இந்தப் படத்தை எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்கதானே? 1994லயோ என்னவோ எடுத்த படம். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருட இருட்டறை வாசத்திற்குப் பிறகு வெள்ளித்திரையைத் தொட்டு அதே வேகத்தில் மீண்டும் உறக்கத்திற்குச் சென்ற படம். இத்தனை வருடமாக ஒரு படத்தை ஏன் விடாமல் தடுத்திருக்க வேண்டும்? இப்பொழுது ஏன் திடீரென்று விட்டிருக்க வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளும் உந்தத்தான் இந்தப் படத்தை நானும் பார்த்தேன்.
இரண்டு அசிஸ்டெண்ட் கமிஷனர்கள். ராம்கி மற்றும் ரகு. அவர்களைச் சுற்றித்தான் கதை. ராம்கிக்கு ரம்யா கிருஷ்ணன். ரகுவிற்கு ரோஜா. இவர்கள் வாழ்க்கையில் ராஜீவ்காந்தியின் கொலை எப்படி வருகிறது என்பதுதான் கதை. அதான் இரண்டு கதாநாயகர்களுமே அசிஸ்டெண்ட் கமிஷனர்கள் என்று சொல்லி விட்டோமே. பிறகென்ன? அவர்களே ஓடித் தேடிக் குற்றவாளிகளைப் பிடித்துவிட மாட்டார்களா? நடுநடுவில் நம்பியார் வந்து "சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உங்க உதவி வேணும்"னு வழக்கமா விஜயகாந்த் கிட்ட கேட்டத இதுல இவங்க ரெண்டு பேர் கிட்டயும் கேக்குறாரு.
சினிமாவுல வில்லன் மன்சூர் அலிகான். அவரோட பேரு சிவா. அவரு படக்குன்னு ஒரு கண்ண அடிக்கடி மாட்டுறாரு. முடியுமா என்ன? அட. அவரு ஒற்றைக்கண் சிவராசன்னு சொல்றாங்களாம். அவரோட தலைமைல ஒரு பெரிய கூட்டம் இந்தியாவுக்கு வருது. எங்க இருந்துன்னு சொல்ல மாட்டாங்களாம். ஆனா வர்ரவங்க பேசுறத வெச்சு நம்ம கண்டுபிடிச்சிரலாமாம். நல்ல நாள்ளயே மன்சூரலிகானுக்குத் தமிழ் தகராறு. இதுல! அந்தக் கூட்டத்துல ராஜேஷும் ஒருத்தரு. பெண்களும் இருக்காங்க. எல்லாருடைய முகச்சாடை உடலமைப்பு எல்லாம் ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் என்று கருதப்படுகிறவர்களை ஒத்தே இருக்கின்றன.
சரி. கதைக்கு வருவோம். இவங்கள்ள ஒருசிலர் வேன் எடுத்துட்டுப் போய் ஒரு அப்பார்ட்மெண்ட்டுல தங்கியிருந்த ஒரு சிலரைக் கொலை செஞ்சிர்ராங்க. அதுல ஒருத்தர் பத்மனாபா மாதிரி எனக்குத் தெரிஞ்சதுக்குக் கண்ணாடியைத் தொடைக்காதது கூடக் காரணமாய் இருந்திருக்கலாம். அப்படியே தப்பிச்சுப் போயிர்ராங்களாம். அதுக்கு உள்ளூர் அரசியல்வாதி ஒருத்தர் உதவுறாரு. இவரு எந்தக் கட்சின்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்குறாங்க. அதுவுமில்லாம ஒருத்தர் மட்டும்தான் உதவி பண்றாரு கடைசி வரைக்கும். தேவையில்லாம இங்க வைகோவைப் பத்திப் பேச வேண்டாமே.
நம்பியார் குளோசப்ல வந்து, "ஆட்சியைக் கலைக்கப்போறாங்க. அதுனால சட்டம் ஒழுங்கை நீங்கதான் சரியாப் பராமரிக்கனும்"னு பொறுப்பை கதாநாயகர்கள் கைல ஒப்படைக்கிறாரு. ஆட்சியையும் கலைச்சிர்ராங்க. அட. திமுக ஆட்சியைத்தான் 1990ல கலைச்சாங்கள்ள. அப்பக் கொஞ்சம் கலவரம் நடக்குது. கதாநாயகர்கள் நல்லா சண்டை போட்டுத் தடுக்குறாங்க. அப்பத்தான் தேர்தல் வருது. அதே தேர்தல்தான். 1991.
நம்பியார் திரும்பவும் குளோசப்ல வந்து, "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வர்ரதால பாதுகாப்பு ஏற்பாடு சிறப்பா இருக்கனும்"னு கேட்டுக்கிறாரு. ஸ்ரீபெரும்புதூர் பாதுகாப்பு ரகு கைக்கு வருது. ராஜீவ்காந்தி என்ற பெயரைப் பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ ஒரு பெயரைச் சொல்வார்கள் என்று நினைத்தேன். அதே நேரத்தில் எதிர்த்தரப்பின் மைய அடையாளத்தைப் பத்தி ஒன்றும் பேசாத நிலையில் இவரது பெயரைப் பயன்படுத்தியிருப்பது சற்று உறுத்தலாகத்தான் தெரிந்தது.
மன்சூரார் கூட்டணி ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அவர்களோடு படமெடுக்க அழைத்துச் செல்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு ராஜீவ்காந்தி வருகிறார். இந்தி நடிகர் அனுபம்கெர் வெள்ளை ஜுப்பா பைஜாமாவில் ராஜீவ்காந்தியாக வருகிறார். போட்டோக்காரர் சுற்றிச்சுற்றிப் படமெடுக்கிறார். அப்பொழுது மன்சூராருடன் வந்த பெண் கையில் மாலையோடு அனுமதி கேட்கிறார். கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது. வேறு எந்தப் பெரிய தலைவர்களும் அங்கு இல்லை. அதற்குள் அந்தப் பெண் மாலையைப் போட்டு காலைத் தொடக் குனிகிறாள். குனிந்தவள் குண்டை இயக்கிவிடுகிறாள். முடிந்தது. அதற்குப் பிறகு இவர்கள் தப்பிக்க முயற்சிப்பதும்...அசிஸ்டெண்ட் கமிஷனர்கள் பிடிக்க முயல்வதும் கதை.
இதில் பிரச்சனை என்னவென்றால் மன்சூரார் கூட்டத்தார் எல்லாரும் கொடியவர்கள் (வழக்கமான தமிழ்சினிமா வில்லன்களைப் போல) என்ற மனநிலைக்குப் படம் பார்க்கிறவர்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களது நடையும். அதற்கான பின்னணி இசையும். இளையராஜாவாமே! அதுவுமில்லாமல் மன்சூராரின் கூட்டணித்தற்கொலைக்குப் பிறகும் சிலர் தப்பித்து....அசிஸ்டெண்ட் கமிஷனர்களின் மனைவியரைத் துன்புறுத்துகிறார்கள். பிறகு அசிஸ்டெண்ட் கமிஷனர்களால் சுடுபட்டுச் செத்துப் போகிறார்கள். அடப்பாவிகளா! உண்மையையும் கற்பனையையும் கலக்கும் போது எத எங்க கலக்கனும்னு தெரியாது? சரக்கு மட்டும் நல்லா கலக்கத் தெரியும் போல இருக்கு. இதில் சிவராசன் தற்கொலை காட்சியை அளவுக்கு மீறி வளர்த்து......சிவபூஜை செய்து விட்டு அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வெளியில் அந்த வீட்டிற்குள் நுழைய அசிஸ்டண்ட் கமிஷனர் பயங்கரமாக சண்டை போடுகிறார். நன்றாகச் சண்டை போட்டு....எல்லாரும் இறந்ததும் வீட்டிற்குள் நுழைகிறார்.
அத்தோட முடிஞ்சதா? படம் முடியும் போது ரெண்டு கமிஷனர் குடும்பமும் குழந்தையோடு கடற்கரையில் இருக்கும் பொழுது தப்பித்தவர்களில் இன்னும் ஒருவன் துப்பாக்கியோடு எழுந்து நிற்கிறான். அவன் வானத்தைப் பார்த்துச் சுட்டதும் திரையில் "No More Violence" என்று ரத்தச்சிவப்பில் வருகிறது. படம் பார்த்த நம் வாயில் வராததுதான் மிச்சம்.
படத்தில் இன்னொரு காட்சி. ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு திமுக கொடிக்கம்பத்தை வெட்டப்போகின்றார்கள். சந்திரசேகர் தடுக்கிறார். அவரையும் வெட்டப் போகிறார்கள். அப்பொழுதும் அசிஸ்டெண்ட் கமிஷனர் வந்து காப்பாற்றுகிறார். அப்போது சந்திரசேகர் சிறிது உணர்ச்சிபூர்வமாக கட்சிக் கொடியைப் பற்றிப் பேசுகிறார். திமுக பிரச்சாரம் என்ற உணர்வு அந்நேரம் வராமல் இல்லை.
இன்னொரு காட்சி. எல்லார் மனதிலும் இன்றைக்கும் எழும்பிக் கொண்டிருக்கும் பதிலில்லாத கேள்வி. காங்கிரஸ்காரர் என்று மார்தட்டுகிறவர் அனைவருக்கும் இன்றும் கேட்கப்படும் கேள்வி. இப்படி ஒரு காட்சியில் வருகிறது. ரகுவை சஸ்பென்ஷன் செய்து விடுகிறார்கள். அவர் பொறுப்பில்தானே ராஜீவ்காந்தி பாதுகாப்பு இருந்தது. சஸ்பென்ஷனுக்கு நியாயம் கேட்க கமிஷனரைப் பார்க்க ராம்கியோடு போகிறார். அங்கு ஒரு (காங்கிரஸ்) தலைவர் வந்து கமிஷனரிடம் அவரது கட்சிக்காரர்களையும் சேர்த்துக் கைது செய்திருப்பதைப் பற்றி பேச வருகிறார். அவர் துன்பியல் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள் என்றும் பேசிவிடுகிறார். உடனே ரகு வெகுண்டெழுந்து சொல்கிறார். "அவரு கூடச் சேந்து செத்தது யார் சார்? பொதுமக்களும் போலீஸ்காரங்களுந்தான். ஒங்க கட்சிக்காரங்க யாராவது ஒருத்தர் செத்தாங்களா? குண்டு வெடிக்கிற வரைக்கும் கூடவேயிருந்த நீங்க...குண்டு வெடிக்கிறப்போ எங்க சார் போனீங்க? அப்போ குண்டு வெடிக்கப் போகுதுன்னு தெரியுமா?"
மொத்தத்தில் இந்திய அரசியல்சட்டத்திற்கு முடிக்கப்பட்ட வழக்காக இருக்கும் ராஜீவ்காந்தி கொலையை வைத்து சின்னப்பிள்ளைத்தனமாய் ஒரு படம். இந்தப் படம் பார்த்த பிறகு வழக்கின் தீர்ப்பு நகலைக்கூடப் படித்துப் பார்த்தேன். பல ஐயங்கள் எழாமல் இல்லை. கூகிளாண்டவர் உதவியை நாடினால் பலப்பலச் சந்தேகங்கள். அவைகளை வெளிப்படையாக விளக்காமல் வழக்கு முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இன்னமும் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாகவே வழக்கு சற்று விரைவில் முடிக்கப்பட்டு விட்டதோ என்றும் கூடத் தோன்றுகிறது. முதலில் எல்லாருக்கும் தூக்கு என்றார்கள். கைது செய்யப்படும் பொழுது ஆதிரையின் வயது 17. பிறகு தீர்ப்புகள் மாறின. நடுவில் திமுகவின் பெயரும் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரும் ஜெயின் கமிஷனில் வந்து மத்திய அரசைப் பிரசாதமாக உருட்டி விழுங்கியது.
ஆனால் ஒன்று ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு நல்ல மாற்றம் வந்திருப்பதாகவே நினைக்கிறேன். ஏனென்றால் முன்பெல்லாம் மத்திய ஆட்சி நினைத்தால் மாநிலத்தைக் கலைக்கும். உலைக்கும். குலைக்கும். இப்பொழுது மாநில ஆட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்தியில் ஆட்சி செய்வதால் அது குறைந்து போயிற்று. குறிப்பாக உத்திரப்பிரதேசதமே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்ற கேடுகெட்ட நிலையையும் ஒரு வழியும் பின்னாளில் மாறிப்போனது. நேருவின் வாரிசு அரசியல் இன்னும் நேரடியாக பதவிக்கு வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையோ ஸ்பெயினுக்கும் பதவிக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. என்னவோ நடக்குது. நடக்கட்டும்.
மொத்தத்தில் குற்றப் பத்திரிக்கை குற்றமுள்ள பத்திரிக்கை.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, May 07, 2007
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
கருத்தே கூற முடியாத லட்சணத்தில் படம் இருந்தது. ஒருவேளை இந்தப் படம் எடுத்த உடனேயே ரிலீஸ் ஆகியிருந்தாலும் எந்த வெற்றியும் பெற்றிருக்க முடியாது.
நடிகை ரோஜா செம்பருத்தி படத்திற்குப் பின் நடித்த இரண்டாவது திரைப்படம் இது. 15 ஆண்டுகளாகிவிட்டதாக பிரஷ் ஷோவில் கண்ணீர்விட்டார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் காமெடியாகப் போய்விட்டதால் இங்குள்ள பத்திரிகைகளே கண்டு கொள்ளவில்லை. நாங்களும் கிட்டத்தட்ட மறந்துவிட்டோம். இப்போது போய் ஞாபகப்படுத்துறீகளே ராசா.. விட்ருங்க.. இது சினிமா. அப்படித்தான் இருக்கும்..
நல்லதொரு விமர்சனம், படத்தை பாக்காமல் விட்டது நல்லதுக்குதான், நடப்பவை எல்லாம் நன்மைக்குதான்.
// நல்லதொரு விமர்சனம், படத்தை பாக்காமல் விட்டது நல்லதுக்குதான், நடப்பவை எல்லாம் நன்மைக்குதான்.//
உண்மை. நண்பன் சொன்ன பிறகு படம் பார்க்கும் திட்டத்தை கை விட்டுட்டேன். ஆனாலும் உமது தகிரியத்துக்கு பாராட்டுக்கள் ஜிரா!
:)
// உண்மைத் தமிழன் zei...
கருத்தே கூற முடியாத லட்சணத்தில் படம் இருந்தது. ஒருவேளை இந்தப் படம் எடுத்த உடனேயே ரிலீஸ் ஆகியிருந்தாலும் எந்த வெற்றியும் பெற்றிருக்க முடியாது. //
இப்பவாவது தோல்வீங்குறதுகூடத் தெரியாமப் போச்சு...அப்ப ரிலீஸ் பண்ணீருந்தா டங்கு டணாலாகியிருக்கும்.
//நடிகை ரோஜா செம்பருத்தி படத்திற்குப் பின் நடித்த இரண்டாவது திரைப்படம் இது. 15 ஆண்டுகளாகிவிட்டதாக பிரஷ் ஷோவில் கண்ணீர்விட்டார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.//
ஏன் ரோஜாவுக்கு வயசாச்சுன்னா!
// ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் காமெடியாகப் போய்விட்டதால் இங்குள்ள பத்திரிகைகளே கண்டு கொள்ளவில்லை. நாங்களும் கிட்டத்தட்ட மறந்துவிட்டோம். இப்போது போய் ஞாபகப்படுத்துறீகளே ராசா.. விட்ருங்க.. இது சினிமா. அப்படித்தான் இருக்கும்.. //
என்ன செய்யச் சொல்றீங்க. இந்தப் படங்களும் நமக்குன்னு வந்து மாட்டுதே.
// Anonymous zei...
நல்லதொரு விமர்சனம், படத்தை பாக்காமல் விட்டது நல்லதுக்குதான், நடப்பவை எல்லாம் நன்மைக்குதான். //
பாக்காம விட்டுட்டீங்கள்ள...அத்தோட தலைய முழுகீருங்க. ரொம்பவும் நல்லது. ஆயிரந்தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிய நாலு வாட்டிப் பாருங்க. அது பெட்டர்.
// ♠ யெஸ்.பாலபாரதி ♠ zei...
உண்மை. நண்பன் சொன்ன பிறகு படம் பார்க்கும் திட்டத்தை கை விட்டுட்டேன். ஆனாலும் உமது தகிரியத்துக்கு பாராட்டுக்கள் ஜிரா!
:) //
யெஸ்பா...ஒங்களுக்குச் சாய்ஸ் இருக்குய்யா....ஒங்களுக்குப் பிடிச்ச படத்தப் போய்ப் பாக்க முடியும். ஆனா எனக்கு? எது இருக்கோ? இல்ல..எது என்னையப் பிடிக்குதோ...அதத்தானே பார்க்க முடியும்! :-((((
Super joke boss
Rock
--------------------------------
Get 1 Free domain with 1GB Hosting only Rs1500/-
Vist : http://space2inet.com
--------------------------------
Super joke boss
Rock
--------------------------------
Get 1 Free domain with 1GB Hosting only Rs1500/-
Vist : http://space2inet.com
--------------------------------
ஜீரா,
அந்த காலத்துல வந்திருந்தா 50 நாளாவது ஓடியிருக்கும்! நானே ரோஜாவுக்காக ரெண்டு தடவையாவது பார்த்திருப்பேன் :) சரி விடுங்க..
// ஆனா எனக்கு? எது இருக்கோ? இல்ல..எது என்னையப் பிடிக்குதோ...அதத்தானே பார்க்க முடியும்! :-(((( //
நீங்க பைரசின்னா என்னான்னு தெரியாது அப்படிங்கற தமிழருக்கான தகுதியை உடைய ஆளா இருந்தா கீழே உள்ளது உதவும்.
www.ovguide.com
http://videoduniya.com/
நான் இந்த படத்தை தனியாக பார்திருந்தேன் என்றால், கண்டிப்பாக என்ன கதைன்னு எனக்கே புரிஞ்சிருக்காது.. இந்த படம் பார்க்கும்போது உங்க விமர்சனத்தை பக்கத்துல வச்சிதான் யார் யார்ன்னு அடையாளம் கண்டுக்க முடியும் என்னால்.. :-D
RK கஷ்டப்பட்டு ஒரு படம் எடுத்தா உங்களுக்கெல்லாம் காமெடியா :)
---------
//நடிகை ரோஜா செம்பருத்தி படத்திற்குப் பின் நடித்த இரண்டாவது திரைப்படம் இது. 15 ஆண்டுகளாகிவிட்டதாக பிரஷ் ஷோவில் கண்ணீர்விட்டார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.//
ஏன் ரோஜாவுக்கு வயசாச்சுன்னா!
----------
:-)) இது நல்ல ஜோக்!
I beg to differ . I agree film is not good but I think Film would been hit if it realeased in same time (Now technology leaps and google provides more details than newspaper at that time .)
If you see any old movies now ( including Rajni super hit ) except some all are jokes .
Tamil directors are not good in taking investigate stories. This film is not exception .
I hate to see film like this .
RC /NJ
// tamil zei...
Super joke boss //
எதுங்க? படமா? என்னுடைய பதிவா?
// Rock
--------------------------------
Get 1 Free domain with 1GB Hosting only Rs1500/-
Vist : http://space2inet.com
-------------------------------- //
சரி...இதென்னது? ஒங்களோட வலைத்தளமா? என்ன இங்க பண்றீங்க? அதையும் சொல்லுங்க. நம்ம மக்களும் தெரிஞ்சிக்கட்டும்.
// இளவஞ்சி zei...
ஜீரா,
அந்த காலத்துல வந்திருந்தா 50 நாளாவது ஓடியிருக்கும்! நானே ரோஜாவுக்காக ரெண்டு தடவையாவது பார்த்திருப்பேன் :) சரி விடுங்க.. //
ரெண்டு வாட்டியா? அப்ப ரம்யா கிருஷ்ணனுக்கு ரெண்டு வாட்டி பாப்பீங்களா? இந்தப் படத்துல ரோஜா பெரிய கண்ணாடி போட்டுக்கிட்டு அடக்கவொடுக்கமான டாக்டர்.
// நீங்க பைரசின்னா என்னான்னு தெரியாது அப்படிங்கற தமிழருக்கான தகுதியை உடைய ஆளா இருந்தா கீழே உள்ளது உதவும்.
www.ovguide.com
http://videoduniya.com/ //
பைரசி என்னா buy ரசின்னுதான் நான் இருந்தேன். வீட்ல பாருங்க..எல்லா தமிழ், ஆங்கில, தெலுங்கு, கன்னட, வங்கப் படங்கள்ளாம் ஒரிசினலு. ஆனா இங்க...கெடக்குறது பட்டினி. இதுல சாப்பாடு எப்படிக் கெடைச்சா என்ன!
// .:: மை ஃபிரண்ட் ::. zei...
நான் இந்த படத்தை தனியாக பார்திருந்தேன் என்றால், கண்டிப்பாக என்ன கதைன்னு எனக்கே புரிஞ்சிருக்காது.. இந்த படம் பார்க்கும்போது உங்க விமர்சனத்தை பக்கத்துல வச்சிதான் யார் யார்ன்னு அடையாளம் கண்டுக்க முடியும் என்னால்.. :-D //
அப்படிக் கண்டுபிடிச்சும் ஒரு புண்ணியமும் இல்லைன்னு வெச்சுக்கோங்களேன். சிலபல காட்சிகள் ரொம்பவும் மேலோட்டமாகவே சொல்லப்பட்டிருப்பதால் ரசிகர்களுக்குப் புரியாது. முருகன் நளினி காதல் ஒன்று. எப்படி பிரிண்டிங் பிரஸ் கைமாறியது என்பது. வெறும் பூடகமாச் சொல்லியிருக்காங்க. அதுவும் தவறான ஆர்டர்ல.
// Anonymous zei...
RK கஷ்டப்பட்டு ஒரு படம் எடுத்தா உங்களுக்கெல்லாம் காமெடியா :) //
அவரு ஏன் கஷ்டப்பட்டு படமெடுக்கனும்? கஷ்டப்படாம செம்பருத்தி மாதிரி எடுத்திருக்கலாம்ல. அவரும் கஷ்டப்பட்டு...நம்மளையும் கஷ்டப்படுத்திக்கிட்டு....அதாங்க இதெல்லாம்.
// Sridhar Venkat zei...
---------
//நடிகை ரோஜா செம்பருத்தி படத்திற்குப் பின் நடித்த இரண்டாவது திரைப்படம் இது. 15 ஆண்டுகளாகிவிட்டதாக பிரஷ் ஷோவில் கண்ணீர்விட்டார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.//
ஏன் ரோஜாவுக்கு வயசாச்சுன்னா!
----------
:-)) இது நல்ல ஜோக்! //
ஹி ஹி நமக்கும் அப்பப்ப இந்தக் கிண்டலு கிண்ட வரும்.
// Anonymous zei...
I beg to differ . I agree film is not good but I think Film would been hit if it realeased in same time (Now technology leaps and google provides more details than newspaper at that time .) //
இல்லைங்க. டெக்னாலஜி பிரச்சனையில்லை. திரைக்கதையிலேயே பிரச்சனை. நெறைய வெட்டுகள் இருக்கும் போலவும் தெரியுது. என்னவோ மிஸ்ஸிங்.
// If you see any old movies now ( including Rajni super hit ) except some all are jokes .
Tamil directors are not good in taking investigate stories. This film is not exception .
I hate to see film like this .
RC /NJ //
இதுல RCங்குறது ரமணி சந்திரன்? ராதா சந்திரன், ரவிச்சந்திரன் சந்திரசேகரனாக்கூட இருக்கலாம். இல்ல ராயல் சேலஞ்ச்? :-)
குற்றப்பத்திரிக்கைக்கு எதிராக ஒரு குற்றப்பத்திரிக்கை !
:))
படம் சரியான மொக்கையா இருக்கும்னு தெரியும்...
நீங்க videoduniya.com போய் பாருங்க. அட்டகாசமான பழைய படம் எல்லாம் கிடைக்கும்.
நான் இப்பவெல்லாம் புரட்சி தலைவர் படமும், நடிகர் திலகம் படமும் தான் பாக்கறேன் :-)
----------------
இந்த படம் 15 வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா 100 நாள் ஓடியிருக்கும்.
இப்ப நீங்க தீர்ப்பு எல்லாம் வந்ததுக்கு அப்பறம் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. அப்ப அதெல்லாம் பண்ணியிருக்க முடியாது :-)
// கோவி.கண்ணன் zei...
குற்றப்பத்திரிக்கைக்கு எதிராக ஒரு குற்றப்பத்திரிக்கை !
:)) //
ஹா ஹா கோவி...கலக்கல் கமெண்டுகளா வருது. நடக்கட்டும். அடுத்த சொல்லொரு சொல் எப்போ?
// வெட்டிப்பயல் zei...
படம் சரியான மொக்கையா இருக்கும்னு தெரியும்...
நீங்க videoduniya.com போய் பாருங்க. அட்டகாசமான பழைய படம் எல்லாம் கிடைக்கும்.
நான் இப்பவெல்லாம் புரட்சி தலைவர் படமும், நடிகர் திலகம் படமும் தான் பாக்கறேன் :-) //
நைனா..இதந்த்தா ஈரோஜே இளவஞ்சிகாரு செப்பாரு. இது தெரியாம நேனு தேசியப்பறவைங்குற வெளங்காத படத்தையும் சூசீட்டேனே!!!!!!!!!!!! ஓஓஓஓஓஓஓ
இனிமே பாதகாணிக்கை, பாலும்பழமும், பார்த்தால் பசி தீரும், பாக்தாத் பேரழகி, சிஐடி சங்கர், உலகம் சுற்றும் வாலிபன்..
// இந்த படம் 15 வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா 100 நாள் ஓடியிருக்கும்.
இப்ப நீங்க தீர்ப்பு எல்லாம் வந்ததுக்கு அப்பறம் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. அப்ப அதெல்லாம் பண்ணியிருக்க முடியாது :-) //
உண்மைதான். ஆனா அந்த ஆராய்ச்சி செஞ்சதாலதான் படத்துல சொல்ல வந்தது புரிஞ்சது. இல்லைன்னா ஒன்னும் புரிஞ்சிருக்காது. அஞ்சு நாள்ள படம் அம்பத்தூரத் தாண்டி ஓடியிருக்கும்,
என்னடா இது,
ஜிரா பட விமர்சனத்தில்,
இரத்தத்தில் தோய்த்து எழுதிய எழுத்துக்கள் (அதாம்பா, font color reddu) வரலையேண்ணு பாத்தேன்...
நடுவுல red போல ஒரு கலர் வந்திடுச்சுல்ல! :-)
//அடப்பாவிகளா! உண்மையையும் கற்பனையையும் கலக்கும் போது எத எங்க கலக்கனும்னு தெரியாது//
மொத்தப் பட விமர்சனமும் இந்த ஒத்தை வரியில் அடங்கி விடுகிறதே ஜிரா!
Intha padam engaa colonyla the eduthanga.. Oru varam antha pattu colonyyea color akkitanga.. color powder , giant fan.. dressllam ore colora poyeeduchu..apparam dmk kodi vettra seen..appa vanthuruchina.. ithukkavey padatha pathirupen..
வணக்கம் ராகவன்
நான் ஊரில் இருந்த காலத்தில் , இந்தப்படத்தின் போஸ்டர் கூட வீடியோ கடைகளில் ஒட்டி படம் வர இருப்பதற்கான சம்பிரதாயங்கள் அரங்கேறின. அது நடந்தது 1991 இல்.
அன்றைய காலகட்டத்தில் நிஜ சம்பவங்களை மசாலா முலாம் பூசி எடுத்த செல்வமணி எடுபட்டார். அப்போது வந்திருந்தால் அவர் தப்பியிருப்பார் போலத் தெரிகிறது.
உங்கள் மன உறுதியைப் பாராட்டுகின்றேன் ;-)
RK எடுத்த எந்த படம் உருப்படியா இருந்தது இது இருக்கறதுக்கு?
அவருக்கு எதுக்குத்தான் இந்த மன்சூர இந்த அளவுக்கு புடிக்குதோ தெரியலை..
ஹூம்.. தெரிஞ்சே போயி மூனு மணி நேரத்த வீணடிச்ச ஒங்கள என்ன சொல்றது?
இந்த மாதிரி விமர்சனம் எழுதறதுக்கா? அப்படீன்னா சரி...
படத்த பாக்க இருந்தவங்கள காப்பாத்துனீங்களே.. ரொம்ப நன்றி ராகவன்:-)
// kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
என்னடா இது,
ஜிரா பட விமர்சனத்தில்,
இரத்தத்தில் தோய்த்து எழுதிய எழுத்துக்கள் (அதாம்பா, font color reddu) வரலையேண்ணு பாத்தேன்...
நடுவுல red போல ஒரு கலர் வந்திடுச்சுல்ல! :-) //
இது கட்டாயமா என்ன ரவி? எழுதுறவங்கள விட படிக்கிறவங்களுக்கு நெறைய தெரியும். மொதல்ல முந்தைய விமர்சனங்களையும் படிச்சிர வேண்டியதுதான்.
// //அடப்பாவிகளா! உண்மையையும் கற்பனையையும் கலக்கும் போது எத எங்க கலக்கனும்னு தெரியாது//
மொத்தப் பட விமர்சனமும் இந்த ஒத்தை வரியில் அடங்கி விடுகிறதே ஜிரா! ////
அது போதுந்தான். ஆனாலும் சொல்ல வேண்டியது நெறைய இருந்ததால எழுத வேண்டியதாப் போச்சு.
// aravindaan zei...
Intha padam engaa colonyla the eduthanga.. Oru varam antha pattu colonyyea color akkitanga.. color powder , giant fan.. dressllam ore colora poyeeduchu..apparam dmk kodi vettra seen..appa vanthuruchina.. ithukkavey padatha pathirupen.. //
வாங்க அரவிந்தன். ஒங்க காலனியில வெச்சு எடுத்த படமா? அப்ப ஒரே கொண்டாட்டந்தான் போங்க. ஒவ்வொரு முக்கையும் காட்டும் போது கத்திக் கும்மாளம் போடலாம். இதுக்கெல்லாம் உள்ள படிக்கு டிரீட்டு குடுக்கனும். தெரியுமா?
// கானா பிரபா zei...
வணக்கம் ராகவன்
நான் ஊரில் இருந்த காலத்தில் , இந்தப்படத்தின் போஸ்டர் கூட வீடியோ கடைகளில் ஒட்டி படம் வர இருப்பதற்கான சம்பிரதாயங்கள் அரங்கேறின. அது நடந்தது 1991 இல்.
அன்றைய காலகட்டத்தில் நிஜ சம்பவங்களை மசாலா முலாம் பூசி எடுத்த செல்வமணி எடுபட்டார். அப்போது வந்திருந்தால் அவர் தப்பியிருப்பார் போலத் தெரிகிறது. //
இருக்கலாம் பிரபா.ரோஜாவுக்காக ரெண்டு வாட்டி பார்க்க வலைப்பூக்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள். ;-)
// உங்கள் மன உறுதியைப் பாராட்டுகின்றேன் ;-) //
என்ன பண்ணச் சொல்றீங்க. இந்த விஷயத்துல உறுதி எக்கச்சக்கமாப் பெருகிப் போச்சு.
// tbr.joseph zei...
RK எடுத்த எந்த படம் உருப்படியா இருந்தது இது இருக்கறதுக்கு? //
புலன்விசாரணை நல்லாயிருந்ததுன்னு நெனைக்கிறேன். அது ரொம்பச் சின்ன வயசுல பாத்ததால பிடிச்சிருக்கலாம்.
// அவருக்கு எதுக்குத்தான் இந்த மன்சூர இந்த அளவுக்கு புடிக்குதோ தெரியலை.. //
எனக்கும் புரியாத விஷயம் இதுதான். மன்சூரலிகான் நடிச்சாத்தான் படமே எடுப்பேன்னு அடம்பிடிக்குறாரே! இந்த மன்சூரலிகான் நடிச்சு ஒரே ஒரு படந்தாங்க நல்லாயிருந்துச்சு. மீன்ஸ்..படமில்ல. மன்சூர் நடிப்பு. விஜய் படம். குஷ்புவைத் திருத்த வீட்டுக்குள்ள வேடம் போட்டுக்கிட்டுப் போவாங்க. அதுல மன்சூர் காமெடி ரோல். அதுலதான் நல்லாப் பண்ணீருந்தாரு.
// ஹூம்.. தெரிஞ்சே போயி மூனு மணி நேரத்த வீணடிச்ச ஒங்கள என்ன சொல்றது?
இந்த மாதிரி விமர்சனம் எழுதறதுக்கா? அப்படீன்னா சரி...
படத்த பாக்க இருந்தவங்கள காப்பாத்துனீங்களே.. ரொம்ப நன்றி ராகவன்:-) //
தலையெழுத்துன்னு ஒன்னு இருக்குதே சார். அது இப்படி முடிவெடுக்க வெச்சுருது.
நண்பரே... இந்தப் படம் பார்த்து நொந்து நூடில்ஸ் ஆகி இருக்கீங்கன்னு புரியுது.... ஹஹாஹா...
நான் பாக்கத் தொடங்கி... கொஞ்ச நேரத்திலயே என்னால இவங்க லொள்ளு தாங்க முடியாம படத்த நிப்பாட்டீட்டு நல்லா தூங்கினேன்... ஹஹஹ....
பிறகு... ஒருவாறு பார்த்து முடித்து விட்டேன்... படத்தில் ஒரு ஜதார்த்தம் இல்லை... ஒரு Flow இல்லை... அத்துடன் பல இடங்களில் நீங்கள் கூறியது போல் சினிமாவிற்காக அதிகமாகவோ... அல்லது மிக மிக அதிகமாகவோ நிகழ்வுகளைக் காட்டி இருக்காங்க... படத்தப் பாக்க பாக்க சரியான annoying ஆக இருந்தது...
இந்தப் படத்துக்கு நான் கொடுக்கும் புள்ளி 1/100 (அந்த ஒரு மார்க்கும்... அவங்க நேரம் செலவழிச்சு!!!??? படம் என்று நினைச்சு அவங்கள் எதையோ எடுத்ததற்காக... :P)
Post a Comment