Monday, November 21, 2005

வாடை எனை வாட்டுது!

இன்றைக்கு இருபது வருடங்களுக்குப் பிறகு தமிழ் நாட்டு இளம் பெண்களின் பேச்சு எப்படியிருக்கும் என்று ஒரு நகைச்சுவையான கற்பனை. கற்பனையில் உலகம் நிறையவே மாறிவிட்டது. அதனால் படிக்கிறவர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்.

ரமாவும் சுமாவும் கல்லூரி மாணவிகள். கல்லூரி நேரத்தில் ஒழுங்காக நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஏய் சுமா? மல்லிகை மொட்டு சிடி வாங்கினியா? நான் நேத்துதான் வாங்கினேன். ராத்திரி கண்ண மூடிப் படுத்துக்கிட்டு அதக் கேட்டுட்டும் மோந்து பாத்துகிட்டும் தூங்கினேன். ரொம்ப நல்லா இருந்தது."

"அடடா! நான் இனிமேதான் வாங்கனும். எத்தனை பாட்டு இருக்கு? எல்லாம் நல்லாயிருக்கா? ஆமா வாடையமைப்பாளர் யாரு?"

"இசை ஏ.ஆர்.ரகுமான் போட்டிருக்கார். பாட்டெல்லாம் நல்லாயிருக்கு. வாடையமைப்பாளர் சசி. ரொம்பப் புதுமையா இருக்குடி. மல்லிகைக் கொடின்னு ஒரு பாட்டு. அதுல ஒரு மாதிரி மல்லிகை மணம் வருது. அடடா! என்னமா இருக்கு தெரியுமா? அதே மாதிரி பீச்சுக்குப் போனேன் பாட்டுல பீச்சுல வருமே....அதே மாதிரி உப்புக்காத்து வாடைய ரொம்ப நேச்சுரலா போட்டிருக்காரு. அப்பப்ப பானீபூரி வாடையும் லேசான கருவாட்டு வாடையும் ரொம்ப நேச்சுரலா இருக்கு."

"ஐயோ! ரமா! நீ வேற ஏத்தி விடுறயே! சசி ஒவ்வொரு வாடையும் கம்யூட்டர்ல போடுறாராமே. நல்லா இருக்கா?"

"சூப்பராயிருக்கு சுமா. கதிரவன் மாதிரி வாடையமைப்பாளர்கள் இயற்கையாவே வாடைய ரெக்கார்ட் பண்ணுவாங்களாம். ஆனா சசிதான் கம்யூட்டர் வெச்சி வாடையமைக்கிறார். அதுவும் எல்லாருக்கும் பிடிச்சுதான் இருக்கு. என்ன இருந்தாலும் டிஜிட்டல் ரெக்கார்டிங் ஆச்சே!"

"தியேட்டர்ல போய் பாக்கனும் நீ. திருச்சி எக்ஸ்பிரஸ் படத்த தியேட்டர்ல பாக்கும் போது கும்முன்னு இருந்துச்சே. நல்ல டால்பி ஸ்மெல்லர்ஸ். ஒவ்வொரு வாசனையும் தெளிவா இருந்ததே. நீயுந்தான வந்த?"

"ஆமாமா. அந்த ரயில்வே ஸ்டேஷன் சீன்ல.....ஒரு நாத்தம் வருமே. தியேட்டர்ல இருக்கோமான்னு எனக்கே டவுட் வந்துருச்சி. ஆனா ஒன்னுப்பா....பழநி பஞ்சாமிர்தத்த கமல் நக்கும் போது எனக்கு வாயில எச்சி ஊறிடிச்சி."

"அதெல்லாம் கம்யூட்டர்ல போட்டதுதானே. நல்லாதான் இருந்தது. பழைய ஆளுங்கதாம்ப்பா இன்னமும் நேச்சுரலா ரெக்கார்ட் பண்ணனும்னு சொல்வாங்க. பழைய படமெல்லாம் அப்படிதான வந்தது."

"ஆமாம் சுமா. நம்ம சின்னக் குழந்தையா இருந்தப்போ வாசனைய ரெக்கார்டே பண்ண முடியாதாமே. வெறும் ஒலியும் ஒளியும்தானாம்."

அப்பொழுது ரமாவிற்கு ·போன் வருகிறது. ரமாவின் தாயார் வீட்டிலிருந்து கூப்பிடுகிறார். ரமா கொஞ்ச நேரம் பேசிவிட்டு ·போனை வைத்து விடுகிறாள். அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கம்மென்று பாயாச வாடை.

"ரமா...இன்னைக்கு வீட்டுல என்ன விசேஷம்? பாயாச வாடை பலமா இருக்கு."

"ஊருல இருந்து சித்தி சித்தப்பால்லாம் வந்துருக்காங்க. அதான். இந்த மொபைல் ·போனால இதுதான் பிரச்சனை. அன்னைக்கு நம்ம காலேஜ் போகாம ஹோட்டலுக்குப் போனோமே. கரெக்ட்டா அப்பதான் வீட்லருந்து போன். டேபிள்ள என்னடான்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு ஆர்டர் பண்ணி வெச்சிருக்காங்க. அந்த வாடையெல்லாம் போகாம நான் ·போன பொத்தி வெச்சுக்கிட்டு பேச வேண்டியிருந்தது. நல்ல வேள என்கிட்ட கேமராவை ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். இல்லைன்னா நான் இருக்குற எடம் தெரிஞ்சி போயிருக்கும்."

"ஆமா. நல்ல வேள. தப்பிச்சோம். இல்லைன்னா உங்க வீட்லருந்து எங்க வீட்டுக்கும் விஷயம் போயி ஒரே பிரச்சனையாப் போயிருக்கும்."

சுமாவுக்கு ஒரு சந்தேகம். "ஏய்! அன்னைக்கு உன்னோட பாய் பிரண்ட் ஏதோ பெர்பியூம் போட்டுட்டு வந்தான்னு மொபைல்ல ரெக்கார்டு பண்ணியே. அதக் கொஞ்சம் போடுடி. நல்ல ஸ்மெல்."

"சுமா! இதெல்லாம் வேண்டாம். அந்த வாடையத்தான் ஒரு வாட்டி போட்டேன்ல. அப்புறம் என்ன அடிக்கடி. ரொம்ப அலையாத!"

"சரிம்மா. விட்டுத்தள்ளு. என்னவோ மேன்லியா நல்லா இருந்ததேன்னு கேட்டேன். சரி. சரி. அந்த மல்லிகை மொட்டு சிடியை நாளைக்குக் கொண்டு வா. நான் கம்ப்யூட்டர்ல போட்டு காப்பி பண்ணிக்கிறேன்."

இருவரும் ஒருவருக்கொருவர் டாட்டா சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்புகிறார்கள்.


அவ்வளவுதான். கதை முடிந்தது. மக்களே! இந்தக் கற்பனையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இப்படியும் நடக்குமா?

அன்புடன்,
கோ.இராகவன்

24 comments:

said...

//அந்த மல்லிகை மொட்டு சிடியை நாளைக்குக் கொண்டு வா// //இப்படியும் நடக்குமா?//

கனகாம்பர மொட்டுன்னாத்தான் நடக்காது., மல்லிகை மொட்டு நடக்கறதுக்கென்ன?. ஆனா ரெண்டுமே நடக்காது. காலில்லாததுனால.... இராத்திரி 11 மணி. இப்படி புலம்ப வைக்கிறது நியாயமா?. இராகவா?.......

said...

நல்லாத்தான் இருக்கு கற்பனை!

said...

ராகவன் நல்ல கற்பனை,

ஆனா அஞ்சு வருஷத்துல கழிச்சு இவ்ளோ தமிழ் வார்த்தை பேசிப்பாங்களா? அதுவும் கம்பூட்டர் பீட்டர் பொண்ணுங்க?

--
நானும் இத்தன நாளா கெஞ்சறேன். சாப்ட்வேரு, ஆலமரத்துவேரு (நன்றி: சந்தோஷ்) ஆளுக இத்தன பேரு இருக்கீங்க, உங்கள உட்பட. பாயாசம் வாசனையை விட, பாயாசத்தையே பைலா அனுப்ப முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்? இதுக்கு யாராவது முயற்சி பண்ணுங்கப்பா..!

said...

// பாயாசம் வாசனையை விட, பாயாசத்தையே பைலா அனுப்ப முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்? இதுக்கு யாராவது முயற்சி பண்ணுங்கப்பா..! //

அப்போது துளசியக்கா ரொம்ப பிஸியாகிடுவாங்க:-))

said...

என்னங்க இப்படி குமட்டுது..

பின்ன நம்ம முதல்வன் அர்ஜுனன் சகதில்ல சண்டை போடறாரு, கூவம் பக்கத்தில எங்கேயோ எடுத்துருக்காங்களா...

இப்படியும் வாடை வருமா?

said...

// இப்படி புலம்ப வைக்கிறது நியாயமா?. இராகவா?....... //
அப்படிப் போடு, என்ன பண்ண? நட்சத்திர வாரமுன்னு சொன்னாங்க...அதான்.......

// ஆனா அஞ்சு வருஷத்துல கழிச்சு இவ்ளோ தமிழ் வார்த்தை பேசிப்பாங்களா? அதுவும் கம்பூட்டர் பீட்டர் பொண்ணுங்க? //
டவுட்டுதான்.....ஏதோ எழுதீட்டேன். இந்தப் பொண்ணுங்க தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்துல இருக்காங்கன்னு நெனச்சுக்கோங்களேன் இராமநாதன்.

said...

// நானும் இத்தன நாளா கெஞ்சறேன். சாப்ட்வேரு, ஆலமரத்துவேரு (நன்றி: சந்தோஷ்) ஆளுக இத்தன பேரு இருக்கீங்க, உங்கள உட்பட. பாயாசம் வாசனையை விட, பாயாசத்தையே பைலா அனுப்ப முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்? இதுக்கு யாராவது முயற்சி பண்ணுங்கப்பா..! //

இராமநாதன், பாயசத்தைக் கேக்குறதுல இருந்தே ஒங்க ஆயாசம் புரியுது. இருங்க..இருங்க...ஒன்னொன்னா வரும். file attachment மாதிரி பாயாசத்தையும் அனுப்பலாம். அப்புறம் என்ன பிரச்சனை வரும் தெரியுமா? இப்ப கண்ட படத்தையும் அனானிமஸ்ஸா அனுப்புற மாதிரி, கண்ட சாமாச்சாரங்களும் அனானிமஸ்ஸா வரும். தேவையா? file வந்திருக்கேன்னு நீங்க டவுன் லொடு பண்ணினா, அது அம்மா அனுப்பிச்ச பாசமான ரசமா இல்லாம, ரசாபாசமா இருந்தா என்ன செய்வீங்க?

said...

// பின்ன நம்ம முதல்வன் அர்ஜுனன் சகதில்ல சண்டை போடறாரு, கூவம் பக்கத்தில எங்கேயோ எடுத்துருக்காங்களா...

இப்படியும் வாடை வருமா? //
பாயிண்டைப் பிடிச்சீங்க வெளிகண்ட நாதர். அதே அதே! இது மாதிரி இன்னும் நெறைய வரலாம். இதே மாதிரி ரெண்ட எடுத்து விடுங்க பாப்போம்.

said...

நேற்று போட்ட பீடிகைக்கு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தால் சப்பென்று ஆகிவிட்டது ராகவன்....

ராம நாரயனன், பாபு கணேஷ் மாதிரி(சம்பந்தபட்டவர்களின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக) உப்புமா பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.

Better luck next time......

said...

கற்பனை நன்று.

said...

சரி, உங்க 'ஆசை'யை ஏன் கெடுப்பானேன். இப்பத்தான் 'பாயாசம்' காய்ச்சறேன். அப்புறமா ஃபைலா அனுப்பறேன் ராகவன் மூலமா:-)

said...

நன்றாக இருந்தது இராகவன்.

இராகவன் ஒன்றும் நடக்கயியலாத கற்பனையல்லவே, ஒரவிளவிற்கு செயலிலும் உள்ளதுதானே இது. இராமநாதன் கேட்டதைப்போல் அவர்கள் அத்துனை அட்சரசுத்தமாக தமிழில் பேசுவார்களா என்ற கேள்விதான் எழுகிறது. இதன் போன்ற காரணங்களால் தான் நான் பெரும்பாலும் விவரணைகளில் ஆங்கிலம் கலப்பதில்லை, உரையாடல்களில் பொய்யும். உங்கள் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

said...

// நேற்று போட்ட பீடிகைக்கு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தால் சப்பென்று ஆகிவிட்டது ராகவன்.... //
ஐயோ முத்துக்குமரன், நான் பீடிகையெல்லாம் போடவில்லை. சரி. இனிமே ஏமாற்றாம இருக்க முயல்கிறேன்.

// ராம நாரயனன், பாபு கணேஷ் மாதிரி(சம்பந்தபட்டவர்களின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக) உப்புமா பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. //
சரி. இனிமே பிரியாணி கிண்டீருவோம்.

// Better luck next time...... //
நன்றி முத்துக்குமார்.

said...

//நன்றாக இருந்தது இராகவன்.

இராகவன் ஒன்றும் நடக்கயியலாத கற்பனையல்லவே, ஒரவிளவிற்கு செயலிலும் உள்ளதுதானே இது. இராமநாதன் கேட்டதைப்போல் அவர்கள் அத்துனை அட்சரசுத்தமாக தமிழில் பேசுவார்களா என்ற கேள்விதான் எழுகிறது. இதன் போன்ற காரணங்களால் தான் நான் பெரும்பாலும் விவரணைகளில் ஆங்கிலம் கலப்பதில்லை, உரையாடல்களில் பொய்யும். உங்கள் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். //
நன்றி மோகன்தாஸ். இனிமேல் இயல்பாக எழுதப் பார்க்கிறேன்.

said...

உங்க கற்பனைப்படின்னா, எனக்கு போன் பண்ணவே ஆளில்லாமல் போயிடும், எப்ப பாரு மெடர்னிடி வார்ட் வாசனையே வருதுன்னு!

said...

நல்ல கற்பனை இராகவன். நன்றாய் இருந்தது. அந்த செல் போன் கற்பனையும் நன்றாய் இருந்தது. இது எல்லாம் நடக்க 20 வருடம் காத்திருக்க வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். சீக்கிரமே நடக்க வாய்ப்புகள் உண்டு.

அதென்ன...சுஜாதா போல் எழுதவேண்டும் என்று ஆசையா? இன்னும் 20 வருடத்தில் எப்படி இருக்கும் என்று எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்? :-) இந்தக் கதையை சுஜாதா படித்தால் வருத்தப்பட மாட்டார் என்று தான் நினைக்கிறேன்.

said...

ஏற்கனவே எங்கேயோப் படித்தக் கருத்துக் கதையாக வந்ததில் மகிழ்ச்சிதான்!

அப்புறம் "பெங்களூரிலும், தூத்துக்குடியிலும் ஒரு நாள்" பதிவை இடும்போது முடிந்தால் வழியில் இருக்கிற அமராவதி ஆற்றிலும் கால் நனைக்கவும்.. (அதாகப்பட்டது கரூரையும் கவனிக்கவும்...)

said...

thanu said
//உங்க கற்பனைப்படின்னா, எனக்கு போன் பண்ணவே ஆளில்லாமல் போயிடும், எப்ப பாரு மெடர்னிடி வார்ட் வாசனையே வருதுன்னு!//
:-)))

said...

இப்போதுதான் கவனித்தேன். 'வாடை எனை வாட்டுது!' தலைப்பிலேயே சிலேடை வைத்துக் கலக்கிவிட்டீர்கள்.

said...

\\கல்லூரி நேரத்தில் ஒழுங்காக நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்\\ :-)

கற்பனை நல்லாத்தான் இருக்கு!!!

said...

// உங்க கற்பனைப்படின்னா, எனக்கு போன் பண்ணவே ஆளில்லாமல் போயிடும், எப்ப பாரு மெடர்னிடி வார்ட் வாசனையே வருதுன்னு! //

ஆமாமா! எப்பப்பாரு தாணுவுக்கு ஃபோன் பண்ணுனா கொழந்த அழுகுற சத்தந்தான் கேக்குதுன்னு இப்ப சொல்றாங்களல்ல! அது மாதிரி, அப்ப........

said...

// அதென்ன...சுஜாதா போல் எழுதவேண்டும் என்று ஆசையா? இன்னும் 20 வருடத்தில் எப்படி இருக்கும் என்று எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்? :-) இந்தக் கதையை சுஜாதா படித்தால் வருத்தப்பட மாட்டார் என்று தான் நினைக்கிறேன். //

நிச்சயமாக இல்லை. இந்தக் கதையை நான் எழுத உட்கார்ந்த பொழுது மனதில் இருந்த கருவே வேறு. ஆனால் அது சரியாக அமையவில்லை. ஆகையால் அந்தக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு இப்படி எழுதி விட்டேன். சுஜாதா, இந்தக் கதையைப் படிக்கப் போகிறாரா? அப்படிப் படிக்க நேர்ந்து கருத்துச் சொன்னால் ஆச்சரியம்தான். மகிழ்ச்சிதான்.

said...

// அப்புறம் "பெங்களூரிலும், தூத்துக்குடியிலும் ஒரு நாள்" பதிவை இடும்போது முடிந்தால் வழியில் இருக்கிற அமராவதி ஆற்றிலும் கால் நனைக்கவும்.. (அதாகப்பட்டது கரூரையும் கவனிக்கவும்...) //

ஆகா! அருட்பெருங்கோ! நிச்சயம் போட வேண்டும். நட்சத்திர வாரத்தில் போட இடமில்லாமல் போய் விடுமே! நட்சத்திர வாரம் முடியட்டும். கண்டிப்பாக கரூர் பற்றி நிறையவே போடுகிறேன்.

// இப்போதுதான் கவனித்தேன். 'வாடை எனை வாட்டுது!' தலைப்பிலேயே சிலேடை வைத்துக் கலக்கிவிட்டீர்கள். //
ஹி ஹி ஹி. சமயத்துல அப்படி ஆயிருது குமரன்.

// அதுக்கு முன்னாடி செய்ய வேண்டியது எல்லாம் அமெரிக்காகாரனை பாயாசத்துக்கு அடிமை ஆக்கனும். அப்போதானே டாலர் தேசத்துலருந்து ஆர்டர் வரும்... அப்புறம் என்ன கையில காசு ஓவன் ல பாயாசந்தேன் ;) //
பாண்டி, பேசாம அப்பரேஷன் பாயாசமுன்னு ஒரு திட்டத்த ரகசியமா செயல்படுத்திரலாமா? என்ன செய்யலாமுன்னு நீங்களே சொல்லுங்க.

said...

ஆச்சரியம்தான்யா.
இந்த மாதிரி விஷயங்கள் சீக்கிரமே நடக்கும்.