Monday, February 04, 2008

தங்க மரம் - 4

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான். பாகம்-2 மற்றும் பாகம்-3

பாகம் - 4

தாய் கொடுத்த பெட்டியை புது வேட்டியில் கட்டிக் கொண்டு ஓடினான் கதிரவன். எங்கே? அங்கேதான். வழக்கமாக சித்திரையைச் சந்திக்கும் இடத்திற்குத்தான். கதிரவனின் பாட்டனார் உயிர்தொடு செங்கையார் ஒரு மருத்துவர் என்று நாம் அறிவோம். அவரது மருத்துவச்சாலையைக் கோயிலாகவே கட்டியிருந்தார். வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் கட்டி...தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே மூலிகைத் தோட்டத்தையும் மருத்துவத் துறையும் அமைத்து சிறப்பாற்றி வந்தார்.

இன்றும் அந்தக் கோயிலும் மருத்துவத்துறையும் கதிரவனின் அன்னையின் பொறுப்பில் சிறப்பாக இருக்கின்றன. செங்கையாரிடம் கற்ற மாணாக்கர்கள் அங்கு மருத்துவம் செய்து வந்தால் நாட்டிலுள்ளோருக்கு அது பயனுள்ளதாகவே இருந்தது. கதிரவனும் அங்கு மருத்துவம் கற்றிருந்ததால் அவனும் ஒவ்வொரு பொழுது மருத்துவம் பார்த்தான்.

அந்த மருத்துவத்துறையின் மூலிகைத் தோட்டத்தின் வில்வமரம்தான் இவர்கள் இருவருக்கும் விளையாட்டு மரம். அங்கு கதிரவன் சென்ற பொழுது சித்திரை மருத்துவத்துறையில்தான் இருந்தான். மூலிகைத் தோட்டப் பராமரிப்பு அவர்கள் குடும்பத்தின் பொறுப்பு. சித்திரையின் தந்தை இளங்கோவின் காலத்திலிருந்து பொறுப்பாகச் செய்து வருகின்றார்கள்.


கதிரவனை விடச் சித்திரை ஓராண்டு மூப்பு. வந்த நண்பனைக் கட்டியணைத்துப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான். உற்ற நண்பர்களின் அணைப்பும் வாழ்த்தும் யாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பெட்டியும் பொறுப்பும் கைவந்ததிலிருந்து உணர்ச்சிவசப்பட்டிருந்த கதிரவனின் பரபரப்பு நண்பனைக் கண்டதும் குறைந்தது. பொன்னவிரிலையைப் பதப்படுத்திக் கொண்டிருந்த சித்திரையின் கையைப் பிடித்து வில்வமரத்தடிக்கு அழைத்துச் சென்றான்.

மடியில் முடிந்து வைத்திருந்த பெட்டியை எடுத்து நண்பனின் கையில் வைத்தான். "சித்திரை, இன்று அம்மா இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார்கள். இது அப்பா கொடுத்துச் சென்ற பெட்டியாம். அவர்..." கதிரவன் முடிக்கும் முன்னமே சித்திரை தொடர்ந்தான். "அவர் ஒரு கடமையை கொடுத்துச் சென்றிருக்கிறார். அது என்ன எதுவென்று அம்மாவிற்குத் தெரியாது. ஆனால் நீ ஆற்றல் மிக்கவனாக இருந்தால் கண்டு பிடித்துச் செய்து முடிப்பாய். சரிதானே?" சொல்லி விட்டுக் கண்ணைச் சிமிட்டினான்.

வியப்பில் வாயடைத்துப் போனான். "டேய்...இதை நீ எப்படி அறிவாய்?" சின்னக் கோவத்தில் நண்பனின் தோளில் குத்தினான்.

குத்தை வாங்கிக் கொண்டு சிரித்தபடியே சொன்னான் சித்திரை. "எட்டு மாதங்களுக்கு முன் என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய அன்னை எனக்குச் சொன்னது. உனக்குப் பதினெட்டு வயதாகும் பொழுது உன்னிடம் உன் அம்மா சொல்வார் என்றும் அதுவரையில் உன்னிடத்தில் இதைப் பற்றி நான் பேசக்கூடாது என்றும் எனக்கு என் அம்மா கட்டளையிட்டிருந்தார்கள். ஆகையால்தான் உன்னிடம் சொல்லவில்லை."

இதுவரைக்கும் எதிலும் ஒளிவு மறைவு என்று வைக்காத நண்பன் இப்படியொரு செய்தியை எட்டு மாதங்களாகச் சொல்லாமல் வைத்திருக்கிறானே என்ற ஆத்திரம் லேசாக இருந்தாலும் அம்மாவின் கட்டளை என்று சொன்னதும் அமைதியானான் கதிரவன். அதுவுமில்லாமல் தன்னிடம் ஒரு செய்தியைச் சொல்ல முடியாமல் எட்டு மாதங்கள் சித்திரை அடக்கி வைத்திருந்தான் என்பதை நினைத்ததும் நட்பின் பாசம் துளிர்த்தது. மறுபடியும் நண்பனைக் கட்டிக் கொண்டான்.

முதுகில் தட்டிக் கொடுத்த சித்திரை, கதிரவனைத் துறைக்குள் அழைத்துச் சென்றான். மூலிகை விதைகளையும் நாற்றுகளையும் அவை தொடர்பான மற்ற பொருட்களையும் வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தார்கள். பலப்பல மூலிகை விதைகளில் கிளம்பும் கும்மென்ற மணத்தை முகர்ந்ததும் இருவருக்கும் உடலில் புத்துணர்ச்சி பரவியது. அங்கேயிருந்த ஒரு பெட்டகத்தைத் திறந்து ஒரு துணிப்பொட்டலத்தை எடுத்தான் சித்திரை. பெரிய வெள்ளைத்துணிப் பொட்டலம். அதைக் கதிரவனையே பிரிக்கச் சொன்னான்.

வெண்ணெயை நெய்த துணி போல வாங்கிய கையில் ஒரு வழுவழுப்பை உணர்ந்தான். ஈரமில்லாமல் இருந்தாலும் குளிர்ச்சி உள்ளங்கையைக் குத்தியது. பிரிக்கப் பிரிக்க வெள்ளையாக இருந்த துணிப்பொட்டலாம் வெளிர் மஞ்சளானது. இன்னும் இரண்டு சுற்று பிரிந்ததும் அப்படியே அடர் மஞ்சளாகியது. நிறம் அடர்ந்து கொண்டே போய் துணி செக்கச் செவேல் என்று ஆனது. மொத்தத் துணியையும் பிரித்ததும் உள்ளே அரையடி நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் பட்டையாக உள்ள செக்கச் சிவந்த உருளை கதிரவனின் கைப்பிடியில் சிக்கியது.

கீழே விழுந்திருந்த பொட்டலத் துணி இப்பொழுது வெளுத்திருந்தாலும் உருளையைப் பிடித்திருந்த கதிரவனின் கை, கட்டியிருந்த வேட்டி, அவனது உடம்பு...என்று சிவப்பாகத் தெரிந்தது. மாயம் போல மயங்கியது கதிரவனின் மனது. வியப்பில் கேட்டான். "என்னடா இது? இப்படியொரு உருளைக் குச்சியை நான் பார்த்ததேயில்லையே. அனலில் இட்ட இருப்புக் கம்பி போல் ஒளிர்கிறது. ஆனால் தொட்டால் குளுமையாக இருக்கிறதே. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும்?"

பெருமூச்சு விட்டான் சித்திரை. "தெரியவில்லையே. பெட்டியை வைத்துக் கொண்டு நீ இன்றைக்குத்தானே முழிக்கத் தொடங்கியிருக்கிறாய். நான் எட்டு மாதங்களாக முழித்துக் கொண்டிருக்கிறேன். சரி. முதலில் பொட்டலத்தைத் திரும்பக் கட்டு. இங்கு மருத்துவர்களும் நோயாளிகளும் வருவார்கள். நாம் வேறொரு இடத்தில் இதைப் பற்றிப் பேசலாம். நடுப்பகலுக்கு மேல்தான் ஓய்வுப் பொழுது."

தான் கொண்டு வந்த பெட்டியையும் செங்கோலையும் ஒன்றாக வைத்து வெள்ளைத் துணியில் திருப்பக் கட்டினான். அப்படி அழுத்திக் கட்டும் பொழுது கிணுங்கிணுங்கென்று வெள்ளிமணியொலி கேட்டது. உடனே பொட்டலத்தைப் பிரித்து பெட்டியைக் கையிலெடுத்துக் குலுக்கினான். ஒன்றும் கேட்கவில்லை. செங்கோலையும் குலுக்கினான். எந்த ஓசையுமில்லை. யோசித்தபடியே மீண்டும் இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டினான். மறுபடியும் கிலுங்கிலுங்கென்ற் ஒலி கேட்டது. பெட்டியும் செங்கோலும் உரசும் பொழுது அந்த ஒலியெழுகிறதோ என்று இருவரும் நினைத்தார்கள். ஆனாலும் அங்கே வைத்து அதைப் பரிசோதிக்க அவர்களுக்கு அச்சமாக இருந்தது.

நடுப்பகல் வரும் வரையில் காத்திருக்கப் பொறுமையில்லாமல் துணிப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு இருவரும் அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினார்கள். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு மரங்களடர்ந்த பகுதியில் ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் ஏறிக் கொண்டார்கள். பொட்டலத்தைப் பிரித்து பெட்டியையும் செங்கோலையும் உரசினார்கள். கிலுங்கிலுங்கென்று ஒலியெழுந்தது. வெள்ளி மணியை காதோரம் வைத்து ஆட்டுவது போல.

மணியோசை நல்லிசையாக இருவரின் மனதையும் மெல்ல மயக்கியது. அப்படியே தொடர்ந்து உரசுகையில் "ம....ங்க......ஆ.....பாதி....யார்....களி...." என்று சொற்கள் துண்டு துண்டாக வந்து விழுந்தன.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

18 comments:

said...

ஆஹா!!
அப்புறம்??

said...

அய்யய்யோ...

அப்புறம்?

said...

கதிரவனின் பெட்டியை விட சித்திரையின் இசைக்கருவியைப் பற்றி படிக்க இன்னும் சுவையாக இருக்கிறது இராகவன்.

said...

நன்று நன்று - புதிரா புனிதமா - புரிய வில்லை - ஒவ்வோரு பாகமும் ஒவ்வொரு புதிர் போடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்

said...

அப்புறம்......??? என்னாச்சு???

அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...

said...

ஆகா! இப்படி சஸ்பென்ஸ்-ல விட்டுடீங்களே ஜிரா!....

//வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் //

நல்ல வார்த்தைகளை அழகாக கோர்த்து உள்ளீர்கள். எல்லாம் தெரிந்த சொற்கள்தான் என்றாலும் மேலே உள்ள வரியினை படித்தவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி தொன்றியது.

said...

விறுவிறுப்பு கூடுது ஜிரா! சீக்கிரம் அடுத்த பாகத்தைப் போடுங்க! ம....ங்க......ஆ.....பாதி....யார்....களி.....
ஹூம்...யாரு ஜிரா அந்த மங்காபாதியாரு? :-)

//தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே மூலிகைத் தோட்டத்தையும் மருத்துவத் துறையும் அமைத்து சிறப்பாற்றி வந்தார்//

ரொம்ப பிடிச்சிருக்கு! சின்ன வயசில் என் கற்பனை இப்படி எல்லாம் ஓடும்! கோயில் மட்டும் வேற! ஜி-டாக்குல சொல்லுறேன்! :-)

said...

அப்புறம் என்னவென்று அறிய ஆவல்..சுவாரசியம் கூடுகிறது..

said...

சஸ்பென்ஸ் பொடி போட்டு கலக்கிறீங்க, நாலாவதும் படிச்சாச்சு ;-)

said...

தீந்தமிழ் சுவையோடு திகிலும் சேர்ந்த நல்ல கதை. உங்களின் தமிழும் அருமை கதையும் அருமை. தொடருங்கள் :)

said...

// தன்னிடம் ஒரு செய்தியைச் சொல்ல முடியாமல் எட்டு மாதங்கள் சித்திரை அடக்கி வைத்திருந்தான் என்பதை நினைத்ததும் நட்பின் பாசம் துளிர்த்தது.//

நல்லவரிகள் தொடர்ந்து எழுதுங்கள்

said...

நேற்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன் - ஒவ்வொருவர் பேசுவதிலும் ஆயிரம் பொருள் இருக்கும். அவர்களைக் கொஞ்சமேனும் தெரிந்திருந்தால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றும் புரியும். இப்படி சொல்லி வரும் போது இந்த இடுகையில் இருக்கும் 'வள்ளி மணாளனுக்குக் கோயில் கட்டி...தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே' என்ற சொற்களிலே இராகவன் என்ன சொல்ல வருகிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். :-)

said...

அப்புறம் என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லுங்க....

said...

// CVR said...
ஆஹா!!
அப்புறம்??//

அப்புறமென்ன...அடுத்த வாரம்தான். :)

// துளசி கோபால் said...
அய்யய்யோ...

அப்புறம்? //

சிவியார் ஆகாங்குறாரு. நீங்க அய்யய்யோன்னு சொல்றீங்க. என்ன வேற்றுமை...என்ன வேற்றுமை :)

// குமரன் (Kumaran) said...
கதிரவனின் பெட்டியை விட சித்திரையின் இசைக்கருவியைப் பற்றி படிக்க இன்னும் சுவையாக இருக்கிறது இராகவன்.//

நன்றி குமரன். பல கற்ற குமரனுக்குப் பல்சுவை பிடிக்காமல் போகுமா? :)

said...

கடவுளைப் போற்றுனதை நிறுத்திட்டு இப்ப மனுசங்களைப் போற்றத் தொடங்கியிருக்கீங்க. ஹும் நடத்துங்க நடத்துங்க. எப்ப எனக்கு ஆப்பு வைக்கப் போறீங்கன்னு மட்டும் தயவு செஞ்சு சொல்லிட்டுச் செய்யுங்க. ஆமாம். இல்லாட்டி எசகு பெசகா எதாவது ஆகிடப் போவுது.

said...

நல்ல விறுவிறுப்பு ஜிரா...அடுத்த பகுதிக்கு ஆவலுடன் ;))

said...

// cheena (சீனா) said...
நன்று நன்று - புதிரா புனிதமா - புரிய வில்லை - ஒவ்வோரு பாகமும் ஒவ்வொரு புதிர் போடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் //

போட வேண்டிய புதிர்களைப் போட்டு முடிச்சிட்டேன் இந்த வாரத்தோட. அடுத்த வாரத்துல இருந்து புனிதம்தான். :)


// Divya said...
அப்புறம்......??? என்னாச்சு???

அடுத்த பகுதிக்காக ஆவலுடன்... //

நானுந்தான் நானுந்தான் :)


// மதுரையம்பதி said...
ஆகா! இப்படி சஸ்பென்ஸ்-ல விட்டுடீங்களே ஜிரா!.... //

இப்பத்தானங்க தொடங்கீருக்கு. :)

////வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் //

நல்ல வார்த்தைகளை அழகாக கோர்த்து உள்ளீர்கள். எல்லாம் தெரிந்த சொற்கள்தான் என்றாலும் மேலே உள்ள வரியினை படித்தவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி தொன்றியது. //

உண்மைதாங்க. முருகன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடான்னு கவியரசரே எழுதீருக்காரு. :)

// பாச மலர் said...
அப்புறம் என்னவென்று அறிய ஆவல்..சுவாரசியம் கூடுகிறது.. //

அடுத்த திங்கள் தெரிஞ்சிட்டுப் போகுது. படிச்சுக் கருத்து சொன்னது மகிழ்ச்சியளிக்குது. :)

// கானா பிரபா said...
சஸ்பென்ஸ் பொடி போட்டு கலக்கிறீங்க, நாலாவதும் படிச்சாச்சு ;-) //

தோசைலையே பொடி தோசைன்னு இருக்குதேன்னு கதைல தூவிப் பாத்தேன். அதாங்க.

said...

அடாடா..அப்புறம்...?