.. அப்பிடி எழுதிஇருக்கலாம்.
இராகவன்,
உருக்கமான நிகழ்வுகள். நேரில் பார்க்கும் போது பேசலாம்.
ரங்கா.
// கருத்து சொல்ல வார்ததை எதுவும் வர்றல்ல.. அதான் நட்சத்திரத்தைச் சொடுக்கிட்டேன் //
நன்றி தேவ்.
// சிறப்பான கதை. உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
மெலிதாக ஆரம்பித்து இறுதியில் அழகாக கனத்தை சேர்த்திருக்கிருக்கிறீர்கள். அது கதைக்கு ஒரு அழுத்தத்தை தந்திருக்கிறது. //
நன்றி முத்துக்குமரன்.
// இறுதி வரிகளில் இன்னம் கொஞ்சம் வலி ஏற்றி இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். //
நானும் ஏற்ற நினைத்தேன் முத்துக்குமரன். ஆனால் பாருங்கள்...இந்த வலியே எனக்குப் பெரிதாகத் தெரிந்தது. ஆகையால் அத்தோடு நிறுத்தி விட்டேன்.
// அட இது கதையா? நிஜமா? படித்து முடித்தபொழுது மனதை ஏதோ செய்கிறது. சற்று முன்னர் செய்தியில் கொச்சி விமானம் 1 மணிநேரம் தாமதம் அதற்கு காரணம் மாமியார் மருமகள் சண்டை என்பதை கேட்டவுடன் சிரிப்பதா? அழுவதா? தெரியவில்லை. ம்மமம... அப்படியும் நடக்கிறது, இப்படியும் நடக்கிறது. //
அநுசுயா, இது கதையேதான். நிஜமில்லை. நிஜம் போல இருக்கும் கதைன்னு சொல்லலாமா?
என்னது மாமியார் மருமக சண்டைல பிளைட் லேட்டா? அதென்ன கூத்து? அதையும் கொஞ்சம் சொல்லுங்க. கேட்டுக்கிர்ரோம்.
// Raghavan: I dunno if the incident is true or an imagination. From you photo I thought you are a bachelor.
Nevertheless, it was a moving post. I almost felt like sitting next to Poornima. //
ராஜ், இது கதையேதான். நான் பேச்சிலர்தான். இன்னும் பேச்சு இலர் ஆகவில்லை.
நீங்கள் பூர்ணிமாவின் அருகாமையை உணர்ந்தால் அதுதான் பூர்ணிமாவின் வெற்றி.
// BTW, my daughter's name is also Shruti (2.5 yrs old) :) //
ஷ்ருதி என்பதும் நல்ல பெயர். உங்கள் மகள் மிகச் சிறப்பாக வளர்ந்து நல்ல பெயருடன் முன்னேற என்னுடைய வாழ்த்துகள்.
// கதையா...! நான் நிசமாவே நடந்ததுன்னு நினைச்சேன். இறுதியை ஏதாவது இன்னும் கொஞ்சம் எப்பிடி சொல்லுறது. ம்.. அப்பிடி எழுதிஇருக்கலாம். //
நளாயினி..டீவீல வர்ர கதையல்ல நிஜம் மாதிரி இது நிஜமல்ல கதை. முழுக்க முழுக்க கற்பனைக் கதை. ஜெட் விமானத்தில் இந்திய நகரங்களுக்கிடையில் நான் பறந்திருக்கிறேன் என்றாலும் டில்லிக்கும் சென்னைக்கும் இடையில் பறந்ததில்லை.
இறுதியில் நீங்க சொல்ல வர்ர மாற்றம் புரியலை நாளாயினி. விளக்கமாகவே சொல்லுங்கள். அடுத்த கதை எழுதுகையிலாவது பயனாகும்.
// இராகவன்,
உருக்கமான நிகழ்வுகள். நேரில் பார்க்கும் போது பேசலாம்.
ரங்கா. //
ரங்கா இது நிகழ்வே அல்ல. வெறும் கற்பனைக் கதை. முழுமையான தூக்கம் வராத ஒரு இரவில் தோன்றிய கதை.
ஆனாலும் பூர்ணிமா போன்றவர்களைப் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன்.
"தன்மை ஒருமை" கதைகள் எனக்குப் பிடிக்கும்! அந்த வகையில் இக்கதையும் நன்றாக வந்திருக்கிறது. முதலில் உங்கள் அனுபவங்களைச் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். பிறகு கதைதான் என்று புரிந்தது.
பாராட்டுகள்.
நல்ல கதை......மனத்தை கனக்கசெய்துவிட்டது.
//கருத்து சொல்ல வார்ததை எதுவும் வர்றல்ல//
உண்மை. உண்மை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நட்சத்திரப் பதிவு. (I mean நட்சத்திர வாரத்தில் வந்திருக்க வேண்டியது).
ராகவன்,
உங்களுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கறதாக எல்லோரையும்( சரி, சிலரை) நினைக்கவச்சீங்க பாருங்க. அதுதான் உங்க வெற்றி.
மனைவி பெயர் சுனீதா. மகள் ஸ்ருதி.
கதை நல்லா வந்திருக்கு.
ரொம்ப நல்ல கதை ராகவன். இன்னும் நிறைய இப்படி பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.
கதை என்றே தோன்றவில்லை. நேற்றைய செய்தி இந்த மாமியார் மருமகள் சண்டை இன்றைய தினமலரில் வந்துள்ளது. ஒரு சிறு திருத்தம் எனது பெயர் தமிழில் அனுசுயா.
உருக்கமான கதை. கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு யதார்த்தம். மெல்லிய உணர்வுகளை விவரித்திருக்கும் விதம் அழகு. ரசித்தேன்.
ராகவன்,
நான் வெறும் அஃபிஷியல் ஸ்டார். இந்த வாரத்து உண்மையான ஸ்டார் பதிவு இதுதான்.
கண்ணுல வர வச்சிட்டீங்க ராகவன்.
வாழ்த்துக்கள்.
ஏற்கெனவே இப்படியான சந்தர்ப்பங்களில் திக்குமுக்காடியிருக்கிறேன். ஏற்கெனவே சொல்லியுமிருக்கிறேன். தயவுசெய்து இப்படிப் புனைவுகளை எழுதும்போது இறுதியில் 'யாவும் கற்பனை' என்றோ வேறேதாவது விதத்தில் இது புனைவு என்று உணர்த்தும்விதமாகவோ ஏதாவது அடிக்குறிப்பிடவும்.
இதையே அச்சிதழ்களிலிலோ இணையச் சஞ்சிகைகிளிலோ எந்தக் குறிப்புமின்றி எழுதினால் அவை புனைவுகளென்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வலைப்பதிவில் இப்படி எந்தக்குறிப்புமின்றி எழுதுவது எதிர்மறையான புரிதலையே தரும். அனேகமானோர் சொந்த அனுபவங்களை (சிலர் அவற்றை மட்டுமே) வலைப்பதிவில் பதிந்துவருவது நீங்கள் அறிந்ததே.
எனவே தயவுசெய்து இதைக் கருத்திற்கொள்ளவும். இல்லாவிட்டால் நிறையப்பேருக்குத் திண்டாட்டம்தான். இச்சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்ததாக நினைத்துக்கொண்டு பலர் உங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க, பிறகு நீங்கள் வந்து 'இல்லையில்லை, இதுவெறும் கற்பனைதான்' என்று சொல்ல, அனுதாபம் தெரிவித்தவர்களின் நிலைமை?
வாசகர்களின் திண்டாட்டத்தைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று நாம் நம்பவில்லை.
கதையைப்பற்றி ஏற்கனவே நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள்.
// "தன்மை ஒருமை" கதைகள் எனக்குப் பிடிக்கும்! அந்த வகையில் இக்கதையும் நன்றாக வந்திருக்கிறது. முதலில் உங்கள் அனுபவங்களைச் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். பிறகு கதைதான் என்று புரிந்தது.
பாராட்டுகள். //
நன்றி சுந்தர். பாராட்டுக்கு நன்றி.
// நல்ல கதை......மனத்தை கனக்கசெய்துவிட்டது. //
நன்றி ஜெயச்சந்திரன்.
// உண்மை. உண்மை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நட்சத்திரப் பதிவு. (I mean நட்சத்திர வாரத்தில் வந்திருக்க வேண்டியது). //
குமரன், இந்தக் கதை நட்சத்திர வாரத்தில் தயாராகவே இருந்தது. கனவுகள் பற்றிய பதிப்பில் இந்தக் கதையைப் பற்றியும் சொல்லியிருந்தேன். நட்சத்திரப் பதிப்பில் போடுவதாகவும் சொல்லி...பிறகு இல்லை என்று போடாத கதை இது. துளசி டீச்சர் கூட கனவுல கதையப் போடக் கூடாதுன்னு சொல்லுச்சான்னு கேட்டாங்க.
// உங்களுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கறதாக எல்லோரையும்( சரி, சிலரை) நினைக்கவச்சீங்க பாருங்க. அதுதான் உங்க வெற்றி.
மனைவி பெயர் சுனீதா. மகள் ஸ்ருதி.
கதை நல்லா வந்திருக்கு. //
நன்றி டீச்சர். நீங்க படிச்சு ரசிச்சதுல ரொம்ப சந்தோஷம். ஒங்களுக்கு இது கதைன்னு புரிஞ்சுதான இருந்தது?
// sorry, this is a negative comment- but i just couldnot say this a great piece-may be i neednot have commented...but நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தை பொறுத்தது;) //
ரொம்ப நன்றி பண்டாரம். உங்கள் கருத்து தவறாகவே எடுத்துக் கொள்ளப் படவில்லை. :-) இந்தக் கதையைப் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். அவ்வளவுதானே. இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது. அடுத்த முறை சற்றுக் கவனமாக இருக்கிறேன்.
// ரொம்ப நல்ல கதை ராகவன். இன்னும் நிறைய இப்படி பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். //
ரொம்ப நன்றி சிவா. இன்னும் சிறப்பா முயற்சி பண்றேன்.
// கதை என்றே தோன்றவில்லை. நேற்றைய செய்தி இந்த மாமியார் மருமகள் சண்டை இன்றைய தினமலரில் வந்துள்ளது. ஒரு சிறு திருத்தம் எனது பெயர் தமிழில் அனுசுயா. //
ஆமாம். அனுசுயா. நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். அந்த விமானம் துபாய் சென்று சேரும் வரை அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியே விட வில்லையாம். ஏதாவது நாடகம் செய்து குண்டு வைத்திருப்பார்களோ என்ற பயமாம்.
// உருக்கமான கதை. கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு யதார்த்தம். மெல்லிய உணர்வுகளை விவரித்திருக்கும் விதம் அழகு. ரசித்தேன். //
நன்றி கைப்புள்ள. ஒங்க பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி நம்ம வலைப்பக்கம் வாங்க.
// நான் வெறும் அஃபிஷியல் ஸ்டார். இந்த வாரத்து உண்மையான ஸ்டார் பதிவு இதுதான்.
கண்ணுல வர வச்சிட்டீங்க ராகவன்.
வாழ்த்துக்கள். //
ஜோசப் சார். ரொம்ப நன்றி. உங்கள விடவா நான் எழுதுறேன். உங்களுக்குப் பெரிய மனசு சார்.
// வலைப்பதிவில் இப்படி எந்தக்குறிப்புமின்றி எழுதுவது எதிர்மறையான புரிதலையே தரும். அனேகமானோர் சொந்த அனுபவங்களை (சிலர் அவற்றை மட்டுமே) வலைப்பதிவில் பதிந்துவருவது நீங்கள் அறிந்ததே.
எனவே தயவுசெய்து இதைக் கருத்திற்கொள்ளவும். இல்லாவிட்டால் நிறையப்பேருக்குத் திண்டாட்டம்தான். //
உண்மைதான் வசந்தன். இதுவரை கதைகளை இட்ட பொழுதெல்லாம் நேராதது இப்பொழுது நேர்ந்திருக்கிறது. நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆகையால் அவர்கள் அனுதாபங்களைப் பாராட்டுகளாகவே எடுத்துக் கொள்கிறேன். எனக்கு எந்த மனச் சஞ்சலமும் இல்லை.
ஆனால் இனிமேல் இது கதை என்று எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். தொடக்கத்தில் அல்ல. முடிவில். சரிதானே?
இங்கே கதையின் முடிவில் வேறு ஏதாவது பெயரைக் கொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஏன் ரகு என்ற பெயரைப் பயன்படுத்தினேன் என்று எனக்குக் கண்டிப்பாகத் தெரியாது. அந்நேரம் யாருக்கு இதெல்லாம் தோன்றுகின்றது!
பதிலுக்கு நன்றி இராகவன்.
ஏற்கனவே 'கோதுமைக் களவாணி' என்ற கதைக்கும் (அது உங்களுடையதா இன்னொருவருடையதா தெரியவில்லை) இது நடந்தது.
நீங்கள் துளசியம்மாவிடமிருந்து பின்னூட்டவித்தையைச் சரியாகப் பயின்றிருக்கிறீர்கள்;-)
ரொம்பவும் நெகிழ செய்துவிட்டது இந்த கதை. பாராட்டுக்கள்.
// பதிலுக்கு நன்றி இராகவன்.
ஏற்கனவே 'கோதுமைக் களவாணி' என்ற கதைக்கும் (அது உங்களுடையதா இன்னொருவருடையதா தெரியவில்லை) இது நடந்தது. //
வசந்தன் கோதுமைக் களவாணியும் நான் எழுதியதுதான். இப்பொழுதுதான் நீங்க சொன்ன பிறகு இது நினைவிற்கு வருகின்றது. ம்ம்ம்ம். இனிமேல் குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது.
// நீங்கள் துளசியம்மாவிடமிருந்து பின்னூட்டவித்தையைச் சரியாகப் பயின்றிருக்கிறீர்கள்;-) //
அதான் அவங்கள டீச்சர்னு கூப்பிடுறேனே. :-)
// ரொம்பவும் நெகிழ செய்துவிட்டது இந்த கதை. பாராட்டுக்கள். //
நன்றி இலவசக் கொத்தனார். சரி. இந்தப் பெயர்க்காரணம் சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கிரோம்.
நேற்றே கதையை வாசித்தேன். மனம் கனத்தது. கதையின் முடிவில் கண்ணில் நீர்த்துளிகள் எட்டிப் பார்த்ததும் உண்மைதான்.உங்கள் உண்மையான கதையா, இல்லை கற்பனை கதையா என்பதில் குழப்பமும் வந்தது. அந்த குழப்பத்தில் என்ன சொல்லி எழுதுவது என்றும் குழப்பம் வந்தது. அழகாக கதை சொல்லி இருப்பதை பாராட்டி எழுதுவதா, அல்லது நிஜமானால் அனுதாபம் சொல்வதா என்ற குழப்பம்தான். வசந்தன் சொன்னதுபோல் கதையின் இறுதியில் கற்பனைக் கதையென்று சொல்லியிருந்தால், ஒருவேளை நேற்றே 'அருமையாக, யதார்த்தமாய் கதையை சொல்லியிருக்கிறீர்கள்' என்று பாராட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். ரகு என்று உங்கள் பெயரையே கதையில் உபயோகித்தது, உங்கள் உள்ளத்து மெல்லிய உணர்வுகளைக் காட்டுகிறதென்று கொள்கிறேன்.
really a very nice Story Raghavan.touched my heart.
// 'அருமையாக, யதார்த்தமாய் கதையை சொல்லியிருக்கிறீர்கள்' என்று பாராட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். ரகு என்று உங்கள் பெயரையே கதையில் உபயோகித்தது, உங்கள் உள்ளத்து மெல்லிய உணர்வுகளைக் காட்டுகிறதென்று கொள்கிறேன். //
நன்றி கலை. இனிமேல் ஒவ்வொரு கதையின் முடிவிலும் "இந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகளும் கதாபாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுகின்றவை அல்ல." அப்படீன்னு எழுதலாமுன்னு இருக்கேன். :-))
// really a very nice Story Raghavan.touched my heart. //
நன்றி மோகன். அடிக்கடி நம்ம வலைப்பூ பக்கம் வாங்க.
Unmai Kadhai Ponra oru Anubavam
// Unmai Kadhai Ponra oru Anubavam //
சுதர்சன், உண்மை அனுபவம் போன்ற கதை என்று இருக்க வேண்டுமோ!
// It is tough to touch one's heart, but your story has done it... If I say that your story is nice then it will be just a fraction of truth. I am searching for the exact word //
பாராட்டுகளுக்கு நன்றி ஆர்த்தி. உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
fine.very fine
// fine.very fine //
நன்றி சிவஞானம். மிக நன்றி.
நீங்கள் ஒரு கதா நாயகன் என்று எனக்கு சொல்லவேயில்லையே தி.ரா.ச
// நீங்கள் ஒரு கதா நாயகன் என்று எனக்கு சொல்லவேயில்லையே தி.ரா.ச //
என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியலையே.......நான் யாருக்கும் நாயகனும் இல்லை. எந்தக் கதையிலும் நாயகன் இல்லை.
நல்ல கதை ராகவன்.. படிக்க ஆரம்பிக்கும் போதே கதை என நினைத்து விட்டதால், மற்றவர்கள் போல் சுனிதா உங்கள் மனைவியா என்று கேட்கத் தோன்றவில்லை.. உருக்கமான முடிவு..
// நல்ல கதை ராகவன்.. படிக்க ஆரம்பிக்கும் போதே கதை என நினைத்து விட்டதால், மற்றவர்கள் போல் சுனிதா உங்கள் மனைவியா என்று கேட்கத் தோன்றவில்லை.. உருக்கமான முடிவு.. //
நன்றி பொன்ஸ். ஆமா...கொஞ்சம் உருக்கமான முடிவுதான்.
damn good.
50-வது பின்னூட்டம். வாழ்த்துக்கள் ஜிரா.
நடந்த சம்பவத்தை பக்கத்துல இருந்து பார்த்தமாதிரியே எழுதுற வித்தையை தினத்தந்தி உன்னிடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் :))))
நடந்த சம்பவத்தை பக்கத்துல இருந்து பார்த்தமாதிரியே எழுதுற வித்தையை தினத்தந்தி உன்னிடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் :))))
Post a Comment