Sunday, November 20, 2005

என்னைத் தெரியுமா!

என்னைத் தெரியுமா!

அன்பு நண்பர்களே, என்னைத் தெரியுமா? என்னுடைய பெயர் இராகவன் என்பதைத் தவிர, இந்த வார தமிழ்மண நட்சத்திரம் என்பதைத் தவிர. தெரியாவிட்டால் உங்களுக்கு என்னை முறையாக அறிமுகம் செய்து கொள்ள வேண்டியது கடமையாகிறது.

உலகத்திலேயே மிகவும் புண்ணியப்பட்ட பூமி என்று என்னைக் கேட்டால் தூத்துக்குடி என்று சொல்வேன். நான் பிறந்த ஊராயிற்றே. எனது ஆரம்பகால நினைவுகளை முழுமையாகக் கொண்ட ஊராயிற்றே. ஆகையால் தூத்துக்குடியை நினைக்கும் பொழுது மட்டும் ஒரு ரெட்டிப்பு சந்தோஷம்.

அப்புறம் மதுரை, கரூர், கோவில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று பல சுற்றுகள் சுற்றியாகி விட்டது. இப்பொழுது இருப்பு பெங்களூரில். பொறுப்பு மென்பொருளில். ஆகையால் இப்பொழுது நான் பெங்களூரியன். ஆனால் ஆழத்தில் தோண்டித் தூர் வாரிப் பார்த்தால் ஒரு தூத்துக்குடிச் சின்னப் பையன் உட்கார்ந்திருப்பான். மற்ற ஊர்களில் எல்லாம் இல்லாத ஒரு ஒட்டுதல் தூத்துக்குடிக்கு மட்டும்.

எழுத்து என்பது எனக்கு எப்படிப் பழக்கம்? யோசித்துப் பார்க்கிறேன். எனக்குச் சின்ன வயதில் படிக்கும் வழக்கம் நிறைய உண்டு. நடுத்தரக் குடும்பத்தில் புத்தகங்களை வாங்கிப் படிப்பது என்பது கனவாக இருந்த அளவுக்கு நடுத்தரக் குடும்பம்.

ஆகையால் லெண்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வரும். வீட்டில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களே பெரும்பாலும் வரும். எனக்கு? அதற்கும் ஒரு வழியை ஆண்டவன் காட்டத்தான் செய்தார். என்னுடைய நண்பன் ராஜேஷின் தந்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். அவர்கள் வீட்டில் அம்புலிமாமா, ரத்னபாலா, பொம்மை, பூந்தளிர் ஆகிய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கும். ராணி காமிக்ஸ் புத்தகங்களும் கிடைக்கும். அங்குதான் தவமாய்த் தவமிருப்பேன்.

அதே நேரத்தில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களையும் படிக்காமல் விட்டதில்லை. அவைகளையும் புரட்டாமல் விட மாட்டேன். படிப்பது என்பது அவ்வளவு சுகம். படைப்பது?

அப்படியாக நான் படிக்கையில் எழுதும் ஆர்வமும் வந்தது. மூன்றாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அப்பொழுது எழுதத் தொடங்கிய கதை ராமாயணம். ஒரு ஊரில் ஒரு தந்தை. அவருக்கு நான்கு மகன்கள் என்று போகும். தப்பும் தவறுமாக ஒரு பக்கம் எழுதியிருப்பேன். ஆனால் ஊக்கமில்லாமையால் அது தொடராமல் போனது.

பிறகு அப்படி இப்படி என்று எப்படியோ அங்கும் இங்குமாய் எழுதி இப்பொழுது தமிழ்மணத்திற்கும் வந்தாயிற்று. வந்ததோடு இல்லாமல் நட்சத்திரம் என்ற புதிய பட்டம் கிடைத்த கௌரவம். வரும்பொழுது வாங்கிக் கொள்வது சரிதானே.

இத்தனைக்கும் யார் காரணம்? யோசித்துப் பார்த்தால் பலர் நினைவிற்கு வருகின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில். அத்தனையையும் பயன்படுத்திக் கொண்ட என்னுடைய ஆழ்மன ஆசையையும் சொல்லியே ஆகவேண்டுமல்லவா.

சின்ன வயதில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள். ஏன் தெரியுமா? என் வயதொத்தவர்களும் குறைந்தவர்களும் என்னைச் சுற்றித்தான் உட்கார்ந்திருப்பார்கள். வாய்க்கு வந்ததைச் சொல்வேன். கருத்தும் இருக்காது. திருத்தும் இருக்காது. ஆனாலும் கதை. காலில்லாக் கதை. அவர்களும் ஆவென வாய் திறந்து கேட்பார்கள். அதனால் வீட்டில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள்.

அதாவது கதை சொல்லும் ஆர்வம். நாலு பேருக்கு நாம் சொல்லி அவர்கள் விரும்பிக் கேட்டால் ஒரு சந்தோஷம். அந்த வயதில் நான் சொன்ன கதைகள் எனக்கு இந்த வயதில் நினைவில்லை. ஆனால் கதை சொன்னது நினைவிருக்கிறது.

இந்த கதை சொல்லும் அடையாளம் வயது வளர வளர குறைந்து போனது. படிப்பும் ஒரு காரணம். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது நான் எதையாவது எழுதிப் படித்தால், அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடமா அல்லது தமிழில் எழுதப்படும் கதையா என்று என் தந்தை ஐயப்பட்டு எட்டிப் பார்த்த நிகழ்ச்சிகளும் உண்டு.

ஆனால் முழுமையான எழுத்துப் பயிற்சி இல்லை. தினமும் ஒரு கவிதை என்று ஒரு குழு இருந்தது. அங்கு சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். இப்பொழுது அந்தக் குழு இல்லை என்பது வருத்தமான விஷயம். அந்தக் குழுவினர் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். இங்கிருக்கும் தமிழறிஞர்களையும் அழைத்திருந்தார்கள். அதில் ஒரு பட்டிமன்றம். அதற்கு என்னை நடுவராக உட்கார வைத்து விட்டார்கள். எப்படியோ நடத்தி முடித்து கொஞ்சம் பாராட்டுகளையும் பெற்றேன்.

மறுபடியும் ஒரு பட்டி மன்றம். மகேந்திரன் என்ற நண்பர் வழியாக. பெங்களூர் டவுன் ஹாலில் நடந்தது. இந்த முறை அணித்தலைவர் பதவி. பாரதியின் படைப்புகளில் விஞ்சியது நாட்டுக்காகவா? வீட்டுக்காகவா? எனக்கு வீடு பேறு கிடைத்தது. பேசும் பொழுது மற்றவர்களை விட கைதட்டல் நிறைய கிடைத்தது. ஆனால் வெற்றி அடுத்த அணிக்கு. அதனால் என்ன. செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்தோமே என்ற மகிழ்ச்சி.

மறுபடியும் கொஞ்சம் தொய்வு. நான் எழுதும் கவிதைகள் செய்யுள் போல இருப்பதாக என்னுடைய நண்பர் பிரதீப் கருத்துக் கூறினார். அவர் சொன்னதிலும் காரணமில்லாமல் இல்லை. அப்பொழுது ஆசிரியப்பாவைக் கொஞ்சம் பழகத் தொடங்கியிருந்தேன்.

ஃபோரம் ஹப்பில் கொஞ்சம் கதைகள் எழுதினேன். வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்திருந்த நேரம். விக்கிரமாதித்தன் கதையையும் வீரப்பன் கதையையும் குழப்பி ஒரு நகைச்சுவைத் தொடர்கதை எழுதினேன். அது கொஞ்சம் நன்றாக ரசிக்கப்பட்டது. ஒன்றிரண்டு சிறு கதைகளும் எழுதினேன். பக்குவமில்லாத எழுத்து நடையில் (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு நீங்க சொல்றது புரியுது. ஹி ஹி)

மறுபடியும் கொஞ்சம் தொய்வு. இந்த முறை வேலையால். கிட்டத்தட்ட ஒரு வருடம். பிறகு தமிழ் மன்றத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். பிறகு முத்தமிழ் மன்றத்தின் அறிமுகமும் கிடைத்தது. கொஞ்சம் எழுதத் தொடங்கினேன். நடை கொஞ்சம் கை வந்தது. அதே நேரத்தில் மீண்டும் ஃபோரம் ஹப். அங்கு கவிதைகள் பகுதிக்கு நடத்துனராகப் பதவி. எனக்கென்ன தெரியும் கவிதையைப் பத்தி என்று சொன்னாலும் கேட்கவில்லை. நம்பிக்கையோடு கொடுத்ததை நம்பிக் கையோடு பெற்று முடிந்தவரை சிறப்பாகச் செய்து வருகிறேன்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து கைவந்து கொண்டிருந்த வேளையில்தான் தமிழ் மணத்தின் அறிமுகம். ஒரு பெரிய வட்டத்தில் கலந்த உணர்வு. இங்கும் நல்ல நண்பர்கள். நல்ல பதிவுகள். படிக்க நிறைய அனுபவங்களும் விஷயங்களும் கிடைக்கும் இடம். அருவியிலிருந்து நேரே வாயைப் பிளந்து தண்ணீர் குடிக்கும் நிலை. எவ்வளவு தண்ணீர்! ச்சேசே...ஒரே ஒரு வாயைப் படைத்தானே பிரம்மன் என்று நினைக்கும் நிலை. அவ்வளவு விஷயக் கடல். அதை விட தாங்கள் நினைப்பதைச் சொல்ல மக்களுக்கு ஒரு இடம்.

அப்படிப்பட்ட இனிய தமிழ் மணத்தில் இப்பொழுது எழுதி உங்களுக்கெல்லாம் பதித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நிறைய. இறைவன் அருளால் அனைத்தும் நடக்கும்.

ஆகையால் முதலில் அனைவருக்கும், வாய்ப்பளித்த மதி கந்தசாமி மற்றும் காசி ஆறுமுகத்திற்கும் தமிழ் மணத்தின் நட்சத்திரமாக நன்றி சொல்லி விட்டு இந்த ஒருவாரப் பயணத்தைத் துவக்குகிறேன். வழக்கம் போல உங்களோடு கை கோர்த்துக் கொண்டு.

அன்புடன்,
கோ.இராகவன்

46 comments:

said...

neenga natcharima? vaalthukal.Thamizmanam browser iyangavillai pola iruku.

said...

அன்புள்ள ராகவன்,

உங்களுக்குத் தெரியாது உங்களுக்குள் உள்ள எழுத்தாளரை. ஆனால் எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆரம்பகால போரம்ஹப் கதைகள்கூடப் படித்திருக்கிறேன். எழுத்து உங்களுக்கு மிக நன்றாக வருகிறது.

தொடர்ந்து எழுதுங்கள். இவ்வார நட்சத்ரம் ஆனதற்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.

said...

நன்றி சிநேகிதி. ஆமாம். இந்த வார நட்சத்திரமாக என்னைத் தேர்வு செய்திருக்கின்றார்கள். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

said...

// தொடர்ந்து எழுதுங்கள். இவ்வார நட்சத்ரம் ஆனதற்கு எனது அன்பு வாழ்த்துக்கள். //

நன்றி அண்ணா. வழக்கம் போல உங்கள் பாராட்டுகளும் ஊக்கங்களும் என்னை மேலும் உற்சாகப் படுத்துகின்றன. இன்னும் சிறப்பாகச் செய்து உங்கள் ஊக்கத்திற்கான விளைவினைக் காட்ட முயல்கிறேன்.

said...

வாங்க ராகவன் ! நட்சத்திரம் ஜொலிக்க வாழ்த்துக்கள்!

said...

ராகவன்... நம்ப ஊருக்காரக இன்னொருத்தர் நட்சத்திராமாயிருக்கீங்க... வாழ்த்துக்கள். ஜமாய்ங்க.

said...

தூத்துக்குடி முத்தே வருக.

எனக்கு நிறையப் புத்தகங்கள் வாசிக்க வாய்ப்புக் கிடைத்த ஊர்களில் ஒன்று. என் பதின்பருவ ஆரம்பங்கள் தூத்துக்குடியில் தான். மில்லர்புரம் பு.ம.பள்ளியில்... வஉசி கல்லூரிக்கு எதிர்ப்புறம்...

நினைவுகளை மீட்டி விட்டீர்கள். நன்றி. (அந்த எலும்புக்கூடு இப்போதும் இருக்கிறதா?

said...

வாழ்த்து தெரிவித்த ஜோவிற்கும் அன்புவிற்கும் நன்றி.

// தூத்துக்குடி முத்தே வருக.//
நன்றி அனுராக்

// எனக்கு நிறையப் புத்தகங்கள் வாசிக்க வாய்ப்புக் கிடைத்த ஊர்களில் ஒன்று. என் பதின்பருவ ஆரம்பங்கள் தூத்துக்குடியில் தான். மில்லர்புரம் பு.ம.பள்ளியில்... வஉசி கல்லூரிக்கு எதிர்ப்புறம்...//
மில்லர்புரமா...ரொம்பப் பக்கத்துல இருந்திருக்கீங்க. ஆனாலும் சின்ன வயசுல எங்களுக்கு மில்லர்புரமே தூரம்தான். ரிக்க்ஷா வெச்சுக்கிட்டுதான் போவோம்.

// நினைவுகளை மீட்டி விட்டீர்கள். நன்றி. (அந்த எலும்புக்கூடு இப்போதும் இருக்கிறதா? //
எந்த எலும்புக்கூடு அனுராக்? மறந்துட்டேனே. கடல்ல ஒதுங்குன மீனின் எலும்புக்கூடா?

said...

நட்சத்திரம் இராகவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நம்ம ஊர் பெருமைகளை நட்சத்திர வாரத்தில் சொல்லுவீங்க என்று நம்புகிறேன்.

கலக்கல் வாரமாக வாழ்த்துகள்.

(படத்தை பார்த்தப் பின்பு அண்ணா சொல்ல மனம் வரவில்லை, சிறுவர் பூங்காவிற்கு ஏற்ற முகம் :):):)

said...

வாழ்த்துக்கள் கோ.ராகவன்,

வலைப்பூவில் மகரந்தமாய் மணப்பதோடு எங்களை உங்கள் தமிழருவியிலும் நனைத்து இன்று நட்சத்திரமாய் மிண்ணுகிறீர்கள்.

நட்சத்திர அந்தஸ்து உங்களுக்கு தாமதாகவே கிடைத்திருந்தாலும் முழு தகுதியும் உண்டு!

இது பற்றி நான் "// என்னாச்சு ரொம்ப நாளா உங்களைக் காணவில்லையே? உள்வாங்குவதைப் பார்த்தால் "நட்சத்திர பதிவாளராக" திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களோ? எண்ணவோ? // 10/18/2005 7:18 PM அன்றே சொல்லி விட்டேன்!

said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள் ராகவன்....

உங்கள் எழுத்துகள் பற்றியான விமர்சனங்களை பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்....

மற்றபடி உங்களைப் போலவே எனக்கும் சிறுவயதில் பாம்பாட்டி என்று பட்டப்பெயர் இருந்தது.... என் தாத்தாக்கள்தான் அதிகமாக அந்த பெயரை சொல்லி அழைப்பார்கள்.....

said...

// கலக்கல் வாரமாக வாழ்த்துகள்.

(படத்தை பார்த்தப் பின்பு அண்ணா சொல்ல மனம் வரவில்லை, சிறுவர் பூங்காவிற்கு ஏற்ற முகம் :):):) //

நன்றி பரஞ்சோதி. என்னுடைய படத்தை நீ முன்பே பார்த்திருக்கின்றாயே. சரி. என்னைச் சின்னப் பையன் என்று சொல்லி விட்டாய். ஹா ஹா ஹா

said...

ம்... பாம்பாட்டியாரே!

ஒருவாரத்துக்கு 'புன்னாகவராளி' வாசித்து எல்லோரையும் மயக்கப் போகிறீர்!!

வாழ்த்துக்கள்!!!

said...

// வாழ்த்துக்கள் கோ.ராகவன்,

வலைப்பூவில் மகரந்தமாய் மணப்பதோடு எங்களை உங்கள் தமிழருவியிலும் நனைத்து இன்று நட்சத்திரமாய் மிண்ணுகிறீர்கள்.

நட்சத்திர அந்தஸ்து உங்களுக்கு தாமதாகவே கிடைத்திருந்தாலும் முழு தகுதியும் உண்டு! //

நன்றி நல்லடியார். எனக்கு இந்த வாய்ப்பு வந்ததும் நினைத்தது உங்களைத்தான். ஏனென்றால் நீங்கள் சொல்கையில் எனக்கு அது ஆரூடம்தான். பிறகு நமது மதி கந்தசாமியும் காசியும் அழைத்துக் கொடுத்த மரியாதை இது. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நல்லடியார்.

said...

// நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள் ராகவன்....//
நன்றி முத்துக்குமரன்.

// உங்கள் எழுத்துகள் பற்றியான விமர்சனங்களை பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்....//
நிச்சயமாக. உங்களைப் போன்ற நண்பர்களின் விமர்சனம் நிச்சயம் தேவையான ஒன்று. காத்திருக்கிறேன்.

// மற்றபடி உங்களைப் போலவே எனக்கும் சிறுவயதில் பாம்பாட்டி என்று பட்டப்பெயர் இருந்தது.... என் தாத்தாக்கள்தான் அதிகமாக அந்த பெயரை சொல்லி அழைப்பார்கள்.....//
அட! என்ன ஒத்துமை...... :-)

said...

'தமிழ் மண'க்கும் நீங்கள் நட்சத்திரமானதில் பெரிதும் மகிழ்கிறேன். உங்களின் மவுன வாசகர்களில் ஒருவன்

said...

// ஒருவாரத்துக்கு 'புன்னாகவராளி' வாசித்து எல்லோரையும் மயக்கப் போகிறீர்!! //

நன்றீ ஞானபீடம். ஞானபீடம்...புன்னாகவராளின்னு சொல்லப் போறாங்களோ..புண்ணாக்குவராளின்னு சொல்லப் போறாங்களா...எப்படியும் ஒரு வாரத்தில் தெரிஞ்சிருமுல்ல.

said...

// ஒருவாரத்துக்கு 'புன்னாகவராளி' வாசித்து எல்லோரையும் மயக்கப் போகிறீர்!! //
இப்னு ஹம்துன், நன்றி என்ற ஒன்றைத் தவிர வேறென்ன சொல்ல. மெத்த மகிழ்ச்சி. நட்சத்திர வாரம் என்றால் என்னவென்று இப்பொழுதுதான் புரிகிறது. :-)

said...

வாங்க நட்சத்திரமே வாங்க.

வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் இராகவன்.. வழக்கம் போல கலக்குங்கள்.

said...

// வாங்க நட்சத்திரமே வாங்க.

வாழ்த்துக்கள். //

நன்றி டீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சர்.

// வாழ்த்துக்கள் இராகவன்.. வழக்கம் போல கலக்குங்கள். //
நன்றி சுரேஷ்.

said...

உங்க எழுத்தை தற்செயலா வாசித்தப்போவே பிடித்தது. தூத்துக்குடி என்றதும் அண்டைவீட்டுக்காரர் என்று ரொம்ப பிடிச்சது. தொடர்ந்து வாசித்தாலும் அடிக்கடி பின்னூட்டமிடுவதில்லை;இந்த வாரம் போட்டுத் தள்ளிடறேன்.நட்சத்திர வாரத்தில், ஊர் விஷயம் என்ன வரப்போகுதுன்னு பெரிய எதிர்பார்ப்பு!

said...

Hello Ragavan,

I am out of station and couldn't type in tamil.

I think it would be a great week for us with you.. :-)

Continue your good work as always...

Will comment u on wednesday...

said...

நான் உங்களை வெகு நாட்கள் (உங்கள் புகைப்படம் வெளியாகும் வரை) "பெரியவர்" என நினைத்திருந்தேன்.. எழுத்தில் முதிர்ச்சியும் ஆன்மீகத்தில் நிறைவாகவும் எழுதுபவர் என்ற முறையில்.. "ச்சின்னவர்" என்று அறிந்த போது வியப்பே..

இப்பொழுது தினமும் ஒரு பதிவா.. கலக்குங்க.. காத்திருக்கிறோம்.

said...

// நட்சத்திர வாரத்தில், ஊர் விஷயம் என்ன வரப்போகுதுன்னு பெரிய எதிர்பார்ப்பு! //

உங்க பாராட்டுக்கு நன்றி தாணு. பட்டியல் போட்டிருக்கேன். உங்க எதிர்பார்ப்பு அதில் பூர்த்தியாகுதான்னு பாருங்க.

//Continue your good work as always...

Will comment u on wednesday... //
காத்திருக்கிறேன் கணேஷ். உங்களால் தமிழில் படிக்க முடிகிறது என்பதே இப்பொழுது மகிழ்ச்சி. ஊருக்கு வந்ததும் கருத்துகளை இடுங்கள்.

//முறையில்.. "ச்சின்னவர்" என்று அறிந்த போது வியப்பே..// ஹி ஹி என்ன செய்ய முகமூடி. நெலமை அப்படி.

said...

பந்தியிடுங்கள், பசியோடு நாங்கள்!

said...

நட்சத்திரம் ஜொலிக்க வாழ்த்துக்கள்!

said...

POOETU THAAKUNGA...

said...

வர வர ஞாயிற்று கிழமை என்றால் யார் என்று எதிர்பார்ப்பது தலையாய வேலையாகிவிட்டது. எல்லாரும் அடித்து விளையாடுவதால்
சுவாரசியமும் கூடுகிறது. பார்க்கலாம் நம்ம ராகவன் எப்படி என்று :-)! வாங்க வாங்க! வாழ்த்துக்கள் இவ்வார நட்சத்திரமே!

said...

வாங்க..வாங்க.. வாங்க (வடிவேலு பாணியில் படிக்கவும்)
கலக்குங்க இந்த வாரம். அப்படியே "இனியது" பதிவு மேட்டரும் கொஞ்சம் இங்க எடுத்து வுடுங்க. கார்த்திகை மாசத்துல கந்தனைப் பற்றியும் நட்சத்திரப் பதிவில் வரட்டும்.

- அலெக்ஸ்

said...

// பார்க்கலாம் நம்ம ராகவன் எப்படி என்று :-)! வாங்க வாங்க! வாழ்த்துக்கள் இவ்வார நட்சத்திரமே! //

இப்பத்தான் எனக்கு பயமே வருது. அதுக்குதான் எதுக்கும் இருக்கட்டும் என்று முன்னாடியே பட்டியல் போட்டுட்டேன். பட்டியலைப் பாத்தீங்களா?

// பந்தியிடுங்கள், பசியோடு நாங்கள்! //

சிங்.செயகுமார், மெனு கார்டு பாத்தீங்களா?

வரவேற்ற பெனாத்தல் சுரேஷிற்கும் [வரவேற்பும் பெனாத்தல் இல்லையே? ;-) ] முத்துவிற்கும் நன்றி.

// அப்படியே "இனியது" பதிவு மேட்டரும் கொஞ்சம் இங்க எடுத்து வுடுங்க. கார்த்திகை மாசத்துல கந்தனைப் பற்றியும் நட்சத்திரப் பதிவில் வரட்டும். //
வடிவேலு அலெக்ஸ் பாண்டியரே......ஒன்று சொல்கிறேன்....சுருக்கமா.........வருவான் வடிவேலன்.

said...

எல்லாம் ஒரே தம்பி பசங்களா இருக்கீங்களேப்பா! படம் பார்க்கிறதுக்கு முன்னாடி (பதிவுகளை படிச்சதுலே) கொஞ்சம் வயசானவரா கற்பனை பண்ணியிருந்தேன்...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

said...

// நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்! //
நன்றி ரம்யா.

// கொஞ்சம் வயசானவரா கற்பனை பண்ணியிருந்தேன்...//
நீங்களுமா?

said...

படித்தது மில்லர்புரம். வீடு GH பக்கத்தில். சைக்கிள் ரிக்ஷா பயணமேதான்.

எலும்புக்கூடு வ உ சி கல்லூரியில். டைனோசர் மாதிரி ஒரு பெரிய (முதலை?) எலும்புக்கூடு கல்லூரி முகப்புக்கு பக்கத்தில் பொருத்தி நிறுத்தி வைத்திருந்தார்கள்!...

said...
This comment has been removed by a blog administrator.
said...

ராகவன்ஜீ!

//"என்னைத் தெரியுமா!" //

மத்தவர்களைப்போலவே எனக்கும் அதே ஆச்சரியம்தான்! இப்போது அல்ல! முதன்முதலில் உங்க புகைப்படத்தை பின்னூட்டப்பெட்டியில் பார்த்தபோது கொழம்பிட்டேன்! அப்பறம் உங்க ஃப்ரொபைல் வரைக்கும் நூல் பிடிச்சு வந்ததுல இந்த இனிய ஆச்சரியம்! ஆன்மீகமும் நல்ல தமிழுமாய்... கலக்குங்க!

நட்சத்திர வாழ்த்துக்கள்!

said...

// கொஞ்சம் வயசானவரா கற்பனை பண்ணியிருந்தேன்...//

நானெல்லாம் அப்படி இல்லப்பா..ரொம்பவே வயசானவரா கற்பனை பண்ணியிருந்தேன்!கொஞ்சம் நம்மள ஒட்டி வர்ர ஆளோன்னு நினச்சேன்.

பாம்பாட்டிக்கு வாழ்த்துக்கள். மகுடிக்குக் காத்திருக்கிறோம்.

ஆமா, அது என்ன ஒரேடியா தூத்துக்குடிக்காரவியளா ஒண்ணு சேருதிய

said...

நட்சத்திர வாழ்த்துகள் ராகவன்,

அலெக்ஸ் சொன்னது மாதிரி 'இனியது கேட்கின்'னையும் கொஞ்சம் போடுங்க.

said...

வாழ்த்துக்கள் ராகவா!

said...

ராகவன்,

மூன்று நாட்களாக இணையத் தொடர்பு இல்லை. இன்று தான் அலுவலகத்திற்கு வந்ததும் தமிழ்மணம் பார்த்தேன். 'மறுமொழியப்பட்ட' பகுதியைப் பார்க்கும் போது இந்தப் பதிவு 39 பின்னூட்டத்துடன் இருப்பது பார்த்து 'ஆஹா. ராகவன் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார் இவ்வளவு பின்னூட்டம் வருவதற்கு' என்று ஆச்சரியத்துடன் வந்து பார்த்தால் போட்டீரே ஒரு குண்டு. வாழ்த்துகள் ராகவன். நான் இரண்டு வாரத்திற்கு முன்பே சொல்லவில்லை நீங்கள் சீக்கிரம் தமிழ்மண நட்சத்திரம் ஆகப் போகிறீர்கள் என்று?

//சீக்கிரம் நீங்கள் தமிழ்மணம் நட்சத்திரம் ஆகிவிடுவீர்கள் போல் தெரிகிறது. நிலவின் பார்வையும் இறைவன் கந்தசாமியின் அருளும் கிடைத்திருப்பதைப் பார்த்தால் அடுத்த வாரமே நீங்கள் தமிழ்மண நட்சத்திரம் என்று சொன்னால் நான் ஆச்சரியப்படப் போவதில்லை.
//

உங்கள் அறிமுகத்தை (சிறு வயது கதையைப்) படித்தால் ஏதோ என்னுடைய சுயசரிதையைப் படிப்பது போல் உள்ளது. :-) எந்த எந்த இடத்தில் என்பதை சொல்ல எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமே அப்போது சொல்கிறேன் :-)

எல்லாரும் உங்களை வயதில் பெரியவர் என்று எண்ணிக்கொண்டிருந்தனர் என்பது வியப்பாய் இருக்கிறது. ஏனோ எனக்கு உங்கள் படத்தைப் பார்க்கும் முன்பே நீங்கள் 'சின்னவர்' என்று தான் தோன்றியது. உருவமும் எதிர்பார்த்ததே.

வாய் வரை தம்பி ராகவன் என்று கூற வந்துவிட்டாலும் என்னவோ இன்னும் கொஞ்ச நாள் நண்பர் ராகவன் என்றே அழைக்கலாம் என்று எண்ணுகிறேன்.

எல்லாப் பதிவிலும் 50+ பின்னூட்டம் பெற்று நட்சத்திர வாரத்தின் பெருமையையும் உங்கள் தனித்தமிழின் இனிமையையும் நிலைநாட்ட கார்த்திகேயன் அருளட்டும். வாழ்த்துகள்.

said...

//என்னைத் தெரியுமா! //

ஓ! தெரியுமே!!., வாழ்த்துக்கள்.

said...

// எலும்புக்கூடு வ உ சி கல்லூரியில். டைனோசர் மாதிரி ஒரு பெரிய (முதலை?) எலும்புக்கூடு கல்லூரி முகப்புக்கு பக்கத்தில் பொருத்தி நிறுத்தி வைத்திருந்தார்கள்!... //

அனுராக், நான் நுழையாத கல்லூரி வ.உ.சி கல்லூரி. ஆனால் என்னுடைய சகோதரி படித்த கல்லூரி. அந்த எலும்புக்கூடு இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

// முதன்முதலில் உங்க புகைப்படத்தை பின்னூட்டப்பெட்டியில் பார்த்தபோது கொழம்பிட்டேன்! அப்பறம் உங்க ஃப்ரொபைல் வரைக்கும் நூல் பிடிச்சு வந்ததுல இந்த இனிய ஆச்சரியம்! ஆன்மீகமும் நல்ல தமிழுமாய்... கலக்குங்க!

நட்சத்திர வாழ்த்துக்கள்! //
நன்றி இளவஞ்சி. புகைப்படத்தைப் போடும் எண்ணம் முதலில் இல்லை. பிறகு போட்டுக் கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்குள் நட்சத்திர வாரம் வந்து, புகைப்படத்தைப் போட வேண்டியதாயிற்று. :-)

// வாய் வரை தம்பி ராகவன் என்று கூற வந்துவிட்டாலும் என்னவோ இன்னும் கொஞ்ச நாள் நண்பர் ராகவன் என்றே அழைக்கலாம் என்று எண்ணுகிறேன். //
கணேஷ், என்னை ராகவன் என்றே அழைக்கலாம். மென்பொருள் நிறுவனங்களில் பெயரைச் சொல்லி அழைப்பதுதானே வழக்கம். மேலும் உங்களை விட நான் வயதில் மூத்தவனே. ஆகையால் பெயரைச் சொல்லி அழைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. நீங்கள் முதலில் சொன்னது போல நல்லடியாரும் சொல்லியிருந்தார்.
50+ பின்னூட்டங்கள்!!!!!!!!! பார்க்கலாம்.

// நானெல்லாம் அப்படி இல்லப்பா..ரொம்பவே வயசானவரா கற்பனை பண்ணியிருந்தேன்!கொஞ்சம் நம்மள ஒட்டி வர்ர ஆளோன்னு நினச்சேன்.

பாம்பாட்டிக்கு வாழ்த்துக்கள். மகுடிக்குக் காத்திருக்கிறோம்.

ஆமா, அது என்ன ஒரேடியா தூத்துக்குடிக்காரவியளா ஒண்ணு சேருதிய //
தருமி, அது எப்படியோ....தூத்துக்குடிக்காரவகன்னாலே எனக்கு சந்தோசம்.

பாம்பாட்டி இந்த வாரம் எப்படி மகுடி ஊதுறான்னு காத்திருக்கீங்க. இருக்க ராக தாள புத்தகத்தைத் தொறக்குறேன்.

// ஓ! தெரியுமே!!., வாழ்த்துக்கள். //
அப்படிப் போடு! அப்படிப் போடு!

said...

//*// வாய் வரை தம்பி ராகவன் என்று கூற வந்துவிட்டாலும் என்னவோ இன்னும் கொஞ்ச நாள் நண்பர் ராகவன் என்றே அழைக்கலாம் என்று எண்ணுகிறேன். //
கணேஷ், என்னை ராகவன் என்றே அழைக்கலாம். மென்பொருள் நிறுவனங்களில் பெயரைச் சொல்லி அழைப்பதுதானே வழக்கம். மேலும் உங்களை விட நான் வயதில் மூத்தவனே. ஆகையால் பெயரைச் சொல்லி அழைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. நீங்கள் முதலில் சொன்னது போல நல்லடியாரும் சொல்லியிருந்தார்.
50+ பின்னூட்டங்கள்!!!!!!!!! பார்க்கலாம்.
*//

என்ன இராகவன். நட்சத்திர வாரம்ன்னவுடனே ரொம்ப குழம்பி போயிட்டீங்களா? நான் எழுதுன பின்னூட்டத்துக்கு கணேஷை விளித்து பதில் சொல்லியிருக்கீங்க? என்ன ஆச்சு?

said...

கோ.ராகவன்
பச்சபுள்ளயாட்டம் இருக்கிற நீங்களா செஞ்சொற் பொற்கொல்லன்.
வெளுத்து கட்டிட்டிருக்கீங்க.

மனமார்ந்த நட்சத்திர வாழ்த்து உங்களுக்கு

said...

// G.R. Sir! I am rather reader of your blogs. Thanks for your nice writings out of polemical.

Yours Sister,
Fathima
Ras Al Khaimah-UAE //

வணக்கம் சகோதரி ஃபாத்திமா. வாழ்த்துகளுக்கு நன்றி.

பிரச்சனைகளைக் கிளப்ப வேண்டும் என்று நான் எதுவும் எழுதுவதில்லை சகோதரி. சமயங்களில் பிரச்சனைகள் கிளம்பும் பொழுது எழுதுவது உண்டு. மற்றபடி யாரையும் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கம் எனக்குக் கிடையாது.

said...

// என்ன இராகவன். நட்சத்திர வாரம்ன்னவுடனே ரொம்ப குழம்பி போயிட்டீங்களா? நான் எழுதுன பின்னூட்டத்துக்கு கணேஷை விளித்து பதில் சொல்லியிருக்கீங்க? என்ன ஆச்சு? //

அடடா! தப்பாயிருச்சே! நேத்து வேலையும் நெறையா கஷ்டமர் வேற அமெரிக்காவுல இருந்து வந்திருக்காரு. நடுவுல நடுவுல வந்து எட்டிப் பாக்குறேனா...அதான்.

// கோ.ராகவன்
பச்சபுள்ளயாட்டம் இருக்கிற நீங்களா செஞ்சொற் பொற்கொல்லன்.
வெளுத்து கட்டிட்டிருக்கீங்க.

மனமார்ந்த நட்சத்திர வாழ்த்து உங்களுக்கு //
நன்றி மதுமிதா. பட்டம் வந்துருச்சே. வாங்கி வெச்சுக்கிற வேண்டியதுதானன்னு வாங்கிக்கிட்டேன். திருப்பிக் கொடுத்துறவா?