கனவுகளே ஆயிரம் கனவுகளே
கனவு யாருக்குதான் இல்லை? விலங்குகளுக்கும் கனவு வருகிறது என்று இப்பொழுது சொல்கின்றார்கள். மனிதனும் ஒரு விலங்குதானே. அப்படி நான் கண்ட சில கனவுகளைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
கனவு எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? இந்த மூன்று கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் இடமில்லை. கனவோடு எனக்கிருக்கும் அனுபவங்களை மற்றும் பகிர்ந்து கொள்கிறேன்.
கனவு என்பது கனவில் புரிவதில்லை. நினைவு என்பது நினைவில் புரியவில்லை என்று சொல்வார்கள். அதாவது நாம் நினைவுலகத்தில் இருக்கும் பொழுது நாம் நினைவுலகத்தில்தான் இருக்கிறோம் என்ற உணர்வு நம்மிடம் இருப்பதில்லை. அந்த நினைப்பேயில்லாமல் இயல்பாய் இருப்போம். அதுபோல கனவு காணும் பொழுது கனவு காண்கிறோம் என்ற உணர்வு இருக்காது என்று சொல்வார்கள்.
ஆனால் பாருங்கள். என்னுடைய கதையே வேறு. நினைவுலகத்தில் எல்லாரையும் போல இருந்தாலும் என்னுடைய கனவுலகமே வேறு. கனவு காணும் பொழுது எனது மனம் எனக்குச் சொல்லும். என்ன சொல்லும்? "இப்பொழுது கண்டுகொண்டிருப்பது கனவு". அதாவது நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வு பெரும்பாலான கனவு வேளைகளில் எனக்கு இருக்கும்.
பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். சின்ன வயதில் பெரியவர்கள் பேசும் பொழுது கனவில் பாம்பு வந்தால் கெட்டது என்றும் ஆனால் வந்த பாம்பு நம்மைக் கடித்து விட்டால் நல்லது என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அப்படிக் கேட்டது ஆழ்மனதில் எப்படியோ பதிந்து விட்டது. எப்படியோ! அதற்குப் பிறகு நடந்தது, நடப்பதுதான் பெருங்கூத்து.
கனவில் பாம்பு வரும். நமக்குதான் கனவு காண்கிறோம் என்று அப்பொழுது தெரியுமே. உடனே என்னுடைய மனம் அந்தப் பாம்பு என்ன செய்கிறது என்று பார்க்கும். பேசாமல் இருந்தால் என்னுடைய மனம் ஒன்று செய்யும். "பாம்பே நீ கனவில் வந்திருக்கிறாய். நீ கடித்தால்தான் எனக்கு நல்லது. ஆகவே கடிப்பாய்." என்று சொல்லி அந்தப் பாம்பை என்னைக் கடிக்க வைக்கும். அத்தோடு கனவு முடிந்துவிடும்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது? கனவையே கட்டுப்படுத்த முடியும் தன்மை என்றா? இல்லை. கனவு காண்கின்ற உணர்வு கனவு காணும் பொழுது இருக்கிறது என்றா?
ஏன் கேட்கின்றேன் என்றால் பொதுவாகவே கனவு காணும் பொழுது அந்த உணர்ச்சி இருப்பது மட்டுமல்லாமல், அடுத்த நாள் இந்தக் கனவில் நடதவைகளை நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று முடிவும் செய்யப்படும்.
இந்தக் கனவு இப்படி என்றால் மற்றொரு கனவு இன்னும் வித்தியாசமானது. குறைந்த பட்சம். என்னைப் பொருத்தவரை. என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பொருத்த வரை.
அன்றைக்குக் கனவில் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திரைப்படத்தில் நான் அவரைப் பார்த்திருந்த தோற்றத்தில் இருந்தார். பேசினார். பேசினார். பேசிக்கொண்டே போனார். அவர் பேசியதை அடிப்படையாக வைத்து (கொஞ்சம் மாற்றியும் சேர்த்தும்) எழுதியதுதான் பெண்ணைப் பெற்றவன் என்ற சிறுகதை.
இன்னொரு நாள். அரைத்தூக்கம் என்று நினைக்கிறேன். அந்தத் தூக்கத்தில் ஒரு விருப்பம். மனம் கதைக்கருவைத் தேடி அலைகிறது. எங்கெங்கோ கிடைக்குமா என்று அலைபாய்வது எனக்குத் தெரிகிறது. திடீரென ஒரு வெளிச்சம். படக்கென்று எழுந்து உட்காருகிறேன். விளக்கைப் போட்டு விட்டு கணிப்பொறியைத் துவக்கி எழுதத் துவங்குகிறேன். கிட்டத்தட்ட ஒருமணியாகியிருக்கும். கதையைத் தட்டெழுதிவிட்டுப் போய் உடனே தூங்கி விடுகிறேன். இந்தக் கதை இதுவரை நான் இங்கு பதியவில்லை. ஏன் தெரியுமா? அதைத்தான் நான் நாளைக்குப் பதியப் போகிறேன்.
இன்னும் நிறைய நிறைய. இதெல்லாம் ஏனென்று ஆராய்ந்து அறியும் அறிவு எனக்கு இல்லை. இந்தக் கனவுகளால் எனக்கு பயனா என்றால் ஆம் என்பதே விடை. பின்னே. கதைகளுக்கும் கவிதைகளுக்கும் கற்பனை வருகையில் ஏன் விட வேண்டும்!
என்னுடைய கனவுகளை விடுங்கள். கனவுகள் பற்றி யாரிடமோ எப்பொழுதே பேசிய பொழுது கிடைத்த ஒரு செய்தி. நாம் வாழும் வாழ்க்கை என்பதே ஒருவருடைய கனவாம். அந்தக் கனவு முடியும் பொழுது நமது வாழ்க்கையும் முடிந்து போகுமாம். அவ்வளவு பெரிய கனவு யார் காண்கிறார்களாம்? நிச்சயமாக நம்மைப் போன்ற மண்ணுலகவாசிகள் இல்லையாம். நம்மை விட நிலையில் உயர்ந்தவர்களாம். அதுபோல நாம் காணும் கனவும் அதில் வருகின்றவர்களின் வாழ்க்கையாம். நம் கனவு முடியும் பொழுது அவர்களின் வாழ்க்கை முடியுமாம். இது எப்படி இருக்கு!
அப்படியே உங்கள் கனவுலக வாழ்க்கையைப் பற்றியும் எடுத்து விடுங்களேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
விசு டயலாக் மாதிரி ஒரு தெளிவான குழப்பமாக இருக்கு..
கனவு அடிக்கடி வரணுமாம். அப்பத்தான் கற்பனைகளும், நிஜ வாழ்வில் அதை அடைய வேண்டும் என்ற ஆக்க உணர்வும் வருமாம்.
ஒரு கற்பனையாளனின் ஊற்றே கனவுகள்தான். நட்டநடு ராத்திரியில் எழுந்து உங்களுடைய கனவுகளை சேமித்துக்கொள்ள இப்போது கணிப்பொறி உதவுகிறது. பின் எத்தனை வருடங்களானாலும் அதை அப்படியே பிறரோடு பகிர்ந்துகொள்ள இது போன்ற ப்ளாக்குகளைல் பதித்துவிடவும் முடியும்.எத்தனை சவுகரியம்!
அந்தநாள் நினைவுகளை அசைபோடுவதும் அதை நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுவதிலும் கிடைக்கும் ஆனந்தம் ஒரு அலாதியானது!
அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
வாழ்த்துக்கள் ராகவன். உங்களுடைய அனுபவங்களை, சந்தோஷங்களை, சோகத்தை படிப்பவரும் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் எழுதும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
ரொம்ப கனவிலேயே வாழ்ந்திடாதீங்க
// விசு டயலாக் மாதிரி ஒரு தெளிவான குழப்பமாக இருக்கு.. //
குழப்பத்துல இருக்குற உங்கள ரொம்பக் குழப்புன ராகவன் குழப்பவாதியான்னு குழப்பமில்லா குழம்பிக்கோங்க விஜய். :-)
// ஒரு கற்பனையாளனின் ஊற்றே கனவுகள்தான். நட்டநடு ராத்திரியில் எழுந்து உங்களுடைய கனவுகளை சேமித்துக்கொள்ள இப்போது கணிப்பொறி உதவுகிறது. பின் எத்தனை வருடங்களானாலும் அதை அப்படியே பிறரோடு பகிர்ந்துகொள்ள இது போன்ற ப்ளாக்குகளைல் பதித்துவிடவும் முடியும்.எத்தனை சவுகரியம்! //
உண்மைதான் ஜோசப் சார். நம்ம கற்பனைகளுக்கு வடிவம் குடுக்க டெக்னாலஜி எவ்வளவு பயன்படுது பாத்தீங்களா!
// வாழ்த்துக்கள் ராகவன். உங்களுடைய அனுபவங்களை, சந்தோஷங்களை, சோகத்தை படிப்பவரும் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் எழுதும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. //
ஜோசப் சார், உங்க பாராட்டு ரொம்ப சந்தோஷத்தைத் தருது. மதியம் வீட்டுக்குப் போய் கூட ரெண்டு வாய் சாப்பிடுவேன். :-)
// ரொம்ப கனவிலேயே வாழ்ந்திடாதீங்க //
உண்மைதான் தாணு. கனவே வாழ்க்கையாகாது. ஆனால் கனவில் சொல்லப்படும் செய்திகள் பயனுள்ளதாக இருக்குதே.
அப்புறம் இன்னொரு விஷயம். இந்தப் பதிவு எழுதும் போது கனவில் வந்த கதையை நாளைக்குப் போடுறதோ சொல்லியிருந்தேன். ஆனா நாளைக்குப் போடப்போறதில்லை. அடுத்த வாரம்...ஒரு சமயம் போடறேன்.
கதையை நாளைக்குப் போடாதமாதிரி கனவு வந்துருச்சாக்கும்? :-)
நேத்து ஒரு பொந்துக்குள்ளே இருந்து வர்ற ரெண்டு எலிகளை ரெண்டு கையாலேயும்( கைக்கு ஒன்னு)அமுக்கிப் புடிச்சுவச்சுக்கிட்டே இருந்தேன்.
ரெண்டு கையிலேயும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா 'டுவாடாரா' மாதிரி இருந்தது.
// கதையை நாளைக்குப் போடாதமாதிரி கனவு வந்துருச்சாக்கும்? :-) //
ஹி ஹி நீங்க ரொம்ப கேள்வி கேக்குறீங்க டீச்சர். ஹி ஹி.
// நேத்து ஒரு பொந்துக்குள்ளே இருந்து வர்ற ரெண்டு எலிகளை ரெண்டு கையாலேயும்( கைக்கு ஒன்னு)அமுக்கிப் புடிச்சுவச்சுக்கிட்டே இருந்தேன்.
ரெண்டு கையிலேயும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா 'டுவாடாரா' மாதிரி இருந்தது. //
அடக்கடவுளே...கடைசில அத என்ன செஞ்சீங்க? இராமநாதனுக்கு மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பீட்டீங்களா? அவரு பாயாசமுன்னு நெனச்சு தொறந்துறப் போறாரு.
கனவு காணுங்கள் என்று கலாம் சொன்னதும் சொன்னார், எல்லோரும் கனவிலேயே மிதக்கிறீர்களே?
ஹிஹி எனக்கு கனவு கருப்பு வெள்ளையில் வருகிறது. அதனைக் கலர்க்(பிகர் இல்லேங்க)கனவுகளாக மற்ற ஏதேனும் வழிவகைகள் உள்ளனவா?
சுஜாதா ஒருமுறை இந்த கலர்க்கனவுகள் பற்றி எழுதியதாக ஞாபகம்.
இராகவன். ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் இதே அனுபவங்கள் தான் (பாம்புக் கனவு தவிர...எனக்கு நினைவு தெரிந்து...இல்லை இல்லை கனவு தெரிந்து :-) பாம்பு கனவில் வந்ததில்லை). கனவு காணும் போதே நான் கனவு காண்கிறேன் என்ற உணர்வு இருக்கும். அதனால் Nightmares வருவதில்லை. கனவு பிடிக்காத திசையில் போனால் அதனை பிடித்த திசையில் திருப்பி விட முடிகிறது.
நான் சமீபத்தில் எழுதிய 'நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்' அந்த பதிவு எழுதிய முதல் நாள் இரவு வந்த கனவுதான். :-) http://koodal1.blogspot.com/2005/11/58.html
ஜோசப் சார் சொன்ன மாதிரி கணினியும் வலைப்பதிவும் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது.
ராகவன் அவர்களே,
எனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நான் போட்ட பதிவுகள் இதோ.
1)
2)
அப்பதிவுகளின் பின்னூட்டங்களும் சுவாரசியமானவையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// ஹிஹி எனக்கு கனவு கருப்பு வெள்ளையில் வருகிறது. அதனைக் கலர்க்(பிகர் இல்லேங்க)கனவுகளாக மற்ற ஏதேனும் வழிவகைகள் உள்ளனவா? //
அடடா! என்ன பிரச்சனை...என்ன பிரச்சனை....பேசாம கலர் கண்ணாடி மாட்டிக்கிட்டுத் தூங்குங்க.
// கனவு காணும் போதே நான் கனவு காண்கிறேன் என்ற உணர்வு இருக்கும். அதனால் Nightmares வருவதில்லை. கனவு பிடிக்காத திசையில் போனால் அதனை பிடித்த திசையில் திருப்பி விட முடிகிறது. //
அதே அதே குமரன். சரியாச் சொன்னீங்க. பாம்பு கனவிலும் அப்படித்தானே. பிடித்த திசையில் திருப்பி விடுகிறேனே. எடுத்துக்காட்டிற்குச் சொன்னது அது. nightmares எனக்கும் வருவதில்லை.
உங்க லிங்க்கையும் போய்ப் பார்க்கிறேன்.
// ராகவன் அவர்களே,
எனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நான் போட்ட பதிவுகள் இதோ.
1)
2)
அப்பதிவுகளின் பின்னூட்டங்களும் சுவாரசியமானவையே. //
டோண்டு சார். உங்கள் கனவுகள் பதிவும் பின்னூட்டங்களும் படித்தேன். வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போல. இப்படி மனித மனங்களில் இருக்கும் கனவுகளை எல்லாம் எடுத்து ஆராய்ந்தால் எப்படி இருக்கும்?
கனவுகள் பல சிக்கல்களுக்கு தீர்வா இருந்திருக்கு இராகவன்.
பென்சீன் -க்கு எப்படி படம் இருக்கணும்னு அதைக் கண்டுபிடிச்சவர் மூளையைக் கசக்கிட்டிருந்தார்.
அவருடைய கனவில் பாம்புகள்
வந்தன.
எப்படி தெரியுமா?
ஒரு பாம்பின் வாலை இன்னொரு பாம்பு கவ்வியபடி அறுகோணவடிவில்.அதையே டையக்ராமாக வைத்தார்.
(இங்கே அறுகோணமென்றால் நடுப்பகுதி சற்றே நீளமாக இருக்கும்.படமாக இட இயலவில்லை.)
என் கனவில் இருமுறை ரஜினியும்,ஒரு முறை கமலஹாசனும்,ஒருமுறை ஜெயலலிதாவும் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.எதற்கு என்று தெரியவில்லை.
என்னுடைய கனவில் யாரையேனும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறேன்:-)
மேலும் என்னுடைய கனவைச் சொல்லணும் என்றால் தனிப்பதிவிடணும்.
/\
| |
\ /
இவை இடைவெளியில்லாது ஒட்டி இருக்க வேண்டும்.
சரியான பென்சீனின் டையக்ராம்
இதற்கு மேல் சரியாக இங்கே இடத்தெரியவில்லை இராகவன்.
ஆகா மதுமிதா....வாங்க...வந்தவங்கள்ளாம் எதுக்கு வாழ்த்துனாங்கன்னு கேட்டுருக்கக் கூடாதா? நாம உங்களுக்கு ஒரு விழா எடுத்திருக்கலாமே.
நீங்கள் சொல்ல வந்த பென்சீன் வரைபடம் புரிந்தது மதுமிதா.
Post a Comment