இனிமேல் இந்த விமர்சனத்தைப் படிக்கின்றவர்கள் ஹறியருளால் திரைப்படத்தின் கதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்படியால்...விரும்பதாவர்கள் மேற்கொண்டு படிக்காமலும்...விரும்புகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இல்லாதிருக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
உலகநாயகன் என்று தமிழ் கூறும் திரையுலகத்தாலும் ரசிகர்களாலும் போற்றப்படும் திரு.தாமரைநகையானாகிய கமல்ஹானசன் நடித்த தசாவதாரம் திரைப்படமானது கி.பி 12ம் நூற்றாண்டிலே... அதாவது கொடுங்கோற் சைவர்கள் பேயாட்சி செய்த ஊழிக்காலத்தில்...உத்தமர்களும் அமைதிவிரும்பிகளும் நற்சிந்தனையாளர்களுமாகிய வைணவர்கள் நாள்தோறும் அல்லலுற்று அழுது தொழுது பயனில்லாமல் போயிருந்ததுமான பாவப்பட்ட பொழுதுகளில் தொடங்குகிறது.நம்பிராஜன் பாத்திரத்தில் வீரம் கொப்புளிக்க நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல். ஆளுடைப்பிள்ளையாரைப் போலச் சிறுவனுக்கு வேடமிட்டுக் கல்லெறிய வைத்த கமலின் சிந்தனை சமயவொற்றுமை என்பதேயன்றி வேறொன்றில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணரும் வகையில் இருப்பதை மறுக்கவே முடியாது. அஞ்சும் எட்டும் ஒன்றுதான் என்ற நற்பண்பு எல்லாரும் பழக வேண்டியதேயானாலும் உயிரே போனாலும் அஞ்செழுத்தைச் சொல்ல மாட்டேன் என்று ஆவேசம் கொண்டு எட்டெழுத்தை முழங்குவது தான் அஞ்சாம்படை இல்லை என்று காட்டத்தான் என்பதையும் படம் பார்க்கும் அனைவரும் குற்றமற உணர்வர்.
முப்புரி நூலைக் காட்டி...பிரதோஷாங்கள் சூழ்ந்த மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் சூழ நேறிடும் என்று மிரட்டும் பொழுது ஒரே கல்லில் இரண்டு மாந்தோப்பையே அடித்து விடும் அறிவாற்றலை வியந்து வியந்து பாராட்ட வேண்டியிருக்கும் என்பதையும் யாரும் மறந்து விட முடியாது. எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.
இப்படிப் பட்ட புளகாங்கிதங்களோடும் தொடங்கிய படம் பலப்பல நாடுகளுக்கும் செல்கிறது. நாம் திரையில் பார்த்துப் பலகாலங்கள் ஆகியிருக்கும் கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜெயப்பிரதா மற்றும் ரேகா ஆகியோரை இந்தப் படத்தில் மீண்டும் காண முடிகிறது. இந்தப் படத்தின் சிறப்பே அதனுடைய தொடர்ச் சங்கிலிதான். தொடங்கிய இடத்திலிருந்து ஓங்கி உத்தமன் உலகளந்தது போல தொடர்பு விட்டுவிடாமல் செல்வதுதான். ஆனால் அந்த வளர்ச்சிக்கு முடிவே கிடையாது என்று இறுதியில் நமக்குத் தெரியும் பொழுது இறைவனின் அருளுக்கும் முடிவே கிடையாது என்ற உண்மை புலப்படும்.
எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் சென்ற காகுந்தன் இந்நாளில் சுனாமியாக வந்து உலகைக் காத்த உன்னதச் சித்திரம் தசாவதாரம், உண்மையிலேயே சுனாமி வந்த பொழுது மாமல்லபுரத்தில் முருகன் கோயில் வெளிவந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது... அந்தக் கோயிலைப் பெயர்த்தெடுத்து வேறொரு சமயத்தைச் சார்ந்த யாரோ கடலில் போட்டிருக்கக் கூடும் என்ற எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்க விஞ்ஞானியின் கிருமி பாமை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து மெரினாபீச் வரையில் பெருமாள் சிலையைத் தூக்கிக்கொண்டு அசினோடு ஓடிக்கொண்டேயிருப்பதுதான் கதை. கடைசியில் கடவுளே காப்பாற்றுவதுதான் கதை. இந்தக் கதையில் அலங்காரமாக பத்து கமல்கள் இருப்பதுதான் தசாவதாரம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கமல் மெனக்கெட்டிருக்கிறார் என்பதே உண்மை. அத்தனை அவதாரங்கள் எடுத்த பொழுதிலும் ராமனும் கண்ணனும் வைணவர்கள் கொண்டாடுவது போல பலராம் நாயுடுவும் பூவராகனுமே பார்க்கின்றவர்கள் மனதில் திருப்பதி வெங்கடேசர் தாடைக் கற்பூரம் போல ஒட்டிக் கொள்கிறார்கள். பலராம் நாயுடு காமெடி கலக்கல் என்றால் பூவராகன் நேர்மைக் கலக்கல்.
பாட்டி கமலும் நன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குரலும் பேச்சும். வில்லனாக வரும் ஃப்ளெச்சர் கமலிம் நடிப்பும் அருமை. அந்த அப்பாவி முஸ்லீம் இளைஞன் கமலும் மனதில் நிற்கிறார். இருந்தாலும் நம்மை ராமபாணம் பட்ட அசுரர்கள் போல எரிச்சல் பட வைப்பது விஞ்ஞானி கமல்தான். சிலபல இடங்களில் ஹைபர் டென்ஷன் அசின் அந்த எரிச்சல்களைக் குறைக்கிறார் என்பதும் உண்மை.
இசையா? யாரோ ஹிமேஷ் ரேஷமைய்யாவாம். அவரைப் படத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான நம்பிராஜனின் இடத்தில் வைத்துப் பார்க்கப் பலர் விரும்பியிருப்பார்கள். அத்தனை அலுப்பூட்டும் இசை. முகுந்தா பாடல் மட்டும் தேவலாம். பேசாமல் தேவிஸ்ரீ பிரசாத்தையே பின்னணியோடு பாடல்களுக்கும் இசையமைக்கச் சொல்லியிருக்கலாம். அட... தேவையாவது கூப்பிட்டிருக்கலாம். ஹிந்தி ரசிகர்களை மனதில் வைத்து ரேஷமைய்யாவை அழைத்து வந்திருக்கிறார்கள். அதே போலப் பாடல் காட்சிகளும் அலுப்போ அலுப்பு. எழுந்து வெளியே போய்விடலாமா என்ற அளவிற்கு. அது தெரிந்துதானோ என்னவோ பாடல்களுக்கு நடுவில் சில கதைக்காட்சிகளையும் காட்டி நம்மை இருக்கையை விட்டு எழவிடாமல் செய்கிறார்கள்.
ஒரு சாதாரண ரசிகனாகப் பார்ப்பதற்கு படம் நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு வைணவராக இருந்தால் படம் முழுக்கவே கண்டபடிக்குத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கும். அமெரிக்க வில்லன் கமல், ஜப்பான் கமல் மற்றும் ஜார்ஜ் புஷ் தவிர்த்து அனைத்து கமலுக்கும் விஷ்ணுவின் பெயர்கள்தான். அதுவும் இல்லாமல் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். கமல் ஏறும் லாரிகள் படகுகள்...அதிலெல்லாம் ராமானுஜம், ஸ்ரீராமஜெயம், கோவிந்தசாமி...இப்பிடி விஷ்ணுவின் பெயர்கள் இருக்கும். அதாவது கமல் விஷ்ணு சிலையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார் அல்லவா. ஆகையால் அந்தப் பெயர்கள் வருவது பொருத்தமாகவும் பார்க்கின்றவர்களை மெய்சிலிரிக்க வைக்கவும் செய்யும். அதிலும் ரயிலில் இருந்து விழும் விஷ்ணு சிலை ஆற்று மணலில் நட்டுக்குத்தலாக நிற்கும் பொழுது பின்னணி இசையோடு நமக்கு மெய்சிலிர்க்கிறது. இராம நாராயணா! என்று உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.
கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருந்த கமல்..கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஹி ஹி. இரண்டுக்கும் பொருல் வெவ்வேறு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் சில கமல் ரசிக நண்பர்கள் அந்த வசனத்தைச் சொல்லி பேரானந்தத்தோடு மகிழ்ந்தது புன்னகைக்க வைத்தது. அதே போல கருணாநிதி ஜெயலலிதா காட்சிகளும் காமெடியே. படத்தில் மல்லிகா ஷெராவத்தும் இருக்கிறார்.
படம் முடியும் பொழுது 12ம் நூற்றாண்டில் உள்ளே போடப்பட்ட கோவிந்தராஜன் சிலை வெளியே வந்துவிடுவது போலக்காட்டுகிறார்கள். அதைப் பார்க்கின்ற வைணவர்களுக்கு....டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது போல....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல..... கோவிந்தராஜனும் வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் எழுவது நிச்சயம். அந்த ஏக்கத்தில் தவறேதும் இல்லை.
மொத்தத்தில் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். பார்க்கவும் வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான். ஆனால் கமலுக்கு ஒரு அறிவுரை. பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.
தசாவதாரம் வெற்றிப்படமாக அமைய எனது வாழ்த்துகள்.
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்







