Thursday, May 26, 2005

மனைவி கணவனுக்குக் கட்டிய சேலை

கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு சேவை மையத்திற்குச் செல்ல நேர்ந்தது. ஒரு நண்பருடன் சென்றிருந்தேன். அது மனமுறிவு கொண்டவர்களுக்கான சேவை மையம்.

அங்கே ஒரு விசித்திரப் பிரச்சனை. இதற்குத் தீர்வு சொல்வது மிகக் கடினம். ஆனால் பிரச்சனைக்குறியவரின் மனைவியே தீர்வு கண்டிருந்தார். பிரச்சனைக்குரியவருக்கு வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருந்தது. மூன்று பிள்ளைகள். அவர்கள் வழியாகப் பேரப் பிள்ளைகள். எல்லாம் மகிழ்ச்சியான குடும்பம். சிறுவயதில் தெருவோரத்தில் மிகவும் துன்பப்பட்டு படிப்படியாக முன்னேறியவர். இப்பொழுது முதுமைக்குத் தேவையான ஓய்வு. அப்படியிருக்கையில் ஒரு பிரச்சனை.

அவருக்குக் கொஞ்ச நாட்களாகவே பெண்ணாக வாழ வேண்டுமென்று விருப்பம். எப்படி வந்தது? ஏன் வந்ததென்று தெரியவில்லை. ஆனால் அப்படியொரு விருப்பம். உடலுறவு வகையில் அல்ல. மாறாக ஒரு குடும்பத்தலைவராக இருந்த அவருக்குக் குடும்பத் தலைவியாக இருக்க ஆசை. சேலை கட்டிக் கொண்டு, சமையல் செய்து கொண்டு, வீட்டு வேலைகளையும் நிர்வாகங்களையும் கவனித்துக் கொண்டு குடும்பத் தலைவியாக இருக்க ஆசை.

இதென்ன கூத்து! என்ன செய்வது? மனைவியிடம் அப்படியே சொல்லிவிட்டார். அவரும் படிக்காதவர். முடிவுக்கு வரமுடியவில்லை. இறுதியில் இருவரும் சேவை மையத்தை அணுகியிருக்கின்றார்கள். தேர்ந்த மருத்துவரை வைத்துச் சோதித்திருக்கிறார்கள். பிரச்சணையின் தொடக்கத்தைக் கண்டுபிடித்தார்கள். அவர் தெருவோரச் சிறுவனாக இருந்த பொழுது வளர்ந்த தெருவோர வாலிபர்கள் அவரை வன்புணர்ந்திருக்கின்றார்கள். பாவம். அதனுடைய விளைவு...இந்த வயதில் இப்படி. அப்பொழுது அவர்கள் அவரை பெண்ணாக நினைத்துச் செய்தது அவர் மனத்தின் ஓரத்தில் எங்கோ படிந்திருந்திருக்கிறது. அது இத்தனை வருடங்களாக முகங்காட்டாமல் வயோதிகத்தில் காட்டியிருக்கிறது.

அவரைப் புரிந்து கொண்ட மனைவி, வீட்டில் இருக்கும் பொழுதுகளில் சேலையும் பாவாடையும் அணிந்து கொள்ளவும் வீட்டு அடுக்களைப் பொருப்புகளைப் பார்த்துக் கொள்ளவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். அவர் இதிலிருந்து விடுபட மனப்பயிற்சியும் மருத்துவப் பயிற்சியும் எடுத்து வருகிறார். அவருக்கு அந்தக் குடும்பம் ஒத்துழைத்து வருகிறது. புரிந்து கொண்ட இல்வாழ்க்கை என்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. அந்தத் துணிகர மனைவியின் மீது மதிப்பும் மரியாதையும் கூடி விட்டது.

6 comments:

Chandravathanaa said...

ராகவன்
சின்ன வயதில் நடக்கும் விடயங்கள் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதற்கு
இது நல்ல உதாரணம். கிட்டடியில் எனது மகனின் வகுப்பு மாணவி ஒருவரைச் சந்தித்தேன்.
மிகநல்ல பெண்பிள்ளை. பல்கலைக்கழகத்தில் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறாள்.
மிகவும் நட்பாகப் பழகுவாள். தற்போது 23 வயது.

கதைத்துக் கொண்டு போகும் போது தனக்கு இப்போ ஆண்நண்பன் இருக்கிறான் என்று சொல்லி ஒரு
புகைப்படத்தைக் காட்டினாள். நான் அதிர்ந்து போனேன். அந்த நண்பனின் வயது 45. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவனுடன் தான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என்றாள்.

வீடு திரும்பிய பின்னும் என்னால் அந்த அதிர்ச்சயிலிருந்து மீள முடியவில்லை.
ஏன் தன்னை விட 22 வயதுகள் கூடிய ஒருவனை நண்பனாக்கினாள் என்று யோசித்த போது
சில சந்திப்புக்களின் முன் தனது நான்காவது வயதிலேயே தன்னையும் தன் தாயையும் தனியே விட்டுச் சென்ற தனது தந்தையைப் பற்றி அவள் சொன்னது நினைவில் வந்தது.

தந்தையின் ஸ்தானத்தில் இருக்கக் கூடிய ஒருவனை தனது வாழ்க்கைத்துணையாக அவள் மனம் ஏற்றுக் கொண்டதன் காரணம் புரிந்தது.

Muthu said...

ராகவன்,
சின்ன வயதில் நடப்பவை மிக ஆழமாய்ப் பதிந்து வாழ்வின் திசையையே மாற்றிவிடக்கூடும். காந்தி, அம்பேத்கர், இந்திராகாந்தி போன்றோர் இதுபோல் சிறு வயதுத் தாக்கத்தினை கடைசிவரை கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு அதிதீவிர பெண்ணியம் பேசும் பெரும்பாலோர் சிறுவயதில் சில ஆண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

G.Ragavan said...

சந்திரவ்தனா, பெண்பிள்ளைகள் தகப்பனைப் போன்ற கண்வன் வேண்டுமென்று தேடுவார்களாம். ஆண்பிள்ளைகள் தாயைப் போல மனைவி வேண்டுமென்று தேடுவார்களாம். காரணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களே முதல் அறிமுகங்கள் அல்லவா. நீங்கள் கூறிய வாழ்வியல் எடுத்துக்காட்டும் சிறந்ததே

முத்து, உண்மைதான். extreamists என்பவர்கள் வாழ்க்கையில் அப்படியிருக்க வாய்ப்புள்ளது. சினிமாவில் காட்டுகிறார்களே. சிறுவயதில் ஏமாற்றப் பட்ட கதாநாயகன் பெண்களைக் கொலை செய்து கொண்டே வருவானே. அப்படித்தான். ஆனால் இது போன்ற நிகழ்வுகளின் பின் விளைவுகள் எப்படியிருக்குமென்று சொல்ல முடியாது போல.

குமரன் (Kumaran) said...

பல முறை இப்படிப் பட்ட செய்திகளைப் படித்த பின்பும் நம்ப முடியவில்லை.

G.Ragavan said...

// பல முறை இப்படிப் பட்ட செய்திகளைப் படித்த பின்பும் நம்ப முடியவில்லை. //

எதை நம்பமுடியவில்லை குமரன்? இப்படி ஒரு செய்தி இருக்கும் என்று எனக்கும் தெரியாமல்தான் இருந்தது. கேட்கையில் அதிர்ச்சியாகவே இருந்தது.

Ramya Nageswaran said...

என் தந்தை பணம் தான் உலகில் முக்கியம் என்ற கொள்கை உடையவர். இதற்கு காரணம் பணதிற்காக சிறு வயதில் பட்ட கஷ்டங்கள். சிலருக்கு சிறு வயது அனுபவங்கள் இது போன்ற பாடங்களை கற்று தருகிறது. வேறு சிலருக்கு விபரீத பாடங்களை.. என்ன செய்வது?