ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.
ஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே! இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான்.
"எக்ஸ்கியூஸ் மீ" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.
பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.
அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். "வாட் இஸ் யுவர் நேம்?" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.
"பேர் சொல்லும்மா." மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.
"எம் பேர் புண்ணிம்மா" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.
"அவ பேர் பூர்ணிமா." மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.
"பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்." தத்துவமாக நினைத்தது மனது.
இரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "குழந்தைதானே. இருக்கட்டும்."
"சாரி." அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.
"பூர்ணிமா! சாக்லேட் சாப்பிடுவையா? மாமா தரட்டுமா?" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். "வேண்டாம்" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.
அதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.
அதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் "நான்வெஜ்" கேட்டார். நானும் "நான்வெஜ்" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.
உணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.
அவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.
அந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை ·போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த ·போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் ·போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.
நான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க."
என்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற்குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.
இறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.
யாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். "தாத்தா" என்று சைகை காட்டினாள். "போய்ட்டு வர்ரோம்" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.
காரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.
"ஏன் ரகு? நமக்கு மட்டும் இப்படி? டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான்? நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா? நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா? அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு?" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.
அன்புடன்,
கோ.இராகவன்
நண்பர்களே, இந்தக் கதை ஒரு மீள்பதிவு. தோழர் தேவ் கேட்டுக்கொண்டதற்கிணங்க. :) படித்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Thursday, December 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
கதை அருமையாக உள்ளது ஜி.ரா.வாழ்த்துக்கள்
அட நான் கூட உங்களோட அனுபவம்னு படிச்சிட்டு இருந்தேன் ...
// செல்வன் said...
கதை அருமையாக உள்ளது ஜி.ரா.வாழ்த்துக்கள் //
வாழ்த்துல இருந்தாலும் கள் பழக்கமில்லையே செல்வன் :) வாழ்த்துக்கள்ளைச் சொன்னேன் ;)
படிச்சுக் கருத்து சொன்னதுக்கு நன்றிங்க.
// யாத்திரீகன் said...
அட நான் கூட உங்களோட அனுபவம்னு படிச்சிட்டு இருந்தேன் ... //
இது கதை யாத்ரீகன். அதான் கதைன்னு கடைசீல சொல்லியாச்சே
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். நடிகர் பிருத்விராஜ் (ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்புவோடு சண்டை போட்டாரே) தன் மகனுடன் (ஆட்டிசம் நோயால் பாதிக்கப் பட்டிருந்த சிறுவன்) சென்னையிலிருந்து மும்பை செல்ல ப்ளைட்டில் போக நேர்ந்த போது, விமான அதிகாரிகள் அந்த பையனை ப்ளைட்டில் ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டனர். அந்த பையனின் நிலையை அவர்கள் 'மன நிலை சரியில்லாத' நிலையோடு குழப்பிக் கொண்டு மறுத்து விட்டனர். அதை அவர் மொபைல்வீடியோவில் படம் பிடித்து இணைய பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்.
அப்பொழுது அவர் சொன்னது 'எனது பையனை பார்த்து கொள்ளவாவது நான் நிறைய சம்பாதிக்க வேண்டும்'.
உங்கள் கதையை படிக்கும் பொழுது அந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
ஆனால்... ஸ்கேனில் ஆட்டிசம் எல்லாமா கண்டு பிடிக்க முடியும்?
//பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர்.//
தேய்மானம் இல்லாத நிலவென்று ஏதும் இல்லையே. பௌர்ணமி - சுழலில் ஒரு நிலைதானே தவிர, அதுவே எப்போதும் நிலை(யானது) இல்லையே...
எத்தனை தந்தையோ, எத்தனை அன்னையோ, எத்தனை பிறவி வருமே என பிறவிச் சுழலில் வருந்திடுகையில் - நிலையில்லாதது எப்படி பூர்ணிமா ஆக இயலும் எனக் கேள்வி எழுகிறது.
அதற்கான விடையை யோசித்தால், சந்திரன் எப்போதுமே பூர்ணிமாவாகத் தான் இருக்கிறான். நம் கண்களுக்குத்தான் பிறைச் சந்திரனாகவும், வளர் பிறையாகவும், முழுமதியாகவும், தேய் பிறையாகவும் தெரிகிறது அல்லவா... வெவ்வேறு நிலைகளில் தெரிவது அவன் பிழையும் இல்லை. நம் இருக்கும் இடத்தின் நிலையின் பிழை அல்லவா.
நிலையில்லா நம் இந்த நிலையில் இருந்து வெளிப்பட்டு நிலையான பூர்ணிமாவைக் கண்டு தெளிவதே நிலைப்படும் நிலை என நினைக்கிறேன்.
இப்படி எல்லாம் பிதற்ற வைத்த 'கதை'க்கும், அதை மீள்பதிவிடச் சொன்ன தேவ்வுக்கும் நன்றி! வேறு என்ன சொல்வது ;-)
ganamaana kadhai.. azhamaana kadhai.. edhum solla thoanala anna..
இராகவன்,
உங்கள் பதிவின் கடைசி வரிகளை வாசிக்கும் வரை இது உங்களின் சொந்தக் கதை[அனுபவம்] என நினைத்தேன்.
மிகவும் இயல்பாகவும், சுவாரசியமாகவும் சொல்லியுள்ளீர்கள்.
நல்ல கதை.
மீள்பதிவா ஜிரா? முன்னமே மகரந்தத்தில் படிச்சது போல் இருக்கு.. பல நாட்களுக்கு முன்னால்..
// Sridhar Venkat said...
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். நடிகர் பிருத்விராஜ் (ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்புவோடு சண்டை போட்டாரே) தன் மகனுடன் (ஆட்டிசம் நோயால் பாதிக்கப் பட்டிருந்த சிறுவன்) சென்னையிலிருந்து மும்பை செல்ல ப்ளைட்டில் போக நேர்ந்த போது, விமான அதிகாரிகள் அந்த பையனை ப்ளைட்டில் ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டனர். அந்த பையனின் நிலையை அவர்கள் 'மன நிலை சரியில்லாத' நிலையோடு குழப்பிக் கொண்டு மறுத்து விட்டனர். அதை அவர் மொபைல்வீடியோவில் படம் பிடித்து இணைய பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்.
அப்பொழுது அவர் சொன்னது 'எனது பையனை பார்த்து கொள்ளவாவது நான் நிறைய சம்பாதிக்க வேண்டும்'. //
ஆமாம் ஸ்ரீதர். நானும் அந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். கொடுமையாக இருந்தது. மனநோய் உள்ளவர்கள் விமானம் ஏற முடியாதா? என்ன கொடுமை இது!!!!!
// உங்கள் கதையை படிக்கும் பொழுது அந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
ஆனால்... ஸ்கேனில் ஆட்டிசம் எல்லாமா கண்டு பிடிக்க முடியும்? //
நான் சொல்ல வந்தது ஆட்டிசம் இல்லை. டிரவுன் சிண்ட்ரோம் என்று சொல்வார்கள். இது மூளைவளர்ச்சிக் குறைவு பிறப்பிலேயே வருவது.
மனதை கணக்க வைத்தது இந்த கதை,
எழுத்து நடை அருமை,
கதையினை காட்ச்சிகளாக கண் முன் கொண்டுவந்தது ஒவ்வொரு வரிகளும், பாராட்டுக்கள் ராகவன்!
மனசை பாரமாக்கிடுச்சு.
அருமையான கதை
மனதை நெகிழ வைத்த கதை..பூர்ணிமாவைப் பக்கத்தில் அமர்ந்து நானும் பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது...
// Dreamzz said...
ganamaana kadhai.. azhamaana kadhai.. edhum solla thoanala anna..//
:) படிச்சிட்டு இதச் சொன்னதே போதும்
// வெற்றி said...
இராகவன்,
உங்கள் பதிவின் கடைசி வரிகளை வாசிக்கும் வரை இது உங்களின் சொந்தக் கதை[அனுபவம்] என நினைத்தேன்.
மிகவும் இயல்பாகவும், சுவாரசியமாகவும் சொல்லியுள்ளீர்கள்.
நல்ல கதை. //
நன்றி வெற்றி. இது கதைதான்.
// பொன்ஸ்~~Poorna said...
மீள்பதிவா ஜிரா? முன்னமே மகரந்தத்தில் படிச்சது போல் இருக்கு.. பல நாட்களுக்கு முன்னால்..//
ஆமாங்க. நாட்கள் இல்ல..மாதங்கள் இல்ல..வருடங்கள் ஆச்சுன்னு நெனைக்கிறேன். மீள்பதிவுதான். அதத்தான் பதிவின் கடைசியில சொல்லீருக்கேன்.
கதெ தும்ப சென்னாகிதே சார்....
அருமையான கதை....
அருமையான எழுத்து நடை...
உங்களோடு பயணித்த ஒரு அனுபவம்...
வாழ்த்துக்கள்... (கள்?)
Nice story... :)
Post a Comment