Tuesday, January 09, 2007

2007லாவது மாற வேண்டும் திருக்கோயில்கள்

வலை வீசித் தமிழ் சொல்லும் அன்பு நெஞ்சங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2007ம் ஆண்டு உலகில் அமைதியையும் சமத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் கொண்டு வரட்டும்.

ஒவ்வொரு ஆண்டு தொடங்குகையிலும் அந்த ஆண்டு ஏதாவது நல்லவைகளைக் கொண்டு வந்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் காத்திருப்பதுதானே நமது வழக்கம். அந்த வகையில் சென்ற ஆண்டில் இலங்கைக்குப் போக வேண்டும் என்று விரும்பினேன். இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் என்றாவது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்குக் காத்துக் கொண்டேயிருந்தால் போதுமா? இந்த ஆண்டிலும் ஏதாவது விரும்ப வேண்டாமா?

ஆலயம் தொழுவது சாலவும் நன்றுதான். அப்படிச் சாலச் சிறந்ததைத் தரும் திருக்கோயில்கள் எப்படி இருக்க வேண்டும்? இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விருப்பம். வேதங்களைக் கரைத்துக் குடித்த பண்டிதன் அல்ல நான். ஓல மறைகள் உரைக்கும் அனைத்தையும் கடந்தும் உள்ளும் இருக்கும் கடவுளை நம்பும் ஒரு சாதாரண மனிதன். எங்கெங்கு காணினும் சக்தியென்று நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த இறைவனைத் தமிழால் மனதால் தொழுதொழுகுகின்றவன். பல கோயில்களுக்குப் பக்தியோடு சென்று வணங்கி வருகையில் அங்கு கண்டவைகளை வைத்துச் எழுந்த விருப்பங்கள் இவை.

1. திருக்கோயிலில்களில் சாதீய பாகுபாடுகள் இன்றி விருப்பமுடைய எவரும் பூசனை செய்யும் நிலை வர வேண்டும். இதை ஏற்காமல் வழிவழி வருவது என்ற வாதம் செய்வது எடுபடாது. வழிவழி வரத்தொடங்கியது எப்பொழுதிலிருந்து என்று ஆய்ந்தால் பல இடங்களில் உண்மை தெளிவாகும்.

2. தமிழகத்தில் இறைவனைப் பூசனை செய்கையில் தமிழில் செய்வது சிறப்பாகும். வடமொழியில் அருச்சனை செய்ய விரும்பினால் அதற்கும் ஏற்பாடு செய்யலாம். தேவைப்பட்டால் கோயில்கள் அனைத்திலும் இங்கு வடமொழியிலும் அருச்சனை செய்யப்படும் என்று பலகைகளில் எழுதித் தொங்க விடலாம். அதையும் தமிழிலும் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் தொங்க விடலாம். தமிழகத்திற்கு வரும் வெளிமாநில நாட்டுக்காரர்கள் விரும்பினால் வடமொழியில் அருச்சனை செய்யலாம். வேள்விகளும் குடமுழுக்கும் தமிழிலேயே செய்யலாம்.

3. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கோயில் அருச்சகர்களவோ பூசாரிகளாகவோ வர வேண்டும். தூய்மை என்று சாக்குச் சொல்லக் கூடாது. இன்று ஆண்களும் பெண்களும் இணைந்து பல இடங்களில் வேலை செய்கிறார்கள். அங்கெல்லாம் தூய்மை கெட்டு விட்டதா! அனைத்தையும் கடந்த பரம்பொருள் இதனால் தீட்டாவார் என்று நினைப்பது அறிவீனம். பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று சொல்வதும் தகாது, அந்த சமயங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்குப் பெரிய கோயில்களில் எத்தனை அருச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் விடுப்பில் ஒன்றும் குறைந்து விடாது, அது போலத்தான் இங்கும்.

4. கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க விட வேண்டும். வீடியோ எடுக்கவும் விட வேண்டும். எல்லாம் வல்ல இறைவனை ஒரு புகைப்படமா சக்தி இழக்கச் செய்யும்? மலேசிய பத்து மலைக் கோயிலில் கருவறையின் முன்னின்று முருகப் பெருமானை படமெடுக்க விடுகிறார்கள். அற்புதமான அனுபவம் அது. நெருப்பைக் கரையான் தின்ன முடியாது என்பதை உணர வேண்டும்.

5. அனைத்து மதத்தாரையும் கோயிலுக்குள் விட வேண்டும். ஆனால் அவர்கள் வழிபடுகின்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று சொல்லலாம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். வணங்கினால்தான் இறைவன் என்றில்லை. வைதாரையும் இங்கு வாழ வைப்போன் தானே! மற்ற மதத்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதல்ல முக்கியம். நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியம்.

6. சட்டையைக் கழட்டச் சொல்லும் வழக்கம் பல கோயில்களில் உண்டு. அந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும். சட்டை போட்டுக் கொண்டும் உள்ளே செல்ல விட வேண்டும். திருச்செந்தூர் கோயிலிலும் இந்தப் பழக்கம் இப்பொழுது உண்டு. அது கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும். சட்டையைக் கழற்ற வேண்டும் என்பதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் எனக்குத் தோன்றவில்லை. அதே போல் பூசாரிகளும் அருச்சகர்களும் கூட சட்டையணிவது நல்லதே.

7. கோயிலுக்குள் சிறப்பு மரியாதை என்ற பாகுபாடு ஒழிய வேண்டும். எல்லாரும் ஒன்று என்ற நிலை இருக்க வேண்டும். அரசனானாலும் ஆண்டியானாலும் இறைவனை ஒரே வழியில்தான் தரிசிக்க வேண்டும்.

8. திருநீறோ குங்குமமோ சந்தனமோ...கையில் கிள்ளிப் போடுவதைக் காட்டிலும் தொழுகைக்கு வருகின்றவர்களே எடுத்துக்கொள்ளும் வகையில் கிண்ணத்தை நீட்டலாம். அவர்கள் தொட்டு எடுப்பதால் கோயில் தூண்களாவது தப்பிக்கும்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் குறைந்த பட்சம் மேற்கூறிய செயல்திட்டங்களோடாவது தொடங்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? உங்களது கருத்துகளையும் சொல்லுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

63 comments:

said...

வணக்கம் ராகவன்

இன்னுமொரு எதிர்பார்ப்போடு புது ஆண்டு வந்திருக்கிறது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
உங்கள் எதிர்பார்ப்பில் பல என் எதிர்பார்ப்பும் கூட், நல்லவை நடந்திட வேண்டும்.

said...

//இந்த 2007ம் ஆண்டு உலகில் அமைதியையும் சமத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் கொண்டு வரட்டும்.//

உங்க இனியவை பதிவில் சொன்னதுதாங்க. எதுவுமே வெறியாகாம அளவோட இருக்கணும். அதுக்கு இங்க சொல்லி இருக்கற சகிப்புத்தன்மை வேண்டும்.

நல்லா சொல்லுங்க.

said...

அன்பு இராகவா,
இறைவா! இது என்ன சோதனை!!

அது எப்படி?

முழுக்க முழுக்க என் எண்ணங்களப் பிரதிபலிக்கிறீர்களே?
"no two fools disagree!!!!"

said...

சொன்னது அனைத்துமே நல்ல விசயம்தான் !

ஆத்திக கலக்காரன் என்று நடுநிலையாளர்கள் (யாரு?) பட்டம் கொடுக்காமல் இருந்தால் சரி.

:)

said...

//இந்த 2007ம் ஆண்டு உலகில் அமைதியையும் சமத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் கொண்டு வரட்டும்.//

இராகவன்..

நீங்க சொன்ன எல்லா விஷயங்களும் அந்தஅந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது பலருக்கு ஏற்படும் ஆசைகள்/ விருப்பங்கள்தான்
அதை மனதில் நிருத்தி இங்கு தொகுத்து வழங்கியதற்கு நன்றி..

said...

உங்களுக்கு மகுடம் சூட்ட பலர் இங்கு வரலாம்!
ஆனால், ஏழாவது கருத்து ஒன்றைத் தவிர, மற்ற எல்லாவற்றிடுடனும் நான் மாறுபடுகிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன், பணிவுடன்!

ஒவ்வொன்றுக்குமாய்ப் பதிலிறுக்க மனமில்லை!

2007-ல் நீங்கள் சாலவும் நன்றாய் ஆலயம் "தொழ" வேண்டுகிறேன்.
நன்றி!

said...

இறையருள் கூடினால் எதுவும் நடக்கும்!

நடப்பதும் இறையருளே!

முருகனருள் முன்னிற்கும்!

said...

எல்லாமே நல்ல எதிர்பார்ப்புகள் தான்...

நடந்தால் மகிழ்ச்சியே...

said...

// கானா பிரபா said...
வணக்கம் ராகவன்

இன்னுமொரு எதிர்பார்ப்போடு புது ஆண்டு வந்திருக்கிறது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
உங்கள் எதிர்பார்ப்பில் பல என் எதிர்பார்ப்பும் கூட், நல்லவை நடந்திட வேண்டும். //

நன்றி பிரபா. நல்லதையே நினைப்போம். உங்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

// இலவசக்கொத்தனார் said...
//இந்த 2007ம் ஆண்டு உலகில் அமைதியையும் சமத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் கொண்டு வரட்டும்.//

உங்க இனியவை பதிவில் சொன்னதுதாங்க. எதுவுமே வெறியாகாம அளவோட இருக்கணும். அதுக்கு இங்க சொல்லி இருக்கற சகிப்புத்தன்மை வேண்டும்.

நல்லா சொல்லுங்க. //

நன்றி கொத்ஸ். இதெல்லாம் நடக்கனும்னு நம்பி விரும்புவோம். அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி.

said...

// ஞானவெட்டியான் said...
அன்பு இராகவா,
இறைவா! இது என்ன சோதனை!!

அது எப்படி?

முழுக்க முழுக்க என் எண்ணங்களப் பிரதிபலிக்கிறீர்களே?
"no two fools disagree!!!!" //

என்ன செய்வது ஐயா...மெய்யறிவு இல்லாத எவரும் foolதானே! :-) மெய்யறிவு வந்த பிறகு foolலாவது அறிவாளியாவது...ஆகையால foolலாக இருப்பதே சுகம். :-)

// கோவி.கண்ணன் [GK] said...
சொன்னது அனைத்துமே நல்ல விசயம்தான் !

ஆத்திக கலக்காரன் என்று நடுநிலையாளர்கள் (யாரு?) பட்டம் கொடுக்காமல் இருந்தால் சரி.

:) //

பட்டமா? அது வேறையா! சரி. ஆசையோடு குடுத்தா வாங்கிக்கிற வேண்டியதுதான கோவி. :)

said...

//அரசனானாலும் ஆண்டியானாலும் இறைவனை ஒரே வழியில்தான் தரிசிக்க வேண்டும்//

நல்ல கருத்து. அதே போல இனிஅமலும் புதிய கோவில்களை கட்டி பணத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் இருக்கின்ற கோவில்களை செப்பளிட்டு பாதுகாக்கவும் இறைவன் அருள் புரிய வேண்டும்.

said...

// SK said...
உங்களுக்கு மகுடம் சூட்ட பலர் இங்கு வரலாம்!
ஆனால், ஏழாவது கருத்து ஒன்றைத் தவிர, மற்ற எல்லாவற்றிடுடனும் நான் மாறுபடுகிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன், பணிவுடன்! //

எஸ்.கே, என்னிடம் எதற்குப் பணிவு? என்னுடைய கருத்தை நான் சொல்லியிருக்கிறேன். மேலே மங்கை குறிப்பிட்டிருப்பதைப் போல பல திருக்கோயில்களில் கண்டவைகளை வைத்துச் சொன்னது.

// ஒவ்வொன்றுக்குமாய்ப் பதிலிறுக்க மனமில்லை! //

உங்கள் விருப்பத்தை மதிக்கிறேன்.

// 2007-ல் நீங்கள் சாலவும் நன்றாய் ஆலயம் "தொழ" வேண்டுகிறேன்.
நன்றி! //

மிக்க நன்றி. இந்த புத்தாண்டு பிறந்த பிறகு பத்துமலை முருகனைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மிக்க மகிழ்வுடைய தரிசனம் அது. அழகு சூழ் மலை நடுவே தண்ணீர் சொட்டச் சொட்டக் கோயில் கொண்டிருக்கும் கந்தனை நமக்குச் சொந்தனை வந்தனை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது பெரும்பேறே!

// SK said...
இறையருள் கூடினால் எதுவும் நடக்கும்!

நடப்பதும் இறையருளே!

முருகனருள் முன்னிற்கும்! //

அந்த நம்பிக்கைதானே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது எஸ்.கே.

said...

// மங்கை said...
இராகவன்..

நீங்க சொன்ன எல்லா விஷயங்களும் அந்தஅந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது பலருக்கு ஏற்படும் ஆசைகள்/ விருப்பங்கள்தான்
அதை மனதில் நிருத்தி இங்கு தொகுத்து வழங்கியதற்கு நன்றி.. //

நன்றி மங்கை. பல கோயில்களிலும் கண்ட கேட்டவைகளை வைத்துச் சொன்னதுதான் இந்தப் பதிவு. நிறைவேறுவது நன்றே என்று தோன்றுகிறது.

// வெட்டிப்பயல் said...
எல்லாமே நல்ல எதிர்பார்ப்புகள் தான்...

நடந்தால் மகிழ்ச்சியே... //

நன்றி வெட்டி. நடக்க வேண்டும் என்று விரும்புவோம். அதற்கு வழிவகையும் தேடுவோம்.

said...

என்னுடைய சின்ன ஆசை :
கோயில்களில் பணம் கொடுத்தால் தான் சாமி பார்க்கவே முடியும் என்ற நிலை மாறவேண்டும்.. (அது எத்தனை குறைந்த அளவு கட்டணமானாலும்... )

புத்தாண்டு வாழ்த்துக்கள் ராகவன் :)

said...

அருமை ராகவன் அவர்களே

//மெய்யறிவு இல்லாத எவரும் foolதானே! :-) மெய்யறிவு வந்த பிறகு foolலாவது அறிவாளியாவது//

அப்படி என்றால் அறிவாளி என்பவன் இம்மண்ணில் இதுவரை இல்லை போலும்

said...

பகுத்து அறிதல் என்றால் இதுதான்.

மேன்மையான சிந்தனைகள்.

இந்த போட்டோ எடுக்கறது மட்டும் வழிபடும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கக் கூடியது.

மொத்ததில் மற்றவருக்கு இடைஞ்சல் கொடுக்காத வகையில் ஒவ்வொருவரும் இருந்தால் அதுதான் மிக ஐடியல் ஸ்டேட்.

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நீங்கள் விரும்பும் பல மாற்றங்கள் மருவூர் 'அம்மா' ஆசியில் நடந்தேறி வருகிறது.

said...

வள்ளலாரும் பெரியாரும் ஒரே விசயத்துக்காகத்தான் போராடினாங்க, அவர்களுடைய பெரும்பாலான கருத்துகள் கீழே வள்ளலார் அல்லது பெரியார் என்று போடாமலிருந்தால் யார் பேசியது வள்ளலாரா? பெரியாரா? என்று குழம்புவோம் நீங்கள் இந்த பதிவில் வள்ளலார் பாதையில் சமூக பேதமை களைதலை பேசியிருக்கின்றீர்.

எஸ்.கே. அய்யா,
//ஏழாவது கருத்து ஒன்றைத் தவிர, மற்ற எல்லாவற்றிடுடனும் நான் மாறுபடுகிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன், பணிவுடன்!
//
அந்த ஏழாவது கருத்து

7. கோயிலுக்குள் சிறப்பு மரியாதை என்ற பாகுபாடு ஒழிய வேண்டும். எல்லாரும் ஒன்று என்ற நிலை இருக்க வேண்டும். அரசனானாலும் ஆண்டியானாலும் இறைவனை ஒரே வழியில்தான் தரிசிக்க வேண்டும்.

"அரசனானாலும் ஆண்டியானாலும்" என்று இதில் ராகவன் சொன்னதால் எஸ்.கே. அய்யா ஒத்துக்கொள்கிறார், இதே வேறுமாதிரி சொல்லியிருந்தால் இதையும் ஒத்துக்கொள்ளாமல் இருந்திருப்பார் போலும்.


//ஒவ்வொன்றுக்குமாய்ப் பதிலிறுக்க மனமில்லை!//
காலம் காலமாக கடைபிடிப்பது, சாஸ்திரம், சம்பிரதாயம் நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள் நீங்க வேண்டுமென்று ஒரு மனிதன் ஆசைப்பட்டது வெறும் ஆசை மட்டுமே பட்டுள்ளார், இன்னும் இது நடந்தேறவில்லை, வெறும் ஆசைப்பட்டதற்கே உங்களுக்கு மனமில்லாமல் போய்விட்டது, ஏன் மனமில்லாமல் போய்விட்டது என்று விளக்கினால் நலம் இல்லையென்றால் அடிமடியில் கைவைத்ததால் தான் அய்யாவுக்கு மனமில்லையோ என்று நினைக்க கூடும்.

நன்றி

said...

ராகவன்,

நல்ல எதிர்பார்ப்புகள். காலம் கடந்தாவது இவை அனைத்தும் நடந்தேறும். மாற்றம் தானே வாழ்வியலில் அடிப்படை.

SK,
7வது எதிர்பார்ப்பை மட்டும் தவிர்க்க காரணம் என்ன என ஆவல் வருகிறது. SK உங்களது இந்த 'தவிர்த்தல்' "இறைவி முன் அனைவரும் சமம்" என்ற தத்துவத்திற்கு முரணாக இல்லையா?

தெரிந்துகொள்ள ஆவலுடன்...

said...

// அனுசுயா said...
//அரசனானாலும் ஆண்டியானாலும் இறைவனை ஒரே வழியில்தான் தரிசிக்க வேண்டும்//

நல்ல கருத்து. அதே போல இனிஅமலும் புதிய கோவில்களை கட்டி பணத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் இருக்கின்ற கோவில்களை செப்பளிட்டு பாதுகாக்கவும் இறைவன் அருள் புரிய வேண்டும். //

ஏற்கனவே இருக்குற பழைய கோயில்களின் பராமரிப்பு பாரா-அரிப்பு போல உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் விரிசல்கள். கோயிலில் பல இடங்களில் வவ்வால்கள். மூக்கைப் பொத்த வைக்கும் வீச்சங்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

said...

// பொன்ஸ் said...
என்னுடைய சின்ன ஆசை :
கோயில்களில் பணம் கொடுத்தால் தான் சாமி பார்க்கவே முடியும் என்ற நிலை மாறவேண்டும்.. (அது எத்தனை குறைந்த அளவு கட்டணமானாலும்... )//

கண்டிப்பாக பொன்ஸ். கோயிலுக்குப் போனால் காசு செலவாகும் என்ற நிலை மாறியே ஆக வேண்டும்.

// புத்தாண்டு வாழ்த்துக்கள் ராகவன் :) //

உங்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

// Prasram said...
அருமை ராகவன் அவர்களே

//மெய்யறிவு இல்லாத எவரும் foolதானே! :-) மெய்யறிவு வந்த பிறகு foolலாவது அறிவாளியாவது//

அப்படி என்றால் அறிவாளி என்பவன் இம்மண்ணில் இதுவரை இல்லை போலும் //

அப்படியல்ல. மெய்யறிவு வந்து விட்டால் மண்ணும் விண்ணும் ஒன்றுதான். தேங்காயைத் தின்றாலும் பாகலைத் தின்றாலும் ஒன்றுதான்.

said...

// செந்தில் குமரன் said...
பகுத்து அறிதல் என்றால் இதுதான்.

மேன்மையான சிந்தனைகள்.

இந்த போட்டோ எடுக்கறது மட்டும் வழிபடும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கக் கூடியது. //

யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் போட்டோ எடுத்துக் கொண்டால் சரிதான். அதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

// மொத்ததில் மற்றவருக்கு இடைஞ்சல் கொடுக்காத வகையில் ஒவ்வொருவரும் இருந்தால் அதுதான் மிக ஐடியல் ஸ்டேட். //

அதே. அதே. அதைத்தான் நானும் சொல்கிறேன்.


// மணியன் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நீங்கள் விரும்பும் பல மாற்றங்கள் மருவூர் 'அம்மா' ஆசியில் நடந்தேறி வருகிறது. //

மேல்மருவத்தூரைச் சொல்கின்றீர்களா? கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் கோயிலில் காரை நிறுத்தி உள்ளே சென்றதுதான். அதற்கு முன்னும் பின்னும் சென்றதில்லை. ஆனால் அங்கே பெண்களும் பூசை செய்தார்கள் என நினைவு. அது வரவேற்கத் தக்க செயலே. மருவத்தூர் பற்றி எனக்கு மேல் விவரங்கள் தெரியாது. ஆகையால் என்னிடம் சொல்வதற்குக் கருத்துகள் இல்லை.

said...

// குழலி / Kuzhali said...
வள்ளலாரும் பெரியாரும் ஒரே விசயத்துக்காகத்தான் போராடினாங்க, அவர்களுடைய பெரும்பாலான கருத்துகள் கீழே வள்ளலார் அல்லது பெரியார் என்று போடாமலிருந்தால் யார் பேசியது வள்ளலாரா? பெரியாரா? என்று குழம்புவோம் நீங்கள் இந்த பதிவில் வள்ளலார் பாதையில் சமூக பேதமை களைதலை பேசியிருக்கின்றீர். //

குழலி....பெரியாரின் கருத்துகளை முழுதும் நான் அறியேன். வலைப்பூக்களில் கொஞ்சம் கொஞ்சம் படித்ததுதான். எனக்குத் தெரியாத நிலையில் அவரை நான் திட்டுவதும் பாராட்டுவதும் தகாது என்ற வகையில் பொதுவாகப் பெரியார் பதிவுகளில் அமைதி காப்பேன். அதே நேரத்தில் பெரியாரின் கருத்து என்று இடப்பட்டிருப்பது சரியென்றோ தவறென்றோ தோன்றினால் அதைச் சொல்ல மறுத்ததில்லை. சமூக நீதி என்பது மறுக்கப்படக் கூடாதது.

வள்ளலாரை நான் ஓரளவு அறிவேன். முருகனை நம்புவீராயின் எங்கும் முருகன் உண்டு என்று கண்ணாடியில் குமரனை வழிபட்ட பெருமகனார். அன்பும் அமைதியும் மட்டும் விரும்பிய திருமகனார். அவருடைய கருத்துகளில் எனக்கு ஏற்பு உண்டு. ஈர்ப்பும் உண்டு. ஆனால் அவர் வழியில் செல்கிறேனா என்று எனக்குத் தெரியாது.

said...

//வணங்கினால்தான் இறைவன் என்றில்லை. வைதாரையும் இங்கு வாழ வைப்போன் தானே!//

அப்பாடி பொழச்சேன் .. :)

said...

உங்கள் சென்ற வருட விருப்பத்தையும் வாழ்த்தினேன்! இப்போதும் உளமாற வாழ்த்துகிறேன்! :)

மற்றபடி உருத்திராட்சப் பூனைகளிடம் "நியாயத்தை" எதிர்பார்க்கமுடியாது என்பதை நன்கு உணர்ந்திருப்பதால் - தலைவர் குழலி, நண்பர் திரு ஆகியோரின் கேள்விகளை வழிமொழிந்துவிட்டு அமைதியாக இருக்க விரும்புகிறேன்! :)

கொசுறாக ஒரு சித்தர் பாடல்:

"காலை மாலை நீரிலே மூழ்கு மந்த மனிதர்காள்! - காலை மாலை நீரிலே
கிடந்த தேரை என்பெறும்?"

:)

said...

புத்தாண்டு வாழ்த்துகள் இராகவன். இப்போது தான் இந்த பதிவைப் பார்த்தேன். மீண்டும் ஒரு முறை முழுவதும் படிக்க வேண்டும், பின்னூட்டங்களுடன்.

said...

இறை நம்பிக்கையாளரான உங்கள் விருப்பங்கள்அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்!!!

/வேள்விகளும் குடமுழுக்கும் தமிழிலேயே செய்யலாம்./
செய்யப்பட வேண்டும்...

/அருச்சகர்களும் கூட சட்டையணிவது நல்லதே./

கண்டிப்பாகப் பின்பற்றப் படவேண்டியது இது!

said...

அருமையான விருப்பம்..கைகூட அருள் வேண்டுவோம்.
நன்றி.

said...

அருமையான பதிவு ராகவன்.நன்றி

1.அனைத்து சாதியினருக்கும் பூசை செய்யும் உரிமை

மிகவும் நியாயமான கோரிக்கை. கண்டிப்பாக ஏற்கப்படவேண்டிய ஒன்று.

2.தமிழ் வழிபாடு

டிட்டோ.

3.பெண்கள் அர்ச்சகராவது அவர்களது உரிமை. மாதவிலக்கு காலத்தில் கூட பூசை செய்ய அனுமதிக்கலாம். மாதவிலக்கை காட்டி அவர்களின் உரிமையை பறிப்பது தவறு.

4.கோயிலில் கைப்படம் . .தேவையில்லை.பகவானை படம் பிடிக்கிறானா, பக்தைகளை படம் பிடிக்கிறானா என்பதை எல்லாம் கண்டு பிடிப்பது சிக்கலாகிவிடும்:-))

5.அனைத்து மதத்தாரையும் அனுமதிப்பது..யோசிக்க வேண்டிய விஷயம்.பக்தியோடு எம்மதமும் சம்மதம் என்று வழிபட வருவோரை அவர் எந்த மதம் என்று பார்க்காமல் அனுமதிக்கலாம்.சபரிமலையில் அப்படித்தான் அனுமதிக்கிறார்கள். ஆனால் சும்மா சுற்றுலா மாதிரி கோயிலை பார்க்க வரும் மாற்றுமதத்தாரை அனுமதிக்க வேண்டாம் என நினைக்கிறேன். சும்மாவே மதக்கலவரம் வரும் இந்த காலத்தில் ஏதோ ஒரு சிறுபிரச்சனை கூட பெரும் கலவரத்தில் முடியலாம்.

6.சட்டை அணியாமல் இருக்க அனுமதி..தேவை இல்லை.அப்புறம் சிலகாலம் கழித்து செருப்பு போட்டுக்கொண்டு போனால் என்ன,அதை தடுக்க என்ன காரணம் என்று சிலர் கேட்பார்கள்:-). கடவுளுக்காக இந்த சிரமத்தை கூட அனுபவிக்க மாட்டோமா என்ன?

7.கோயிலில் சிறப்பு மரியாதை தரப்படவேண்டும்.ஜாதி பார்த்து தருவதை தவிர்க்க வேண்டும்.ஆனால் கோயிலில் வருமானத்தை பெருக்க அதிக கட்டணம் தருவோருக்கு பரிவட்டம்,மாலை என்று போடுவது,கர்ப்பகிரகத்துக்கு உள்ளே அழைத்து செல்வது என இப்போது பின்பற்றுகிறார்கள்.அதை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும்.பல கோயில்களில் இம்மாதிரி செய்தால் தான் விளக்கு ஏற்ரவே காசு கிடைக்கும்.

8.தேவைஇல்லை. பக்தர்கள் ஒழுங்காக கைகழுவினார்களா என்று சொல்ல முடியாது. குழந்தைகள் வாயில் விரலை வைத்து சூப்பிக் கொண்டிருந்திருப்பார்கள்.ஒருத்தர் கைபட்டாலே போதும்.ஓட்டலில் கூட பாத்திரத்தில் கைவைக்க கஸ்டமரை அனுமதிக்க மாட்டார்கள்.வெயிட்டர் தான் கையால் தொடுவான்:-)

said...

வணக்கம் ராகவன் சார்,
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
அமைதியான, அருமையான விருப்பங்கள், இவை அனைத்தும் நடந்திட இறைவனை வேண்டுகிறேன்.

said...

// திரு said...
ராகவன்,

நல்ல எதிர்பார்ப்புகள். காலம் கடந்தாவது இவை அனைத்தும் நடந்தேறும். மாற்றம் தானே வாழ்வியலில் அடிப்படை.//

நிச்சயமாக திரு. அனைத்தும் மாறித்தான் தீரும். மாறாதது ஒன்று மாற்றந்தான்.

// Dharumi said...
//வணங்கினால்தான் இறைவன் என்றில்லை. வைதாரையும் இங்கு வாழ வைப்போன் தானே!//

அப்பாடி பொழச்சேன் .. :) //

தருமி ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். தேர்தல் வருது. அதுல பெரும்பாலானவங்க ஓட்டுப் போட்டு ஒரு நல்ல அரசாங்கத்த தேர்ந்தெடுத்தா அந்த நல்ல அரசாங்கம் ஓட்டுப் போட்டவங்களுக்கு மட்டுமா? எல்லாருக்குந்தானே. அந்த மாதிரிதான் இங்கயும்.

said...

// neo said...
உங்கள் சென்ற வருட விருப்பத்தையும் வாழ்த்தினேன்! இப்போதும் உளமாற வாழ்த்துகிறேன்! :) //

நன்றி நியோ. விருப்பங்கள் நிறைவேறினால் பெருமகிழ்ச்சிதானே. :-)

// குமரன் (Kumaran) said...
புத்தாண்டு வாழ்த்துகள் இராகவன். இப்போது தான் இந்த பதிவைப் பார்த்தேன். மீண்டும் ஒரு முறை முழுவதும் படிக்க வேண்டும், பின்னூட்டங்களுடன். //

கண்டிப்பாக குமரன். காத்திருக்கிறேன்.

// அருட்பெருங்கோ said...
இறை நம்பிக்கையாளரான உங்கள் விருப்பங்கள்அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்!!! //

பெரும் அருளைப் பெயரில் வைத்திருக்கும் கோவே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

// செல்வன் said...
அருமையான பதிவு ராகவன்.நன்றி

1.அனைத்து சாதியினருக்கும் பூசை செய்யும் உரிமை

மிகவும் நியாயமான கோரிக்கை. கண்டிப்பாக ஏற்கப்படவேண்டிய ஒன்று.

2.தமிழ் வழிபாடு

டிட்டோ.

3.பெண்கள் அர்ச்சகராவது அவர்களது உரிமை. மாதவிலக்கு காலத்தில் கூட பூசை செய்ய அனுமதிக்கலாம். மாதவிலக்கை காட்டி அவர்களின் உரிமையை பறிப்பது தவறு. //

நன்றி செல்வன்

// 4.கோயிலில் கைப்படம் . .தேவையில்லை.பகவானை படம் பிடிக்கிறானா, பக்தைகளை படம் பிடிக்கிறானா என்பதை எல்லாம் கண்டு பிடிப்பது சிக்கலாகிவிடும்:-)) //

புகைப்படம் எடுப்பது இடைஞ்சல் இல்லாத வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புகைப்பட நேரம் என்று தினமும் அரைமணி நேரம் ஒதுக்கி விடலாம். சிங்கப்பூர் செராங்கூன் ரோட்டில் மாரியம்மன் கோயிலில் மட்டுமல்ல, ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் புகைப்படம் எடுக்க விடுகிறார்கள். அங்கே காமராஜர் மாவட்டத்துப் பெண்ணை ஒரு அறையில் பூட்டி விட்டு திருமகளுக்கும் மாலுக்கும் தினப்பூஜை நடத்துகிறார்கள். ஆகையால் நான் பூட்டி வைக்கப்பட்ட ஆண்டாளை மட்டும் படம் பிடித்துக் கொண்டு வந்தேன்.

// 5.அனைத்து மதத்தாரையும் அனுமதிப்பது..யோசிக்க வேண்டிய விஷயம்.பக்தியோடு எம்மதமும் சம்மதம் என்று வழிபட வருவோரை அவர் எந்த மதம் என்று பார்க்காமல் அனுமதிக்கலாம்.சபரிமலையில் அப்படித்தான் அனுமதிக்கிறார்கள். ஆனால் சும்மா சுற்றுலா மாதிரி கோயிலை பார்க்க வரும் மாற்றுமதத்தாரை அனுமதிக்க வேண்டாம் என நினைக்கிறேன். சும்மாவே மதக்கலவரம் வரும் இந்த காலத்தில் ஏதோ ஒரு சிறுபிரச்சனை கூட பெரும் கலவரத்தில் முடியலாம். //

எம்மதத்தாரும் சம்மதம் என்று வருகின்றவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? திருடன் வருவான் என்பதற்காக வங்கி நடக்காமலா இருக்கிறது?

// 6.சட்டை அணியாமல் இருக்க அனுமதி..தேவை இல்லை.அப்புறம் சிலகாலம் கழித்து செருப்பு போட்டுக்கொண்டு போனால் என்ன,அதை தடுக்க என்ன காரணம் என்று சிலர் கேட்பார்கள்:-). கடவுளுக்காக இந்த சிரமத்தை கூட அனுபவிக்க மாட்டோமா என்ன? //

கடவுளுக்காக சிரமம் அனுபவிப்பதா? சரி...சட்டையை ஏன் கழற்ற வேண்டும்? அதற்குக் காரணமே இல்லையே? செருப்பு பல இடங்களில் நடக்கிறது. மிதிக்கிறது. ஆகையால் அசுத்தத்தை உள்ளே கொண்டு போகக் கூடாதென்று செருப்பை வெளியில் விடுகிறோம். சட்டையை என்ன சுவற்றில் உரசிக்கொண்டே நடக்கின்றோமா என்ன?

// 7.கோயிலில் சிறப்பு மரியாதை தரப்படவேண்டும்.ஜாதி பார்த்து தருவதை தவிர்க்க வேண்டும்.ஆனால் கோயிலில் வருமானத்தை பெருக்க அதிக கட்டணம் தருவோருக்கு பரிவட்டம்,மாலை என்று போடுவது,கர்ப்பகிரகத்துக்கு உள்ளே அழைத்து செல்வது என இப்போது பின்பற்றுகிறார்கள்.அதை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும்.பல கோயில்களில் இம்மாதிரி செய்தால் தான் விளக்கு ஏற்ரவே காசு கிடைக்கும். //

இதற்கு வேறு ஏதாவது செய்ய வேண்டும். தங்கத்தேர் இழுப்பது போன்றவை சரிதான். அவைகள் இறைவணக்கத்தைப் பாதிக்காதவை. ஆனால் இறைவனைத் தரிசிப்பதற்கே காசு என்பது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது நிதியாதார முறைகளை நாம் யோசிக்க வேண்டும்.

// 8.தேவைஇல்லை. பக்தர்கள் ஒழுங்காக கைகழுவினார்களா என்று சொல்ல முடியாது. குழந்தைகள் வாயில் விரலை வைத்து சூப்பிக் கொண்டிருந்திருப்பார்கள்.ஒருத்தர் கைபட்டாலே போதும்.ஓட்டலில் கூட பாத்திரத்தில் கைவைக்க கஸ்டமரை அனுமதிக்க மாட்டார்கள்.வெயிட்டர் தான் கையால் தொடுவான்:-) //

நல்ல வாதந்தான். ஆனால் கருநாடகத்தில் அப்படித்தானே இருக்கிறது. கிண்ணத்தை நீட்டுவார்கள். நாமாகத் தொட்டு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் சுத்தம் என்பது யோசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

said...

// தமிழ்ப்பிரியன் said...
அருமையான விருப்பம்..கைகூட அருள் வேண்டுவோம்.
நன்றி. //

நன்றி தமிழ்ப்பிரியன்

// கோபிநாத் said...
வணக்கம் ராகவன் சார்,
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
அமைதியான, அருமையான விருப்பங்கள், இவை அனைத்தும் நடந்திட இறைவனை வேண்டுகிறேன். //

நன்றி கோபிநாத். உங்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

ராகவன்,

கோயிலில் புகைப்படம் எடுக்க கூடாது என்று வேதத்திலோ, புத்தகத்திலோ சொல்லப்படவில்லை. ஏனென்றால் அப்போதெல்லாம் காமிரா கிடையாது:-)

இப்படி ஒரு பழக்கம் ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை.ஆனால் இதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவதென்பதெல்லாம் திருப்பதி போன்ற கோயில்களில் நடக்காது என நினைக்கிறேன்.அப்படி நடந்தால் காமிராகாரனுக்கு முதல் வரிசையில் இடம் தருவது, சன்னிதான பூஜை நேரடி லைவ் ஒளிபரப்பு(அதனால் கோயிலுக்கு கூட்டம் குறைவது) என பிரச்சனைகள் வரும்.

சட்டை அணியாமல் போவது நம்மை ஆளும் ஆண்டவனை நமக்கு எஜமானாக கருதி அவனுக்கு மரியாதை செய்ய ஏற்பட்ட வழக்கம்.கடவுள் நமக்கு எஜமானில்லை, குழந்தை,நண்பன் என என்ன சொன்னாலும் வழி,வழியாக அந்த கோயில்களில் ஆண்டவனை எஜமானாக கருதித்தான் சட்டை அணியும் பழக்கத்தை தடை செய்துள்ளனர்.தேவையின்றி அந்த மரபை உடைப்பது சரியில்லை என்று படுகிறது.

பக்தியோடு வரும் மாற்றுமதத்தாரை எப்படி கண்டுபிடிப்பது என கேட்கிறீர்கள்.மாற்றுமதத்தவர் சபரிமலை கோயிலுக்குள் வரவேண்டுமென்றால் விரதமிருந்து வரவேண்டும் என விதி இருக்கிரது என நினைக்கிரேன்.அதே போல் மற்ற கோயில்களுக்கு வரவேண்டுமென்றால் திரூநீறு அணிந்து வரவேண்டும் என்று சொல்லலாம். நீரணிந்தோர் ஆஷாடபூதியானாலும் அவரை சிவனடியாராய் கருதுவதே மரபு.

தங்கத்தேர் இழுப்பது இப்போதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது ராகவன்.அந்த காசும் போதவில்லை.காசு கொடுத்து தரிசினம் செய்வதில் கோயிலுக்கு வரும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, மண்டபம் கட்டுவது என பல செலவுகளுக்கு நிதி கிடைக்கிறது.அதை நிறுத்த வேண்டாம்.ஏற்கனவே பல கோயில்கள்வருமானமின்றி இருக்கின்றன.வி.ஐ.பிக்கள் மூலம் வரும் தொகை நின்றால் அவை சுத்தமாக வருமானமிழக்கும்

said...

இராகவன்,
முதலில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்களின் கனவுகளோடு எனக்கு முழுக்க முழுக்க எனக்கு உடன்பாடு உண்டு.உங்களின் இக் கனவுகள் யாவும் குறிப்பாக 1ம், 2ம் கனவுகள் இந்த ஆண்டிலேயே மெய்ப்பட வேண்டும்.
எமது சைவ நெறி சொல்வதும் இதுதானே. ஏதோ இடையில் புகுந்து கொண்ட சில மூட நம்பிக்கைகளால் இன்றும் திருக்கோயில்களில் அரங்கேறும் சில அநாகரீக நிகழ்வுகள் கட்டாயாம் ஒழிய வேண்டும்.

இராகவன், இங்கே Toronto ல் உள்ள சில சைவ ஆலயங்களில் தமிழிலும் பூசைகள் செய்யப்படுகிறது. அடுத்தது
அமெரிக்காவில் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண், பெண், சிறுவர்கள் குழந்தைகள் யாரும் தாமாகவே சென்று இறைவனுக்குப் பூசை செய்யலாம். பால் அபிசேகம் செய்யலாம்.

பொன்ஸ்,
/*என்னுடைய சின்ன ஆசை :
கோயில்களில் பணம் கொடுத்தால் தான் சாமி பார்க்கவே முடியும் என்ற நிலை மாறவேண்டும்.. (அது எத்தனை குறைந்த அளவு கட்டணமானாலும்... )*/

அப்படியாயின் நீங்கள் ஈழத்தில் உள்ள கோவில்களுக்குத்தான் போக வேண்டும்.:)

said...
This comment has been removed by a blog administrator.
said...

// Anonymous said...
ராகவன் சார்,

உங்கள் பதிவைப் பற்றி நானும் அவரும் கதைத்த பகுதியை தனிப் பதிவாகவே போட்டு இருக்கிறேன். படித்து நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவும். //

அனானி, உங்கள் பின்னூட்டத்தை இப்படிப் போட்டதற்கு மன்னிக்கவும்.

said...

தமிழ் பூசைதான் ஏற்கனவே இருக்கிறதே. எல்லா இடங்களிலும் இல்லையோ?
//அதே போல் பூசாரிகளும் அருச்சகர்களும் கூட சட்டையணிவது நல்லதே.

- இதை கட்டாயமாக்க வேண்டும்.

அனைத்து மதத்தாரையும் கோயிலுக்குள் விட வேண்டும்.

வீடியோ/புகைப்படம் - அப்படி முக்கியமானது இல்லை -கோவிலுக்குள்.

எல்லாவற்றைவிட முக்கியமானது:
பொது இடங்களில் பலிதருவதை தடை செய்யவேண்டும்.

said...

8. திருநீறோ குங்குமமோ சந்தனமோ...கையில் கிள்ளிப் போடுவதைக் காட்டிலும் தொழுகைக்கு வருகின்றவர்களே எடுத்துக்கொள்ளும் வகையில் கிண்ணத்தை நீட்டலாம். அவர்கள் தொட்டு எடுப்பதால் கோயில் தூண்களாவது தப்பிக்கும்.//

idhu romba sariyana karuthu...nan ungalai valimoligirane..aanala avsarathirku naamum sirapu valigalai payanpaduthtuvadhi ninaithall avamanaga irukiradhu

said...

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

"ஆன்மீகமும் பக்தியும் ஆலயங்களோடு மட்டும் நின்றுவிடாமல் அன்றாடம் வாழ்விலும் செயல்படுத்தப் படவேண்டும்.."

said...

ராகவன்,

தங்கள் கருத்துக்கள் அனைத்தையும் வழிமொழிகிறேன், இரண்டு தவிர..

சட்டை கழற்றுவது என்பது ஒரு விதமான ethnic லுக் தருகிறது என்பது தவிர வேறு எந்த தீமையும் இல்லை. அதனால், சில கோவில்களில் அது மரபு என்னும்போது அதைக் கடைப் பிடிக்கலாம். பத்ரிநாத் போன்று பனிகொட்டும் கோயில்களில் 4-5 ஸ்வெட்டர்கள் போட்டுக் கொண்டால் தான் குளிரில் நடுங்காமல் நிற்கவே முடியும்.. அங்கு இத்தகைய சட்டம் செல்லுமா?::))

"மாற்று மதத்தவர்கள்" அனுமதி.. இங்கே வெளிநாட்டவர் என்று சொல்லவந்ததாகத் தெரிகிறது.. ஏனென்றால் இந்தியர்களைப் பொறுத்தமட்டில் மாற்றுமத அடையாளம் (குல்லா, பாதிரி அங்கி) போன்றவை இல்லாவிட்டால், வெறும் உருவ அமைப்பை வைத்து மதத்தை அடையாளம் எப்படிக் காண முடியும்?? எத்தனையோ கிறித்தவ, முஸ்லீம்கள் சர்வ சாதாரணமாகக் கோயில்களுக்கு வருவதை நான் பார்த்திருக்கிறேன்.. பிரபலம் என்றால் தான் ப்ராப்ளம் (யேசுதாசுக்கு இன்றுவரை குருவாயூர் கோயிலில் அனுமதியில்லை). வெளிநாட்டவர்களை தமிழகக் கோயில்களுக்குள் விடுவதில்லை. இது மிகவும் தவறு.

செல்வன் சொல்வது போல, வணங்கும் கடவுளின் மீது பக்தி உள்ளது என்றால் எல்லாரையும் அனுமதிக்க வேண்டும். ஜிகாத் தீவிரவாதம் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் இதனால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.


இன்னும் சில முக்கியமான, தேவைப் படும் மாற்றங்கள்

1) கோயில் சொத்துக்கள் அரசாலும், மற்ற பேர்வழிகளாலும் கொள்ளையடிக்கப் படுவது முற்றிலுமாக நிற்க வேண்டும்.

2) கடவுள் மறுப்பை வெறித்தனமாகப் பரப்பும் ஆட்கள் கோயில் சம்பந்தமான எந்த விஷயத்திலும் தலையிட உரிமை கிடையாது. கோயில்ன் நிர்வாகம் மற்றும் பற்ற எல்லாப் பணிகளிலும் இருக்கும் இத்தகைய ஆட்களை இனம் கண்டு நீக்க வேண்டும்.

3) கோயில் வழிபாட்டுத் தலம் மட்டுமன்று. சமய, சமூக, கல்வி, கலை, கலாசார மையம். கோயிலின் இந்தத் தன்மையை மீட்டெடுக்க வேண்டும். எல்லாக் கோயில்களிலும் விடுமுறை நாட்களில் சமய வகுப்புகள் நடக்க வேண்டும். கிராமப் புறங்களில் உள்ள கோயில் பிராகாரங்களில் மாலை நேரங்களில் ஏழை மாணவ, மாணவிகளுக்காக கூடுதல் கல்வி வகுப்புகள் நடப்பதை மிகவும் ஊக்குவிக்க வேண்டும்.

4. அதிக வருமானம் உள்ள கோவில்கள் பராமரிப்பு இன்றி வாடும் கோயில்களுக்கு உதவ ஒரு புரபஷனல் திட்டம் தயாரித்து அமல் செய்ய வேண்டும்.

said...

// செல்வன் said...
ராகவன்,

கோயிலில் புகைப்படம் எடுக்க கூடாது என்று வேதத்திலோ, புத்தகத்திலோ சொல்லப்படவில்லை. ஏனென்றால் அப்போதெல்லாம் காமிரா கிடையாது:-)

இப்படி ஒரு பழக்கம் ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை.ஆனால் இதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவதென்பதெல்லாம் திருப்பதி போன்ற கோயில்களில் நடக்காது என நினைக்கிறேன்.அப்படி நடந்தால் காமிராகாரனுக்கு முதல் வரிசையில் இடம் தருவது, சன்னிதான பூஜை நேரடி லைவ் ஒளிபரப்பு(அதனால் கோயிலுக்கு கூட்டம் குறைவது) என பிரச்சனைகள் வரும். //

திருப்பதி போன்ற கோயில்களில் சற்றுக் கடினம். ஆனால் அங்கெல்லாம் காமிராக்களை வைத்து ஆங்காங்கே தொலைக்காட்சிகளை வைத்தும் ஒளிபரப்பலாம். அந்த வீடியோக்களையும் சீடி போட்டு விற்கலாம். இதனால் புது வருவாயும் கிடைக்கும். திருட்டு வீசீடிகளும் டீவிடிகளும் கூடக் கிடைக்கலாம். ஆனால் சாமி காரியம் என்பதால் அது குறைவாக இருக்கும் என்று நம்புவோம். விலையும் சகாயமாக இருக்கும் வகையில் செய்ய வேண்டும்.

// சட்டை அணியாமல் போவது நம்மை ஆளும் ஆண்டவனை நமக்கு எஜமானாக கருதி அவனுக்கு மரியாதை செய்ய ஏற்பட்ட வழக்கம்.கடவுள் நமக்கு எஜமானில்லை, குழந்தை,நண்பன் என என்ன சொன்னாலும் வழி,வழியாக அந்த கோயில்களில் ஆண்டவனை எஜமானாக கருதித்தான் சட்டை அணியும் பழக்கத்தை தடை செய்துள்ளனர்.தேவையின்றி அந்த மரபை உடைப்பது சரியில்லை என்று படுகிறது. //

ஆண்டவன் நமக்கு எஜமானனா? இதென்ன கூத்து! ஏற்க முடியாத கருத்து. என்னன்னை என் முதலாளியா? அன்பாளியாம் ஆழியல்லவா? முதலாளியைப் பார்த்தால் தோளிலிருந்து துண்டை எடுத்து இடுப்பில் கட்டுவது.....போன்ற கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்று பலர் விரும்பும் வேளையில் அன்புருவாம் ஆண்டவன் முன்...சட்டையைக் கழற்றச் சொல்வதும்....துண்டை மடியல் கட்டுவதும்...ம்ஹூம்...நாகரீகமாகத் தோன்றவில்லை.

// பக்தியோடு வரும் மாற்றுமதத்தாரை எப்படி கண்டுபிடிப்பது என கேட்கிறீர்கள்.மாற்றுமதத்தவர் சபரிமலை கோயிலுக்குள் வரவேண்டுமென்றால் விரதமிருந்து வரவேண்டும் என விதி இருக்கிரது என நினைக்கிரேன்.அதே போல் மற்ற கோயில்களுக்கு வரவேண்டுமென்றால் திரூநீறு அணிந்து வரவேண்டும் என்று சொல்லலாம். நீரணிந்தோர் ஆஷாடபூதியானாலும் அவரை சிவனடியாராய் கருதுவதே மரபு. //

அதனால்தான் சொல்கிறேன் அனைவரையும் அனுமதிக்க வேண்டுமென்று. தவறு செய்ய வேண்டும் என்ற முடிவோடு வருகின்றவர்கள்...திருநீறையும் குங்குமத்தையும் அப்பிக் கொண்டு அம்மன் கொண்டாடியைப் போல வேடமிட்டும் வரலாம். சுற்றிப் பார்க்க வந்தாலும்...அவர்கள் வழிபாட்டுக்கு இடைஞ்சலாக இல்லாத வகையில் இருந்தால் மட்டும் போதும்.

// தங்கத்தேர் இழுப்பது இப்போதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது ராகவன்.அந்த காசும் போதவில்லை.காசு கொடுத்து தரிசினம் செய்வதில் கோயிலுக்கு வரும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, மண்டபம் கட்டுவது என பல செலவுகளுக்கு நிதி கிடைக்கிறது.அதை நிறுத்த வேண்டாம்.ஏற்கனவே பல கோயில்கள்வருமானமின்றி இருக்கின்றன.வி.ஐ.பிக்கள் மூலம் வரும் தொகை நின்றால் அவை சுத்தமாக வருமானமிழக்கும் //

இந்த வருமான விஷயந்தான் கொஞ்சம் உதைக்கிறது..எப்படித்தான் நல்ல வழிகளில் நிதியாதாரங்களைப் பெருக்குவது?

said...

// வெற்றி said...
இராகவன்,
முதலில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி வெற்றி. இப்பொழுது பொங்கலும் வந்து விட்டது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

// இராகவன், இங்கே Toronto ல் உள்ள சில சைவ ஆலயங்களில் தமிழிலும் பூசைகள் செய்யப்படுகிறது. அடுத்தது
அமெரிக்காவில் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண், பெண், சிறுவர்கள் குழந்தைகள் யாரும் தாமாகவே சென்று இறைவனுக்குப் பூசை செய்யலாம். பால் அபிசேகம் செய்யலாம். //

மிகச் சிறப்பு. கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

said...

// ஜீவா (Jeeva Venkataraman) said...
தமிழ் பூசைதான் ஏற்கனவே இருக்கிறதே. எல்லா இடங்களிலும் இல்லையோ? //

அப்படியா என்ன? பெயரளில்தானே இருக்கிறது. தமிழில் செய்யுங்கள் என்று சொன்னால் மட்டுந்தானே செய்யப்படும். உங்கள் வீட்டில் இங்கு தமிழிலும் பேசப்படும் என்று எழுதி வைப்பது உங்களுக்குப் பெருமையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அந்தப் பலகையே ஒரு இழிவாகத்தான் தோன்றுகிறது.

////அதே போல் பூசாரிகளும் அருச்சகர்களும் கூட சட்டையணிவது நல்லதே.

- இதை கட்டாயமாக்க வேண்டும். //

ஆமாங்க. நிச்சயமாக.


// வீடியோ/புகைப்படம் - அப்படி முக்கியமானது இல்லை -கோவிலுக்குள். //

முக்கியமானதா இல்லையா என்பதை விட........சரியானதா தவறானதா என்பதுதான் கேள்வி. சரியானது என்றால்...வழிபாட்டுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எடுக்கலாம் என்பதே என் கருத்து.

// எல்லாவற்றைவிட முக்கியமானது:
பொது இடங்களில் பலிதருவதை தடை செய்யவேண்டும். //

பலியிடுவதைத் தடை செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அது சரியா என்றும் தோன்றவில்லை. ஆனால் பொது இடங்களில்...பரிசீலிக்கலாம். கொல்கொத்தாவில் காளி கோயிலில் மீன் துண்டங்களைக் குப்பல் குப்பலாகப் பொரித்துத் தட்டியிருந்தார்கள். ஆனால் பலி கொடுப்பதற்குத் தனியிடம். பலி கொடுப்பவரைத் தவிர மற்றவர்கள் போக முடியாது என நினைக்கிறேன்.

// கார்த்திக் பிரபு said...
8. திருநீறோ குங்குமமோ சந்தனமோ...கையில் கிள்ளிப் போடுவதைக் காட்டிலும் தொழுகைக்கு வருகின்றவர்களே எடுத்துக்கொள்ளும் வகையில் கிண்ணத்தை நீட்டலாம். அவர்கள் தொட்டு எடுப்பதால் கோயில் தூண்களாவது தப்பிக்கும்.//

idhu romba sariyana karuthu...nan ungalai valimoligirane..aanala avsarathirku naamum sirapu valigalai payanpaduthtuvadhi ninaithall avamanaga irukiradhu //

உண்மைதான் காபி...கொஞ்சம் சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. அவனிடம் அதற்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்பதைத் தவிர...இப்பொழுதைக்கு வேறெதும் செய்ய முடியவில்லை.

said...

// சிறில் அலெக்ஸ் said...
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

"ஆன்மீகமும் பக்தியும் ஆலயங்களோடு மட்டும் நின்றுவிடாமல் அன்றாடம் வாழ்விலும் செயல்படுத்தப் படவேண்டும்.." //

உறுதியாக சிறில். இது திருக்கோயில்களுக்கு மட்டுமல்ல மடாலயங்களுக்கும் சர்ச்சுகளுக்கும் மசூதிகளுக்கும் பொருந்தும். அனைவரும் இதை உணர்ந்தால் பிரச்சனைகளே இருக்காது.

said...

// ஜடாயு said...
ராகவன்,

தங்கள் கருத்துக்கள் அனைத்தையும் வழிமொழிகிறேன், இரண்டு தவிர..

சட்டை கழற்றுவது என்பது ஒரு விதமான ethnic லுக் தருகிறது என்பது தவிர வேறு எந்த தீமையும் இல்லை. அதனால், சில கோவில்களில் அது மரபு என்னும்போது அதைக் கடைப் பிடிக்கலாம். பத்ரிநாத் போன்று பனிகொட்டும் கோயில்களில் 4-5 ஸ்வெட்டர்கள் போட்டுக் கொண்டால் தான் குளிரில் நடுங்காமல் நிற்கவே முடியும்.. அங்கு இத்தகைய சட்டம் செல்லுமா?::)) //

:-)) ஜடாயு...மரபு என்பது ஏன் இருக்கிறது? அதற்குக் காரணம் என்ன? காரணமின்றி காரியம் இருக்குமானால் அந்தக் காரியத்தைச் செய்வதில் என்ன பெருமை இருக்க முடியும்.

// "மாற்று மதத்தவர்கள்" அனுமதி.. இங்கே வெளிநாட்டவர் என்று சொல்லவந்ததாகத் தெரிகிறது.. ஏனென்றால் இந்தியர்களைப் பொறுத்தமட்டில் மாற்றுமத அடையாளம் (குல்லா, பாதிரி அங்கி) போன்றவை இல்லாவிட்டால், வெறும் உருவ அமைப்பை வைத்து மதத்தை அடையாளம் எப்படிக் காண முடியும்?? எத்தனையோ கிறித்தவ, முஸ்லீம்கள் சர்வ சாதாரணமாகக் கோயில்களுக்கு வருவதை நான் பார்த்திருக்கிறேன்.. பிரபலம் என்றால் தான் ப்ராப்ளம் (யேசுதாசுக்கு இன்றுவரை குருவாயூர் கோயிலில் அனுமதியில்லை). வெளிநாட்டவர்களை தமிழகக் கோயில்களுக்குள் விடுவதில்லை. இது மிகவும் தவறு. //

இதைத்தான் நானும் சுட்டிக் காட்டுகிறேன். திருட்டுத்தனமாக நுழைய விரும்புகிறவன் கொஞ்சம் திருநீற்றைப் பூசிக் கொண்டு வந்து விடலாம். நேர்மையாக வர நினைப்பவனுக்குத்தான் பிரச்சனை. ஆகையால் உள்ளே வருகின்றவன் இந்துவா இல்லையா என்று பார்க்க வேண்டியதில்லை.

// செல்வன் சொல்வது போல, வணங்கும் கடவுளின் மீது பக்தி உள்ளது என்றால் எல்லாரையும் அனுமதிக்க வேண்டும். ஜிகாத் தீவிரவாதம் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் இதனால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். //

நிச்சயமாக. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமுள்ள சுற்றுலாத்தலங்களில் எல்லாரும் அமைதியாகச் சென்று வர முடிவது போல திருக்கோயில்களிலும் முயல வேண்டும். நல்லதையே நினைப்போம்.

// இன்னும் சில முக்கியமான, தேவைப் படும் மாற்றங்கள்

1) கோயில் சொத்துக்கள் அரசாலும், மற்ற பேர்வழிகளாலும் கொள்ளையடிக்கப் படுவது முற்றிலுமாக நிற்க வேண்டும். //

நான் சொல்ல மறந்த கருத்து இது. இந்து அறநிலையத்துறையின் வருவாய்...அந்தத் துறைக்கு மட்டுமே பயன்பட வேண்டும்.

// 2) கடவுள் மறுப்பை வெறித்தனமாகப் பரப்பும் ஆட்கள் கோயில் சம்பந்தமான எந்த விஷயத்திலும் தலையிட உரிமை கிடையாது. கோயில்ன் நிர்வாகம் மற்றும் பற்ற எல்லாப் பணிகளிலும் இருக்கும் இத்தகைய ஆட்களை இனம் கண்டு நீக்க வேண்டும். //

இந்து அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நியாயமே. வக்ப் வாரியத்தில் எப்படி மற்ற மதத்தவர்கள் இருக்க முடியாதோ...அப்படித்தான் இங்கும். இதுவும் ஏற்கப்பட வேண்டிய கருத்து.

// 3) கோயில் வழிபாட்டுத் தலம் மட்டுமன்று. சமய, சமூக, கல்வி, கலை, கலாசார மையம். கோயிலின் இந்தத் தன்மையை மீட்டெடுக்க வேண்டும். எல்லாக் கோயில்களிலும் விடுமுறை நாட்களில் சமய வகுப்புகள் நடக்க வேண்டும். கிராமப் புறங்களில் உள்ள கோயில் பிராகாரங்களில் மாலை நேரங்களில் ஏழை மாணவ, மாணவிகளுக்காக கூடுதல் கல்வி வகுப்புகள் நடப்பதை மிகவும் ஊக்குவிக்க வேண்டும். //

நல்ல கருத்துதான்.

// 4. அதிக வருமானம் உள்ள கோவில்கள் பராமரிப்பு இன்றி வாடும் கோயில்களுக்கு உதவ ஒரு புரபஷனல் திட்டம் தயாரித்து அமல் செய்ய வேண்டும். //

கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

said...

ராகவா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்! தங்கள் இலங்கை யாத்திரையை எங்கள் நல்லூர்க் கந்தனும்;கதிர்காமக் கந்தனும் தான் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
நிற்க...அத்தனையும் திருக்கோவில்களில் கடைப்பிடிக்கவேண்டுமென்பதுடன்; ஓதுவார்களையும்;நாதஸ்வர இசைக்கலைஞர்களையும் ,ஒவ்வொரு கோவிலுக்கும் நியமித்து வாழக்கூடிய ஊதியமும் கொடுத்தால் ;இசையும் வளரும் அந்தக் குடும்பமும் வாழ்வதுடன்;இக்கலைகளும் வாழும் என்பது என் அபிப்பிராயம்.
யோகன் பாரிஸ்

said...

இந்து மதத்தில் சட்டையைக்கழட்ட வேண்டுமென்றால், இசுலாமியத்தில வேறு வகை. பெர்முடா போன்றவற்றை அணிந்து வர அனுமதியளிப்பதில்லை. நான் நேரடியாக கண்டிருக்கின்றேன். அவரவருக்கு ஒரு வரைமுறை செய்து ஆண்டவனை காப்பாற்ற நினைக்கிறார்கள். எதுவோ, எப்படியோ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

said...

இதைத்தான் நானும் சுட்டிக் காட்டுகிறேன். திருட்டுத்தனமாக நுழைய விரும்புகிறவன் கொஞ்சம் திருநீற்றைப் பூசிக் கொண்டு வந்து விடலாம். நேர்மையாக வர நினைப்பவனுக்குத்தான் பிரச்சனை. ஆகையால் உள்ளே வருகின்றவன் இந்துவா இல்லையா என்று பார்க்க வேண்டியதில்லை.//

திருட்டுத்தனமாக வர விரும்புகிறவன் திருநீறே பூசவேண்டியதில்லை ராகவன்.இப்போது ஒவ்வொரு கோயிலிலும் வருகிறவர்களை யாரும் தடுத்து நிறுத்தி சோதிப்பதில்லை.

மாற்றுமதத்தினர் என்று வெளிப்படையாக தெரிகிறவர்கள் கோயில் வளாகத்தில் இருக்கும்போது ஒரு சிறுபிரச்சனை நடந்தால் உடனே மதக்கலவரம் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.இருக்கும் கலவரங்கள் போதாதென்று இந்த பிரச்சனைகளும் வரவேண்டுமா?:-))

said...

//திருநீறோ குங்குமமோ சந்தனமோ...கையில் கிள்ளிப் போடுவதைக் காட்டிலும் தொழுகைக்கு வருகின்றவர்களே எடுத்துக்கொள்ளும் வகையில் கிண்ணத்தை நீட்டலாம். அவர்கள் தொட்டு எடுப்பதால் கோயில் தூண்களாவது தப்பிக்கும்//

ஜிரா! இனிய எண்ணங்களை எடுத்துரைத்துள்ளீர்கள்!

கோவில் தூண்களில் இப்போதெல்லாம் பல கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளனவே! அப்படி இருந்துமா தூண்கள் அலைகழிக்கப் படுகின்றன?

பேசாமல் பூசை செய்பவரையே நெற்றியில் இட்டுவிடச் சொல்லலாமா? சாதிப் பாகுபாடுகள் / தீண்டும் தயக்கங்கள் இதனால் ஒழியலாம்!

இளைய பூசாரிகள் என்றால் ஆண்/பெண் பிரச்னை வரும்! மூத்த பூசாரிகளை மட்டும் செய்யச் சொல்லலாம்! :-))

திருநீறு குங்குமம் சந்தனம் - சரி!
துழாயும் தீர்த்தமும் என்ன செய்வீர்கள்! அதற்கும் ஏதாச்சும் யோசனை சொல்லுங்கள்!

said...

ராகவன்,

புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

1. திருக்கோயிலில்களில் சாதீய பாகுபாடுகள் இன்றி விருப்பமுடைய எவரும் பூசனை செய்யும் நிலை வர வேண்டும். இதை ஏற்காமல் வழிவழி வருவது என்ற வாதம் செய்வது எடுபடாது. வழிவழி வரத்தொடங்கியது எப்பொழுதிலிருந்து என்று ஆய்ந்தால் பல இடங்களில் உண்மை தெளிவாகும்.

*விருப்பம் மட்டுமே போதுமா?
இங்கே விருப்பத்தினை விட மிக அவசியமானது இறைவன் மீதான நம்பிக்கையும், தெய்வத்தின் மீதான பக்தியும் மிக அவசியமில்லையா? வெறும் விருப்பம் மட்டும் எனில் இறைவனே இல்லை என்போரும் வர விரும்பலாம் இறை பக்தி தவிர்த்த இதர பல்வேறு விஷயங்களுக்காக :-))

2. தமிழகத்தில் இறைவனைப் பூசனை செய்கையில் தமிழில் செய்வது சிறப்பாகும். வடமொழியில் அருச்சனை செய்ய விரும்பினால் அதற்கும் ஏற்பாடு செய்யலாம். தேவைப்பட்டால் கோயில்கள் அனைத்திலும் இங்கு வடமொழியிலும் அருச்சனை செய்யப்படும் என்று பலகைகளில் எழுதித் தொங்க விடலாம். அதையும் தமிழிலும் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் தொங்க விடலாம். தமிழகத்திற்கு வரும் வெளிமாநில நாட்டுக்காரர்கள் விரும்பினால் வடமொழியில் அருச்சனை செய்யலாம். வேள்விகளும் குடமுழுக்கும் தமிழிலேயே செய்யலாம்.

*தற்போதே அர்ச்சனையை
அ)போற்றியா ஆ)நமகவா எனத் தெரிவு செய்யலாமே.

சமஸ்கிருத மந்திர ஒலிகளின் அதிர்வுகள் தரும் அனுபவம் இது ஏற்படுத்தும் Mental agitation Tranqulizing impact தரும் மனஅமைதி தனிச்சிறப்பானவை.

இது மொழியியல் ரீதியாக இல்லாமல் ஒலியியல் ரீதியாக மனதுக்கு தரும் பாஸிடிவ் விளைவை நோக்கினால் மொழியுணர்வு ரசாபாசம் இல்லை.

3. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கோயில் அருச்சகர்களவோ பூசாரிகளாகவோ வர வேண்டும். தூய்மை என்று சாக்குச் சொல்லக் கூடாது. இன்று ஆண்களும் பெண்களும் இணைந்து பல இடங்களில் வேலை செய்கிறார்கள். அங்கெல்லாம் தூய்மை கெட்டு விட்டதா! அனைத்தையும் கடந்த பரம்பொருள் இதனால் தீட்டாவார் என்று நினைப்பது அறிவீனம். பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று சொல்வதும் தகாது, அந்த சமயங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்குப் பெரிய கோயில்களில் எத்தனை அருச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் விடுப்பில் ஒன்றும் குறைந்து விடாது, அது போலத்தான் இங்கும்.

*புதிதாய்ச் சொல்ல ஏதுமில்லை இதில்.
பெண்களுக்குத் தேவையான உடனடித் தேவையாக இது இருக்கிறதா?

பெண்கள் பூசாரியானால், அதே இடத்தில் தெய்வ பக்தி, இறைவனை நம்பாத வெறும் விருப்பம் மட்டும் இருக்கும் நபர் பூசாரி வேலையில் இருக்கும் நிலையில் பூஜை பகவானுக்கு நடக்குமா?

அர்ச்சக அம்பாளை மட்டுமே விருப்பத்தால் வேலையாக ஏற்றவர் ஆறுகாலம் தாண்டியும் துதித்து பூஜை தொடர்வது தெய்வக் குத்தமாகிவிடாதா?
:-)))

4. கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க விட வேண்டும். வீடியோ எடுக்கவும் விட வேண்டும். எல்லாம் வல்ல இறைவனை ஒரு புகைப்படமா சக்தி இழக்கச் செய்யும்? மலேசிய பத்து மலைக் கோயிலில் கருவறையின் முன்னின்று முருகப் பெருமானை படமெடுக்க விடுகிறார்கள். அற்புதமான அனுபவம் அது. நெருப்பைக் கரையான் தின்ன முடியாது என்பதை உணர வேண்டும்.

*அப்படித்தான் இருந்தது. தற்போது பாதுகாப்புக் காரணத்தினால் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

மலேஷிய பத்துமலை கோலாலம்பூரின்/மலேஷியாவின் ஹாட் பேவரைட் டூரிஸ்ட் ஸ்பாட். நம்மூர்கோவில்கள் அப்படியாக வெறும் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மட்டுமே இல்லை!

இதர மார்க்கத்தினரில் தீவிரமானவர்களால், அவர்களது சகிப்புத்தன்மைஇன்மையால் பாதுகாப்புஇன்மை இந்துக் கோவில்களுக்கே அதிகம்.

5. அனைத்து மதத்தாரையும் கோயிலுக்குள் விட வேண்டும். ஆனால் அவர்கள் வழிபடுகின்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று சொல்லலாம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். வணங்கினால்தான் இறைவன் என்றில்லை. வைதாரையும் இங்கு வாழ வைப்போன் தானே! மற்ற மதத்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதல்ல முக்கியம். நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியம்.

இன்றைக்கு பாதுகாப்பை முன்னிறுத்தித் தான் இந்துக் கோவில்களில் நடைமுறைகளில் ரீபார்மஸ் கடைபிடிக்கப்பட்டுவரும் தற்போதைய வழிமுறைகளில் பார்க்கவேண்டிய கட்டாயச் சூழல்.

கோவில்களுக்கு தெய்வ நம்பிக்கையிருந்தால் மனிதர்களாகிய எல்லோரும் வரலாம்.

6. சட்டையைக் கழட்டச் சொல்லும் வழக்கம் பல கோயில்களில் உண்டு. அந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும். சட்டை போட்டுக் கொண்டும் உள்ளே செல்ல விட வேண்டும். திருச்செந்தூர் கோயிலிலும் இந்தப் பழக்கம் இப்பொழுது உண்டு. அது கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும். சட்டையைக் கழற்ற வேண்டும் என்பதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் எனக்குத் தோன்றவில்லை. அதே போல் பூசாரிகளும் அருச்சகர்களும் கூட சட்டையணிவது நல்லதே.

* வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கும் மரபுகள் இவை. எல்லாக் கோவில்களிலும் இப்படியாக இல்லை. திருச்செந்தூரில் நிலவும் அதிகமான புழுக்கம் ஒரு காரணமா?
:-))

7. கோயிலுக்குள் சிறப்பு மரியாதை என்ற பாகுபாடு ஒழிய வேண்டும். எல்லாரும் ஒன்று என்ற நிலை இருக்க வேண்டும். அரசனானாலும் ஆண்டியானாலும் இறைவனை ஒரே வழியில்தான் தரிசிக்க வேண்டும்.

*இதெல்லாம் கோவிலுக்கு வெளியே எதையும் வரிசையில் நின்று பெறாத, பணமிருந்தால் மார்க்கமுண்டு எனும் நமது மக்களின் பழக்கத்தின் நீட்சி! நாம் தான் மாறவேண்டும் தனிப்பட்டு.

கோவில்களில் கட்டணம் வசூலிப்பது கழகங்களின் தலைமையில் அமைகின்ற அரசே அன்றி இந்து மத நிறுவனங்களோ அமைப்புகளோ இல்லை. கழகங்களின் வட்ட, மாவட்டங்கள் அரசு அதிகாரத்தினைக் கொண்டு 1008வது கொள்ளையடிப்புக்கு இதுவும் ஒரு வழியாக அரசுகள் பயன்படுத்துவது.

8. திருநீறோ குங்குமமோ சந்தனமோ...கையில் கிள்ளிப் போடுவதைக் காட்டிலும் தொழுகைக்கு வருகின்றவர்களே எடுத்துக்கொள்ளும் வகையில் கிண்ணத்தை நீட்டலாம். அவர்கள் தொட்டு எடுப்பதால் கோயில் தூண்களாவது தப்பிக்கும்.

*தரப்பட்டால் பிரசாதம். சுயமாகத் தன்னாலே எடுத்துக்கொள்ளப் பட்டால் இச்சையோடு இணைக்கப்பட்ட செயல் என்பதாலேயே இப்பழக்கம்.

கோவில் தூண்கள் தப்பிக்க நாம் தான் மீண்டும் மாறவேண்டும். பகுத்தறிவை உபயோகித்து கலைவளாகங்களான ஆலயங்களைப் பேணவேண்டும்.

said...

//கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க விட வேண்டும். வீடியோ எடுக்கவும் விட வேண்டும். எல்லாம் வல்ல இறைவனை ஒரு புகைப்படமா சக்தி இழக்கச் செய்யும்?//

புகைப்படம் எடுத்தால் சக்தி குறைந்துவிடும் என்று சொல்வது மூடநம்பிக்கை, இல்லை விளக்கத் தெரியாமல் சிலர் சொல்வது! இது நம் எல்லாருக்குமே தெரியும்!

இப்படிச் சொல்வதால் அவர்கள் நம் உரிமையை மறுக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது!
உற்சவ மூர்த்தியை படம் எடுத்துக் கொள்வதில் யாரும் எந்த மறுப்பும் சொல்வதாகத் தெரியவில்லையே!

உங்கள் எண்ணம் புகைப்படம் எடுத்த இறைவனை வீட்டுக்குக் கொண்டு வந்து எப்போதும் இடையறாது சேவித்துக் கொண்டிருத்தல் வேண்டும் என்றால், அது உயரிய எண்ணமே!
ஆனால் கருவறை மூல மூர்த்திக்கு என்று ஆகம வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்தப் பிரதி எடுக்காது இருத்தல்! நான் செய்யும் அன்புக்கும் பக்திக்கும் முன்னர் இந்த ஆகமம் எல்லாம் தேவையா என்று கேட்டால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை!

ஏன் இப்படி? பின்னூட்டத்தில் சொன்னால் விரிந்து விடும்! தனிப் பதிவில் பின்பு இடுகிறேன்!

ஆனால் இந்தக் காலத்தில் படம் எடுப்பதை விடுங்கள்! முற்காலங்களில் ஓவியமாக இறைவன் உருவை வரைவதற்கே சில பல நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதித்து இருந்தார்கள்!

இதே போல் இறைவனின் திருவுருவம் இன்னும் எளிதாகத் தெரியும் வண்ணம் ஃபோகஸ் லைட், உள்ளே பூசை புரிபவர்க்கும், வழிபடுவோர்க்கும் வேர்த்து பிசுபிசுக்காது இருக்க ஏசி, (மின் விசிறி என்றால் விளக்குகள் அணைந்து விடுமே! அதனால் தான்) கருவறை என்பதால் காற்றோட்டமில்லாமல் இருக்கும்- அதனால் ஜன்னல்கள் என்று இப்படி எல்லாம் பக்தர்களுக்கு வேறு பல வசதிகளும் செய்து தரலாமா? :-))

ஆனால் ஆகம விதிப்படி அமைக்கப் பெற்ற பழம்பெரும் ஆலயங்களில் ஒரு சில நெறிமுறைகள் உண்டு! அது அங்கு வணங்குவதற்காகக் கூடும் நமது நன்மைக்கே அன்றி, இறைவனுக்காக ஏற்பட்டவை அன்று!

பரந்து விரிந்துள்ள காற்றைக் குடுவைக்குள் தான் அடக்க முடியுமா? ஆனால் ஏன் மருத்துவமனைகளில் அப்படி அடக்கி வைக்கிறார்கள்? அது போலத் தான்!

இன்றும் நம் நாட்டில் மட்டும் அல்லாது வெளி நாடுகளிலும் கலைக்கூடங்களில் ஒரு சில இடங்களில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை! வியாபர நோக்கத்துக்காக இந்தத் தடை கிடையாது! அப்புறம் ஏன்? கலை வளர்க்க முழுதும் அனுமதிக்கலாமே! அதன் உண்மையான காரணம் என்னவென்றால் "தேடல்"!

இந்தத் தேடலை வலியுறுத்தத் தான் இப்படி! ஆலய மூல மூர்த்தியை நேரில் கண்டு, கண் கலங்கி, மெய் சோர, நெக்குருகி அனுபவித்து ஆற்றிப், பின்னர் இல்லம் சேர்ந்த பின் மனத்தில் அசை போட்டு மகிழ வேண்டும்! உருவ வழிபாட்டுடன் பின்னர் அருவத்தையும் சேர்க்கத் தான் இந்த விதி! அதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

அதை விடுத்து, என் வசதிக்கு ஏற்றவாறு படமெடுத்து வந்து, என் வசதிக்கு ஏற்றவாறு இல்லத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்ற போக்கு, அன்பருக்கும் நலம் பயக்காது! இல்லத்திலும் எந்நேரமும் ஆலயச் சூழல் அமையாது! புதியன சொல்கிறேன், புதியன செய்கிறேன் பேர்வழி என்பது அடிப்படை அதாரங்களை மக்களுக்கு நலம் பயக்காது செய்து விடும்!

நம் கோவில்கள் முழுதும் வென்ற சித்தர்களுக்கு அல்ல! வெல்லப் போராடும் சாதாரண பக்தர்களுக்கே! அவர்களுக்கும் தேடல் முயற்சியை ஏற்படுத்தித் தரவே ஆகம ஏற்பாடுகள்! இவற்றை வள்ளலார் போன்ற ஆன்மீகச் சீர்திருத்த அன்பர்களும் பெரிதும் மதித்துப் போற்றிய காரணமும் இதுவே! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

said...

// Johan-Paris said...
ராகவா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்! தங்கள் இலங்கை யாத்திரையை எங்கள் நல்லூர்க் கந்தனும்;கதிர்காமக் கந்தனும் தான் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
நிற்க...அத்தனையும் திருக்கோவில்களில் கடைப்பிடிக்கவேண்டுமென்பதுடன்; ஓதுவார்களையும்;நாதஸ்வர இசைக்கலைஞர்களையும் ,ஒவ்வொரு கோவிலுக்கும் நியமித்து வாழக்கூடிய ஊதியமும் கொடுத்தால் ;இசையும் வளரும் அந்தக் குடும்பமும் வாழ்வதுடன்;இக்கலைகளும் வாழும் என்பது என் அபிப்பிராயம்.
யோகன் பாரிஸ் //

உண்மைதான் ஐயா. இதற்கும் ஏதாவது செய்ய வேண்டும். அறநிலையத்துறை என்று ஒன்று இருக்கையில் அந்தத் துறையின் பொறுப்பில் இவைகள் செய்யப்பட வேண்டும். கோயிலில் பூசனை செய்வோரும் ஓதுவோரும் இசைக்கலைஞர்களும் அந்தத் துறையே செய்ய வேண்டும். அந்தத் துறைக்கு வரும் வருமானம் அந்தத் துறையாலேயே செலவிடப்பட வேண்டும்.

said...

// ILA(a)இளா said...
இந்து மதத்தில் சட்டையைக்கழட்ட வேண்டுமென்றால், இசுலாமியத்தில வேறு வகை. பெர்முடா போன்றவற்றை அணிந்து வர அனுமதியளிப்பதில்லை. நான் நேரடியாக கண்டிருக்கின்றேன். அவரவருக்கு ஒரு வரைமுறை செய்து ஆண்டவனை காப்பாற்ற நினைக்கிறார்கள். எதுவோ, எப்படியோ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். //

இளா, வீட்டுக்கு வீடு வாசப்படி. ஆனால் தன்னுடைய வாசல் மட்டும் நல்ல வாசல் என்று சொல்லிக் கொள்வதில் எல்லாருக்கும் அப்படியொரு மகிழ்ச்சி.

மலேசியாவில் புத்தர்களும் தமிழர்களும் அடுத்தவர் கோயிலுக்குள் எந்தப் பாகுபாடுமின்றிச் செல்கிறார்கள். வணங்குகிறார்கள்.அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. பினாங்கு முனீஸ்வரன் கோயிலில்தான் எல்லாத் தமிழர்களும் சீனர்களும் புது வண்டிக்குப் பூசனை போடுகிறார்கள்.

said...

// செல்வன் said...

மாற்றுமதத்தினர் என்று வெளிப்படையாக தெரிகிறவர்கள் கோயில் வளாகத்தில் இருக்கும்போது ஒரு சிறுபிரச்சனை நடந்தால் உடனே மதக்கலவரம் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.இருக்கும் கலவரங்கள் போதாதென்று இந்த பிரச்சனைகளும் வரவேண்டுமா?:-)) //

உண்மையிலேயே வருத்தத்திற்குரிய கருத்து இது செல்வன். திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம். பிரச்சனையை விரும்பும் அனைத்து மதத்தாரும் மாறினாலன்றி இதற்கு மாற்று கிடையாது.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜிரா! இனிய எண்ணங்களை எடுத்துரைத்துள்ளீர்கள்! //

இதுல உள்குத்து எதுவும் இல்லையே ரவி?

// கோவில் தூண்களில் இப்போதெல்லாம் பல கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளனவே! அப்படி இருந்துமா தூண்கள் அலைகழிக்கப் படுகின்றன? //

நீங்க இப்போதைக்குக் கோயிலுக்கே போகலைன்னு தெரியுது. அமெரிக்கக் கோயில்கள் போயிட்டு....நம்மூர்ல எப்படி இருக்குன்னு தெரியலையா!

// பேசாமல் பூசை செய்பவரையே நெற்றியில் இட்டுவிடச் சொல்லலாமா? சாதிப் பாகுபாடுகள் / தீண்டும் தயக்கங்கள் இதனால் ஒழியலாம்! //

இதுவும் பல கோயில்களில் பார்த்துள்ளேன். குறிப்பாக கர்நாடகத்தில்.

// இளைய பூசாரிகள் என்றால் ஆண்/பெண் பிரச்னை வரும்! மூத்த பூசாரிகளை மட்டும் செய்யச் சொல்லலாம்! :-)) //

பிரச்சனை எங்கதான் வரலை. உடம்புக்கு முடியலைன்னு வயசான டாக்டராத் தேடுறோமா என்ன? :-)

// திருநீறு குங்குமம் சந்தனம் - சரி!
துழாயும் தீர்த்தமும் என்ன செய்வீர்கள்! அதற்கும் ஏதாச்சும் யோசனை சொல்லுங்கள்! //

தீர்த்தத்தை இப்பொழுது போலவே செய்யலாம். துழாயைத் தட்டிலிட்டு ஒரு பக்கமாக வைத்து விடலாம். அப்படித்தான் சென்னை அடையாறு அனந்தபத்மநாபசாமி கோயிலில் செய்கிறார்கள்.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உங்கள் எண்ணம் புகைப்படம் எடுத்த இறைவனை வீட்டுக்குக் கொண்டு வந்து எப்போதும் இடையறாது சேவித்துக் கொண்டிருத்தல் வேண்டும் என்றால், அது உயரிய எண்ணமே! //

இடையறாது இறைவனைச் சிந்திப்பவர்க்கு ஆவது "குறியைக் குறியாது குறித்தறியும் நெறி". நமக்கெல்லாம் இது போதும்.

// ஆனால் கருவறை மூல மூர்த்திக்கு என்று ஆகம வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்தப் பிரதி எடுக்காது இருத்தல்! நான் செய்யும் அன்புக்கும் பக்திக்கும் முன்னர் இந்த ஆகமம் எல்லாம் தேவையா என்று கேட்டால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை! //

நீங்கள் மட்டுமல்ல...நானும் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆகமங்கள்....என்று மட்டும் சொல்கின்றீர்கள். ஆனால் ஏன் என்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே!

// ஏன் இப்படி? பின்னூட்டத்தில் சொன்னால் விரிந்து விடும்! தனிப் பதிவில் பின்பு இடுகிறேன்! //

ஓ தனிப்பதிவா? காத்திருக்கிறேன்.

// ஆனால் இந்தக் காலத்தில் படம் எடுப்பதை விடுங்கள்! முற்காலங்களில் ஓவியமாக இறைவன் உருவை வரைவதற்கே சில பல நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதித்து இருந்தார்கள்! //

கருவறைக்குள் அமர்ந்துதான் வரைய வேண்டும். ஆனால் கருவறைக்குள் எல்லாரும் போக முடியாது. கதைக்குள் கதை போல...ஒவ்வொன்றுக்குள் ஒவ்வொன்று.

// இதே போல் இறைவனின் திருவுருவம் இன்னும் எளிதாகத் தெரியும் வண்ணம் ஃபோகஸ் லைட், உள்ளே பூசை புரிபவர்க்கும், வழிபடுவோர்க்கும் வேர்த்து பிசுபிசுக்காது இருக்க ஏசி, (மின் விசிறி என்றால் விளக்குகள் அணைந்து விடுமே! அதனால் தான்) கருவறை என்பதால் காற்றோட்டமில்லாமல் இருக்கும்- அதனால் ஜன்னல்கள் என்று இப்படி எல்லாம் பக்தர்களுக்கு வேறு பல வசதிகளும் செய்து தரலாமா? :-)) //

ரவி...நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கின்றீர்கள். எல்லா பெரிய கோயில்களிலும் மின் விளக்குகளும் மின் விசிறிகளும் ஏர்கூலர்களும் இருக்கின்றன. திருச்செந்தூர் கோயிலில் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே ஏர்கூலரைப் பார்க்கிறேன். மின்விளக்கை ஏற்றுக் கொள்ளும் பொழுது ஏர்கண்டிஷரை ஏற்பதிலோ கேமராவை ஏற்பதிலோ என்ன தயக்கம்?

// ஆனால் ஆகம விதிப்படி அமைக்கப் பெற்ற பழம்பெரும் ஆலயங்களில் ஒரு சில நெறிமுறைகள் உண்டு! அது அங்கு வணங்குவதற்காகக் கூடும் நமது நன்மைக்கே அன்றி, இறைவனுக்காக ஏற்பட்டவை அன்று! //

நமக்காக என்று வருகையில்...காலத்துக்கு ஏற்று எல்லாம் மாறுகையில் இவைகளும் மாறித்தான் ஆக வேண்டும். அதுதான் சரி.

// பரந்து விரிந்துள்ள காற்றைக் குடுவைக்குள் தான் அடக்க முடியுமா? ஆனால் ஏன் மருத்துவமனைகளில் அப்படி அடக்கி வைக்கிறார்கள்? அது போலத் தான்! //

அது போலத்தான் எது? கோயில்களில் இறைவன் திருவுருவங்களை வைத்திருப்பதா? என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லையே.


// நம் கோவில்கள் முழுதும் வென்ற சித்தர்களுக்கு அல்ல! வெல்லப் போராடும் சாதாரண பக்தர்களுக்கே! அவர்களுக்கும் தேடல் முயற்சியை ஏற்படுத்தித் தரவே ஆகம ஏற்பாடுகள்! இவற்றை வள்ளலார் போன்ற ஆன்மீகச் சீர்திருத்த அன்பர்களும் பெரிதும் மதித்துப் போற்றிய காரணமும் இதுவே! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்! //

என்ன வள்ளலார் ஆகம விதிகளைப் போற்றியுள்ளாரா? அது எப்படி? புரியவில்லையே!

said...

// Hariharan # 26491540 said...
ராகவன்,

புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள். //

நன்றி ஹரிஹரன். உங்களுக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

// 1. திருக்கோயிலில்களில் சாதீய பாகுபாடுகள் இன்றி விருப்பமுடைய எவரும் பூசனை செய்யும் நிலை வர வேண்டும். இதை ஏற்காமல் வழிவழி வருவது என்ற வாதம் செய்வது எடுபடாது. வழிவழி வரத்தொடங்கியது எப்பொழுதிலிருந்து என்று ஆய்ந்தால் பல இடங்களில் உண்மை தெளிவாகும்.

*விருப்பம் மட்டுமே போதுமா?
இங்கே விருப்பத்தினை விட மிக அவசியமானது இறைவன் மீதான நம்பிக்கையும், தெய்வத்தின் மீதான பக்தியும் மிக அவசியமில்லையா? வெறும் விருப்பம் மட்டும் எனில் இறைவனே இல்லை என்போரும் வர விரும்பலாம் இறை பக்தி தவிர்த்த இதர பல்வேறு விஷயங்களுக்காக :-)) //

என்ன சொல்கின்றீர்கள் ஹரிஹரன். நான் அனைத்துச் சாதியினரும் பூசை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறேன். நீங்கள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இறைநம்பிக்கையில்லாதாரும் வேறுபல காரணங்களுக்காக வருவார்கள் என்கிறீர்களே. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

// *தற்போதே அர்ச்சனையை
அ)போற்றியா ஆ)நமகவா எனத் தெரிவு செய்யலாமே. //

பிறகு ஏன் இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை. பொதுவாக தமிழில் செய்யலாம். நமக வேண்டுவோர் கேட்டு செய்து கொள்ளலாமே. ஏன் தமிழில் விரும்புவோர் கேட்டுச் செய்ய வேண்டும்?

// சமஸ்கிருத மந்திர ஒலிகளின் அதிர்வுகள் தரும் அனுபவம் இது ஏற்படுத்தும் Mental agitation Tranqulizing impact தரும் மனஅமைதி தனிச்சிறப்பானவை. //

அப்படியா! நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க என்று ஓங்கி ஒலிக்கும் பொழுது உண்டாகும் அதிர்வுக்கும் நீங்கள் சொல்லும் ஆங்கில விஷயமும் எனக்கு வடமொழியில் வருவதில்லை. அதனால்தான் பொதுவாக தமிழில் வைத்து விட்டு...வடமொழி அதிர்வுகளை விரும்புகிறவர்கள்...அதைக் கேட்டு வாங்கிச் செய்துகொள்ளலாம் என்கிறேன்.

// இது மொழியியல் ரீதியாக இல்லாமல் ஒலியியல் ரீதியாக மனதுக்கு தரும் பாஸிடிவ் விளைவை நோக்கினால் மொழியுணர்வு ரசாபாசம் இல்லை. //

இதையே நான் அப்படியே திருப்பிப் போடலாம். தமிழ் இறைப்பாக்கள் தரும் அதிர்வுகளும் மனநிம்மதியும் இறையுணர்வும் மிகச்சிறப்பானவை. அதை மொழியியல் ரீதியில் அணுகாமல் ஒலியியல் ரீதியின் அணுகினால் கிடைக்கும் பாசிட்டிவ் விளைவுகளைச் சிந்தித்தால் மொழியுணர்வு ரசாபாசம் இல்லை.

பூம்பாவைக்கு உயிரைத் தந்த தமிழ்
பொங்கும் புனலினையே எதிர்த்து நின்ற தமிழ்
பாம்பு தன் நஞ்சறுக்கச் செய்த தமிழ்
தமிழ் தெய்வத்தை வசமாக்கும் இனிய தமிழ்

// *புதிதாய்ச் சொல்ல ஏதுமில்லை இதில்.
பெண்களுக்குத் தேவையான உடனடித் தேவையாக இது இருக்கிறதா?

பெண்கள் பூசாரியானால், அதே இடத்தில் தெய்வ பக்தி, இறைவனை நம்பாத வெறும் விருப்பம் மட்டும் இருக்கும் நபர் பூசாரி வேலையில் இருக்கும் நிலையில் பூஜை பகவானுக்கு நடக்குமா? //

அப்படியானால் பெண்களுக்கு இறைபக்தி கிடையாது என்கின்றீர்களா? இதென்ன அபத்தம். பணிக்கு ஆளெடுக்கையில் தகுதியானவர்தானா என்று பார்த்துதான் எடுக்க வேண்டும். அவர் எந்தச் சாதியாக இருந்தால் என்ன....எந்தப் பாலினமாக இருந்தால் என்ன? பக்தி இருந்தால் பெண் என்ன...திருநங்கைகளும் பூசனை செய்யலாம். திருத்தணியில் பாக்குப் பொட்டலத்தை வாயில் பிரித்துப் போட்டுக் கொண்டு திருநீறும் குங்குமமும் கொடுக்கிறார்களே..அவர்களா பக்திப் பழங்கள்?

// அர்ச்சக அம்பாளை மட்டுமே விருப்பத்தால் வேலையாக ஏற்றவர் ஆறுகாலம் தாண்டியும் துதித்து பூஜை தொடர்வது தெய்வக் குத்தமாகிவிடாதா?
:-))) //

நிச்சயம் ஆகாது.

// *அப்படித்தான் இருந்தது. தற்போது பாதுகாப்புக் காரணத்தினால் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. //

அப்படியா? எப்பொழுது புகைப்படம் எடுக்கும் வழக்கம் இருந்தது? கொஞ்சம் சொல்லுங்களேன். அப்படியே அந்தப் படங்களில் ஒன்றிரண்டை அனுப்பியும் வைத்தால் நலம்.

// மலேஷிய பத்துமலை கோலாலம்பூரின்/மலேஷியாவின் ஹாட் பேவரைட் டூரிஸ்ட் ஸ்பாட். நம்மூர்கோவில்கள் அப்படியாக வெறும் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மட்டுமே இல்லை! //

அப்படியா? அப்படியானால்...அமர்நாத் குகைக்கோயில் வெறும் டூரிஸ்ட் ஸ்பாட்தானா?

// இதர மார்க்கத்தினரில் தீவிரமானவர்களால், அவர்களது சகிப்புத்தன்மைஇன்மையால் பாதுகாப்புஇன்மை இந்துக் கோவில்களுக்கே அதிகம். //

ம்ம்ம்.....இதைச் சொல்லி எதையும் தடுத்து விடலாம். பெண் பூசனை செய்கிறவராக இருந்தால்...ஒரு பிரச்சனை என்று வருகையில் அவரால் சமாளிக்க முடியுமா என்று கேட்கலாம்....இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

// இன்றைக்கு பாதுகாப்பை முன்னிறுத்தித் தான் இந்துக் கோவில்களில் நடைமுறைகளில் ரீபார்மஸ் கடைபிடிக்கப்பட்டுவரும் தற்போதைய வழிமுறைகளில் பார்க்கவேண்டிய கட்டாயச் சூழல்.

கோவில்களுக்கு தெய்வ நம்பிக்கையிருந்தால் மனிதர்களாகிய எல்லோரும் வரலாம். //

அப்புறமெதற்கு அந்த போர்டு. அதை அகற்றி அனைவரையும் உள்ளே விடலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தலாம். உள்ளே செல்கின்றவர்களை ஸ்கேன் செய்யலாம் என்று சொல்லுங்கள். ஏற்கிறேன்.

// 6. * வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கும் மரபுகள் இவை. எல்லாக் கோவில்களிலும் இப்படியாக இல்லை. திருச்செந்தூரில் நிலவும் அதிகமான புழுக்கம் ஒரு காரணமா?
:-)) //

பெண்களுக்குப் புழுங்காதா ஹரிஹரன்?

// 7. *இதெல்லாம் கோவிலுக்கு வெளியே எதையும் வரிசையில் நின்று பெறாத, பணமிருந்தால் மார்க்கமுண்டு எனும் நமது மக்களின் பழக்கத்தின் நீட்சி! நாம் தான் மாறவேண்டும் தனிப்பட்டு. //

மாறுவோமா? இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல...பல விஷயங்களில் மாற வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.

// கோவில்களில் கட்டணம் வசூலிப்பது கழகங்களின் தலைமையில் அமைகின்ற அரசே அன்றி இந்து மத நிறுவனங்களோ அமைப்புகளோ இல்லை. கழகங்களின் வட்ட, மாவட்டங்கள் அரசு அதிகாரத்தினைக் கொண்டு 1008வது கொள்ளையடிப்புக்கு இதுவும் ஒரு வழியாக அரசுகள் பயன்படுத்துவது. //

அதுவும் தடை செய்யப்பட வேண்டியதே.

// *தரப்பட்டால் பிரசாதம். சுயமாகத் தன்னாலே எடுத்துக்கொள்ளப் பட்டால் இச்சையோடு இணைக்கப்பட்ட செயல் என்பதாலேயே இப்பழக்கம். //

பிரசாதம் எல்லாம் சரிதான். கைகளில் கிள்ளி எரிவதை விட எடுத்துக் கொள்வது தாவலை. மரியாதையாகக் குடுத்தால் சரிதான். ஆனால் அது நடந்தால்தான் பிரச்சனையே இல்லை. எல்லாரும் அப்படியென்று சொல்ல வரவில்லை. ஆனால் பல இடங்களிலும் பார்ப்பது அதுதானே.

// கோவில் தூண்கள் தப்பிக்க நாம் தான் மீண்டும் மாறவேண்டும். பகுத்தறிவை உபயோகித்து கலைவளாகங்களான ஆலயங்களைப் பேணவேண்டும். //

இதுவரைக்கும் அப்படிப் பேணப்படாததாலேயே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது ஹரிஹரன்.

said...

உங்கள் விருப்பங்கள் நன்று இராகவன். வேதங்களையெல்லாம் கரைத்துக் குடித்த பண்டிதன் அல்ல நான் என்று சொன்னதாலேயே வேதங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவர்களுக்கு என்னை விட நான் விரும்பியவற்றில் சரியான கருத்து இருக்க முடியும் என்று சொல்லிவிட்டீர்கள். அது அவையடக்கத்திற்காக வாய்ப்பேச்சாகச் சொன்னதாக இல்லை என்பது உங்களை நான் அறிந்ததால் அறிவேன்.

1. காலம் காலமாக திருக்கோவில்களில் இருக்கும் நிலை மாறி பெரும்பான்மையான கோவிலில் பிறப்பு அடிப்படையில் ஒரு ஜாதியைச் சேர்ந்தவரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரே பூசகராக இருக்கும் நிலை மாறத்தான் வேண்டும். திருக்கோவில்கள் என்னும் போது அவை பெருங்கோவில்கள் மட்டுமின்றி 'எல்லைச் சாமிகள்' என்றும் 'நாட்டார் தெய்வங்கள்' என்றும் அழைக்கப்படும் திருக்கோவில்களையும் குறிக்கும் என்று உணர்கிறேன். அங்கும் பரம்பரையாக நாங்கள் பூசிக்கிறோம் என்று சொல்லாமல் மற்றவர்களும் பூசிக்கும் நிலை வர வேண்டும். இதனைத் தெளிவாகச் சொல்லுவது நல்லது - இல்லையேல் இதனையும் பார்ப்பனர்களைத் தாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதும் சில நண்பர்களுக்கின் வெறுமனே மெல்லும் வாய்களுக்குக் கொடுத்த அவல் ஆகும்.

said...

2. சில கோவில்களில் இது நடக்கவில்லை ஆயினும் பெரும்பாலான கோவில்களில் தமிழுக்கு சம உரிமை இருக்கிறது. வைணவக் கோவில்களில் தமிழுக்கே முதலிடம். அங்கும் வடமொழியும் உண்டு. ஆனால் தமிழ்ப் பாசுரங்களுக்கே முதலிடம். அதே போல் எல்லா திருக்கோவில்களிலும் ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அதுவே என் விருப்பமும்.

பதிவிற்குத் தொடர்பில்லாத ஆனால் லேசாகத் தொடர்புடைய ஒன்று: அண்மையில் திருப்பதி திருமலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த போது இது தோன்றியது - திரு என்ற சொல் தெலுங்கில் இருக்காதே. அவர்களும் நம்மைப் போல் எண்ணத் தொடங்கி அவர்கள் மாநிலத்தில் இருக்கும் ஊரின் பெயரை திருப்பதி திருமலை என்பதில் இருந்து ஏதாவது ஒரு தெலுங்கு பெயராக மாற்ற நினைத்தால், இல்லை வடமொழிப் பெயராக மாற்ற நினைத்தால் நம் தமிழர்களின் எதிர்வினை எப்படி இருக்கும்? அவர்கள் அப்படி செய்யாமல் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு தெலுங்கின் மேல் பற்று இல்லை என்பதாலா? இல்லை தொன்று தொட்டு இருக்கும் ஊரின் பெயரை மாற்றக் கூடாது என்ற எண்ணத்தாலா? தொன்று தொட்டு இருந்தால் என்ன, இது இப்போது தெலுங்கு தேசத்தில் இருக்கும் ஊர் அதனால் இனிமேல் திருமலை என்று சொல்ல மாட்டோம்; ஏடு கொண்டல என்று தான் சொல்வோம் என்று சொன்னால்?

3. மிக நல்ல கருத்து. அப்படியே சொல்லுக்கு சொல் வழி மொழிகிறேன்.

said...

4. இது எனக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தெரியவில்லை இராகவன். புகைப் படம் எடுப்பதால் கோவிலின் புனிதம் கெடும் என்பதில் எனக்கு நம்பிக்கை குறைவே.

5. ஒரு காலத்தில் மற்ற மதத்தாரை உள்ளே விடாமல் இருந்ததற்கு காரணம் இருந்தது. இப்போது அந்த காரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. திருக்கோவிலுக்கு ஊறு விளைவிக்க எண்ணுபவர் மாற்று மதத்தார் என்று சொல்லிக் கொண்டு வரமாட்டார்கள். இந்து என்று சொல்லிக் கொண்டு வந்தே தங்கள் கொடுஞ்செயலைச் செய்யலாம். அதனைத் தடுக்க இந்த விதி பயன்படாது. வேற்று மதத்தாரின் கோவில்களுக்கு இந்துக்கள் செல்ல முடிவது போல் வேற்று மதத்தாரும் நம் திருக்கோவில்களுக்கு வர இயலவேன்டும்.

ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிடைத்த அனுபவம் நினைவிற்கு வருகிறது. எனக்கு அருகில் நின்று கொண்டு ஒரு வெள்ளையர் தொழுது கொண்டிருந்தார். அப்போது கோவில் பணியாளர் ஒருவர் வந்து அவரிடம் தமிழில் 'வெளியே போ, வெளியே போ' என்று கையை வாயிலை நோக்கிக் காட்டி சொன்னார். வெள்ளையருக்குப் புரிந்து விட்டது என்னவென்று. நான் இந்து தான் என்று சொல்கிறார் ஆங்கிலத்தில். அது புரியாத பணியாளர் அதனையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் இடையில் புகுந்து 'ஐயா. இவர் இந்து தானாம். அதானல் இவர் வெளியே போகத் தேவையில்லை' என்றேன். அதனை மறுத்து அந்தப் பணியாளர் 'என்னங்க சொல்றீங்க? இவரு வெள்ளைக்காரரா இருக்காரு? இந்துன்னு சொல்றீங்க?' என்றார். நானும் விளக்கிப் பார்த்தேன். கடைசியில் அவர் ஒரு மேலாளரை அழைத்து வந்தார். அவரிடம் நானும் வெள்ளைக் காரரும் விளக்கிச் சொன்ன பின் அவர் அந்தப் பணியாளரிடம் 'இவர் வெளியே போகத் தேவையில்லை' என்று சொன்னார். பின்னர் நான் அவர்களை வணங்கி விடை பெற்றுக் கொண்டேன். மனத்தில் ஒரு அவமான உணர்ச்சி மிகுந்திருந்தது. எனக்கே அப்படி என்றால் அந்த வெள்ளையருக்கு எப்படி இருந்திருக்கும். ஒரு பக்கம் மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று செல்லத் தோன்றும்; மறு பக்கம் அன்னையை வணங்க மனம் விரும்பும். சங்கடமான நிலை தான்.

said...

6. எந்தக் கருத்தும் இல்லை. எனக்கு அது மிகப் பெரிய குறையாகத் தோன்றவில்லை.

7. இது கட்டாயம் நடக்க வேண்டும். ஆனால் அதனை இப்போது அரசின் அறநிலயத்துறை மிக நன்றாக வளர்த்துவிட்டது.

8. சில கோவில்களில் இப்படித் தான் இருக்கிறது. எல்லாக் கோவில்களிலும் வரவேண்டும் என்பது உங்கள் விருப்பம். சில கோவில்களில் பூசகரே திருநீறு பூசியும் விடுவார்.