Sunday, May 22, 2005

டிவி குவிசும் ஆசையும்

ஸ்டார் தொலைக்காட்சியில் சித்தார்த்த பாசு இந்தியாவின் அறிவாளிக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் வினாடிவினா நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி ஒரு தோராய மதிப்பீடுதான் என்பது எனது கருத்து. இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரியாத அறிவாளிக் குழந்தைகள் எத்தனையோ உண்டு. ஆனாலும் பார்க்க விறுவிறுப்பான நிகழ்ச்சி.

பொதுவாகவே இந்த நிகழ்ச்சியில் மும்பை, பூனே, தில்லி ஆகிய ஊர்களிலிருந்து கலந்து கொள்ளும் மாணவர்களே நிறைய. காரணம் நிகழ்ச்சி நடைபெறும் இடமும் மும்பை என்பதாலும் நடத்தும் தொலைக்காட்சிகள் தேசியத் தொலைக்காட்சிகள் என்பதாலும். நல்லவேளை பாசு வங்காளியாகப் போனதால் நிகழ்ச்சி இந்தியில் நடக்காமல் ஆங்கிலத்தில் நடக்கிறது.

நேற்று தற்செயலாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதில் இரண்டு சிறுவர்கள் மோதிக்கெண்டிருந்தார்கள். அல்லது பங்கு பெற்றுக்கொண்டிருந்தார்கள். அரையிறுதி நிகழ்ச்சி. ஒரு சிறுவனின் பெயர் சச்சித். மற்றொருவன் அஷ்வத். இருவருக்கும் கடுமையான போட்டி. ஒரு கேள்விக்கு இவன் விடை சொன்னால், அடுத்த கேள்விக்கு அவன் விடை சொல்கிறான். பாசுவும் கேள்விக் கணைகளை பல துறைகளிலும் கலந்து மாற்றி மாற்றிக் கேட்டுச் சலித்து விட்டார்.

நடுநடுவே சிறுவர்களின் பெற்றோர்களைக் காட்டினார்கள். அவர்கள்தான் அதிக பரபரப்பில் இருந்தார்கள். இந்தச் சிறுவர்களிடம் அவ்வளவு பரபரப்பு இல்லை. மாறாக மற்றொருவர் விடை சொன்னால் கை தட்டிப் பாராட்டும் நல்ல பண்பு இருந்தது. இதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். கடைசியில் ஒரு சிறுவன் வெற்றி பெற்றான். மற்றொரு சிறுவன் உடனே அவனுக்குக் கை கொடுத்து தோளில் கை போட்டு பாராட்டினான். கண்கொள்ளாக் காட்சி. நஞ்சு இல்லாப் பிஞ்சு மனதில் நல்லவைகளைப் பதிக்க வேண்டும் என்று சொல்லாமலா சொன்னார்கள்.

பெற்றோர்களையும் மேடைக்கு அழைத்தார்கள். வென்ற சிறுவன் மேடைக்கு வந்த தாயை ஓடிச் சென்று கட்டிக் கொண்டான். நல்ல தாய் மகன் உறவு. எத்தனை பேருக்கு இது வாய்க்கிறது? உண்மையான பிள்ளை வ்ளர்ப்பு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியை உண்டாக்காது. அது நல்ல முடிவுகளையே கொடுக்கும்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஒரு ஆவல். அடடா! எங்கிருந்தோ மாணவர்கள் கலந்து கொள்கிறார்களே. நமது தமிழ்நாட்டு மாணவர்களும் கலந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். பொதுவாகவே தமிழகத்தில் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தும் பெற்றோர்களே நிறைய. அறிவாளிகளை உருவாக்குவதை விட, புத்தகப் புழுக்களை உருவாக்கும் பெற்றோர்களே நிறைய. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஊக்குவிப்பதெல்லாம்.............ம்ம்ம்ம்ம்ம். ஆதங்கம்.

அப்பொழுது சித்தார்த்த பாசு அறிவித்தார். போட்டியில் வெற்றி பெற்றது சென்னை மாணவனாம்! அட நம்மூரு! எனது முகத்தில் புன்னகைக் கீற்று. உள்ளத்தில் சின்னதாய் துள்ளல். இன்னொரு மாணவன் மும்பையைச் சேர்ந்தவன். பொதுவாகவே இனப்பாகுபாடு பார்க்கக் கூடாது என்பார்கள். அதுவும் குழந்தைகள் விஷயத்தில். ஆனாலும் நம்மூர் மாணவன் வெற்றி உவப்பில் ஓங்கியே இருக்கிறது.

6 comments:

said...

//உண்மையான பிள்ளை வ்ளர்ப்பு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியை உண்டாக்காது. அது நல்ல முடிவுகளையே கொடுக்கும்.//

மிக உண்மை.

said...

உண்மைதான் முத்து. நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியில் தாயைக் கட்டிக் கொள்ள முடியும்! அந்தச் சிறுவன் ஓடிச் சென்று கட்டிக் கொண்டதுமே எனக்கு ஒருவித மகிழ்ச்சி. பிள்ளை வளர்ப்பு பெருங்கலை போல.

அன்புடன்,
கோ.இராகவன்

said...

அன்புள்ள ராகவன்,

அந்த நிகழ்ச்சியில்
தோற்றவரும் சென்னையைச் சேர்ந்தவர் என்றால் /
தோற்றவர் தமிழர் அல்லாத ஒருவர் என்றால் /
தோற்றவர் தமிழகத்தில் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றால் /
வென்றவர் தமிழகத்தில் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்து தோற்றவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றால் / இது போன்ற மற்ற பெர்முடேஷன் காம்பினேஷன் (தமிழில் என்ன?) நடந்திருந்தால் என்ன நினைத்திருப்பீர்கள்? :-))

said...

நல்ல கேள்வி லதா.

1. தோற்றவர் தமிழர் அல்லாதவர். - அதுதான் நடந்தது.

2. தோற்றவர் தமிழர் - கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனால் அறிவிருக்குறவனுக்கு வெற்றினு மனசத் தேத்திக்கிற வேண்டியதுதான்.

3. தோற்றவர் தமிழர் ஆனால் சென்னையல்லாதவர் - இதுவும் கஷ்டந்தான். முன்னமே சொன்னமாதிரி வருத்தத்த மறைக்க அறிவிருக்குறவனுக்கு வெற்றினு மனசத் தேத்திக்கிற வேண்டியதுதான்.

4. வென்றவர் தமிழ் கிராமத்தார். தோற்றது சென்னைக்காரர். வருத்தமிருக்காது. வென்றவரும் நம்மவர். தோற்றவரும் நம்மவர். தமிழ்நாட்டில் கிராமத்தார்களும் படித்தவர்கள் என்று மகிழ்ச்சி இருக்கும்.

விடைகள் கிடைத்ததா லதா?

said...

நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியில் தாயைக் கட்டிக் கொள்ள முடியும்! அந்தச் சிறுவன் ஓடிச் சென்று கட்டிக் கொண்டதுமே எனக்கு ஒருவித மகிழ்ச்சி. பிள்ளை வளர்ப்பு பெருங்கலை போல.7//

இது மிகவும் உண்மை ராகவன்.
மனம் நிறைய பாசம் இருந்தாலும்,
அதை வெளியெ காண்பிப்பதில் கட்டுப்பாடு வந்துவிடுகிறது.

சித்தார்த்தபாசு இன்னும் க்விஸ் நடத்துகிறார் என்பதும் மகிழ்ச்சியே.
1980,1990 அதற்கு மேலும்,இருபது
வருஷங்களாக விறூ விறுப்புக் குறையாமல் நிகழ்ச்சிகள் கொடுத்த நல்லதொரு அறிவுஜீவி.

said...

// வல்லிசிம்ஹன் said...
நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியில் தாயைக் கட்டிக் கொள்ள முடியும்! அந்தச் சிறுவன் ஓடிச் சென்று கட்டிக் கொண்டதுமே எனக்கு ஒருவித மகிழ்ச்சி. பிள்ளை வளர்ப்பு பெருங்கலை போல.7//

இது மிகவும் உண்மை ராகவன்.
மனம் நிறைய பாசம் இருந்தாலும்,
அதை வெளியெ காண்பிப்பதில் கட்டுப்பாடு வந்துவிடுகிறது.

சித்தார்த்தபாசு இன்னும் க்விஸ் நடத்துகிறார் என்பதும் மகிழ்ச்சியே.
1980,1990 அதற்கு மேலும்,இருபது
வருஷங்களாக விறூ விறுப்புக் குறையாமல் நிகழ்ச்சிகள் கொடுத்த நல்லதொரு அறிவுஜீவி. //

வாங்க வாங்க. இந்தப் பதிவு 2005 மேயில் இட்டது. அப்ப நடத்திக்கிருந்தாரு. இப்ப நடத்துறாரான்னு தெரியலையே.