திருச்செந்தூர்ல மொட்ட போட்டுட்டு முருகனைக் கும்பிட்டுட்டு பனங்கெழங்கு வாங்கிக்கிட்டு தூத்துக்குடிக்குப் பஸ் ஏறுனோம். அங்கயிருந்துதான பெங்களூருக்கு டிரெயின். வீரபாண்டியன் பட்டணம், காயல்பட்டணம், ஆத்தூரு வழியா தூத்துக்குடி. வழியில ஆறுமுகநேரியும் உண்டு. அதுதான் வலைப்பூ தாணு பொறந்த ஊர். அதச் சொல்லலைன்னா அவங்க கோவிச்சுக்குவாங்களே.
வழியெல்லாம் நான் சின்னப்புள்ளைல பாத்த மாதிரி வீடுக. எக்கச்சக்கமா கொசுவத்திச் சுருள்கள் (அதாங்க flashback). தூத்துக்குடிய நெருங்க நெருங்க உப்பளங்க. வெள்ள வெளேர்னு பாத்தி பாத்தியாக் கண்ணப் பறிக்குது. பாத்தி கட்டி அதுல தண்ணியத் தேக்கி உப்பு வெள்ளாம பண்றது தூத்துக்குடீல பெரிய தொழிலு.
வெயிலுக்குத் தண்ணி காஞ்சி பாத்தியெல்லாம் வெள்ள வைரங்களா உப்புக்கல்லுக ஜொலிக்கும். அதுல நடக்க முடியாது. கால்ல குத்தும். ரப்பர் ஷீட் மாதிரி காலணி போட்டுக்கிட்டுதான் அதுல எறங்க முடியும். வெயில் பட்டு பளீர்னு வெளிச்சம் மூஞ்சீல தெறிக்கும். ஒரு பெரிய சொரண்டி வெச்சுக்கிட்டு உப்பச் சொரண்டிச் சொரண்டி பாத்தி வரப்புல அள்ளிப் போடுவாங்க. அதுவேற அங்கங்க சின்னச் சின்ன மலையாட்டம் குமிஞ்சிருக்கும். பாக்க அழகோ அழகு. இந்த உப்பையெல்லாம் சேகரஞ் செஞ்சி பெரிய மலையாப் போட்டுருப்பாங்க. மழ பெஞ்சிரக் கூடாது. அப்புறம் எல்லா உப்பும் கறைஞ்சு போகும். அதுனால அந்தக்காலத்துல பனையோலைகளைப் போட்டு மூடி வெச்சிருப்பாங்க. இப்பெல்லாம் தார்ப்பாயி பாலீத்தீன் ஷீட்டுன்னு போட்டு மூடுறாங்க.
அதெல்லாம் அப்பிடியே பாத்துக்கிட்டு ஸ்பிக் நகர் வழியா தூத்துக்குடிக்குள்ள நுழைஞ்சோம். பஸ்சு புதுக்கிராமம் வழியாப் போகும். அங்கதான் என்ன வளத்த அத்தயும் மாமாவும் இருக்காங்க. நண்பர்களோட அங்க போறதா திட்டம். ஆனா ரொம்ப நேரமாயிட்டதால அவங்கள நேரா ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லீட்டு நா மட்டும் புதுக்கிராமத்துல எறங்குனேன். அத்தையும் மாமாவையும் பாத்து பத்து நிமிஷம் பேசீட்டு அத்தைக்கு எடுத்த சேலையக் குடுத்துட்டுக் கெளம்பினேன். எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த கருப்பட்டிச் சேவு, மிக்சரு, காராச்சேவெல்லாம் பெரிய பைல போட்டுக் குடுத்தாங்க. நானும் மறுக்காம வாங்கிக்கிட்டு ஸ்டேஷனுக்கு ஓடுனேன்.
அங்க தேங்கா பன் வாங்குனோம். தூத்துக்குடிக்காரங்க கிட்ட தேங்காபன்னுன்னாப் போதும். அவ்வளவு பிரபலம். பன்னுதான். வட்டமா மாவ உருட்டி அதுக்கு நடுவுல தேங்காயும் ஜீனியும் கலந்து வெச்சு மடிச்சு பன்னாச் சுட்டு எடுத்தா....ஆகா.....ஆகா...ம்ம்ம்ம்ம்...
மணியாச்சி, கோயில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியா மதுரைக்கு வந்து சேந்தது வண்டி. ஒரு வெள்ளைக்காரனும் காரியும் ஏறுனாங்க. எங்க பக்கத்துலயே வந்து உக்காந்தாங்க. அவங்ககிட்ட பேச்சுக் குடுத்தோம். அவங்களும் சங்கோஜம் இல்லாமப் பழகுனாங்க. அவருக்கு 24 வயசும். அந்தப் பொண்ணுக்கு 26 வயசும். ஆனா நாங்கள்ளாம் பாக்க சின்னப்பசங்களாத் தெரிஞ்சோம். நல்ல உயரம். நல்ல விரிஞ்ச கட்டுடம்பு. ரெண்டு பேருக்குந்தான்.
பேச்சு வாங்குல நாங்க என்ன பண்றோம்னு கேட்டாங்க. நான் சாஃப்ட்வேர்ல மேனேஜரா இருக்கேன். இவன் Siemensல இருக்கான். இவன் IBM. இப்பிடிக் கம்பெனி கம்பெனியாச் சொன்னா...அவன் ஓன்னுட்டான். நம்ம என்ன பண்றோம்னு கேட்டுட்டாங்களே. நம்ம திரும்பிக் கேக்க வேண்டாமா? கேட்டுட்டோம். அவங்க ஒரு பார்ல வேல பாத்தாங்களாம். இப்ப அந்த வேலைய விட்டுட்டு இந்தியாவச் சுத்திப் பாக்க வந்திருக்காங்களாம். ஊருக்குப் போய் என்ன திட்டம் வெச்சிருக்காங்கன்னு கேட்டோம். மசாலா டீதான் இப்போ லண்டன்ல பிரபலமாம். அதுக்கு ஒரு கட போடத் திட்டம் வெச்சிருக்காங்களாம். அடடா!
அப்ப நான் ஒரு பேச்சு சொன்னேன். "ஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும். ஆனாலும் உழைப்புங்குற ஒன்னு எங்கள வாழ வைக்குது. அதுதான் எங்க சொத்து."
அவரும் நாங்க கொடுத்த உளுந்து பக்கோடாவ மென்னுக்கிட்டு (மதுரைக்கார நண்பனோட அம்மா கொண்டு வந்து ஸ்டேஷன்ல குடுத்தாங்க) தலையத் தலைய ஆட்டுனாரு. பிரியாணிதான் ரெண்டு பேரும் வாங்கிச் சாப்பிட்டாங்க. அதுவும் ஸ்டேஷன்ல வாங்கீருந்தாங்க. ரொம்ப நல்லாப் பழகுனாங்க. நாங்களும் நல்லாப் பேசீட்டுத் தூங்கீட்டோம். அடுத்தநாள் காலைல பெங்களூர் கண்டோன்மெண்ட்டுல எறங்கீட்டு டாட்டா சொன்னோம்.
முற்றும்.
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
ஜி.ரா,
அருமையானத் தொடர். படிக்கும் போது நானும் உங்களுடன் பயணித்த ஒரு இனிய அனுபவம் கிட்டியது. தூத்துக்குடியைக் கடைசிப் பதிவில் கலக்கலாப் பதிஞ்சிட்டீங்க. உப்பளத்தின் விவரிப்பு அற்புதம். ஸ்பீக்ல்ல தான் என்னுடையச் சித்தப்பா வேலைப் பாக்குறாங்க
அப்புறம் மெக்ரூன் ஸ் வாங்குனீங்களா? தூத்துக்குடி முயல் தீவுப் போன அனுபவம் உண்டா?
நிறைவானப் பதிவு. சபாஷ் ஜிரா
பனங்கெழங்கு, தேங்கா பன் இதெயெல்லாம் பத்தி சொல்லி ஆசய உண்டாக்கிட்டீரே. பொங்கல் அப்போ பனங்கெழங்கு தின்னது. தூத்துக்குடில ரொம்ப பிரபலமான மக்ரோன், மஸ்கோத்து இதெயெல்லாம் சொல்லலியே நீரு....
ஒரு இனிய சுற்றுலா சென்று வந்த நிறைவு. தூத்துக்குடி இரயில்நிலயமா ? அழகாக இருக்கிறதே !
நாம் அவர்களைப் பார்த்து ஒரு குடும்ப பாரமில்லாமல் ஊர் சுற்றுவதை அதிசயிக்கிறோம்; அவர்கள் நமது குடும்ப பிணைப்பை அதிசயிக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் 30 வயதில் பெற்றோருடன் வாழ்வது அவர்களுக்கு ஆச்சர்யம் :)
வேலையில் நாம் நிரந்திரத்தைத் தேடுகிறோம்;நாளை நல்வாழ்வு வாழ இன்றைய சுகத்தை இழக்கிறோம்.
இராகவன் சார்,
நானும் ரொம்ப சந்தோஷமா பயணித்த அனுபவம் கிடைத்தது.
தொடர் அருமை.
//ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான்.//
ஏங்க உலகத்துக்கு போய்ட்டீங்க அவனவன் சொந்தவூருக்கு போகவே கம்பெனிகிட்ட கையேந்துரான்.
// சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். //
சரியா சொன்னீங்க நமக்கு வெவரம் பத்தாது.
பயணம் நல்ல படியா முடிஞ்சதா?! மகிழ்ச்சி. கட்டுரைகள் நல்லா வந்திருந்தன.
நான் கேட்க வந்ததை தேவு ஏற்கனவே கேட்டாச்சே. மக்ரூன் வாங்க்கினீங்களா? அப்படின்னா என்னான்னே இங்க நிறையா பேருக்குத் தெரியாது. விளக்கமா சொல்லுங்க.
// Dev said...
ஜி.ரா,
அருமையானத் தொடர். படிக்கும் போது நானும் உங்களுடன் பயணித்த ஒரு இனிய அனுபவம் கிட்டியது. //
நன்றி தேவ். மூனு நாள்தான் போயிட்டு வந்தது. அதச் சொல்ல பதினாலு பதிவுகள். இன்னும் சொல்ல நெறைய இருக்கு. ஆனா படிக்கிறவங்களுக்கு அலுப்புத் தட்டக்கூடாது பாருங்க. அதான்.
// தூத்துக்குடியைக் கடைசிப் பதிவில் கலக்கலாப் பதிஞ்சிட்டீங்க. உப்பளத்தின் விவரிப்பு அற்புதம். ஸ்பீக்ல்ல தான் என்னுடையச் சித்தப்பா வேலைப் பாக்குறாங்க //
தூத்துக்குடியப் பத்திச் சொல்லனும்னா நெறையச் சொல்லலாம். இன்னும் எச்சகச்சமா இருக்கு. முடிக்கனுமேன்னு ஒன்னும் சொல்லல. அதுவுமில்லாம, இந்தப் பயணத்துல வண்டி ஏறத்தான தூத்துக்குடீல நேரமிருந்தது.
// அப்புறம் மெக்ரூன் ஸ் வாங்குனீங்களா? தூத்துக்குடி முயல் தீவுப் போன அனுபவம் உண்டா? //
இல்லையே தேவ். வாங்கலையே. நேரமில்லையே. முயல் தீவுக்குப் போனதில்ல. லாஞ்சில போவாங்க. என்னமோ நான் போனதில்ல.
// நிறைவானப் பதிவு. சபாஷ் ஜிரா //
மீண்டும் ஒரு நன்றி.
// நெல்லைகிறுக்கன் said...
பனங்கெழங்கு, தேங்கா பன் இதெயெல்லாம் பத்தி சொல்லி ஆசய உண்டாக்கிட்டீரே. பொங்கல் அப்போ பனங்கெழங்கு தின்னது. தூத்துக்குடில ரொம்ப பிரபலமான மக்ரோன், மஸ்கோத்து இதெயெல்லாம் சொல்லலியே நீரு.... //
என்ன செய்யச் சொல்றீக. ஊரப் பத்திச் சொல்லனும்னா இதையெல்லாம் சொல்லாம இருக்க முடியுமா?
மக்ரூனப் பத்திச் சொன்னா சொல்லிக்கிட்டேயிருக்கலாம். அது அவ்வளவு சொகம்.
//உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம்.//
கரெக்ட் ஜி.ரா
எனக்கும் அப்டிதான், கைல ஒன்னும் நிக்க மாட்டேங்குது! யாராச்சும் மனசு வெச்சு, பயணச் செலவு, சாப்பாடு, தங்கும் இடம் மற்றும் ஊர்சுத்தி பாக்க செலவு எல்லாம் ஏத்துக்கிட்டா வெளியூரோ/வெளிநாடோ போய் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்!
(ஓடாதீங்க.. ஹலோ... நில்லுங்க!)
;-)
// மணியன் said...
ஒரு இனிய சுற்றுலா சென்று வந்த நிறைவு. தூத்துக்குடி இரயில்நிலயமா ? அழகாக இருக்கிறதே ! //
ஆமாம் மணியன். தூத்துக்குடி இரயில் நெலயந்தான். முந்தி இந்த சிப்பிக்குள் முத்தெல்லாம் கெடையாது. அதாவது நான் சின்னப்புள்ளைல. பின்னால ரயில்வே ஸ்டேஷன் கொஞ்சம் தள்ளி வந்துருச்சி. அப்பத்தான் இந்த அழகூட்டல் எல்லாம் செஞ்சாங்க. ஆனா எனக்கு அந்தப் பழைய ஸ்டேஷன் ரொம்பப் பிடிக்கும். மதிய வேளைல ஸ்கூல்ல இருந்து டிபன் பாக்ஸ் எடுத்துக்கிட்டுப் போய் அங்க உக்காந்து சாப்புடுவோம். அந்த ஸ்டேஷன்ல வெச்சித்தான் எனக்கு முட்டதின்னின்னு பட்டப் பெயர் கெடச்சது. :-)
// நாம் அவர்களைப் பார்த்து ஒரு குடும்ப பாரமில்லாமல் ஊர் சுற்றுவதை அதிசயிக்கிறோம்; அவர்கள் நமது குடும்ப பிணைப்பை அதிசயிக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் 30 வயதில் பெற்றோருடன் வாழ்வது அவர்களுக்கு ஆச்சர்யம் :)
வேலையில் நாம் நிரந்திரத்தைத் தேடுகிறோம்;நாளை நல்வாழ்வு வாழ இன்றைய சுகத்தை இழக்கிறோம். //
அதே அதே...இக்கரைக்கு அக்கரைப் பச்சே..............
// சிவமுருகன் said...
இராகவன் சார்,
நானும் ரொம்ப சந்தோஷமா பயணித்த அனுபவம் கிடைத்தது.
தொடர் அருமை. //
ரொம்ப நன்றி சிவமுருகன். அது சரி...அதென்ன சாரு? என்னைய சார் போட்டுக் கூப்புட்டுட்டீங்களே........ஓஓஓஓஓஓஓஓஓ
// //ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான்.//
ஏங்க உலகத்துக்கு போய்ட்டீங்க அவனவன் சொந்தவூருக்கு போகவே கம்பெனிகிட்ட கையேந்துரான். //
அது வேறயா! அது சரி......
// // சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். //
சரியா சொன்னீங்க நமக்கு வெவரம் பத்தாது. //
அதே அதே..அவங்களுக்கும் வெவரம் பத்தாது. ஆனா நம்மளையும் அவங்களையும் கலந்துட்டா....எல்லாரும் வெவரம் தெரிஞ்சவங்களாவும் ஆகலாம். எல்லாரும் வெவரம் கெட்டங்களாகவும் ஆகலாம். :-)))))))))))
// குமரன் (Kumaran) said...
பயணம் நல்ல படியா முடிஞ்சதா?! மகிழ்ச்சி. கட்டுரைகள் நல்லா வந்திருந்தன. //
கிழிஞ்சது போங்க. எப்பக் கேக்குறீங்க. மார்ச்சு கடைசீல நடந்த பயணம் இது. ஏப்ரல் முடிஞ்சி இப்ப மேயும் முடிஞ்சிருச்சி.
// இலவசக்கொத்தனார் said...
நான் கேட்க வந்ததை தேவு ஏற்கனவே கேட்டாச்சே. மக்ரூன் வாங்க்கினீங்களா? அப்படின்னா என்னான்னே இங்க நிறையா பேருக்குத் தெரியாது. விளக்கமா சொல்லுங்க. //
மக்ரூன்.....ஆகா...கொத்ஸ்...அது ஒரு அற்புதப் பண்டம். தொட்டால் மொறுமொறுப்பு...வாயில் பட்டால் கரையும் தித்திப்பு....சிறிய கூம்பு வடிவம் அதன் அமைப்பு...வெண்மை நிறமோ அதன் சிறப்பு....
சரி. சரி. விஷயத்துக்கு வாரேன்.
மக்ரூனை முதன் முதலா அறிமுகப் படுத்துனது வள்ளி பேக்கரிதான். இன்னமும் தூத்துக்குடி பழைய பஸ்டாண்டு பக்கத்துல இருக்கு. அங்க குளுகோஸ் பிஸ்கட்டுன்னு ஒன்னு கிடைக்கும்...அதுவும் எனக்குப் பிடிக்கும். ஆனா வீட்டுல அதச் சோளமாவு பிஸ்கட்டுன்னு சொல்லி கிண்டல் செய்வாங்க.
இப்ப மக்ரூன் செய்முறையப் பாப்போம். முட்டையின் வெள்ளைக்கரு (மட்டும்) எடுத்துகிட்டு அத்தோட தூளாக்குன ஜீனியப் போட்டு அடிப்பாங்க. இதுலதான் இருக்கு சூக்குமம். அத எவ்வளவு நேரம் அடிக்கனுங்கறதுதான் மொறுமொறுப்புக்கும் சுவைக்கும் அடிப்படை. அப்புறம் அதோட முந்திரிப் பருப்பு மாவும் தூளும் போட்டு நல்லா கலப்பாங்க. அதச் சின்னச் சின்ன கூம்புகளா ஊத்தி மெல்லிசா..ஆனா அணையாத தணல் அடுப்புல (ரொட்டி சுடுவாங்களே) ராத்திரி முழுக்க வெச்சிருவாங்க. காலைல அந்தத் தட்டை எடுத்த....கூம்பு கூம்பா மக்ரூன்க ஜம்முன்னு இருக்கும். அதுல ஒன்ன எடுத்து வாயில போட்டா....ஜொள்ள்ள்ளுன்னு கரஞ்சு போகும். எனக்கே ஆசையா இருக்கே...இப்பத் தூத்துக்குடி கோயில்பட்டி பக்கம் போயிட்டு வர்ரவங்க யாருமில்லையே.......
இன்னொரு விஷயம்.
தூத்துக்குடிக்கு வெளிய மக்ரூன்னு சொல்லி தேங்காய் போட்டு பண்ணினத விக்கறாங்க. ஆனா அசல் மக்ரூனில் முந்திரிதான் பிரதானம்.
தூத்துக்குடிக்கு மக்ரோனக் கொண்டு வந்தது வெள்ளக்காரனுவன்னு கேள்விப் பட்டிருக்கேன். மக்ரோன தூத்துக்குடிக்கு அறிமுகப் படுத்தினது தனலட்சுமி பேக்கரின்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா நீரு சொல்லித் தான் வள்ளி பேக்கரின்னு தெரியும்...
அன்பின் ராகவன்,
பயணக் கட்டுரை அருமையாக இருந்தது.ஒவ்வொரு கட்டுரைக்கும் மனதில் நினைப்பதெல்லாம் பின்னூட்டமாக இட ஆசை.ஆனால் எழுத ஆரம்பித்தவுடன் வார்த்தைகள் வரவில்லை..
நான் உங்கள் பதிவின் மூலம் படித்ததை விட கற்றுக் கொண்டது அதிகம் ராகவா..
எம் பெருமான் முருகனின் அருள் என்றும் உனக்கு உண்டு...
ஆளுக்கால் என்னலாமோ கட்சி ஆரம்பிக்கிராங்க..ஏதோ அவங்களுகுள்ளேயே வித்தியாசமா தமிழ் மாதிரியே ஒரு பாஷை..பொதுக்க்கூட்டம்.. ஏன் நாம திருமந்திர ஊரை சேர்ந்தவங்கயெல்லாம் சேர்ந்து ஒரு பெயரையும் வச்சு நம்ம பாஷைல பேசக் கூடாது ??
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
ராகவன்
அவங்க வாழ்க்கைல பணம் சேர்ப்பது இல்லை.நாமதான் குழந்தை குட்டிக்கு சேர்த்து வைப்போம்.அவங்க அப்படி செய்வது இல்லை.அதான் ஊர் சுற்ற முடியுது.இன்னொரு காரணம் அவங்க நாட்டு பணத்தோட மதிப்பு ஜாஸ்தி
//கிழிஞ்சது போங்க. எப்பக் கேக்குறீங்க. மார்ச்சு கடைசீல நடந்த பயணம் இது. ஏப்ரல் முடிஞ்சி இப்ப மேயும் முடிஞ்சிருச்சி.
//
ஏமண்டி ராகவுடு. நாகு தெலவாதா? ஏதோ பயணக்கட்டுரை எழுதி முடிச்சீங்களே; அதைச் சொன்னா.... போமையா...
அப்படியே நம்ம 200வது பதிவுக்கு வாங்க. உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வச்சிருக்கேன்.
அடடா..
அந்த உப்பளத்த பாக்கும்போது பழைய ஞாபகம் எல்லாம் வருது..
அதுவும் உங்க ஊரப் பத்தி எழுதிக்கிட்டிருக்கற நேரத்துல.. நல்ல பொருத்தம்!
அப்புறம் மேலைநாட்டு பயணிகளைப் பற்றி..
அவங்க எல்லாம் அன்னன்னைக்கு மட்டும் வாழறாங்க.. நாளைய தினத்த பத்தி நாளைக்கு கவலைப் பட்டுக்கலாம்னு..
ஆனா நாம.. நாளைக்கு, நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு என்னைக்குமே வாழறதில்லை..
// paarvai said...
ராகவா!
பயணம்;நிறைவாக முடிஞ்சுது.இந்த தேங்காய் பன் இப்போ தான் கேள்விப்பட்டுள்ளேன்.பனங்கிழங்கு;தும்பு வார்ந்து;அழகாக இருந்தது.பனங்கிழங்குத் துவையல் சாப்பிட்டுள்ளீர்களா?; என் பேத்தியாரை நினைவில் நிறுத்தும் சிற்றுண்டி. நாவூறுது.//
ஐயோ! யோகன்...நான் சாப்பிட்டதில்லையே...பனம்பழம், நொங்கு, பனங்கெழங்குன்னு நம்ம வட்டம் முடிஞ்சி போச்சே...ஆகா...அந்தத் துவையல் மகிமைய கொஞ்சம் எடுத்து விடுங்களேன். எப்படிச் செய்றது...எதுக்குத் தொட்டுக்குறதுன்னு...
//"வெளி நாட்டுக்காரரிடம் நாமும்;நம்மிடம் அவர்களும் பல நல்ல விடயங்கள்; இன்னும் கற்க்க உண்டு.
நான் அவர்களுடன் பழகியதில் தெரிந்து கொண்டததே!!!!
யோகன் பாரிஸ் //
நல்லவை எங்கும் உண்டு. தீயவையும் எங்கும் உண்டு. நாம் எதை எடுக்கிறோம் என்பதுதான் நடைமுறை.
நான் மட்டுமே, நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று சொல்கிறவர்களைப் பார்த்து யார் வேண்டுமானாலும் சிரிக்கலாம். ஏனென்றால் தவறில்லாத மனிதனும் இல்லை. வேறு எதுவும் இல்லை.
// Agent 8860336 ஞான்ஸ் said...
//உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம்.//
கரெக்ட் ஜி.ரா
எனக்கும் அப்டிதான், கைல ஒன்னும் நிக்க மாட்டேங்குது! யாராச்சும் மனசு வெச்சு, பயணச் செலவு, சாப்பாடு, தங்கும் இடம் மற்றும் ஊர்சுத்தி பாக்க செலவு எல்லாம் ஏத்துக்கிட்டா வெளியூரோ/வெளிநாடோ போய் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்!
(ஓடாதீங்க.. ஹலோ... நில்லுங்க!)
;-) //
அடடா! ஞான்ஸ்...இப்படி ஆச்சுதே...ஒங்க நிலமை. வருத்தப் படாதீங்க. உங்களுக்கும் காலம் வரும். (அட ஆண்டவா...ஞான்ஸ் கிட்ட போய் இப்படிச் சொல்ல வேண்டியதாச்சுதே...இதுதான் அங்கதமோ!)
// இலவசக்கொத்தனார் said...
இன்னொரு விஷயம்.
தூத்துக்குடிக்கு வெளிய மக்ரூன்னு சொல்லி தேங்காய் போட்டு பண்ணினத விக்கறாங்க. ஆனா அசல் மக்ரூனில் முந்திரிதான் பிரதானம். //
என்னது மக்ரூன்ல தேங்காயா? யாரங்கே...அப்படிச் செய்வது யாரென்று கண்டுபிடித்து அவர்களைக் கழுவேற்றுங்கள். மக்ரூனின் மான்பும் பண்பும் கெடச் செய்த கயவர்கள் இனிமேல் மக்ரூனே செய்யார் என உறுதி செய்யுங்கள். ஐயகோ! மக்ரூனின் பெருமைக்கு இப்பிடி ஒரு களங்கமா...நெஞ்சு பொறுக்குதில்லையே....யாரங்கெ...ரெண்டு கிலோ மக்ரூனை என் முன்னை கொண்டு வாருங்கள்.
மக்ரூன்ல மூனே மூனு பொருட்கள்தான் சேக்கனும். முட்டையோட வெள்ளைக்கரு. ஜீனி, முந்திரி மாவும் தூளும். அவ்வளவுதான். இதுல எதக் கூட்டுனாலும் கொறச்சாலும் கத காலிதான்.
// நெல்லைகிறுக்கன் said...
தூத்துக்குடிக்கு மக்ரோனக் கொண்டு வந்தது வெள்ளக்காரனுவன்னு கேள்விப் பட்டிருக்கேன். மக்ரோன தூத்துக்குடிக்கு அறிமுகப் படுத்தினது தனலட்சுமி பேக்கரின்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா நீரு சொல்லித் தான் வள்ளி பேக்கரின்னு தெரியும்... //
தனலட்சுமி பேக்கரியா? இருக்கலாம். எனக்குத் தெரிஞ்சி தனலட்சுமி, வள்ளி, ஞானம்...இது மூனுமே தூத்துக்குடியில ரொம்பப் பழைய பேக்கரிங்க. மூனுலயும் யோசிக்காம வாங்கலாம்.
// Maya said...
அன்பின் ராகவன்,
பயணக் கட்டுரை அருமையாக இருந்தது.ஒவ்வொரு கட்டுரைக்கும் மனதில் நினைப்பதெல்லாம் பின்னூட்டமாக இட ஆசை.ஆனால் எழுத ஆரம்பித்தவுடன் வார்த்தைகள் வரவில்லை.. //
வாங்க மாயா (சுருக்கமா இப்பிடி இருக்கலாந்தானே...)... அதுனால என்ன...ஒங்களுக்கு எப்ப எது தோணுதோ...அப்ப அத எழுதுங்க. :-)
// நான் உங்கள் பதிவின் மூலம் படித்ததை விட கற்றுக் கொண்டது அதிகம் ராகவா..//
பாத்ததும் கேட்டதும் படிச்சதும் தெரிஞ்சதும் சொல்றதுதானே.
// எம் பெருமான் முருகனின் அருள் என்றும் உனக்கு உண்டு...//
உங்களுக்கும் எம் பெருமானா? அப்ப நம் பெருமான்னு சொல்லுங்க. :-)
// ஆளுக்கால் என்னலாமோ கட்சி ஆரம்பிக்கிராங்க..ஏதோ அவங்களுகுள்ளேயே வித்தியாசமா தமிழ் மாதிரியே ஒரு பாஷை..பொதுக்க்கூட்டம்.. ஏன் நாம திருமந்திர ஊரை சேர்ந்தவங்கயெல்லாம் சேர்ந்து ஒரு பெயரையும் வச்சு நம்ம பாஷைல பேசக் கூடாது ??
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன் //
தாராளமாச் செய்யலாம். ஆனா பாருங்க...இப்ப பல ஊர் போய் வந்து எல்லாம் கலங்கலா பேச்சுல வருது. ஆனாலுஞ் செஞ்சுறலாம்வே...
மொதக் கேட்ட நீங்களே தலைவராயிருங்க....நாங்கள்ளாம் கச்சி மெம்பரு ஆயிருதோம். தானைத் தலைவர் மாயா வாழ்க.
தூடி தலைவர் மாயா வாழ்க.
(வேற யாரெல்லாண்டே கோஷம் போட வர்ரது?)
ராகவன்
தொடரின் இறுதியில்தான் வந்து சேர முடிஞ்சது. ஆனாலும் உங்க பார பட்சத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். காயல்பட்டினம், ஆத்தூர் எல்லாம் தெரியுது, இடையிலே உள்ள ஆறுமுகநேரி தெரியலையா? உங்க பேச்சு கா! இனி உங்க பதிவு பக்கமே வரப் போறதில்லே!!( அழுவுறேன்)
// செல்வன்$ said...
ராகவன்
அவங்க வாழ்க்கைல பணம் சேர்ப்பது இல்லை.நாமதான் குழந்தை குட்டிக்கு சேர்த்து வைப்போம்.அவங்க அப்படி செய்வது இல்லை.அதான் ஊர் சுற்ற முடியுது.இன்னொரு காரணம் அவங்க நாட்டு பணத்தோட மதிப்பு ஜாஸ்தி //
முதல் காரணம் சரி செல்வன். ஆனா பணத்தோட மதிப்புங்குற காரணம் சரியில்லை. நம்மள்ள எத்தனை பேர் இந்தியாவுக்குள்ள நல்லா சுத்திப் பாத்திருக்கோம்? வங்காளிகள் பத்தி இங்க சொல்லியே ஆகனும். பெங்களூர்ல பக்கத்துல இன்னன்ன இடங்கள் இருக்குன்னு கண்டு பிடிச்சுப் போகனும்னு ஒரு இதோட இருந்தாங்க. நானும் அவங்க கூடப் போயிருக்கேன். நாலு எடத்தப் பாக்கனும்...நாலு விஷயம் தெரிஞ்சுக்கனும்னு அவங்களுக்கு அவ்வளவு ஆர்வம். நம்மில்? சண்ட போடத்தான நேரம் இருக்கு.
// குமரன் (Kumaran) said...
//கிழிஞ்சது போங்க. எப்பக் கேக்குறீங்க. மார்ச்சு கடைசீல நடந்த பயணம் இது. ஏப்ரல் முடிஞ்சி இப்ப மேயும் முடிஞ்சிருச்சி.
//
ஏமண்டி ராகவுடு. நாகு தெலவாதா? ஏதோ பயணக்கட்டுரை எழுதி முடிச்சீங்களே; அதைச் சொன்னா.... போமையா... //
மீக்கு தெலுசனி நாக்கு தெலுசு. இக்கட செப்த்தே மீரு ரெண்டு பின்னூட்டமுலு இஸ்தாருகாதா...தானிக்கே செப்பேனு.
// அப்படியே நம்ம 200வது பதிவுக்கு வாங்க. உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வச்சிருக்கேன். //
வேண்டுகோளா..........என்னன்னு தெரியலையே...வாரேன்..வாரேன்.
// tbr.joseph said...
அடடா..
அந்த உப்பளத்த பாக்கும்போது பழைய ஞாபகம் எல்லாம் வருது..
அதுவும் உங்க ஊரப் பத்தி எழுதிக்கிட்டிருக்கற நேரத்துல.. நல்ல பொருத்தம்! //
வரனுமே...அங்க எவ்வளவு நாள் இருந்திருக்கீங்க...இப்ப நீங்க திரும்பிப் பாக்க இன்னும் நெறைய விஷயங்க கெடைச்சிருக்குமே....நல்லாத் திரும்பிப் பாருங்க....
// அப்புறம் மேலைநாட்டு பயணிகளைப் பற்றி..
அவங்க எல்லாம் அன்னன்னைக்கு மட்டும் வாழறாங்க.. நாளைய தினத்த பத்தி நாளைக்கு கவலைப் பட்டுக்கலாம்னு..
ஆனா நாம.. நாளைக்கு, நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு என்னைக்குமே வாழறதில்லை.. //
நூத்துல ஒரு பேச்சு சார். நாளை பெரிதுதான். அது இன்றை அமைத்துச் செய்யப் பட்டதாக இருக்கலாம். ஆனால் அது இன்றை அழித்துச் செய்யப் பட்டதாக இருக்கக் கூடாது.
எல்லப் பதிவும் வாசிச்சாச்சு. போத்திஸ், பிரியாணி, மணல்வீடு, மொட்டை, எல்லாமுமே ரொம்ப ஜோர்.
வாங்க தாணு. ரொம்ப நாள் கழிச்சு நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க. பாருங்க...குடுக்கப் பதினி கூட இல்ல. ரெண்டு நாளைக்கு முன்னாடி கனவுல பதினி வாங்கிக் குடிக்கிற மாதிரி வந்தது. நிறைவேறுமா!
// தாணு said...
ராகவன்
தொடரின் இறுதியில்தான் வந்து சேர முடிஞ்சது. ஆனாலும் உங்க பார பட்சத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். காயல்பட்டினம், ஆத்தூர் எல்லாம் தெரியுது, இடையிலே உள்ள ஆறுமுகநேரி தெரியலையா? உங்க பேச்சு கா! இனி உங்க பதிவு பக்கமே வரப் போறதில்லே!!( அழுவுறேன்) //
அழாதீங்க தாணு. அழாதீங்க. இப்பப் பதிவப் பாருங்க. ஆறுமுகநேரி மட்டுமில்லாம உங்க பேரும் வரும் பாருங்க. நடந்த தப்புக்குக் கோவிச்சிக்கிறக் கூடாது.
ஜி.ரா,
லேட்டா வந்தாச்சு.. எல்லா பின்னூட்டமும் படிக்க முடியலை.. பதிவை விட பெரிசா இருக்கு :)
எனக்குக் கூட அப்பப்போ இந்த வேலையை விட்டுட்டு ஏதாச்சும் கால் டாக்ஸி ஓட்டி, இல்லைன்னா சின்ன கடை ஒண்ணு போட்டுட்டு இருந்துடலாம்னு தோணும்.. அதிலும் இங்க டாக்ஸி ஓட்டறவங்க யாருமே அதை முழு நேரத் தொழிலா செய்யறது இல்லை.. அதைப் பத்தி கேள்விப் பட்டதிலிருந்து இப்படி ஒரு எண்ணம் ரொம்ப சீரியஸாய்கிட்டு இருக்கு:). எவ்வளவு டென்சன் இல்லாத வாழ்க்கை.. டெட்லைன், மீட்டிங், டெலிவரபிள்.. எந்த வார்த்தையும் கேட்காம.. ம்ஹும் :(
ராகவன்,
அருமையான தொடர்( பாம்பின் கால் பாம்பறியும்!)
தூத்துகுடி ஸ்டேஷனா அந்த முத்தும் சிப்பியும்? அழகா இருக்கேப்பா.
நான் இன்னும் அந்தப்பக்கமெல்லாம் போகலை. நம்ம தோழியின்கூட இந்தியா வந்தப்ப நல்ல ச்சான்ஸ்.
அவுங்க சொந்தக்காரங்களைப் பார்க்க வீரபாண்டிப்பட்னம் போனாங்க. நான் மாமியாரைப் பார்க்கப்போயிட்டேன்.
விடறதுல்லை அடுத்தமுறை.
நாளை நாளைன்னு இன்றை அனுபவிக்காமப் போற ஜென்மந்தான் நாம். அது கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருது.
அதுவரை சந்தோஷம்தான்.
ராகவன்,
தன்யளானென். இனிப்பு கேட்டதுக்கு ஸ்வீட் ஸ்டாலே கொடுத்துட்டீங்களே. மிக்க நன்றி
I wish I could read Tamil.
வணக்கம் ராகவன்
தங்கள் பாணியில் அருமையாகப் பயணத்தொடரில் கலக்கியிருந்தீர்கள்.
Post a Comment