Tuesday, January 23, 2007

1ம் பகுதி - கள்ளியிலும் பால்

நகத்தைக் கடித்தபடி காத்திருந்தாள் சந்தியா. வந்து பத்து நிமிடங்களாகிறது. அதனால்தான் கொஞ்சம் டென்ஷன். விரல்களைக் கைகளின் உட்பக்கமாக மடக்கி விரல்களைப் பார்த்தாள். அழகான விரல்கள். மாநிறத்து விரல்களுக்கு ஏற்ற வெளிரிய சாக்லேட் நிறத்தில் நகப்பூச்சு. பளபளப்பாக இருந்தது.

காத்திருத்தலும் சமயங்களில் அலுப்புதான். ஜி.என்.செட்டி ரோட்டிலிருந்த பாரிஸ்டா காஃபிக் கடையில்தான் சந்தியா காத்திருக்கிறாள். மெத்தன்ற ·சோபாவுக்குள் அமிழ்ந்தபடி ஒயிலாக அமர்ந்திருந்தாள். பச்சைச் சுடிதார் அவளை எடுப்பாகக் காட்டியது. முப்பது என்பதை ஐந்து குறைத்து இருபத்தைந்து என்று காட்டியது.

"அலோக்...சீக்கிரமா வா!" மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். வெள்ளை டி-ஷர்ட்டும் கருப்பு ஜீன்சும் அவனது அடையாளங்கள். ஐந்தடி பதினோரு அங்குலம். அறுபத்தைந்து கிலோ எடை. கட்டுடல். வழுவழு முகம். வெள்ளைத் தோல். வயது இருபத்து மூன்று. சொந்த ஊர் சண்டிகர். ஆறு மாதங்களாகச் சென்னையில் வேலை. இவ்வளவுதான் அலோக்கைப் பற்றி சந்தியாவிற்குத் தெரிந்த விவரங்கள். கூடுதலாக அவனுடைய தொலைபேசி எண்ணும் தெரியும்.

சாட்டிங்கில் கிடைத்தது அலோக்கின் தொடர்பு. இன்று சந்திப்பதாக ஏற்பாடு. மாலை நான்கு மணிக்குச் சந்தியாவை பாரிஸ்டாவிற்கு வரச் சொல்லியிருந்தான் அலோக். அவளும் டைடல் பார்க்கிலிருந்து புறப்பட்டு நான்கு மணிக்கெல்லாம் வந்து விட்டாள்.

இப்பொழுது சந்தியாவின் கடிகாரத்தில் நான்கு மணியாகி ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. அதுதான் டென்ஷனுக்கான காரணம். உள்ளே வருகின்ற ஒவ்வொரு இளைஞனையும் அடையாளம் பார்த்தாள். உயரமாகயிருந்தால் நிறமில்லை. நல்ல நிறமாக இருந்தால் வயது முப்பதுக்கு மேல். எல்லாம் பொருந்தி வந்தால் மீசையிருக்கிறது. மீசையில்லாமல் வந்தால்.....கூட ஆளிருக்கிறது.

காத்திருக்கும் பதட்டத்தோடு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பேசாமல் வீட்டிற்குப் போய் விடலாமா என்று தோன்றியது. "போன வாரம் பாத்த விஷால் பதினஞ்சு நிமிஷம் தாமதாமா வந்தான். அது போல இவனும் வந்தால்! பேசாம விஷாலையே கூப்பிட்டிருக்கலாம்...." சந்தியாவின் எண்ண ஓட்டம். அலோக்கிற்கு ·போன் செய்தாள். ரிங் போகிறது. ஆனால் பதிலில்லை.

சரியாக நான்கு மணி பத்து நிமிடங்களுக்கு அலோக் உள்ளே நுழைந்தான். அவனும் சந்தியாவைத் தேடினான். பச்சை சுடிதாரைப் பார்த்ததும், "நீங்கதான் சந்தியாவா?" என்று கேட்டான்.

முகத்தில் மலர்ச்சியோடு ஆமாம் என்று தலையசைத்தாள். அவளுக்கு முன்னே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். "மன்னிக்கனும். வெயில் அதிகம். ஆஃபீஸ்ல இருந்து நேரா வர்ரேன். வழியெல்லாம் ஒரே நெரிசல். அதான் நேரமாச்சு."

தலையைத் தலையை ஆட்டி அவன் சொன்னது அவளுக்கு அழகாகத் தோன்றியது. பஞ்சாப் பசங்களே ஒரு கணக்குதான் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். "அதனாலென்ன....நானும் வந்து பத்து நிமிஷந்தான் ஆகுது. சரி. என்ன சாப்பிடுறீங்க? கா·பி அல்லது டீ?"

"ஒன்னும் வேண்டாம் சந்தியா! உங்களப் பாக்கத்தான் வந்தேன். சரி. அடுத்து என்ன? உங்க வீடு எங்கயிருக்கு? பக்கத்திலயா? எனக்கு இன்னமும் சென்னை பிடிபடலை. நீங்க பேரச் சொன்னாலும் எனக்குத் தெரிஞ்சிருக்காது" சொல்லி விட்டுச் சிரித்தான்.

தலையைச் சாய்த்து புன்னகைத்தாள் சந்தியா. அவளது மேனரிசம் அது. பார்ப்பவரை வசீகரிக்கும் மேனரிசம். "என்னோட வீடு பக்கத்துல இல்லை. பெசன்ட் நகர்ல இருக்கு. ஆனா...." இழுத்தாள் சந்தியா.

"பெசன்ட் நகர். எலியட்ஸ் பீச் இருக்கே. அங்கதானே. அது ரொம்ப தூரம். என்னோட வீட்டுக்கு வாங்களேன். பக்கத்துலதான். சரவணா ஸ்ட்ரீட்!"

சம்மதித்தாள் சந்தியா. அவனது பைக்கை அவளது சாண்ட்ரோ பின்பற்றியது. பாண்டி பஜார் வழியாக சரவணா தெருவில் நுழைந்தார்கள். நான்கைந்து வீடுகள் தாண்டி ஒரு வீட்டிற்குள் இருவரும் நுழைந்தார்கள். ஓரளவு வசதியான வீடாகவேயிருந்தது. முதன்முதலாக வரும் சந்தியாவை வரவேற்றான் அலோக். உள்ளே நுழைந்ததும் மறக்காமல் கதவைச் சாத்தினான்.

"நீங்க நல்லாயிருக்கீங்க சந்தியா. எனக்கு உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு நல்ல காண்டேக்ட்ஸ் நிறையத் தர்ரேன்." புதிய சூழலில் அமைதியாக இருந்தாள் சந்தியா. பகல் பொழுதில் எல்லா சன்னல்களும் மூடப்பட்டு ஒருவித அரைகுறை இருட்டு இருந்தது.

தனிமை துணிவு தர சந்தியாவின் தோளில் கைவத்து உள்ளே அழைத்துச் சென்றான். அவளிடம் எதிர்ப்பு இல்லை. ஒத்துழைப்புதான் இருந்தது. முழுமையான ஒத்துழைப்பு. ஒரு மணி நேரமும் ஒரு நொடி போலக் கழிந்தது. இருவருமே வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான். "சந்தியா! அடிக்கடி இங்க வரனும்." அவனைக் கட்டிக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள். "கண்டிப்பா அலோக்." அவளுக்கு யாரையோ பழிவாங்கிய திருப்தி. அந்த வெறி இன்பமாக மாறி தலை முதல் கால்வரை ஓடியது.

அவள் மனக்கண்ணில் ஒரு ஆணின் முகம் தோன்றியது. அவனைப் பார்த்து அவள் மனம் கெக்கலித்தது. அலோக்கை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். பழிக்குப் பழி. போட்டியில் தன்னைத் தள்ளி விட்டு முன்னே ஓடியவனை தான் முந்திய மகிழ்ச்சி அவளுக்கு. அந்த முகம் வெதும்பி நொந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனக்கண்ணிலிருந்து மறைந்தது. அந்த முகத்திற்குரியவனை வென்ற வெறி புன்னகையாக விரிந்தது.

சற்று நேரம் கழித்து உடைகளைச் சரி செய்து கொண்டு கிளம்பினாள். அலோக்கிடம் விடைபெற்றுக் கொண்டாள். அப்படியே அவனுடைய நண்பர்களின் செல்போன் நம்பர்கள் இரண்டும் பெற்றுக் கொண்டாள். டாடா சொல்லி விட்டு அவளது சாண்ட்ரோவை பெசன்ட் நகர் பக்கம் ஓட்டினாள். சென்னை நெரிசலில் அவளது சாண்ட்ரோ சரக்கென்று லாவகமாகச் சென்றது.

அஷ்டலட்சுமி கோயில் பக்கத்திலிருந்தது ஸ்ரீநிதி அபார்ட்மெண்ட்ஸ். வசதியானவர்களுக்கான அபார்ட்மெண்ட். உள்ளே நுழைந்து லிஃப்டில் ஏறி நான்காம் மாடிக்குச் சென்றாள். வீட்டு எண் 402. சந்தியாவின் சொந்த வீடு.

அழைப்பு மணி ஓசை கேட்டு ஐம்பத்தைந்து வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அது சந்தியாவின் அம்மா சிவகாமி. "என்னம்மா ஆஃபிசிலயிருந்து இன்னைக்குச் சீக்கிரமா வந்திட்ட! வேலை சீக்கிரமா முடிஞ்சிருச்சா?" அலுவலகத்திலிருந்து வழக்கமாக ஏழுமணிக்கு வரும் மகள் இன்றைக்கு ஆறுமணிக்கெல்லாம் வந்திருக்கிறாளே.

மகள் களைப்பாக இருப்பதைப் பார்த்தாள். "ரொம்ப களைப்பா இருக்க. இரு மொதல்ல காஃபி போட்டுட்டு வர்ரென். குடிப்ப. இப்பத்தான் வீட்டைப் பெருக்கித் தொடச்சிட்டு கனகம் போனா. உள்ள சுந்தர் எழுந்திருச்சிட்டான். கைகால் கழுவிட்டு அவனப் பாத்துக்கோ."

படுக்கையறைக்குள் நுழைந்தாள் சந்தியா. ஹேண்ட் பேக்கை கழற்றி சுவற்றிலிருந்த பிளாஸ்டிக் கொக்கியில் மாட்டினாள். ஏஸியின் மெல்லிய குளிர் இதமாக இருந்தது. பாத்ரூமிற்குச் சென்று முகம் கைகால் கழுவிட்டு வந்தாள். கட்டிலில் சுந்தர் கையைக் காலை ஆட்டிக் கொண்டிருந்தான். சந்தியாவைப் பார்த்ததும் அவனுக்கு குஷி கூடியது. கையைக் காலை வேகமாக அசைத்தான். ஏழு மாதக் குழந்தை சுந்தர்.

சுந்தரை இரண்டு கைகளிலும் அள்ளி அணைத்தாள். அந்த வெதுவெதுப்பில் அவள் கண்களில் கண்ணீர் வந்தது. ஏதோ ஒரு சோகம் நெஞ்சைக் கவ்வியது. சோகத்தையும் அழுகையையும் அப்படியே விழுங்கினாள். மனதில் உறுதி எழுந்தது. மனக்கண்ணில் மீண்டும் அந்த உருவம் தெரிந்தது. தலையைச் சாய்த்து அந்தக் கண்ணுக்குத் தெரியாதவனைப் பார்த்துச் சிரித்தாள். மனதில் ஆங்காரம் கூடியது. "பாருடா! பார். இன்னைக்கு நானொரு அம்மா. ஆனா நீ?" அவள் கேட்டதும் அந்தக் கற்பனை உருவம் தலையைக் குனிந்தது.

தொடரும்...

45 comments:

said...

கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது ஜி.ரா...

அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்...

said...

தொடர் கதையா?

நல்ல ஆரம்பம்.

said...

// வெட்டிப்பயல் said...
கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது ஜி.ரா...

அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்... //

நன்றி வெட்டி.

கள்ளியிலும் பால் ஒவ்வொரு செவ்வாயும் சுரக்கும்.

அநுபூதி அடுத்த வாரத்தோட முடியுதுல்ல. ஒரு தொடர் வேண்டாமா? அதுக்குத்தான். :-)

said...

// நாமக்கல் சிபி said...
தொடர் கதையா? //

ஆமாங்க. ரெண்டு மூனு கரு இருந்துச்சு. இது என்னவோ...எழுது எழுதுன்னு சொல்லுச்சு. ஏன்னா முதல் பாகம் எழுதி ரொம்ப நாளாச்சு. அதுனால விட்ட எடத்துல தொடங்கியாச்சு.

// நல்ல ஆரம்பம். //

ஹி ஹி ஏன் நல்ல ஆரம்பம்னு சொல்றீங்கன்னு புரியுது. :-)

said...

//ஹி ஹி ஏன் நல்ல ஆரம்பம்னு சொல்றீங்கன்னு புரியுது//

சாதாரணமசச் சொன்னேன். இதுலயும் உள் அர்த்தமா?

கடவுளே!

said...

வாவ்.. கலக்குறீங்க ராகவன்.
வாழ்த்துக்கள்.

said...

// நாமக்கல் சிபி said...
//ஹி ஹி ஏன் நல்ல ஆரம்பம்னு சொல்றீங்கன்னு புரியுது//

சாதாரணமசச் சொன்னேன். இதுலயும் உள் அர்த்தமா?

கடவுளே! //

கடவுள ஏன் கூப்பிடுறீங்க? உள்குத்துன்னு சொல்லித் தப்பிக்க பாக்குறீங்க. சொல்லுன்னா வெளிய இருக்கும். பொருள் உள்ளதான இருக்கும். அதத்தான் உள்குத்துன்னு சொல்றீங்களா? நேத்து யாரோ ஒங்களுக்குப் போன் பண்ணாங்களாமே? :-)

said...

// சிறில் அலெக்ஸ் said...
வாவ்.. கலக்குறீங்க ராகவன்.
வாழ்த்துக்கள். //

நன்றி சிறில். வாழ்த்துகள் சரி. இப்பல்லாம் ஒன்னும் சரியா எழுதுறதில்லையே. ஒங்க பேரையே பாக்க முடியலையே! என்னாச்சு?

said...

kadhai karu diffrent a iruku..ana sujatha kadhaigalil varrr mari indha ponnuku edho mana viyadhi appadi kippadi sollira mateengale..paarklam!!

said...

// கார்த்திக் பிரபு said...
kadhai karu diffrent a iruku..ana sujatha kadhaigalil varrr mari indha ponnuku edho mana viyadhi appadi kippadi sollira mateengale..paarklam!! //

வாங்க காபி வாங்க. கரு வித்தியாசமா இருக்கா? இருக்கலாம். போகப் போகத்தான் தெரியும். நீங்க திட்டப் போறீங்களா...பாராட்டப் போறீங்களான்னு. என்னங்க இது? கதாநாயகிய மனநோயாளியாக்க முடியுங்களா? அவங்கதானே கதாநாயகி. இந்தக் கதைக்கு இப்ப இருக்குற நடிகைல எந்த நடிகையைப் போடலாம்னு நெனைக்கிறீங்க?

said...

இப்படிக்கு,
அடுத்த செவ்வாய் வரை காத்திருக்கும் ....

said...

என்ன ராகவன் நீங்க முன்னமே ஒரு தரம் சொன்ன தொடர் நாவலா இது?

எடுத்தவுடனேயே அமர்க்களமான எடத்துல தொடரும் போட்டுருக்கீங்க..

அடுத்த பகுதி எப்போ?

said...

ஆஹா ஜி.ரா மீண்டும் ஒரு கதையோடு வந்திருக்கிறாரா? சந்தோஷம்.. ஆரம்பமே ஜெர்க் கொடுக்குது சாரே.. அடுத்து எப்போ?

said...

ஐயோ அடுத்த செவ்வாயா? எப்போன்னு கேட்டு முடிக்கறேன் வெட்டிப்பயலுக்கு நீங்க போட்ட பதில படிக்கறேன்..

இது ரொம்ப நீஈஈஈண்ட இடைவெளி ராகவன்..

said...

// இலவசக்கொத்தனார் said...
இப்படிக்கு,
அடுத்த செவ்வாய் வரை காத்திருக்கும் .... //

நன்றி கொத்சு. அடுத்த செவ்வாயும் உங்களுக்குத் திருப்பதியாக....ஷ்ஷ்ஷ்ஷ் திருப்தியாக அமையும்னு நம்புறேன். அது சரி. இந்தியாவுல நடுப்பகல்ல பின்னூட்டம் போடுறீங்களே! நீங்க அமெரிக்கான்னு சொல்றாங்க. அங்க இப்ப நடுநிசியாச்சே! என்ன செய்றீங்க? உண்மையச் சொல்லுங்க. சாட்டிங் எல்லாம் அமெரிக்காவுல ஜகஜம்னு சொல்றாங்க. ம்ம்ம்...என்னவோ நடக்குது.

said...

// tbr.joseph said...
என்ன ராகவன் நீங்க முன்னமே ஒரு தரம் சொன்ன தொடர் நாவலா இது? //

ஆமா சார். முன்னமே சொன்னதுதான். இன்னமும் ரெண்டு மூனு கருக்கள் இருக்கு. ஆனா இது ரொம்ப நாளா ஊறுனது. அதான் மொதல்ல விடுறேன். ஊறி ஊறி ஊறுகாயாச்சோ...காஞ்சு போச்சோ...தெரியலையே.

// எடுத்தவுடனேயே அமர்க்களமான எடத்துல தொடரும் போட்டுருக்கீங்க.. //

என்ன பண்றது சார். டிவி சீரியல் பாத்து எல்லாரும் கெட்டுப் போயிட்டாங்க. :-)

//அடுத்த பகுதி எப்போ? //

அடுத்த செவ்வாதான்.

said...

// தேவ் | Dev said...
ஆஹா ஜி.ரா மீண்டும் ஒரு கதையோடு வந்திருக்கிறாரா? சந்தோஷம்.. ஆரம்பமே ஜெர்க் கொடுக்குது சாரே.. அடுத்து எப்போ? //

ஆமாம் தேவ். ஆனா தொடர்கதை. ஆரம்பமே ஜெர்க்கா...என்ன பண்றது. சந்தியா அப்படித்தான். அலோக்கும் அப்படித்தான். அதான் இப்படி நடக்கது. இதுனால ஒங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே? :-)

said...

ராகவா!
அடுத்தது நடந்தது என்ன? என அறியுமாவலைத் தூண்டியது.
யோகன் பாரிஸ்

said...

வாங்க காபி வாங்க. கரு வித்தியாசமா இருக்கா? இருக்கலாம். போகப் போகத்தான் தெரியும். நீங்க திட்டப் போறீங்களா...பாராட்டப் போறீங்களான்னு. என்னங்க இது? கதாநாயகிய மனநோயாளியாக்க முடியுங்களா? அவங்கதானே கதாநாயகி. இந்தக் கதைக்கு இப்ப இருக்குற நடிகைல எந்த நடிகையைப் போடலாம்னு நெனைக்கிறீங்க?

appdiya vishaym appo ok than..

matchin nadikai neenga roginiyai podunga
(raguvaran wife)

said...

வழக்கம் போலவே உங்க கதை நடை நல்லாயிருக்குங்க ஆனா எனக்கு இந்த கதையோட கருவில் தான் உடன்பாடு இல்லை. இப்ப வர்ர மெகா சீரியல்கள் எல்லாத்துலயும் இதேதான் காட்டறாங்க. பழிக்கு பழி அப்டி இப்டீனு திரும்ப திரும்ப கலாச்சார சீரழிவு பத்திதான் காட்டறாங்க. அப்டியிருக்கும்‍போது நீங்களும் இதே கதைகளத்த,கருவ தேர்ந்தெடுத்திருக்கனுமா?.
இது அவசியமா? கொஞ்சம் யோசிச்சு இருக்கலாமோனு தோனுது.

said...

// tbr.joseph said...
ஐயோ அடுத்த செவ்வாயா? எப்போன்னு கேட்டு முடிக்கறேன் வெட்டிப்பயலுக்கு நீங்க போட்ட பதில படிக்கறேன்..

இது ரொம்ப நீஈஈஈண்ட இடைவெளி ராகவன்.. //

நீங்க சொல்லும் போது எனக்கும் அப்படித்தான் தோணுசு சார். அடுத்த வாரத்துல இருந்து செவ்வாயும் வியாழனும்னு ரெண்டு நாள் வெச்சிரலாமா?

said...

// Johan-Paris said...
ராகவா!
அடுத்தது நடந்தது என்ன? என அறியுமாவலைத் தூண்டியது.
யோகன் பாரிஸ் //

வாங்க யோகன் ஐயா. உங்கள் கருத்துகளையும் அறிய ஆவலாக இருக்கிறேன். ஆனால் இதுதான் கதையின் தொடக்கம். ஆகையால் கதை தொடர்ந்து நடக்கும் பொழுது உங்கள் கருத்துகளையும் கூறவும்.

said...

// கார்த்திக் பிரபு said...
matchin nadikai neenga roginiyai podunga
(raguvaran wife) //

நடிகை ரோகிணி சந்தியா பாத்திரத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கன்னு சொல்றீங்களா? கொஞ்சம் வயசான சந்தியாவாத் தெரியுமே காபி. சரிதாங்குறீங்களா? சந்தியாவோட அம்மா சிவகாமி பாத்திரத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? மனோரமான்னு சொல்லாதீங்க...டென்ஷனாயிருவேன். :-)

said...

ஆஹா, கதை அருமை. நல்ல ஆரம்பம். ஜமாய்ங்க ராகவன்

said...

அட்டகாசமான ஆரம்பம்...

அடுத்த செவ்வாய் வரைக்கும் வெயிட் பண்ணனுமா? எனக்கு மட்டும் ரகசியமா மீதிய மெயில் பண்ணிருங்களேன். :))

said...

// அனுசுயா said...
வழக்கம் போலவே உங்க கதை நடை நல்லாயிருக்குங்க ஆனா எனக்கு இந்த கதையோட கருவில் தான் உடன்பாடு இல்லை. இப்ப வர்ர மெகா சீரியல்கள் எல்லாத்துலயும் இதேதான் காட்டறாங்க. பழிக்கு பழி அப்டி இப்டீனு திரும்ப திரும்ப கலாச்சார சீரழிவு பத்திதான் காட்டறாங்க. அப்டியிருக்கும்‍போது நீங்களும் இதே கதைகளத்த,கருவ தேர்ந்தெடுத்திருக்கனுமா?.
இது அவசியமா? கொஞ்சம் யோசிச்சு இருக்கலாமோனு தோனுது. //

கதையைப் படித்துச் சொல்லப்பட்ட விதத்தினையும் ரசித்தது உங்களுடைய கருத்தினைத் தயங்காமல் சொன்னமைக்கு நன்றி அனுசுயா.

இந்தக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமா என்பது நல்ல கேள்வி. உத்தம பாத்திரங்களை மட்டும் கதை எழுதினால் அது புராணம் போல் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். அதுவுமில்லாமல் கதாநாயகி செய்வதுதான் சரி என்று சொல்ல வரவில்லை. அவள் இப்படிச் செய்கிறாள். அதனால் அவள் என்னென்ன படுகிறாள் என்பது கூடக் கதைக்கருவாக இருக்கலாம் அல்லவா! ஆனாலும் திரும்பவும் சொல்கிறேன். இந்தக் கதையில் உத்தமர்கள் வரலாம். ஆனால் உத்தமர்கள் மட்டுமே வர மாட்டார்கள்.

எனக்குக் கூட ஒன்னு தோணுது. பேசாம சினிமாவுல சென்சார் செர்ட்டிபிகேட் போடுற மாதிரி தலைப்புல A ன்னு எழுதீரலாமா? ஏன்னா...கதை கொஞ்சம் கத்தியில நடக்குற மாதிரி கதை. :-)

said...

// ILA(a)இளா said...
ஆஹா, கதை அருமை. நல்ல ஆரம்பம். ஜமாய்ங்க ராகவன் //

வாங்க வெவசாயி வாங்க. கதை பிடிச்சிருந்ததா? ரொம்ப நன்றி. அடுத்தடுத்த பகுதிகளப் பாருங்க...

said...

இராகவன்,
இது சும்மா உள்ளேன் ஐயா பின்னூட்டம். வாசித்து விட்டு மீண்டும் வருவேன்.

said...

ஜிரா, ரொம்ப நாளைக்கு அப்புறம் படிக்கலாம்ன்னு ஒதுங்குனா உங்க தொடர்... திரும்ப வைச்சிட்டீங்க. கண்டிப்பா அடுத்த பாகத்துக்கு ஆஜர் ஆகி விடுவேன்.

said...

// வெற்றி said...
இராகவன்,
இது சும்மா உள்ளேன் ஐயா பின்னூட்டம். வாசித்து விட்டு மீண்டும் வருவேன். //

வாங்க வெற்றி வாங்க. சரி. வாசிட்சுட்டு உங்க கருத்துகள அள்ளி விடுங்க.

said...

// Udhayakumar said...
ஜிரா, ரொம்ப நாளைக்கு அப்புறம் படிக்கலாம்ன்னு ஒதுங்குனா உங்க தொடர்... திரும்ப வைச்சிட்டீங்க. கண்டிப்பா அடுத்த பாகத்துக்கு ஆஜர் ஆகி விடுவேன். //

வாங்க வாங்க. ரொம்ப நாளா ஆளக் காணோமேன்னு பாத்தேன். ரொம்ப வேலையோ? ஒடம்பப் பாத்துக்கோங்க. ரொம்ப நேரமா நீங்க கால அகட்டி வெச்சு நின்னுக்கிட்டிருக்கீங்களே. கொஞ்ச நேரம் உக்காருங்க.

அடுத்த பகுதி செவ்வாக் கெழம வருது. வந்து படிச்சு உங்க கருத்துகளைச் சொல்லுங்க.

said...

நடிகை ரோகிணி சந்தியா பாத்திரத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கன்னு சொல்றீங்களா? கொஞ்சம் வயசான சந்தியாவாத் தெரியுமே காபி. சரிதாங்குறீங்களா? சந்தியாவோட அம்மா சிவகாமி பாத்திரத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? மனோரமான்னு சொல்லாதீங்க...டென்ஷனாயிருவேன். :-)

//

rohini poruthama illaina ilam nadikai yaravadhu sollava?

amma character ku bombey nyanam i podunga..yarunnu theiryudhaa?

kb srials lam varuvaangalaey

said...

வணக்கம் ராகவன் சார்..

கதை ரொம்ப கலக்கல போகுது...
நீங்க கதை கொண்டு போற விதம் விறுவிறுப்பை தூண்டுது...

said...

கதை கலக்கல்ஸ் ஜிரா.
வாழ்த்துகள்..
அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்..

said...

இப்படி விறுவிறுப்போட எழுதிட்டு ஒருவாரம் காத்திருக்க சொன்னா எப்படி?

மீதிய எனக்கு மட்டும் மெயில்ல அனுப்பிடுங்க ;-)

said...

// கார்த்திக் பிரபு said...
rohini poruthama illaina ilam nadikai yaravadhu sollava?

amma character ku bombey nyanam i podunga..yarunnu theiryudhaa?

kb srials lam varuvaangalaey //

ஆமா...இளம் நடிகையாச் சொல்லுங்க. ஜோதிகா பொருத்தமா இருப்பாங்க. ஆனா சூர்யா விட மாட்டாரு. ரோகிணியோ விஷாலுக்கு அம்மாவா நடிக்கிறாங்க.

பாம்பே ஞானம் வேண்டாம். குண்டா இருக்காங்க. சரண்யா பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுது.

said...

// கோபிநாத் said...
வணக்கம் ராகவன் சார்..

கதை ரொம்ப கலக்கல போகுது...
நீங்க கதை கொண்டு போற விதம் விறுவிறுப்பை தூண்டுது... //

வாங்க கோபிநாத். ஒங்க பதிவுல சொன்ன வடிவேலு சரளாக்கா கதைய விடவா இது சிறப்பு!!!!!!!!!!!

said...

// gurusri said...
கதை கலக்கல்ஸ் ஜிரா.
வாழ்த்துகள்..
அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்.. //

நன்றி குருஸ்ரீ. கூடிய விரைவில்.... :-)


// அருட்பெருங்கோ said...
இப்படி விறுவிறுப்போட எழுதிட்டு ஒருவாரம் காத்திருக்க சொன்னா எப்படி?

மீதிய எனக்கு மட்டும் மெயில்ல அனுப்பிடுங்க ;-) //

அதெதுக்கு அருட்பெருங்கோ. பக்கத்துல உக்காந்து முழுக்கதையும் சொல்லீரட்டுமா?

said...

saranya ok ..heroine yaru ppa?

said...

ஏய்யா ரொம்ப நாளா யோசிச்சு வச்சுருந்தீங்களோ இந்தக் கதைய!!

இப்போதைக்குக் கருவைப் பத்திக் கருத்துச் சொல்ற அளவுக்குக் கதையில எதுவும் நடந்துறலை. உங்க நடையப் பத்திப் புகழ்ந்து புகழ்ந்து எனக்கே போரடிக்குது! :)

அடுத்த வாரத்துப் பகுதியையும் படிக்கிறேன்.

said...

இதுதான் இந்தக் காலமா/?
புதிய பெண்.
ஒரு பத்து வருடம் முன்னாலேயே இந்த மாதிரி நிகழ்வுகள் ஆரம்பித்துவிட்டன..
அதுவும் பெசண்ட் நகர்.
கேக்கவே வேண்டாம்.
ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.
அடுத்த பாகமும் படித்துவிட்டேன்.
அங்கே பார்க்கலாம்.
வாழ்த்துகள். இஞ்சி போட்ட டீ
என்று விமரிசனம் எழுதலாமா?:-)

said...

அடுத்த பாகங்களைப் படிக்காமலேயே இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்.

ஒரு ரேஞ்சாத்தான் ஆரமிச்சிருக்கீங்க.

தொடரும்-ஆ இல்ல தொடர்கின்றதா?

said...

அடுத்த பாகங்களைப் படிக்காமலேயே இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்.

ஒரு ரேஞ்சாத்தான் ஆரமிச்சிருக்கீங்க.

தொடரும்-ஆ இல்ல தொடர்கின்றதா? :P

said...

// வல்லிசிம்ஹன் said...
இதுதான் இந்தக் காலமா/?
புதிய பெண்.
ஒரு பத்து வருடம் முன்னாலேயே இந்த மாதிரி நிகழ்வுகள் ஆரம்பித்துவிட்டன.. //

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்தக் கதையை எழுதுகையில் சென்ற தலைமுறை விஷயம் எழுதுவது போலத்தான் உள்ளது.

// அதுவும் பெசண்ட் நகர்.
கேக்கவே வேண்டாம்.
ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.
அடுத்த பாகமும் படித்துவிட்டேன்.
அங்கே பார்க்கலாம்.
வாழ்த்துகள். இஞ்சி போட்ட டீ
என்று விமரிசனம் எழுதலாமா?:-) //

உங்கள் கருத்து என் பாக்கியம். :-)

said...

// இராமநாதன் said...
அடுத்த பாகங்களைப் படிக்காமலேயே இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்.

ஒரு ரேஞ்சாத்தான் ஆரமிச்சிருக்கீங்க. //

:-)

// தொடரும்-ஆ இல்ல தொடர்கின்றதா? :P //

கண்டிப்பாகத் தொடர்கிறது. அடுத்து ரெண்டு பாகம் போட்டாச்சே!