Monday, May 21, 2007

பெரியார் - திரைப்படம்



பெரியார் பற்றிய தெரிதலும் புரிதலும் மிகக் குறைவுதான் எனக்கு. பள்ளிக்கூடத்தில் படித்ததுண்டு. அதற்குப் பிறகு பலர் சொல்லித் தெரிந்து கொண்டதுண்டு. வலைப்பூக்களிலும் கொஞ்சம் படித்ததுண்டு. அவ்வளவுதான். ஆகையால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் படம் பார்க்க உட்கார்ந்தேன். அந்த வகையில் படத்தைப் பற்றியும் அதில் சொல்லப்படும் பெரியார் பற்றியும் என்னுடைய கருத்துகளை இந்தப் பதிவில் சொல்ல விரும்புகிறேன்.

வரலாற்றை திரைப்படமாக எடுப்பது என்பது எளிதன்று. அந்த வகையில் இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி. திரைக்கதையில் சிற்சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும்.....இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி என்பதில் ஐயமில்லை. பாடல்களை விட பின்னணியிசை நன்றாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சத்யராஜைப் பொருத்த வரையில் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நல்ல நடிகர்தான். சமீப காலத்தில் நடிக்கும் குத்தாட்டப் படங்களால் எரிச்சல் உண்டாக்கியவர் இந்தப் படத்தில் பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார். நடிகர் திலகம் நடிக்க விரும்பிய பாத்திரம் இவருக்கு. அந்த அளவுக்கு நடிப்பு இல்லையானாலும்...இரண்டாவது பாதியில் நல்ல நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

ஜோதிர்மயி.....இவ்வளவு நல்ல நடிகையா நீங்கள்? தெரியாமல் போய் விட்டதே. இப்படியெல்லாம் நடித்தால் தமிழில் வாய்ப்புக் கிடைப்பது மிகக் கடினம். உங்கள் நடிப்பைப் பாராட்டுகிறேன். குஷ்பூவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இன்னும் பாராட்டப்பட வேண்டியவர்கள் பெரியாரின் தாயாக வரும் மனோரமாவும் அவரது கணவனாக நடித்த அந்தத் தெலுங்கு நடிகரும். நாராயணா நாராயணா என்று சொல்லிக் கொண்டே தெலுங்கு கலந்த தமிழில் புலம்பும் மனோரமாவின் நடிப்பு சிறப்பு. மகனை நினைத்துப் புலம்பும் கட்டங்களில் காட்டப்பட வேண்டிய எரிச்சலை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். அந்தத் தெலுங்கு நடிகர்....பெரியாரின் தந்தையாக நடித்தவர்....பெயர் என்னங்க? நல்லா நடிச்சிருக்கீங்க. தெலுங்கு கலந்த தமிழ் பேச மனோரமா பட்ட சிரமம் இவருக்கு இல்லை.

ராஜாஜி, காந்தி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி என்று எல்லாரும் வருகிறார்கள். ஆனால் அளவான பாத்திரங்கள். அந்த அளவோடு அவர்கள் நடித்துள்ளார்கள். சரி. ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அலுப்புத் தட்டும். படம் சொல்லும் கருத்துகளுக்கு வருவோம். இந்தப் படத்தில் சொல்லப்படுவது உண்மையான நிகழ்ச்சிகள் என்று நம்பிக்கொண்டே தொடர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் பெரியார் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறார். ஆனாலும் குழந்தைத் திருமண எதிர்ப்பு, கைம்பெண் மறுமணம் என்றும் சிந்தித்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டியது. தாசி வீட்டுக்குப் போனவர் என்பதால் அவர் எதிர்த்த குழந்தைத் திருமணங்கள் ஆதரிக்கபடலாகாது. அந்த எதிர்ப்பு சரியானதே. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. கைம்பெண் மறுமணமும் ஆதரிக்கப்பட வேண்டியதே.

படத்திற்கு வருவோம். பெரியார் பிறந்தது ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பில். அந்த வகுப்பிற்காக ஏதாவது போராட்டம் நடத்தி சாதித் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஆகியிருக்கலாம். ஆனால் ஆகவில்லை. சாதீய வேறுபாடுகளைக் களைவதுதான் அவருக்குக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் சாதி பார்ப்பது இருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடக் குறைவாகத்தான் இருக்கிறது. இது இன்னும் குறையும் என்று நம்புவோம். குறைய வேண்டும் என்று விரும்புவோம்.

வளர்ந்து திருமணம் செய்த மகனாக இருக்கையில் அப்பாவிடம் செருப்பால் அடி வாங்கியிருக்கிறார். அதுவும் மிகச்சரியான காரியத்தைச் செய்ததற்கு. அப்பொழுதுதான் காசிக்குப் போகிறார். அங்கே பிராமணர்களுக்குச் சோறு போட்டால்தான் புண்ணியம் என்று சொல்கிறார்கள். பசித்த எவருக்கு அன்னமிட்டாலும் அது புண்ணியம். வள்ளுவரே சொல்லியிருக்கிறார். வறியார்க்கொன்று ஈவதே ஈகை. எச்சில் சோற்றைச் சாப்பிடும் நிலை. அடக்கொடுமையே.

காசியை விட்டு வந்த பிறகுதான் காங்கிரசில் சேருகிறார். ஆனாலும் அவரது குறிக்கோள் சமூக சீர்திருத்தம் என்பதாகவே இருந்திருக்கிறது. அது நடக்காது என்று தெரிந்து கொண்ட நிலையில்தான் காங்கிரசை விட்டு விலகியிருக்கிறார்.

வைக்கம். மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய போராட்டம். ஈழவர் என்றால் இத்தனை தூரமும்...ஒவ்வொரு சாதிக்காரரும் ஒவ்வொரு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நம்பூதிரிகள் சொல்லியிருப்பது மிகக்கொடுமை. அப்பொழுது ஒரு சிறுவன்...அந்த நாய் எவ்வளவு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று கேட்பது கிண்டல். ஆனால் வேதனை தரக்கூடிய கேள்வி. நல்லவேளையாக இன்றைக்கு அந்த நிலை மாறியிருக்கிறது. பெரியாருக்கு நன்றி.

ஊருக்கு உபதேசம் வீட்டுக்குள் பலவேசம் என்று வாழவில்லை அவர். போராட்டங்களுக்கு வீட்டுப் பெண்களையே முன்னிறுத்தியிருக்கிறார். கள்ளுக்கடை மறியல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவரது மனைவியும் தங்கையும்தான் முன்னின்று போராடியிருக்கிறார்கள்.

இந்தப் படத்திலும் பெரியாரின் வாழ்க்கையிலும் நான் விரும்பி ரசித்த கட்டம் பெரியார்-மணியம்மை திருமணம். அது உடல் தேவையோ...மனத்தேவையோ....இரண்டு உள்ளங்கள் ஒப்பிச் செய்த பிணைவு. அதில் குறுக்கிட எந்த அரசியல்வாதிக்கும்.....அட...எந்த மனிதனுக்கும் உரிமையில்லை. பொருட்டாக மதிக்கவும் தேவையில்லை. "ஐம்பதிலும் ஆசை வரும்" என்று டி.எம்.எஸ் பாடலை எல்லாரும் ரசித்துதானே கேட்டோம். ஐம்பது வயதானவர்கள் எல்லாரும் விரதம் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்ன? என்னைப் பொருத்த வரையில் பெரியார்-மணியம்மை திருமணம் என்பது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. பெரியார்...இது தொடர்பாக உங்களையும் மணியம்மையையும் நான் புரிந்து கொள்கிறேன்.

அதே போல இன்னொரு கட்டம். ஒரு மாநாடு நடக்கிறது. அதில் சமைக்க ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களை அழைத்துச் சமைக்க வைக்கிறார். அதுவரையில் பிராமணர்கள் மட்டுமே சமைத்துக் கொண்டிருந்த நிலை மாறுகிறது. நான் என்னுடைய நினைவு செல்லும் வழியில் சென்று யோசித்துப் பார்க்கிறேன்.

என்னுடைய தாத்தா-பாட்டி திருமணத்தில் கண்டிப்பாக எங்கள் சாதியிலிருந்துதான் சமையல்காரர்கள் வந்திருப்பார்கள். வெளியிலிருந்து கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் பிராமணர்களும் வந்து சமைத்திருப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோரின் திருமணத்தில் இந்த நிலையில் ஒரு மாற்றம். சாதி பார்த்து சமையல்காரர்கள் அழைக்கப்படவில்லை. என்னுடைய சகோதரிகளின் திருமணத்திலும் அப்படியே. சமைக்கத் தெரியுமா...நல்ல பண்டங்கள் செய்வார்களா என்றுதான் பார்த்தோம். சாதி..கீதியெல்லாம் பார்க்கவில்லை. உடனே எல்லாரும் கேட்பார்கள். சமையலுக்குச் சாதி பார்க்கவில்லை..மாப்பிள்ளைக்கு எப்படி என்று...உண்மைதான். நல்ல கேள்வி. கண்டிப்பாகப் பார்க்கப் பட்டது. அதே நேரத்தில் சென்ற தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் மாநிலம் தாண்டிய காதற் திருமணங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்திருக்கிறது. இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இட்ட தீபாவளிப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் இது அதற்கு முந்தைய தலைமுறைகளில் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆக..ஒரு முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் இன்னும் போக வேண்டும். அந்த வகையில் மாற்றம் வரவேற்கத்தக்கதே.

பொதுவில் சாதீய வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் பெரியாரின் கருத்துகளை நான் ஆதரிக்கிறேன்.

"உடலுறவு சந்தோசத்துக்க்காக இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலைங்க. அதுதான் நோக்கம்னா அதுக்குக் கல்யாணமே அவசியமில்லைங்க. அது நம்ம இயக்கத்துல இருக்குற மைனர்களுக்கு ஏன் புரியலைன்னு எனக்குத் தெரியலைங்க. மணியம்மை ஒன்னும் சின்னக் கொழந்தை இல்லங்க. அவங்களுக்கு முப்பது வயசாகுது. அவங்க சம்மதத்தோடத்தான் இந்தக் கல்யாணம் நடந்துருக்குது. நம்ம இயக்கத்துல எனக்கு நம்பிக்கையானவங்க ஒருத்தருமில்லைன்னு சொன்னா அது ஒங்களுக்கெல்லாம் உறுத்தலா இருக்குதுங்க." - மணியம்மையோடு திருமணம் முடித்து விட்டு பெரியார் சொன்னது. ஆகையால் இனிமேல் பெரியாரை அவர் எழுத்துகளைப் படித்து மட்டுமே புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவர் சொன்ன இந்தக் கருத்தைக் கூட அவர் பெயரைச் சொல்கின்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே நினைக்கின்றேன். பெரியார் மட்டுமல்ல பல பெரியவர்களுக்கு இந்த நிலைதான்.

எல்லாரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால்...பெரியாரின் எழுத்தைப் படியுங்கள். வெறும் கடவுள் எதிர்ப்புக்குள் மூழ்கி விடாதீர்கள். அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதைத்தான் அவரும் விரும்புகிறார். கும்பிடாவிட்டால் நரகம்....சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் கொடும் தண்டனை என்பதை எதிர்க்க்கின்றவர் அவர்.

அன்புடன்,
கோ.இராகவன்

35 comments:

said...

இது வரைக்கும் நான் படிச்ச‌ பெரியார் விமர்சனங்களில் உங்களுதுதாங்க ரொம்ப சரியா ஒத்துக்கும்படியா இருக்கு. இன்னும் நான் படம் பாக்கல. இங்க வந்ததும் பாக்கணும்

said...

periyaaraith therinthu koLLla peryaaree poothu maanavar.

NB
http://thatstamil.oneindia.in/news/2007/05/21/guruvayoor.html

said...

//எல்லாரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால்...பெரியாரின் எழுத்தைப் படியுங்கள். வெறும் கடவுள் எதிர்ப்புக்குள் மூழ்கி விடாதீர்கள். அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதைத்தான் அவரும் விரும்புகிறார். கும்பிடாவிட்டால் நரகம்....சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் கொடும் தண்டனை என்பதை எதிர்க்க்கின்றவர் அவர்.//

அருமை...

படம் எனக்கும் பிடிச்சிருந்துச்சு... ஆனா படம் பார்த்து முடிச்சவுடனே நினைச்சது இவரை பத்தி நிறைய படிக்கனும்னு...

said...

ஜிரா, மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஆத்திகமோ, நாத்திகமோ ஒரு வட்டத்துக்குள் நின்று பார்த்தால் உண்மைகளை அறிந்து கொள்ளவே முடியாது. விருப்பு வெறுப்பின்றி எதையும் பார்க்கும் போது எதைப்பற்றியும் ஒரு தெளிவு கிடைக்கும். பெரியார் பற்றாளர்கள் பெரியார் என்ற மாயையில் சிக்கினாலும், ஆத்திகர்கள் கடவுள் என்ற மாயையில் சிக்கினாலும் அதுமட்டுமே உண்மை என்பது ஆகிவிடாது என்று நானும் நினைப்பேன்.

நாத்திகர்கள் இந்துமதத்தை தூய்மை செய்ய உதவினார்கள் என்று சொன்னால் கூட சிலருக்கு பொறுக்கவில்லை.ஏன் நாத்திகர்கள் மட்டுமா செய்தார்கள் ? ஆத்திகர்கள் செய்யவில்லையா ? என்று கேட்கிறார்கள். குப்பையை எவர் தூய்மை படுத்தினால் என்ன அங்கு சுத்தம் தானே முக்கியம். ஆனால் எல்லோருமே தூய்மை படுத்த முன்வரவேண்டும்.

said...

ராகவன்,
உங்கள் விமரிசனமும் ,நீங்கள் பெரியார் பற்றி தெரிந்து கொண்டதும் பார்க்கும் போது இந்த படம் எடுக்கப்படதன் நோக்கம் வெகுவாக நிறைவேறியிருக்கிறது என்று சொல்ல முடிகிறது .நீங்கள் சொன்னது போல பெரியார் பற்றி அவருடைய எழுத்துக்களை ,பேச்சுக்களை நேரடியாக அணுகி புரிந்து கொள்ளுவதே சரி.

விமரிசனத்துக்கு நன்றி!

said...

நான் பெரிய்யார் படம் பார்த்துவிட்டேன். முடிந்தால் விமர்சனம் எழுதுகிறேன்.

பெரியார் படம் எடுத்ததன் நோக்கம் உங்களளவில் நிறைவேறியிருக்கிறது என்பது உங்கள் விமர்சனத்திலிருந்து புரிகிறது.

said...

//வெறும் கடவுள் எதிர்ப்புக்குள் மூழ்கி விடாதீர்கள். அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதைத்தான் அவரும் விரும்புகிறார்//
நல்ல கருத்துள்ள விமர்சனம் ஜீரா. பெரியாரை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு பெரியார் என்றாலே எதையும் ‍எதிர்பவர் என்று மட்டும்தான் நினைவு வரும். இந்த படம் பார்த்தால் பெரியாரில் உண்மைநிலை கொஞ்சம் புரியலாம் என எண்ணுகிறேன்.

said...

"என்னுடைய தாத்தா-பாட்டி திருமணத்தில் கண்டிப்பாக எங்கள் சாதியிலிருந்துதான் சமையல்காரர்கள் வந்திருப்பார்கள். வெளியிலிருந்து கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் பிராமணர்களும் வந்து சமைத்திருப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோரின் திருமணத்தில் இந்த நிலையில் ஒரு மாற்றம். சாதி பார்த்து சமையல்காரர்கள் அழைக்கப்படவில்லை. என்னுடைய சகோதரிகளின் திருமணத்திலும் அப்படியே. சமைக்கத் தெரியுமா...நல்ல பண்டங்கள் செய்வார்களா என்றுதான் பார்த்தோம்."

பொதுவாக நகர்ப்புற நாகரீகம் இத்தகைய போக்குகளுக்கு வழி வகுத்துள்ளது எனலாம்..ஆனால் கிராமங்களில் ????
பெரியரைப் பற்றி ஏன் இன்னும் இது போல நிறைய தலைவர்கள் பற்றிய புரிதல் இன்னும் குருடன் பார்த்த யானை போலத்தான் இருக்கிறது..புத்தகங்கள் படிப்பது என்பது குறைந்து விட்டது என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாமோ ??

said...

HATS OFF, GI.RA

said...

// Chinna Ammini said...
இது வரைக்கும் நான் படிச்ச‌ பெரியார் விமர்சனங்களில் உங்களுதுதாங்க ரொம்ப சரியா ஒத்துக்கும்படியா இருக்கு. இன்னும் நான் படம் பாக்கல. இங்க வந்ததும் பாக்கணும் //

வாங்க சின்ன அம்மிணி. என்னுடைய விமர்சனம் சரியா தப்பான்னு எனக்குத் தெரியலை. ஏன்னா படத்துல சொல்லீருக்குற 95% சதவீதங்கள் எனக்குப் புதிது. ஆக இந்தப் படத்த வெச்சு நான் என்ன புரிஞ்சுக்கிட்டேன் அப்படீங்குறத மட்டும் விமர்சனம் அப்படீன்னு போட்டிருக்கேன். ஆனா கண்டிப்பா எல்லாரும் ஒருவாட்டி படம் பாக்கனும். கண்டிப்பா பாக்கனும்.


// Thangamani said...
periyaaraith therinthu koLLla peryaaree poothu maanavar.

NB
http://thatstamil.oneindia.in/news/2007/05/21/guruvayoor.html //

நன்றி தங்கமணி. கண்டிப்பாக இந்தச் சுட்டியில் சென்று பார்க்கிறேன். பெரியாருடைய புத்தகங்கள் ஆன்லைனில் கிடைத்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் இந்தியா திரும்பும் வரை காத்திருக்க வேண்டியதுதான். பெரியாருடைய புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்பட்டவை என்று நினைக்கிறேன். அப்படியிருக்கையில் அவை ஆன்லைனில் கிடைப்பதும் சரியே.

said...

// வெட்டிப்பயல் said...

அருமை...

படம் எனக்கும் பிடிச்சிருந்துச்சு... ஆனா படம் பார்த்து முடிச்சவுடனே நினைச்சது இவரை பத்தி நிறைய படிக்கனும்னு... //

எனக்கும் படம் பிடிச்சிருந்தது வெட்டி. இந்தப் படத்தில் பெரியார் சொன்னதாகச் சொல்லும் கருத்துகள் மிகவும் ஏற்புடையவைன்னுதான் எனக்குத் தோணுது. இன்னும் படிக்கனும்.

// கோவி.கண்ணன் said...
ஜிரா, மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஆத்திகமோ, நாத்திகமோ ஒரு வட்டத்துக்குள் நின்று பார்த்தால் உண்மைகளை அறிந்து கொள்ளவே முடியாது. விருப்பு வெறுப்பின்றி எதையும் பார்க்கும் போது எதைப்பற்றியும் ஒரு தெளிவு கிடைக்கும். பெரியார் பற்றாளர்கள் பெரியார் என்ற மாயையில் சிக்கினாலும், ஆத்திகர்கள் கடவுள் என்ற மாயையில் சிக்கினாலும் அதுமட்டுமே உண்மை என்பது ஆகிவிடாது என்று நானும் நினைப்பேன். //

கோவி, இந்த உலகத்தில் கற்றது கைமண்ணளவு. அப்படியிருக்க யாரும் எல்லாம் தெரிந்தவராகி விட முடியாது. பெரியாரே தன்னைப் பற்றி அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார். திகவினரின் வலைத்தளத்தில் அந்த பொருள் படும் வாசகங்களை நேற்று படித்தேன். ஒருவர் ஒன்றைச் சொல்கிறார் என்றால்....அது ஏன்...எப்படி என்று சிந்திக்க வேண்டும். இதுதான் சாராம்சம்.

// நாத்திகர்கள் இந்துமதத்தை தூய்மை செய்ய உதவினார்கள் என்று சொன்னால் கூட சிலருக்கு பொறுக்கவில்லை.ஏன் நாத்திகர்கள் மட்டுமா செய்தார்கள் ? ஆத்திகர்கள் செய்யவில்லையா ? என்று கேட்கிறார்கள். குப்பையை எவர் தூய்மை படுத்தினால் என்ன அங்கு சுத்தம் தானே முக்கியம். ஆனால் எல்லோருமே தூய்மை படுத்த முன்வரவேண்டும். //

தவறு என்று தெரிந்தால் எல்லாரும் சுட்டிக் காட்டலாம். தவறு செய்கின்றவர் அதைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. அடுத்த மதத்தைப் பற்றிக் கருத்துக் கூறும் பொழுது..நம்மைப் பற்றிச் சொன்னால்..அதை கேட்டுக்கொள்ள வேண்டும். சொல்லப்படுவது சரியாக இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்.

said...

// ஜோ / Joe said...
ராகவன்,
உங்கள் விமரிசனமும் ,நீங்கள் பெரியார் பற்றி தெரிந்து கொண்டதும் பார்க்கும் போது இந்த படம் எடுக்கப்படதன் நோக்கம் வெகுவாக நிறைவேறியிருக்கிறது என்று சொல்ல முடிகிறது .நீங்கள் சொன்னது போல பெரியார் பற்றி அவருடைய எழுத்துக்களை ,பேச்சுக்களை நேரடியாக அணுகி புரிந்து கொள்ளுவதே சரி.

விமரிசனத்துக்கு நன்றி! //

நன்றி ஜோ. முன்பே சொன்னது போல பெரியார் எனக்குப் புதிய அறிமுகந்தான். இனிமேல் நிறைய படிக்க வேண்டும். இதனால் முருகன் மேல் வைத்திருக்கும் அன்பு குறைந்திடவில்லை. அது அப்படியேதான் இருக்கிறது. :)


// ஓகை said...
நான் பெரிய்யார் படம் பார்த்துவிட்டேன். முடிந்தால் விமர்சனம் எழுதுகிறேன்.

பெரியார் படம் எடுத்ததன் நோக்கம் உங்களளவில் நிறைவேறியிருக்கிறது என்பது உங்கள் விமர்சனத்திலிருந்து புரிகிறது. //

எழுதுங்க ஓகை. கண்டிப்பா எழுதுங்க. பெரியாரின் மரணமே நான் பிறக்குறதுக்கெல்லாம் முன்னாடி நடந்தது. அப்படியிருக்கைல அவரவப் பத்திச் சரிவரத் தெரியாமத்தான் படத்தப் பாத்தேன். அதை வெச்சு விமர்சனம். ஒங்க விமர்சனத்தைப் படிக்கவும் ஆவலாக இருக்கிறேன்.

said...

// அனுசுயா said...
நல்ல கருத்துள்ள விமர்சனம் ஜீரா. பெரியாரை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு பெரியார் என்றாலே எதையும் ‍எதிர்பவர் என்று மட்டும்தான் நினைவு வரும். இந்த படம் பார்த்தால் பெரியாரில் உண்மைநிலை கொஞ்சம் புரியலாம் என எண்ணுகிறேன். //

வாங்க அனுசுயா...அவர் என்ன சொன்னாருங்குறது ஒன்னு....ஏன் சொன்னாருங்குறது இன்னொன்னு...இந்த இன்னொன்னைப் பலர் புரிஞ்சிக்கலைன்னு நெனைக்கிறேன். அவரைப் பலர் பின்பற்றுவத விட...அவரைப் போலச் பலர் சிந்திக்கனும்னு விரும்பினார்னு நெனைக்கிறேன்.

// siva gnanamji said...
HATS OFF, GI.RA //

வாங்க ஜி. ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறோம். நல்லா இருக்கீங்களா? பாராட்டிற்கு நன்றி ஜி. படத்தைப் பார்த்து அத வெச்சு எழுதுனதுதானே. :)

said...

// ச.சங்கர் said...
பொதுவாக நகர்ப்புற நாகரீகம் இத்தகைய போக்குகளுக்கு வழி வகுத்துள்ளது எனலாம்..ஆனால் கிராமங்களில் ???? //

உண்மைதான். அந்த மறுமலர்ச்சி இன்னும் வரவேண்டியிருக்கிறது. வரும் என்று நம்புவோம்.

// பெரியரைப் பற்றி ஏன் இன்னும் இது போல நிறைய தலைவர்கள் பற்றிய புரிதல் இன்னும் குருடன் பார்த்த யானை போலத்தான் இருக்கிறது..புத்தகங்கள் படிப்பது என்பது குறைந்து விட்டது என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாமோ ?? //

உண்மை. எனக்கே பெரியாரை இந்தப் படத்தை வைத்துத்தானே தெரியும். இதை வைத்து நான் புரிந்து கொண்டதில் தவறுகள் கூட இருக்கலாம். படிக்க வேண்டும். நீங்கள் சொன்னது போல...எல்லாரும் படிக்க வேண்டும்.

said...

அனானி நண்பரே, உங்கள் பின்னூட்டத்தைப் பதிக்காமைக்கு மன்னிக்கவும்.

இந்த விமர்சனத்தில் எதுவோ உங்களைக் கோவப்படுத்தியிருக்கிறது. ஒரு படம் மட்டும் பார்த்து விட்டு கருத்துச் சொல்லியிருக்கிறவன் நான். அதில் எதுவும் தவறானதைச் சொல்லியிருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும். உங்கள் மனம் புண்படும்படி எதுவும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

said...

//நன்றி ஜோ. முன்பே சொன்னது போல பெரியார் எனக்குப் புதிய அறிமுகந்தான். இனிமேல் நிறைய படிக்க வேண்டும். இதனால் முருகன் மேல் வைத்திருக்கும் அன்பு குறைந்திடவில்லை. அது அப்படியேதான் இருக்கிறது. :)//

:)

என்ன ஜி.ரா! நான் மட்டும் என்ன நாத்திகனாகவா ஆகி விட்டேன்! :)

said...

//பெரியாருடைய புத்தகங்கள் ஆன்லைனில் கிடைத்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் இந்தியா திரும்பும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.//

You can get the books through anyindian.com. "திராவிடன் புத்தக நிலையம்" என்ற பதிப்பாளரின் கீழ் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன.

//பெரியாருடைய புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்பட்டவை என்று நினைக்கிறேன்.//

அவரின் எழுத்துக்கள் அவர் அமைத்த "பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்" என்ற அமைப்பிற்கு உரியது. அவர்கள் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியல் http://www.periyar.org/html/mb_otherbooks_tam.asp

said...

ஜி.ரா,
இனிமேல் தான் படம் பார்க்கவேண்டும்.

உங்கள் விமரிசனத்தைப் படித்தால்,
பார்க்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
எந்த ஊரில் இருக்கிறிர்கள், இந்தியா திரும்புவதற்கு..

said...

இராகவன். நல்ல விமர்சனம். நல்ல விவரிப்பு. பெரியார் திரைப்படம் இங்கே இன்னும் வெளியிடப்படவில்லை. ஜூனில் சென்னையிலோ மதுரையிலோ கட்டாயம் பார்ப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

பெரியார் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று சிலர் சொல்லிப் படித்திருக்கிறேன். ஆனால் அவர் நாயக்கர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கர் என்பது சரியாகத் தான் தோன்றுகிறது. தெலுங்கு கலந்த தமிழை அவரது பெற்றோர்கள் இந்தத் திரைப்படத்தில் பேசுகிறார்கள் என்று நீங்கள் விவரித்ததைப் படித்தப் பின் தான் இந்த முரண்பாட்டைப் பற்றிய கேள்வி மனத்தில் எழுந்தது.

பெரியாரின் கருத்துகளில் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு இவற்றைத் தாண்டியும் உள்ளவற்றை சிறு வயதிலிருந்தே மதுரை மத்திய நூலகத்திலிருந்தும் கல்லூரியில் படிக்கும் போது வத்திராயிருப்பு நூலகத்திலிருந்தும் பொத்தகங்கள் எடுத்துப் படித்திருக்கிறேன். ஆனால் பெரியாரின் கருத்துகளைப் பரப்புகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் அன்பர்கள் வலையுலகிலும் மற்ற எழுத்து ஊடகஙகளிலும் கடவுள் மறுப்பையும் பார்ப்பன எதிர்ப்பையுமே பெரிதாகப் பேசுகிறார்கள் என்பது அவற்றைத் தொடர்ந்து படித்த எனது எண்ணம். பெரியாரிஸ்டுகள் அவற்றைப் பேசும் அதே நேரத்தில் பெரியாரின் மற்றக் கருத்துகளையும் எடுத்துப் பேசி வந்தால் தான் எல்லோரும் விரும்பும் மறுமலர்ச்சிகள் உண்டாகும்.

said...

//இந்த நாட்டில் ஆத்திகனுக்கு அவன் மொழியில் வழிபடும் உரிமையை பெற்றுத்தர நாத்திகர்களே போராட வேண்டி இருக்கிறது என்பது ஆத்திகர்களின் தலையெழுத்து. //

கோவி.கண்ணன் அண்ணா எழுதிய இந்த வரிகளுக்குப் பொருள் 'நாத்திகர்கள் உதவினார்கள்' என்பதா 'நாத்திகர்களே உதவினார்கள்' என்பதா? நாத்திகர்களே போராட வேண்டி இருக்கிறது என்று சொல்லும் போது ஆத்திகர்கள் செய்யவில்லையா என்ற கேள்விகள் வரத்தான் செய்யும். கோவி.கண்ணன் அண்ணாவின் பாணியில் சொல்வதென்றால் இப்படி ஒவ்வொரு வரியாக எடுத்துக் கொண்டு சொல்லிவர முடியும்; ஆனால் அப்படி லாவணி பாட விருப்பமுமில்லை; நேரமுமில்லை; தேவையுமில்லை.

said...

//நாத்திகர்கள் இந்துமதத்தை தூய்மை செய்ய உதவினார்கள் என்று சொன்னால் கூட சிலருக்கு பொறுக்கவில்லை.ஏன் நாத்திகர்கள் மட்டுமா செய்தார்கள் ? ஆத்திகர்கள் செய்யவில்லையா ? என்று கேட்கிறார்கள்.//

கோவி,
நீங்க சொன்னது இந்து மதத்தை தூய்மை செய்தது நாத்திகர்கள் மட்டுமேனு சொல்ற மாதிரி இருந்தது.

மேலும் நான் ராமானுஜர் பத்தி சொன்னவுடன் அவர் இதை செய்தாரா, அதை செய்தாரா என்று விவாதம் தான் புரிந்தீர்கள். உங்களுடன் பேசுவது வீண் என்று தெரிந்ததால் தான் ஒதுங்கி வந்துவிட்டேன்.

இந்த மாதிரி ஒவ்வொரு பதிவா போய் புலம்பறத நிறுத்துங்க.

said...

// ஜோ / Joe said...
//நன்றி ஜோ. முன்பே சொன்னது போல பெரியார் எனக்குப் புதிய அறிமுகந்தான். இனிமேல் நிறைய படிக்க வேண்டும். இதனால் முருகன் மேல் வைத்திருக்கும் அன்பு குறைந்திடவில்லை. அது அப்படியேதான் இருக்கிறது. :)//

:)

என்ன ஜி.ரா! நான் மட்டும் என்ன நாத்திகனாகவா ஆகி விட்டேன்! :) //

அதே அதே....கடவுள் நம்பிக்கை இருப்பதால் சமூகநீதியை ஒதுக்க முடியாது. :)

// அருண்மொழி said...

You can get the books through anyindian.com. "திராவிடன் புத்தக நிலையம்" என்ற பதிப்பாளரின் கீழ் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன. //

அப்படியா. நன்றி அருண்மொழி. அந்தச் சுட்டியில் சென்று பார்க்கிறேன்.

////பெரியாருடைய புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்பட்டவை என்று நினைக்கிறேன்.//

அவரின் எழுத்துக்கள் அவர் அமைத்த "பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்" என்ற அமைப்பிற்கு உரியது. அவர்கள் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியல் http://www.periyar.org/html/mb_otherbooks_tam.asp //

அப்படியானால் நாட்டுடமையாக்கப்படவில்லையா? ஆக்கியிருப்பார்கள் என்று நினைத்தேன்.

said...

// வல்லிசிம்ஹன் said...
ஜி.ரா,
இனிமேல் தான் படம் பார்க்கவேண்டும்.

உங்கள் விமரிசனத்தைப் படித்தால்,
பார்க்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
எந்த ஊரில் இருக்கிறிர்கள், இந்தியா திரும்புவதற்கு.. //

வாங்கம்மா. இப்ப நெதர்லாந்துல இருக்கேன். வேலை விசயமாத்தான். அதான். நீங்க எப்படி இருக்கீங்க? கண்டிப்பா படத்த ஒருவாட்டி பாருங்க.

said...

where is my comment???

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். நல்ல விமர்சனம். நல்ல விவரிப்பு. பெரியார் திரைப்படம் இங்கே இன்னும் வெளியிடப்படவில்லை. ஜூனில் சென்னையிலோ மதுரையிலோ கட்டாயம் பார்ப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். //

குமரன், இங்கும் பெரியார் திரைப்படம் வரவில்லை. வேறுவழி? நெட்டில் பார்த்ததுதான். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அப்படி.

// பெரியார் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று சிலர் சொல்லிப் படித்திருக்கிறேன். ஆனால் அவர் நாயக்கர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கர் என்பது சரியாகத் தான் தோன்றுகிறது. தெலுங்கு கலந்த தமிழை அவரது பெற்றோர்கள் இந்தத் திரைப்படத்தில் பேசுகிறார்கள் என்று நீங்கள் விவரித்ததைப் படித்தப் பின் தான் இந்த முரண்பாட்டைப் பற்றிய கேள்வி மனத்தில் எழுந்தது. //

நாயக்கர் சமூகம் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டது என்றுதான் நானும் நினைக்கிறேன். கன்னடமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்.

// பெரியாரின் கருத்துகளில் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு இவற்றைத் தாண்டியும் உள்ளவற்றை சிறு வயதிலிருந்தே மதுரை மத்திய நூலகத்திலிருந்தும் கல்லூரியில் படிக்கும் போது வத்திராயிருப்பு நூலகத்திலிருந்தும் பொத்தகங்கள் எடுத்துப் படித்திருக்கிறேன். ஆனால் பெரியாரின் கருத்துகளைப் பரப்புகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் அன்பர்கள் வலையுலகிலும் மற்ற எழுத்து ஊடகஙகளிலும் கடவுள் மறுப்பையும் பார்ப்பன எதிர்ப்பையுமே பெரிதாகப் பேசுகிறார்கள் என்பது அவற்றைத் தொடர்ந்து படித்த எனது எண்ணம். பெரியாரிஸ்டுகள் அவற்றைப் பேசும் அதே நேரத்தில் பெரியாரின் மற்றக் கருத்துகளையும் எடுத்துப் பேசி வந்தால் தான் எல்லோரும் விரும்பும் மறுமலர்ச்சிகள் உண்டாகும். //

ஒருவிதத்தில் சொல்லப் போனால் இத்தனை நாள் நானும் பெரியாரை இந்த இரண்டு விஷயங்களுக்காகவும்தான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் படம் சொல்வது அவரது பல பரிமாணங்களை. ஆகையால்தான் அவரது புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகியிருக்கிறது.

said...
This comment has been removed by the author.
said...

பெரியாரைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதும் அனைத்துத் தமிழர்களின் மூளையிலும் பதிவு செய்யவேண்டிய புத்தகங்களாகவும் நான் கருதுவது: ராஜதுரை & கீதா எழுதிய 'பெரியார் - சுயமரியாதை,சமதர்மம்' மற்றும் 'பெரியார் - ஆகஸ்டு-15'.

-இளஞ்செழியன்

said...

பெரியாரைப் பார்த்திருக்கேன் அந்த திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பாத்தால் எழுதுவேன்.

said...

ஜிரா,

சத்யராஜைப் பற்றி எனக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.. பாரதிராஜாவிடம் தவிர அவர் வேறு யாரிடமுமே சோபித்ததில்லை. அவர் பெரியாராக நடிக்கிறார் என்பதற்காகவே அந்த படத்தை தவிர்த்தவன்..

மேலும் பெரியாரைப் பற்றி நான் தஞ்சையில் இருந்த காலத்தில் சாதகமாகவும் பாதகமாகவும் நிறையவே படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்..

அவரைப் பற்றி பெரிய எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை...

இருப்பினும் உங்களுடைய விமர்சனம் எப்போதும்போல மிகவும் அருமை..

அதிலும் உங்களுடைய கடைசி நான்கு வரிகள் மிகவும் அருமை...

said...

// ILAN said...
பெரியாரைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதும் அனைத்துத் தமிழர்களின் மூளையிலும் பதிவு செய்யவேண்டிய புத்தகங்களாகவும் நான் கருதுவது: ராஜதுரை & கீதா எழுதிய 'பெரியார் - சுயமரியாதை,சமதர்மம்' மற்றும் 'பெரியார் - ஆகஸ்டு-15'.

-இளஞ்செழியன் //

நன்றி இளஞ்செழியன். இது நல்ல தகவல். இது அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

// ENNAR said...
பெரியாரைப் பார்த்திருக்கேன் அந்த திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பாத்தால் எழுதுவேன். //

ஆகா...பெரியாரையே நேரில் பார்த்திருக்கின்றீர்களா....படத்தைப் பாருங்கள். நேரில் பார்த்ததிற்கும் படத்திற்கும் ஒப்பீடு செய்யுங்கள். காத்திருக்கிறோம்.

said...

// tbr.joseph said...
ஜிரா,

சத்யராஜைப் பற்றி எனக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.. பாரதிராஜாவிடம் தவிர அவர் வேறு யாரிடமுமே சோபித்ததில்லை. அவர் பெரியாராக நடிக்கிறார் என்பதற்காகவே அந்த படத்தை தவிர்த்தவன்.. //

ஜோசப் சார்...சத்யராஜ் பாரதிராஜா இயக்கத்தில் நன்றாக நடித்தார், பாசிலின் இயக்கத்தில் நன்றாக நடித்தார். மற்றதெல்லாம் மசாலாதான். ஆகையால் அவர் படங்களைப் பெரும்பாலும் பார்ப்பதில்லை. இந்தப் படந்தான் இப்போதைய விதிவிலக்கு. நீங்க சத்யராஜுக்காக பெரியாரைப் பாக்கலை. நான் பெரியாருக்காக சத்யராஜை மன்னிச்சிட்டேன். :)

// மேலும் பெரியாரைப் பற்றி நான் தஞ்சையில் இருந்த காலத்தில் சாதகமாகவும் பாதகமாகவும் நிறையவே படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்..

அவரைப் பற்றி பெரிய எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை... //

ஜோசப் சார், பெரியார் ஒரு மனிதர். அவர் சொன்னதெல்லாம் வேதம் என்று சொல்ல வரவில்லை நான். அப்படிச் சொல்வதைப் பெரியாரும் ஒத்துக்கொள்ள மாட்டார். அதையும் அவரே சொல்லியிருக்கிறார். நானும் பெரியாரைப் பற்றி இரண்டுவிதமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பெரியார் என்று தொடர்புடையதாக இதுவரை பெரும்பாலும் கடவுள் மறுப்பையும் பார்ப்பன எதிர்ப்பையும் மட்டுமே கேட்டு வந்திருக்கிறேன். எதனால் இந்தத் தவறு நேர்ந்ததென்று தெரியவில்லை. ஆனால் பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார். அவைகளைப் படிக்க வேண்டும். அதில் ஏற்புடையதை ஏற்க வேண்டும். அவ்வளவுதான்.

// இருப்பினும் உங்களுடைய விமர்சனம் எப்போதும்போல மிகவும் அருமை..

அதிலும் உங்களுடைய கடைசி நான்கு வரிகள் மிகவும் அருமை... //

:) நன்றி சார். நீங்க வந்தா பாராட்டாம போக மாட்டீங்க. அன்பிற்கு நன்றி.

said...

//"உடலுறவு சந்தோசத்துக்க்காக இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலைங்க. அதுதான் நோக்கம்னா அதுக்குக் கல்யாணமே அவசியமில்லைங்க. ஆகையால் இனிமேல் பெரியாரை அவர் எழுத்துகளைப் படித்து மட்டுமே புரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் படத்திலும் பெரியாரின் வாழ்க்கையிலும் நான் விரும்பி ரசித்த கட்டம் பெரியார்-மணியம்மை திருமணம். அது உடல் தேவையோ...மனத்தேவையோ....இரண்டு உள்ளங்கள் ஒப்பிச் செய்த பிணைவு. //

சன்யாசி என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு சரசம், விரசம் என்று 'போகிற'வர்களை உத்தமர்களாகவும் ஒழுக்க சீலராகவும் பார்த்து பரவசப்படுபவர்கள் (எல்லோரும் அல்ல) பெரும்பாலும் பெரியார் மீது புழுதி வாரி தூற்ற பயன்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் மணியம்மை திருமணமும் ஒன்று. அதைக் குறிப்பிட்டு சொல்லி பாராட்டி இருப்பது இராகவனின் இந்த பதிவில் தனிச் சிறப்பு.

பெரியார் பெயரைச் சொன்னாலே வயிற்தை பிடித்துக் கொண்டு மருந்து கடைக்கு ஓடும் பலர் உங்களுக்காக 'பார்பன எதிரி, நாத்திகன்' பட்டம் கொடுப்பாங்க வாங்கி பூட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

எனக்கு கிடைச்சாச்சு !!!

:))))

said...

// கோவி.கண்ணன் said...
சன்யாசி என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு சரசம், விரசம் என்று 'போகிற'வர்களை உத்தமர்களாகவும் ஒழுக்க சீலராகவும் பார்த்து பரவசப்படுபவர்கள் (எல்லோரும் அல்ல) பெரும்பாலும் பெரியார் மீது புழுதி வாரி தூற்ற பயன்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் மணியம்மை திருமணமும் ஒன்று. அதைக் குறிப்பிட்டு சொல்லி பாராட்டி இருப்பது இராகவனின் இந்த பதிவில் தனிச் சிறப்பு.

பெரியார் பெயரைச் சொன்னாலே வயிற்தை பிடித்துக் கொண்டு மருந்து கடைக்கு ஓடும் பலர் உங்களுக்காக 'பார்பன எதிரி, நாத்திகன்' பட்டம் கொடுப்பாங்க வாங்கி பூட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

எனக்கு கிடைச்சாச்சு !!!

:)))) //

பட்டங்கள் எல்லாம் எதுக்குங்க. எலந்தவட இருந்தா ரெண்டு பாக்கெட்டு வேணும். :-( கிடைக்குமா?

said...

பேருந்தலைவர் காமராசர் பெரியாரை பற்றி கூறும்போது,பெரியார் மட்டு
இவ்வாறு இல்லா விட்டால்,அவனவன் மையில் கல்லுக்கும்,பர்லாங்கு கல்லுக்கும்
துணியைச் சுற்றி மையிலேஸ்வரர்,
பர்லாங்கேஸ்வரர் என்று நம்பள விழுந்து கும்பிடவச்சுருவாங்கே
சாமியில்ல,சாமியில்லன்னா அரைகுரைய இருக்கவங்கெ எதிர்த்து ஒழுங்க சாமி கும்பிட
அரம்பிப்பாங்கே,அதொரு சைக்காலேஜிங்கறேன், என்று என் உறவினரோடு பெருந்தலைவர்
கூறக்கேட்டது.நாஸ்திகர் எனறு அழைக்கப் பட்ட பொரியாரும்,
ஆஸ்திகர் என அழைக்கப்
பட்ட ராஜாஜீயும் நெருங்கிய நண்பர்கள் என்பதையும்,பெரியார வீட்டிற்க்கு ராஜாஜீ செல்லும் வேளைகளில் அங்கு உணவருந்தாமல் வரமாட்டார் என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை.

said...

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” - இயேசு