தூத்துக்குடியில் ஒரு நாள்
"என்னடா பாட்டு நினைவிருக்கா? ஒருவாட்டி பாடிப் பாத்துக்க!" அக்கறையோடு அத்தை சொன்னார்கள். வாய் விட்டு ஒருமுறை பாடிப் பார்த்துக் கொண்டேன். மேடையில் மறந்து போனால்?
தூத்துக்குடியை நன்றாக அறிந்தவர்கள் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேநிலைப்பள்ளியை அறிவார்கள். அதில் ஆண்டு விழா நடக்கும். ஆண்டு தோறுந்தான். அந்த ஆண்டு விழாவில் புதுக்கிராமத்தில் இருக்கும் மகளிர் சங்கத்தவரும் பங்கு கொள்வார்கள். நான் சொல்வது கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்.
இப்பொழுது சொல்லும் விஷயங்கள் தூத்துக்குடியை நன்றாக அறிந்தவர்களுக்குப் புரியும். புதுக்கிராமத்தில் இருக்கும் பழைய பெரிய வீடுகள் மூன்று. ஒன்று பல் டாக்டர் ஸ்டீபன் அவர்களின் வீடு. இப்பொழுது அவரில்லை. தந்தையின் இடத்தில் குறைவின்றி மகன் செய்து வருகிறார். இருவருமே மிகக் கனிவானவர்கள். இன்னொன்று அக்சார் வீடு என்பார்கள். அக்சார் பெயிண்ட் வியாபாரம் செய்தவர்கள் என்று கேள்விப்பட்டதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. மற்றொரு வீடு மிகப் பெரியது. தமயந்தி அம்மா வீடு என்பார்கள். எங்களுக்கெல்லாம் அது சங்கத்தம்மா வீடு.
அவர்கள் வீடே ஒரு சிறிய கோட்டை போல இருக்கும். காம்பவுண்டுக்குள் பலமுறை சென்றிருக்கின்றேன். மிகப் பெரிய கூண்டில் முயல்களும் ஆமைகளும் இருக்கும். வாட்ச் மேனிடம் உத்தரவு வாங்கி கூண்டுக்குள் சென்று முயல்களோடும் ஆமைகளோடும் விளையாடியிருக்கிறோம். இந்த மூன்று வீடுகளுக்கும் அருகில் இருந்த சிறிய வீடுகளில் ஒன்று நாங்கள் இருந்த வீடு. என்னுடைய இரண்டாம் கருவறை என்றே சொல்வேன். எங்கள் வீட்டுக்கு நேரெதிராக ஒரு சாலை செல்லும். அந்தச் சாலையில்தான் ஏ.எஸ்.கே.ஆர் திருமண மண்டபம் இருக்கிறது. அங்கு எனக்கு விவரம் தெரியாத வயதில் சீர்காழி கோவிந்தராஜன், நாட்டியத் தாரகை சொர்ணமுகி ஆகியோர்கள் நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றார்கள்.
தமயந்தியம்மாவின் சங்கம் அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு வகிக்கும். என்னுடைய அத்தையும் சனிக்கிழமை தோறும் கூடிடும் சங்கத்தில் ஒரு உறுப்பினர். அதனால் எனக்கும் அந்தப் பள்ளி ஆண்டு விழாவில் பாட வாய்ப்பு. அதற்குதான் பாடல் ஒத்திகை. எனது பக்கத்து வீட்டு நண்பன் தேன்ராஜ். அவனும் சொல்வதற்கு ஒரு பொன்மொழியைப் பயிற்சி செய்தான். ராமகிருஷ்ணரின் பொன்மொழி என்று நினைக்கிறேன். இதையெல்லாம் சொன்னால் சின்னதாகப் பரிசு கொடுப்பார்கள். அதிலொரு சந்தோஷம்.
சரி. நமது கதைக்கு வரலாம். பாடலை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆண்டு விழா தொடங்கியது. முதலில் யார் யாரோ பேசினார்கள். நாங்கள் எல்லாரும் பவுடர் பூசிக் கொண்டும், லிப்ஸ்டிக் பூசிக் கொண்டும் மேடைக்குப் பக்கத்திலிருந்த அறையில் இருந்தோம். பலரும் பலவித அலங்காரத்தில். மான் போல. மயில் போல. போலீஸ் போல. சாமியார் போல. நாடகத்திற்கும் ஆட்டத்திற்கும்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நடுவில் உண்டாகும் இடைவெளியில் நாங்கள் ஒவ்வொருவராக சென்று எங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்ற வேண்டும். அதை ஒரு டீச்சர் நிரல் படுத்திக் கொண்டிருந்தார். ஒரு சில நிகச்சிகளுக்குப் பின்னால் தேன்ராஜை அழைத்தார் அந்த டீச்சர். மேடையின் நடுவின் நின்றான். மைக் அவனது உயரத்திற்கு இறக்கப்பட்டது. சொல்ல வந்த பொன்மொழியைச் சொன்னான். எல்லாரும் கை தட்டினார்கள். நானும்தான்.
அடுத்து சில நிகழ்ச்சிகள். எனக்கான இடைவெளி வந்தது. டீச்சர் என்னை அழைத்தார். மேடையில் திரை போட்டிருந்தது. நான் போனதும் திறப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் டீச்சர் என்னை மேடையின் ஓரத்திலேயே நிறுத்தினார். அங்கு ஒரு மைக் இருந்தது. அதன் வழியாகத்தான் டீச்சர் நாடகத்திற்கு நடுவில் வசனங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மைக்கில் நிற்க வைத்தார்கள். "பாடு ராகவன்" என்றார்கள்.
"என்ன பாட வேண்டுமா? மேடைக்கு நான் போக வேண்டாமா? ஏன் இங்கே பாட வேண்டும்? திரையைத் திறக்க மாட்டார்களா?" உள்ளம் தவித்தது. சட்டென்று ஒரு அவமான உணர்ச்சி வந்து பிஞ்சு மனதில் நஞ்சு போல விழுந்தது. எப்படி அழாமல் இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் டீச்சரிடம் என்ன சொல்வது? மைக்கில் பாடினேன்.
"ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டிய பின் ஓய்வெடுத்துத் தூங்குகிறான் தாலேலோ"
ஆயர்பாடியில் ஆனந்தமாகத் துயிலப் பாடும் பாடலில் எனது சோகந்தான் தெரிந்தது. கடனுக்குப் பாடினேன். கொஞ்சப் பட வேண்டியது மிஞ்சப் பட்டதால் தஞ்சப் படத் தவித்தது நெஞ்சப் படம். ஆயிரம் கேள்விகள் அந்த வயதில். சீவிச் சிங்காரித்து மூக்கறுத்த நிலை என்பார்கள். அந்த வயதில் அது ரொம்ப வலித்தது. நிகழ்ச்சி முடிந்து கொடுத்த சிறிய எவர்சில்வர் கோப்பையை விட உள்ளக் கோப்பை கனமாக இருந்தது.
அந்த டீச்சர் ஏனப்படிச் செய்தார்கள் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஆனால் அந்த நிகழ்வு ஆழ்மனதில் வடுவாக நிலைத்து இன்று பதிவு போடுகின்ற வரைக்கும் வந்திருக்கிறது. இன்னும் எவ்வளவு வருமோ! சத்தியமாகச் சொல்கிறேன். அதற்குப் பிறகு நான் அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு பெற்றதே இல்லை. என்னுடைய அத்தையும் என்னை பங்கு பெறச் சொல்லிக் கேட்டதுமில்லை.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ராகவன்,
இது ரொம்ப அநியாயம். எதற்காம் திரை மறைவில் வைத்துப் பாட்டு?
ச்சின்னப்புள்ளை மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்?
அப்புறமாவது ஏன் இப்படி என்று ஏன் கேக்கலை?
This is not fair.
ஊரை நியாபகப்படுத்தி உட்டீங்க!
பள்ளிகளில் ஆண்டுவிழா போன்றவை நடத்தப்படுவதே சிறார்களின் திறமைகளை ஊக்குவிக்கத் தான். அத்தகைய விழாவில் பிஞ்சுமனதை நோகடிப்பது ஆசிரியத் தொழிலுக்கே அடுக்காது.
ராகவன்.
நான் மூனு வருஷம் தூ..டியில இருந்திருக்கேன்.என் Wife ஊரும் அதுதான்.
ஸ்டீபன் டாக்டர் (Dentist தானே?)சன்கிட்டதான் நாங்கல்லாரும் அடிக்கடி போவோம். WGC Roadலருக்கற கிளினிக்குத்தான் போவோம்.
எனக்கு பிரையண்ட் நகர்லதான் வீடு.
உங்க பதிவைப் படிச்சதும் ஊர் நினைவு வந்து மனசுல அந்த நாள்களை நினைச்சி சின்னதா ஒரு சந்தோஷம்.
உங்களுக்கு நடந்த மாதிரியே எனக்கும் நடந்திருக்கு. நான் ரொம்ப கருப்புங்கறதுனால நல்லா நடிக்கக்கூடிய திறமையிருந்தும் (நல்லா பாடவும் செய்வேன்) டேய் கருப்பா, நீயெல்லாம் நடிச்சா யார் பாக்குறதுன்னு என் டீச்சர் (அவங்க பேர்கூட இன்னமும் நினைவில அப்படியே நிக்குது)என்ன எதுலயுமே சேத்துக்க மாட்டாங்க.
உங்க பதிவை படிச்சதும்.. அதோட துளசி கோபலோட பின்னூட்டத்தை படிச்சதும் என்னுடைய அந்த வயசு நினைவுகள் எல்லாம் அப்படியே படமாட்டம் ஓடுது..
என் பின்னூட்டத்தின் தொடர்ச்சி!!
.. லேசா மனசுல ஒரு சோகம்.
இப்படிப் பல விடயங்கள் நெஞ்சை விட்டு நீங்காமல் இருக்கும். எழுதி விட்டால் பின்னர் ஒரு பாரம் குறைந்தது போல மனசு லேசாகி விடும். உங்களுக்கும் இப்போது திரைமறைவில் பாடவைத்த அந்த ஏமாற்றமான நினைப்பிலிருந்து சற்றேனும் விடுதலை கிடைத்திருக்கும்.
பிஞ்சு உள்ளங்களின் உணர்வுகளை பெரியவர்கள் உணர மறுப்பது கொடுமை.
இப்பிடியெல்லாம் வாத்தியார் இருக்காங்களா! ராகவனை இப்போ பார்த்தாங்கன்னா நிச்சயம் வெட்கி தலை குனிவாங்க! விடுங்க ராகவன் அதான் பெரியாளாயிட்டீங்களே .அவங்களுக்கு மேடையில பாட வாய்ப்பு குடுப்பீங்களா?
சின்ன வயது வடுக்கள் அவ்வளவு சீக்கிரம் மறப்பதில்லை. ஆனால் அதுவே உங்களை முன்னேற்றப் பாதைக்கு ஊக்குவிக்கும் கருவியாக இருந்திருக்கும். எந்த நிகழ்விலும், அதன் பாஸிடிவ் பக்கத்தையே யோசியுங்கள்.
// இது ரொம்ப அநியாயம். எதற்காம் திரை மறைவில் வைத்துப் பாட்டு?
ச்சின்னப்புள்ளை மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்?
அப்புறமாவது ஏன் இப்படி என்று ஏன் கேக்கலை? //
டீச்சர், எனக்கு இந்தக் கேள்விக்கு இன்று வரை விடை தெரியவில்லை. நானும் தேடவில்லை. ஆனால் அந்த ஐந்து வயது அவமானம் அப்படியே பதிந்து விட்டது.
// ஊரை நியாபகப்படுத்தி உட்டீங்க! //
நன்றி துடிப்புகள். எனக்கும் அதில் மகிழ்ச்சிதான்.
// அத்தகைய விழாவில் பிஞ்சுமனதை நோகடிப்பது ஆசிரியத் தொழிலுக்கே அடுக்காது. //
அவர்கள் தெரிந்து செய்தார்களா என்று தெரியாது. ஆனாலும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும். இதிலிருந்து எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ஆசிரியர் தொழில் எவ்வளவு கவனமாகக் கையாளப்பட வேண்டிய தொழில் என்பதுதான்.
// நான் மூனு வருஷம் தூ..டியில இருந்திருக்கேன்.என் Wife ஊரும் அதுதான். //
ஆகா வாங்க வாங்க....ஜோசப் சார்.
// ஸ்டீபன் டாக்டர் (Dentist தானே?)சன்கிட்டதான் நாங்கல்லாரும் அடிக்கடி போவோம். WGC Roadலருக்கற கிளினிக்குத்தான் போவோம்.
எனக்கு பிரையண்ட் நகர்லதான் வீடு. //
அவரேதான். என்னுடைய மாமாவிற்கு நன்கு தெரிந்தவர். WGC ரோடில்தான் அவர் கிளினிக் இருக்கிறது. ரொம்பத் திறமையானவர். இப்பொழுதும் அவர் வீட்டின் அருகில்தான் எனது மாமாவும் அத்தையும் இருக்கிறார்கள். அந்த வயதில் புதுக்கிராமத்தில் நாலைந்து வீடுகளில்தான் டீவி இருக்கும். ஸ்டீபன் டாக்டர், தமயந்தி அம்மா, பிரின்ஸ் டாக்டர், சார்லஸ் வீடு, அக்சார் வீடு. ரூபவாஹினி தொலைக்காட்சிதான் வரும். நல்ல படம் போட்டால் ஸ்டீபன் டாக்டர் வீட்டிற்குச் சென்று பார்த்த நினைவு இருக்கிறது.
// உங்க பதிவைப் படிச்சதும் ஊர் நினைவு வந்து மனசுல அந்த நாள்களை நினைச்சி சின்னதா ஒரு சந்தோஷம். //
நீங்களும் நம்ம ஊரைப் பத்தி எழுதுங்களேன். நானும் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
// உங்களுக்கு நடந்த மாதிரியே எனக்கும் நடந்திருக்கு. நான் ரொம்ப கருப்புங்கறதுனால நல்லா நடிக்கக்கூடிய திறமையிருந்தும் (நல்லா பாடவும் செய்வேன்) டேய் கருப்பா, நீயெல்லாம் நடிச்சா யார் பாக்குறதுன்னு என் டீச்சர் (அவங்க பேர்கூட இன்னமும் நினைவில அப்படியே நிக்குது)என்ன எதுலயுமே சேத்துக்க மாட்டாங்க. //
பாருங்கள். இப்படித்தான் செயிண்ட் சேவியர்சில் கலை நிகழ்ச்சிகளில் தாமரைப் பூப்போல பசங்கள் நிற்பதுண்டு. அதில் ஒருவன் நடுவில் மொக்கு போல உட்கார வேண்டும். பெரும்பாலும் நான் அப்படி நடுவில் நின்றிருக்கின்றேன். ஆசிரியர் அப்படித்தான் நிற்க வைப்பார். அப்பொழுது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அது எத்தனை பேரை உறுத்தியிருக்குமோ என்று இன்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது.
// உங்க பதிவை படிச்சதும்.. அதோட துளசி கோபலோட பின்னூட்டத்தை படிச்சதும் என்னுடைய அந்த வயசு நினைவுகள் எல்லாம் அப்படியே படமாட்டம் ஓடுது.. //
அதையெல்லாம் எழுதுங்க ஜோசப் சார். காத்திருக்கிறோம்.
// இப்படிப் பல விடயங்கள் நெஞ்சை விட்டு நீங்காமல் இருக்கும். எழுதி விட்டால் பின்னர் ஒரு பாரம் குறைந்தது போல மனசு லேசாகி விடும். உங்களுக்கும் இப்போது திரைமறைவில் பாடவைத்த அந்த ஏமாற்றமான நினைப்பிலிருந்து சற்றேனும் விடுதலை கிடைத்திருக்கும்.
பிஞ்சு உள்ளங்களின் உணர்வுகளை பெரியவர்கள் உணர மறுப்பது கொடுமை. //
உண்மை சந்திரவதனா, இப்பொழுது மனது கொஞ்சம் லேசாக இருக்கிறது. இதைப் படித்தவர்களாவது பார்த்துச் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
// இப்பிடியெல்லாம் வாத்தியார் இருக்காங்களா! ராகவனை இப்போ பார்த்தாங்கன்னா நிச்சயம் வெட்கி தலை குனிவாங்க! விடுங்க ராகவன் அதான் பெரியாளாயிட்டீங்களே .அவங்களுக்கு மேடையில பாட வாய்ப்பு குடுப்பீங்களா? //
நிச்சயமாக செயக்குமார். பாடத் தெரிந்தால் வாய்ப்புக் குடுப்பதில் என்ன தயக்கம். இப்பொழுது வேலையில் டீம் லீடிங் பொசிஷனின் இருக்கின்றேன். என்னுடைய கவனம் பாகுபாடு பார்க்காமல் இருப்பதிலும் செயல்படுகிறது. பல மொழி, மதம், இனம் உண்டு. அவர்களுக்குள் பாகுபாடு பாராமல் இருப்பதற்கு இது போன்ற என் நிகழ்வுகள் உதவுகின்றன.
// சின்ன வயது வடுக்கள் அவ்வளவு சீக்கிரம் மறப்பதில்லை. ஆனால் அதுவே உங்களை முன்னேற்றப் பாதைக்கு ஊக்குவிக்கும் கருவியாக இருந்திருக்கும். எந்த நிகழ்விலும், அதன் பாஸிடிவ் பக்கத்தையே யோசியுங்கள். //
சரியாகச் சொன்னீர்கள் தாணு. எனக்கு ஒருவர் கஷ்டம் தந்தால், வந்தால், அந்தக் கஷ்டத்தை நான் அடுத்தவருக்குத் தரக்கூடாது என்றுதான் முடிவெடுக்கிறது. மனச் சங்கடங்கள் என்னைப் புடம் போடத்தான் செய்கின்றன. ஒருவர் என்னைப் பற்றி எல்லாரிடமும் கேவலமாகப் பேசினார். நான் அதை கண்டுக்காமலேயே விட்டு விட்டேன். நான் கற்ற பாடம் : யாரையும் கேவலமாகப் பேசுவதில்லை. எண்ணுவதுமில்லை. முடிந்தவரையில்.
Engalukku oru ezhuthalar ippa irukkaru.. Avare oru padagaragavum vandiruppar...We missed that!!!
// Engalukku oru ezhuthalar ippa irukkaru.. Avare oru padagaragavum vandiruppar...We missed that!!! //
அடடா! சுதர்சனா! இப்படிப் போட்டுத் தாக்குறியேப்பா! தாங்காது தாங்காது!
Oh..yah..I did not miss that padagar in him... In,fact I hear daily,whenever we discus about songs!!
// பொதுவாக எங்கள் பள்ளியிலும் அப்படித்தான் குருப் டான்ஸ்காக மாணவிகளை எடுக்கும் போது அழகானவர்கள்,வெள்ளையாக இருப்பவர்கள்,மிஞ்ஞிப் போனால் பள்ளிக்கு நன்கொடை செய்யும் பண்க்கார வீட்டு பிள்ளைகள் இப்படி இவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்.அப்பொழுது சில சமையம் என்னையும் சேர்க்க மாட்டேன்கிறார்களே என்ற ஆதங்கம் இருந்திருக்கிறது.ஆனால் நான் இதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டதில்லை.ஏனென்றால் இப்படி சேர்ந்தால் நிறைய வகுப்பை தவற விட வேண்டும் //
பல்லவி அத்தோடு அந்த நிகழ்ச்சிகளுக்கான உடையலங்காரங்களுக்கான செலவையும் சொல்லுங்கள். பின்னாட்களில் எனது சகோதரி அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது மிகவும் மகிழ்ந்தேன் என்றால் மிகையில்லை. நமக்குக் கிடைக்காத ஒன்று நமக்கு வேண்டியவர்களுக்குக் கிடைப்பது மகிழ்ச்சிதானே.
// Oh..yah..I did not miss that padagar in him... In,fact I hear daily,whenever we discus about songs!! //
சுதர்ஷன். உன்னுடைய அடுத்த பின்னூட்டம் தமிழிலேயே இருந்தால் மிகவும் மகிழ்வேன். அதற்கு ஏதேனும் வழி செய்வதுதானே......
// i'm new to this group. i think i missed a lot.i'm from tuticorin.i born & brought up there. //
வாங்க ஆனந்த். வலைப்பூவுக்கு உங்களை வரவேற்கிறேன். விரைவில் இங்கு நல்ல பதிவுகளைத் தந்து பிரபலமாக எனது வாழ்த்துகள். நீங்களும் தூத்துக்குடீன்னு தெரிஞ்சி ரொம்ப சந்தோஷம். அடிக்கடி நம்ம வலைப்பூ பக்கம் வாங்க. பதிவுகளைப் படிச்சு உங்க கருத்துகளப் போடுங்க.
// i too have faced the same situvation.but atleast u got a chance to sing at the stage but for me at the last second they(college management) cancelled the program..i can understand ur pain and feelings //
அடக் கொடுமையே! என்னைய விட மோசமாயிருக்கும் போல உங்க கதை. இப்பிடி ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லிச் சமாதானப் பட்டுக்க வேண்டியதுதான்.
Post a Comment