Monday, June 18, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 8

முன்கதைச் சுருக்கம்

ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற...நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.

இப்பொழுது பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வந்த பொன்னுச்சாமியைப் பார்ப்போமா?

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

இம்சை அரசியின் ஞாபகம் - 5

வைகை ராமின் ஞாபகம் - 6

தேவின் ஞாபகம் - 7

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 8

"ஐயா பெரியவரே! ஏதாச்சும் ஜோடா குடிக்கிறீகளா? ரொம்ப நேரமா காத்திருக்காப்புல இருக்கு. வேண்டப்பட்டவக யாரும் வர்ராங்களா?"

பொன்னுச்சாமி நிமிர்ந்து பார்த்தார். "இல்லப்பா" என்று வாயைத் திறந்து சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி மறுத்தார்.

"சரிய்யா...வெயில்ல ஏன் கருவாடாக் காயுறீக? இங்க பெஞ்சுல வந்து உக்காருங்க."

இந்த முறை சோமு சொன்னதைப் பொன்னுச்சாமி கேட்டுக் கொண்டார். மெள்ளப் போய் பெஞ்சில் உக்கார்ந்தார். வெற்றிலைக் குதப்பலைக் கம்போரமாகத் துப்பி விட்டு, "தம்பி ஒரு ஜோடா குடு" என்று கேட்டார்.

தான் கேட்கும் போது மறுத்து விட்டு இப்பொழுது பெரியவர் கேட்கிறாரே என்று சோமு வியந்தாலும் பேசாமல் சோடாவை உடைத்துக் கொடுத்தான். முதலில் சோடாவால் வாயைக் கொப்புளித்து விட்டு...மிச்சத்தை மடமடவெனக் குடித்தார்.

"எம்புட்டு?" என்று ஒரு ரூவாய்க் காசை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு "சரியாப் போச்சு" என்று சொல்லி பெட்டியில் போட்டுக் கொண்டான் சோமு.

"ரொம்ப தேரமா இருக்கீக. யாரு வர்ரது? சொந்தக்காரவுகளா?" கேட்கத் தொடங்கினால் நிப்பாட்ட மாட்டான் சோமு.

"ஆமாந்தம்பி. நம்ம மருமகப் பிள்ளை வர்ராரு. வெளிநாட்டுல இருந்து.வர்ராரு. அதான்." அவரது குரலில் மகிழ்ச்சியை விட எதிர்பார்ப்புதான் இருந்தது.

"அப்ப ஒங்க பொண்ணு வரலையா?"

ஒன்றும் பேசாமல் வெறும் முகத்தோடு சோமுவைப் பார்த்தார். திரும்பவும் சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டார். அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் வந்து போயின. பலர் இறங்கிப் போயினர். ஏறிப் போயினர். ஆனால் பொன்னுச்சாமி எதிர்பார்த்தவர் வரவில்லை. வந்தாலும் அவரால் கண்டுபிடிக்க முடியாதுதான். கடித உறைக்குள் இருந்த படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தார். காவேரிதான்....குழந்தையாகக் குமரியாகப் பார்த்த மகளை பெண்ணாகப் பார்த்து பூரித்தார். கையில் குழந்தை. அடுத்து நிற்பதுதான் மாப்பிள்ளை. நல்ல வாட்டசாட்டம். ஆனா பார்த்த ஞாபகம் இல்லையே. திரும்பவும் சாலையைப் பார்த்தார்.

அவருடைய காத்திருப்பு வீணாகவில்லை. அவர் எதிர்பார்த்த மருமகன் பேருந்தில் வரவில்லை. காரில் வந்தான். அடையாளம் கண்டுபிடிக்கப் பெரியவர் சிரமப்படவில்லை. அவர் உட்கார்ந்திருந்த கடைக்குப் பக்கத்தில் ஒரு கட்சிக் கொடி. அந்தக் கொடிக்கம்பத்துக்குப் பக்கத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவர்தான் படத்தில் இருந்தவர் என்று உடனே தெரிந்து கொண்டார்.

உடனே படக்கென்று எழுந்தார். லேசான தள்ளமாட்டம். வந்தவரை நோக்கி நடந்தார். ஒருவரையொருவர் எதிர்பார்த்தவர்கள்தானே. வந்தவர் பெரியவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். "மாமா. நாந்தான் வினோத். உங்க மருமகன். நல்லாயிருக்கீங்களா?"

என்னவோ தெரியவில்லை. பெரியவர் குழைந்து போயிருந்தார். வினோத்தை உற்று உற்றுப் பார்த்தார். குபுக்கென்று ஏதோ ஒன்று பொங்கிப் பெருகி கண்ணில் வழிந்தது. ஓ! அன்பு. காவேரி படிக்கப் போன பிறகு தனிமையிலேயே கழிந்தது. ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. காய்ச்சல் வந்து காய்ந்த பொழுதுகளில் கூட கக்கூசுக்குத் தனியாகப் போகும் அவல நிலை. அப்படியெல்லாம் பட்டவருக்குத் திடீரென்று உறவுகள் வருகின்றன.

"நல்லா இருக்கேய்யா! நீங்க சவுரியந்தான? காவேரியும் பிள்ளையும் வரலையா?"

பொன்னுச்சாமியின் கைகளைப் பற்றினான் வினோத். "வந்திருக்காங்க மாமா. அவங்க கிட்ட கூட்டீட்டுப் போகத்தான் இப்ப வந்திருக்கேன். வாங்க. கார்ல ஏறுங்க."

கடவுள் மட்டுமல்ல தயக்கம் எங்கேயிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. அந்தத் தயக்கம் பொன்னுச்சாமியை கொஞ்சம் தடுமாற வைத்தது. இருந்தாலும் கையைப் பிடித்து வினோத் அழைக்கும் பொழுது...அவரால் மறுக்க முடியவில்லை. மகளையும் பேத்தியையும் பார்க்கக் காரில் ஏறினார்.

தொடரும்....

=====================================================================

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்ததாக ஒன்பதாவது பகுதியை எழுத சிறில் அலெக்சை அழைக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

14 comments:

said...

அண்ணாத்த!!!
கலக்குறீங்க போங்க!!!
வசனம், நடை, கதையை நீங்க கொண்டு போயிருக்கற விதம் அத்தனையும் அருமை!!!
கைய குடுங்க!!
கதை நல்லாவே சூடு பிடிச்சிருக்கு!! :-D

said...

wow....simple n sweet story...and what a turning point!

said...

// CVR said...
அண்ணாத்த!!!
கலக்குறீங்க போங்க!!!
வசனம், நடை, கதையை நீங்க கொண்டு போயிருக்கற விதம் அத்தனையும் அருமை!!!
கைய குடுங்க!!
கதை நல்லாவே சூடு பிடிச்சிருக்கு!! :-D //

:) சரி...இதுக்கு முன்னாடி கதையை எழுதுனவங்க வந்து படிச்சிட்டுக் கருத்து சொல்லட்டும். ஏன்னா...அவங்க என்ன எதிர்பார்த்தாங்களோ...என்ன இருக்கோ....நீ சொல்லீட்ட. மத்தவங்களுக்கும் காத்திருப்போம்.

said...

// துர்கா|†hµrgåh said...
wow....simple n sweet story...and what a turning point! //

வாம்மா துர்கா...எப்படி இருக்க? நமக்கு முன்னாடி எழுதுனவங்க எல்லாருமே பெரிய ஆட்கள். அதான் கொஞ்சம் பாத்துப் பதவிசா எழுத வேண்டியிருந்தது.

said...

தெய்வமே, வலையுலக எழுத்தாள சிகரமே.... கள்ளியிலும் பால் கண்ட இமயமே...

இந்த பகுதி கதை சூப்பர்.. :)

said...

//வாம்மா துர்கா...எப்படி இருக்க? நமக்கு முன்னாடி எழுதுனவங்க எல்லாருமே பெரிய ஆட்கள். அதான் கொஞ்சம் பாத்துப் பதவிசா எழுத வேண்டியிருந்தது.//


யப்பா மக்களே இதுக்கு பேரு தாய்யா... தன்னடக்கம்.....

யாருக்காவது தன்னடக்கமின்னா என்னான்னு டவுட் இருந்தா இதை படிச்சி தெரிஞ்சுக்கோங்க.. :)

said...

// இராம் said...
தெய்வமே, வலையுலக எழுத்தாள சிகரமே.... கள்ளியிலும் பால் கண்ட இமயமே...

இந்த பகுதி கதை சூப்பர்.. :) //

யப்பா ராமு..இப்பிடியெல்லாம் சொல்லலாமோ! சங்கத்தாராகிய உங்கள் வாழ்த்து மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. :)

said...

// இராம் said...
//வாம்மா துர்கா...எப்படி இருக்க? நமக்கு முன்னாடி எழுதுனவங்க எல்லாருமே பெரிய ஆட்கள். அதான் கொஞ்சம் பாத்துப் பதவிசா எழுத வேண்டியிருந்தது.//


யப்பா மக்களே இதுக்கு பேரு தாய்யா... தன்னடக்கம்.....

யாருக்காவது தன்னடக்கமின்னா என்னான்னு டவுட் இருந்தா இதை படிச்சி தெரிஞ்சுக்கோங்க.. :) //

போட்டுத் தாக்கேய்..போட்டுத் தாக்கேய்...வாங்கிக்கிறேன். வலிக்கவேயில்லை. :)

said...

//யாருக்காவது தன்னடக்கமின்னா என்னான்னு டவுட் இருந்தா இதை படிச்சி தெரிஞ்சுக்கோங்க.. :)//
உண்மைதான் மக்கா!!
நானும் இங்கிட்டு படிச்சி தான் கத்துக்கிட்டேன்!!! :-D

said...

//வாம்மா துர்கா...எப்படி இருக்க? நமக்கு முன்னாடி எழுதுனவங்க எல்லாருமே பெரிய ஆட்கள். அதான் கொஞ்சம் பாத்துப் பதவிசா எழுத வேண்டியிருந்தது//

நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.ஹிஹி நீங்களும் ஒரு பெரிய 'தல' தானே அண்ணா :D//
போட்டுத் தாக்கேய்..போட்டுத் தாக்கேய்...வாங்கிக்கிறேன். வலிக்கவேயில்லை. :) //

hehe...ராகவன் புராணம் பாட நானும் வரவா?இராம் அண்ணா சொன்னது உண்மைதான்...
"நிறைகுடம் தளும்பாதுன்னு" சும்மாவா சொன்னாங்க :D
சிவிஆர்&ராம் அண்ணா நான் சொன்னது சரியா? :D

said...

உங்களை எட்டு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். மேல் விபரங்களுக்கு இங்கு வந்து பார்க்கவும்.

said...

தல கலக்கிப்போட்டீங்க.. ஒவ்வொரு பகுதிலையும் திடீர் திடீர் திருப்பங்களா இருக்குது... அட்டகாசம்... சிறில் எப்படி தாக்குறார்னு பாப்போம் ;)))

said...

// CVR said...
//யாருக்காவது தன்னடக்கமின்னா என்னான்னு டவுட் இருந்தா இதை படிச்சி தெரிஞ்சுக்கோங்க.. :)//
உண்மைதான் மக்கா!!
நானும் இங்கிட்டு படிச்சி தான் கத்துக்கிட்டேன்!!! :-D //

இதெல்லாம் ஒனக்கு டூமச்சா தெரியலையா? ஒரு அப்பாவி கெடச்சா..இப்பிடியா தர்மகும்மு கும்முறது :-(((((((

// துர்கா|†hµrgåh said...
hehe...ராகவன் புராணம் பாட நானும் வரவா?இராம் அண்ணா சொன்னது உண்மைதான்...
"நிறைகுடம் தளும்பாதுன்னு" சும்மாவா சொன்னாங்க :D
சிவிஆர்&ராம் அண்ணா நான் சொன்னது சரியா? :D //

அமெரிக்க அரவிந்தசாமிக்கு மலேசியா மாரியாத்தா கூட்டா! மொத்தத்துல கொடமாக்கியாச்சு....அதோட கழுத்துல கயித்தக் கட்டி கெணத்துல எறக்கீறாதீங்க மக்களே!!!!

said...

// இலவசக்கொத்தனார் said...
உங்களை எட்டு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். மேல் விபரங்களுக்கு இங்கு வந்து பார்க்கவும். //

வந்துருவமய்யா. கண்டிப்பா. நீங்க கூப்டீகள்ள. வராம இருந்துருவமா? :)

// ஜி said...
தல கலக்கிப்போட்டீங்க.. ஒவ்வொரு பகுதிலையும் திடீர் திடீர் திருப்பங்களா இருக்குது... அட்டகாசம்... சிறில் எப்படி தாக்குறார்னு பாப்போம் ;))) //

ஆமா ஜி. நானும் சிறிலோட பதிவுக்குக் காத்திருக்கேன். அவரு என்ன தாக்கு தாக்கப் போறாருன்னே தெரியலையே.