Monday, February 12, 2007

4ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

குளித்து முடித்துக் கிளம்பத் தயாராக இருந்தார் சுந்தரராஜன். கண்ணன் ஏற்கனவே அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தான். காலை டிபனாகத் தோசையைச் சுட்டுக் கொண்டிருந்தாள் வாணி.

"அம்மா, வாணி. நான் கெளம்புறேம்மா. நேரமாச்சு. ஒங்க அத்த காத்துக்கிட்டிருப்பா."

"அப்பா. ஒரு நிமிஷம் இருங்க. தோச சுட்டாச்சு. சாப்ட்டுப் போங்கப்பா." வாணி சுந்தரராஜனை அப்பா என்றுதான் அழைப்பது வழக்கம். சிவகாமியும் அவளுக்கு அம்மாதான்.

சரியென்று மேசையில் உட்கார்ந்தார் சுந்தரராஜன். உள்ளேயிருந்து வந்தார் ராஜம்மாள். "என்ன சம்மந்தி. கெளம்பியாச்சு போல இருக்கு. கார நீங்களே ஓட்டீருவீங்க. ஒங்களுக்கு டிரைவரும் வேண்டாம்." உள்ளே வாணியைப் பார்த்து, "வாணி, மாமாவுக்குச் சாப்புட டிபன் குடு. வீட்டுக்குக் கெளம்பக் காத்திருக்காரு பாரு." வாணிக்கு அவள் தாயின் பேச்சு எரிச்சலைத் தந்தது. சற்று இங்கிதம் இல்லாமல் பேசுகிறவர் ராஜம்மாள். கேட்டால் வெளிப்படையாக எதையும் சொல்வதாகச் சொல்வார்.

தட்டில் இரண்டு தோசைகளை எடுத்து வந்து கொடுத்தாள் வாணி. "என்னம்மா இன்னைக்கும் தோசையா? நாலஞ்சு நாளா தோசையவே சுடுற. அரவிந்த் இட்டிலியப் பெசஞ்சுட்டான்னு....இட்டிலியே சுடாம இருக்க முடியுமா?" சுந்தரராஜனை நோக்கி, "நீங்க சொல்லுங்க சம்மந்தி, வாய்க்கு மெத்துன்னு இட்லி இல்லாம என்னதான் டிபனோ!" ராஜம்மாளின் இட்டிலிப் பிரியத்தை தெரிந்திருந்த சுந்தரராஜன் புன்னகைத்தார்.

"சரி. சம்மந்தி. நீங்க சாப்புடுங்க. குறுக்கால நாம் பேசிக்கிட்டிருக்கேன். வீட்டுல எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க. சந்தியாவும் கொழந்தையும் நல்லாயிருக்காங்கள்ள. கொழந்தைக்கு என்ன பேரு?"

"சுந்தர்னு பேரு வெச்சிருக்கோம். ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. நீங்களும் வாணி வரும்போது பெசண்ட் நகருக்கு வாங்களேன்." ஒரு மரியாதைக்குக் கூப்பிட்டார்.

"நானா? வேண்டாஞ் சம்பந்தி. எங்க மாப்பிள்ளையே போறதில்லை. அப்புறம் நானெப்படிப் போறது. மாப்பிளைதான எங்களுக்குப் பெருசு. வாணி என்னவோ வரப்போக இருக்கா. அவ மாப்பிள்ளைக்குச் சமாதானம் சொல்லிக்கிருவா. நான் எங்க வீட்டுக்காரங்களுக்குச் சொல்லனுமே."

அழைத்ததற்கு நொந்து கொண்டார் சுந்தரராஜன். வாணி உதவிக்கு வந்தாள். "அம்மா. நீ சும்மாயிரு." சுந்தர்ராஜனிடம் ஒரு பையைக் குடுத்தாள். "அப்பா, இதுல நெல்லிக்கா இருக்கு. நேத்து நடேசன் பார்க் கிட்ட வித்துக்கிட்டிருந்தான். நல்லாயிருந்துச்சுன்னு வாங்கினேன். அம்மா கிட்ட குடுத்து ஊறுகா போடச் சொல்லுங்க. நான் வந்து கொஞ்சம் எடுத்துக்கிறேன்."

பையை வாங்கி வைத்துக் கொண்டு டிபனையும் முடித்துக் கொண்டு தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சுந்தரராஜன். அவர் புறப்பட்டும் போனதும் ராஜம்மாளிடம் வந்து சீறினாள். "ஏம்மா! வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டியா? வீட்டுக்குக் கூப்டா, வர்ரேன்னு சொல்லீட்டுச் சும்மாயிருக்க வேண்டியதுதான. அத விட்டுட்டு...தேவையில்லாம பேசுனா எப்படி?"

"ஐயோ! இதென்ன கூத்து. ஒரு பேச்சு பேசுனதுக்கு இந்தப் பாடா! நான் என்ன இல்லாததையா சொல்லீட்டேன். சந்தியா செஞ்சது மாதிரி நம்ம குடும்பத்துல யாராவது செஞ்சிருந்தா இந்நேரம் வெட்டிப் போட்டிருப்பாங்க. ஏன்...நீயே இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும்." ஆவேசத்தோடு சொன்னார் ராஜம்மாள்.

"அப்படியாம்மா...சரி...நானாயிருந்தா யாரு வெட்டீருப்பா? அப்பாதான் நான் காலேஜ் படிக்கிறப்பவே தவறீட்டாரே." நக்கலாகக் கேட்டாள் சந்தியா.

"ஏண்டி...ஒங்கண்ணன் இல்லையா? கிருஷ்ணன் என்ன சும்மாவா இருப்பான்?" உளறிக் கொட்டினார் ராஜம்மாள்.

"ஓ அண்ணனா! அண்ணியைக் கவுன்சிலராக்கீட்டு, அத வெச்சே வியாபாரம் செய்ற அண்ணந்தான. ஊருல அண்ணனப் பத்தி என்ன பேசுறாங்கன்னு ஒனக்குத் தெரியுமா? கையைல காச வெச்சாப் போதுமாம். வேலையக் கச்சிதமா முடிஞ்சிருமாம். அந்த அண்ணன் என்னைய வெட்டுவாரா?" சொல்லி விட்டுச் சிரித்தாள்.

மகனைச் சொன்னதும் ராஜம்மாளுக்குக் கோவம் வந்தது. "நல்லாயிருக்குடி. ஊருல ஒலகத்துல இல்லாததயா கிருஷ்ணன் செஞ்சிட்டான். இன்னைக்கு லஞ்சம் வாங்காதவங்க யாரு? என்னவோ இவன் ஒருத்தன் மட்டும் குத்தம் செஞ்சாப்புல!"

"ஆகா. அப்ப ஊருல இருக்குற பொண்ணுங்கள்ளாம் இதே மாதிரி கொழந்த பெத்துக்கிட்டா சந்தியா செஞ்சதும் சரியாயிரும் இல்ல! அண்ணன் செய்ற தப்புகள ஏத்துக்குற ஒனக்கு ஒரு பொண்ணு கொழந்த பெத்துக்கிறத ஏத்துக்க முடியலை. ம்ம்ம். லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும். நீ மட்டுமில்லம்மா...ரொம்பப் பேரு இப்பிடித்தான். ஒன்னைய மட்டும் சொல்லி என்ன புண்ணியம்." சொல்லி விட்டு சமையலைறைக்குள் புகுந்தாள் வாணி. அரவிந்தைக் கவனிக்கப் போனார் ராஜம்மாள்.

சுந்தரராஜன் பெசண்ட் நகருக்கு வரும் பொழுது சந்தியா அலுவலகத்திற்குக் கிளம்பிப் போயிருந்தாள். சிவகாமியுடனும் சுந்தருடனும் அன்றைய பொழுது நல்லபடி போனது. சம்பந்தியம்மாள் பேசியதை மனைவியிடம் சொன்னாள். சிவகாமிக்கு ராஜம்மாளையும் வாணியையும் தெரியுமாதலால் பெரிது படுத்தவில்லை.

அன்று அலுவலகத்தில் சந்தியாவிற்கு நிறைய வேலை. முதல்நாள் அலோக்கைப் பார்ப்பதற்காக விரைவில் கிளம்பி விட்டதால் வேலைகள் கொஞ்சம் மிச்சமிருந்தன. நடுவில் அழைத்த கதிருக்கும் தான் வேலையாக இருப்பதாகச் சொல்லி விட்டாள். கதிர் யாரென்று கேட்கின்றீர்களா? அலோக்கைப் போலத்தான். ஆனால் உள்ளூர்க்காரன். தி.நகரில் இருக்கும் ஒரு அஞ்சுமாடிக் கடைக்காரரின் மகன். சந்தியாவிற்கு நல்ல பழக்கம். இப்படி யாரெல்லாம் பழக்கமென்று இப்பொழுது பட்டியல் போட வேண்டாம். கதை குழம்பு என்றால் அவர்கள் கடுகு. அங்கங்கு தென்படுவார்கள்.

மாலை வீட்டிற்கு வந்தவள் தந்தையோடு கண்ணன் வாங்கப் போகும் கார் பற்றியும் வாணி, அரவிந்த் நலத்தையும் பற்றிப் பேசினாள். பிறகு இரவு உணவை முடித்து விட்டு சுந்தரராஜனும் சிவகாமியும் தூங்கப் போனார்கள். சுந்தரோடு தன்னறைக்குள் புகுந்த சந்தியா, மகனைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு தன்னுடைய மடிக்கணினியை இயக்கினாள். மின்னஞ்சல்களைப் பார்க்கவும் நண்பர்களோடு சாட்டிங் செய்யவும்தான்.

sandhyasundararajan@gmail.com என்பதுதான் அவளது மின்னஞ்சல் முகவரி. உண்மை முகவரி என்று ஒன்றிருந்தால் போலி என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும். ஆனால் இங்கு இரண்டு போலிகள் angelexotica@gmail.com மற்றும் drippingambrosia@yahoo.com என்பவைதான் அந்தப் போலிகள். இதன் மூலம்தான் சாட்டிங் செய்து நட்பு(!) வட்டாரத்தை உருவாக்கி வைத்திருந்தாள் சந்தியா. ஆனால் பெரும்பாலும் ONS. அதென்ன ONS? One Night Stand.

முதலில் சந்தியா தன்னுடைய உண்மை மின்னஞ்சலுக்குள் நுழைந்தாள். வந்திருந்த மின்னஞ்சல்களில் ஒன்று.....சரவணன். சரவணன். சரவணன். ஆமாம். அவனுடைய மின்னஞ்சல்தான். அதைப் பார்த்ததும் படக்கென்று ஒரு மகிழ்ச்சிப் பூ மொட்டு விட்டது. ஆனால் அந்தப் பூ இரும்புப் பூ போல கனமாக இருந்தது. ஒருவிதத் தயக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் அந்த மின்னஞ்சலைத் திறந்தாள் சந்தியா. ஆங்கிலத்தில் இருந்த மின்னஞ்சலை உங்களுக்காக நான் தமிழில் மொழி பெயர்த்துத் தருகிறேன். ஏனென்றால் யுனிகோடு வழியாக மின்னஞ்சல் அனுப்ப சரவணனோ சந்தியாவோ இணையத்தில் வலைப்பூக்கள் மூலமும் மன்றங்கள் மூலமும் தமிழ் வளர்க்கவில்லை. ஆங்கிலத்தில் படிக்க விரும்புகிறர்களுக்காக ஆங்கிலத்திலும் கொடுத்திருக்கிறேன்.

"தேனே சந்தியா,

எப்படி இருக்க? நான் நல்லா இருக்கேன். அங்க என்ன நடக்குது? இங்க நெதர்லாண்டுல எல்லாம் நல்லாப் போகுது. அடுத்த வாரம் செவ்வாய்க் கெழமை இந்தியா வர்ரேன். சென்னைக்கு வர்ரேன். இந்த முறை ரெண்டு மாச லீவு. ஒன்னோட நம்பர் மாத்தீருந்தீன்னா புது நம்பர் அனுப்பு. வந்து பேசிக்கலாம். பேச்சு மட்டுமில்ல........ ;-)

இனிய முத்தங்கள்,
சரவணன்"

sandhya sweety,

how r u? i'm fine. whatz up there? things r fine here at NL. will be there in india by tuesday next week. itz two months this time. if u hv changed ur no, mail me. let us talk. not just talk... ;-)

sweet kisses,
Saravanan

சின்ன மெயில்தான். ஆனால் சந்தியாவை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. சரவணன் சரவணன் என்று அந்தப் பெயரை மட்டும் மனசுக்குள் மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தாள். இன்றா? நேற்றா? கல்லூரிக் காலத்திலிருந்தே பழக்கம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் சந்தியாவின் பெண்மையைக் கண்டுபிடித்து அவள் இனிமேல் கன்னியல்ல என்று சொன்னவனே சரவணந்தான். சந்தியாவின் நெருங்கிய...மிகச் சிறந்த...அக்கறை கொண்ட...அன்பு கொண்ட நண்பன்.

நெதர்லாண்டில் பணி புரிகின்றான். இந்தியாவை விட்டுச் சென்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன்பு அவனும் சந்தியாவும் போகாத பார்ட்டி இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை. கூடாத கூட்டமில்லை. சரவணனுக்குச் சொந்த ஊர் சென்னைதான். வாழ்க்கையை மிகச் சுதந்திரமாக அனுபவிக்க விரும்பும் அவன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சந்தியா பெண். சரவணன் ஆண். அவ்வளவுதான் வேறுபாடு. புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

சரவணனின் மெயிலைப் படித்து விட்டுத் திரும்பிக் கட்டிலைப் பார்த்தாள். சுந்தரின் முகம். அது சரவணனின் முகம். அதுதான் அவளை அடிக்கடித் துன்புறுத்தும் முகம். படபடவென்று அலைபேசியை எடுத்து அழைத்தாள். "ஹலோ, தேன். தூங்கீட்டியா?"

தொடரும்....

Tuesday, February 06, 2007

3ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

கேள்வி: ஜயண்ட் வீல் ராட்டிணம் எல்லாருக்கும் தெரியும். அதில் ஏறிச் சுற்றுவது நன்றாக இருக்கும். அதே ஜயண்ட் வீல் கரகரவென வேகமாகச் சுற்றினால்?

விடை:
1. மண்டை கிறுகிறுக்கும்.
2. ஒரு மாதிரி உமட்டி வாந்தி வருவது போல இருக்கும். அதனால் வாயைத் திறக்கவும் அச்சமாக இருக்கும்.
3. சத்தமில்லாமல் உடம்பு இறுகிப் போய் அசையாமல் இருக்கும்.

மேலே சொன்ன விடையின் நிலையில்தான் எல்லாரும் இருந்தார்கள். படிப்பு, வேலை, வீடு, திருமணம் வேண்டாம் என்று அத்தனை முடிவுகளையும் சந்தியாதான் எடுத்திருந்தாள்.ஆனால் இப்படி வயிற்றில் குழந்தையோடு வந்து பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்றால்?

முதலில் சுதாரித்தது கண்ணன். "என்ன செஞ்சிருக்க சந்தியா! நம்ம மானமே போச்சு. இனிமே நம்ம சொந்தக்காரங்க யார் மொகத்துலயும் முழிக்க முடியாது. வாணி வீட்டுல என்னவெல்லாம் பேசப் போறாங்களோ! இனிமே அவங்க வீட்டுப்பக்கமும் போக முடியாது." திடீர்ப் படபடப்பு. என்ன செய்வதென்றே புரியாமை.

சுந்தரராஜனும் சிவகாமியும் வேதனையோடு அமைதியான சந்தியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"கண்ணா! எதுக்கு இப்பிடிக் கத்துற? நான் என்னோட முடிவைச் சொல்லீருக்கேன். அவ்வளவுதான!"

"சந்தியா, நான் கத்துறேன்னு மட்டும் சொல்ற. ஆனா ஏன்னு புரிஞ்சுக்கலையே! ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு கொழந்தையோட இருந்தா...இல்ல...கொழந்த பெத்துக்கிட்டா எல்லாரும் எப்படிப் பேசுவாங்க! அது ஏன் ஒனக்குத் தெரிய மாட்டேங்குது? உன்ன யாரோ ஏமாத்தீட்டாங்கன்னும் பேசலாம்.....யார் கிட்டயோ நீ தொடர்பு வெச்சிருக்கன்னும் பேசலாம்.....oh my god....sandhya please understand."

"stop it kanna. நீ இப்படி ஒளர்ரத என்னால கேக்க முடியலை. ஊருல இருக்குறவங்கதான் மனுசங்களா? என்னோட விருப்பங்கள் பெருசில்லையா?"

"விருப்பமெல்லாம் சரி. ஆனா ஒலகத்துக்கு முன்னாடி ஒன்னையும் குழந்தையையும் எப்படி அடையாளம் காட்டப் போற? கொழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்ல ஒன்னால முடியுமா? தகப்பன் பேர் தெரியாத கொழந்தைன்னு இருந்தா அம்மாவுக்கு என்ன பேர் கெடைக்கும்னு தெரியுமா? ஐயோ..பேச வெக்கிறயே சந்தியா!"

சந்தியாவுக்குக் கொஞ்சம் சுருக்கென்று தைத்தது. "ஆமாண்டா...பேசுறதெல்லாம் பேசீட்டு நான் பேச வெக்கிறேன்னு சொல்லு! என்ன சொன்ன? தகப்பன் பேர் தெரியாத கொழந்தை இருந்தா அம்மாவுக்கு என்ன பேரா? விபச்சாரி. அதான? அதான சொல்ல வர்ர? சொல்லு. உலகத்துல எந்தத் தப்பு செய்றவனும் இருக்கலாம். ஆனா இது மட்டுந்தான பெருந்தப்பு. ஊழல் செஞ்சவனும் கொள்ளையடிச்சவனும் ஏமாத்துனவனும் பெரிய ஆளுங்க. ஆனா கல்யாணம் ஆகாம ஒருத்தி கொழந்த பெத்தா...விபச்சாரி. பொம்பளைங்களச் சொல்ல மட்டும் ஒன்னாக் கெளம்பீருவீங்களே! திருந்துங்கடா! எங்க திருந்தப் போற! நீயும் ஒரு ஆம்பிளைதான!"

சிவகாமி குறுக்கே புகுந்தார். கண்ணனை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் நிறுத்தினார். சுந்தரராஜனிடம் "என்னங்க, நம்ம பிள்ளைங்க சண்ட போடுறத என்னால பாக்க முடியல. நிலமை இவ்வளவுக்கு வந்தாச்சு. இன்னமும் சும்மாயிந்தா சரியில்ல. ஏதாவது முடிவெடுக்கிறதுதான் நல்லது."

சிவகாமியின் கூற்றைத் தலையை அசைத்து ஆமோதித்தார் சுந்தரராஜன். சந்தியாவைப் பார்த்து, "நீ இன்னமும் கொழந்த பெத்துக்கிறதுங்குற முடிவுலதான் இருக்கியா?" என்று கேட்டார்.

"ஆமாம்ப்பா. அதான் செய்யப் போறேன். என்னோட கொழந்தைய நான் பெத்துக்கத்தான் போறேன். இந்த ஊர் சரியில்லைன்னா....வேற ஊரோ நாடோ போய்க்கிறேன். நீங்களும் அம்மாவும் எங்கூடயே வந்துருங்க. எனக்கு யார் துணை இல்லைன்னாலும் ஒங்க துணை வேணும். இதுதான் என்னோட முடிவு."

"ம்ம்ம்...சரி. அப்ப நம்ம ஒரு முடிவுக்கு வந்திரலாம். கண்ணா நீ கூடிய சீக்கிரம் நல்ல நாள் பாத்து நம்ம டி.நகர் வீட்டுக்குப் போயிரு. அங்க வாடகைக்கு இருக்குறவங்கள காலி செய்யச் சொல்லீரலாம். வாணியும் அரவிந்தும் அடுத்த மாசம் நேரா அங்கயே வரட்டும். ஏன்னா அவங்க வீட்டுல இருந்து கொஞ்ச நாளைக்கு யாராவது வரப் போக இருப்பாங்க. சந்தியா பேறு காலத்துக்குக் காத்திருக்குறப்போ வர்ரவங்க போறவங்க ஏதாவது பேசுவாங்க. அது அவளுக்கும் நல்லதில்லை. அவ கொழந்தைக்கும் நல்லதில்ல. நானும் அம்மாவும் சந்தியா கூட இங்க இருக்கோம். அப்பப்ப டி.நகருக்கும் வருவோம். சரிதானே?" என்று மகனிடம் முதலில் முடிவைச் சொன்னார். கண்ணனும் அதை ஏற்றுக் கொண்டான்.

சந்தியாவிடம் அடுத்தது. "சந்தியா, நீ செய்றது சரியா தப்பான்னு விவாதம் செஞ்சா அதுக்கு முடிவே இருக்காது. சரீன்னு சொல்றவங்களும் தப்புன்னு சொல்றவங்களும் ஆயிரக்கணக்குல காரணங்கள் சொல்வாங்க. உன்னோட இந்த முடிவு அடுத்தவங்களுக்குத் துன்பம் கொடுக்காத முடிவுதான். ஒத்துக்கிறேன். ஆனாலும் இதால உனக்கும் உன்னோட கொழந்தைக்கும் ஏற்படப் போற துன்பங்களை எடுத்துச் சொன்னோம். அதை எப்படி நீ சமாளிக்கப் போறங்குறது ஒன்னோட பொறுப்பு. அதுக்கு எங்க உதவி எதுவும் வேணும்னா நிச்சயம் செய்வோம். கண்டிப்பாப் பல விதங்கள்ள பேச்சுகள் வரும். சமாளிப்போம். எல்லாம் நல்லபடியா நடந்தாச் சரி."


சுந்தரராஜனின் முடிவு உடனே செயலுக்கு வந்தது. அதற்குப் பிறகு நடந்தவை கீழே.


வல்லினம்

க. வாணி சென்னைக்கு வந்ததும் கண்ணன் அவளிடம் உண்மையைச் சொல்லி விட்டான். அவளும் நிலமையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்.

ச. அன்று அந்தப் பேச்சுப் பேசிய கண்ணன் மட்டும் சந்தியாவுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தான். அதுகூட ஆத்திரத்தில் அல்ல. அப்படிப் பேசி விட்டோமே என்ற வருத்தத்தில்.

ட. சந்தியாவின் அலுவலகத்தில் வெளிப்படையாக artificial insemination உதவியால் குழந்தை பெற்றுக் கொள்வதாகக் கூறி விட்டாள்.

த. அவ்வப்போது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்த ராஜம்மாள் வகையறாக்களும் சந்தியாவை ஒரு விதமாகப் பேசினார்கள்.

ப. சந்தியாவின் சொந்தக்காரர்களுக்கும் குழந்தை பற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது. முனுமுனுப்புகள் எழுந்தன.

ற. படுக்கையில் கணவன் என்ற பெயரில் சூர்யாவோடும் விஜய்யோடும் கூடிக் கொண்டாடும் உத்தமப் பத்தினிகள் சிலர் சந்தியாவின் முதுகுக்குப் பின்னால் அவளது கற்பைப் பற்றிப் பல் கூசக்கூசப் பேசினர்.


இடையினம்

ய. டி.நகர் வீட்டிற்குக் கண்ணன் குடி போனான்.

ர. குழந்தை அரவிந்த் தாத்தா வீட்டில் வளரட்டும் என்பதற்காக டி.நகருக்கு வந்து விட்டதாக வாணி குடும்பத்தாருக்குச் செய்தி போனது.

ல. வாணிக்குத் துணையாக ராஜம்மாள் வந்து தங்கியிருந்தார். கணவனைப் பறிகொடுத்திருந்த அவருக்குப் பேரனோடு பொழுது போக்குவது மிகவும் பிடித்திருந்தது.

வ. வாணியின் குடும்பத்தார் பெசண்ட் நகர் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தனர்.

ள. சுந்தரராஜனும் சிவகாமியும் அவ்வப்பொழுது டி.நகர் சென்று வருவார்கள். ஊர் பேச்சு அவர்களை வருத்தப்பட வைத்தாலும் பொறுத்துக் கொண்டார்கள்.

ழ. மருமகன் அரவிந்திற்குச் சந்தியா செய்ய வேண்டிய சீர்களைத் தவறாமல் செய்தாள். வாணியும் கண்ணனும் அவைகளை ஏற்றுக் கொண்டார்கள்.


மெல்லினம்

ங. சந்தியாவிற்குச் சுகப் பிரசவம் நடந்து சுந்தர் பிறந்தான்.

ஞ. மகளையும் பேரனையும் சுந்தரராஜனும் சிவகாமியும் நல்லபடி பார்த்துக் கொண்டார்கள்.

ன. வாணி ஏதாவது வாய்க்குச் சுவையாக செய்தால் அதை பெசண்ட் நகர் வரை சென்று சந்தியாவிற்குக் குடுத்தாள்.

ந. சுந்தருக்குத் தங்கச் சங்கிலியும் கைக்காப்பும் வெள்ளித் தண்டையும் வாங்கித் தந்தாள். சாப்பிடுவதற்கு வெள்ளிக் கிண்ணமும் கரண்டியும் சங்கும் கொடுத்தாள்.

ம. தனது மகன் பெயரை ச.சுந்தர் (S.Sundar) என்று பெயரைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தாள். அம்மாவின் பெயரைத்தான் முதலெழுத்தாகப் பயன்படுத்தலாமே.

ண. மொத்தத்தில் அந்த வீட்டு மனிதர்களுக்குள் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டு அமைதி இருந்தது.


கடையினம்

இப்படி நடந்ததெல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டே தூங்கப் போனாள் சந்தியா. அடுத்த நாள் அவள் வாழ்க்கையைத் தோசையாக்கப் போகும் மின்னஞ்சல் வரப் போவது தெரியாமல். அதாவது அவளுக்குத் தெரியாமலே வாழ்க்கையைத் திருப்பிப் போடும் மின்னஞ்சல்.

தொடரும்...

Monday, February 05, 2007

யார் இவர்?

இந்தப் படத்துல இருக்குறவரப் பாருங்க. யார்னு தெரியுதா? கண்டுபிடிச்சிருப்பீங்களே. அவரேதான்.


சரி. இந்தப் படத்துக்குத் தகுந்தாப்புல ஒரு துணுக்கு அல்லது கவிதை அல்லது ஜோக்கு...அல்லது ஒங்களுக்கு என்ன தோணுதோ.....அதச் சொல்லுங்க பாக்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, January 31, 2007

நான் பறக்கிறேனே மம்மி

ஐயா...பாத்துக் கட்டுங்க...இதுக்குப் பேரு life jacket. ஒரு முடிச்சுக்கு ரெண்டு முடிச்சு வேணும்னாலும் கூடப் போட்டுக்கோங்க.

இத இறுக்கிப் பிடிச்சிக்கிரட்டுங்களா? தெரியாத்தனமா எதையாவது இழுத்துட்டேன்னா? என்னது கடல்ல எறங்கீருமா? ஜெல்லி ஃபிஷ் இருக்கும்னீங்களே! அது வெசம்னீங்களே!

போட்டு ஓடும் போது உள்ள இழுக்குமா? நானும் கூடவே ஓடனுமா? சரி...எதுக்கும் இத நல்லா பிடிச்சிக்கிறேன்.

ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ...........

ஐயா...கைய விட்டுட்டுக் கூட என்னால பறக்க முடியுதே! நான் பறக்கிறேனே மம்மி!



அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 29, 2007

2ம் பகுதி - கள்ளியிலும் பால்

"இந்தாம்மா காஃபி." கோப்பையை சந்தியாவிடம் நீட்டினார் சிவகாமி. மடியில் சுந்தரை வைத்திருந்த சந்தியா ஒற்றைக் கையால் கோப்பையை வாங்கினாள். காஃபியைச் சிறிது உறிஞ்சியவள்..."அப்பா எப்ப வர்ராங்களாம்? அரவிந்துக்கு இப்ப எப்படி இருக்காம்?"

மெத்துமெத்தான அந்தக் கருப்பு ரெக்சின் சோஃபாவில் சந்தியாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சுந்தரை வாங்கினார் சிவகாமி. "இப்பத் தாவலையாம். அப்பா நாளைக்கு காலைல கெளம்பி வர்ராங்க. வாணி மதியம் ஃபோன் பண்ணீருந்தப்போ சொன்னா. கண்ணனும் புதுக் கார் பதிஞ்சிருக்கானாம்."

யார் இந்த அரவிந்த், வாணி, கண்ணன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சரி. ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துகிறேன்.

சுந்தரராஜன் - சிவகாமியின் கணவர் - ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி
கண்ணன் - சந்தியாவின் தம்பி. ஒன்றரை வயது சிறியவன். அயல்நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிகிறான்.
வாணி - கண்ணனின் மனைவி. திநகரில் கணவனோடு வசிக்கிறாள். இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை செய்த இவளது தாயும் கடந்த மூன்று மாதங்களாக இவர்களுடன் இருக்கிறார். அவரது பெயர் ராஜம்மாள். இட்டிலிப் பிரியர்.
அரவிந்த் - வாணிக்கும் கண்ணனுக்கும் பிறந்த மகன்

சுடச்சுட இறக்கி வைத்த இட்டிலியை வெறும் கையால் பிசைந்து விட்டான் குழந்தை அரவிந்த். உள்ளங்கை சிவந்து காய்ச்சல் வேறு வந்து விட்டது. அதனால் அங்கு துணைக்கும் உதவிக்கும் சுந்தர்ராஜன் சென்றிருந்தார். அரவிந்துக்குச் சரியானதையும் சுந்தரராஜன் வருவதையும் மதியம் வாணி அத்தையைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறாள். அத்தோடு கண்ணன் புதிதாக கார் வாங்கப் போவதையும் சொல்லியிருக்கிறாள். இப்பொழுது பாத்திரங்கள் யார்யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே! கதைக்குப் போவோமா?

காஃபியைக் குடித்து முடித்திருந்தாள் சந்தியா. "என்ன காராம்? ஏற்கனவே இருக்குற சாண்ட்ரோவ என்ன செய்யப் போறானாம்?"

"எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னவோ பேர் சொன்னா வாணி. சரியாக் கேட்டுக்கலை. சுந்தர் எப்படியிருக்கான்னு கேட்டா. சனிக்கிழமை வர்ரேன்னு சொன்னா. சம்மந்தியம்மாவும் அங்க இருக்குறதால....பாவம்...எங்கயும் நகர முடியலையாம். ஏற்கனவே அவங்க இடுப்பு ஆப்பரேஷன் செஞ்சவங்க. ஒரு வேலையும் செய்ய முடியாது. அரவிந்த் வேற துறுதுறுப்பா இருக்கான். இவங்களால சமாளிக்க முடியலையாம்." சுந்தரைச் சந்தியாவின் கைகளில் கொடுத்து விட்டு காஃபி கோப்பையோடு அடுக்களைக்குள் நுழைந்தார் சிவகாமி.

தம்பி புதுக்கார் வாங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சிதான் சந்தியாவுக்கு. அதிலும் இரண்டாவது கார். சந்தியாவைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது. பின்னே ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தச் சண்டை. ம்ம்ம்ம்....

அப்பொழுது அரவிந்த் மூன்றுமாதக் கைக்குழந்தை. வாணி குழந்தையோடு மதுரையில் தாய் வீட்டில் இருந்தாள். பெசண்ட் நகர் அப்பார்ட்மெண்ட்டை சந்தியா வாங்கி ஓராண்டுதான் ஆயிருந்தது. அப்பார்ட்மெண்ட் சந்தியாவின் பெயரில் இருந்தாலும் அங்கு மனைவியோடு இருப்பது கண்ணனுக்கு உறுத்தலாக இருக்கவில்லை. மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்.

ஒருநாள் இரவுச் சாப்பாட்டில்தான் அந்தப் பேச்சு தொடங்கியது. சிவகாமி அனைவருக்கும் தட்டில் போட்டு விட்டு தானும் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

"அப்பா, நான் ஒரு முடிவெடுத்திருக்கேன். அத உங்க எல்லார் கிட்டயும் சொல்லலாம்னு நெனைக்கிறேன்." பாதிச் சாப்பாட்டில் சந்தியா பேச்சைத் தொடங்கினாள்.

எல்லாரும் சாப்பாட்டை மறந்து சந்தியாவையே ஆர்வத்தோடு பார்த்தார்கள். என்ன முடிவு எடுத்திருக்கிறாளோ என்று.

"கொழந்தை பெத்துக்கலாம்னு இருக்கேம்ப்பா."

மற்ற மூவருக்கும் ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. சுந்தரராஜன் சுதாரித்துக் கொண்டு முதலில் கேட்டார். "என்னம்மா சொல்ற? கல்யாணமே செஞ்சுக்காம கொழந்த பெத்துக்கப் போறியா?"

"ஆமாம்பா! எனக்கு ஒரு கொழந்தை வேணும்னு தோணுது. அதான் இந்த முடிவு. தப்பாப்பா?"

தட்டில் சாப்பாடு காய்வது கூடத் தெரியாமல் சிவகாமியும் கண்ணனும் ஒருவித கலக்கத்தோடு அவர்கள் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

"இதுதான் தப்பு இதுதான் சரின்னு எதையும் உறுதியாச் சொல்ல முடியாதும்மா. ஆனா இப்படி ஒரு முடிவு எடுத்தா அதோட பின்விளைவுகளையும் யோசிச்சுப் பாக்கனும். பாத்தியா?"

"நல்லா யோசிச்சுப் பாத்தேம்ப்பா. அதுக்கப்புறந்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இதுல எனக்குக் கெட்ட பேர் கூட வரலாம். ஆனா உங்க துணை இருந்தா எல்லாத்தையும் தாண்டி வருவேம்ப்பா."

இனம்புரியாத ஒரு உணர்ச்சியில் பெருமூச்சு விட்டார் சுந்தரராஜன். "கெட்ட பேர் ஒனக்கு மட்டும் வராதும்மா. எங்களுக்கும் சேத்துதான் வரும். ஏற்கனவே உனக்குக் கல்யாணம் செய்யாம வெச்சிருக்கோம்னு ஒவ்வொருத்தரும் பேசுறாங்க. உனக்கு முடிக்காம கண்ணனுக்கு முடிக்கும் போது நல்ல வேளையா பெரிய சலசலப்பு எதுவும் வரலை. ஆனா குழந்தை பெத்துக்குறதுங்குறது...."

"என்னப்பா? நீங்களாப்பா இப்படிப் பேசுறீங்க? அவங்கவங்க முடிவை அவங்கவங்க சரியா எடுக்கக் கத்துக்குடுத்ததே நீங்கதானப்பா. அப்படியிருக்குறப்போ இப்பத் தயங்குறீங்களேப்பா?"

"சந்தியா என்னது இது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. இப்படி ஒரு முடிவு எடுத்துக்கிட்டு அதுக்கு நாங்களும் சம்மதிக்கனும்னு எதிர்பார்க்குறயா? எங்களால கண்டிப்பா முடியாது. அப்பா பேச்சையும் கேக்காம நீ வாதாடுறது நல்லாயில்ல." குறுக்கிட்டான் கண்ணன். கொஞ்சம் எரிச்சல் அவனுக்கு.

"டேய். சும்மா இரு. அப்பா பேசுறாங்கள்ள." என்று சொல்லி மகனை அடக்கினார் சிவகாமி.

சுந்தரராஜன் மகளின் கையை மென்மையாகப் பிடித்தார். "சந்தியா. நீ படிச்ச பொண்ணு. இப்படி ஒரு முடிவு எடுக்குறதால ஒனக்கு மட்டும் கெட்ட பேர் வராது. அந்தக் குழந்தையப் பத்தி நெனச்சுப் பாத்தியா? இனிஷியல் வேண்டாமா?"

"இப்பத்தான் அம்மா பேர இனிஷியலா போடலாம்னு சட்டமே இருக்கேப்பா."

"உண்மைதான். சட்டத்தோட மட்டும் நீ வாழப் போறதில்லை. சமுதாயத்தோடதான் வாழனும். நம்ம ஊர்ல இதெல்லாம் ஒத்து வராதும்மா."

"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?"

திகைத்துப் போனார் தந்தை. மகள் தங்களை விட்டுப் போய் விடுவாளோ என்று சற்று பயந்தார். பிறகு உறுதியாகச் சொன்னார். "சந்தியா. உண்ணால எந்த நாட்டுலயும் நல்ல வேலை வாங்கிக்க முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா இனிமே வரப்போற ஒரு உறவுக்காக இருக்குற அத்தனை உறவுகளையும் இழக்கனுமா என்ன? அது சரியாத் தெரியலை. நல்லா யோசிச்சுப் பாத்தா எனக்கென்னவோ நீ எடுத்திருக்குற முடிவு சரியா வராதுன்னு தோணுது. வேணும்னா ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். அது உனக்கு நல்ல பேரையும் வாங்கித் தரும். ஒரு குழந்தைக்கு அனாதைங்குற பட்டமும் போகும். இதுதான் சரியான வழின்னு எனக்குப் படுது. இதுதாம்மா என்னோட முடிவு."

நேராக நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். சுந்தரராஜன் முடிவைச் சொன்ன விதத்திலிருந்து அவருக்குச் சம்மதமில்லை என்று புரிந்து கொண்டாள். அம்மாவிடம் இதற்கு மேல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. கண்ணனோ திருமணம் செய்து குழந்தை பெற்றவன். அவனுடைய உதவியையும் இனிமேல் கேட்க முடியாது. தன்னுடைய முடிவைச் சொல்வதே நல்லது என்று இப்படிச் சொன்னாள்.

"சரி. நீங்க ஒங்க முடிவைச் சொல்லீட்டீங்க. என்னுடைய முடிவையும் நான் சொல்லீர்ரேன். I am already pregnant."

தொடரும்.....

Tuesday, January 23, 2007

1ம் பகுதி - கள்ளியிலும் பால்

நகத்தைக் கடித்தபடி காத்திருந்தாள் சந்தியா. வந்து பத்து நிமிடங்களாகிறது. அதனால்தான் கொஞ்சம் டென்ஷன். விரல்களைக் கைகளின் உட்பக்கமாக மடக்கி விரல்களைப் பார்த்தாள். அழகான விரல்கள். மாநிறத்து விரல்களுக்கு ஏற்ற வெளிரிய சாக்லேட் நிறத்தில் நகப்பூச்சு. பளபளப்பாக இருந்தது.

காத்திருத்தலும் சமயங்களில் அலுப்புதான். ஜி.என்.செட்டி ரோட்டிலிருந்த பாரிஸ்டா காஃபிக் கடையில்தான் சந்தியா காத்திருக்கிறாள். மெத்தன்ற ·சோபாவுக்குள் அமிழ்ந்தபடி ஒயிலாக அமர்ந்திருந்தாள். பச்சைச் சுடிதார் அவளை எடுப்பாகக் காட்டியது. முப்பது என்பதை ஐந்து குறைத்து இருபத்தைந்து என்று காட்டியது.

"அலோக்...சீக்கிரமா வா!" மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். வெள்ளை டி-ஷர்ட்டும் கருப்பு ஜீன்சும் அவனது அடையாளங்கள். ஐந்தடி பதினோரு அங்குலம். அறுபத்தைந்து கிலோ எடை. கட்டுடல். வழுவழு முகம். வெள்ளைத் தோல். வயது இருபத்து மூன்று. சொந்த ஊர் சண்டிகர். ஆறு மாதங்களாகச் சென்னையில் வேலை. இவ்வளவுதான் அலோக்கைப் பற்றி சந்தியாவிற்குத் தெரிந்த விவரங்கள். கூடுதலாக அவனுடைய தொலைபேசி எண்ணும் தெரியும்.

சாட்டிங்கில் கிடைத்தது அலோக்கின் தொடர்பு. இன்று சந்திப்பதாக ஏற்பாடு. மாலை நான்கு மணிக்குச் சந்தியாவை பாரிஸ்டாவிற்கு வரச் சொல்லியிருந்தான் அலோக். அவளும் டைடல் பார்க்கிலிருந்து புறப்பட்டு நான்கு மணிக்கெல்லாம் வந்து விட்டாள்.

இப்பொழுது சந்தியாவின் கடிகாரத்தில் நான்கு மணியாகி ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. அதுதான் டென்ஷனுக்கான காரணம். உள்ளே வருகின்ற ஒவ்வொரு இளைஞனையும் அடையாளம் பார்த்தாள். உயரமாகயிருந்தால் நிறமில்லை. நல்ல நிறமாக இருந்தால் வயது முப்பதுக்கு மேல். எல்லாம் பொருந்தி வந்தால் மீசையிருக்கிறது. மீசையில்லாமல் வந்தால்.....கூட ஆளிருக்கிறது.

காத்திருக்கும் பதட்டத்தோடு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பேசாமல் வீட்டிற்குப் போய் விடலாமா என்று தோன்றியது. "போன வாரம் பாத்த விஷால் பதினஞ்சு நிமிஷம் தாமதாமா வந்தான். அது போல இவனும் வந்தால்! பேசாம விஷாலையே கூப்பிட்டிருக்கலாம்...." சந்தியாவின் எண்ண ஓட்டம். அலோக்கிற்கு ·போன் செய்தாள். ரிங் போகிறது. ஆனால் பதிலில்லை.

சரியாக நான்கு மணி பத்து நிமிடங்களுக்கு அலோக் உள்ளே நுழைந்தான். அவனும் சந்தியாவைத் தேடினான். பச்சை சுடிதாரைப் பார்த்ததும், "நீங்கதான் சந்தியாவா?" என்று கேட்டான்.

முகத்தில் மலர்ச்சியோடு ஆமாம் என்று தலையசைத்தாள். அவளுக்கு முன்னே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். "மன்னிக்கனும். வெயில் அதிகம். ஆஃபீஸ்ல இருந்து நேரா வர்ரேன். வழியெல்லாம் ஒரே நெரிசல். அதான் நேரமாச்சு."

தலையைத் தலையை ஆட்டி அவன் சொன்னது அவளுக்கு அழகாகத் தோன்றியது. பஞ்சாப் பசங்களே ஒரு கணக்குதான் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். "அதனாலென்ன....நானும் வந்து பத்து நிமிஷந்தான் ஆகுது. சரி. என்ன சாப்பிடுறீங்க? கா·பி அல்லது டீ?"

"ஒன்னும் வேண்டாம் சந்தியா! உங்களப் பாக்கத்தான் வந்தேன். சரி. அடுத்து என்ன? உங்க வீடு எங்கயிருக்கு? பக்கத்திலயா? எனக்கு இன்னமும் சென்னை பிடிபடலை. நீங்க பேரச் சொன்னாலும் எனக்குத் தெரிஞ்சிருக்காது" சொல்லி விட்டுச் சிரித்தான்.

தலையைச் சாய்த்து புன்னகைத்தாள் சந்தியா. அவளது மேனரிசம் அது. பார்ப்பவரை வசீகரிக்கும் மேனரிசம். "என்னோட வீடு பக்கத்துல இல்லை. பெசன்ட் நகர்ல இருக்கு. ஆனா...." இழுத்தாள் சந்தியா.

"பெசன்ட் நகர். எலியட்ஸ் பீச் இருக்கே. அங்கதானே. அது ரொம்ப தூரம். என்னோட வீட்டுக்கு வாங்களேன். பக்கத்துலதான். சரவணா ஸ்ட்ரீட்!"

சம்மதித்தாள் சந்தியா. அவனது பைக்கை அவளது சாண்ட்ரோ பின்பற்றியது. பாண்டி பஜார் வழியாக சரவணா தெருவில் நுழைந்தார்கள். நான்கைந்து வீடுகள் தாண்டி ஒரு வீட்டிற்குள் இருவரும் நுழைந்தார்கள். ஓரளவு வசதியான வீடாகவேயிருந்தது. முதன்முதலாக வரும் சந்தியாவை வரவேற்றான் அலோக். உள்ளே நுழைந்ததும் மறக்காமல் கதவைச் சாத்தினான்.

"நீங்க நல்லாயிருக்கீங்க சந்தியா. எனக்கு உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு நல்ல காண்டேக்ட்ஸ் நிறையத் தர்ரேன்." புதிய சூழலில் அமைதியாக இருந்தாள் சந்தியா. பகல் பொழுதில் எல்லா சன்னல்களும் மூடப்பட்டு ஒருவித அரைகுறை இருட்டு இருந்தது.

தனிமை துணிவு தர சந்தியாவின் தோளில் கைவத்து உள்ளே அழைத்துச் சென்றான். அவளிடம் எதிர்ப்பு இல்லை. ஒத்துழைப்புதான் இருந்தது. முழுமையான ஒத்துழைப்பு. ஒரு மணி நேரமும் ஒரு நொடி போலக் கழிந்தது. இருவருமே வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான். "சந்தியா! அடிக்கடி இங்க வரனும்." அவனைக் கட்டிக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள். "கண்டிப்பா அலோக்." அவளுக்கு யாரையோ பழிவாங்கிய திருப்தி. அந்த வெறி இன்பமாக மாறி தலை முதல் கால்வரை ஓடியது.

அவள் மனக்கண்ணில் ஒரு ஆணின் முகம் தோன்றியது. அவனைப் பார்த்து அவள் மனம் கெக்கலித்தது. அலோக்கை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். பழிக்குப் பழி. போட்டியில் தன்னைத் தள்ளி விட்டு முன்னே ஓடியவனை தான் முந்திய மகிழ்ச்சி அவளுக்கு. அந்த முகம் வெதும்பி நொந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனக்கண்ணிலிருந்து மறைந்தது. அந்த முகத்திற்குரியவனை வென்ற வெறி புன்னகையாக விரிந்தது.

சற்று நேரம் கழித்து உடைகளைச் சரி செய்து கொண்டு கிளம்பினாள். அலோக்கிடம் விடைபெற்றுக் கொண்டாள். அப்படியே அவனுடைய நண்பர்களின் செல்போன் நம்பர்கள் இரண்டும் பெற்றுக் கொண்டாள். டாடா சொல்லி விட்டு அவளது சாண்ட்ரோவை பெசன்ட் நகர் பக்கம் ஓட்டினாள். சென்னை நெரிசலில் அவளது சாண்ட்ரோ சரக்கென்று லாவகமாகச் சென்றது.

அஷ்டலட்சுமி கோயில் பக்கத்திலிருந்தது ஸ்ரீநிதி அபார்ட்மெண்ட்ஸ். வசதியானவர்களுக்கான அபார்ட்மெண்ட். உள்ளே நுழைந்து லிஃப்டில் ஏறி நான்காம் மாடிக்குச் சென்றாள். வீட்டு எண் 402. சந்தியாவின் சொந்த வீடு.

அழைப்பு மணி ஓசை கேட்டு ஐம்பத்தைந்து வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அது சந்தியாவின் அம்மா சிவகாமி. "என்னம்மா ஆஃபிசிலயிருந்து இன்னைக்குச் சீக்கிரமா வந்திட்ட! வேலை சீக்கிரமா முடிஞ்சிருச்சா?" அலுவலகத்திலிருந்து வழக்கமாக ஏழுமணிக்கு வரும் மகள் இன்றைக்கு ஆறுமணிக்கெல்லாம் வந்திருக்கிறாளே.

மகள் களைப்பாக இருப்பதைப் பார்த்தாள். "ரொம்ப களைப்பா இருக்க. இரு மொதல்ல காஃபி போட்டுட்டு வர்ரென். குடிப்ப. இப்பத்தான் வீட்டைப் பெருக்கித் தொடச்சிட்டு கனகம் போனா. உள்ள சுந்தர் எழுந்திருச்சிட்டான். கைகால் கழுவிட்டு அவனப் பாத்துக்கோ."

படுக்கையறைக்குள் நுழைந்தாள் சந்தியா. ஹேண்ட் பேக்கை கழற்றி சுவற்றிலிருந்த பிளாஸ்டிக் கொக்கியில் மாட்டினாள். ஏஸியின் மெல்லிய குளிர் இதமாக இருந்தது. பாத்ரூமிற்குச் சென்று முகம் கைகால் கழுவிட்டு வந்தாள். கட்டிலில் சுந்தர் கையைக் காலை ஆட்டிக் கொண்டிருந்தான். சந்தியாவைப் பார்த்ததும் அவனுக்கு குஷி கூடியது. கையைக் காலை வேகமாக அசைத்தான். ஏழு மாதக் குழந்தை சுந்தர்.

சுந்தரை இரண்டு கைகளிலும் அள்ளி அணைத்தாள். அந்த வெதுவெதுப்பில் அவள் கண்களில் கண்ணீர் வந்தது. ஏதோ ஒரு சோகம் நெஞ்சைக் கவ்வியது. சோகத்தையும் அழுகையையும் அப்படியே விழுங்கினாள். மனதில் உறுதி எழுந்தது. மனக்கண்ணில் மீண்டும் அந்த உருவம் தெரிந்தது. தலையைச் சாய்த்து அந்தக் கண்ணுக்குத் தெரியாதவனைப் பார்த்துச் சிரித்தாள். மனதில் ஆங்காரம் கூடியது. "பாருடா! பார். இன்னைக்கு நானொரு அம்மா. ஆனா நீ?" அவள் கேட்டதும் அந்தக் கற்பனை உருவம் தலையைக் குனிந்தது.

தொடரும்...

Tuesday, January 16, 2007

05. கின்னிக்கோழியும் சிவன்கோயில் கடையும்

முந்தைய பாகம் இங்கே.

தீபாவளிச் சுற்றுப்பயணம் எழுதத் தொடங்கி பொங்கலும் வந்துருச்சு. இனியும் இத ரொம்ப நீட்டுனா மக்கள் அடிக்க வந்துருவாங்க. ஆகையால தூத்துக்குடியில நடந்த பாத்த மூனு நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி விட்டு மதுரை அத்தியாயத்துக்குப் போறேன். :-) பயப்படாதீங்க. எவ்வளவு சுருக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாச் சொல்றேன்.

தூத்துக்குடியில நான் ஒரு பறவையைப் பாத்தேன். வீட்டுக்குப் பின்னாடி. ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. வான்கோழியோன்னு நெனைச்சேன். ஆனா அந்த அளவுக்கு றெக்கைகள் இல்ல. இது மண்ட ரொம்பச் சின்னதா கழுத்து ரொம்பவும் மெலிஞ்சி...ஆனா ஒடம்பு மட்டும் தண்டியா உருண்டையா இருந்துச்சு. எனக்கு அதுக்கு என்ன பேர்னே தெரியலை. அதை ஒரு ஃபோட்டோ புடிச்சி நம்ம வலைப்பூவுல போடனும்னு நெனச்சேன். ஆனா சோதனைக்குன்னு அது சரியா போட்டோ எடுக்கும் போது நகந்துருச்சு. நாலஞ்சு போட்டோ வெறும் போட்டோவா வந்துச்சு. ஒரு போட்டோவுல மூஞ்சியப் படம் பிடிக்கப் பாத்தா படபடன்னு றெக்கைய அடிச்சிக்கிட்டு கால்தான் விழுந்தது. கடைசியில ரொம்ப கஷ்டப்பட்டதப் பாத்து நேருக்கு நேர் ஒரு போஸ் குடுத்தது. அப்படியே டபடபன்னு பறந்து சொவத்து மேல உக்காந்துகிட்டு ஜம்முன்னு ஒரு போஸ். அந்தக் கோழிக்குப் பேரு கின்னிக் கோழியாம். பெரிய ண் போடனுமா சின்ன ன் போடனுமான்னு கூடத் தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க.


அப்படியே காலையில எந்திரிச்சி பேப்பர் வாங்கலாம்னு தூத்துக்குடி புதுக்கிராமத்துல இருந்த தியாகராஜன் கடைக்குப் போனேன். அந்தத் தெருவுல மூனு மளிகைக்கடைங்க பிரபலம். அதாவது ரொம்ப காலமா இருக்குறது. கிட்னங் கடை, தியாகராஜன் கடை, சிவசாமி கடை. இந்த மூனுந்தான் அந்த கடைகள். அதே போலக் காய்கறிக் கடைகள்ள கன்னியம்மா கடையும் முனுசாமி கடையும். இதுல எந்தக் கடைக்கும் பேர்ப்பலகை கெடையாது. எல்லாம் கடைக்குச் சொந்தக்காரங்க பேருதான். இப்பக் கன்னியம்மா கடை இல்ல. இடிஞ்சிருந்தது. முனுசாமி கடை இருக்குது.

மளிகைக்கடைகள்ல கிட்னங் கடையும் தியாகராஜன் கடையும் இருக்குது. சிவசாமி கடைய சிவசாமியோட மகன் பாத்துக்கிறாரு. ஆனா வேற எங்கயோ கடைய மாத்தீட்டுப் போயிட்டாராம். நான் பேப்பரு வாங்கப் போனது தியாகராஜன் கடை. இப்ப தியாகராஜனும் இல்லை. அவரு மகந்தான் கடையப் பாத்துக்குறது. நான் அந்தக் கடைக்குப் போறது...கிட்டத்தட்ட ஏழெட்டு வருசங்களுக்கு அப்புறமா. போனதும் அங்க ஆனந்த விகடன் தீபாவளி மலரைப் பாத்தேன். அப்புறம் ஜெயா டீவியில 3D நாடகத்துக்குக் கண்ணாடி இருந்தது. அதுல ஒன்னு வாங்குனேன்.

எல்லாத்துக்கும் காசு குடுத்துட்டு கெளம்புறப்போ கடைக்காரரு கேட்டாரு. "நீங்க பாபுவா"ன்னு. அது எங்க அத்தை மகன். அவங்க வீட்டுலதான் நான் வளந்தது. இல்லைன்னு மறுத்துட்டு நான் யாருன்னு சொன்னேன். அவருக்கு நாவகம் வந்துருச்சி. "ஆமாமா ஞாவகம் இருக்கு. ரொம்ப வருசமாச்சுல்ல. அப்ப டிரவுசரு போட்டுக்கிட்டு பாத்தது." அடக் கொடுமையே...கடைக்கு casual trouserம் sleeveless டி சட்டையும் போட்டுப் போனது தப்பாப் போச்சு. எப்பவோ டிரவுசர் போட்டதெல்லாம் இவருக்கு நெனைவுக்கு வருதேன்னு நெனைச்சேன். அவரு ரெண்டு பழைய விஷயங்கள எடுத்து விட்டாரு.

புதுக்கிராமங்குறது ஒரு தெரு. அதுவும் பழைய தூத்துக்குடியில உள்ள பிரபலமான தெரு. அங்க இருந்த எல்லாருக்கும் எல்லாரையும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். இவரு அந்தத் தெருவுலயே பொறந்து வளர்ந்து தொழில் பாக்குறவரு. கண்டிப்பா நினைவு வெச்சிருக்குறதுல ஆச்சரியமில்லை. சின்ன வயசுல எனக்கு பெரிய மிட்டாய்...அதாங்க கேட்பரீஸ் மாதிரி சாக்லேட் பார்ஸ் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. ஆசை மட்டும் பட்டா போதுமா...அப்ப அதெல்லாம் ரொம்பப் பெரிய விசயம் எங்களுக்கு. எப்படியோ யாரோ சொந்தக்காரங்க வந்தப்போ கொடுத்த காசுகளச் சேத்து வெச்சி ஒரு நாள் அந்த பார் சாக்லேட்ட தியாகராஜன் கடையில வாங்கினேன். வீட்டுக்குச் சொல்லீட்டுதான். அது கட்டியா பெருசா இருக்கும்னுதான் நான் நெனச்சேன். ஆனா அது பழைய சாக்லேட் போல.....நெகிழ்ந்து போயி மாவு மாதிரி இருந்தது. அதுல ஓட்டையெல்லாம் இருந்தாப்புல நெனவு. இருந்தாலும் வீட்டு வாசல்லயே உக்காந்து தின்னுட்டு நல்லாயிருந்ததுன்னு பொய்ப்பெருமையா வீட்டுல சொன்னேன். இப்ப விருப்பப்பட்ட சாக்லேட் வாங்கிச் சாப்புடுற வசதிய முருகன் குடுத்திருக்கான். ஆனா சாக்லேட் ஆசைதான் இல்லை. சாப்பிட்டா காலரி கூடீருமோன்னு ஒரு பயம் வேற. ம்ம்ம்....ஆசப்பட்டது இருக்குது. அனுபவிக்கத்தான் முடியல.

ரொம்ப நாளுக்கப்புறம் ஊருக்கு வந்திருக்கோமேன்னு கோயிலுக்குப் போனோம். தூத்துக்குடியில பெரிய கோயில்கள்னா சிவங்கோயில், பெருமாள் கோயில், மாதா கோயில் (பெரிய கோயில்), சின்னக் கோயில். இதுல பெரிய கோயிலும் சின்னக் கோயிலும் சர்ச்சுகள். உருவத்த வெச்சிப்பாத்தா சின்னக் கோயில் பெருசாயிருக்கும். பெரிய கோயில் சிறுசா இருக்கும். ஆனாலும் பெரிய கோயில் திருவிழான்னா தூத்துக்குடியே களை கட்டும். கிருத்துவர்கள் மட்டுமல்ல இந்துக்களும் அங்க போவாங்க. நானும் போயிருக்கேன். அங்க போயிட்டு வழியிலேயே சிவங்கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் போவாங்க. பெரும்பாலானவங்க அதெல்லாம் கண்டுக்கிறதில்லை. தூத்துக்குடி கடற்கரையூரு. அங்க பழைய துறைமுகத்துக்கு எதுத்தாப்புல ஒரு சின்ன பிள்ளையார் கோயில் உண்டு. அதுக்குக் கட்டளைக்காரரா ஒரு கிருத்துவக் காண்டிராக்டரும் எனக்குத் தெரிஞ்சி இருந்தாரு. அவர் பேர்ல பூசை வெச்சி பலவாட்டி சக்கரைப் பொங்கலும் புளியோதரையும் பிரசாதங் கொடுத்திருக்காங்க.

அதே மாதிரி சிவங்கோயில்ல நடக்குற சூரசம்காரமும் ரொம்ப நல்லாயிருக்கும். தூத்துக்குடியில சூரசம்காரம் பாத்தவங்கள திருச்செந்தூர் சூரசம்காரத்தத் தவிர வேறெந்த சூரசம்காரமும் திருப்திப் படுத்த முடியாது. சிவங்கோயில ஒட்டியே பெருமாள் கோயிலும். சிவங்கோயில் பெருசு. பெருமாள் கோயில் சிறுசு. ஆனா சிவங்கோயில விட பெருமாள் கோயில் ஜொஜ்ஜொலிப்பா இருக்குறாப்புல இருக்கும். கோயிலுக்குப் போறப்போ வெளிய ஒரு கடை. பூசைப் பொருளெல்லாம் விக்குற கடை. காண்டிராக்ட் விட்டுருப்பாங்க. அந்தக் கடையைப் பாத்ததும் படக்குன்னு ஒரு யோசனை. கடையில இருந்த அம்மாகிட்ட உத்தரவு கேட்டுட்டு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டேன். ஏன் தெரியுமா? கோயிலுக்குப் போற அத்தனை இந்துக்களும் பூசனைப் பொருள் வாங்குற கடைய நடத்துற அவங்க கிருத்துவங்க. படத்தப் பாருங்க. உங்களுக்கே புரியும்.



























அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 09, 2007

2007லாவது மாற வேண்டும் திருக்கோயில்கள்

வலை வீசித் தமிழ் சொல்லும் அன்பு நெஞ்சங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2007ம் ஆண்டு உலகில் அமைதியையும் சமத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் கொண்டு வரட்டும்.

ஒவ்வொரு ஆண்டு தொடங்குகையிலும் அந்த ஆண்டு ஏதாவது நல்லவைகளைக் கொண்டு வந்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் காத்திருப்பதுதானே நமது வழக்கம். அந்த வகையில் சென்ற ஆண்டில் இலங்கைக்குப் போக வேண்டும் என்று விரும்பினேன். இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் என்றாவது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்குக் காத்துக் கொண்டேயிருந்தால் போதுமா? இந்த ஆண்டிலும் ஏதாவது விரும்ப வேண்டாமா?

ஆலயம் தொழுவது சாலவும் நன்றுதான். அப்படிச் சாலச் சிறந்ததைத் தரும் திருக்கோயில்கள் எப்படி இருக்க வேண்டும்? இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விருப்பம். வேதங்களைக் கரைத்துக் குடித்த பண்டிதன் அல்ல நான். ஓல மறைகள் உரைக்கும் அனைத்தையும் கடந்தும் உள்ளும் இருக்கும் கடவுளை நம்பும் ஒரு சாதாரண மனிதன். எங்கெங்கு காணினும் சக்தியென்று நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த இறைவனைத் தமிழால் மனதால் தொழுதொழுகுகின்றவன். பல கோயில்களுக்குப் பக்தியோடு சென்று வணங்கி வருகையில் அங்கு கண்டவைகளை வைத்துச் எழுந்த விருப்பங்கள் இவை.

1. திருக்கோயிலில்களில் சாதீய பாகுபாடுகள் இன்றி விருப்பமுடைய எவரும் பூசனை செய்யும் நிலை வர வேண்டும். இதை ஏற்காமல் வழிவழி வருவது என்ற வாதம் செய்வது எடுபடாது. வழிவழி வரத்தொடங்கியது எப்பொழுதிலிருந்து என்று ஆய்ந்தால் பல இடங்களில் உண்மை தெளிவாகும்.

2. தமிழகத்தில் இறைவனைப் பூசனை செய்கையில் தமிழில் செய்வது சிறப்பாகும். வடமொழியில் அருச்சனை செய்ய விரும்பினால் அதற்கும் ஏற்பாடு செய்யலாம். தேவைப்பட்டால் கோயில்கள் அனைத்திலும் இங்கு வடமொழியிலும் அருச்சனை செய்யப்படும் என்று பலகைகளில் எழுதித் தொங்க விடலாம். அதையும் தமிழிலும் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் தொங்க விடலாம். தமிழகத்திற்கு வரும் வெளிமாநில நாட்டுக்காரர்கள் விரும்பினால் வடமொழியில் அருச்சனை செய்யலாம். வேள்விகளும் குடமுழுக்கும் தமிழிலேயே செய்யலாம்.

3. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கோயில் அருச்சகர்களவோ பூசாரிகளாகவோ வர வேண்டும். தூய்மை என்று சாக்குச் சொல்லக் கூடாது. இன்று ஆண்களும் பெண்களும் இணைந்து பல இடங்களில் வேலை செய்கிறார்கள். அங்கெல்லாம் தூய்மை கெட்டு விட்டதா! அனைத்தையும் கடந்த பரம்பொருள் இதனால் தீட்டாவார் என்று நினைப்பது அறிவீனம். பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று சொல்வதும் தகாது, அந்த சமயங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்குப் பெரிய கோயில்களில் எத்தனை அருச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் விடுப்பில் ஒன்றும் குறைந்து விடாது, அது போலத்தான் இங்கும்.

4. கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க விட வேண்டும். வீடியோ எடுக்கவும் விட வேண்டும். எல்லாம் வல்ல இறைவனை ஒரு புகைப்படமா சக்தி இழக்கச் செய்யும்? மலேசிய பத்து மலைக் கோயிலில் கருவறையின் முன்னின்று முருகப் பெருமானை படமெடுக்க விடுகிறார்கள். அற்புதமான அனுபவம் அது. நெருப்பைக் கரையான் தின்ன முடியாது என்பதை உணர வேண்டும்.

5. அனைத்து மதத்தாரையும் கோயிலுக்குள் விட வேண்டும். ஆனால் அவர்கள் வழிபடுகின்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று சொல்லலாம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். வணங்கினால்தான் இறைவன் என்றில்லை. வைதாரையும் இங்கு வாழ வைப்போன் தானே! மற்ற மதத்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதல்ல முக்கியம். நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியம்.

6. சட்டையைக் கழட்டச் சொல்லும் வழக்கம் பல கோயில்களில் உண்டு. அந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும். சட்டை போட்டுக் கொண்டும் உள்ளே செல்ல விட வேண்டும். திருச்செந்தூர் கோயிலிலும் இந்தப் பழக்கம் இப்பொழுது உண்டு. அது கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும். சட்டையைக் கழற்ற வேண்டும் என்பதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் எனக்குத் தோன்றவில்லை. அதே போல் பூசாரிகளும் அருச்சகர்களும் கூட சட்டையணிவது நல்லதே.

7. கோயிலுக்குள் சிறப்பு மரியாதை என்ற பாகுபாடு ஒழிய வேண்டும். எல்லாரும் ஒன்று என்ற நிலை இருக்க வேண்டும். அரசனானாலும் ஆண்டியானாலும் இறைவனை ஒரே வழியில்தான் தரிசிக்க வேண்டும்.

8. திருநீறோ குங்குமமோ சந்தனமோ...கையில் கிள்ளிப் போடுவதைக் காட்டிலும் தொழுகைக்கு வருகின்றவர்களே எடுத்துக்கொள்ளும் வகையில் கிண்ணத்தை நீட்டலாம். அவர்கள் தொட்டு எடுப்பதால் கோயில் தூண்களாவது தப்பிக்கும்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் குறைந்த பட்சம் மேற்கூறிய செயல்திட்டங்களோடாவது தொடங்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? உங்களது கருத்துகளையும் சொல்லுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, December 25, 2006

பொய் - விமர்சனம்

கடலை வாங்கிச் சாப்பிடும் பொழுது ஒரு சொத்தைக் கடலை தின்று விட்டு அடுத்து எந்தக் கடலையைத் தின்றாலும் அது நன்றாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்..கடைசியாகப் பார்த்த தமிழ்த் திரைப்படம் சிவப்பதிகாரம். அந்தச் சூட்டோடு பார்க்கப் போனது பொய்.

பாலச்சந்தர் படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது முன்பு. இன்று அவர் ஓய்வு பெற்ற பிறகு ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படம் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற ஆவல்தான் படத்தைப் பார்க்கத் தூண்டியது.

தொடக்கமே தமிழ் மயம். வள்ளுவனார் என்று ஒரு தமிழ்/அரசியல் தலைவர். ரொம்பவும் நல்லவர். அவருக்குக் கம்பன் என்று ஒரு மகன். அவந்தான் கதாநாயகன். எப்பொழுதும் முருகா முருகா என்று உருகும் அம்மா. அப்பாவுக்கும் மகனுக்கும் ஆகாது. லேசாக அபூர்வ ராகங்கள் வாடை. "அம்மா! இன்னைக்கு எந்தக் கடவுள் அருள் குடுப்பாரும்மா?" என்று மகன் கேட்கும் பொழுது "முருகன் குடுப்பாரு"ன்னு அம்மா சொல்லும் போது நமக்குப் புல்லரிக்குது. ஆனா அதுக்கப்புறம் வெறும் அரிப்புதான். புல்லைக் காணோம். புலியைக் காணோம் என்று ஓட வேண்டிய நிலை.

அப்பாவிடம் இருந்து கெட்ட பெயர் எடுக்காமல் இருக்க இலங்கைக்குப் போகிறார் கதாநாயகன். கொழும்பு வரவேற்கிறது. அழகான ஊர். மிகவும் அழகான ஊர். பெரிய பெரிய புத்தர் சிலைகள். இத்தனை அழகை வைத்துக் கொண்டிருக்கும் தீவில் அமைதி மட்டும் இல்லை...ம்ம்ம்ம்...சுனாமியின் சில வடுக்களைக் காட்டுகிறார்கள். நெஞ்சம் உண்மையிலேயே கனக்கிறது.

2006வது இலங்கைக்குப் போவோம் என்ற விருப்பம் பொய்யால்தான் நிறைவேறியது. அரைகுறையாய். புறப்படுகையில் பொய் சொல்லக் கூடாது என்று சொல்லி அம்மா ஒரு உண்டியலைக் கொடுக்கிறார். அந்த உண்டியலில் அவன் திரும்பி வருகையில் காசே இருக்கக் கூடாதென்று விரும்புகிறது அந்த அம்மாவின் மனம். ஆனால்..மகன் அங்கு போனதிலிருந்து பொய் பொய்யாகச் சொல்ல வேண்டிய நிலை.

அதற்குக் காரணம் அவனது புது அப்பா. தனது அடையாளத்தை மறைக்க தன்னுடைய பெயர் பாரதி என்றும் தந்தையார் திருநெல்வேலிப் பக்கம் என்றும் அவர் வாயில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் விழுமென்றும் புழுகி வைக்கிறான். அந்தத் தந்தை கற்பனையில் உண்மையாய் வருகிறார். காதலிக்கச் சொல்கிறார். அதற்கு ஐடியாக்களை அள்ளி விடுகிறார். அந்தத் தந்தையாக நெல்லை தூத்துக்குடிப் பேச்சுப் பேசி நடித்திருப்பது கே.பாலச்சந்தர். அந்தத் தந்தையும் விதியும் விளையாடும் பாம்புக்கட்ட தாயம் விளையாட்டுதான் கதாநாயகனின் காதல். கொஞ்சம் புதுமையான சிந்தனை. ரசனைக்குரிய சிந்தனையும் கூட. விதியாக வருவது பிரகாஷ்ராஜ். ஒவ்வொரு முறையும் விதி காய்களை உருட்டி புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கும் பொழுது....தந்தை பாலச்சந்தரும் காய்களை உருட்டி மகனுக்கு புதுப்புதுத் திட்டங்களை அள்ளி விடுகிறார்.

முதல் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக நம்மைக் கட்டிப் போடுவது வசனங்கள். நல்ல வசனங்கள் கூட. ஆனால் அந்த வசனங்களே பின்னால் கடையில் வாங்கிய புதுக்கத்தியாகும் பொழுது ஆப்பிளாகவும் ஆரஞ்சாகவும் நமது கழுத்து பழுக்கிறது. கதாநாயகனுக்கு ள வராது. வள்ளுவனார் என்ற தந்தையின் பெயரை வல்லுவனார் என்று உச்சரித்துத் திட்டு வாங்கிக் கொள்ளும் அவன் பின்னாளில் ள உச்சரிக்கக் கற்று ள ள ள என்று பாடும் நிலா பாலுவின் குரலில் பாடும் பொழுது...தியேட்டரில் புண்ணியம் செய்த பாதி பேர் ஏற்கனவே வெளியேறி விட்டிருந்தார்கள்.

விதி கதாநாயகியின் பள்ளிக்கூடக் காதலனைக் கொண்டு வருகிறது. அவரது கோணல் நடனங்களும் கொண்ணைப் பேச்சும்....முருகா....முருகா! அதை விடக் கொடுமை கதாநாயகனுக்கு இலங்கையில் அறிமுகமாகும் பெங்காலி நண்பன். பானர்ஜி என்று சொல்லிக் கொள்ளும் அவரிடம் கொஞ்சம் கூட பெங்காலித் தன்மை தெரியவில்லை. இந்திதான் பேசுகிறார். நமஸ்தே என்கிறார். வங்காளிகள் நமோஷ்கார் என்று வணங்குவார்கள். பெங்காலி பாரி என்று மட்டும் அவரது வீட்டுக்குப் பெயர். பாரி என்றால் வங்கத்தில் வீடு என்று பெயர். கொல்கத்தாவில் இருக்கும் காளிகோயிலுக்குக் காளிபாரி என்றுதான் பெயர். படத்தில் தேவையில்லாத பல பாத்திரங்களில் இதுவும் ஒன்று.

நளதமயந்தியில் நடித்த கீது மோகன்தாஸ் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். தேவையில்லாத இன்னொரு பாத்திரம். இவரும் காதலைப் பற்றி வசனங்கள் பேசி நம்மையும் சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்பச் சொல்லி அடம் பிடிக்கிறார். ஆனாலும் படத்தின் முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்ற நமது பொறுமை பூமாதேவியின் பொறுமையை விடப் பெரியது என்று சொல்ல எந்த ரிக்டர் ஸ்கேல் வேண்டுமோ! உல்லூக்கா பட்டா! இதுதான் அவர் வாயில் அடிக்கடி வரும் பேச்சு! அதே மாதிரி கதாநாயகி அடிக்கடி சொல்வது சம்ஜே. கே.பி...கதாநாயகிகள் இன்னமும் இப்படி எதையாவது திரும்பத் திரும்பச் சொல்வது அலுப்பாக உள்ளது.

காதலும் கல்யாணமும் பல பெண்களின் முன்னேற்றத்திற்கும் லட்சியத்துக்கும் தடையாக உள்ளது என்ற கருத்து கதாநாயகிக்கு. ஆகையால் கஷ்டப்பட்டு கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொண்ட பொழுது ஒரு வரம் கேட்கிறார். ஆம். காதலையே விட்டுக் கொடுக்கும் படி. அப்பொழுதுதான் அவரது லட்சியம் நிறைவேறுமாம். அந்த லட்சியம் என்றுவென்று இயக்குனர் நமக்குச் சொல்லியிருக்கலாம். பாவம். அவருக்கே தெரியவில்லை போலும். கதாநாயகியும் கதாநாயகனும் fine என்ற சொல்லை வைத்து பேசும் பொழுது இருகோடுகள் படத்தில் வரும் file-life வசனம் நினைவுக்கு வருகிறது. ஆனால்.....இந்தப் படத்தைப் பார்க்க வந்ததற்கு நமக்குத்தான் fine போடுவார்களோ என்று பயம் எழாமல் இல்லை.

உய்யோ! இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகிறார் ரேணுகா. இவரது பாத்திரத்தை இன்னமும் நன்றாகச் செதுக்கியிருக்கலாம். ஆனால் அதுக்கி விட்டிருக்கிறார்கள். இவரது பிளாஸ்டிக் சிரிப்புக் கணவருக்குச் சிரிப்பது ஒன்றுதான் படத்தில் வேலை. படம் முடியும் பொழுது எல்லாரும் அழுகிறார்கள். இவர் மட்டும் தொலைபேசியில் யாருடனோ பேசுகிறார். அழுது கொண்டே பேசக் கூடாதா?

மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இன்னும் பல இசையமைப்பாளர்களும் கவியரசர், வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்களும் கே.பிக்குக் காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கும் கேட்க இனிமையான பாடல்கள் அவை. ஆனால் அவைகளுக்குத் திருஷ்டிப் பரிகாரம் வேண்டாமா? வித்யாசாகர் கொடுத்திருக்கிறார். பாடல் வரிகள்...ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அம்மாவாக நடிக்கும் அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கும் மகனாக நடிக்கும் உதய்கிரணுக்கும் உள்ள அந்த பாசப் பிணைப்பு. நாடகத்தனம்தான். ஆனால் படத்தில் அது ஒன்றுதான் ஆறுதல். ஆனால் அந்த ஆறுதலும் ஆறிப் போகும்படி அவரை மாடியிலிருந்து தள்ளி விட்டுக் கொன்று விடுகிறார்கள். அதே போல படம் முடிகையில் கதாநாயகனையும் நாயகியையும் கொன்று விடுகிறார்கள். என்ன மனசய்யா உமக்கு. மரோசரித்ராவில் சரி. இன்றுமா!

மொத்தத்தில் எனக்குப் பொய் பிடிக்காது என்று சொல்லி விடுகிறேன். ஆங்....இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். படத்தில் ஆங்காங்கே வரும் தமிழ். பொய்மையும் வாய்மையிடத்தப் புரை தீர்த்த காதல் பயக்குமெனின் என்று கற்பனை அப்பா பாலச்சந்தர் சொல்லும் புதுக்குறள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரியைச் சொல்வதற்காக இந்தப் படத்தின் கதையைச் சொல்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்க நுழைவுச் சீட்டு நான் வாங்கும் பொழுது "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று புரியாமல் போனது வேதனைதான்.

"இறைவா இது நியாயமா?" இது படம் முடியும் பொழுது ஒலிக்கும் பாடல். நமது மனதுள்ளும்தான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, December 19, 2006

விடுதலை தந்த ஓவியம்

விடுதலை என்ற தலைப்பில் தேன்கூடும் தமிழோவியமும் நடத்திய போட்டியில் நீங்கள் எனக்கு...இல்லையில்லை..என்னுடைய கதைக்கு இரண்டாம் பரிசு வாங்கித் தந்தீர்கள் அல்லவா. அதற்காக தமிழோவியத்தில் சிறப்பு ஆசிரியராக இருக்கப் பணித்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில பதிப்புகளை இட்டுள்ளேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அருட்பெருங்கோவைத் தெரிந்திருக்கும் அனைவருக்கும். காதலை வாங்கி முத்தம் கொடுக்கிறவர். கவிதைப் பித்தன். அதிலும் மையல் ததும்பும் கவிதைகளை அள்ளித் தெளிக்கின்ற கவிஞர். காதற் குளியல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைக் குளியல் இங்கே.

நான் எழுதிய வலைப்பதிவுகளில் சிறந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது. அனைத்தும் எனது பூக்கள். பாகுபாடு கிடையாது. ஆகையால்தான் ஐம்பது நூறுக்கெல்லாம் பதிவு போடவில்லை. என் பிள்ளைகள் அனைவரும் எனக்கு ஒன்றுதான். ஆனாலும் படிக்கின்றவர்களின் பார்வையில் சில பதிவுகள் என்ற வகையில் சில பதிவுகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

பாரு பாரு நல்லாப் பாரு
பயாஸ்கோப்பு படத்தப் பாரு....ஆமாங்க நான் எடுத்த சில புகைப்படங்கள். உங்கோளோடு இங்கே பகிர்கிறேன்.

காதல்...மனிதனுக்கு மட்டும் வருமா? விலங்குகளுக்கும் வருமா? இங்கே ஒரு காட்டிற்கே வந்திருக்கிறதே! படித்துப் பாருங்கள். படிக்கப் படிக்க மயக்கும் என்பதற்கு உத்திரவாதம்.

அடுப்படியில் வந்திருக்க வேண்டிய குறிப்பு இது. அசைவக் குறிப்பு. பெயர் கோசணி. இங்கே கிடைக்கும். இது என்னுடைய கண்டுபிடிப்பு. என் நண்பர்கள் பலர் மெச்சிய குறிப்பு.

ஜிரா என்றால் தமிழ் இல்லாமலா? முருகன் இல்லாமலா? இதோ...திருக்குற்றாலக் குறவஞ்சி....இங்கே.

வாய்ப்பளித்த தமிழோவியத்திற்கும் தேன்கூட்டிற்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றி பல.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, December 18, 2006

நூர்ஜஹானூர்

எல்லாரும் படம் காட்டுறாங்க. நான் காட்டக் கூடாதா? இதோ...போன வாரத்துக்கு முந்துன வாரம்...அதாங்க டிசம்பர் 2ம் 3ம் நொய்டா ஆக்ரான்னு சுத்துனப்ப எடுத்த படங்கள் இங்க.

Photobucket - Video and Image Hosting
நூர்ஜஹான் தனது தந்தை தாயாரோடு தூங்குமிடம். தாஜ்மஹாலை விட மிகவும் அழகானது.

Photobucket - Video and Image Hosting
பளிங்கினால் ஒரு மாளிகை...அதில் பளிங்கினால் ஒரு பலகனி. பளிங்கைக் குடைந்து செய்திருக்கிறார்கள்.

Photobucket - Video and Image Hosting
நூர்ஜஹானோட கல்லறைக்கு உள்ளே இருந்து வெளியே எடுத்தது...

Photobucket - Video and Image Hosting
நாந்தான். ரொம்ப அமைதியா இருந்த இந்த இடம் ரொம்பப் பிடிச்சிருந்தது.

Photobucket - Video and Image Hosting
மிகச் சிறப்பான கலை வேலைப்பாடுகள். நானூறு ஆண்டுகள் பழமையானவை. வெள்ளைக்கல்லில் பலநிறக் கற்களைப் பதித்த அழகுப் படங்கள்.

Photobucket - Video and Image Hosting
அதே வேலைப்பாடுதான். ஆனால் ஒரு செடி. என்ன அழகு! இது ஓவியமல்ல. கல்லில் கல்லைப் பதித்தது.

Photobucket - Video and Image Hosting
அலுக்காமல் சலிக்காமல் இன்னொன்று

Photobucket - Video and Image Hosting
ஒளி ஓவியம்னு சொல்றாங்கள்ள...அது இதுதான். :-)

Photobucket - Video and Image Hosting
யமுனையில ஒட்டகம். இன்னொரு ஒளி ஓவியம். ஒரு காலத்தில் காதலின் சின்னமான யமுனை இப்பொழுது கூவம் போலத்தான் இருக்கிறது.

Photobucket - Video and Image Hosting
நொய்டாவில் ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் வீடு...அடடே! அரண்மனை. இவரு ஆக்ராவுக்கு அடிக்கடி போயிருப்பாரு போல. எல்லாம் பளிங்குக் கல்லாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, December 07, 2006

04. புதுக்கிராமம்

முந்தைய பதிவு

தூத்துக்குடியில புதுக்கிராமம்னு சொன்னா எத்தன பேருக்குத் தெரியுமோ இல்லையோ New Colonyன்னு சொன்னா பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். பழைய பஸ்டாண்டுக்கு ரொம்பப் பக்கம். மொத்தத்துல ஊருக்கு நடுவுல இருக்குற இருக்குற ஒரு தெரு. அந்தத் தெருவுக்குப் பக்கத்துல இருக்குறது சுப்பையா வித்யாலயப் பள்ளிக்கூடங்க இருக்கு. பள்ளிக்கூடங்கன்ன...மூனு பள்ளிக்கூட்டம் அந்த எடத்துல இருக்கு. ஒன்னு பெண்களுக்கானது. இன்னொன்னு ஆண்களுக்கானது. இன்னொன்னு சின்னப் பசங்களுக்கானது.

இதுல பொண்ணுங்க பள்ளிக்கூடம் மட்டும் இப்பவும் நல்லா போய்க்கிட்டு இருக்கு. அதுல அப்ப பேபி கிளாஸ் இருந்துச்சு. சின்னப்பசங்களுக்கு bun fun runன்னு சொல்லிக் குடுக்குற எடம். அதுக்கு நான் தெனமும் ரிச்சாவுல போயிட்டிருந்தேன். காலைல கொஞ்சம் படிப்பு. சாப்பாடு. அப்புறம் தூக்கம். மாலையில் உடற்பயிற்சி. அப்புறம் வீட்டுக்குப் போயிர வேண்டியதுதான். ஒரு நாள் வழக்கமா வர்ர ரிச்சா வரலை. சண்முகவேல்னு ஒரு ரிச்சாக்காரர் இருந்தாரு. அவருதான் அப்பக் குடும்ப ரிச்சாக்காரர். அவரக் கூப்புட்டு அத்த சுப்பையா வித்யாலயத்துல என்னைய எறக்கி விடச் சொன்னாங்க. அவரும் எறக்கி விட்டாரு. ஆனா சாந்தரமா வழக்கமா வர்ர ரிச்சாவுல நான் வீட்டுக்கு வரலை. கேட்டா நான் பள்ளிக்கூடத்துலயே இல்லைன்னு ரிச்சாக்காரர் சொல்லீட்டாரு. அத்த பதறியடிச்சிக்கிட்டு சண்முகவேல் கிட்ட ஓடீருக்காங்க. அவரும் பள்ளிக்கூடத்துலதான் விட்டேன்னு அழுத்திச் சொல்லவும் ரிச்சாவ பள்ளிக்கூடத்துக்கு விடச் சொன்னாங்க.

சண்முகவேல் ரிச்சாவ சின்னப்பசங்க பள்ளிக்கூடத்துக்குக் கூட்டீட்டுப் போயிருக்காரு. அங்க என்னைய யாருன்னு தெரியாம கண்டுபிடிக்க முடியாம...விழாமேடைல ஏத்தி உக்கார வெச்சிருந்திருக்காங்க. நானும் பேசாம டிபன் பாக்ஸ்ல இருந்ததச் சாப்பிட்டு ஜம்முன்னு தூங்கி எந்திரிச்சி முழிச்சிக்கிட்டு உக்காந்திருக்கேன். அப்பத்தான் அத்தைக்கு உயிரே திரும்ப வந்திருக்கு. பொம்பளப் பிள்ளைங்க பள்ளிக்கூடத்துல பேபி கிளாஸ் இருக்குன்னு சண்முகவேலுக்குத் தெரியலை. இப்ப அந்த பேபி கிளாஸ் இல்ல.
Photobucket - Video and Image Hosting
இப்படியெல்லாம் நடந்த புதுக்கிராமம் முக்குதான் புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். புதுக்கிராமத்துல ரெண்டு பஸ்ஸ்டாப். ஒன்னு பெருமாள் கோயில் ஸ்டாப். அடுத்தது புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். பெருமாள் கோயிலு வீட்டுப் பக்கத்துல. அதுல பஸ் ஏறி சேவியர்ஸ் பள்ளிக்கூடம் போகனும். நாப்பது காசு டிக்கெட்டு. ஆனா புத்துக்கிராம முக்குக்குப் போனா முப்பது காசுதான். பத்துகாசு மிச்சம் பிடிக்க முக்கு வரைக்கும் நடந்து போவேன். அப்ப 3A பஸ்சும் கட்டபொம்மன் பஸ்சுந்தான் வரும். 3A தனியார் பஸ். கட்டபொம்மன் செவப்பு பஸ்சு.

அந்த பஸ்ஸ்டாப்புலதான் ராதாக்காவும் ஏறுவாங்க. எனக்கு கணக்குப் பாடம் ஒழுங்கா வரலைன்னு அவங்க சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க வீட்டுல இருந்து நைட்டு கெளம்புறப்போ மணி பாக்கச் சொன்னாங்க. எனக்கு நின்ன எடத்துல இருந்து கண்ணு சரியாத் தெரியலை. ஆனாலும் தெரியலைன்னு சொல்லக் கூடாதுன்னு என்னவோ ஒளறுனேன். ஒடனே அவங்க என்னைய இன்னமும் ரெண்டு மூனு படிக்கச் சொன்னாங்க. அப்புறம் என்னோட கண்ணுல பவர் இருக்கு...அதுனாலதான் ஒழுங்கா படிக்க முடியலைன்னு சொன்னாங்க. நம்மதான் அறிவாளியாச்சே. பவர் இருந்தா நல்லா தெரியனுமேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்டேன்.

இப்படியெல்லாம் கேக்குற அறிவைக் குடுத்த புதுக்கிராமத்துல பையத் தூக்கீட்டு நடக்குறப்போ மொதல்ல கண்ணுல பட்டது சிவசாமி கடை. அந்தக் கடையில ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டான டீச்சராம். அவங்களப் பாத்தாலே பயங்க பயப்படுவாங்களாம். எனக்கும் பயம்தான். கடையில இருந்த பலகைல என்னைய அத்த ஏத்தி உக்கார வெச்சிருந்தாங்க. அப்ப அந்த ஆண்டாள் டீச்சரும் கடைக்கு வந்து, "என்ன ராகவா எப்படியிருக்க"ன்னு கேட்டாங்க. எனக்கு என்ன தோணுச்சோ தெரியலை....பட்டுன்னு அவங்க கன்னத்துல அடிச்சிட்டேன். அவங்களுக்குக் கண்டிப்பா அதிர்ச்சியாத்தான் இருந்திருக்கனும். ஆனா காட்டிக்கலை. நல்லவேளை அத்தை அதுக்குக் கோவிச்சுக்கலை.

எங்களுக்கு சொந்தமில்லைன்னாலும் வேண்டப்பட்டவங்க அந்தத் தெருவுல இருந்தாங்க. அவங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் அடிக்கடி பண்டமாற்று நடக்கும். நாந்தான் தூதுவர். எப்படிப் போவேன் தெரியுமா? வீட்டுக்குப் கொஞ்சம் பக்கத்துலயே பிள்ளையார் கோயில். அப்புறம் தள்ளிப் போனா எண்ணக் கட. அங்கிருந்து கொஞ்ச தூரத்துல அவங்க வீடு. நான் வீட்டிலிருந்து பிள்ளையார் கோயில் வரைக்கும் மெதுவாப் போவேன். பிள்ளையார் கோயில்ல இருந்து எண்ணக் கட வரைக்கும் நடுத்தர வேகம். எண்ணக் கடையில இருந்து அவங்க வீடு வரைக்கும் படுவேகம். ஏன் தெரியுமா?

அப்பல்லாம் தூத்துக்குடியில இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னைக்குப் போகும். தூத்துக்குடியிலிருந்து கரி எஞ்சின். மணியாச்சி வரைக்கும். அங்க தூத்துக்குடி பெட்டிகளையும் திருநவேலி பெட்டிகளையும் இணைச்சு டீசல் எஞ்சின் போடுவாங்க. அடுத்து விழுப்புரத்துல மின்சார எஞ்சின் மாத்துவாங்க. சென்னை வரைக்கும் அது சர்ர்ர்ருன்னு ஓடும். இதத்தாங்க நான் அவங்க வீட்டுக்குப் போறப்பச் செய்றது. திரும்பி வரும் போது...போனதுக்கு நேர்மாறா வருவேன். மொதல்ல வேகம். அப்புறம் நடுத்தரம். அப்புறம் மெதுவா!

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, November 30, 2006

ராகவன் நிறுத்திய தேர்தல்

பெரிய இரும்புக் கதவுக்கு முன்னாடி ரொம்பப் பேரு கூட்டமா இருந்தாங்க. சன், ஜெயா, விஜய், ராஜ் அது இதுன்னூ ஊர்ப்பட்ட டீவிக்காரங்க கூட்டம் வேற. ஆனா இரும்புக் கதவு மூடியிருக்கு. அதுக்குப் போலீஸ் காவல் வேற. அப்பத்தான் ராகவனோட கார் வருது. சர்ருன்னு பின்னாடியே ரெண்டு காருக. ஒடனே இரும்புக் கதவு தெறக்குது. ஆனா வந்த மூனு காருகளத் தவிர வேற யாரும் உள்ள நொழைய முடியலை. காருங்க உள்ள போனதும் கதவு மூடிருது.

காருக்குள்ள இருந்து இறங்குனது ராகவந்தான். உருண்ட மொகம். மொட்டைத்(அல்லது சொட்டை) தலை. கண்ணாடி வேற. கார்ல இருந்து எறங்கி விடுவிடுன்னு உள்ள போறாரு. போனவரு உள்ள ஏற்கனவே இருந்தவங்களையெல்லாம் கூட்டி வெச்சித் தேர்தலைத் தள்ளி வெச்சிட்டதா சொல்றாரு.

ஏனாம்? தேர்தல்ல கலந்து கிட்ட வேட்பாளர்கள்ள கிட்டத்தட்ட எல்லாக் கட்சீல இருந்தும் பலர் கொலயாயிருக்காங்களே! அமைச்சர் உட்பட. அப்புறம் எப்படித் தேர்தலை நடத்துறதாம்?

என்ன படிக்கிறவங்களுக்குக் கிறுகிறுங்குதா? எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சி உப்புப் போட்டு சோடா ஊத்தி பௌன்ஸ் குடிக்கனும் போல இருக்கா? இதப் படிக்கிற ஒங்களுக்கே இப்படியிருக்குன்னா...படத்தப் பாத்த எனக்கு எப்படி இருக்கும்! அதாங்க சிவப்பதிகாரம் படந்தான். அதுல இப்பல்லாம் படத்துல முக்கிய பாத்திரங்களுக்கு ராகவன்னு பேரு வெக்கிறது ஒரு ஃபாஷன் போல. இந்தப் படத்துல தேர்தல் ஆணையருக்குப் பேரு ராகவன். அவரு முக்கியப் பாத்திரமோ இல்லையோ...படத்தப் பாத்து எழுந்திரிச்சி ஓட முடியாம முக்கியப் பாத்திரம் நானு.

படத்தப் பாத்துட்டு "ஏதாவது செய்யனும்னு" முடிவோடதான் இந்தப் பதிவைப் போடுறேன். ஏன்னா கதாநாயகரு ஏதாவது செய்யனும்னு சொல்லித்தான் படத்த முடிச்சி வெக்கிறாரு.அதுல பாருங்க இந்தக் கதாநாயகருதான் அத்தன பேரையும் கொன்னது. அதுலயும் எல்லாரும் இருக்குற எடத்துல கையில கத்திய தெளிவாக் காட்டிக்கிட்டே போயி....."கொலை வாளினை எடடா"ன்னு பாவேந்தர் பாட்டோட பின்னணியில ஒவ்வொருத்தரையா குத்திக் கொல செஞ்சிட்டு...நின்னு நிதானமா...சாவகாசமா நடந்து போய் தப்பிக்கிறாராம். அதுவும் ஒன்னு ரெண்டு இல்ல...கிட்டத்தட்ட அறுவதுக்கும் மேல.

ஏன் எதுக்குங்குறதுதான் கதை. ஆனா அதச் சொன்ன விதம் இருக்குதே...நமக்கே "கொலை வாளினை எடடா"ன்னு தோணும். அந்த அளவுக்குச் செஞ்சிருக்காங்க. அதுலயும் பாரதிதாசனோட அந்தப் பாட்டுக்கு இசையமைச்ச விதம் இருக்குதே...அடடா! அதப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டுத்தான் அப்பவே அவரு "கொலை வாளினை எடடா"ன்னு எழுதீட்டாரோ என்னவோ. பாவேந்தரோட பாட்டுகள் திரைப்படத்துல இவ்வளவு மோசமா இசையமைக்கப்பட்டது இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன். துன்பம் நேர்கையில் பாட்டு இத்தன வருசத்துக்கு அப்புறமும் கேக்க எவ்வளவு இனிமையா இருக்கு. மெல்லிசை மன்னர் இசையமைச்ச "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாட்டு. அப்புறம் கலங்கரை விளக்கத்துல வருமே "சங்கே முழங்கு சங்கே முழங்கு"ன்னு மெல்லிசை மன்னர் இசையில சீர்காழியும் இசையரசி பி.சுசீலாவும் பாடுவாங்களே. அப்புறம் சங்கர்-கணேஷ் கூட "சித்திரச் சோலைகளை உம்மை இங்கு திருத்த இப்பாரினிலே எத்தனை எத்தனை வீரர்கள் இரத்தம் சொரிந்தனரோ"ன்னு அருமையாத்தாங்க போட்டிருந்தாரு. வித்யாசாகருதான்.......சிவப்பதிகாரத்துல இப்பிடி.....ஏன் வித்யாசாகர்? பாட்டு புரியலையா? காதிலா வரிகளே விழாத அளவுக்கு இரைச்சல்.

சரி. இந்தப் பாட்டுதான் இப்பிடி. மத்த பாட்டுங்க? படத்தோட மொதப் பாதியில ரகுவரன் அவரோட பட்டிக்காட்டுக்கு வர்ராரு. அவரோட நாட்டுப்புறப் பாட்டு ஆய்வுக்கு உதவுற மாதிரி விஷாலும் அந்த ஊருக்கு வர்ராரு. அப்ப ரகுவரனோட மகளுக்கு விஷால் மேல காதல் வருது. இதுதாங்க இடைவேளை வரைக்கும் நடக்குது. அதுவே இழு இழுன்னு இழுத்ததுன்னா...பாட்டுங்க அழு அழுன்னு அழுத்துதுங்க. வெங்கலத் தொண்டை, பாரித் தொண்டை, கீரித் தொண்டை, வெள்ளித் தொண்டைன்னு ஒவ்வொரு தொண்டையும் விளக்குறப்போ நமக்கே தொண்டத் தண்ணி வத்திப் போகுது. உள்ளபடி சொன்னா நல்லா செஞ்சிருக்க வேண்டிய காட்சி அது.

அப்புறம் அறுவடைக்கு ஒரு பாட்டு. டி.கே.கலா குரல்ல தொடங்குது. உண்மையிலே நல்ல குரல். நாட்டுப் பாட்டுக்குப் பொருத்தமான பிருகாக் குரலு. ரகுமான் கூட இவர "குளிச்சா குத்தாலம்", "எதுக்குப் பொண்டாட்டி", "செங்காத்தே"ன்னு நாலஞ்சு பாட்டுக்கும் மேலையே குடுத்திருக்காரு. "போய் வா நதியலையே", "தாயிற் சிறந்த கோயிலுமில்லை"ன்னு பழைய பாட்டெல்லாம் பாடியிருக்காரு. அப்படி அனுபவமுள்ள பாடகர வெச்சிப் பாட வெச்சும் அந்தப் பாட்டு கேக்க முடியலைங்குறதுதான் ரொம்ப வருத்தம். அத விட ஒரு கரகாட்டப் பாட்டு இருக்குதப்பா....ஷர்மிலியும் இன்னொரு பொண்ணும் சேந்து ஆடுறாங்க....பாத்தா கிளுகிளுப்பு வரலை...பயந்தான் வந்தது. வித்யாசாகர் பட்டிக்காட்டுப் பாட்டுன்னா அவ்வளவு லேசாப் போச்சு ஒங்களுக்கு. டைரக்டர் கரு.பழநியப்பன் அவர்களே...உங்களுக்குந்தான்.

ரெண்டு மூனு காதல் பாட்டுகள் வேற. சில்மிஷியேன்னு ஒரு பாட்டு. பா.விஜய்தான் இத எழுதீருக்கனும். கேக்க ஓரளவுக்குச் சுமாரா இருந்துச்சு. ஆனா பாக்க. ம்ம்ம்...அற்றைத் திங்கள் வானத்துலன்னு ஒரு பாட்டு. அதாவது தேன் இருப்பது தேன் கூட்டிலே...பால் இருப்பது பசுமடியிலேன்னு அடுக்கிக்கிட்டே போறாரு. அற்றைத் திங்கள்னா அன்றைய நிலா. அன்றைய நிலா வானத்திலேன்னா..இன்றைய நிலா எங்கேன்னு தெரியலை! கவிஞர்களே உங்களத் திட்டுறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. கொஞ்சம் புதுமையா சிந்திங்க. இல்லைன்னா பழைய பாட்டுகளப் போல எழுதீருங்க. ஏன்னா ஒங்களை விட நல்லா எழுதுறவங்கள பல தமிழ் மன்றங்கள்ளையும் வலைப்பூக்கள்ளயும் சந்திச்சிருக்கேன்.

கதாநாயகரு விஷாலு. நாலாவது படமாம். ஆனா வாயில தமிழ் விலையாடுது. காதுக்குள்ள கோணூசி போகாத குறைய தீர்த்து வைக்குறாரு. அது சரி...தமிழர்களே தமிள் நல்லாப் பேசும் போது இவரு தமில் பேசலாம். தப்பில்லை. நடிப்பு....மொறச்சு மட்டுந்தான் பாக்கத் தெரியும்னு நெனைக்கிறேன். மத்தவங்க என்ன சொல்றாங்களோ தெரியலையே.

என்னடா படத்தப் பத்தி இப்பிடி சொல்லிக் கிட்டே போறானே...நல்லதே இல்லையான்னு கேக்குறீங்களா? இருக்குங்க. ரெண்டு இருக்கு. கஞ்சா கருப்பும் கதாநாயகியும். ரெண்டு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா ரெண்டு பேருக்கும் நடிப்புக்கு வாய்ப்பே இல்லை. இவங்க ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து நல்ல படங்கள் கிடைக்க வாழ்த்துகள்.

இந்தப் படத்துக்குப் போகனும்னு ஒரு நண்பர் கூப்பிட்டப்போ சிலப்பதிகாரம்னு என்னோட காதுல விழுந்தது. அதெல்லாம் எடுக்க மாட்டாங்களேன்னு நெனச்சப்போ சிவப்பதிகாரம்னு அவரு திருத்தினாரு. சிவப்பான அதிகாரமாம். படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!

Wednesday, November 22, 2006

பிச்சாலஜி அல்லது பவதி பிச்சாந் தேவி

நான் காலைல வந்த டைம்ஸ் ஆஃப் இண்டியாவைப் பாத்துக்கிட்டிருந்தேன். அதுல வந்த ஒரு செய்தி ரொம்பவும் ஆச்சரியமா இருந்ததால சொல்லலாம்னு மயிலாரக் கூப்பிட்டேன். "மயிலாரே....ஒரு சேதி தெரியுமா?"

"ஓ தெரியுமே!" எந்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இல்லாம பதில் வருது. எனக்குன்னா கடுப்பு. விட்டுற முடியுமா?

"என்ன தெரியுமே! நான் என்ன சொல்லப் போறேன்னு ஒங்களுக்குத் தெரியுமோ?"

"தெரியுந் தெரியும். பிச்சாலஜி பத்தித்தான சொல்லப் போற"

அடடா! இவருக்கு எல்லாம் தெரிஞ்சி போகுது. அது சரி..எனக்கு முன்னாடியே பேப்பரப் படிச்சிருப்பாரு.

"அப்ப ராகவா! நீ யாரு? எந்த ஊரு? இப்ப என்ன நெனைக்கிற...எப்பப்ப எப்படியெப்படி முழிய மாத்துவங்குறதெல்லாம் தெரியும். அதுனால நேரடியா வழிக்கு வா! எனக்கு விவரம் தெரியும்னாலும் ஒன்னோட வாயல சொல்லு! ரொம்ப இழுத்து அறுக்காம...சுருக்கமா தெளிவாச் சொல்லனும். புரிஞ்சதா?"

இனி என்னதான் செய்ய முடியும். நானும் தொடங்குனேன். "இந்த பிச்சாலஜி (bitchology) ரொம்பப் புதுமையா இருக்கே. ரஷ்யாவுல அதுக்குப் பள்ளிக்கூடமெல்லாம் தொடங்கீருக்காங்களாமே!"

"ஆமாமா...இப்பப் பொண்ணுங்க தங்களுக்கு சூரியா மாதிரி ஆரியா மாதிரி வாழ்க்கைத் துணை வேணும்னு நெனைக்கிறாங்கள்ள. அப்படி நினைக்கிறப்போ...நெனச்ச மாதிரி உள்ளவங்களையே பார்க்கவோ பழகவோ நேர்ந்ததுன்னா.....அப்ப அவங்களோட ஈடுபாட்டத் தன் மேல கொண்டு வர்ரதுங்குறதுதான் பிச்சாலஜி (bitchology). சிலருக்கு அது தானா வருது. சிலருக்குத் தெரியிறதில்ல. அப்படித் தெரியாதவங்களுக்குத்தான் இந்தப் பள்ளிக்கூடம்."

"ஆமாம் மயிலாரே. பேப்பருலயும் அப்படித்தான் போட்டிருக்கு. ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். அதுனால இருக்குற நல்ல பசங்கள எப்படிக் கவர்ந்து அவங்களை தங்களையே கலியாணம் செய்ய வெக்கிறதுன்னு அந்தப் பள்ளிக்கூடத்துல சொல்லித் தர்ராங்களாம்.

விளாடிமிர் ரக்கோவ்ஸ்கி(Vladimir Rakovsky)ங்குறவரும் அவரோட மனைவியான யெவ்ஜெனியா(yevjenia)வும் இந்தப் பள்ளிக்கூடத்த தொடங்கீருக்காங்களாம். இவங்க பேரச் சொல்லும் போதே வாய்க்குள்ள வெண்ணெய்ய திணிச்சாப்புல இருக்குதே!"

மயிலார் சொய்ங்குன்னு பறந்து வந்து பக்கத்துல உக்காந்தாரு. "அடுத்து நானே சொல்றேன். வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டுந்தான் வகுப்பு. அதுவும் இரவுப் பாடசாலைதான். இதுனால ரொம்பப் பேரு பலனடைஞ்சிருக்காங்க."

"நீங்க சொல்றதப் பாத்தா ஒங்க மேலேயே எனக்குச் சந்தேகமா இருக்கு. மயிலாருக்குத்தான் பாஸ்போர்ட்டு விசாவே தேவையில்லையே. ராத்திரியோட ராத்திரியா ரஷ்யாவுக்கு ஷண்ட்டிங் அடிக்கிறீங்களா" எனக்கு இவரு மேல சந்தேகந்தான் எப்பவும். சடசடன்னு றெக்கைய அடிச்சிக்கிறாரு. உண்மையச் சொன்னா ஒடம்பு சிலுக்குது போல.

"இந்தப் பள்ளிக்கூடத்தைப் பத்தி யாரும் தப்பாச் சொல்லக் கூடாதுன்னு விளாடிமிர் சொல்றாரு. ஆண்களைக் கவர்ரது எப்படீங்குறதுல உள்ள புத்தம்புதிய பல வழிமுறைகளை அவங்க சொல்லித் தர்ராங்களாம். இந்த விவரங்கள் தெரியாம பெண்கள் வீணாகப் போயி தொந்தியும் தொப்பையுமா உள்ளவங்களொட வாழ வேண்டி வந்துருமேன்னு வருத்தப்பட்டுதான் இந்த மாதிரி பள்ளிக்கூடம் இருக்குதாம்.

அதுவுமில்லாம ஒரு பெண் சிறந்த பிச்சாகுறதுக்கு (bitch) மிகுந்த தன்னம்பிக்கையும், நடத்தையும் அறிவும் வேணுமாம். ஒரு ஸ்மார்ட்டான பொண்ணுதான் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையானதப் பெற முடியுமாம்."

சொல்லீட்டு எங்கயோ கெளம்புனாரு. "எங்க போறீங்க?"

"போகும் போதே கேட்டுட்டியா? சரி. இதெல்லாம் நமக்கு ஒன்னும் பண்ண முடியாது. சரி. சொல்றேன். கேட்டுக்கோ. ரஷ்யாவுல இந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சவங்களுக்கு தேர்வு வெப்பாங்கள்ள...அதுல தியரி முடிஞ்சதாம். பிராக்டிகர் பரிச்சைக்கு நான் தேர்வாளராப் போகனும். அவ்வளவுதான்...வரட்டா?"

ஆகா...இவரு மேல சந்தேகப் பட்டது சரியாத்தான் இருக்கும் போல. நல்லாயிருந்தாச் சரிதான். ரஷ்யாவுல என்னவெல்லாம் நடக்குது. நம்மூர்லயும் ரெண்டு பள்ளிக்கூடம் இருந்தா எவ்வளவு வசதியா இருக்கும்.

"என்ன முனுமுனுக்குற?"

"ஒன்னுமில்லைய்யா...பொம்பளப் புள்ளைகளுக்கு எத்தனையெத்தனையோ பள்ளிக்கூடங்க...ஆம்பளப் பசங்களுக்கும் அப்படியே........................"

(மக்களே...செய்தியை இந்தச் சுட்டியில் படித்துக் கொள்ளுங்கள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, November 15, 2006

சீனியம்மா - வடக்க சூலம்

அகத்திக்கீடைய ஆஞ்சிக்கிட்டிருந்தா சீனியம்மா. அப்பப் பாத்துப் பக்கத்துல உக்காந்தான் அழகரு. அழகுப் பேரன். ஐயனாரு கோயிலு பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கான். கொளக்கட்டாங்குறிச்சிச் தலக்கட்டுக எல்லாம் வரி வாங்கி பெரிய ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. பெரிய கம்மாய் பக்கத்துல இருக்குற ஐயனாரு கோயில்லதான் கொடை. ரொம்ப காலமா நடக்காம இருந்து இந்த வாட்டி நடக்குது. அதுக்குத்தான் ஊருல இருந்து வந்திருக்கான் அழகரு.

"ஐயாளம்மா, அகத்திக்கீரையோட அரட்டையா?" கிண்டலாத்தாங் கேட்டான். சீனியம்மா விடுமா? "ஆமாய்யா...ஆஞ்ச கீர போட்டுத்தான் காஞ்ச பயகளத் தேத்தனுன்னா அரட்டைன்னு பாக்க முடியுமா? செரட்டைன்னு பாக்க முடியுமா?"

வழிஞ்சான். பின்ன. வேலைக்குப் போன எடத்துல கண்டதத் தின்னு காஞ்சி போயில்ல வந்திருக்கான். அப்பிடியே பேச்ச மாத்துனான். "சரி. ஊரு கூப்புட யாரு போறது? செவலார்பட்டிக்கு ஆரு போறா? இப்பயே சொல்லி விட்டாத்தான பொழுது சாய வருவாக."

செவலார்பட்டிலதான் சீனியம்மா கூடப்பொறந்த கெங்கம்மாளக் குடுத்திருக்கு. அந்தம்மாவுக்கும் புள்ள குட்டீன்னு குடும்பம் பெருசு. சம்பந்தங்காரங்க பங்காளிகன்னு பெரிய வீடு. ஊர்ப் பொங்கலுன்னா சொல்லியனுப்பனுமா இல்லையா? அதத்தான் அழகரு கேக்கான்.

"அப்பெல்லாம் நானே ரெண்டு எட்டுல செவலாருபட்டி போயிருவேன். இல்லைன்னா...வண்டி கெட்டுனா...நானே பத்திக்கிட்டு நெம்மேனி வரைக்கும் போயிருவேன். சூலங் கீலமுன்னு பாக்க மாட்டேன். இப்ப எங்க? அதான் மோட்டார் சைக்குளு இருக்கு. எளவட்டங்க படக்குன்னு போயிட்டு வந்துர்ரீக." பழைய கதைய நெனச்சு அலுத்துக்கிட்டா சீனியம்மா.

"அதென்னம்மா சூலம்? அத ஏன் பாக்கீக? வெவரஞ் சொல்லுங்களேன்"னு கேட்டான். இவனுக்கு ஒரு மண்ணுந் தெரியாது. ஊருக்குள்ள இருந்து கிருந்து படிச்சிருந்தா என்னைக்கு எங்க சூலம்னு தெரிஞ்சிருக்கும்.

"என்ன அழகரு! இப்பிடிக் கேட்டுட்ட. அப்பெல்லாஞ் சூலம் பாக்காம ஒரு எட்டு வெக்க மாட்டோமுல்ல. இந்த கெழமைக்கு எந்தப் பக்கஞ் சூலமுன்னு இருக்கு. அத மீறிப் போக முடியுமா? போனாலுஞ் சூலஞ் சும்மா விடுமால? ஆனா எந்தச் சூலமும் என்னய ஒன்னுஞ் செஞ்சிக்கிற முடியாது. நாஞ் சூலத்துக்கே சூலம்." சொல்லைலயே சீனியம்மாளுக்குப் பெருமிதந்தான்.

"அட! என்ன இந்தப் போடு! அதென்ன கத? அதையுஞ் சொல்லுங்களேங் கேக்கேன்."

"ம்ம்ம்....ஒனக்குச் சொல்லாமலாய்யா. கண்டிப்பாச் சொல்றேன்." பேரங் கேட்டதும் ஒத்துக்கிட்டா. "அப்ப எனக்கும் ஒன்னோட ஐயாளய்யாவுக்கும் முடிச்சி ஒரு மூனு வருசம் இருக்கும். ஒங்கப்பாவுக்கு ரெண்டு வயசு. அப்ப செவலார்பட்டியில ஒன்னோட சின்னப்பாட்டிக்குப் பேறுகாலம். எங்கம்மா இல்ல. நாந்தான் அக்கா. காலைல பாத்து சேதி வந்திருச்சு. இடுப்பு வலின்னு. நடந்தா நேரம் ஆகுமுன்னு சடக்குன்னு வண்டியப் போட்டுக்கிட்டுத் தனியாப் பொறப்பட்டேன். அவரு வயலுக்குப் போகனுமில்ல.

அன்னைக்கு சூலம் எந்தப் பக்கமுன்னு பாக்கல. வடக்க சூலமாம். நாந் தெரியாம ஒன்னோட ஐயாளய்யா கிட்ட சொல்லிக்கிட்டு வண்டியப் பத்துனேன். வடக்கதான போகனும். பெரிய கம்மா தாண்டி ஊர்க்கெணறு தாண்டிப் போறேன். அப்ப வந்து நிக்குதய்யா. கருகருன்னு நெடுநெடுன்னு. சூலந்தான். முண்டக்கட்டையா நிக்கி. பாக்கவே திக்குன்னு இருக்கு. ஒத்தப் பொம்பள என்ன செய்ய முடியும். பதட்டந்தான். சூலமோ கண்ணாமுழி ரெண்டையும் உருட்டி உருட்டி முழிச்சி என்னையப் பாக்குது.

அங்கன ஒரு காக்கா குருவி கூட இல்ல. நாயக் கூடக் காணோம். சூலம் இருக்குறப்ப வருமா? நாந்தான் போயி மாட்டிக்கிட்டேன்.

சூலம் வாயத் தொறந்து, "இன்னைக்கு வடக்க சூலம்னு தெரியாதா? ஏன் வந்த? ஒன்னய என்னமுஞ் செஞ்சிர வேண்டியதுதான்"னு மெரட்டுச்சு. உர்ர்ர்ர்ர்ருன்னு உறுமல் வேற. பாதகத்தி நானு. ரெண்டு வேப்பிலையாவது போட்டுக்கிட்டு வந்திருக்கக் கூடாது. ஆனாலும் விடல. "ஐயா! தெரியாம செஞ்சிட்டேன். கூடப் பொறந்தவளுக்குப் பேறுகாலம். அக்கான்னு ஒத்தையா நாந்தான். அதான் பொழுது கெழம பாக்காமப் பொறப்புட்டேன்"னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கு சூலம்.

திரும்பத் திரும்ப "இன்னைக்கு வடக்க சூலம். வடக்க சூலம்"ங்கு. நானும் பாத்தேன். நேரமாகுதேன்னு கடுப்பு வேற. எரிச்சல்ல, "யெய்யா....வடக்க சூலமுன்னு வடக்க பாக்க நிக்க வேண்டியதுதான? ஏன் இப்பிடி தெக்க ஆட்டிக்கிட்டு நிக்கீரு? ஒமக்கே மூள கொழம்பீருச்சா"ன்னேன்.

சூலமுங் கொழம்பீருச்சு. வடக்க சூலமுன்னா வடக்க பாக்கனுமா தெக்க பாக்கனுமான்னு அதுக்கே ஒரு சந்தேகம். அதான் சாக்குன்னு கூடக் கொஞ்சம் பேசிக் கொழப்பிச் சூலத்த வடக்கப் பாத்து நிக்க வெச்சிட்டு நாஞ் செவலார்பட்டிக்குப் போயிட்டேன். பேறுகாலமுஞ் சரியா நடந்து முருகம் புண்ணியத்துல கதிரேசு பொறந்தான். நாலஞ்சு நாளு இருந்துட்டு திரும்பப் பொறப்பட்டேன்.

அன்னைக்கு பாத்து வடக்க சூலமாம். குளக்கட்டாங்குறிச்சி தெக்குலதான இருக்குன்னு யாரும் கண்டுக்கல. எனக்கும் நெனப்பில்லை. ஊருக்குத் திரும்ப வந்தாத்தான சீருக்குச் செய்ய முடியுமுன்னு வண்டீல ஏறி வந்தேன். வந்தா வடக்க பாத்து நிக்குது சூலம். என்னையப் பாத்ததும் அடையாளந் தெரிஞ்சிக்கிறிச்சி சூலத்துக்கு.

"இன்னைக்கு வடக்க சூலம். அதான் வடக்க பாத்து நிக்கேன். வசமா மாட்டிக்கிட்டியா"ன்னு கும்மரிச்சம் போடுது. எனக்குக் கலங்கிப் போச்சு. கையுங் காலும் ஓடல. மாடுகளும் படபடங்குதுக.

அப்பச் சொல்லுச்சு சூலம். "இங்க பாரு பிள்ள. இன்னைக்கு வடக்க சூலம். ஒன்னுஞ் செஞ்சிராம இருக்கனுமுன்னா ஒழுங்காத் திரும்பப் போயிரு. இல்லையின்னா ஒனக்குச் சூலம் பொறக்க வெச்சிருவேன்"னு மெரட்டுச்சு.

நானும், "யெய்யா! என்னமுஞ் செஞ்சிராதீக. நாந் திரும்பியே போயிர்ரேன். நீங்க விட்டுருங்க"ன்னு கெஞ்சுனேன். சூலமும் ஒத்துக்கிருச்சு. நானும் வண்டியில திரும்பி உக்காந்துக்கிட்டு மாட்டக் கொளக்கட்டாங்குறிச்சிக்கே பத்துனேன்.

சூலத்துக்கு ஆங்காரங் கூடி, "ஏய்......திரும்பிப் போறேன்னு இங்குட்டே போறயே...என்ன திமிரு...ஒன்னய.."ன்னு பாஞ்சு வந்துச்சு.

இப்ப நானும் சுதாரிச்சிக்கிட்டேன். "இந்தா! ரொம்ப மெரட்டாதீரும். திரும்பிப் போகச் சொன்னீருன்னுதான திரும்பிப் போறேன். நேராவா போறேன். அப்புறம் எதுக்கு இந்தப் பாடு"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன்.

சூலந் தெகச்சிப் போச்சி. காச்சு மூச்சுன்னு கத்துச்சு. ஆனா என்னைய ஒன்னுஞ் செய்ய முடியல. சொன்ன வாக்கு மாற முடியுமா? நானும் இதுதாஞ் சமயமுன்னு வண்டியப் பத்திக்கிட்டு வந்துட்டேன். இதாய்யா நடந்துச்சு.

மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டிருந்த அழகரு இப்பக் கேக்கான். "ஐயாளம்மா.....மீறிப் போனா சூலம் பொறக்க வெப்பேன்னு மெரட்டுச்சே சூலம்...இதே ஆம்பிளையா இருந்தா என்ன செஞ்சிருக்கும்?"

"அட....அதுவும் ஒரு கததான். பன்னீரு கத அப்பிடித்தான் ஆச்சு."

"அதென்ன...சொல்லுங்க" கத கேக்குற ஆவல்ல கேக்கான் அழகரு.

ஆனா சீனியம்மா விடல. "மொதல்ல குளிஞ்சிட்டு செஞ்சிட்டுச் சாப்புட்டதும் செவலார்பட்டிக்குப் போயிட்டு வா. கதையுஞ் கத்திரிக்காயும் அப்புறம் பாக்கலாம்"னு பேரனப் பத்தி விட்டுட்டா.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 13, 2006

03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்

முந்திய பாகத்திற்கு இங்கே செல்லவும்.

"தூத்துக்குடிக்கு எவ்வளவு நேரமாகும்?" பக்கத்துல ஒருத்தர் கேட்டாரு. மூனு மணி நேரமாகும்னு சொன்னேன்.

"திண்டுக்கல்ல இருந்து வர்ரேன். இப்படி நின்னுக்கிட்டே போகனுமோ"ன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. நான் பெங்களூர்ல இருந்து வர்ரேன்னு சொல்லி அவருக்கு மாரடைப்பு உண்டாகக் காரணமாயிருக்க விரும்பல. அதுனால ஒன்னும் சொல்லாம பேசாம இருந்தேன்.

நாப்பத்தோரு ரூவா அம்பது காசு. மதுரையில இருந்து தூத்துக்குடிக்கு. அம்பத்தொன்னு அம்பது கொடுத்து பத்து ரூவா வாங்கிக் கிட்டேன். வண்டி நல்லா சல்லுன்னு போச்சு. மழை பேஞ்சிருந்ததால சுகமா இருந்தது பயணம். எல்லாரும் தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆத்தூருன்னு டிக்கெட் வாங்குனாங்க. ஆறுமுகனேரிக்கு யாரும் டிக்கெட் வாங்கலை (இது யாருக்காக சொன்னேன்னு அவங்களுக்குப் புரிஞ்சா சரி). தூத்துக்குடி வரைக்கும் நின்னுகிட்டுத்தான் போகனும் போலன்னு நெனச்சேன். சரி...நின்னுக்கிட்டு போறதுக்காவது வண்டி வந்துச்சேன்னு மனசத் தேத்திக்கிட்டேன். அப்ப அடுத்த சீட்டுல உக்காந்தவரு முத்தலாவரம் பாலத்துக்கு டிக்கெட் வாங்குனாரு.

ஆகான்னு ஒரு பேரானந்தம். பின்னே பாதி தொலைவு உக்காந்திட்டுப் போகலாமே. ஆனா வேற யாரும் அதுல நமக்கு முந்தி உக்காந்திரக் கூடாதே. நாற்காலிய எப்படியும் பிடிச்சாகனும்னு முடிவு செஞ்சேன். கள்ளவோட்டுப் போட்டாவது பதவியப் பிடிக்க முடிவு செஞ்சேன். கெடைக்கலைன்னா என்ன...அடுத்தவன் கள்ளவோட்டுப் போட்டுட்டான்னு சொல்லிக்கலாம்னு முடிவோட இருந்தேன்.

வழியில வர்ர சில ஊர்களைப் பத்திச் சொல்லியே ஆகனும். அருப்புக்கோட்டையப் பத்திச் சொல்ல வேண்டியதில்லை. அப்புறம் வர்ர ஊர்ப்பேருங்களச் சொல்றேன். ஒவ்வொன்னும் அருமையான தமிழ்ப்பேருங்க. முத்தலாவரத்துல மட்டும் புரம் வரும். மத்தபடி எல்லாம் தமிழ்ப் பேருங்க. பந்தல்குடின்னு ஒரு சின்ன ஊர் உண்டு. அப்படியே முன்னாடி வந்தா நென்மேனி. கீழக்கரந்தை. மேலக்கரந்தை. முத்தலாபுரம். சிந்தலக்கரை. எட்டையபுரம். கீழ ஈரால். எப்போதும் வென்றான். குறுக்குச்சாலை (இங்கிருந்துதான் பாஞ்சாலங்குறிச்சிக்கு விலக்கு). அப்புறம் தூத்துக்குடி.

இதுல நடுவுல வர்ர முத்தலாவரம் பாலத்துலதான் ஒருத்தர் எறங்கனும். அந்த எடத்தைப் பிடிக்கத்தான் நான் போர்வெறியோட இருந்தேன். ஏன்னா நின்னுக்கிட்டு தூங்க முடியல. குதிர, ஆன, ஒட்டகச் சிவிங்கியெல்லாம் நின்னுகிட்டேதான் தூங்குமாம். எப்படித்தான் தூங்குதோ! இப்படி நெனச்சிக்கிட்டிருக்குறப்போ டக்டண்டனக்குன்னு சத்தம் வந்தது. டிரைவர் படக்குன்னு வண்டிய ஓரங்கட்டீட்டாரு. கண்டக்டரும் அவரும் எறங்கி என்னன்னு பாத்தாங்க. டங் டங்குன்னு இடிக்கிற சத்தம் கேட்டுச்சு. ஒடனே டிரைவரு வண்டியில ஏறி வண்டிய எடுத்தாரு. நல்ல வேளை பெரிய பிரச்சனையில்லைன்னு நெனச்சேன். ஆனா உண்மையிலேயே பெரிய பிரச்சனைதான்னு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிருச்சு.

டிரைவரு வேகத்தக் கூட்டுனதும் மறுபடியும் டண்டணக்கா. மறுபடியும் வண்டி ஓரங்கட்டல். நாலஞ்சு டங்குடங்கு. இப்ப மக்களும் கீழ எறங்கிப் பாக்கத் தொடங்கீட்டாங்க. ஒன்னுமில்லைங்க. டயர் இருக்குதுல்ல...அந்த டயரோட நடுவுல இருக்குற இரும்புப் பட்டைய உருளையில விரிசல். வண்டி வேகமாப் போகைல அந்த விரிசலோட ரெண்டு பக்கமும் இடிச்சுக்குது. இப்ப அடுத்து வண்டிய மாத்த எந்த ஊரும் இல்லை. தூத்துக்குடிதான் அடுத்து. எப்பாடு பட்டாவது தூத்துக்குடி போனாத்தான் வண்டிய மாத்த முடியும்! எப்படிப் போறது?

மாட்டு வண்டியில போயிருக்கீங்களா? அதுலயும் பெரிய பைதா உள்ள வண்டியில போயிருக்கீங்களா? உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும். ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க. அந்த மாதிரி போனா தூத்துக்குடிக்குப் போயிரலாம்னு டிரைவர் வண்டிய உருட்டுனாரு. வெளிய சிலுசிலுன்னு தூறல்.

மேலைக்கரந்தைல ஒரு மோட்டல். சகசகன்னு சகதியா இருந்துச்சு. காலையில ஏழு மணிக்கெல்லாம் பசிச்சிருச்சு போல டிரைவருக்கும் கண்டெக்டருக்கும். ஒடனே மக்களும் எறங்கீட்டாங்க. அந்த முத்தலாரக்காரரும். கொஞ்சமாவது உக்காரலாமேன்னு நானும் உக்காந்துட்டேன். மத்த சீட்டுகள்ளயும் நின்னுக்கிட்டு வந்தவங்க உக்காந்துட்டாங்க. ஓசிச்சாப்பாடு முடிஞ்சு டிரைவரும் கண்டெக்டரும் வந்து வண்டியெடுத்தாங்க. மக்களும் படபடன்னு ஏறீட்டாங்க. வண்டி நகழுது. ஆனா அந்த முத்தாலரக்காரரக் காணம். நானும் திரும்பித் திரும்பிப் பாக்கேன்.

பாத்தா...படியில நிக்காரு. கையக் காட்டி என்னையவே உக்காந்துக்கிரச் சொன்னாரு. அடுத்தது முத்தலாரந்தான். நானும் நன்றி சொல்லி உக்காந்துக்கிட்டேன். சரசரன்னு ஒரு அழகான தூரல். பஸ்சுல டிரைவருக்குப் பின்னாடி சீட்டு. சும்மாயிருக்க முடியுமா? மொபைல்ல ஒரு போட்டோ படக்குன்னு புடிச்சிக்கிட்டேன்.

Photobucket - Video and Image Hosting

இப்பதான் உக்கார எடம் கிடைச்சிருச்சே. பதவி கெடச்சதும் மொத வேலை என்ன? ஓய்வெடுக்குறதுதான. அதத்தான் நானும் செஞ்சேன். அப்படியே அப்பப்ப தூங்கி அப்பப்ப எந்திரிச்சிக்கிட்டேன். ஒரு வழியா கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல தூத்துக்குடி பழைய பஸ்டாண்டுல எறங்கினேன். பஸ்டாண்டுல இருந்து வீட்டுக்கு நாலு நிமிச நடை. ஆனா சின்னப்பிள்ளையா இருந்தப்ப அதுவே ரொம்பத் தூரம். ஏன்னா ஊருக்குப் போகனும்னா பஸ்டாண்டுக்கு ஒவ்வொரு பொழுது ரிக்கிஷாவுல போவோம். அந்த ஊருக்கு அதுவே தொலைவுதான்.

நான் படபடன்னு பையத் தூக்கீட்டு நடந்தே வீட்டுக்குப் போயிட்டேன். அந்தத் தெருவுக்குள்ள...அதாங்க...புதுக்கிராமத்துல நொழஞ்சதும் பழைய நெனப்புகள் வந்து மோதுது. எத்தனையெத்தனை நினைவுகள். வீட்டுக்குப் போறதுக்குள்ள வழியில இருக்குற ஒவ்வொரு வரலாற்று பெருமை பெற்ற இடங்களையும் அங்க நடந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சொல்றேன். கேப்பீங்களா?

தொடரும்...

Monday, November 06, 2006

02. மாட்டுத்தாவணி மகாத்மியம்

முதல் பாகத்தை இங்கே படிக்கவும்.

தலைப்பு வைக்கும் போது கேடிசி பிஆர்சி தூத்துக்குடீன்னு ஏன் வெச்சிருக்கேன்னு மொதல் பதிவுல சொல்லலையே. இப்பச் சொல்லீர்ரேன்.

கேடிசி = கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன். தூத்துக்குடி திருநவேலி மாவட்டத்துக்காரங்களுக்கு நல்லா நினைவிருக்கும். நாகர்கோயில்காரங்களும் கண்டிப்பா பாத்திருப்பாங்க.

பிஆர்சி = பாண்டியன் ரோட்வேஸ் கார்ப்பரேஷன். இது மதுர மாவட்டம். விருதுநகரு மாவட்டத்துக்கும் இதுதான். ஆகையால தெக்கில இருக்குறவங்களுக்கு இந்த ரெண்டுமே கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். இப்பல்லாம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்தானே. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான்.

இந்த வண்டிகள்ள அவங்கவங்களுக்கு ஒரு நிறத்துல ஓட்டுன காலங்களும் உண்டு. பிஆர்சின்னா பச்ச வண்டி. கேடிசின்னா காவி வண்டி. சென்னையில பல்லவன் செவப்பு வண்டி. இப்படி இருந்தது. இப்ப எல்லாம் ஒன்னாயிருச்சு. ரொம்ப நாள் கழிச்சுத் தூத்துக்குடிக்குப் போனதால பழைய நெனைவுகளுக்குத் தக்க பழைய பேர்களப் போட்டுக்கிட்டேன். :-) அதையும் நம்ம நண்பர்கள் ஜோவும் தாணுவும் கண்டுபிடிச்சிட்டாங்களே!

சரி. நம்ம கதைக்கு வருவோம். விடியக்காலைல ரெண்டரைக்கு செல்பேசி எழுப்பி விட்டது. வாடிபட்டிய நெருங்கீருந்தோம். பேரப் பாத்ததுமே சிங்காரவேலன்ல "வாடிப்பட்டி வம்சம்"னு கமல் பாடுறது நினைவுக்கு வந்துச்சு. வெளிய நல்லா மழ பேஞ்சிருந்தது தெரிஞ்சது. அதென்னவோ தமிழ் நாட்டுல மழ பேஞ்சா ஒரு மகிழ்ச்சிதான். பஸ்சுல கூட வந்தவரும் மதுரைல எறங்கனுமாம். அவரு டிரைவர் கிட்ட போயி வண்டிய மாட்டுத்தாவணிக்கு விடச்சொல்லிக் கேட்டாரு.

நாங்க உக்காந்திருந்தது கடைசி வரிசை. இருந்தாலும் டிரைவரு சொன்னது காதுல விழுந்தது. "டிரைவருக்குப் பதிலா நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன்"னு சொன்ன கண்டெக்டருதான் அப்ப வண்டிய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. தாயுமானவர் மாதிரி டிரைவருமானவர் அந்த கண்டெக்டர்னு அப்பதான் தெரிஞ்சது. ஆனா பாருங்க......டிரைவர்னா நாய் மாதிரி இருக்கனும்னு அவரு தப்பா நெனைச்சிருக்காரு போல. "நீங்க இப்பிடிக் கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒங்கள ஏத்திரூக்கவே மாட்டேன்"ங்குற கொஞ்சம் கூடுதலான மரியாதை(!)யோடு குலைச்சாரு....சேச்சே.....சொன்னாரு. கடைசியில பெரிய மனசு வெச்சி ஒருவழியா எங்களையெல்லாம் ஆரப்பாளையத்துல ரோட்டு மேலயே எறக்கி விடச் சம்மதிச்சாரு. "என்ன தாராள மனசு. இவருக்கு இருவது ரூவா குடுத்திருந்தா மாட்டுத்தாவணிக்கே போயிருப்பாருன்னு யாரோ கிண்டலடிச்சாங்க." குடுத்திருக்கலாமோ!!!!!

நான் ஆரப்பாளையத்துல எறங்காம அந்த வண்டியிலயே திருநவேலி போயிருந்தா அங்கிருந்து முக்கா மணி நேரத்துல தூத்துக்குடி போயிருந்திருக்கலாம். ஆனா விதி யார விட்டது?

ஆரப்பாளையம் மெயிண்ரோட்டுல எறங்கி அப்படியே உள்ள நடந்தா ஆரப்பாளையம் பேருந்து நெலையம். இப்பல்லாம் நாட்டுல நெறைய இலவசங்களாகிப் போச்சு. அதுலயும் நிவாரண நிதிகளப் பத்திச் சொல்லவே வேண்டாம். பெஞ்ச கொஞ்ச மழைக்கும் தலைதுவட்டும் நிவாரணநிதியா துண்டு குடுக்குறாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குக் கூட்டம். நிக்க ஒதுங்க எடமில்லை. மாட்டுத்தாவணிக்குப் போற வண்டியோ அந்நேரத்துக்கே பொங்கலோ பொங்கல்னு பொங்கி வழியுது. தீபாவளிக்குப் பொங்கல். என்ன செய்றது? ஆட்டோக்காரனோ எம்பது ரூவா கேக்குறான். அன்னைக்குத்தான வாழ்வு. நாங்கூட போயிரலாமோன்னு நெனச்சேன். ஆனா கூட வந்தவங்க விரும்பலை. சரீன்னு திறமையெல்லாம் காட்டி நாங்களும் பஸ்சுக்குள்ள எங்களத் திணிச்சிக்கிட்டோம்.

திடீர்னு வழியில டிரைவரு "படியில இருக்குறவங்க உள்ள நெருக்கிக்கிங்க. வெளிய இருக்காதீங்க"ன்னு சொன்னாரு. காரணத்தையும் அவரே சொன்னாரு. ஒரு குறுகலான பாலம். ஒரு பஸ்தான் போக முடியும். படியில நின்னு வெளியில தொங்குனா கண்டிப்பா எங்கையாவது ஏதாவது இழுத்து வெச்சிரும். இதுக்கு முன்னாடி அப்படி ஆயிருக்கும் போல. அதான் அவரும் அறிவுருத்துனாரு. நல்லாயிருக்கனும் அந்த டிரைவரு.

ஆரப்பாளையத்துல நிவாரணநிதிக் கூட்டம்னா மாட்டுத்தாவணியில நட்சத்திரக் கலைவிழா. அவ்வளவு கூட்டம். தூத்துக்குடி பஸ் நிக்கிற எடத்துக்குப் போனா அங்க எந்த பஸ்சும் இல்லை. நாகர்கோயில், திருநவேலி, ராசபாளையம், செங்கோட்டை, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், தேனி, கோட்டூர் (இந்த ஊரு சாத்தூர்ல இருந்து இருக்கங்குடி வழியா போனா வர்ர ரொம்ப ரொம்ப சின்ன ஊரு) அப்படீன்னு எல்லா ஊருக்கும் வண்டிக வருது. போகுது. தூத்துக்குடி அரவத்தையே காணம்.

"ஏண்டி ஒங்கூரு வண்டி இப்பிடிக் கழுத்தறுக்குது" ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க. ஒருத்தி தூத்துக்குடி. இன்னொருத்தி வேற ஊரு போல. இவள வண்டியேத்தீட்டுப் போகலாம்னு அவ காத்திருந்தான்னு நெனைக்கிறேன். "பேசாம அருப்புக்கோட்டைக்குப் போறியா?". அத விட வேற வினையே வேண்டாம்னு நெனச்சேன். நல்லவேள அந்தப் பொண்ணும் அந்த யோசனைய ஏத்துக்கலை. தூத்துக்குடி மக்கள்ளாம் இங்குட்டும் அங்குட்டும் திரும்பித் திரும்பிப் பாக்காங்க. ஒவ்வொரு பக்கமும் வர்ர வண்டியெல்லாம் எந்தூருன்னு பாக்காங்க. நானுந்தான்.

அங்க ஒரு கடைல, "அண்ணே தூத்துடி வண்டி எத்தன மணிக்கு"ன்னு கேட்டேன். அவரும் ஒடனே, "ஏழு மணிக்கு"ன்னு சொல்லீட்டு டீயாத்துறத தொடர்ந்தாரு. ஆத்துன டீயில ஜீனிக்குப் பதிலா என்னையப் போட்டு ஆத்துன நெலமை எனக்கு. ஏழு மணிக்கு இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கே. அப்ப பத்து மணிக்குத்தானா தூத்துடின்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசாம கோயில்பட்டி போயிரலாம்னு நெனச்சேன். திருநவேலி நாகர்கோயில் போற வண்டியெல்லாம் கோயில்பட்டி வழியாப் போகும். கோயில்பட்டியில எறங்குனா அங்கிருந்து ஒன்னேகால் மணி நேரந்தான் தூத்துக்குடி.

அப்படியே வருத்தத்தோட அந்த வண்டிங்க வர்ர பக்கமாப் போனேன். காலை நேரம். குளிரு வேற. அவசரமா ஒன்றாம் எண்ணுக்குப் போக அங்கிருந்த பொதுக்கழிப்பிடத்துக்குள்ள தெரியாம நொழைஞ்சிட்டேன். ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்னொரு வாட்டி அதுக்குள்ள நுழையனும்னா நீல் ஆம்ஸ்ட்ராங் கிட்ட டிரஸ் வாங்கீட்டு வந்துதான் நொழையனுங்குற மாதிரி இருந்துச்சு. என்ன செய்ய...ஆத்திரத்தைத்தான அடக்கலாம்........

இப்படி செஞ்சிட்டியே முருகான்னு வெளிய வந்து பாத்தா அங்க திருச்செந்தூர் வண்டி நின்னது. ஆனா டிரைவரும் கண்டெக்டரும் எறங்கீட்டாங்க. கண்டிப்பா வண்டி தூத்துக்குடிக்குப் போகும்ன்னு டிரைவர்கிட்ட உறுதி படுத்திக்கிட்டேன். அப்படியே முருகனே வண்டியோட நின்ன பூரிப்பு எனக்கு. உக்கார எடமில்லை. இருக்கட்டும். அதுனால என்ன. நின்னுக்கிட்டாவது போக ஒரு வண்டி அனுப்பினானே முருகன். அளவுக்கு மீறி ஆசப்பட்ட ஆம்பளையும் அளவுக்கு மீறி கோவப் பட்ட பொம்பளையும் உருப்பட்டதில்லைன்னு ஏதோ சினிமாவுல எல்லாம் சொல்றாங்களாம். சினிமாவுலதான ரொம்ப வருடங்களா கதாநாயகி கையப் பிசுக்கிக்கிட்டே கதாநாயகர்கள் நல்ல கருத்தெல்லாம் சொல்றாங்க. அதுனால நானும் இந்த உதவி செஞ்சதே போதும்னு முருகனுக்கு நன்றி சொல்லீட்டு ஏறி நின்னேன்.

அஞ்சு மணிக்கு வண்டிய எடுத்தாங்க. மூனு மணி நேரம்னா எட்டு மணிக்கெல்லாம் தூத்துக்குடின்னு திரும்ப ஒரு சந்தோசம் எட்டிப் பாத்தது. ஆனா போனேனா?

தொடரும்........

Tuesday, October 31, 2006

தேன்கூட்டு விடுதலைக்கு நன்றி

மொதல்ல எல்லா நண்பர்களுக்கும் நன்றி. விடுகதை கதையைப் படிச்சுக் கருத்து சொல்லீட்டு அதுக்காக வாக்களித்த அன்பு நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது நன்றி. எனக்கு வாக்களிக்காதவங்களுக்கும் நன்றி. ஏன்னா உங்களுக்குப் பிடிச்சதுக்கு வாக்களிச்சிருப்பீங்க இல்லையா. அதுக்குதான்.

முதல் பரிசை வென்ற லக்கிலுக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மூன்றாம் பரிசு பெற்ற சுதர்சனனுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள். போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமே வெற்றிக்கு முதற்படி. ஆகையால் நாம் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.

போட்டியைச் சிறப்பாக நடத்திய தேன்கூடு மற்றும் தமிழோவியத்திற்கும் எனது வாழ்த்துகள் நன்றிகள். இது போன்ற போட்டிகள் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது என்பதில் ஐயமில்லை. தொடரட்டும்.

இதுவரைக்கும் இந்தப் போட்டியில கலந்துகிட்டதில்லை. போன மொற போட்டி முடிஞ்சப்புறம் நடந்த சிலபல நிகழ்ச்சிகளால நான் போட்டியில கலந்துக்கலாம்னு முடிவு செஞ்சேன். கலந்துகிட்ட மொதவாட்டியே பரிசு கிடைச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. எல்லாப் புகழும் முருகனுக்கே. (வழக்கமாச் சொல்றதுதானங்கிறீங்களா...என்ன செய்ய...அப்படியே பழகீருச்சி.)

இன்னைக்கு (31 அக்டோபர் 2006) காலைல கந்தரநுபூதி பதிச்சிட்டு ஆபீசுக்கு ஓடலாம்னு வந்தேன். அப்ப கொத்ஸ் ஆன்லைன்ல இருந்தாரு. அவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறப்போ மக்ரூனு, அல்வா, பிட்டுன்னு இனிப்புகளா வந்துச்சு. ஆபீசுக்குக் கெளம்புறேன்னு சொன்னப்போ "have a sweet morning"னு வாழ்த்துனாரு.

ஆபீசுக்கு வந்தா வேலை...வேலை..வேலை....திடீர்னு ஒரு செல்பேசி. "ஜீரா"ன்னு. வேறயாரு? இளாதான். வாழ்த்துகள் அப்படீன்னாரு. என்னத்துக்குய்யான்னு கேட்டேன். அப்பத்தான் விவரம் சொன்னாரு. வாழ்த்துச் சொன்ன மொத ஆளு அவருதான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி பெயரிலேயே வெட்கத்த வெச்சிருக்குற ஷைலஜா செல்பேசினாங்க. அவங்களும் வாழ்த்துச் சொன்னாங்க. அதே சமயம் சுதர்சனோட மயில் வந்துச்சு. ஆனா வேலை நெறைய இருந்ததால மயிலார அப்புறம் அனுப்பலாம்னு முடிவு செஞ்சேன்.

அப்புறம் வலைப்பூவுக்கு வந்து பாத்தா, யெஸ்பா...அதாங்க பாலபாரதி, துளசி டீச்சர், ஆவி அண்ணாச்சி, வெட்டிப்பயல், ரவி கண்ணபிரான்னு வாழ்த்துப் பின்னூட்டங்கள். அத்தோட லிவிங் ஸ்மைல் வித்யா. அவங்களுடைய வாழ்த்து நான் கதையில ஓரளவாவது இயல்பாச் சொல்லீருக்கேங்குற நம்பிக்கையைக் குடுத்தது. நன்றி லிவிங் ஸ்மைல் வித்யா.

இந்தக் கதைல பலர் கேட்ட கேள்விகள் ரெண்டே ரெண்டு. ஒவ்வொன்னுக்கும் எனக்குத் தெரிஞ்ச விடைகளைச் சொல்லி இந்தப் பதிவை முடிச்சிக்கிறேன்.

கேள்வி 1. சசிக்குமார் சசிகலாவாக மாறுவது விடுதலையா? சிறையா? இதுதான் வழியா? ரயில்தானா வரவேண்டும்! நல்ல வேலை செய்வது போல வரக்கூடாதா?

விடை 1. சசிகலாவிற்கு வேறுவழியே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதை ஊகத்தின் பேரில்தானே சொல்ல முடியும். பிடிக்காத உடையையே நம்மால் போட்டுக்கொள்ள முடியாத பொழுது...பிடிக்காத உடம்பை எப்படிப் வைத்துக்கொள்வது? அதனால்தான் நிறைய திருநங்கைகள் இந்த விடுதலையை விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்.

ரயிலிலா இருக்க வேண்டும் என்பதும் நல்ல கேள்வி? ரயிலில் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ரயிலில் அவர்களும் பயணம் போகிறவர்களாக இருக்கலாமே. உட்கார்ந்து கொண்டே இருக்கப் பிடிக்காமல் கதவோரம் நின்றிருக்கலாமே! அதை படிப்பவர்களின் விருப்பத்திற்கே விட்டு விட்டேன்.

கேள்வி 2. அதென்ன எல்லா போட்டிகளிலும் திருநங்கைக் கதை ஒன்று வந்து விடுகிறதே!

விடை 2. எல்லாப் போட்டிகளிலும் ஆண்களையும் பெண்களையும் பற்றிக் கதை வந்து விடுகிறதே. அது ஏன் உறுத்தவில்லை? காரணம் என்னவென்றால் அவர்கள் பொதுநீரோட்டத்தில் (mainstream) கலந்திருக்கிறார்கள். ஆகையால் நமக்கு உறுத்துவதில்லை. கதையில் வருகின்ற பெற்றோர்களைப் போல உண்மையிலும் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போவதுதான் நடக்கிறது. ஆக திருநங்கைகளை இன்னும் பொதுநீரோட்டத்தில் நாம் சேர்த்துக்கொள்ளவில்லை.

பொதுநீரோட்டத்தில் புதிதாகச் சேரவரும் ஒரு திருநங்கை தன்னுடைய உணர்வுகளைத்தான் முதலில் அள்ளிக்கொட்ட முடியும். ஏனென்றால் அப்பொழுதுதான் மற்றவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அதை விடுத்து மகிழ்ச்சி பொங்க எழுது...வேறு ஏதாவது எழுது என்பதெல்லாம் கவைக்குதவாது. அவர்களுக்கு விளம்பரம் தேவையோ இல்லையோ.....அவர்களை எழுத விடுங்கள்....குமுறல்கள் எல்லாம் கொட்டியபின் எழுத்துகள் மெருகேறும். புதுவெள்ளம் மண்ணையும் அடித்துக்கொண்டு சிவப்பாகத்தான் வரும். பிறகே தெளிந்த நீர் வரும். கலங்கலாக இருக்கிறதே என்று புதுவெள்ளத்தைக் கரிப்பதில்லை நாம். அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும்.

மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்த தேன்கூடு + தமிழோவியம் குழுவினருக்கு எனது நன்றி. போட்டியில் கலந்து கொண்ட வாக்களித்த கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, October 26, 2006

01. கேடிசி பிஆர்சி தூத்துக்குடி

எத்தனையோ தீபாவளிகளுக்குப் பெறகு தூத்துக்குடியில மறுபடியும் தீபாவளி கொண்டாடினேன். என்னைய வளத்த அத்தையோடயும் மாமாவோடயும். பொறந்த ஊருக்குப் போறதுல அப்படியொரு மகிழ்ச்சி. ஆனா பாருங்க....நான் தூத்துக்குடிக்குப் இந்திய ரயில்வே துறை ரொம்பவும் விருப்பமில்லை போல இருக்கு. நின்னுக்கிட்டு போற பெட்டியில இருந்து தூங்கிக்கிட்டுப் போற குளுகுளு பெட்டி வரைக்கும் டிக்கெட் தர முடியாதுன்னு மறுத்துட்டாங்க. என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம். என்ன ஆத்திரம்னு கேக்குறீங்களா? அத அங்க கேக்க வேண்டியதுதான...ஆனா அவரு அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னைய அவருக்குத் தெரியவே தெரியாதுன்னு சாதிப்பாரு. சரி. உலகத்துல பலர் அப்படித்தான். விடுங்க.

அடுத்து என்ன செய்ய? சொகுசுப் பேருந்துகள். கே.பி.என், ஷர்மா அது இதுன்னு ரெண்டு மூனு இருக்கே. ஆனா பாருங்க....அந்த வண்டியெல்லாம் மதுர வரைக்குந்தான். சரி. மதுரைக்குப் போயி தூத்துக்குடி வண்டி பிடிச்சாப் போச்சுன்னு நெனச்சேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லைன்னு கவியரசர் இவங்கள நெனச்சுத்தான் பாடியிருப்பாரு போல. டிக்கெட் இல்லைன்னு வெரட்டி விட்டுட்டாங்க. உண்மைதாங்க. இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. சரிதான் போங்கன்னு கெளம்பி வந்துட்டேன். அந்த ஆத்திரத்தைத் தனிக்க பக்கத்துல இருந்த அடையாறு ஆனந்த பவன்ல காக்கிலோ பாவக்கா சிப்சு வாங்கிக்கிட்டேன். அதத்தான நொறுக்க முடியும்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படுறதுதான் அரசாங்கமாமே! அப்படிப்பட்ட கர்நாடக தமிழக அரசுப் பேருந்துகளைத்தான் அடுத்து நெனச்சேன். ஆனா அவங்களும் வண்டி பொறப்படுறதுக்குச் சரியா பத்தே பத்து நாளைக்கு முன்னாடிதான் டிக்கெட் தருவாங்களாம். அதுவும் பண்டிகைக்காலங்குறதால விடியக்காலைல அஞ்சரைக்கே வந்தாத்தான் ஏதாவது தேறும்னு சொல்லீட்டாங்க. என்ன செய்ய? நம்ம நண்பர் பிரதீப்பு மதுரக்காரரு. அவருக்கு ஒரு அலைபேசி (நன்றி குமரன்) போட்டுக் கேட்டேன். அவரும் அந்த பொழுதுல மதுரைக்குப் போறவராம். ஆனா ஐதராபாத்துல இருந்து. அவரோட தம்பி பெங்களூர்ல இருந்து மதுரைக்குப் போகனும். ரெண்டு பேரும் ஒன்னா டிக்கெட் எடுத்து போயிட்டு வந்துட்டா வசதியாயிருக்குமுன்னு முடிவு செஞ்சி டிக்கெட் எடுக்குற லேசான வேலையை மட்டும் அவரோட தம்பி ராஜ் தலையில கட்டினோம்.

டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன். அஞ்சர மணிக்கு வரிசையில நின்னவன் விடுவிடுன்னு முன்னேறி பத்தர மணிக்கெல்லாம் ரெண்டு டிக்கட் எடுத்துட்டான். கடைசி வரிசைதான். அதெல்லாம் பாத்தா முடியுமா? திருநவேலி போற வண்டியில திருநவேலிக்கு டிக்கெட் எடுத்து மதுரையில எறங்கத் திட்டம். அதே மாதிரி பிரதீப்போட மாமா மதுரையில எங்க ரெண்டு பேருக்கும் திரும்பி வர டிக்கெட் எடுத்துட்டாரு. அப்பாடி.......ஒரு வழியா ஏற்பாடுகள் முடிஞ்சது.

திருநவேலி வண்டியோ மதியம் மூனரை மணிக்கு. மதுரைக்கு ரெண்டு ரெண்டரைக்குப் போகும். ஆபீசுக்கு பாதி நாள் மட்டம் போட்டுட்டு வியாழக் கெழமை...அதாவது அக்டோபர் 19ம் தேதி பொறப்பட்டோம். கடைசி வரிசை. சீட்டு சரியில்லை. ஒரு பக்கமா நெளிஞ்சிருக்கு. வண்டி ஓடாம நிக்கும் போதே சீட்டு ஆடாம நிக்க மாட்டேங்குது. சரி. ஊருக்குப் போகனும். அதுக்கு இதெல்லாம் நடக்கனும். நடக்கட்டும்.

இன்னும் நாலு பேரு டிக்கெட் எடுத்திருக்காங்க. ஆனா அதுல மூனு பேரு வந்தாச்சு. நாலாவது ஆளு வந்துக்கிட்டே இருந்தாரு. வண்டி கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்தது. "டிரைவருங்குற பேர்ல நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன். அதுனால என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு" சொல்லீட்டாரு நடத்துனரு. சரீன்னு அந்த சீட்ட இன்னொருத்தருக்குக் குடுத்து காசி வாங்கீட்டாங்க. விடுவாரா நடத்துனரு. பேச வேண்டிய பேரத்தப் பேசி அவரு கணக்குக்கு ஒரு நூறு ரூவாய வாங்கிக்கிட்டாரு. வாங்கீட்டு "ஒரு கட்டுக்கு ஆச்சு"ன்னாரு. அதுல கருத்து வேற சொன்னாரு. "சார். நாங்க குடிக்கிறது பசிக்கோ போதைக்கோ இல்ல. வாசனைக்குத்தான். அந்த வாடைக்குத்தான் குடிக்கிறது. பசிக்கோ போதைக்கோ குடிக்கிறோம்னு தப்பா நெனக்கக் கூடாது"ன்னு தன்னிலை வெளக்கம் குடுத்து அவரு நல்லவருன்னு சொல்லீட்டாரு. சரீன்னு நம்ம ஒத்துக்கலைன்னா இன்னும் பெரிய விளக்கமெல்லாம் குடுப்பாருன்னு அவரு சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டோம்.

பெங்களூர்ல எங்க பாத்தாலும் கூட்டம். மூனரைக்குப் பொறப்பட்ட வண்டி சரியா ரெண்டே மணி நேரங் கழிச்சு அஞ்சரைக்கு பெங்களூர விட்டு வெளிய வந்திருச்சு. அப்புறம் சர்ருன்னு ஓடுச்சு...ரொம்பப் பேரு நின்னுக்கிட்டும் கீழ உக்காந்து கிட்டும் வந்தாங்க. கொஞ்சப் பொம்பளைங்க டிரைவருக்குப் பின்னாடி இருக்குற கேபின் சீட்டுல உக்காந்து கிட்டும் வந்தாங்க. எப்படியோவது பண்டிகைக்கு ஊருக்குப் போனாச் சரிதான்னு. அவங்கவங்க பகுத்து அவங்கவங்களுக்கு.

வழியில பேர் தெரியாத ஊர்ல பேர் தெரியாத ஓட்டல்ல சாப்பிட நிப்பாட்டினாங்க. பரோட்டா ரொட்டி தவிர ஒன்னும் சரியாயில்ல அங்க. ஒரு பரோட்டாவும் முட்டைக் குருமாவும் வாங்கிச் சாப்பிட்டோம். சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. எதுவாயிருந்தா என்ன...தின்னாச்சு. அவ்வளவுதான். எனக்கு அப்பப் பாத்து டீ குடிக்க அடங்காத ஆசை. அத்தன சின்ன பிளாஸ்டிக் கப்ப நான் அப்பத்தான் பாக்குறேன். அதுல நெறைய நெறைய நொறையா வர்ர மாதிரி கொதிக்கிற டீய ஊத்திக் குடுத்தாரு டீக்கடைக்காரரு. என்னவோன்னு குடிச்சு வெச்சேன். அவ்வளவு நல்லாயிருக்கல.

இருட்டுற வரைக்கும் Lord of the rings புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்புறம் லைட்ட அணைச்சிட்டு சண்டைக்கோழி படம் வீடியோவுல ஓடிச்சு. மக்கள் ரசிச்சு ரசிச்சு பாத்தாங்க. நானும் அப்பப்ப பாத்துக்கிட்டேன். ரெண்டரை மணிக்கு அலாரம் வெச்சுட்டுத் தூங்கினேன். மதுரையில நான் மூனு மணிக்கு எறங்கி அரை மணி நேரத்துல பஸ் ஏறுனாக் கூட ஆறரைக்கெல்லாம் தூத்துக்குடி போயிரலாம்ல. போனேனா?

தொடரும்....

Friday, October 06, 2006

தென்னைமரத்தில் 9/11 பெங்களூரில் நெரி

நெரி கட்டீருச்சுன்னு சொல்வாங்க. கேள்விப்பட்டிருக்கீங்களா? தூத்துக்குடி மாவட்டத்துல பதவளை கட்டீருக்குன்னு சொல்வாங்க. கைகால்ல எங்கையாவது புண்ணு வந்தா பக்கத்துல எங்கையாவது கட்டிகட்டிக்கிரும். அதத்தான் நெரி கட்டுறதுன்னு சொல்வாங்க. தென்னமரத்துல தேள் கொட்டுனா பனமரத்துல நெரி கட்டுச்சாங்குற சொலவடை ரொம்பவே பிரபலம். அந்த மாதிரி ஒரு தகவல்தான் நான் சொல்லப் போறது.

மூனு வாரத்துக்கு முன்னாடி ஒரு coferenceல் கலந்து கொண்டிருந்தேன். அலுவலகப் பணி தொடர்பாதான். நெறைய மென்பொருள் நிறுவனங்களில் இருந்தெல்லாம் ஆளுங்க வந்திருந்தாங்க. ஒவ்வொருத்தரும் அவங்களுக்குத் தெரிஞ்ச மென்பொருளியல் பத்தி எடுத்து விட்டுக் கிட்டு இருந்தாங்க. மொதல்ல பெரிய பெரிய ஆளுங்க. பல முன்னணி நிறுவனங்கள்ள இருக்குற முன்னணி ஆளுங்க நாலஞ்சு பேருங்க மேடையில பல தகவல்களைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு ஜம்முன்னு லேப்டாப்கள வெச்சிக்கிட்டு விதவிதமா படம் காட்டிக்கிட்டு இருந்தாங்க.

அப்ப திடீர்னு ஒரு அறிவிப்பு. ஒருத்தர மேடைக்குக் கூப்பிட்டாங்க. ரொம்ப எளிமையா இருந்தார். நல்லாப் படிச்சவருன்னு தெரிஞ்சது. ஆனா ஆளப் பாத்தா அடிச்சிப் போட்ட மாதிரி நொந்து நூலாகி அந்து அல்வாவாகியிருந்தாரு. அவரு இந்த conference நடத்துற அமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வந்திருந்தாரு. அந்த அமைப்பு லாபம் கருதி நடத்தும் அமைப்பு இல்லை. அதற்குக் கண்டிப்பாக நிதி தேவை. ஆனா இவர் ஏன் ஒரு லட்சம் கொடுக்கனும்?

அதையும் அவரே சொன்னாரு. அவரோட பெயரைச் சொல்லலை நான். அவர் ஒரு ஏழைக் குடும்பத்துல இருந்து முன்னுக்கு வந்தவர். அவரோட அப்பா வீடுவீடா டீத்தூளு வித்துக்கிட்டு இருந்தவராம். இவருதான் வீட்டுல ரெண்டாவது. இவருக்கு ஒரு அக்கா. அப்புறம் ரெண்டு தங்கச்சிங்க. கடைசியா ஒரு தம்பி. இவருக்கும் இவரு தம்பிக்கும் கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வயசுக்கும் மேலயே வித்யாசம். இவரு படிக்கிறதுக்காக இவருக்கு இவங்க அக்கா படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போனாங்க. இவரும் படிச்சாரு. நல்லாவே படிச்சாரு. வெளிநாடெல்லாம் போனாரு. குடும்பமும் முன்னேறிச்சு. மாசத்துக்கு முப்பது நாளும் ஏரோப்பிளேன்ல பறக்குற அளவுக்குப் பெரிய ஆளானாரு. தங்கச்சி தம்பிகள படிக்க வெச்சாரு. எல்லாரும் நல்லா வந்தாங்க.

கடைசித் தங்கச்சியும் தம்பியும் மென்பொருள் துறைக்குள்ள நொழைஞ்சாங்க. அதுலயும் அந்தத் தம்பி ஷஷாங்க் ரொம்பவே புத்திசாலியாம். அண்ணனுக்கும் அவனுக்கும் வயசு வேறுபாடு நிறைய இருந்தாலும், வெளிநாட்டுல இருந்தாலும் நல்ல நெருக்கமா இருந்து தெரிஞ்சிக்க வேண்டிய உலக நடப்புகளத் தெரிஞ்சிக்கிட்டு நல்லா படிச்சானாம். Wipro நிறுவனத்துல வேலை கெடச்சு நல்ல வேலையும் செஞ்சானாம்.

அவனுக்கும் வெளிநாட்டுக்குப் போறதுக்கு வாய்ப்பு வந்தது. அவன் வேல பாக்குற கம்பெனியில இருந்து. அமெரிக்கா அவனையும் வரவேற்றது. அவன் அங்கு சென்ற நிறுவனம் WTC கட்டடத்தில் இருந்தது. அவன் தலையெழுத்து. அந்த 9/11 கோரச்சம்பவம் நடந்தது. ஷஷாங்கின் கதை அத்தோடு முடிந்தது. ஆனால் அவனது குடும்பத்தின் கதை?

செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தாராம் அவனது தாய். அத்தோடு சரி. இன்னும் மனநிலை தெளியாமல் ஒரு நடைப்பிணமாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அறுபதுகளில் இருக்கும் அவரது தோற்றம் தொன்னூறுகளில் இருப்பவரைப் போல மாறிவிட்டது. தந்தையோ எப்படியோ உயிரைப் பிடித்துக் கொண்டு மனைவிக்காக இருக்கிறார்.

இவரால் அதற்கு மேல் தாய் தந்தையரை விட்டு இருக்க முடியவில்லை. இந்தியாவிற்குத் திரும்பி விட்டார். ஒரு நல்ல நிறுவனத்திலும் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் நிம்மதி? ஷஷாங்கை உலகிலிருந்து அழிக்கத் தீவிரவாதம் என்ற ரப்பர் இருந்தது. ஆனால் இவர்கள் மனதிலிருந்து அழிக்க எந்த ரப்பரையும் எந்த மதத்து ஆண்டவனும் அருளவில்லை. அவன் ஓரிறைவனாக இருந்தாலும் சரி. முப்பத்து முக்கோடி தேவர்களாயும் அவர்களுக்கும் மேலான ஆதிசிவனாக இருந்தாலும் புத்தனாய், அருகனாய் எத்தனை பேரானாலும் சரி.

ஷஷாங்க் எங்கெல்லாம் மகிழ்ந்திருந்தானோ, ஷஷாங்கோடு எவையெல்லாம் தொடர்புடையனவோ அங்கெல்லாம் ஷஷாங்கின் பெயரில் ஏதாவது செய்யத் தொடங்கினார்கள். அவன் படித்த பள்ளிக்கு வகுப்பறைகள். கல்லூரியில் வகுப்பறைகள். அவன் பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை. அவன் பணி செய்த மென்பொருள் தொடர்பான உதவிகள். அந்த வகையில்தான் ஒர் லட்ச ரூபாய் நிதியுதவி. இப்படி ஷஷாங்கோடு தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொன்றையும் தேடித் தேடி ஷஷாங்கைத் தேடிக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.

தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தனக்குப் பிடிக்காதவர்களை எதிர்ப்பது மட்டுமே என்று வலைப்பூ வரைக்கும் வந்துவிட்ட நிலையில், அடுத்தவனைச் சொன்னியா...என்னயச் சொல்ல வந்துட்ட போன்ற எண்ணங்களுமே.......அடுத்தவன் எப்படியிருந்தால் என்ன...நான் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது எல்லாருக்கும் வருமோ!

ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். குறிப்பாக தங்கள் மதமே சிறந்தது என்று நம்புகின்ற மனிதர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களது மதமே சிறந்ததாக இருக்கட்டும். உங்களது மதத்தை அமைதி வழியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. உங்களோடு உள்ள குற்றவாளிகளை ஆதரிக்காதீர்கள். அடுத்தவன் ஒழுங்கா என்று கேட்பது மிக எளிது. நாம் ஒழுங்கு என்று அடுத்தவனை நம்ப வைப்பது மிகக் கடினம். நான் சொல்ல வந்தது என்னவென்று எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புனிதப் பசுவோ, புனிதமில்லாத கொசுவோ...தோன்றியதைச் சொல்லி விட்டேன்.

வேதனையுடன்,
கோ.இராகவன்

Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை

உருளைக் கிழங்கு போண்டாவை சாஸில் தோய்த்து மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் அந்த சேட்டுப் பெண்மணி. அவுக் அவுக்கென்று வாய் நிறைய அமுக்கிக் கொண்டிருந்தான் அந்த உருண்டைப் பையன். பகலில் ரயிலில் போகின்றவர்கள் பொழுது போக்குவது இப்படி வாங்கித் தின்றுதான். திறந்த கதவருகில் நின்று கொண்டிருந்த சசிக்கு இந்தக் காட்சி புன்னகையை வரவழைத்தது.

"ஹே! போண்டாவாலா! இதர் ஆவோ!" வாங்கிய போண்டா பத்தாமல் இன்னும் வாங்கக் கூப்பிட்டாள் அந்தப் பெண்மணி. "போண்டா தின்னும் போண்டா" கேணக் கவிதை படித்தது சசியின் மனம்.

இப்படித்தான் சசியின் அம்மாவும் ஊட்டி ஊட்டி வளர்த்தார். சசிக்கு உளுந்த வடை என்றால் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் செய்ததை விடக் கடையில் வாங்கினால் இன்னமும் பிடிக்கும். வாரத்துக்கு இரண்டு மூன்று முறை பள்ளிக்கூடத்திலிருந்து வருகையில் வாழையிலையில் கட்டித் தெருமுக்கு டீக்கடை வடை காத்திருக்கும். மிளகாயும் புளியும் உப்பும் மட்டும் போட்டரைத்த ரொம்பவும் உறைத்த சண்டாளச் சட்டியினோடு தொட்டுத் தருவாள் அம்மா.

அந்த அம்மா ஒரு நாள் சொன்னாள். "எனக்கு சசிகுமார்னு மகனே பொறக்கலைன்னு நெனச்சுக்கிறேன். எனக்குப் பொறந்தது ஒரு மகதான். ஒனக்கும் எனக்கும் தொடர்பே கெடையாது. நீ வெளியில போடா! நான் செத்தாக் கூட இந்தப் பக்கம் வரக்கூடாது!" நினைக்கையிலேயே சசியின் முகம் இறுகியது. அழுக விரும்பாமல் அந்த சேட்டம்மாவின் மீது பார்வை திரும்பியது.

"தேக்கோ தேக்கோ....பூரா டிரஸ் மே....." மகனின் டிரஸ்சில் விழுந்த சாஸைத் துடைத்து விட்டார் சேட்டப்பா. நீளமான வெள்ளைத் துண்டு சுருண்டு கிடந்தது. பெயரளவில்தான் அது வெள்ளைத் துண்டு. அழுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. துவைக்கவோ மாட்டார்களோ! வடக்கில் ஒழுங்காகக் குளிக்க மாட்டார்களாமே! அந்த அழுக்குத் துண்டை வைத்து மகனின் சட்டையைத் துடைத்து விட்டார். "பானி தேதோ" மனைவியிடம் மகனுக்குத் தண்ணீர் குடுக்கச் சொன்னார்.

வெளியே போனால் சசிக்கு அப்பா கண்டிப்பாக பழரசம் வாங்கித் தருவார். திருநெல்வேலி ஜங்சனில் ஒரு பழரசக் கடை உண்டு. பழங்களையெல்லாம் ஒன்றாகக் கலக்கி அதோடு கலக்க வேண்டியதைக் கலந்து செக்கச் செவேலென்று பழரசம் கண்ணாடித் தம்ளர்களில் கிடைக்கும். வெயிலுக்குக் குடிக்கக் குளுகுளுவென்றும் இனிப்பாகவும் இருக்கும். குடித்த பிறகு வாயோரத்தில் பழரசம் ஒட்டியிருக்கும். அப்பாதான் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் வைத்திருக்கும் கர்ச்சீப்பை எடுத்து வாய் துடைத்து விடுவார். ஏனென்றால் வீட்டில் தெரிந்தால் பழரசம் வாங்கிக் கொடுத்ததற்குத் திட்டு விழுகுமே. பழரசம் வாங்கிக் கொடுத்தால் வீட்டில் சொல்லக் கூடாது என்று அப்பாவுக்கும் மகனுக்கும் எழுதாத ஒப்பந்தம். ஜங்சனில் குடித்த பழரசத்தின் இனிப்பு சமயநல்லூர் வரை இருக்குமாதலாம் சசியும் ஒப்பந்தத்தில் மானசீக கையெழுத்திட்டிருந்தான்.

அந்த அப்பா ஒரு நாள் சொன்னார். "சீச்சீ! மானத்த வாங்கீட்டியேல...ஊரு மூஞ்சீல முழிக்க முடியுமால.....கங்காணாமப் போயிரு.....இருந்து எங்க பேரையும் கெடுக்காத. ஊராரு மூஞ்சீல நாங்களாவது முழிக்கனும். சொத்துல சல்லிக்காசு கெடையாது ஒனக்கு. அப்படித்தாம்ல உயிலும் எழுதப் போறேன். பாசங் கீசம்னு இங்குட்டு வந்துறாத. அப்புறம் அந்தப் பாசத்தக் காட்ட நாங்க இருக்க மாட்டோம்."

லேசாகக் கண்ணீர்க் கோடு வழிந்து ரயில் காற்றில் உடனே காய்ந்து போனது. ஒரிசாக் காடுகள் மிக அடர்த்தியாக வெளியே தெரிந்தன. ஏதோ ஒரு பட்டிக்காடு அது. ஓலைக்குடிசை வேய்ந்த வீடுகள் நிறைய இருந்தன. வெளியே புழுதியில் பிள்ளைகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படிக் கூடி விளையாடியவள்தாள் சசியின் தங்கை ராஜேஸ்வரி. அம்மாவும் அப்பாவும் திட்டிய அந்த நாளில் அழுது கொண்டே வீட்டிற்குள் ஓடியவள்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை. எப்படி இருக்கிறாளோ! கல்யாணம் ஆயிருக்குமோ! குழந்தைகளும் ஆகியிருக்குமோ! பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது!

பக்கத்தில் நின்றிருந்த ஏஞ்சல் இடித்தாள். "ஏடி! சசிகலா....அங்க பாருடி....ஹீரோ ஒருத்தன் வர்ரான். கும்முன்னு இருக்கான் பாரு. நார்த் இண்டியன் மாதிரி இருக்கு. நேரா இங்கதான் வர்ரான். அப்படியே தள்ளிக்கிட்டு போயிருவோமா!" கிக்கிக்கெனச் சிரித்தார்கள் ஏஞ்சலும் சசிகலாவும். காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய்.

அன்புடன்,
கோ.இராகவன்