Friday, December 09, 2005

பழம் தின்னு கொட்டை போட்டவன்

பழம் தின்னு கொட்டை போட்டவன்

கீழ்க்கண்ட பதிவில் தருமி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். பாண்டியனுக்கு மட்டுந்தான் ஐயம் வரவேண்டுமா? தருமிக்கு வரக்கூடாதா? வந்து விட்டதே!
தருமிக்கு வந்த சந்தேகம்

இந்தப் பழமொழி மிகவும் பிரபலம். யாரைக் கேட்டாலும் ஒரு முறையாவது சொல்லியிருப்பார்கள். அந்த அளவிற்குப் பிரபலம். ஆனால் அதற்கு உண்மையான பொருள் என்ன? யாரைக் கேட்டாலும் முழிப்பார்கள். ஆனால் பாருங்கள். நமது நண்பர் குமரன் அழகான ஒரு தமிழ்ப் பாடலைத் தேடி நமக்காகத் தந்து விளங்காததை விளங்க வைத்திருக்கின்றார். அந்தப் பாடல் கீழே இருக்கிறது.

மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்

ஆதிநாதன் என்று யாரைச் சொல்வார்கள்? சிவபெருமானைத்தான். அனாதிநாதன் என்று யாரைச் சொல்வார்கள்? முருகப் பெருமானைத்தான்.

ஆதிநாதன் என்றால் அவனே அனைத்திற்கும் ஆதி. அதாவது தொடக்கம். அப்படி ஆதியாக நிற்பவன் என்கின்ற விரிசடைக்கடவுளே அனைவருக்கும் மூத்தவர் அல்லவா!

அனாதிநாதனுக்கு வருவோம். ஆதி என்றாலே ஒரு தொடக்கம் இருக்கிறது அல்லவா. ஆனால் இறைவன் அப்படியா? தொடக்கமும் முடிவும் உள்ளவனா இறைவன்? அனாதி என்றால் தொடக்கம் இல்லாதவன். தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்க வேண்டுமே!

பிறப்பு என்றால் இறப்பும் உண்டு. ஆனால் முருகப் பெருமான் பிறக்கவில்லை. உதித்தார். "ஒரு திரு முருகன் உதித்தனன்." உதிப்பது என்பது ஏற்கனவே இருப்பது. காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கின்றது. அந்தச் சூரியன் நேற்றும் இருந்தது. அருணகிரியும் இதைத்தான் "செம்மான் முருகன் பிறவான் இறவான்" என்கிறார்.

அப்படியென்றால் முருகப்பெருமான் சிவனை விடப் பெரியவரா? அப்படியெல்லாம் நாம் முடிவு கட்ட முடியாது. ஏன் தெரியுமா? எல்லாம் ஒன்றுதான். தெய்வம் பலப்பலச் சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர். இதற்கும் தமிழ் விளக்கம் சொல்லியிருக்கிறது.

சிவனைப் பார்வதியோடு சேர்த்துப் புகழ்வது எங்கும் நடக்கும். சிவன் பகல் என்றால் பார்வதி இரவு. அப்படியானால் முருகன்? பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட இதமான மாலை நேரம் போலவாம்.

"ஞாலமேவுறும் பகலொடு இரவுக்கும் நடுவாய் மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்"

ஆக எல்லாம் ஒன்றுதான். இங்கே ஆதிதான் அனாதி. அனாதிதான் ஆதி. மொத்தத்தில் எல்லாம் ஒன்றுதான். இறைவன் ஆதியும் அனாதியுமாய் இருப்பவன் என்று இதனால்தான் சொல்கின்றோம்.

அப்படி மூத்தவனை (இறைவனை) முழுதும் அறிந்தவனை (மூத்தவன் என்றால் நடந்தது நடப்பது நடக்கப் போவது எல்லாம் அறிந்தவந்தானே) பக்தியுடன் கொண்டாட வேண்டும்.

அவன் கூத்தன். ஏன் தெரியுமா? உலகமே நாடகமேடை. அந்த நாடக மேடையில் நாளும் ஒரு நாடகம். பொழுதும் ஒரு காட்சி. அத்தனையையும் ஆட்டி வைக்கின்ற கழைக் கூத்தாடிதான் இறைவன்.

அவனைக் கொண்டாடி ஞானப் பழம் திங்க வேண்டுமாம். ஞானப்பழம் என்றால் முருகன். ஞானம் என்றால் அறிவு. எல்லா அறிவும் அறிவல்ல சான்றோர்க்கு மெய்யான அறிவே அறிவு. அதென்ன மெய்யறிவு? பொய்யான அறிவு என்றும் ஒன்று உண்டோ!

கண்டிப்பாக உண்டு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அணுவின் பகுப்பு வடிவம் என்று முதலில் வந்தது. நிரூபிக்கவும் பட்டது. அதை நம்பினோம். பின்னால் அதை விடச் சரியான இன்னொரு வடிவம் வந்து நிரூபிக்கப் பட்டது. அதையும் நம்பினோம். இப்பொழுது முதலில் நம்பியது பொய்யானது. ஆனால் முதலில் நாம் அதை நம்பும் பொழுது உண்மையாகத்தான் இருந்தது. ஆனால் அதுவே இப்பொழுது பொய்யானது. இந்த அறிவினைத்தான் மெய்யறிவு என்று சொல்ல முடியாது.

அப்படியென்றால் மெய்யறிவு என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும்? எந்தக் கடையில் கிடைக்கும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் கிடைத்திருக்கிறது. புத்தருக்கு மரத்தடியில். முகமது நபிக்கு இறையருளில். அருணகிரிக்கு திருவண்ணாமலையில். அப்பருக்கு வயிற்று வலியில். ஆகத் தெரிவதென்ன? இறையருள் இன்றி மெய்யறிவும் கிட்டாது.

அதைத் தேடிச் சென்றால் கண்டிப்பாகக் கிடைக்கும். தண்ணீருக்குள் தவிக்கின்றவன் மூச்சுக்கு எப்படித் தவிப்பானோ அப்படித் தவித்தால் மெய்யறிவு கிட்டும். அதுதான் ஞானப் பழம்.

பொதுவாக பொன்னகைகளையே மணிகளையே அணிவது வழக்கம். ஆனால் உருத்திராட்சம் அணிவது சிவனடியார் வழக்கம். வெறும் கொட்டையைக் கழுத்தில் கட்டினால் சரியா என்று கேட்கலாம். ஆனால் அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கொட்டைக்குள்தான் பெரிய மரம் ஒளிந்திருக்கின்றது. அது போல இறைவன் அனைத்திலும் அடங்கியிருக்கின்றார். கண்ணுக்குத் தெரியாத காற்றை விசிறியைக் கொண்டு உணர்கின்றோம் அல்லவா. அதுபோல எங்கும் நிறைந்த இறைவனை உருத்திராட்சக் கொட்டையில் காண்பது. உண்மையிலே இறைவனை உணர்ந்தவருக்கு உருத்திராட்சமும் ஒன்றே. இலந்தைக் கொட்டையும் ஒன்றே.

இப்பொழுது புரிந்திருக்கும் பழம் தின்று கொட்டை போடுவது என்றால் என்னவென்று! இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?

அன்புடன்,
கோ.இராகவன்

29 comments:

said...

ஒரு சிறிய கொட்டைக்குள்தான் பெரிய மரம் ஒளிந்திருக்கின்றது. அது போல இறைவன் அனைத்திலும் அடங்கியிருக்கின்றார். கண்ணுக்குத் தெரியாத காற்றை விசிறியைக் கொண்டு உணர்கின்றோம் அல்லவா. அதுபோல எங்கும் நிறைந்த இறைவனை உருத்திராட்சக் கொட்டையில் காண்பது. உண்மையிலே இறைவனை உணர்ந்தவருக்கு உருத்திராட்சமும் ஒன்றே. இலந்தைக் கொட்டையும் ஒன்றே.//

அடடா. தருமி கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு இத்தனை அருமையான பதிலா? சூப்பர் ராகவன்.

ப்ளாக்லருக்கற வாக்கியம் காத்து வைக்க வேண்டியது.

said...

இராகவன்,

தருமி ஐயா கேள்வியைப் பார்த்தவுடன் எனக்குள் ஒரு விளக்கம் தோன்றியது. அப்போது அங்கே ராம்கி இட்டிருந்த பின்னூட்டம் பார்த்தேன். அதனால் எனக்குத் தோன்றிய விளக்கத்தை ஒரு பாடலாய் எழுதிவிட்டால் என்ன என்று தோன்றியது. அப்படி எழுதிய பாடல் தான் இது. நிச்சயம் தளை தட்டியிருக்கும்; அப்படி இருந்தால் என் தலை தட்டுங்கள்.

அடியேன் கிறுக்கிய ஒரு பாடலுக்கு இப்படி ஒரு தனிப்பதிவிலே ஒரு அருமையான விளக்கம், நான் பாடல் எழுதும் போதும் நினைக்காதவற்றைக் கூறும் விளக்கம், தந்து அசத்திவிட்டீர்கள்.

அடுத்து தோளிருக்க சுளைமுழுங்கி என்பதற்கு விளக்கமாய் ஒரு பதிவு போடுவீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லை, அதற்கும் அடியேன் ஒரு பாடல் எழுதவேன்டுமா?

குமரன்.

said...

// அடடா. தருமி கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு இத்தனை அருமையான பதிலா? சூப்பர் ராகவன்.//
நன்றி ஜோசப் சார். இது குமரன் கொடுத்த பதில்தானே. அதத்தான் நான் விரிச்சுச் சொல்லீருக்கேன்.

// ப்ளாக்லருக்கற வாக்கியம் காத்து வைக்க வேண்டியது. //

உண்மைதான் ஜோசப் சார்.

said...

// நிச்சயம் தளை தட்டியிருக்கும்; அப்படி இருந்தால் என் தலை தட்டுங்கள். //

குமரன். தலையைத் தட்டும் உயரம் எனக்கில்லை. :-)

// அடியேன் கிறுக்கிய ஒரு பாடலுக்கு இப்படி ஒரு தனிப்பதிவிலே ஒரு அருமையான விளக்கம், நான் பாடல் எழுதும் போதும் நினைக்காதவற்றைக் கூறும் விளக்கம், தந்து அசத்திவிட்டீர்கள். //

நீங்கள் நினைத்ததைச் சொல்லியிருக்கின்றேனா? அதைச் சொல்லவில்லையே நீங்கள். நீங்கள் சொன்னதில் எதையெல்லாம் நான் சொல்லியிருக்கிறேன்? எதையெல்லாம் விட்டிருக்கின்றேன்?

// அடுத்து தோளிருக்க சுளைமுழுங்கி என்பதற்கு விளக்கமாய் ஒரு பதிவு போடுவீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லை, அதற்கும் அடியேன் ஒரு பாடல் எழுதவேன்டுமா? //

பாட்டைப் போடுங்க. நான் விளக்கத்தப் போடுறேன்.

said...

என்னங்கப்பா இப்படி அசத்திர்ரீங்க!

நான் விதை - கொட்டை - போட்டுட்டு ஒதுங்கிட்டேன். குமரன் அத மரமா ஆக்கிட்டார்; நீங்க என்னடான்னா, மரத்தில பழமே பழுக்க வச்சிட்டீங்க.

அது சரி,கொடுத்தது பொழிப்புரை. நான் முழுமையாகப் புரிந்து கொண்டுவிட்டேனா என்று பார்க்க நான் தரும் சுருக்கம் சரிதானா என்று சொல்லுங்களேன்:

ஞானப்பழம் = இறைவன்; அதைத் 'தின்றவன்' (உணர்ந்தவன்) போட்டுக்கொள்ளும் (அணியும்) உத்திராஷக்'கொட்டை' -இதையே அப்பழமொழி குறிப்பிடுகிறது.

சரியா, டீச்சரய்யா?(வாத்தியாரய்யா?)

said...

ஆனாலும் ஜோசஃப் நீங்க இப்படி சொல்லக்கூடாது: "தருமி கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு .."
எப்படி ஒரு சூட்சுமம் வைத்துக் கேட்ட கேள்வி.
தருமி கேக்கிற கேள்வி எல்லாம் இப்படிதான் வீரியமிக்க விதைங்க; அதுல இருந்து எவ்வளவு கிளர்ந்தெழுகிறது எண்ணங்களும்,கருத்துக்களும்...என்ன இப்படி சொல்லீட்டீங்க...

said...

ஒரு ஸ்மைலி சேத்துக்கங்க...சரியா:-)

said...

ஏ பி நாகராஜன் படம் பார்க்கிற மாதிரி இருக்குது. ஆமா, இன்னொன்னு, 'அவன் சரியான பழம்' ன்கிறதுக்கு என்ன அர்த்தம்?

said...

நீங்களும் குமரனும் சரியான ஜோடிதான்.
கலக்குறீங்கப்பா :)

said...

//நீங்கள் நினைத்ததைச் சொல்லியிருக்கின்றேனா? அதைச் சொல்லவில்லையே நீங்கள். //

இராகவன். நான் நினைத்ததும் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு மேலும் சொல்லியிருக்கிறீர்கள். :-)

said...

// நான் விதை - கொட்டை - போட்டுட்டு ஒதுங்கிட்டேன். குமரன் அத மரமா ஆக்கிட்டார்; நீங்க என்னடான்னா, மரத்தில பழமே பழுக்க வச்சிட்டீங்க. //

ஹி ஹி எல்லாம் பழக்கங்க..

// ஞானப்பழம் = இறைவன்; அதைத் 'தின்றவன்' (உணர்ந்தவன்) போட்டுக்கொள்ளும் (அணியும்) உத்திராஷக்'கொட்டை' -இதையே அப்பழமொழி குறிப்பிடுகிறது.

சரியா, டீச்சரய்யா?(வாத்தியாரய்யா?) //

சரி. மிகச் சரி. மிக மிகச் சரி. :-)

said...

// ஏ பி நாகராஜன் படம் பார்க்கிற மாதிரி இருக்குது. ஆமா, இன்னொன்னு, 'அவன் சரியான பழம்' ன்கிறதுக்கு என்ன அர்த்தம்? //

நன்றி வெளிகண்டநாதர்.

அதே அர்த்தந்தான். ஞானப்பழம் என்பதே உண்மை. உண்மையிலே இறையுணர்வு பெற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆட்டம் குறைந்திருக்கும்.

ஆனால் ஆட்டமில்லாமல் அமைதியாக இருப்பவர்களை எல்லாம் பழம் என்பது இன்றைய பழக்கம்.

said...

// நீங்களும் குமரனும் சரியான ஜோடிதான்.
கலக்குறீங்கப்பா :) //

நன்றி மணியன். :-)

said...

// இராகவன். நான் நினைத்ததும் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு மேலும் சொல்லியிருக்கிறீர்கள். :-) //

நல்லவேளை குமரன். எங்க நீங்க சொல்ல வந்ததைச் சொல்லாம விட்டுட்டேனோன்னு பயந்துட்டேன். :-)

said...

அருமையான விளக்கம். இதுநாள் வரைக்கும் இந்த வாக்கியத்துக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்குணு தெரியாது. அருமை. தருமிக்கும், குமரனுக்கும், உங்களுக்கும் நன்றி.

said...

நன்றி கீதா.

said...

இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். இப்படியும் ஒரு விளக்கம் இருக்கும் என்று தெரியவில்லை. அழகான விளக்கம் தந்ததற்கு நன்றி.
ரங்கா.

said...

நன்றி ரங்கா. உங்கள் பாராட்டு தருமியில் தொடங்கி குமரனில் தவழ்ந்து எனக்கு வருகின்றது. :-)

said...

இராகவன்,

தத்துவார்த்தமாகப் பார்த்தால் இன்னுமொரு அர்த்தம் வருகிறது. உயிர் வாழ சில காரியங்களை செய்ய வேண்டியிருந்தாலும் (பழம் தின்னுதல்), மற்றவருக்கு உதவும் வகையிலும் அந்தச் செயல்களை திருத்திச் செய்வது (கொட்டை போடுதல் = விதை விதைத்தல், மரமாகி மற்றவருக்கு உதவுதல்) முக்கியம் என்பதை இது விளக்குகிறது.

ரங்கா.

said...

தருமி ஐயா இதோ உங்கள் கருத்தோடு ஒட்டிவரும் ஒரு கருத்தை ரங்கா இங்கே சொல்லியிருக்கிறார்.

said...

ராகவன்,
அசத்துறீங்க. உங்க எழுத்தைப் பலமுறை படித்திருக்கிறேன். அதில் தெரியும் பக்குவத்தை வைத்து நீங்கள் வயதில் கொஞ்சம் பெரிய ஆளாக இருப்பீர்கள் என்றெண்ணியிருந்தேன். உங்கள் புகைப்படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். என்னை விட வயது குறைந்த ஆளாய் இருப்பீர்கள் போலத் தெரிகிறது.

said...

// ராகவன்,
அசத்துறீங்க. உங்க எழுத்தைப் பலமுறை படித்திருக்கிறேன். அதில் தெரியும் பக்குவத்தை வைத்து நீங்கள் வயதில் கொஞ்சம் பெரிய ஆளாக இருப்பீர்கள் என்றெண்ணியிருந்தேன். உங்கள் புகைப்படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். என்னை விட வயது குறைந்த ஆளாய் இருப்பீர்கள் போலத் தெரிகிறது. //

நன்றி முத்து. அந்தப் போட்டோ எடுத்து மூனு மாசமாகுது. அத ஒரு பிரண்டு மொபைல் கேமராவுல எடுத்தான். அந்தக் கேமராவுல எதோ கோளாறு இருந்திருக்குமோ என்னவோ... :-))))

said...

மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்//


koththanar missing ? thalaila thattuthE niraiya

said...

இதுலேந்து ஒண்ணு நல்லா தெரியுது. நம்ம ஊர்ல பலபேரு பழம் தின்னாமலே கொட்டை போட்டிருக்காங்க.

சூப்பர் பதிவுன்னு சொல்லவும்வேணுமா?

said...

வெண்பா வாத்தியாரே, ஏன் இப்படி இங்கிலிஷுல எல்லாம் எழுதறீங்க? தமிழில் எழுதினா என்ன?

சரி போகட்டும். குமரன் என்ன வெண்பா எழுதி இருக்கேன்னா சொன்னாரு.தளை தட்டறது, எதுகை, மோனை எல்லாம் பாக்கறதுக்கு.

அது மட்டுமில்லாம ஜிராவே "தலையைத் தட்டும் உயரம் எனக்கில்லை. " அப்படின்னு சொன்ன பின்னாடி நான் என்னதைச் சொல்லறது? சொன்னாலும் அதிகப்பிரசங்கித்தனமா இருக்கும். அதுனால நான் ஜூட்.

said...

ஆதியை அறிந்தாரை அந்தம் உணர்ந்தாரை
நீதி தெரிந்தாரை நல்லடியாரை - ஜோதியைக்
கொட்டை ஒன்றாய்க் கழுத்திற் கொண்டாரை
கொட்டை போட்டவரென்று கொள்க!

இது சரியாக வருகிறதா -மிஸ்டர் ஜீ.ரா?

said...

// Jeeves said...
மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்//

koththanar missing ? thalaila thattuthE niraiya //

தட்டுதா ஜீவ்ஸ்...இப்ப என்ன செய்யலாம். எல்லாம் ஒங்களப் போல தெரிஞ்சவங்க...அறிஞ்சவங்க வந்து சொன்னா...திருத்திக்கிறோம்.

// இலவசக்கொத்தனார் said...
வெண்பா வாத்தியாரே, ஏன் இப்படி இங்கிலிஷுல எல்லாம் எழுதறீங்க? தமிழில் எழுதினா என்ன? //

கொத்ஸ்..நான் நெனைக்கிறேன். அவர் white-poems எழுதப் பழகுறார்னு. :-)

// சரி போகட்டும். குமரன் என்ன வெண்பா எழுதி இருக்கேன்னா சொன்னாரு.தளை தட்டறது, எதுகை, மோனை எல்லாம் பாக்கறதுக்கு. //

ஹி ஹி ஆமாம். (அப்பாடி தப்பிச்சோம்)

// அது மட்டுமில்லாம ஜிராவே "தலையைத் தட்டும் உயரம் எனக்கில்லை. " அப்படின்னு சொன்ன பின்னாடி நான் என்னதைச் சொல்லறது? சொன்னாலும் அதிகப்பிரசங்கித்தனமா இருக்கும். அதுனால நான் ஜூட். //

ஆகா...கொத்ஸ்....நீங்களா இப்படிச் சொல்வது? வெண்பா எழுதினா அது நன்பா என நண்பா என்றழைத்துச் சொல்வார் பதிவுலகில். ஆசிரியப்பா எழுதினால் மற்றோர் எழுதினால் அதைப் பார்த்து ஆ(வெனச்)சிரியப்பா என்கிறார்கள். நீங்கள் இப்படிச் சொல்லலாமா?

said...

// சிறில் அலெக்ஸ் said...
இதுலேந்து ஒண்ணு நல்லா தெரியுது. நம்ம ஊர்ல பலபேரு பழம் தின்னாமலே கொட்டை போட்டிருக்காங்க. //

அது மட்டுமா...ரொம்பப் பேரு பழத்தோட கொட்டையையும் தின்னிருக்காங்க.

// சூப்பர் பதிவுன்னு சொல்லவும்வேணுமா? //

நன்றி சிறில்...நமக்குத் தெரிஞ்சது தமிழ். அத வெச்சு...அப்படி இப்படி...ஆடுறா ராமா...ஆடுறா ராமா...ஆடுறா ராமா....

said...

// SP.VR.சுப்பையா said...
ஆதியை அறிந்தாரை அந்தம் உணர்ந்தாரை
நீதி தெரிந்தாரை நல்லடியாரை - ஜோதியைக்
கொட்டை ஒன்றாய்க் கழுத்திற் கொண்டாரை
கொட்டை போட்டவரென்று கொள்க!

இது சரியாக வருகிறதா -மிஸ்டர் ஜீ.ரா? //

பொருள் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது. நாவசைச் சீர் வருகிறது என்றார் கொத்தனார். நாவசையாச் சீருமுண்டு...அதை எழுதவமுண்டோ என்று முடிவு செய்து பொருள் தட்டா உம்பாவை நம்பா என்று நம்பிச் சொல்கிறோம். :-)