
பெரியார் பற்றிய தெரிதலும் புரிதலும் மிகக் குறைவுதான் எனக்கு. பள்ளிக்கூடத்தில் படித்ததுண்டு. அதற்குப் பிறகு பலர் சொல்லித் தெரிந்து கொண்டதுண்டு. வலைப்பூக்களிலும் கொஞ்சம் படித்ததுண்டு. அவ்வளவுதான். ஆகையால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் படம் பார்க்க உட்கார்ந்தேன். அந்த வகையில் படத்தைப் பற்றியும் அதில் சொல்லப்படும் பெரியார் பற்றியும் என்னுடைய கருத்துகளை இந்தப் பதிவில் சொல்ல விரும்புகிறேன்.
வரலாற்றை திரைப்படமாக எடுப்பது என்பது எளிதன்று. அந்த வகையில் இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி. திரைக்கதையில் சிற்சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும்.....இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி என்பதில் ஐயமில்லை. பாடல்களை விட பின்னணியிசை நன்றாக அமைந்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சத்யராஜைப் பொருத்த வரையில் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நல்ல நடிகர்தான். சமீப காலத்தில் நடிக்கும் குத்தாட்டப் படங்களால் எரிச்சல் உண்டாக்கியவர் இந்தப் படத்தில் பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார். நடிகர் திலகம் நடிக்க விரும்பிய பாத்திரம் இவருக்கு. அந்த அளவுக்கு நடிப்பு இல்லையானாலும்...இரண்டாவது பாதியில் நல்ல நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
ஜோதிர்மயி.....இவ்வளவு நல்ல நடிகையா நீங்கள்? தெரியாமல் போய் விட்டதே. இப்படியெல்லாம் நடித்தால் தமிழில் வாய்ப்புக் கிடைப்பது மிகக் கடினம். உங்கள் நடிப்பைப் பாராட்டுகிறேன். குஷ்பூவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இன்னும் பாராட்டப்பட வேண்டியவர்கள் பெரியாரின் தாயாக வரும் மனோரமாவும் அவரது கணவனாக நடித்த அந்தத் தெலுங்கு நடிகரும். நாராயணா நாராயணா என்று சொல்லிக் கொண்டே தெலுங்கு கலந்த தமிழில் புலம்பும் மனோரமாவின் நடிப்பு சிறப்பு. மகனை நினைத்துப் புலம்பும் கட்டங்களில் காட்டப்பட வேண்டிய எரிச்சலை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். அந்தத் தெலுங்கு நடிகர்....பெரியாரின் தந்தையாக நடித்தவர்....பெயர் என்னங்க? நல்லா நடிச்சிருக்கீங்க. தெலுங்கு கலந்த தமிழ் பேச மனோரமா பட்ட சிரமம் இவருக்கு இல்லை.
ராஜாஜி, காந்தி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி என்று எல்லாரும் வருகிறார்கள். ஆனால் அளவான பாத்திரங்கள். அந்த அளவோடு அவர்கள் நடித்துள்ளார்கள். சரி. ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அலுப்புத் தட்டும். படம் சொல்லும் கருத்துகளுக்கு வருவோம். இந்தப் படத்தில் சொல்லப்படுவது உண்மையான நிகழ்ச்சிகள் என்று நம்பிக்கொண்டே தொடர்கிறேன்.
ஆரம்பகட்டத்தில் பெரியார் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறார். ஆனாலும் குழந்தைத் திருமண எதிர்ப்பு, கைம்பெண் மறுமணம் என்றும் சிந்தித்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டியது. தாசி வீட்டுக்குப் போனவர் என்பதால் அவர் எதிர்த்த குழந்தைத் திருமணங்கள் ஆதரிக்கபடலாகாது. அந்த எதிர்ப்பு சரியானதே. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. கைம்பெண் மறுமணமும் ஆதரிக்கப்பட வேண்டியதே.
படத்திற்கு வருவோம். பெரியார் பிறந்தது ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பில். அந்த வகுப்பிற்காக ஏதாவது போராட்டம் நடத்தி சாதித் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஆகியிருக்கலாம். ஆனால் ஆகவில்லை. சாதீய வேறுபாடுகளைக் களைவதுதான் அவருக்குக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் சாதி பார்ப்பது இருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடக் குறைவாகத்தான் இருக்கிறது. இது இன்னும் குறையும் என்று நம்புவோம். குறைய வேண்டும் என்று விரும்புவோம்.
வளர்ந்து திருமணம் செய்த மகனாக இருக்கையில் அப்பாவிடம் செருப்பால் அடி வாங்கியிருக்கிறார். அதுவும் மிகச்சரியான காரியத்தைச் செய்ததற்கு. அப்பொழுதுதான் காசிக்குப் போகிறார். அங்கே பிராமணர்களுக்குச் சோறு போட்டால்தான் புண்ணியம் என்று சொல்கிறார்கள். பசித்த எவருக்கு அன்னமிட்டாலும் அது புண்ணியம். வள்ளுவரே சொல்லியிருக்கிறார். வறியார்க்கொன்று ஈவதே ஈகை. எச்சில் சோற்றைச் சாப்பிடும் நிலை. அடக்கொடுமையே.
காசியை விட்டு வந்த பிறகுதான் காங்கிரசில் சேருகிறார். ஆனாலும் அவரது குறிக்கோள் சமூக சீர்திருத்தம் என்பதாகவே இருந்திருக்கிறது. அது நடக்காது என்று தெரிந்து கொண்ட நிலையில்தான் காங்கிரசை விட்டு விலகியிருக்கிறார்.
வைக்கம். மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய போராட்டம். ஈழவர் என்றால் இத்தனை தூரமும்...ஒவ்வொரு சாதிக்காரரும் ஒவ்வொரு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நம்பூதிரிகள் சொல்லியிருப்பது மிகக்கொடுமை. அப்பொழுது ஒரு சிறுவன்...அந்த நாய் எவ்வளவு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று கேட்பது கிண்டல். ஆனால் வேதனை தரக்கூடிய கேள்வி. நல்லவேளையாக இன்றைக்கு அந்த நிலை மாறியிருக்கிறது. பெரியாருக்கு நன்றி.
ஊருக்கு உபதேசம் வீட்டுக்குள் பலவேசம் என்று வாழவில்லை அவர். போராட்டங்களுக்கு வீட்டுப் பெண்களையே முன்னிறுத்தியிருக்கிறார். கள்ளுக்கடை மறியல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவரது மனைவியும் தங்கையும்தான் முன்னின்று போராடியிருக்கிறார்கள்.
இந்தப் படத்திலும் பெரியாரின் வாழ்க்கையிலும் நான் விரும்பி ரசித்த கட்டம் பெரியார்-மணியம்மை திருமணம். அது உடல் தேவையோ...மனத்தேவையோ....இரண்டு உள்ளங்கள் ஒப்பிச் செய்த பிணைவு. அதில் குறுக்கிட எந்த அரசியல்வாதிக்கும்.....அட...எந்த மனிதனுக்கும் உரிமையில்லை. பொருட்டாக மதிக்கவும் தேவையில்லை. "ஐம்பதிலும் ஆசை வரும்" என்று டி.எம்.எஸ் பாடலை எல்லாரும் ரசித்துதானே கேட்டோம். ஐம்பது வயதானவர்கள் எல்லாரும் விரதம் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்ன? என்னைப் பொருத்த வரையில் பெரியார்-மணியம்மை திருமணம் என்பது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. பெரியார்...இது தொடர்பாக உங்களையும் மணியம்மையையும் நான் புரிந்து கொள்கிறேன்.
அதே போல இன்னொரு கட்டம். ஒரு மாநாடு நடக்கிறது. அதில் சமைக்க ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களை அழைத்துச் சமைக்க வைக்கிறார். அதுவரையில் பிராமணர்கள் மட்டுமே சமைத்துக் கொண்டிருந்த நிலை மாறுகிறது. நான் என்னுடைய நினைவு செல்லும் வழியில் சென்று யோசித்துப் பார்க்கிறேன்.
என்னுடைய தாத்தா-பாட்டி திருமணத்தில் கண்டிப்பாக எங்கள் சாதியிலிருந்துதான் சமையல்காரர்கள் வந்திருப்பார்கள். வெளியிலிருந்து கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் பிராமணர்களும் வந்து சமைத்திருப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோரின் திருமணத்தில் இந்த நிலையில் ஒரு மாற்றம். சாதி பார்த்து சமையல்காரர்கள் அழைக்கப்படவில்லை. என்னுடைய சகோதரிகளின் திருமணத்திலும் அப்படியே. சமைக்கத் தெரியுமா...நல்ல பண்டங்கள் செய்வார்களா என்றுதான் பார்த்தோம். சாதி..கீதியெல்லாம் பார்க்கவில்லை. உடனே எல்லாரும் கேட்பார்கள். சமையலுக்குச் சாதி பார்க்கவில்லை..மாப்பிள்ளைக்கு எப்படி என்று...உண்மைதான். நல்ல கேள்வி. கண்டிப்பாகப் பார்க்கப் பட்டது. அதே நேரத்தில் சென்ற தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் மாநிலம் தாண்டிய காதற் திருமணங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்திருக்கிறது. இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இட்ட தீபாவளிப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் இது அதற்கு முந்தைய தலைமுறைகளில் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆக..ஒரு முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் இன்னும் போக வேண்டும். அந்த வகையில் மாற்றம் வரவேற்கத்தக்கதே.
பொதுவில் சாதீய வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் பெரியாரின் கருத்துகளை நான் ஆதரிக்கிறேன்.
"உடலுறவு சந்தோசத்துக்க்காக இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலைங்க. அதுதான் நோக்கம்னா அதுக்குக் கல்யாணமே அவசியமில்லைங்க. அது நம்ம இயக்கத்துல இருக்குற மைனர்களுக்கு ஏன் புரியலைன்னு எனக்குத் தெரியலைங்க. மணியம்மை ஒன்னும் சின்னக் கொழந்தை இல்லங்க. அவங்களுக்கு முப்பது வயசாகுது. அவங்க சம்மதத்தோடத்தான் இந்தக் கல்யாணம் நடந்துருக்குது. நம்ம இயக்கத்துல எனக்கு நம்பிக்கையானவங்க ஒருத்தருமில்லைன்னு சொன்னா அது ஒங்களுக்கெல்லாம் உறுத்தலா இருக்குதுங்க." - மணியம்மையோடு திருமணம் முடித்து விட்டு பெரியார் சொன்னது. ஆகையால் இனிமேல் பெரியாரை அவர் எழுத்துகளைப் படித்து மட்டுமே புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவர் சொன்ன இந்தக் கருத்தைக் கூட அவர் பெயரைச் சொல்கின்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே நினைக்கின்றேன். பெரியார் மட்டுமல்ல பல பெரியவர்களுக்கு இந்த நிலைதான்.
எல்லாரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால்...பெரியாரின் எழுத்தைப் படியுங்கள். வெறும் கடவுள் எதிர்ப்புக்குள் மூழ்கி விடாதீர்கள். அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதைத்தான் அவரும் விரும்புகிறார். கும்பிடாவிட்டால் நரகம்....சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் கொடும் தண்டனை என்பதை எதிர்க்க்கின்றவர் அவர்.
அன்புடன்,
கோ.இராகவன்