கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கன்னட நண்பனோடையும் பெங்களூருலயே பொறந்து வளந்த தமிழ் நண்பனோடையும் பேசிக்கிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு பிரச்சனை வந்தது.
தமிழ் நண்பனுக்குத் தமிழ் சரியாப் படிக்க வராது. அவனுடைய அக்காவுக்கும் அப்படித்தான். அவங்க எனக்கும் அக்காதான். ஆனா அவங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்லா தமிழ் படிக்க வரும். தினமும் பேப்பர் வாங்கிப் படிப்பாங்க.
அன்னைக்கு வந்த பேப்பர்ல ஒரு சமையல் குறிப்பு. அது என்னன்னு அக்காவுக்குத் தெரிஞ்சே ஆகனும். ஆனா அப்பாவும் வீட்டுல இல்ல. அம்மாவோ வேலையா இருக்காங்க. நானும் மத்த ரெண்டு நண்பர்களும் உக்காந்து கதை பேசீட்டு இருந்தோம்.
அப்ப எங்கிட்ட வந்து அந்தப் பேப்பரக் குடுத்து அதப் படிக்கச் சொன்னாங்க. நானும் படிச்சுச் சொன்னேன். அப்ப கூட இருந்த கன்னட நண்பன் ஆர்வத்துல பேப்பரப் பாத்தான். பாத்தவனுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா அதுல நம்பரெல்லாம் இங்கிலீஷ் நம்பரா இருந்தது. நெய்க்கு நேரா 1 கப்புன்னு எழுதீருந்தது. அப்படித்தான் மத்த பொருட்களுக்கும்.
இதுல ஆச்சரியப் பட என்ன இருக்குன்னு கேக்குறீங்களா? கன்னடத்துல எழுதும் போது நம்பரும் கன்னடத்துலயே எழுதுவாங்களாம். ஆனா நம்ம தமிழ்ப் பேப்பர்ல இங்கிலீஷ் நம்பர் இருக்கேன்னு ரொம்ப ஆச்சரியப் பட்டான்.
அப்பப் பாத்து குண்டத் தூக்கிப் போட்டான் தமிழ் நண்பன். அதாவது கன்னட நண்பனுக்கு விளக்கம் சொல்றானாம். "தமிழ்ல நம்பரே கிடையாதே. அதுனாலதான் இங்கிலீஷ் நம்பரப் போடுறாங்க...."
அட ஆண்டவா! இப்பிடிக் கேக்க வேண்டிய நெலம எனக்கு வந்துருச்சேன்னு வருத்தப்பட்டேன். ரெண்டு பேருக்கும் குறுக்க விழுந்து தமிழ்லயும் நம்பர் இருக்குன்னு அழுத்திச் சொன்னேன். ஆனா கொடுமைக்கு ரெண்டு பேருமே நம்பலை. அப்படி இருந்துச்சுன்னா அத ஒடனே நிரூபிக்கனுமாம். எனக்குத் தமிழ் தெரியுமில்லையா...அதுனால நான் ஒடனே எழுதிக் காட்டனுமாம்.
அவமானம். அவமானம். ரொம்பவே அவமானம். தெரியாதுன்னு ஒத்துக்க வேண்டியதாப் போச்சு. தெரியாததைத் தெரியாதுன்னுதான சொல்லனும். அதுல அவமானம் இல்லை. ஆனா தெரியாத நிலமை அவமானம்தானே. தமிழ் எழுத்துகள இவ்வளவு படிக்கிறோம். ஆனா எண்கள விட்டுட்டோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். சரிதான். இப்ப ஒரு கண்ணுல பாக்குறோமா? இல்லை. இங்கிலீஷ் நம்பர்கள் பயன்படுத்துறோமே. ஆனா நம்ம எண்கள ஏன் தொலச்சிட்டோம்?
வங்க நண்பர்கள் எனக்குண்டு. அவங்களும் நெறைய படிப்பாங்க. அவங்க புத்தகத்துல எல்லாமே வங்காளத்துல இருக்கும். பக்க எண். விலை. முகவரில வர்ர எண். எங்கெல்லாம் நம்ம 123 போடுறோமோ....அங்கயெல்லாம் நம்பர் இருக்கும். கன்னடத்துலயும் அப்படித்தான். பஸ்சு நம்பர் கூட இப்பல்லாம் கன்னடத்துல அங்கங்க தென்படுது. ஹிந்திக்காரங்களும் ஹிந்தி நம்பரத்தான பயன்படுத்துறாங்க. என்னவோ போங்க!
ஆனாலும் கொஞ்சம் லேசா சமாளிக்க முடிஞ்சது. அதுகூட எங்க பட்டிக்காட்டு வழக்கால. எல்லாம் பட்டிக்காட்டுல படிச்ச சில பேச்சு வழக்குகலால.
விளாத்திகுளம் பக்கத்துல இருக்குற புதூர்தான் எங்க மூதாதையார் ஊர். தூத்துக்குடீல நான் இருந்தப்ப் அடிக்கடி போயிருக்கேன். அப்புறமா பண்டிக்கைக்கும் விசேசத்துக்கும் மட்டுமுன்னு கொறஞ்சு போச்சு.
நான் போறப்பல்லாம் எனக்கு கருவாடு செஞ்சித் தருவாங்க. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதுனால போகும் போதெல்லாம் கேக்குறது வழக்கமாப் போச்சு. பட்டிக்காட்டுப் பக்குவம் பிரமாதமா இருக்கும். அதுனால என்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு கிண்டலாக் கூப்புடுவாங்க.
அதென்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு பாக்குறீங்களா! தமிழ்ல ஒன்னுங்குறதக் குறிக்க க-ன்னு எழுதுவாங்களாம். ரு போட்டா அது அஞ்சு. கரு-ன்னா ஒன்னு அஞ்சு தான. அப்ப ஒன்னு அஞ்சு வாடுன்னா கருவாடு. இப்பப் புரிஞ்சிருக்குமுன்னு நெனைக்கிறேன். (கரு-ன்னா பதினைஞ்சுதானன்னு இப்ப நீங்க கேக்கலாம். ஆனா அது இத்தன வெளக்குனப்புறந்தானே. வெளக்காமலேயே அவங்க சொன்னதால ஒன்னு அஞ்சு சரீன்னே வெச்சுக்கலாம்.)
இந்த ரெண்டு எழுத்தையும் சொல்லித் தமிழோட மானத்தையும் என்னோட மானத்தையும் கொஞ்சம் காப்பாத்துனேன்.
அந்தப் பட்டிக்காட்டுல இருக்குறவங்களுக்குத் தெரிஞ்சிருந்தது படிச்சுப் பரதேசமெல்லாம் பாத்த படைப்பாளிகளான நமக்குத் தெரியாமப் போச்சே!
நம்ம நண்பன் சண்முகம் பழைய தமிழ் எழுத்துகளை அவனோட வலைப்பூவுல போட்டிருக்கான். இங்க கண்டிப்பாப் போய்ப் பாருங்க. படிச்சுக்குங்க. தமிழ் எழுத்துகளைத் தெரிஞ்சுக்குங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
இராகவன்,
இந்த அனுபவம் எனக்கு வேறு ஒரு தளத்தில் கிடைத்ததுண்டு. அதைப் பற்றித் தனி மடல் அனுப்புகிறேன். தமிழ் எண்களை 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த சில நூல்களில் பார்த்திருக்கிறேன். நிச்சயம் கற்க வேண்டும். புதிதாக இது வேறு தேவையா என்று யாராவது கேட்பார்கள். காசு கிடைக்கும் என்றால் எத்தனையோ புதிய விஷயங்களைக் கற்பதில்லையா? தமிழ் எண்கள் இனிமேலும் வழக்கழியாமல் இருக்க வேண்டும் என்றால் கற்றுக் கொண்டு பயன்படுத்தத் தான் வேண்டும்.
நண்பர் சண்முகத்தின் பதிவைப் பார்த்தேன். பல எண்களை கணினியில் எழுத முடியாது போலிருக்கிறதே. அதற்கும் ஏதாவது வழி செய்ய வேண்டும்.
நேற்று எனக்கு நேர்ந்தது,
நாங்க ரு(5) நண்பர்கள் சாப்புட்டிருந்தோம். ஒருவன் தெலுங்கு மற்றவர்கள் எல்லாம் தமிழ்தான்.
தெலுங்கு நண்பன் தமிழ் பேச்சை மட்டம் தட்டுவதற்காக நம்மிள் ஒருவன் இந்த குரளை சொல்லச்சொன்னான்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
அட நம்ம திருக்குரள் என்று நான் சொல்ல.. இல்லையென்று சொல்லி என்னை ஏலணம் செய்தனர் நம் தமிழ் மக்கள்.
அன்று இன்டெர்னெடில் தேடி .. அதிகாரம் மற்றும் குறள் எண்ணை அனுப்பிய பின் தான் அது குறள் என்றே ஒத்துக்கொண்டனர்.
பள்ளிகளில் தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும்பொழுது தமிழ் எண்களை விட்டு விட்டது ஏனோ? மற்ற மொழிகளில் எண்களுக்கு தனிக்குறியீடு இருப்பதுபோல் தமிழில் இல்லாதது ஒரு காரணமாக இருக்குமோ? தமிழில் சில எழுத்துக்களையேதான் எண்குறியீடுகளாக பயன்படுத்துகிறோம்.
மும்பை பஸ் நம்பரெல்லாம் அந்த ஊர் எழுத்துலதான் இருக்கும்.
நம்ம ஊர் விவேகானந்தர் தினசரி காலண்டரில் தமிழ் எண்கள் இருக்கும். அப்புறம் ஒரு கேள்வி...இந்த 1,2,..நம்பரக் கண்டுபிடிச்சது நாமதானுன்னு(இந்தியா) சொல்றாங்களே அது உண்மையா ? இது எப்படி இங்கீலீஸ் நம்பராச்சு?
வணக்கம் பெங்களூரு ராகவன் வாழ்த்துக்கள்!.இன்றைய தினமலர் நட்சத்திரமே!
ராகவன்,
இதென்னவோ உண்மைதான். கேரளாவுலே, மகாராஷ்ட்ராவிலே இருந்தப்பல்லாம் இந்த பஸ் நம்பர்ங்க
கூட அவுங்க எண்ணாகவெ இருக்கும். அப்ப நாங்க அதை மறக்காம இருக்க, அதையே நாம உபயோகிக்கற நம்பர்ங்க்ளை
வச்சு ஞாபகப்படுத்திக்கறதுதான். 7 ஐத் தலைகீழா எழுதியுருந்தா... இந்த நம்பர். 8 ஐ
மேலே மூடாம இருந்தா இதுன்னு...
நம்ம திருக்குறள் புத்தகத்துலே பக்க எண் தமிழில் இருக்கு. அதுலே 1 முதல் 9 வரை படிச்சாலே போதும்.
இனி கவனமாப் படிப்பேன்.
வாழ்த்துக்கள் ராகவன். தினமலர் நட்சத்திரமானதுக்கு.
வாழ்த்துகள் இராகவன். உங்கள் புகைப்படம் தினமலரில் அருமையாக இருக்கிறது.
உண்மையிலேயே அவமானப்பட வேண்டிய விசயம். எத்தனையோ நாட்கள் தமிழ் கற்கிறோம் ஆனால் இந்த தமிழ் எண்களை கற்பதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம். பூஜ்ஜியத்தை நாம் கண்டு பிடித்ததோடு நம் எண்ணறிவு தீர்ந்துவிட்டதோ?.
தமிழில் எண்ணுங்கள் என்கிறீர்களா? நல்ல எண்ணம்... எண்ணுவோம்.
// You can learn the tamil number from the daily calender itself... Many of them have it.
But inspite of using calender daily we have not learned them nd that is the saddest part of it. //
அதே அதே. நான் சொல்ல வருவதும் அதே.
பொட்-டீ-கடை, என்ன வெறும் + மட்டும் போட்டுட்டுத் தப்பிக்கப் பாக்குறீங்க. ஏதாவது சொல்லுங்க.
// நண்பர் சண்முகத்தின் பதிவைப் பார்த்தேன். பல எண்களை கணினியில் எழுத முடியாது போலிருக்கிறதே. அதற்கும் ஏதாவது வழி செய்ய வேண்டும். //
உண்மைதான் குமரன். இந்த எண்களைக் கணினியில் பயன்படுத்த முடியாதுதான். இருந்தாலும் என்ன செய்யப் போகிறோம். தெரிஞ்சாத்தான பயன்படுத்த முடியும். ஞ, ங ன்னு ரெண்டு எழுத்து இருக்கு. அதையே நம்ம குறைச்சலாப் பயன்படுத்துறோம். எங்ஙனம் அப்படீங்கறத..இப்ப எல்லாரும் எங்கனமுன்னு எழுதுறாங்க. இப்பிடித்தான் ஒன்னு ஒன்னா போகுது.
// அன்று இன்டெர்னெடில் தேடி .. அதிகாரம் மற்றும் குறள் எண்ணை அனுப்பிய பின் தான் அது குறள் என்றே ஒத்துக்கொண்டனர். //
நெய்பர், இது என்ன திருக்குறளுக்கு வந்த சோதனை!!!!!!! இது ரொம்ப எளிமையான குறளாச்சே.
அப்புறம் இன்னொரு விஷயம். நம்மூர்ல நெறைய பாத்திருக்கேன். மத்த மொழிக்காரங்க தமிழ் பேசுனா அத கிண்டல் பண்ணுவோம். ஆனா பாருங்க....நான் கன்னடம் பேசக் கத்துக்கிட்டப்ப என்னைய கன்னட நண்பர்கள் ஊக்குவிச்சாங்க. மலையாளத்துலயும் அப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன். ஆனா தெலுகு பேசக் கத்துக்க முயற்சி செய்தப்போ...அவங்களும் நம்மளப் போல கிண்டல்ல எறங்குனாங்க....ஏன்?
// மற்ற மொழிகளில் எண்களுக்கு தனிக்குறியீடு இருப்பதுபோல் தமிழில் இல்லாதது ஒரு காரணமாக இருக்குமோ? தமிழில் சில எழுத்துக்களையேதான் எண்குறியீடுகளாக பயன்படுத்துகிறோம். //
இல்லை. இல்லை. இல்லவேயில்லை. எழுத்துகளை நாம் எண்களாகப் பயன்படுத்துவதில்லை. எழுத்துகள் போல் இருக்கும். ஆனால் அவை வேறு. இவை வேறு. விரைவில் இன்னொரு படம் இடுகிறேன். அதிலிருந்து விளங்கும். ஆயிரம் என்றால் ஒன்றுக்கான எண்ணை எழுதி பின்னால் மூன்று பூஜ்ஜியம் போட மாட்டோம். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் அறிஞர்கள் விளக்க வேண்டியது இது.
// அப்புறம் ஒரு கேள்வி...இந்த 1,2,..நம்பரக் கண்டுபிடிச்சது நாமதானுன்னு(இந்தியா) சொல்றாங்களே அது உண்மையா ? இது எப்படி இங்கீலீஸ் நம்பராச்சு? //
கல்வெட்டு, இதுக்கான விடை எனக்குத் தெரியவே தெரியாது. யாரு கிட்ட போய்க் கேக்கன்னு தெரியலையே.
// நம்ம திருக்குறள் புத்தகத்துலே பக்க எண் தமிழில் இருக்கு. அதுலே 1 முதல் 9 வரை படிச்சாலே போதும்.
இனி கவனமாப் படிப்பேன். //
டீச்சர். நானும் அந்த முடிவ எடுத்திருக்கேன். இனிமே கொஞ்சம் கவனமா இருக்கனும். குமரன் சொல்ற மாதிரி கணினியில் பயன்படுத்த முடிஞ்சா, இனிமே போடுற பதிவுகள்ள கொஞ்சம் கொஞ்சமாப் போடலாம்.
வாழ்த்துச் சொன்ன செயகுமார், துளசி டீச்சர் மற்றும் குமரனுக்கு எனது உளமார்ந்த நன்றி.
புதிதாக வலைப்பூவிற்கு வந்திருக்கும் சாமுக்கும் ஜானுக்கும் எனது வணக்கங்கள். அடிக்கடி இந்தப் பக்கம் வாருங்கள்.
// இந்த தமிழ் எண்களை கற்பதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம். பூஜ்ஜியத்தை நாம் கண்டு பிடித்ததோடு நம் எண்ணறிவு தீர்ந்துவிட்டதோ?. //
அனுசுயா, தீர்ந்து விட்டதோ! நீர்ந்து விட்டதோ! யார் அறிவார்? இனியாவது ஏதாவது செய்வோம் என நம்புவோம்.
// தமிழில் எண்ணுங்கள் என்கிறீர்களா? நல்ல எண்ணம்... எண்ணுவோம். //
உண்மைதான் தேவ். எல்லாரும் எண்ணுவோம். எண்ணிய முடிப்போம்.
அருமையான தகவல்கள்.
நன்றி அய்யா இராகவன்.
தனரா
// அருமையான தகவல்கள்.
நன்றி அய்யா இராகவன்.
தனரா //
நன்றி தனரா...அதுக்குள்ள என்னைய ஐயாவாக்கீட்டீங்களா!!!!! சரி. அதுவும் இருக்கட்டும்.
தனரா சொன்னதுல ஒரு தப்பும் இல்லை தம்பி ஐயா. :-)
ராகவன்,
சென்னை கோடம்பாக்கத்துல ஒரு ஹார்ட் வேர் கடை பெயர் பலகையில் கடையோட இலக்க எண்ணை தமிழ்ல போட்டு வச்சிருக்காரு.. ஆனா தலைகீழ நின்னாலும் அத புரிஞ்சிக்கவே முடியாது..
ஹிந்தி எண்களை ஒரு நாலு தடவ வாசிச்சா போரும் மனப்பாடமாயிரும்..
கன்னட எழுத்த பெங்களூர்ல படிச்சதா ஞாபகம் வரமாட்டேங்குது..
இருந்தாலும் நீங்க சொன்னா மாதிரி செஞ்சிருக்கலாம்தான்னு தோனினாலும் அதனால பெருசா ஒன்னும் விளைஞ்சிரப் போதுன்னு தோனலை..
பெங்களூர்லயே எந்த கடையிலயும் பெயர் பலகைல கூட கன்னட எண்கள நான் பார்த்த ஞாபகம் இல்லை..
ஒருவேளை vernacular பத்திரிகைகளில் வேண்டுமானால் உபயோகத்திலிருக்கலாம்..
நீங்களே இவ்வளவு நாள் பெங்களூர்ல இருந்தும் இப்பத்தானே இப்படி ஒரு விஷயம் இருக்கறதே தெரிய வந்திருக்கு இல்லையா?
So not to worry..
// நீங்களே இவ்வளவு நாள் பெங்களூர்ல இருந்தும் இப்பத்தானே இப்படி ஒரு விஷயம் இருக்கறதே தெரிய வந்திருக்கு இல்லையா?
So not to worry.. //
இல்லை ஜோசப் சார். நான் குறிப்பிடும் நண்பனின் கமெண்ட்டு வேனா புதுசா இருக்கலாம். ஆனால் பெங்கால்லயும் மும்பைலயும் டெல்லீலயும் நான் பாத்து நாலு வருடங்கள் இருக்குமே. venacular பத்திரிகைன்னு நம்ம சொல்லீர்ரோம். ஆனா வடக்க எல்லா பத்திரிக்கைலயும் அப்படித்தான இருக்கு.
தமிழ் எண்களை நம்ம தெரிஞ்சுக்காததால நமக்கு ஒன்னும் ஆகப் போறதில்லை. ஆனா நம்ம சொத்துன்னு ஒன்னு பத்திரத்துல இருக்கு. பத்திரத்தை மட்டும் வெச்சுக்கிட்டு சொத்தைத் தொலைக்குறது சரியா சார்? அதுதான் நான் கேக்க வர்ரது. தமிழ் எழுத்துகள் இல்லாம பொழைக்கிறோம். தமிழும் இல்லாமப் பொழைக்கிறோம். (நம்ம சாப்பாட்டுப் பொழப்புக்குத் தமிழ் தெரியத் தேவையில்லையெ. அதச் சொல்ல வந்தேன்.) பெங்களூர்ல தமிழ் பேசுறது குறைவுதான். ஆனாலும் நம்ம மொழிய விட்டுற முடியுமா?
'எட்டே கால் லெட்சனமே எமனேறும் பரியே; கூறையில்ல வீடே ஆரையடா சொன்னாய்' என அவ்வையார் கேட்டது.
எட்டு - அ
கால் - வ
அவ லெட்சனம்
சுரதா அவர்களின்
புதுவை தமிழ் எழுதி மற்றும் எனது
தகடூர் தமிழ் எழுதி் ஆகியவற்றில் இத்தகைய தமிழ் எண்களை தட்டச்சு செய்ய முடியும்.
தட்டச்சு செய்யும் போது இவ்விரு மொழிமாற்றிகளிலும் எண்களுக்கு முன் ஒரு - சேர்த்தால் தமிழ் எண்களாய் மாறிவிடும்
உதாரணமாக:
-1 => ௧
-10 => ௰
-100 => ௱
-1000 => ௲
அருமையான தகவல் கோபி. எப்போதாவது தவறாய் எண்ணுக்கும் முன் - வந்து இந்த மாதிரி படிக்க முடியாத தமிழ் எழுத்துக்கள் வருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை தமிழ் எண்கள் என்று அப்போது தோன்றவில்லை. உங்கள் பின்னூட்டம் பார்த்தபின் புதுவை தமிழ் எழுதியில் செய்து பார்த்தேன். அருமையாக வந்தது. மிக்க நன்றி.
I have also faced this Ragavan .. when I tried to make ppl accept there are tamil numbers.. i was laughed at :
என்ன பண்ண முடியும் ?
but you have captured it so well :-
அட!
நம்ம பசங்க traffic போலிஸ் வண்டி நம்பர் பாத்து கேஸ் புக் பன்னாம் இருக்க டமில் நம்பர் எழுதிகிட்டு திரிஞ்சாங்க!
எங்க சித்தப்பா ஒருத்தர் இப்படி தான்.அவரோட பழைய scooterக்கு டமில் நம்பர் தான் எழுதுவேன்னு அடம்புடிச்சு, ஊர்ல யாருக்கும் அவரோட வண்டி நம்பர் தெரியாம செஞ்சுட்டார்!
Post a Comment