Tuesday, January 16, 2007

05. கின்னிக்கோழியும் சிவன்கோயில் கடையும்

முந்தைய பாகம் இங்கே.

தீபாவளிச் சுற்றுப்பயணம் எழுதத் தொடங்கி பொங்கலும் வந்துருச்சு. இனியும் இத ரொம்ப நீட்டுனா மக்கள் அடிக்க வந்துருவாங்க. ஆகையால தூத்துக்குடியில நடந்த பாத்த மூனு நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி விட்டு மதுரை அத்தியாயத்துக்குப் போறேன். :-) பயப்படாதீங்க. எவ்வளவு சுருக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாச் சொல்றேன்.

தூத்துக்குடியில நான் ஒரு பறவையைப் பாத்தேன். வீட்டுக்குப் பின்னாடி. ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. வான்கோழியோன்னு நெனைச்சேன். ஆனா அந்த அளவுக்கு றெக்கைகள் இல்ல. இது மண்ட ரொம்பச் சின்னதா கழுத்து ரொம்பவும் மெலிஞ்சி...ஆனா ஒடம்பு மட்டும் தண்டியா உருண்டையா இருந்துச்சு. எனக்கு அதுக்கு என்ன பேர்னே தெரியலை. அதை ஒரு ஃபோட்டோ புடிச்சி நம்ம வலைப்பூவுல போடனும்னு நெனச்சேன். ஆனா சோதனைக்குன்னு அது சரியா போட்டோ எடுக்கும் போது நகந்துருச்சு. நாலஞ்சு போட்டோ வெறும் போட்டோவா வந்துச்சு. ஒரு போட்டோவுல மூஞ்சியப் படம் பிடிக்கப் பாத்தா படபடன்னு றெக்கைய அடிச்சிக்கிட்டு கால்தான் விழுந்தது. கடைசியில ரொம்ப கஷ்டப்பட்டதப் பாத்து நேருக்கு நேர் ஒரு போஸ் குடுத்தது. அப்படியே டபடபன்னு பறந்து சொவத்து மேல உக்காந்துகிட்டு ஜம்முன்னு ஒரு போஸ். அந்தக் கோழிக்குப் பேரு கின்னிக் கோழியாம். பெரிய ண் போடனுமா சின்ன ன் போடனுமான்னு கூடத் தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க.


அப்படியே காலையில எந்திரிச்சி பேப்பர் வாங்கலாம்னு தூத்துக்குடி புதுக்கிராமத்துல இருந்த தியாகராஜன் கடைக்குப் போனேன். அந்தத் தெருவுல மூனு மளிகைக்கடைங்க பிரபலம். அதாவது ரொம்ப காலமா இருக்குறது. கிட்னங் கடை, தியாகராஜன் கடை, சிவசாமி கடை. இந்த மூனுந்தான் அந்த கடைகள். அதே போலக் காய்கறிக் கடைகள்ள கன்னியம்மா கடையும் முனுசாமி கடையும். இதுல எந்தக் கடைக்கும் பேர்ப்பலகை கெடையாது. எல்லாம் கடைக்குச் சொந்தக்காரங்க பேருதான். இப்பக் கன்னியம்மா கடை இல்ல. இடிஞ்சிருந்தது. முனுசாமி கடை இருக்குது.

மளிகைக்கடைகள்ல கிட்னங் கடையும் தியாகராஜன் கடையும் இருக்குது. சிவசாமி கடைய சிவசாமியோட மகன் பாத்துக்கிறாரு. ஆனா வேற எங்கயோ கடைய மாத்தீட்டுப் போயிட்டாராம். நான் பேப்பரு வாங்கப் போனது தியாகராஜன் கடை. இப்ப தியாகராஜனும் இல்லை. அவரு மகந்தான் கடையப் பாத்துக்குறது. நான் அந்தக் கடைக்குப் போறது...கிட்டத்தட்ட ஏழெட்டு வருசங்களுக்கு அப்புறமா. போனதும் அங்க ஆனந்த விகடன் தீபாவளி மலரைப் பாத்தேன். அப்புறம் ஜெயா டீவியில 3D நாடகத்துக்குக் கண்ணாடி இருந்தது. அதுல ஒன்னு வாங்குனேன்.

எல்லாத்துக்கும் காசு குடுத்துட்டு கெளம்புறப்போ கடைக்காரரு கேட்டாரு. "நீங்க பாபுவா"ன்னு. அது எங்க அத்தை மகன். அவங்க வீட்டுலதான் நான் வளந்தது. இல்லைன்னு மறுத்துட்டு நான் யாருன்னு சொன்னேன். அவருக்கு நாவகம் வந்துருச்சி. "ஆமாமா ஞாவகம் இருக்கு. ரொம்ப வருசமாச்சுல்ல. அப்ப டிரவுசரு போட்டுக்கிட்டு பாத்தது." அடக் கொடுமையே...கடைக்கு casual trouserம் sleeveless டி சட்டையும் போட்டுப் போனது தப்பாப் போச்சு. எப்பவோ டிரவுசர் போட்டதெல்லாம் இவருக்கு நெனைவுக்கு வருதேன்னு நெனைச்சேன். அவரு ரெண்டு பழைய விஷயங்கள எடுத்து விட்டாரு.

புதுக்கிராமங்குறது ஒரு தெரு. அதுவும் பழைய தூத்துக்குடியில உள்ள பிரபலமான தெரு. அங்க இருந்த எல்லாருக்கும் எல்லாரையும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். இவரு அந்தத் தெருவுலயே பொறந்து வளர்ந்து தொழில் பாக்குறவரு. கண்டிப்பா நினைவு வெச்சிருக்குறதுல ஆச்சரியமில்லை. சின்ன வயசுல எனக்கு பெரிய மிட்டாய்...அதாங்க கேட்பரீஸ் மாதிரி சாக்லேட் பார்ஸ் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. ஆசை மட்டும் பட்டா போதுமா...அப்ப அதெல்லாம் ரொம்பப் பெரிய விசயம் எங்களுக்கு. எப்படியோ யாரோ சொந்தக்காரங்க வந்தப்போ கொடுத்த காசுகளச் சேத்து வெச்சி ஒரு நாள் அந்த பார் சாக்லேட்ட தியாகராஜன் கடையில வாங்கினேன். வீட்டுக்குச் சொல்லீட்டுதான். அது கட்டியா பெருசா இருக்கும்னுதான் நான் நெனச்சேன். ஆனா அது பழைய சாக்லேட் போல.....நெகிழ்ந்து போயி மாவு மாதிரி இருந்தது. அதுல ஓட்டையெல்லாம் இருந்தாப்புல நெனவு. இருந்தாலும் வீட்டு வாசல்லயே உக்காந்து தின்னுட்டு நல்லாயிருந்ததுன்னு பொய்ப்பெருமையா வீட்டுல சொன்னேன். இப்ப விருப்பப்பட்ட சாக்லேட் வாங்கிச் சாப்புடுற வசதிய முருகன் குடுத்திருக்கான். ஆனா சாக்லேட் ஆசைதான் இல்லை. சாப்பிட்டா காலரி கூடீருமோன்னு ஒரு பயம் வேற. ம்ம்ம்....ஆசப்பட்டது இருக்குது. அனுபவிக்கத்தான் முடியல.

ரொம்ப நாளுக்கப்புறம் ஊருக்கு வந்திருக்கோமேன்னு கோயிலுக்குப் போனோம். தூத்துக்குடியில பெரிய கோயில்கள்னா சிவங்கோயில், பெருமாள் கோயில், மாதா கோயில் (பெரிய கோயில்), சின்னக் கோயில். இதுல பெரிய கோயிலும் சின்னக் கோயிலும் சர்ச்சுகள். உருவத்த வெச்சிப்பாத்தா சின்னக் கோயில் பெருசாயிருக்கும். பெரிய கோயில் சிறுசா இருக்கும். ஆனாலும் பெரிய கோயில் திருவிழான்னா தூத்துக்குடியே களை கட்டும். கிருத்துவர்கள் மட்டுமல்ல இந்துக்களும் அங்க போவாங்க. நானும் போயிருக்கேன். அங்க போயிட்டு வழியிலேயே சிவங்கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் போவாங்க. பெரும்பாலானவங்க அதெல்லாம் கண்டுக்கிறதில்லை. தூத்துக்குடி கடற்கரையூரு. அங்க பழைய துறைமுகத்துக்கு எதுத்தாப்புல ஒரு சின்ன பிள்ளையார் கோயில் உண்டு. அதுக்குக் கட்டளைக்காரரா ஒரு கிருத்துவக் காண்டிராக்டரும் எனக்குத் தெரிஞ்சி இருந்தாரு. அவர் பேர்ல பூசை வெச்சி பலவாட்டி சக்கரைப் பொங்கலும் புளியோதரையும் பிரசாதங் கொடுத்திருக்காங்க.

அதே மாதிரி சிவங்கோயில்ல நடக்குற சூரசம்காரமும் ரொம்ப நல்லாயிருக்கும். தூத்துக்குடியில சூரசம்காரம் பாத்தவங்கள திருச்செந்தூர் சூரசம்காரத்தத் தவிர வேறெந்த சூரசம்காரமும் திருப்திப் படுத்த முடியாது. சிவங்கோயில ஒட்டியே பெருமாள் கோயிலும். சிவங்கோயில் பெருசு. பெருமாள் கோயில் சிறுசு. ஆனா சிவங்கோயில விட பெருமாள் கோயில் ஜொஜ்ஜொலிப்பா இருக்குறாப்புல இருக்கும். கோயிலுக்குப் போறப்போ வெளிய ஒரு கடை. பூசைப் பொருளெல்லாம் விக்குற கடை. காண்டிராக்ட் விட்டுருப்பாங்க. அந்தக் கடையைப் பாத்ததும் படக்குன்னு ஒரு யோசனை. கடையில இருந்த அம்மாகிட்ட உத்தரவு கேட்டுட்டு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டேன். ஏன் தெரியுமா? கோயிலுக்குப் போற அத்தனை இந்துக்களும் பூசனைப் பொருள் வாங்குற கடைய நடத்துற அவங்க கிருத்துவங்க. படத்தப் பாருங்க. உங்களுக்கே புரியும்.



























அன்புடன்,
கோ.இராகவன்

26 comments:

said...

நல்ல சமய நல்லிணக்கம் உள்ள ஊர்தான் உங்க ஊரு! :)

said...

புதுகிராமம் புதுக்கிராமம்னு நீங்க முந்தியே சொல்றப்ப இருந்து எனக்கு அது ஒரு பகுதியோட பேரா தெருவோட பேரான்னு ஐயம் இருந்தது. நீங்க விவரிச்சதைப் பாத்தப்ப தெருவோட பேரா தான் இருக்கும்ன்னு நெனைச்சேன். தெளிவா இப்ப சொல்லிட்டிங்க. :-)

அடுத்து மதுரையில என்ன பாத்தீங்கன்னு எழுதுங்க.

said...

// இலவசக்கொத்தனார் said...
நல்ல சமய நல்லிணக்கம் உள்ள ஊர்தான் உங்க ஊரு! :) //

கொத்சு...இந்த சமய நல்லிணக்குத்தல ஒரு கொறச்சலும் இல்ல. அதுனால தூத்துக்குடியில மதச்சண்டைங்குறது எனக்கு நெனவு தெரிஞ்சி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனா சாதிச்சண்டை நெறைய. குறிப்பா மீன் பிடிக்கின்றவர்களுக்கும் வணிகம் செய்றவங்களுக்கும் அப்பப்ப நடக்குற உரசல்.....டி.பி.ஆர்.ஜோசப் சார் கிட்ட கேளுங்க. அவரு லேசா திரும்பிப் பாத்தாலே போதும். சாதிச்சண்டைக் காவியங்களை அள்ளி விடுவாரு.

said...

// குமரன் (Kumaran) said...
புதுகிராமம் புதுக்கிராமம்னு நீங்க முந்தியே சொல்றப்ப இருந்து எனக்கு அது ஒரு பகுதியோட பேரா தெருவோட பேரான்னு ஐயம் இருந்தது. நீங்க விவரிச்சதைப் பாத்தப்ப தெருவோட பேரா தான் இருக்கும்ன்னு நெனைச்சேன். தெளிவா இப்ப சொல்லிட்டிங்க. :-) //

ஆமாம் குமரன். புதுக்கிராமம் என்பது ஒரு தெருதான். அதுவும் பஸ்ஸடாண்டுக்கு மிக அருகில் இருக்கும் தெரு. ஆங்கிலத்தில் இதை நியூ காலனி என்பார்கள். தூத்துக்குடியில் தெருப்பெயர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். போல்டன்புரம், டூவீபுரம் என்றெல்லாம் இருக்கும்.

// அடுத்து மதுரையில என்ன பாத்தீங்கன்னு எழுதுங்க. //

அதான் மதுரையில வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்துச்சே. :-) ஆனா ஊர் சுத்திப் பாத்ததும் உண்டு. நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டதும் உண்டு.

said...

இராகவன்,
மிகவும் அருமையாக, இரசிக்கும் வண்ணம் உங்கள் அனுபவத்தைச் சொல்லியுள்ளீர்கள்.

/* இதுல எந்தக் கடைக்கும் பேர்ப்பலகை கெடையாது. எல்லாம் கடைக்குச் சொந்தக்காரங்க பேருதான். இப்பக் கன்னியம்மா கடை இல்ல. இடிஞ்சிருந்தது. முனுசாமி கடை இருக்குது. */

ஈழத்தில் உள்ள எனது ஊரை நினைவுபடுத்துகிறது இச் சம்பவம். எனது ஊரும் ஒரு சிறிய கிராமம். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். அங்கும் இப்படித்தான் உரிமையாளரின் பெயரைச் சொல்லித்தான் அக் கடைகளை விளிப்போம். பெயர்ப் பலகை எல்லாம் கிடையாது. அதெல்லாம் பட்டினங்கள், நகரங்களில் தான்.

said...

அடடா.. இந்த தொடர நா எப்படியோ மிஸ் பண்ணிட்டனே..

தூத்துக்குடி புதுக்கிராமம்..

ம்ம்ம்ம்.. எனக்கு நிறைய பழக்கமான இடம். பிரையண்ட் நகருக்கு போற வழியில எத்தன தரம் போயிருப்பேன். அப்புறம் என்னோட பதிவுல வந்த திரையரங்கு ஓனரோட வீடும் அங்கதான இருக்கு.. எத்தனை முறை வந்திருப்பேன்:(

கொத்தனார் சொல்றா மாதிரி தூத்துக்குடி மட்டுமில்ல நா இருந்த எத்தைனையோ ஊர்கள் மத நல்லிணக்கத்துக்கு பெயர் பெற்றிருக்கிறது. நாகூர் சந்தனக்கூடு பெருவிழாவில் கலந்துக்கொள்ளாத சமயத்தவரே இல்லையே..

பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது ராகவன் உங்களுடைய பதிவு.

said...

டி.பி.ஆர்.ஜோசப் சார் கிட்ட கேளுங்க. அவரு லேசா திரும்பிப் பாத்தாலே போதும். சாதிச்சண்டைக் காவியங்களை அள்ளி விடுவாரு//

உண்மைதான்.. ஆனால் அது சமீப காலமாக தோன்றிய பிரச்சினை. அரசியல்வாதிகளின் குறுக்கீட்டால் மட்டுமே அது கொழுந்துவிட்டு எரியத் துவங்கியிருக்கிறது.. அவ்வப்போது வெளிப்படும்.. ஆனால் அது நிரந்தர பகையாக இருந்ததில்லை..

said...

/ அந்தக் கோழிக்குப் பேரு கின்னிக் கோழியாம். பெரிய ண் போடனுமா சின்ன ன் போடனுமான்னு கூடத் தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க./

உயிரோட இருக்கிற வரைக்கும் கின்னிக்கோழி...
கொழம்பு வச்சு கிண்ணத்துக்கு வந்துட்டா கிண்ணிக்கோழி....

/கடையில இருந்த அம்மாகிட்ட உத்தரவு கேட்டுட்டு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டேன். ஏன் தெரியுமா? கோயிலுக்குப் போற அத்தனை இந்துக்களும் பூசனைப் பொருள் வாங்குற கடைய நடத்துற அவங்க கிருத்துவங்க. படத்தப் பாருங்க. உங்களுக்கே புரியும்./

எல்லாருக்கும் புரிஞ்சா சரிதான்!!!

said...

// வெற்றி said...
இராகவன்,
மிகவும் அருமையாக, இரசிக்கும் வண்ணம் உங்கள் அனுபவத்தைச் சொல்லியுள்ளீர்கள். //

நன்றி வெற்றி.

// ஈழத்தில் உள்ள எனது ஊரை நினைவுபடுத்துகிறது இச் சம்பவம். எனது ஊரும் ஒரு சிறிய கிராமம். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். அங்கும் இப்படித்தான் உரிமையாளரின் பெயரைச் சொல்லித்தான் அக் கடைகளை விளிப்போம். பெயர்ப் பலகை எல்லாம் கிடையாது. அதெல்லாம் பட்டினங்கள், நகரங்களில் தான். //

உண்மைதான் வெற்றி. எங்களூர்ப் பட்டிக்காட்டிலும் கடைக்குப் பெயர் கிடையாது. கடை வைத்தவரின் பெயர்தான் கடைப்பெயர். சின்ன வயதில் பருத்தியை வீட்டிலிருந்து கொண்டு போய் ஈடாக சேவு, பலாக்கொட்டை, சீனிக்கிழங்கு, சீவல் வாங்கிச் சாப்பிட்ட நினைவுகளைக் கிளறுகிறீர்கள் வெற்றி. :-)

said...

// tbr.joseph said...
அடடா.. இந்த தொடர நா எப்படியோ மிஸ் பண்ணிட்டனே..

தூத்துக்குடி புதுக்கிராமம்.. //

ஒங்களுக்குத் தெரியாத தூத்துக்குடியா நான் சோல்லீரப் போறேன்! :-)

// ம்ம்ம்ம்.. எனக்கு நிறைய பழக்கமான இடம். பிரையண்ட் நகருக்கு போற வழியில எத்தன தரம் போயிருப்பேன். அப்புறம் என்னோட பதிவுல வந்த திரையரங்கு ஓனரோட வீடும் அங்கதான இருக்கு.. எத்தனை முறை வந்திருப்பேன்:( //

ஆமா. இப்ப பெரியவரு வீடுதான் இருக்காம். சின்னவரு வீட்டை வித்துட்டதா கேள்விப்பட்டேன். அப்புறம் பல் டாக்டர் ஸ்டீவனை மறந்து விட்டீர்களே. பிரின்ஸ் டாக்டர் வீடும் அதே தெருதான். சின்ன வயசில் எனக்கு ஊசி போடுவதற்கு அவரும் நர்சுகளும் பட்டபாடு நினைவிற்கு வருகிறது.

// கொத்தனார் சொல்றா மாதிரி தூத்துக்குடி மட்டுமில்ல நா இருந்த எத்தைனையோ ஊர்கள் மத நல்லிணக்கத்துக்கு பெயர் பெற்றிருக்கிறது. நாகூர் சந்தனக்கூடு பெருவிழாவில் கலந்துக்கொள்ளாத சமயத்தவரே இல்லையே.. //

உண்மைதான் ஜோசப்சார்.

// பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது ராகவன் உங்களுடைய பதிவு. //

நீங்கதான் திரும்பிப் பாக்குறவராச்சே. இதுல இந்தப் பதிவு இன்னொரு வாட்டி திரும்பிப் பாக்க வெச்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

said...

சீக்கிரம் எங்க ஊருக்கு வாங்க..

said...

// tbr.joseph said...
டி.பி.ஆர்.ஜோசப் சார் கிட்ட கேளுங்க. அவரு லேசா திரும்பிப் பாத்தாலே போதும். சாதிச்சண்டைக் காவியங்களை அள்ளி விடுவாரு//

உண்மைதான்.. ஆனால் அது சமீப காலமாக தோன்றிய பிரச்சினை. அரசியல்வாதிகளின் குறுக்கீட்டால் மட்டுமே அது கொழுந்துவிட்டு எரியத் துவங்கியிருக்கிறது.. அவ்வப்போது வெளிப்படும்.. ஆனால் அது நிரந்தர பகையாக இருந்ததில்லை.. //

அப்படிச் சொல்ல முடியவில்லை என்றாலும் நிரந்தரப் பகையாக இருந்து விடக் கூடாது என்றே விரும்புகிறேன். ஒரு சமயத்தில் தூத்துக்குடியிலேயே மீன் கிடைக்கையில் திருநவேலியில் இருந்து மீன் வாங்கிச் சாப்பிட்ட கதையும் நடந்ததுதானே. நிலமை மாறும் என்றே நம்புகிறேன்.

said...

// அருட்பெருங்கோ said...
/ அந்தக் கோழிக்குப் பேரு கின்னிக் கோழியாம். பெரிய ண் போடனுமா சின்ன ன் போடனுமான்னு கூடத் தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க./

உயிரோட இருக்கிற வரைக்கும் கின்னிக்கோழி...
கொழம்பு வச்சு கிண்ணத்துக்கு வந்துட்டா கிண்ணிக்கோழி.... //

யாரு காதற் கவிஞரா! இதுவும் சொல்லுவீரு. இதுக்கு மேலையுஞ் சொல்வீரு. நீர் பெரிய கோழிப்பிரியர்ங்குறத மக்களுக்குச் சொல்லியே ஆகனுமய்ய. chickனா கோழியச் சுருக்கமாக் கூப்புடுறதுதானே? ;-)

said...

ஜி.ரா . தியாகராஜன் கடைங்கிறது பெருமாள் கோவில் எதிரில் இருப்பதுதானே. என் அறை சாரதா கல்யான மண்டபம் முன்புதான் இருந்தது.

said...

// Dharumi said...
சீக்கிரம் எங்க ஊருக்கு வாங்க.. //

அடுத்து ஒங்க ஊர்தான். ஓரு தொடர்கதை தொடங்கலாம்னு இருக்கேன். அது முந்துதோ...மதுரைப் பதிவு முந்துதோ.

// செந்தில் said...
ஜி.ரா . தியாகராஜன் கடைங்கிறது பெருமாள் கோவில் எதிரில் இருப்பதுதானே. என் அறை சாரதா கல்யான மண்டபம் முன்புதான் இருந்தது. //

அதே அதே. கண்டுபிடிச்சிட்டீங்களே. அந்த அறையில என்ன செஞ்சீங்க? :-)

said...

/
யாரு காதற் கவிஞரா! இதுவும் சொல்லுவீரு. இதுக்கு மேலையுஞ் சொல்வீரு. நீர் பெரிய கோழிப்பிரியர்ங்குறத மக்களுக்குச் சொல்லியே ஆகனுமய்ய. chickனா கோழியச் சுருக்கமாக் கூப்புடுறதுதானே? ;-)/

நான் 'சிக்'கனமா செலவு பண்றேங்கறத சொல்றீங்களோ? ;-)

said...

ஹையா!!!!!
தூத்துக்குடிய சுத்திப் பாத்தாச்சு.

மதுரை எப்ப ராகவன் சார்???

சீக்கிரம்..........

said...

வணக்கம் ராகவன் சார்..
அருமையான பதிவு...
நல்லா சொல்லி இருக்கீங்க.. கூடவே நடந்தது வந்த மாதிரி ஒரு உணர்வு

\\ஆனா சிவங்கோயில விட பெருமாள் கோயில் ஜொஜ்ஜொலிப்பா இருக்குறாப்புல இருக்கும். \\

அப்புறம் ஒரு கேள்வி (கேள்வி மட்டும் தான் தெரியும்)
சிவன் கோவில்கள் மட்டும் ஏன் ஜொஜ்ஜொலிப்பா இருப்பதில்லை பாழ்ழடைந்தது போல் உள்ளது?

said...

Ragavan,

Yeah its me. I cudnt type in Tamil. Its called "Guinea fowl". Guinea Kozhi thaan sariyaana peru. Namma makkal Kinnikkozhi aakkittanga. So Guinea kku entha "n" varumoo athai pooddukkoongka.

said...

மத நல்லிணக்கம் கடைசி படத்தில் தெரிகிறது.
:))))))))))

said...

// இம்சை அரசி said...
ஹையா!!!!!
தூத்துக்குடிய சுத்திப் பாத்தாச்சு.

மதுரை எப்ப ராகவன் சார்???

சீக்கிரம்.......... //

மருத வருது தாயி வருது. இந்த வாரம் மருத எப்படியும் வந்துரும்.

// கோபிநாத் said...
வணக்கம் ராகவன் சார்..
அருமையான பதிவு...
நல்லா சொல்லி இருக்கீங்க.. கூடவே நடந்தது வந்த மாதிரி ஒரு உணர்வு //

நன்றி கோபிநாத்

\\\\ஆனா சிவங்கோயில விட பெருமாள் கோயில் ஜொஜ்ஜொலிப்பா இருக்குறாப்புல இருக்கும். \\

அப்புறம் ஒரு கேள்வி (கேள்வி மட்டும் தான் தெரியும்)
சிவன் கோவில்கள் மட்டும் ஏன் ஜொஜ்ஜொலிப்பா இருப்பதில்லை பாழ்ழடைந்தது போல் உள்ளது? //

நல்ல கேள்விதான். ஆனா இதுக்கான விடை....சிவன் சுடலையாண்டி. ஏன்? சுடலை எல்லாரும் போயே தீர வேண்டிய இடம். அதனால்தான் அந்தப் பெயர். எல்லாரும் சேர வேண்டியது இறைவன் திருவடி என்பதால் அப்படி.

அந்தச் சுடலையில் என்ன..ஜொஜ்ஜொலிப்பாகவா இருக்கிறது? இல்லையே...அழுது வடிந்து கொண்டு...அமைதியாகத்தானே இருக்கிறது. பூதர்களும் மனிதர்களும் மும்மூர்த்திகளும் வந்தாலும் அமைதி மாறது. ஆனால் பாற்கடலைப் பாருங்கள். பட்டுப் பீதாம்பரம் என்ன...நகைகள் என்ன..சியமந்தக மணி என்ன.....அப்புறம் ஜொஜ்ஜொலிக்காமல் என்ன செய்யும்?

said...

// Rajamohan.C said...
Ragavan,

Yeah its me. I cudnt type in Tamil. Its called "Guinea fowl". Guinea Kozhi thaan sariyaana peru. Namma makkal Kinnikkozhi aakkittanga. So Guinea kku entha "n" varumoo athai pooddukkoongka. //

ஐயா..ஐயா...அறிவுக் கொழுந்தே...அற்புதம்...அற்புதம். இதுக்கெல்லாம் கிட்னி வேணும்னு பெரியவங்க சொல்லாமலாச் சொன்னாங்க. இதோ விக்கிபீடியாவுல லிங்கு. அங்கயும் இந்தப் படத்தப் போட்டிருக்காங்க. கினி ஃபவுல்னு இதுக்குப் பேரு. ரெண்டு சுழி னவே போட்டுர்ரேன்.
http://en.wikipedia.org/wiki/Guinea_fowl

said...

week ending la lam kovilgalauku thana ??

said...

ராகவா!
இதைக் கினிக்கோழியென என தான் எங்க பக்கம் கூறுவார்கள், இதை அழகுக்காகவும் பூச்சிபூரானிடமிருந்து காவலுக்காகவும் வளர்ப்போம். எங்கள் வீட்டில் (ஈழத்தில்) இருக்கிறது.Guninea fowel ஆபிரிக்கக் காடுகளில் அதிகம் .
மத நல்லிணக்கத்தைப் பற்றிக்குறிப்பிடும் போது ;கத்தோலிக்கக் உரிமையாளர் கடையில் இந்துக் கோவிலுக்குரிய பொருட்கள் விற்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இங்கே பிரான்சிலும் Chartres எனும் இடத்திலுள்ள 800 வருடம் பழைமை வாய்ந்த தேவாலயத்தருகில் ஓர்
புத்தகம்;சிலைகள் விற்கும் கடையில் பகவத்கீதை; பிள்ளையார் மற்றும் இந்துத் தெய்வச்சிலைகள் விற்பனைக்குண்டு. நம்பக சிரமமாக இருக்கும்.
அத் தேவாலயம் பற்றி ஓர் பதிவு போடுவேன் . அப்போ இயன்றவரை அக்கடையின் படம் போட முல்கிறேன்.
கிராமத்துக் கடைகளுக்கு பெயரெங்கே? பலகையெங்கே??சாப்பாடு சுவைக்கும்
யோகன் பாரிஸ்

said...

\\அந்தச் சுடலையில் என்ன..ஜொஜ்ஜொலிப்பாகவா இருக்கிறது? இல்லையே...அழுது வடிந்து கொண்டு...அமைதியாகத்தானே இருக்கிறது. பூதர்களும் மனிதர்களும் மும்மூர்த்திகளும் வந்தாலும் அமைதி மாறது. \\

ரொம்ப நன்றி ராகவன் சார்...

said...

// கார்த்திக் பிரபு said...
week ending la lam kovilgalauku thana ?? //

இல்லையேப்பா..இது தீபாவளிக்குத் தூத்துக்குடிக்குப் போனப்போ போனது. அதுக்கப்புறம்.....இந்தியாவுல எந்தக் கோயிலுக்கும் போன நினைவில்லையே.

// Johan-Paris said...
ராகவா!
இதைக் கினிக்கோழியென என தான் எங்க பக்கம் கூறுவார்கள், இதை அழகுக்காகவும் பூச்சிபூரானிடமிருந்து காவலுக்காகவும் வளர்ப்போம். எங்கள் வீட்டில் (ஈழத்தில்) இருக்கிறது.Guninea fowel ஆபிரிக்கக் காடுகளில் அதிகம் .

ஆகா...சூப்பர். இதெல்லாம் ஏற்கனவே ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கே. நமக்குத்தான் தெரியாமப் போச்சு.

// மத நல்லிணக்கத்தைப் பற்றிக்குறிப்பிடும் போது ;கத்தோலிக்கக் உரிமையாளர் கடையில் இந்துக் கோவிலுக்குரிய பொருட்கள் விற்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இங்கே பிரான்சிலும் Chartres எனும் இடத்திலுள்ள 800 வருடம் பழைமை வாய்ந்த தேவாலயத்தருகில் ஓர்
புத்தகம்;சிலைகள் விற்கும் கடையில் பகவத்கீதை; பிள்ளையார் மற்றும் இந்துத் தெய்வச்சிலைகள் விற்பனைக்குண்டு. நம்பக சிரமமாக இருக்கும்.
அத் தேவாலயம் பற்றி ஓர் பதிவு போடுவேன் . அப்போ இயன்றவரை அக்கடையின் படம் போட முல்கிறேன்.//

போடுங்க போடுங்க....பதிவும் போடுங்க. காத்திருக்கோம்.

// கிராமத்துக் கடைகளுக்கு பெயரெங்கே? பலகையெங்கே??சாப்பாடு சுவைக்கும்
யோகன் பாரிஸ் //

அதச் சொல்லுங்க. சின்ன வயசுல கைல பருத்தி குடுப்பாங்க. அதக் கொண்டு போய் கொடுத்தா ஈடா கெழங்கு....சீவல்....பலாக்கொட்டை கொடுப்பாங்க...ம்ம்.