Thursday, January 19, 2006

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி

போன வாரம் மயிலாரைக் கூட்டிக் கொண்டு மீண்டும் forum mallக்குப் போனேன். அப்போது landmark கடையில் ஒரு ஒரிஜினல் தமிழ்க் குறுந்தட்டு வாங்கினேன். மயிலார் வம்பு செய்யாமல் இருக்க அவருக்குக் கந்தன் கருணைக் குறுந்தட்டும் வாங்கிக் கொடுத்தேன். நான் வாங்கியது டௌரி கல்யாணம் என்ற திரைப்படம். மிகச்சிறு வயதில் மதுரைக்கு விடுமுறையில் சென்றிருந்த பொழுது விஜயலட்சுமி திரையரங்கில் பார்த்தது. அப்பொழுது புரியாமலேயே படம் ஏனோ பிடித்திருந்தது. அந்த நினைப்பில் குறுந்தட்டை வாங்கி விட்டேன்.

விசு நடித்து இயக்கிய படம். சென்னைப் புறநகர்க் கிராமங்களான தின்னனூர் எனப்படும் திருநின்றவூரை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். விசு, விஜயகாந்த், ஸ்ரீவித்யா, விஜி மற்றும் எஸ்.வீ.சேகர் நடித்தது. எளிமையான கதை. எளிமையான பின்புலம். அழகான வசனங்கள். தேவையான அளவு நடிப்பு. படமும் வெற்றி அடைந்ததில் வியப்பில்லை. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

சரி. கதைக்கு வருவோம். அந்தப் படத்தில் விசுவின் சகோதரி விஜி. விசுவின் குடும்ப நண்பர் விஜயகாந்த். விஜயகாந்த் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள். விஜியைத் தங்கை போல நினைப்பவர். விஜிக்கும் அவர் அண்ணனைப் போல. அடிக்கடி வீட்டுக்கு வந்து விஜயகாந்தின் மகளைப் பார்த்துக் கொள்வார். இதைப் பார்த்த விஜயகாந்தின் மாமியார் விஜயகாந்தின் அம்மாவிடம் சொல்லி விஜியை விஜயகாந்திற்குக் கட்டி வைக்கச் சொல்வர். இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எல்லாரும் ஒரு திருமணத்திற்குப் போக வேண்டி வரும்.

திருமணத்தைப் பார்த்ததும் விஜயகாந்திற்குக் கற்பனை பிறக்கும். தங்கை விஜிக்குத் திருமணம் செய்து வைக்கும் அண்ணனாகக் கனவு காண்பார். காட்சி ஊட்டிக்குத் தாவும். விஜி பட்டுச் சேலையில் இருப்பார். இவர் சட்டையும் பேண்ட்டும் அணிந்து பாடுவார். மெல்லிசை மன்னர் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவார்.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே என்று தொடங்கும் பாடல். நல்ல மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைப்பேன் என்று பாடுவார்.

அடுத்து விஜியின் கற்பனை. அண்ணன் விஜயகாந்த்திற்கு நல்ல அண்ணியைக் கொண்டு வருவதாக கற்பனை செய்து பாடுவார். இப்பொழுதும் கற்பனையில் ஊட்டி. ஆனால் விஜயகாந்த் பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஒரு துண்டும் தோளில் போட்டுக் கொண்டு வருவார். பாவாடை தாவணி அணிந்து கொண்டு விஜயகாந்தின் மகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடுவார். இப்பொழுது வாணி ஜெயராமின் முறை.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே
ரம்பைகளைச் சபைக்களைத்து கண்ணகியைக் கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
பிஞ்சு மகள் கொஞ்சும் மொழி பஞ்சனையில் கேளாமல்
நெஞ்சினிலே தாலாட்டுவேன்...ஓஓஓஓஓஓஓஓஓ
நெஞ்சினிலே தாலாட்டுவேன் (ஸ்ரீராமன் ஸ்ரீதேவி...

அடுத்த காட்சியில் விஜயகாந்தின் தாயார் யோசிப்பார். விஜயகாந்தின் மாமியார் என்னவென்று கேட்க. இருவரையும் ஜோடியாக வைத்துப் பார்ப்பதாகச் சொல்வார். இப்பொழுது மறுபடியும் பாடலின் தொடர்ச்சி ஊட்டியில். விஜயகாந்தும் விஜியும் மேற்கத்திய உடைகளை அணிந்து கொண்டு பாடுவார்கள். இந்த முறை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணிஜெயராமும் இணைந்து பாடுவார்கள்.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே....

சரி. சரி. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கின்றீர்களா? ஒரு குறைந்த செலவுப் படத்தில் வருகின்ற ஒரு பாடல் காட்சியை இப்பொழுது சொன்னேன். அந்த ஒரு பாடலில் எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று பார்த்தீர்களா? இந்தக் காட்சியை மெல்லிசை மன்னருக்கும் ஆலங்குடி சோமுவிற்கும் விசு விளக்கமாகச் சொல்லியிருப்பார். அவர்களும் அந்தச் சூழ்நிலைக்குத் தேவையானதை இசையிலும் பாடலிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். பாடலைக் பார்த்தால் ஒவ்வொரு பகுதிக்கும் வித்தியாசங்கள் காட்டியிருப்பது தெளிவாகவும் அழகாகவும் தெரியும்.

என்னதான் சொல்ல வருகிறேன்? இன்றைக்குத் திரைப்படங்களில் பாடல் காட்சிக்கான சூழ்நிலையை எப்படி இயக்குனர்கள் விளக்குவார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஆறு சூழ்நிலைகளுக்குள் பெரும்பாலான பாட்டுகளை அடக்கி விடலாம்.
1. கதாநாயகன் அறிமுகப் பாட்டு
2. கதாநாயகி தனியாக ஆடும் பாட்டு
3. காதல் பாட்டு
4. குத்துப் பாட்டு
5. Western Style பாட்டு
6. நகைச்சுவை நடிகர்/நடிகை பாட்டு

இதற்கு மேலும் காட்சிகள் வெகுசில இயக்குனர்களின் படங்களில் மட்டுமே வருகின்றன. சேரன், பாலா, தங்கர் என்று ஒரு சிலரே. ஏனிப்படி? பாடல்கள் என்பவையே இயல்புக்கு அப்பாற்பட்டவைதான். ஆனால் அதிலும் எத்தனை வகையான சூழ்நிலைகளைக் காட்டியிருக்கிறார்கள். இது மாதிரி புதுமாதிரி சூழ்நிலைகள் ஏன் இன்றைக்கு நமக்குக் கிடைப்பதில்லை. இன்றைய பாடல்கள் எனக்கும் பிடித்திருக்கிறது. ரசிக்கிறேன். தாளம் போடுகிறேன். ஆனாலும் கதைகளில் மாறுபட்ட சூழ்நிலைப் பாடல்களுக்கான தேறுதல் இல்லை என்பதும் உண்மைதான். சேரனின் பொற்காலம் படத்தில் வரும் "கருவேலங் காட்டுக்குள்ள" பாடலும் எவ்வளவு உணர்வுப் பூர்வமாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இன்னும் நிறைய அடுக்கலாம்.

நல்ல கதைகளுக்குத் திரைப்படத்தில் இடமில்லாமல் போனது வருத்தம்தான். வித்தியாசமான கதைகளைப் படமாக எடுத்தால் பார்க்க மாட்டர்கள் என்று இல்லை. அதை எடுக்கும் துணிவு பலருக்கும் இல்லை என்பதே உண்மை. பணமும் குறிக்கோள் என்றிருந்த நிலையிலிருந்து பணம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. இதற்கு மேலும் என்ன செய்ய முடியும்? என் காதில் இன்னமும் ஸ்ரீராமன் ஸ்ரீதேவி என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணிஜெயராமும் பாடுவது கேட்கிறது. பழையதோ புதியதோ இது போன்று வித்தியாசமான சூழ்நிலைப் பாடல்கள் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா?

அன்புடன்,
கோ.இராகவன்

24 comments:

Unknown said...

ராகவன் நானும் தொலைக்காட்சியில் அந்த படத்தைப் சில முறை ரசித்துப் பார்த்திருக்கிறேன் :)

டிபிஆர்.ஜோசப் said...

இப்பல்லாம் ராகவன் பாடல் பதிவோடதானே ஒரு படத்தோட ஷூட்டிங்கே தொடங்குது?

நாலஞ்சு பாட்டு ரெக்கார்டிங்க முடிஞ்சவுடனே அத சுத்து ஒரு ட்ரெஸ் மாதிரி கதைய பண்ணி தொங்குறா மாதிரி இருக்கற இடத்துல ஒரு மூனு, நாலு ஃபைட் சீன்கள வச்சி சும்மா மேஜிக் மாதிரி எடிட் பண்ணி (இதிலெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல) இடையில நம்முடைய தமிழ் கலாச்சார முறைப்படி அரைகுறையான ட்ரெஸ்சோட ஒரு குத்து பாட்டு போட்டு.. அதுக்குள்ள கதையே என்னான்னு டைரக்டருக்கு மறந்துபோயி..

சரி விடுங்க..

விசுவோட குரல் கடுப்பேத்தினாலும் அவரோட கதைகளும் வசனங்களும் யதார்த்தமா இருக்கும்..

கைப்புள்ள said...

விசுவோட "சம்சாரம் அது மின்சாரம்" படத்துல வர்ற "ஜானகி தேவி ராமனைத் தேடி..."பாட்டு எனக்கு ஞாபகம் வருது. விசுவுக்கு ஏனோ ராமர்-சீதைனா ரொம்ப புடிக்குது. வித்தியாசமான கனவு பாட்டு. வீட்டில இருக்கற அத்தனை பேரும் ஒரே பாட்டை தாங்க பொண்ணு பார்க்க போன ஞாபகமா நினைச்சுப் பாக்கறது வித்தியாசமான கற்பனை. இந்த பாட்டை 2-3 ஜோடிங்க நினைச்சுப் பார்த்தாலும் டை அடிச்ச கமலா காமேஷ் அபஸ்வரமா பாட விசு அதை கேட்கும் போது ஒரு திருட்டு முழி முழிப்பாரே...அதை பாக்கவே காமெடியா இருக்கும்.

துளசி கோபால் said...

ராகவன்,

டெளரி கல்யாணம் அருமையான படமாச்சே. முழுப் படத்தோட ஆடியோ நம்ம வீட்டுலே இருக்கு.
இப்படித்தான் பிடிச்ச படங்கள்ன்னா முழு ஆடியோவும் எடுத்து வச்சுக்கறது என்னோட வழக்கம்
அந்தக் காலத்துலே!

Sud Gopal said...

பழைய பாட்டுன்னாலும் நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க.

பொதுவா விசுவோட படங்கள்ள மெயின் ஃபீமேல் ப்ரோட்டகனிஸ்டோட பெயர் உமான்னு தான் வரும்.(மணல் கயிறு:சாந்தி க்ருஷ்ணா,ச.அ.மி:லக்ஷ்மி...)

கோரா,இந்தப் படத்தில யாரு உமாவா வாரங்க?

G.Ragavan said...

// ராகவன் நானும் தொலைக்காட்சியில் அந்த படத்தைப் சில முறை ரசித்துப் பார்த்திருக்கிறேன் :) //

பாத்திருக்கீங்களா தேவ். ஓரளவுக்கு நல்ல படமே. அதில் பாட்டி கேரக்டர் ஒன்று வரும். அதுதான் படத்திலேயே பெஸ்ட் கேரக்டர்.

// இடையில நம்முடைய தமிழ் கலாச்சார முறைப்படி அரைகுறையான ட்ரெஸ்சோட ஒரு குத்து பாட்டு போட்டு.. அதுக்குள்ள கதையே என்னான்னு டைரக்டருக்கு மறந்துபோயி..
சரி விடுங்க.. //

விட்டுட்டேன் ஜோசப் சார். இவங்களப் பிடிச்சி வெச்சுக்கிட்டு என்ன ஆகப் போகுது. அடுத்து சிவாஜீங்குற மகாகாவியம் வருது. அத எப்பாடு பட்டாவது பாத்தே ஆகனும். அப்புறம் இம்சை அரசன் 23ம் புலிகேசீன்னு ஒரு படம் வருதாம். அதையும் பாக்கனும்.

G.Ragavan said...

// நினைச்சுப் பார்த்தாலும் டை அடிச்ச கமலா காமேஷ் அபஸ்வரமா பாட விசு அதை கேட்கும் போது ஒரு திருட்டு முழி முழிப்பாரே...அதை பாக்கவே காமெடியா இருக்கும். //

சரியாச் சொன்னீங்க கைப்புள்ள. கமலா காமேஷ் பாடி முடிச்சதும். "ஒங்கள எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒங்களயே கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா கடைசி வரைக்கும் நீங்க பாடாம இருக்கனும்"னு கண்டிசன் போடுவார் விசு.

G.Ragavan said...

// டெளரி கல்யாணம் அருமையான படமாச்சே. முழுப் படத்தோட ஆடியோ நம்ம வீட்டுலே இருக்கு.
இப்படித்தான் பிடிச்ச படங்கள்ன்னா முழு ஆடியோவும் எடுத்து வச்சுக்கறது என்னோட வழக்கம்
அந்தக் காலத்துலே! //

டீச்சர், முழு ஆடியோவுமா? எப்படி? தேட்டருக்கு டேப் ரிக்கார்டர் கொண்டு போனீங்களா? இல்ல வசனம் கேசட்டா வந்ததா?

G.Ragavan said...

// பொதுவா விசுவோட படங்கள்ள மெயின் ஃபீமேல் ப்ரோட்டகனிஸ்டோட பெயர் உமான்னு தான் வரும்.(மணல் கயிறு:சாந்தி க்ருஷ்ணா,ச.அ.மி:லக்ஷ்மி...)

கோரா,இந்தப் படத்தில யாரு உமாவா வாரங்க? //

சுதர்சன், நீங்க கோராங்குறீங்க. உஷா ஜீராங்குறாங்க. ரெண்டுமே நல்லாத்தான் இருக்கு.

உமாவா வர்ரது விஜி. அதாவது விசுவோட தங்கச்சி. விசுவோட அம்மாவோட மகள். விசுவோட அப்பாவோட மகள். விசுவோட மனைவியோட நாத்தனார்.

இந்தப் படத்துல இன்னொரு காமெடி கேரக்டர் கிஷ்மூ. புஷ்பலதாவின் கணவனாக அவரை என்னங்க என்னங்க என்று கேட்டுக் கொண்டே வருவார். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருப்பார். அவ்வப்போது அதை எடுத்து சொரிந்து கொள்வார்.

Sud Gopal said...

//சுதர்சன், நீங்க கோராங்குறீங்க. உஷா ஜீராங்குறாங்க. ரெண்டுமே நல்லாத்தான் இருக்கு.//
ஓ..அப்படியா???எனக்கென்னமோ ஜீரா தான் பெட்டராப் படுது.

//உமாவா வர்ரது விஜி. அதாவது விசுவோட தங்கச்சி. விசுவோட அம்மாவோட மகள். விசுவோட அப்பாவோட மகள். விசுவோட மனைவியோட நாத்தனார்.//
என்ன விசு படம் பார்த்த எஃபெக்ட் இன்னும் போகலியோ??

ramachandranusha(உஷா) said...

டெளரி கல்யாணம் நல்லா இருக்கு சொல்லும் போது லேசா ஒரு டவுட்டு :-)
சின்ன புள்ள படத்தப் போட்டு பெருசு ஜிரா ஏமாத்துகிறாரா?

குமரன் (Kumaran) said...

//சின்ன புள்ள படத்தப் போட்டு பெருசு ஜிரா ஏமாத்துகிறாரா?
//

அதானே...நானெல்லாம் இந்தப் படத்தைக் கேள்விபட்டதே இல்லியே?

இந்தப் பதிவுக்கு என்னடா பின்னூட்டம் போடறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். உஷா சூப்பரா எடுத்துக் குடுத்தாங்க. நன்றி உஷா. :-)

ஜீரா. இனிமே தான் இந்தப் படத்தைத் தேடிப்புடிச்சுப் பாக்கணும்.

Maya said...

ராகவன்,
அந்த பால் பாயசத்தையும் முந்திரிப்ப்ருப்பையும் மறந்திட்டீங்களே...?? அப்புறம் டெல்லி கணேஷ் பாத்திரம்...மொத்தத்தில் மிக நல்ல படம்..

அன்புடன்
மாயா

G.Ragavan said...

// ஓ..அப்படியா???எனக்கென்னமோ ஜீரா தான் பெட்டராப் படுது. //

அப்ப இனிமே நீங்களும் ஜீரான்னுதான் கூப்பிடப் போறீங்களா?

////உமாவா வர்ரது விஜி. அதாவது விசுவோட தங்கச்சி. விசுவோட அம்மாவோட மகள். விசுவோட அப்பாவோட மகள். விசுவோட மனைவியோட நாத்தனார்.//
என்ன விசு படம் பார்த்த எஃபெக்ட் இன்னும் போகலியோ?? //

இன்னும் முழுப்படமும் பாக்கலை. கால்பாகம் பாத்திருக்கு. நாளைக்குக் கொஞ்சம், நாளான்னைக்குக் கொஞ்சம்னு பாக்கனும். அதுக்கப்புறம் என்ன மாதிரி பின்னூட்டம் போடப் போறேனோன்னு நெனச்சா பயமா இருக்கு.

G.Ragavan said...

// டெளரி கல்யாணம் நல்லா இருக்கு சொல்லும் போது லேசா ஒரு டவுட்டு :-)
சின்ன புள்ள படத்தப் போட்டு பெருசு ஜிரா ஏமாத்துகிறாரா? //

அதையேன் கேக்குறீங்க உஷா...என் கிட்ட இன்னும் சில படங்கள் இருக்கு. ஆனா பாருங்க...பழசுல இருந்து புதுசு வரைக்கும் எல்லாம் கலந்து இருக்கு. தமிழ் மட்டுமில்லை. ஆங்கிலத்திலும் அப்படித்தான். என்னிடம் Roman Holiday DVDம் இருக்கு. Deuce Biggaloம் இருக்கு. Harry Potterம் Lord of the Ringsம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படியே கொஞ்சம் திரும்பி Princes Diary1 and 2 பாத்துட்டு Briget Jones Diaryம் பாப்பேன்.

சரி. சந்தேகமுன்னு வந்துருச்சி....இப்ப என்ன செய்யலாம். இந்த வார நட்சத்திரம் முத்துக்குமரனுக்கு என்னை நல்லாத் தெரியும். நேருலயே பாத்திருக்காரு. குழந்தைகளுக்குக் கதை சொல்ற பரஞ்சோதிக்கும் என்னைய நல்லா தெரியும். டீச்சர் பெங்களூர் வர்ராங்களே. அவங்க வந்து பாத்துட்டு சொல்ல மாட்டாங்களா! இல்லைன்னா....வெப் கேம்ல வாங்க...ஒரு சாட்டிங் போட்டுருவோம்.

G.Ragavan said...

// அதானே...நானெல்லாம் இந்தப் படத்தைக் கேள்விபட்டதே இல்லியே? //

குமரன், நான் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியே பாத்தவன். நீங்க டௌரி கல்யாணத்துக்கே தெணற்றீங்க. ஆயிரம் ஜென்மங்கள் தெரியுமா? வெண்மேகமே....வெண்மேகமே........ஊஊஊஊஊஊஊ...கேளடி என் கதையை...

// இந்தப் பதிவுக்கு என்னடா பின்னூட்டம் போடறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். உஷா சூப்பரா எடுத்துக் குடுத்தாங்க. நன்றி உஷா. :-) //

இதெல்லாம் அநியாயம். இவ்வளவு பெரிய பதிவு போட்டிருக்கேன்...

// ஜீரா. இனிமே தான் இந்தப் படத்தைத் தேடிப்புடிச்சுப் பாக்கணும். //
கிடைச்சா கண்டிப்பா பாருங்க. ஆனா ஒங்க டேஸ்ட்டு எப்படீன்னு தெரியலையே....எளிமையான கதையமைப்புள்ள படங்கள் பிடிக்குமுன்னா..இதுவும் பிடிக்கும்.

G.Ragavan said...

// ராகவன்,
அந்த பால் பாயசத்தையும் முந்திரிப்ப்ருப்பையும் மறந்திட்டீங்களே...?? அப்புறம் டெல்லி கணேஷ் பாத்திரம்...மொத்தத்தில் மிக நல்ல படம்.. //

மாயா நான் படம் பாத்தது ரொம்பச் சின்னப்புள்ளைல. அதுனால எல்லாம் மறந்து போச்சு. கதையோட அவுட்லைன் மட்டும் நினைவிருக்கு. இப்ப இன்னும் முழுப்படமும் பாக்கலை. இன்னும் டெல்லி கணேஷ் வரலையே. அப்புறம் அந்த சாயிபு நம்பியார். அவரைச் சொல்லாம விட முடியுமா?

குமரன் (Kumaran) said...

//குமரன், நான் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியே பாத்தவன். //

அந்தப் படத்தை நானும் நிறைய தடவைப் பார்த்திருக்கேனே.

துளசி கோபால் said...

ஒரு திருத்தம். அது பால்பாயாசமில்லை.

ஜவ்வரிசிப் பாயாசம் & முழுசு முழுசாப் போட்ட முந்திரிப் பருப்பு:-)

ராகவன்,
படம் வீட்டுலே பார்த்துட்டு அப்புறம் அதையே ஆடியோவுலே ரெக்கார்டு பண்ணிக்கறதுதான்.

பிடிச்ச பாட்டுக்களுக்கும் இதேதான். சிலப்ப வெவ்வேற படங்களொட பிடிச்ச டயலாக் இருக்கும்.

ஹிந்திலே ஒண்ணு,
'அவ்ர் குச் சாஹியே பஹூ?'
'ஹா..ன் மா, தோடாஸே ப்யார்'

G.Ragavan said...

// ஒரு திருத்தம். அது பால்பாயாசமில்லை.
ஜவ்வரிசிப் பாயாசம் & முழுசு முழுசாப் போட்ட முந்திரிப் பருப்பு:-) //

கரெக்ட். ஜவ்வரிசிப் பாயாசம். முழுசா முந்திரிப்பருப்பை வறுத்துப் போடனுமுன்னு கிஷ்மூ கேப்பார்.

// ராகவன்,
படம் வீட்டுலே பார்த்துட்டு அப்புறம் அதையே ஆடியோவுலே ரெக்கார்டு பண்ணிக்கறதுதான்.

பிடிச்ச பாட்டுக்களுக்கும் இதேதான். சிலப்ப வெவ்வேற படங்களொட பிடிச்ச டயலாக் இருக்கும்.

ஹிந்திலே ஒண்ணு,
'அவ்ர் குச் சாஹியே பஹூ?'
'ஹா..ன் மா, தோடாஸே ப்யார்' //

இது எந்த படத்து வசனம்? அதையும் சொல்லீருங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

நாடகமாக வ்ந்ததுதானே இந்தப்படம். அதில் அளவு எடுக்க கரெக்டாக ஒரு பையன் வருவானே அந்த நகைச்சுவை பகுதி நன்றாக இருக்கும். காத்தாடி ராமமுர்த்தி நடித்தது.எங்கள் வீட்டில் எலோருக்கும் பிடித்த படம்/நாடகம். தி ரா ச

kirukan said...

BaluMahendra and Mahendran has a typical style in filming the songs.

Ofcourse, you have to leave one particular song in each of Balus films ;-)

துளசி கோபால் said...

ராகவன்,

நான் நினைக்கிறேன் அந்த ஹிந்தி டயலாக் 'சசுரால்'ன்ற படம்.

தீனா பதக் மாமியார் & சாதனா சிங் மருமகள்.

சிவா said...

அடடா! நானும் இந்த படம் பார்த்ததே இல்லையே. கிடைத்தால் பார்க்கிறேன். எனக்கு விசுவின் மணல் கயிறு ரொம்ப பிடித்த படம். இப்போ எவரும் பாடலை பற்றி யோசிப்பதில்லை ராகவன். எந்த நடிகருக்குமே இசை ரசனை இல்லை. பாட்டு ஹிட்டாகுமா...அப்படின்னா போடு..அதோடு சரி... :-)