Monday, March 03, 2008

தங்க மரம் - 8

முன்கதைச் சுருக்கம்

ஆலோரின் சுடர்மகளான லிக்திமாவிற்கு ஆதி முத்தைப் பரிசளித்தது அவளது கணவன் சாண்டாவிற்குப் பொறாமையை உண்டாக்கியது. எப்படியாவது முத்தைக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் அவன். அப்பொழுது...
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5
பாகம் - 6
பாகம் - 7

பாகம் - 8

அந்தப் பளபளக்கும் முத்தின் மேல் சாண்டாவிற்கு ஆசை கூடிக்கொண்டே போனது. இப்படியெல்லாம் ஆசை உண்டாவது சாண்டாவிற்கும் புதிது. தானுண்டு தன் வேலையுண்டு குடும்பம் உண்டு என்று இருந்தான். ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே வேலை என்று வந்து அதில் ஒருவருக்கு மட்டும் உயர்வு என்று எண்ணம் தோன்றுமானால் குழப்பம்தான் உண்டாகும். அதிலும் கணவனை விட மனைவி உயர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.

பகலில் ஓளிர்ந்தும் இரவில் அடர்ந்தும் இருக்கும் முத்து அவன் கண்களிலேயே இருந்தது. அதை எப்படி அடைவது என்று மட்டுமே அவன் யோசித்தான். தன்னுடைய கோபுரத்திற்குப் போகாமல் நேராக மெரிமாவைப் பார்க்கச் சென்றான். விண்டாவும் அங்குதான் இருந்தான் அப்பொழுது. அவர்களிடம் தன்னுடைய பஞ்சாயத்தைத் தொடங்கினான். நால்வரில் முதல்வன் அவன் என்பதால் அவனே முத்தை வைத்திருக்க உரியவன் என்று பேசி... அவர்கள் இருவரையும் லிக்திமாவிடம் சமாதானம் பேசி முத்தை வாங்கி வர அனுப்பினான்.

முத்தை வாங்கி சாண்டாவிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ விருப்பமோ இல்லாவிட்டாலும் குழப்பம் வளர்ந்து கொண்டே போகிறதே என்ற எண்ணத்தில் லிக்திமாவிடம் பேசச் சென்றார்கள். என்ன இருந்தாலும் நீர்மகள் அல்லவா மெரிமா. குழப்பம் என்றதும் உருகித்தான் போனாள். விண்டாதான் அவளைச் சமாதானப்படுத்தி லிக்திமாவிடம் தள்ளிக் கொண்டு சென்றான்.

தன்னைப் பார்க்க வந்த மெரிமாவிற்கும் விண்டாவிற்கும் பானிகா குடிக்கக் கொடுத்து வரவேற்றாள். வந்தவர்கள் குழந்தை தனிமாவிற்கு பரிசுகள் கொடுத்தார்கள். வேலைப்பாடமைந்த ஒரு கண்டாடிப் புட்டியில் தன்னுடைய நீராதாரத்திலிருந்து எடுத்து வந்த தூநீரைக் கொடுத்தாள் மெரிமா. தங்கப் பெட்டி ஒன்றில் வளியை அடைத்துக் கொடுத்தான் விண்டா. இந்தப் பரிசுகளை யாருக்கும் இவர்கள் கொடுப்பதில்லை. அபூர்வப் பரிசுகளைப் பெறும் முதல் குழந்தை தனிமாதான்.

பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் மெரிமா முசுமுசுவென்று அழுதுகொண்டிருந்ததால் விண்டாதான் முதலில் பேச்சைத் தொடங்கினான்.

"லிக்திமா, நீ சுடர்மகள். ஆற்றலரசி. குழப்பம் இவ்வளவு பெரிதாக விட்டிருக்கலாமா?"

மெல்லச் சிரித்தாள் லிக்திமா. "விண்டா...குழப்பம் என்று நீ சொல்வது என்ன? முத்து என்னிடம் இருப்பதுதானே. சாண்டா கேட்டும் நான் கொடுக்காமல் இருப்பதுதானே. உன்னுடைய உள்ளங்கைகள் இரண்டிலும் மரகதங்கள் பதிந்திருக்கின்றனவே...அவற்றை மெரிமா கேட்டால் கொடுப்பாயா? அல்லது மெரிமாவின் நாவை அலங்கரிக்கும் நீலக்கல்லை நீ கேட்டால் மெரிமா தருவாளா?"

சுடர்மகள் இப்படிக் கேட்டதும் மெரிமாவின் விசும்பல் கூடியது. தென்றலாக அவளை அணைத்துக் கொண்டு விண்டா பேசினான். "புரிகிறது லிக்திமா. ஆனால் ஆளுக்கொரு கல் இருக்க உனக்கு அதிகப்படியாக ஒரு முத்து கிடைத்திருபப்துதான் சாண்டாவிற்கு உறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கொடுப்பதாக நீயும் இல்லை. விடுவதாக அவனும் இல்லை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?நால்வரில் முதல்வர் அவர்."

"விண்டா.. நால்வர் நாம். அதில் முதல்வர் இரண்டாமவர் என்ற பேதம் ஏது? நால்வரில் ஒருவர் கடமை பிழைத்தாலும் அனைவருக்கும் கேடுதானே. நீயும் மெரிமாவும் இல்லாவிட்டால்... .காற்றும் நீருமில்லாத இந்த நிலம் மட்டும் இருந்து என்ன பயன்? நீங்கள் அனைவரும் இல்லாமல் வெறும் ஆற்றலை வைத்துக் கொண்டு நான் மட்டும் என்ன செய்ய முடியும்? நால்வரும் இணைந்து இயைந்து பணியாற்றுவதாலே ஆலோர் செழித்திருக்கிறது. அப்படியானால் நாம் அனைவரும் சமம். அதைக் காட்டத்தானோ என்னவோ ஆதி நான்கு கோபுரங்களையும் ஒரே அளவில் அமைத்து நடுவில் இருக்கும் அரச கோபுரத்தை மட்டும் பெரிதாக அமைத்திருக்கிறார்."

கழுத்தில் இருந்த முத்துக் கோர்த்த சங்கிலியைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் காட்டினாள். "பார் விண்டா..இந்த முத்தை வைத்துக் கொண்டுதான் என்னுடைய ஒளியையும் ஆற்றலையும் நான் கட்டுப்படுத்துகிறேன். முத்து கிடைப்பதற்கு முன்பும் செய்து கொண்டுதான் இருந்தேன். ஆனால் முத்து வேலையை எளிமையாக்குகிறது. இதென்ன அழகு பொருளா? அப்படியானால் கொடுத்திருப்பேனே!"

விண்டாவும் யோசனையில் இருந்தான். லிக்திமா முத்தைக் கொடுக்கப் போவதில்லை என்று தெரிந்து விட்டது. அதே நேரத்தில் சாண்டாவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எதற்கும் சாண்டாவிடம் ஒருமுறை பேசுவதென்றும்... அது உதவாவிட்டால் அடுத்து ஆதிதான் மீதியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் விண்டா.

எதையோ சொல்வதற்கு வாயைத் திறந்தான் விண்டா. ஆனால் ஏதோ ஒரு அதிர்வினால் தொடர்ந்து பேச முடியவில்லை. முதலில் கால்கள் நடுங்குவதாக அனைவரும் உணர்ந்தார்கள். ஆனால் அது கூடிக்கொண்டே போனது. லிக்திமாவும் விண்டாவும் ஓரளவு சுதாரித்துக் கொண்டாலும் தளும்பினாள் மெரிமா. நீர்மகள் அல்லவா.

படக்கென்று மெரிமாவின் காலுக்கடியில் நிலம் பிளந்தது. நீரென்றால் பள்ளத்தில் பாய்வதுதானே. ஆவென இரைச்சலோடு பள்ளத்தில் வீழ்ந்தாள். மளுக்கென்று வெள்ளம் பெருக்கெடுத்து அறையெங்கும் தெறித்தது. லிக்திமாவில் நீர் பட்டதும் சுர்ரென்று கொதித்து ஆவியானது. அந்த நடுக்கத்திலும் நடந்ததைப் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்ட விண்டா சூறாவளியானான். விர்ரென்று சுழன்று பள்ளத்தில் பாய்ந்து மெரிமாவை வெளியே இழுத்தான். ஒரு அறைக்குள்ளேயே நிலநடுக்கம்...வெள்ளம்..சூறாவளி...ஒரே களேபரம். தொடர் தடுமாற்றத்தில் கையிலிருந்த முத்தைத் தவறவிட்டாள் லிக்திமா.

அந்தச் சங்கிலிக்காகவே காத்திருந்தது போலத் தரை திறந்தது. திறந்த பிளவில் முத்துக் கோர்த்த சங்கிலி விழவும் மீண்டும் தரை மூடவும் சரியாக இருந்தது. நொடிப்பொழுது கூட ஆகியிருக்குமா என்பதே ஐயம். அனைத்தும் பட்டென்று நடந்து முடிந்து. முத்துச் சங்கிலியைத் தொலைத்த அதிர்ச்சியில் வெளுத்து ஒளிர்ந்தாள் லிக்திமா.


அந்நேரத்தில் விண்டாவும் மெரிமாவைப் பற்றியிழுத்துக் காப்பாற்றினான். முத்து விழுந்ததையோ தரைக்குள் மறைந்ததையோ அவன் கவனிக்கவேயில்லை. மெரிமாவோ தொப்பலாக நனைந்து அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அவளைச் சிதறிவிடாமல் காற்றால் அணைத்துத் தேற்றினான் விண்டா. தன்னுடைய கோபுரத்திற்கு வந்தவர்களுக்கு இப்படியாகி விட்டதே என்று வருந்துவதா...இல்லை முத்தைத் தொலைத்து விட்டோமே என்று பதறுவதா என்று தெரியாமல் திகைத்தாள் சுடர்மகள்.

இத்தனைக்கும் காரணம் யார் என்பதை ஊகிப்பதில் கதையைப் படிப்பவர்களுக்குச் சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன். மண்ணின் மகனான சாண்டாதான் இப்படிச் செய்தது. முத்து அவன் கைக்குக் கிடைத்து விட்டது. ஆனால் இரண்டு குற்றங்களைச் செய்துவிட்டான் அவன். ஒன்று... லிக்திமாவிற்கு ஆதி கொடுத்த பரிசைத் திருடியது. இரண்டு...தெய்வங்கள் நால்வரில் ஒருவரைத் தாக்கியது. தெய்வங்கள் நான்கும் ஒருவருக்கொருவர் துணை நின்று ஆலோரைக் காக்க வேண்டும் என்பது ஆதி இட்ட கட்டளை. அதை மீறித் தாக்குகின்றவர்கள் ஆதியைத் தாக்குகின்றவர்களாவர்.

இந்த இரண்டு குற்றங்களையும் செய்து விட்டு ஆலோரில் இருக்க சாண்டா விரும்பவில்லை. ஆதிக்கு எட்டாத இடமென்று அவன் தேர்ந்தெடுத்து பூமியை. நிலத்தைக் காக்கும் கடவுளாகிய தான் இல்லாவிட்டால் ஆலோர் வீழ்ந்து விடும். அப்படி வீழாமல் இருக்க வேண்டுமெனில் தன்னுடைய காலில்தான் வந்து விழுவார்கள் என்ற மமதையோடு பூமிக்குச் சென்று விட்டான்.

தொடரும்..

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, February 25, 2008

தங்க மரம் - 7

முன்கதைச் சுருக்கம்

கதிரவனும் சித்திரையும் ஆலமரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு பெட்டியையும் செங்கோலையும் சேர்த்து வைத்து உரசினார்கள். அப்பொழுது...
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5
பாகம் - 6


பாகம் - 7

கிணிகிணியென்ற மணியோசையும் துண்டு துண்டாக வந்து விழுந்த சொற்களும் இருவரையும் குழப்பியது. உரசிக்கொண்டிருக்கும் பொழுதே பெட்டியும் கோலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. அப்படி ஒட்டிக்கொண்டதும் பளீர் என்று ஒளிக்கீற்று செங்கோலில் இருந்து புறப்பட்டது. அது கண்ணுக்குத் தெரியாத வட்டவடிமான மாயத்திரையில் பட்டு காட்சிகள் தெரிந்தன. வியப்பின் உச்சியில் இருவரும் காட்சிகளைக் காணத் தொடங்கினர்.

காட்சியில் முதலில் ஆலோர் வந்தது. அந்தப் பின்னணியில் அழகிய பெண்ணின் முகம் தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கையில் பொலிவும் அறிவும் அருளும் அன்பும் நிரம்பிய தெய்வீகம் தெளிந்தது. ஒளிவீசும் செந்நிறக் கண்களும் சுற்றியும் ஜொலிக்கும் பொன்னிற ஒளியும் பார்த்த பொழுதிலேயே கதிரவனின் உள்ளத்திலும் சித்திரையின் உள்ளத்திலும் ஒரு மதிப்பை எழுப்பின. அந்த அருளுடைப் பெண்ணே பேசினார்.

"வணக்கம். நான் லிக்திமா. ஆலோர் கிரகத்து ஒளியரசி. சுடர்மகள் என்றும் என்னைச் சிறப்பித்து அழைப்பார்கள். உங்களுக்கு இந்தப் ஒளிப்படக் கருவியை அனுப்பியிருப்பது ஒரு உதவியை வேண்டித்தான். என்ன உதவி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆலோரின் தோற்றத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன். பிறகு உதவியைச் சொல்கின்றேன்.''

இப்பொழுது காட்சி மாறியது. ஆலோரின் சுவற்றில் இருக்கும் ஒரு கோபுரத்தின் உள்ளிருந்த அறை தோன்றியது. அந்த அறையின் ஒரு தங்கத் தொட்டிலில் சின்னஞ்சிறு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. ஒளியின் பிறப்பிடம் போலச் சுடர் விட்டுக்கொண்டிருந்த லிக்திமா உலகின் எந்த இசைக்கருவியும் இசைக்கலைஞரும் தோற்றுப் போகும் இனிமையுடன் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். அவருடைய மாணிக்கக் கண்களும் கழுத்துச் சங்கியில் தொங்கிக் கொண்டிருந்த முத்தும் ஆனந்த ஜோதியை வீசிக் கொண்டிருந்தன. சட்டென்று உள்ளே நுழைந்தார் சாண்டா. பொன்னாடை இடுப்பில் மினுக்க வைரம் நெஞ்சில் மினுக்க நுழைந்தார். கதையைப் படிக்கின்றவர்களுக்கு அவர்தான் ஊழிவாயன் என்று அழைக்கப்பட்டவர் என்பது இப்பொழுதே புரிந்திருக்கும்.

"லிக்திமா........ ஒரு வாரமாக நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த முத்தைக் கொடுப்பதில் உனக்கென்ன குறைந்து விடப் போகின்றது? நான் யார் என்பது உனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது தானே?"

"கணவனே..நீ யார்? சாண்டா. மண்ணின் மகன் என்று ஆலோர் போற்றும் மேலோன். ஆதியில் ஒன்றுமில்லாமல் இருந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆதியின் சோதியால்தான் எல்லாம் உண்டானது. அதாவது ஆதியே அனைத்துமாய் ஆனது. அந்த எல்லாவற்றிலும் ஆலோர் கிரகமும் ஒன்று. உலகின் மற்ற கிரகங்களைப் போலில்லாமல் தட்டைக் கிரகமாக ஆலோரை உண்டாக்கினார் ஆதி.

ஆலோரைப் பார்த்துக் கொள்ள தன்னிலிருந்தே நான்கு ஆற்றல்களை உண்டாக்கி அற்புத சக்திகளையும் கொடுத்தார். முதலில் மண்ணைப் பார்த்துக்கொள்ள உன்னை உருவாக்கினார். சாண்டா என்று பெயரும் இட்டு...உறுதியில் சிறந்து மக்களையும் மற்ற உயிர்களையும் தாங்கும் வலிமையைக் குறிக்க உனது நெஞ்சில் வைரம் பதித்தார். அடுத்து என்னை உண்டாக்கினார். ஒளியும் ஆற்றலும் என்னிடம் இருந்து நீங்கள் பொறுப்பேற்றுள்ள மண்ணின் உயிர்களுக்கு உண்டாகட்டும் என்று பணியும் கொடுத்தார். என்னைச் சிறப்பிக்க செவ்வொளி பரப்பும் மாணிக்கக் கண்களைக் கொடுத்தார். எனது ஒளியைக் கூட்டிக் குறைத்து இரவையும் பகலையும் உண்டாக்கினார். அதே போல நீருக்கு மெரிமாவையும் காற்றுக்கு விண்டாவையும் உருவாக்கினார். மெரிமாவிற்கு நீலக் கல்லை நாவில் பதித்தார். விண்டாவிற்கு மரகதத்தைக் இரண்டு உள்ளங்கைகளிலும் பதித்தார். நீரின்றி அமையாது உலகு என்பதால் மெரிமாவிற்கு நீர்மகள் என்ற சிறப்புப் பெயர். காற்றின்றி எதுவும் வாழாது என்பதால் விண்டாவிற்கு தென்றலன் என்ற சிறப்புப் பெயர்.

ஆலோர் சுற்றுச் சுவற்றில் நான்கு கோபுரங்கள் அமைத்து நம் நால்வருக்கும் கொடுத்தார். அங்கிருந்து நாம் ஆலோரைக் காத்து வருகையில் உனக்கு என்னையும் விண்டாவிற்கு மெரிமாவையும் மணம் செய்து வைத்து வாழ்வளித்தார். அன்றிலிருந்து நாம் ஆலோரைக் காத்துப் பராமரித்துக் கொண்டு வருகின்றோம். சரிதானே!"

"கேட்ட கேள்வி என்ன? சொல்லும் விடை என்ன? நான் யார் என்று கேட்டால் ஆலோரின் வரலாற்றையும் ஆதியின் பெயரையும் சொல்லி நானும் நீயும் ஒன்று என்று கதையளக்கின்றாயா?"

"குடும்பம் என்று வந்தால் கணவனும் மனைவியும் ஒன்றுதானே? இதில் பெரியோர் சிறியோர் என்ற பேதம் ஏது?"

"ஆகா...அழகான பேச்சு...ஆனால் அது மறக்கடிப்பது உன்னுடைய ஆணவத்தை. சுடர்மகள் அல்லவா...அதனால் என்னுடைய சிறப்பை இருளில் தள்ளவும் உன்னுடைய பெருமையை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தெரிந்திருக்கிறது."

"சாண்டா! என்ன பேசுகின்றாய்? எனக்கு ஆணவமா? உன்னை விட என் சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றேனா? சுடர்மகளாக என்னுடைய கடமையையும் மனைவியாக என்னுடைய வாழ்க்கையையும் ஒழுங்காக நடத்தியதால்தானே இரண்டு பரிசுகள் கிடைத்திருக்கின்றன."

"அந்த இரண்டு பரிசுகளை நீ பெற்றதால் என்னிலும் பெரியவள் நீ என்ன மமதையில் பேசுகின்றாய். கணவன் மனைவிக்குள் பெரியவர் இல்லையென்று சொல்லி விட்டு உன்னை உயர்த்திக் காட்டும் அந்த முத்தை என்னிடம் கொடுக்க மறுக்கிறாய். அதன் மூலம் நால்வரில் பெரியவள் நீ என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறாய். நீ ஒரு புகழ் விரும்பி."

ஆட்டிக் கொண்டிருந்த தொட்டிலை நிறுத்தி விட்டு எழுந்தார் லிக்திமா. அவருடைய பேரொளி சற்றுக் குன்றியது போலத் தோன்றியது. ஆனாலும் மிடுக்கிற்குக் குறைவில்லை.

"நானா புகழ் விரும்பி? சாண்டா..... இந்த முத்து ஆதி பரிசளித்தது. நமது மகள் தனிமா பிறந்த பொழுது கிடைத்த பரிசு. பகலில் நான் ஒளிரும் பொழுது இந்த முத்து வெள்ளொளி வீசும். மாலை வரவர நீலமாகி இரவிலோ அடர்ந்து ஒளிவீசும். ஆற்றலை நான் வெளிப்படுத்துகையில் அதைச் சீர்மை செய்யவும் உதவுகிறது இந்த முத்து. அதைக் கேட்டால் எப்படித் தருவது? உனது நெஞ்சிலே பதித்திருக்கும் பெரிய வைரத்தை யாரேனும் கேட்டால் தர முடியுமா?"

லிக்திமாவின் பேச்சு சாண்டாவிற்கு ஆத்திரத்தையே கூட்டியது. "நான்கு தெய்வங்களும் ஆளுக்கு ஒன்று என்று கற்களை வைத்திருக்கையில்...உனக்கு மட்டும் ஏன் இரண்டு? நமக்குள்ளே பாகுபாடு காட்டத்தானே?"

"சாண்டா... கொடுத்தது ஆதி. நாளையே உனக்கும் ஒரு பரிசு கிடைக்கலாம். அப்பொழுது மற்றவர்கள் பொறாமைப் பட வேண்டுமா? பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் நாம். வெறும் வெறுப்பில் இருந்தால் சரியாகுமா?"

"லிக்திமா. பேச்சைக் குறை. உனக்கான ஒன்று என்னிடம் இருந்தால் என்ன? என்னுடைய கழுத்தை இந்த முத்து அலங்கரித்தால் என்ன வந்துவிடப் போகிறது?"

"ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்?"

சாண்டாவின் ஆத்திரம் வைரத்தில் தெரிந்தது. செக்கச்செவேல் என்று நெருப்பாய் ஜொலித்தது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அந்த இடத்தில் இருந்து விலகி தன்னுடைய கோபுரத்திற்குச் சென்று விட்டான். மெரிமாவும் விண்டாவும் நிகழ்ச்சிகளைக் கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெய்வங்களுக்குள்ளே சண்டை எழுந்தால் ஆலோரை யார் காப்பாற்றுவது. ஆதியே வந்துதான் இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். பிரச்சனைக்குள் தலையிடாவிட்டாலும் தொடர்ந்து மெரிமாவும் விண்டாவும் நடப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தன்னுடைய கோபுரத்திற்குச் சென்ற சாண்டாவின் உள்ளத்தில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது. அதைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு தவறான எடுத்துக்காட்டாக தான் மாறப்போவது தெரியாமல் திட்டம் தீட்டினான் சாண்டா.

தொடரும்

பி.கு - படம் வரைந்து தரும் கிரண் பணிப்பளுவினால் இந்த வாரம் திட்டமிட்ட படி படம் தரமுடியவில்லை என்றும் அடுத்த வாரம் கண்டிப்பாக செய்து தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, February 18, 2008

தங்க மரம் - 6

முன்கதைச் சுருக்கம்

இருண்டு கிடக்கும் ஆலோர் கிரகத்தைப் பிழைப்பிக்க தனிமாவாலும் பிடிமாவாலும் மட்டுமே முடியும் என்று அரசி சொன்னதைக் கேட்டுச் செயல் முடிக்க வாக்குறுதி அளித்தாள் தனிமா. பாதி உண்டிருந்த கிரகத்திற்காகப் புறப்பட்டாள் தனிமா.....
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5

தங்க மரம் - 6

ஆலோரின் நடுக்கோபுர உச்சியிலிருந்து ஜிவ்வென எழும்பிப் பறந்தார்கள் தனிமாவும் பிடிமாவும். ம்ம். இல்லையில்லை. பிடிமாதான் இறக்கைகளை விரித்துப் பறந்தாள். தனிமா பிடிமாவின் மேல் உட்கார்ந்திருந்தாள்.

பழுப்பு நிறம்...மரகதத் தந்தம்..இரண்டு அழகிய இறக்கைகள் கொண்ட பெண்யானைதான் பிடிமா. அவள் மீது ஏறித்தான் பறந்து கொண்டிருந்தாள் தனிமா. அதுவும் பூமியை நோக்கி. அவ்வப்பொழுது திசைகாட்டியை எடுத்துப் பறக்கும் வழியைச் சரி பார்த்துக் கொண்டாள். விண்வெளியில் வழி மறந்து விட்டால் தொலைந்து போக வேண்டியதுதானே.

முதன்முதலாக தன்னுடைய கிரகத்தை விட்டுத் தெரியவே தெரியாத இடத்திற்குப் போகிறாள். அதுவும் போரிடுவதற்கு. எப்படிப் போரிடப் போகின்றோமோ என்ற எண்ணம் அவ்வப்பொழுது தோன்றினாலும் உள்ளத்தில் உறுதி குறையவேயில்லை. அதுவுமில்லாமல் பறக்கும் பொழுது காணும் காட்சிகள் அவளுக்கும் பிடிமாவிற்கும் புதுமகிழ்ச்சியை உண்டாக்கின. பலப்பல சிறிய நட்சத்திரங்கள்..எரிகற்கள்..கிரகங்கள்..தொலைவில் மினுக்கும் தாரகைகள்...என்று நவரத்தினங்களைக் கொட்டி வைத்த சாலையில் செல்வது போல இருந்தது. தேவையான ஆற்றல் இருந்ததால் பறப்பது பிடிமாவிற்கு எளிதாகவே இருந்தது.
அவ்வப்பொழுது ஒளித்தாரகைகளுக்குள் புகுந்து வெளிவருவதும் இருவருக்கும் சுகமாக இருந்தது. அந்தத் தாரகைகளில் இருந்து ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சம் ஏற்றிக் கொண்டார்கள்.

கிட்டத்தட்ட பாதி தொலைவு கடந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர்தானே பேச்சுத்துணை.

"நாம் புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டன. பூமியை அடைய இன்னும் ஒன்றரை நாளாவது ஆகும் என்று தெரிகிறது. புறப்படும் பொழுது கட்டிக் கொடுத்த காரிசுகள் நிறைய இருக்கின்றன. ஆளுக்கொன்று கொறிப்போமா?"

தலையை ஆட்டி மறுத்தாள் பிடிமா. "வேண்டாம் தனிமா. சற்று நேரம் போகட்டும். இப்பொழுது பசியில்லை." பேசிக்கொண்டே வந்த பிடிமா படக்கென்று நின்று விட்டாள்.

ஏன் என்று கேட்க நினைத்து வாயைத் திறந்தாள் தனிமா. ஆனால் முடியவில்லை. அவளால் சிறிதும் அசைய முடியவில்லை. பிடிமாவாலும்தான். ஆகையால்தான் படக்கென்று நின்று விட்டாள். ஒரு நொடி இருவருமே திகைத்துப் போனார்கள். இப்பிடி அசையாமல் தொடர்ந்து நின்று விட்டால் ஆற்றல் வீணாகிவிடுமே. பிறகெப்படி பூமிக்குப் பறப்பது?

அப்பொழுதுதான் அவர்களுக்கு நேர்ந்தது சற்றுப் புரியத் தொடங்கியது. கண்ணுக்குத் தெரியாத ஒருவிதக் கண்ணாடிக் கயிற்றால் இருவரும் கட்டப்பட்டிருந்தார்கள். மிகமிக மென்மையான அந்தக் கயிற்றின் அழுத்தம் புரியவில்லை. ஆனால் இறுக்கம் புரிந்தது.

ஒரு பயங்கரம் அவர்களது கண்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. ஆம். அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய சிலந்தி. பக்கவாட்டில் இருந்து நகர்ந்து அவர்களுக்கு முன்னால் நின்றது. அதன் வலையில்தான் தனிமாவும் பிடிமாவும் சிக்கியிருந்தார்கள். பார்க்கவே அருவெறுப்பாக இருந்த அந்தச் சிலந்தி எச்சில் ஒழுகும் கோரவாயின் கூரிய பற்களைக் காட்டிக் கொண்டு விரைந்து வந்தது.

கைகால்களை அசைக்க முடியாவிட்டாலும் மனத்தால் எதையும் செய்யும் திறமையுள்ளவர்கள் ஆலோரிகள். மனதால் முறுக்கிக் கண்ணாடிக் கயிறுகளை நெகிழ்த்தினார்கள் தனிமாவும் பிடிமாவும். கயிறு அறுபடுவதைக் கண்டதும் சிலந்து மறுபடியும் கண்ணாடிக்கயிறுகளைக் கக்கியது. இவர்கள் அறுக்க அறுக்க சிலந்தியும் கயிறுகளைக் கக்கிக் கொண்டேயிருந்தது.

இப்படியே சென்று கொண்டிருந்தால் வேலைக்காகது என்பதைத் தனிமா புரிந்து கொண்டாள். மனதிற்குள்ளேயே பிடிமாவுக்குச் செய்தி அனுப்பினாள்.

"பிடிமா.. இந்தச் சிலந்தியை நாம் மனதால் தாக்குவோம். நீ அதன் எட்டு கால்களையும் ஒவ்வொன்றாய் மனதால் உடை. நான் அந்தக் கண்ணாடி கக்கும் வாயைக் கிழிக்கிறேன். இல்லையென்றால் தொடர்ந்து நாம் கட்டப்பட்டுக்கொண்டேயிருப்போம்."

பிடிமாவுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. மனதால் சிலந்தியின் ஒரு காலைத் தும்பிக்கையால் பிடித்து இழுப்பது போல இழுத்தது. யாருமே இல்லாமல் தன்னுடைய கால் இழுபடுவதை உணர்ந்த சிலந்தி ஆத்திரத்தோடு திரும்பியது. அதே நேரத்தில் சரியாக அதன் வாயில் குத்தினாள் தனிமா.

தன்னுடைய உணவு/எதிரிகள் கண் முன்னே கட்டுப்பட்டுக் கிடக்க தன்னைத் தாக்குவது யாரென்று தெரியாமல் தடுமாறியது சிலந்தி. காய் காய் என்று கத்திக் கொண்டு தன் காலை யாரோ பிடித்திருக்கிறார்கள் என்று நினைத்து....தன் காலைத் தானே கடித்தது. பிடிமாவும் விடாமல் காலைப் பிடித்து முறுக்க முறுக்க சிலந்தியில் அலறல் கூடியது. ஆனால் தொடர்ந்து அலறவும் விடாமல் தனிமா அதன் தாடையிலேயே குத்தினாள். தாடையும் உடைந்து கிழிந்து எச்சிலும் கண்ணாடியிழைக் கூழும் ஒழுகின. யாரும் இல்லாமல் தானே தாக்கப்பட்டுக் கொள்ளும் காட்சி மிகக்கொடூரமாக இருந்தது.

அதற்குள் ஒரு காலை உடைத்து விட்ட பிடிமா அடுத்த காலுக்குத் தாவியது. மிகவிரைவிலேயே இரண்டு மூன்று கால்கள் நொறுங்கின. சிலந்தி நேராக நிற்க முடியாமல் லம்பி ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. வாய் கிழிந்து போனதால் கண்ணாடிக் கயிறுகளை அதனால் பீய்ச்சியடிக்கவும் முடியவில்லை. வலியும் வேதனையும் தாளாமல் தானே விழுந்து புரண்டது. அதுதான் சரியான நேரம் என்று தனிமாவும் பிடிமாவும் தங்களைக் கட்டியிருந்த கண்ணாடிக்கயிறுகளை அறுத்துக் கொண்டார்கள்.

மனதினாலேயே இருவரும் வழிந்திருந்த கண்ணாடியிழைக் கூழால் சிலந்தியை இறுக்கக் கட்டினார்கள். நகரவும் முடியாமல் மூச்சு விடவும் முடியாமல் சிறிது நேரத்திலேயே சிலந்தி விறைத்தது.

பெருமூச்சு விட்டபடியே தங்களைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் தனிமாவும் பிடிமாவும். ஆளுக்கு இரண்டு காரிசுகளைக் கடித்துத் தின்றார்கள். களைப்பு சற்று நீங்கியது. அப்படியே சிறுது பானிகாவும் குடித்துக் கொண்டார்கள். நா வறட்சியைப் போக்கியதுடன் சிறிது தெம்பும் வந்தது.

நேரம் கடத்த விரும்பாமல் உடனே புறப்பட்டார்கள். அப்பொழுதுதான் ஒரு பெரிய உண்மை இருவருக்குமே புரிந்தது. ஆம். இருவரின் ஆற்றலிலும் பெருமளவு சிலந்திச் சண்டையிலேயே வீணாகிப் போனது. மிச்சமிருக்கும் ஆற்றல் அவர்களை பூமியில் கொண்டு சேர்க்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் முன்னேறுவது என்ற முடிவோடு தொடர்ந்தார்கள். விரைந்து செல்ல முடியாத வகைக்கு ஆற்றல் பெருமளவில் குறைந்து வேகம் மட்டுப்பட்டது. வழியில் அங்காங்குள்ள ஒளிப்பொட்டுகளிலிருந்தும் தொலைதூரத் தாரகைகளில் இருந்தும் ஆற்றலைக் கொஞ்சம் பெற்றுக்கொண்டாலும்....அவையெல்லாம் போதவில்லை. ஒருவழியாக இருவரும் குற்றுயிரோடு தங்களை இழுத்துக் கொண்டு பால்வெளி மண்டலத்திற்குச் சென்றார்கள்.

பால்வெளி மண்டலத்தில் நுழையும் பொழுதுதான் ஆற்றல் முழுவதும் தீர்ந்து மயங்கத் தொடங்கினார்கள். அந்த மயக்கம் தீர வரவேற்றான் கதிரவன். உலகையெல்லாம் தனது ஒளிக்கற்றைகளால் காக்கும் கதிரவனைச் சொல்கிறேன். அந்தக் கதிரவனின் வெள்ளொளியானது தெம்பைக் கொடுத்தாலும் ஏற்கனவே இருந்த ஆற்றலையெல்லாம் வீணடித்து விட்டதால்....இப்பொழுது கிடைக்கும் ஆற்றல் அவர்களை நகர்த்தவும் உயிரோடு வைத்திருக்கவும் மட்டுமே முடிந்தது. பூமியை நெருங்க நெருங்க களைப்புதான் இருவரையும் வாட்டியது.

சரியாகக் காற்று மண்டலத்திற்குள் நுழைந்ததுமே புவியீர்ப்புவிசை அவர்களைப் பற்றி இழுத்தது. ஆனால் அதைத் எதிர்த்துப் பறக்கும் ஆற்றல் இல்லாமலையால் பிடிமா பிடிமானம் இழந்தது. நிலை குலைந்து கீழே விழுந்தாள் தனிமா. இருவரும் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று தரையை நோக்கி இழுக்கப்பட்டார்கள்.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

பி.கு - வழக்கமாக படம் வரைந்து தரும் கிரண் விடுமுறை முடிந்து திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டதால் அடுத்த வாரத்தில் இருந்து படங்கள் வரும்.

Monday, February 11, 2008

தங்க மரம் - 5

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.

ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். மற்றும் பாகம்-3 பாகம்-4

பாகம் - 5

உருளைப் பெண்ணின் மிரட்டலைக் கேட்டு ஆத்திரத்தோடு இருந்த ஊழிவாயனின் எரிகின்ற சினத்தில் எண்ணெய் ஊற்றியது தேலி. அது ஊழிவாயனுக்கு ஏதும் கெட்டது நல்லது நடக்குமானால் முன்னால் எச்சரிக்கும் பறவை. காய் காய் என்று கத்தியது. அந்தக் கத்தலைக் கேட்டு தேலியிடன் சென்றால் ஊழிவாயன்.

"ஊழிவாயா.... நீ விரைந்து செயல் முடிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. நீ பிடித்து வைத்திருக்கும் செங்கோமானின் மனைவி தன்னுடைய மகன் கதிரவனிடம் உன்னை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவன் வெற்றி பெறுவானோ! தோல்வி பெறுவானோ! ஆனால் உனக்கு ஒரு எதிரி உண்டாகி விட்டான்."

ஊழிவாயனின் நெஞ்சிலிருந்த வைரம் செவேலென்று ஒளிர்ந்தது. "தேலி... இப்பொழுது அந்தச் சிறுவன் எங்கிருக்கிறான்? உடனே சொல்...நான் சென்று கொன்று வருகிறேன்."

தேலி கிக்கித்தது. "ஹா ஹா எந்த இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாது. அது என்னுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இன்று அவனுடைய பிறந்தநாள். ஆகையால் இல்லத்தில் இருப்பான் என்றுதான் தோன்றுகிறது."

அடுத்த நொடியிலேயே அந்த இடத்திலிருந்து மறைந்தான் ஊழிவாயன். மிக விரைவில் கதிரவனின் இல்லத்தில் தோன்றினான். "கதிரவா....வா இங்கே?"

ஆரவாரத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கேட்டு வெளியே வந்தார் அமுதம். வந்திருப்பவன் கொடியவன் என்று மட்டும் உடனே புரிந்தது. "யார் நீர்? என்ன வேண்டி உள்ளே வந்தீர்?" சற்று அதட்டலோடுதான் கேட்டார்.

"ஓ நீதான் அமுதமா? கதிரவனின் தாய்தானே? என்னைக் கண்டு அச்சப்படாமல் என்னையே அதட்டத் துணிந்த உம்மைச் சும்மா விடமாட்டேன். மந்திரங்களைக் கற்றவன் நான். அதைப் புரிக." உறுமினான்.

"தமிழைக் கற்றவர்கள் நாங்கள். தமிழ்வேளை உற்றவர்கள் நாங்கள். உன்னுடைய மந்திரங்களும் தந்திரங்களும் எங்கள் உண்மைச் சொல்லுக்கும் செயலுக்கும் முன்னால் அற்றுப் போகும். அதைப் புரிக முதலில்." மறமும் அறமும் பொலிந்து சினந்தது அமுதத்தின் முகத்தில்.

அது ஊழிவாயனின் சீற்றத்தை ஏற்றத்தில் வைத்தது. "பெண்ணே... உனது கணவனைப் பிடித்து வைத்திருக்கிறேன் இத்தனை ஆண்டுகளாக. அப்படியிருக்கையில் நீ என்ன செய்து விட முடியும்? உன்னுடைய மகன் என்ன செய்து விட முடியும்? உங்களைப் பொடியாக்கி மண்ணில் முளைக்கும் செடியாக்க நொடி கூடப் பிடிக்காது."

தன்னுடைய கணவனைப் பிடித்து வைத்திருப்பவன் வந்திருப்பவன் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்திலிருந்த அன்பையெல்லாம் கிளறி ஆத்திரமாக்கி ஊழிவாயன் மேல் பாய்ச்சியது. "கொடியவனே.....யார் பொடியாவார்? குற்றத்தைக் கொற்றம் என்று நினைக்கும் உன் போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."

"மடப் பெண்ணே...பேச்சைக் குறை. உன் தமிழறிவை பள்ளியில் காட்டு. இந்தக் காட்டுக்கள்ளியிடம் காட்டாதே. இது பார் ஏவி விடுகிறேன் நெருப்பை."

சிரித்து விட்டார் அமுதம். "நெருப்பா? ஒவ்வொரு நாளும் எங்கள் அடுக்களையில் அதில்தான் வேகிறது பருப்பு. நீ ஏவி விடு. அதைச் சாம்பலாக்கி நான் காற்றில் தூவி விடுகிறேன்."

கையிலிருந்த மந்திரத்தண்டை எடுத்துத் திருகினான் ஊழிவாயன். தண்டிலிருந்து கபகபவென நெருப்புக் கொப்புளங்கள் பொங்கிப் பரவின. அந்தக் கொப்புளங்கள் அமுதத்தைச் சுற்றி வளைத்தன.

"உணவு என்பது உயிருக்கு அடிப்படை. அதை உண்டாக்கத் தேவை தீயெனும் படை. பசிப்போரை எதிர்க்கும் நெருப்பே நீ இப்போர் மறந்து சமைப்போர் அடுப்பில் புகுக. உணவு உண்டாக்குக. மீந்த சாம்பல் எங்கள் வழிபாட்டுக் கொப்பரையில் திருநீறாகுக." அமுதம் சொல்லச் சொல்ல நெருப்புக் கொப்புளங்கள் அவரிடமிருந்து விலகி அடுப்பறைக்குள் சென்று அடுப்புக்குள் புகுந்தது.

ஒன்றும் அறியாத பெண் தான் ஏவிய நெருப்பை அணைத்ததை ஊழிவாயனால் ஏற்க முடியவில்லை. உடனே ஒரு மாயப்பேயை உருவாக்கி ஏவினான். அந்தப் பேயும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு முண்டக்கண்டை விழித்துக் கொண்டும்....பார்க்கச் சகிக்காத உருவத்தோடு சிவந்த நாக்கை நீட்டி மிரட்டியது. கூ கூ ஹிஹ் ஹிஹ் என்று ஓலமிட்டது. பேய்க்கு மிரளாதார் உண்டோ. ஆனால் அமுதம் மிரளவில்லை. "சீச்சீ...பேயே...போயேன். ஆண்டவனையே அச்சத்தால் வணங்காமல் அன்பால் வணங்குகின்றவர்கள் நாங்கள். உன்னைக் கண்டு அஞ்சினால்....அந்த இறைவனுக்குத்தான் இழுக்கு. மறைந்து தொலைந்து போ..." அச்சம் மிச்சமிருக்கும் வரைதான் எந்தக் கொடுமையும் தெரியும். பயம் மறைந்ததும் கொடூரத்தின் சுயம் மறைந்து விடும். அதுதான் அங்கும் நடந்தது. மாயப்பேய் மாயமாய்ப் போனது.

தன்னுடைய முந்தைய சாதனைகள் அத்தனையும் அமுதம் அழித்து அவமானப்படுத்திவிட்டதாகவே கருதினான். அதே நேரத்தில் அவரிடம் இருக்கும் சக்தி என்னதென்றும் அதன் அளவு எவ்வளவென்றும் கருதிட முடியாமல் தவித்தான். வலிமை தெரியாமல் அடுத்த படையை ஏவுவது அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. அந்த நொடியில் ஒரு திட்டம் தோன்றியது.

அமுதம் என்ன நடக்கின்றது என்று யோசிக்கும் முன்னமே ஒரு மயக்கக் குளிகையை தரையில் உருட்டினான். அதிலிருந்து மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்.

மந்திரத்தண்டை மீண்டும் திருகினான். அதிலிருந்து சிறிய குமிழ் வெளிவந்தது. அந்தக் குமிழைப் பார்த்துச் சொன்னான். "கண்ணாடிக்குமிழே...இதோ இங்கே மயங்கிக் கிடக்கும் பெண்ணை சிறைப்படுத்திக் கொண்டு கூம்புமலைக்குச் செல்."

அவன் கட்டளையைப் புரிந்து கொண்ட குமிழ் சிறிது சிறிதாக காற்றடைக்கப்படுவது போலப் பெரிதானது. அப்படியே மிதந்து சென்று அமுதம் மீது அமர்ந்து அப்படியே அவரை தனக்குள் அடைத்துக் கொண்டது.

"ம்ம்ம்ம்...கூம்புமலைக்குச் செல்... வெளியிலிருந்து எந்தச் சத்தமும் உள்ளே வரக்கூடாது. உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வெளியே வரக்கூடாது. இந்தப் பெண் பேசியே கூம்புமலையைச் சிதைத்து விடக்கூடும். ஆகையால் குரல் வெளியே வரவே கூடாது. செல்" உறுமினான் ஊழிவாயன்.

அந்தக் குமிழ்..அப்படியே அந்தரத்தில் எழும்பிப் பறந்தது.... சட்டென்று மறைந்தது. ஊழிவாயனும்தான். அந்த பொழுதில்தான் காட்டிற்குள் கதிரவனும் சித்திரையும் ஒரு பெரிய உண்மையைத் தெரிந்து கொண்டார்கள்.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, February 04, 2008

தங்க மரம் - 4

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான். பாகம்-2 மற்றும் பாகம்-3

பாகம் - 4

தாய் கொடுத்த பெட்டியை புது வேட்டியில் கட்டிக் கொண்டு ஓடினான் கதிரவன். எங்கே? அங்கேதான். வழக்கமாக சித்திரையைச் சந்திக்கும் இடத்திற்குத்தான். கதிரவனின் பாட்டனார் உயிர்தொடு செங்கையார் ஒரு மருத்துவர் என்று நாம் அறிவோம். அவரது மருத்துவச்சாலையைக் கோயிலாகவே கட்டியிருந்தார். வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் கட்டி...தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே மூலிகைத் தோட்டத்தையும் மருத்துவத் துறையும் அமைத்து சிறப்பாற்றி வந்தார்.

இன்றும் அந்தக் கோயிலும் மருத்துவத்துறையும் கதிரவனின் அன்னையின் பொறுப்பில் சிறப்பாக இருக்கின்றன. செங்கையாரிடம் கற்ற மாணாக்கர்கள் அங்கு மருத்துவம் செய்து வந்தால் நாட்டிலுள்ளோருக்கு அது பயனுள்ளதாகவே இருந்தது. கதிரவனும் அங்கு மருத்துவம் கற்றிருந்ததால் அவனும் ஒவ்வொரு பொழுது மருத்துவம் பார்த்தான்.

அந்த மருத்துவத்துறையின் மூலிகைத் தோட்டத்தின் வில்வமரம்தான் இவர்கள் இருவருக்கும் விளையாட்டு மரம். அங்கு கதிரவன் சென்ற பொழுது சித்திரை மருத்துவத்துறையில்தான் இருந்தான். மூலிகைத் தோட்டப் பராமரிப்பு அவர்கள் குடும்பத்தின் பொறுப்பு. சித்திரையின் தந்தை இளங்கோவின் காலத்திலிருந்து பொறுப்பாகச் செய்து வருகின்றார்கள்.


கதிரவனை விடச் சித்திரை ஓராண்டு மூப்பு. வந்த நண்பனைக் கட்டியணைத்துப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான். உற்ற நண்பர்களின் அணைப்பும் வாழ்த்தும் யாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பெட்டியும் பொறுப்பும் கைவந்ததிலிருந்து உணர்ச்சிவசப்பட்டிருந்த கதிரவனின் பரபரப்பு நண்பனைக் கண்டதும் குறைந்தது. பொன்னவிரிலையைப் பதப்படுத்திக் கொண்டிருந்த சித்திரையின் கையைப் பிடித்து வில்வமரத்தடிக்கு அழைத்துச் சென்றான்.

மடியில் முடிந்து வைத்திருந்த பெட்டியை எடுத்து நண்பனின் கையில் வைத்தான். "சித்திரை, இன்று அம்மா இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார்கள். இது அப்பா கொடுத்துச் சென்ற பெட்டியாம். அவர்..." கதிரவன் முடிக்கும் முன்னமே சித்திரை தொடர்ந்தான். "அவர் ஒரு கடமையை கொடுத்துச் சென்றிருக்கிறார். அது என்ன எதுவென்று அம்மாவிற்குத் தெரியாது. ஆனால் நீ ஆற்றல் மிக்கவனாக இருந்தால் கண்டு பிடித்துச் செய்து முடிப்பாய். சரிதானே?" சொல்லி விட்டுக் கண்ணைச் சிமிட்டினான்.

வியப்பில் வாயடைத்துப் போனான். "டேய்...இதை நீ எப்படி அறிவாய்?" சின்னக் கோவத்தில் நண்பனின் தோளில் குத்தினான்.

குத்தை வாங்கிக் கொண்டு சிரித்தபடியே சொன்னான் சித்திரை. "எட்டு மாதங்களுக்கு முன் என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய அன்னை எனக்குச் சொன்னது. உனக்குப் பதினெட்டு வயதாகும் பொழுது உன்னிடம் உன் அம்மா சொல்வார் என்றும் அதுவரையில் உன்னிடத்தில் இதைப் பற்றி நான் பேசக்கூடாது என்றும் எனக்கு என் அம்மா கட்டளையிட்டிருந்தார்கள். ஆகையால்தான் உன்னிடம் சொல்லவில்லை."

இதுவரைக்கும் எதிலும் ஒளிவு மறைவு என்று வைக்காத நண்பன் இப்படியொரு செய்தியை எட்டு மாதங்களாகச் சொல்லாமல் வைத்திருக்கிறானே என்ற ஆத்திரம் லேசாக இருந்தாலும் அம்மாவின் கட்டளை என்று சொன்னதும் அமைதியானான் கதிரவன். அதுவுமில்லாமல் தன்னிடம் ஒரு செய்தியைச் சொல்ல முடியாமல் எட்டு மாதங்கள் சித்திரை அடக்கி வைத்திருந்தான் என்பதை நினைத்ததும் நட்பின் பாசம் துளிர்த்தது. மறுபடியும் நண்பனைக் கட்டிக் கொண்டான்.

முதுகில் தட்டிக் கொடுத்த சித்திரை, கதிரவனைத் துறைக்குள் அழைத்துச் சென்றான். மூலிகை விதைகளையும் நாற்றுகளையும் அவை தொடர்பான மற்ற பொருட்களையும் வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தார்கள். பலப்பல மூலிகை விதைகளில் கிளம்பும் கும்மென்ற மணத்தை முகர்ந்ததும் இருவருக்கும் உடலில் புத்துணர்ச்சி பரவியது. அங்கேயிருந்த ஒரு பெட்டகத்தைத் திறந்து ஒரு துணிப்பொட்டலத்தை எடுத்தான் சித்திரை. பெரிய வெள்ளைத்துணிப் பொட்டலம். அதைக் கதிரவனையே பிரிக்கச் சொன்னான்.

வெண்ணெயை நெய்த துணி போல வாங்கிய கையில் ஒரு வழுவழுப்பை உணர்ந்தான். ஈரமில்லாமல் இருந்தாலும் குளிர்ச்சி உள்ளங்கையைக் குத்தியது. பிரிக்கப் பிரிக்க வெள்ளையாக இருந்த துணிப்பொட்டலாம் வெளிர் மஞ்சளானது. இன்னும் இரண்டு சுற்று பிரிந்ததும் அப்படியே அடர் மஞ்சளாகியது. நிறம் அடர்ந்து கொண்டே போய் துணி செக்கச் செவேல் என்று ஆனது. மொத்தத் துணியையும் பிரித்ததும் உள்ளே அரையடி நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் பட்டையாக உள்ள செக்கச் சிவந்த உருளை கதிரவனின் கைப்பிடியில் சிக்கியது.

கீழே விழுந்திருந்த பொட்டலத் துணி இப்பொழுது வெளுத்திருந்தாலும் உருளையைப் பிடித்திருந்த கதிரவனின் கை, கட்டியிருந்த வேட்டி, அவனது உடம்பு...என்று சிவப்பாகத் தெரிந்தது. மாயம் போல மயங்கியது கதிரவனின் மனது. வியப்பில் கேட்டான். "என்னடா இது? இப்படியொரு உருளைக் குச்சியை நான் பார்த்ததேயில்லையே. அனலில் இட்ட இருப்புக் கம்பி போல் ஒளிர்கிறது. ஆனால் தொட்டால் குளுமையாக இருக்கிறதே. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும்?"

பெருமூச்சு விட்டான் சித்திரை. "தெரியவில்லையே. பெட்டியை வைத்துக் கொண்டு நீ இன்றைக்குத்தானே முழிக்கத் தொடங்கியிருக்கிறாய். நான் எட்டு மாதங்களாக முழித்துக் கொண்டிருக்கிறேன். சரி. முதலில் பொட்டலத்தைத் திரும்பக் கட்டு. இங்கு மருத்துவர்களும் நோயாளிகளும் வருவார்கள். நாம் வேறொரு இடத்தில் இதைப் பற்றிப் பேசலாம். நடுப்பகலுக்கு மேல்தான் ஓய்வுப் பொழுது."

தான் கொண்டு வந்த பெட்டியையும் செங்கோலையும் ஒன்றாக வைத்து வெள்ளைத் துணியில் திருப்பக் கட்டினான். அப்படி அழுத்திக் கட்டும் பொழுது கிணுங்கிணுங்கென்று வெள்ளிமணியொலி கேட்டது. உடனே பொட்டலத்தைப் பிரித்து பெட்டியைக் கையிலெடுத்துக் குலுக்கினான். ஒன்றும் கேட்கவில்லை. செங்கோலையும் குலுக்கினான். எந்த ஓசையுமில்லை. யோசித்தபடியே மீண்டும் இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டினான். மறுபடியும் கிலுங்கிலுங்கென்ற் ஒலி கேட்டது. பெட்டியும் செங்கோலும் உரசும் பொழுது அந்த ஒலியெழுகிறதோ என்று இருவரும் நினைத்தார்கள். ஆனாலும் அங்கே வைத்து அதைப் பரிசோதிக்க அவர்களுக்கு அச்சமாக இருந்தது.

நடுப்பகல் வரும் வரையில் காத்திருக்கப் பொறுமையில்லாமல் துணிப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு இருவரும் அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினார்கள். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு மரங்களடர்ந்த பகுதியில் ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் ஏறிக் கொண்டார்கள். பொட்டலத்தைப் பிரித்து பெட்டியையும் செங்கோலையும் உரசினார்கள். கிலுங்கிலுங்கென்று ஒலியெழுந்தது. வெள்ளி மணியை காதோரம் வைத்து ஆட்டுவது போல.

மணியோசை நல்லிசையாக இருவரின் மனதையும் மெல்ல மயக்கியது. அப்படியே தொடர்ந்து உரசுகையில் "ம....ங்க......ஆ.....பாதி....யார்....களி...." என்று சொற்கள் துண்டு துண்டாக வந்து விழுந்தன.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, January 28, 2008

தங்க மரம் - 3

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.

ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். அதே நேரத்தில்......

பாகம் - 3

ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வோமா? நாம் கதையின் தொடக்கத்தில்தானே இருக்கிறோம். ஆகையால் இந்த அறிமுகங்கள் தேவையிருக்கிறது. அதுவுமில்லாமல் ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வது கதிரவனுக்குக் கிடைத்த பொறுப்பு பற்றியும் ஊழிவாயனைப் பற்றியும் மேலும் புரிந்து கொள்ள உதவும். ஆகையால் அறிமுகத்திற்குப் போவோமா.

ஆலோர் என்பது வேறொரு உலகம். நமது அண்டங்களை விட்டு வெகு தொலைவில் உள்ளது. அது ஒரு தட்டைக் கிரகம். நமது பூமியில் ஓரிடத்தில் தொடங்கி அப்படியே நேராகச் சென்றால் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடலாம். ஆனால் ஆலோரில் அப்படியில்லை. கிரகத்தின் ஒரு விளிம்பில் வந்து நிற்போம். அங்கிருந்து குதித்தால் அவ்வளவுதான். கிரகத்தை விட்டு விண்வெளியில் போய்விடுவோம். அதனால்தான் விளிம்பைச் சுற்றி மிக உயரமான மதில்கள் கதவில்லாமல் கட்டப்பட்டுள்ளன.

அந்த மதில்களில் நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்களில். ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கு. அந்த மதில்களுக்கு நடுவில்தான் ஆலோரின் இயக்கம் முழுவதும். கிரகத்தில் நட்டநடுவில் மிகப்பெரிய அரண்மனை. அதன் கோபுரம் காவல்தெய்வங்களின் கோபுரங்களை விடவும் உயரமானது. அந்தக் கோபுரத்தின் உச்சிமட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


ஆலோரில் வாழ்கிறவர்களுக்கு ஆலோரி என்று பெயர். ஆலோரியிலும் நமது பூமியில் இருப்பவை போலவே விலங்குகளும் பறவைகளும் உண்டு. ஆனால் அங்கு எல்லாமே பறக்கும். ஆனால் அனைத்தும் மதிற்சுவற்றுக்குள் மட்டுமே பறக்கும். ஆனைகளைத் தவிர. ஏனென்றால் ஆனைகள் கிரகத்தை விட்டும் அண்டங்களை விட்டும் பறக்கும் திறமை கொண்டவை. முன்பெல்லாம் நிறைய ஆனைகள் கிரகத்தைச் சுற்றிப் பறக்கும் காட்சியைக் காணலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் எந்த ஆனைகள் பறப்பதையும் பார்க்க முடிவதில்லை.

ஆலோரிகள் உயிர்வாழ இரண்டு அடிப்படை விஷயங்கள் தேவை. முதலில் ஒளி. பிறகு உணவு. ஒளியின் ஆற்றலைக் கொண்டுதான் அவர்கள் அனைத்தையும் செய்யும் திறன் பெறுகிறார்கள். ஆலோரிகள் எந்தச் செயலையும் கையால் காலால் செய்ய மாட்டார்கள். மாறாக நினைவால் செய்வார்கள். ஒரு பொருளை நகர்த்த வேண்டுமென்றால் கையால் தள்ள மாட்டார்கள். மனதால் தள்ளுவார்கள். இப்படி அனைத்திற்கும் உள்ளத்தைப் பயன்படுத்திச் செய்வார்கள். அதற்குத்தான் அவர்களுக்கு ஒளியின் ஆற்றல் தேவைப்படுகிறது. உணவு அவர்கள் உடலை வளர்க்கத்தான்.

சரி. வாருங்கள். ஆலோரிக்குள் நுழைவோம். பார்க்கின்ற ஒவ்வொன்றும் ஒளியின்றி அரைஉயிரோடு இருப்பது போல இருக்கிறதல்லவா. பார்க்கின்ற மக்கள் கூட இயக்கமின்றி மிகமிக மெதுவாக அசைகின்றார்கள். அல்லது அப்படியே இருக்கின்றார்கள். மனிதர்களே அப்படியிருக்கையில் விலங்குகளைச் சொல்ல வேண்டுமா? பாருங்கள். எல்லாம் ஒவ்வொரு மூலையில் முடங்கிக் கிடப்பதை. நினைவாலே எல்லாவற்றையும் செய்யும் மக்கள் ஏன் இப்பிடிக் கட்டைகளைப் போலக் கிடக்கிறார்கள்!

குளங்களும் ஏரிகளும் கூட அசைவில்லாமல் இருந்தன. சுவாசிக்கக் காற்று இருக்கிறதா இல்லையா என்றே புரியாத நிலை. மொத்தத்தில் அப்படியொரு அழகான மாடமாளிகைகள் நிறைந்த சிறந்த கிரகம் அரைப்பிணம் போல் இருக்கிறது. சரி. நாம் அரண்மனைக்குச் செல்லும் பாதைக்குச் செல்வோம். ஏனென்றால் அந்த வழியில்தானே ஒரு இளம்பெண் நடந்து செல்கிறாள். அவள் ஒருத்தி மட்டுமே சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் முழுவுயிரோடயும் இருக்கிறாள். ஆகையால்தான் அவள் சாதாரணமாக நடந்தாலும் விரைவாக நடப்பது போல உள்ளது.

அரண்மனையின் பெரிய கதவு பூட்டப்பட்டிருந்தது. காவலுக்கும் யாருமில்லை. போரில் தோற்றுக் கொள்ளை போன அரண்மனையைப் போலத் தென்பட்டது. தன்னுடைய மனதில் கதவு திறக்க வேண்டும் என்று நினைத்தாள். அந்த நினைப்பினால் இரண்டு கதவுகளும் பிரிந்து திறந்தன. திறந்த கதவு கூட சக்தியில்லாமல் எந்த ஓசையையும் எழுப்பவில்லை.

பொலிவிழந்திருந்த அந்த அரண்மனையின் கொலு மண்டபத்தில் மிகமிக மெல்லிய வெளிச்சத்தில் உள்ளே நுழைந்தாள் அந்த இளம்பெண். அரண்மனைக் கொலுவில் பெரிய அரியாசனம் இருட்டுக்குள் ஒளிந்திருந்தது. அந்த இருட்டிலிருந்து "வா தனிமா. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பெண் குரல் ஒலித்தது. குரலில் ஒரு கம்பீரம் இருந்தாலும் அடிக்கிணற்றிலிருந்து வந்தது போல் மிகவும் பல்வீனமாக இருந்தது. தனிமா என்று அழைக்கப்பட்டவள் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு வணங்கினாள்.

"எழுந்திரு தனிமா. உன்னுடைய ஆற்றலை இரண்டு பெரிய கதவுகளைத் திறப்பதில் வீணாக்காதே. சிறிய கதவைத் திறந்தால் போதாதா? உனக்குரிய கடமை காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக ஆற்றலைப் பயன்படுத்து. மங்கிக் கிடங்கும் நமது ஆலோர் உன்னுடைய உதவியால் மட்டுமே ஒளிபெற முடியும். இழந்த ஒளியை மீண்டும் பெறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஆலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்."

தலையை அசைத்தாள் தனிமா. "புரிகிறது அரசி. இதற்காகத்தானே நமது உலகமே கால் வயிற்றுக்கு உண்டு....ஆற்றலையும் உணவையும் தியாகம் செய்து என்னை வளர்த்திருக்கின்றார்கள். அந்த உணவின் நன்றி என்னுடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து படிந்திருக்கிறது. கடமையைச் செய்வேன். இன்றே கிளம்பவும் ஆயத்தமாக உள்ளேன்."

தனிமாவிடம் விரிவாகப் பேச அரசி விரும்பினாலும் தளர்ச்சி அவரை வாட்டியது. அவரும் கால் வயிறுதானே உண்கிறார். தளர்ச்சியையும் மீறி தனிமாவிடம் சொன்னார். "தனிமா, நீ செல்ல வேண்டியது பூமிக்கு. அங்கு சென்றதும் அங்கேயே உனக்கு வேண்டிய உணவையும் ஆற்றலையும் மிக எளிதாகப் பெறலாம். நாளைக்கே புறப்பட ஆயத்தங்களைச் செய். தேவையானவற்றை எடுத்துக் கொள். பிடிமாவும் ஆயத்தமாக இருக்கிறாள் அல்லவா?"

"ஆம் அரசி. நானும் பிடிமாவும் எந்த நொடியிலும் எங்கள் உலகப்பற்றைக் காட்டக் காத்துக் கொண்டிருக்கிறோம். நமது உலகம் இழந்ததை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்"

தனிமாவின் குரலில் தெரிந்த உறுதி அரசியின் உள்ளத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எழுப்பியது. பழைய நாட்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கைப் பூ அவரது முகத்தில் புன்னகையாகப் பூத்தது.

என்ன மக்களே....அறிமுகமெல்லாம் முடிந்து விட்டது. அடுத்த அத்தியாயத்திலிருந்து சுறுசுறு நிகழ்ச்சிகளும் திருதிரு திருப்பங்களுந்தான்.

தொடரும்

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, January 21, 2008

தங்க மரம் - 2

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

ஆளரவமில்லாக் காட்டில் வட்ட வடிவத்தில் ஒரு ஏரி. தளும்பித் தளும்பி நீர் தத்தளிக்கும் மிகப்பெரிய ஏரி. இருந்தாலும் எந்த ஒரு விலங்கும் அந்த ஏரியில் நீர் பருகவோ....அருகில் செல்லவோ இல்லை. ஏரியின் நட்டநடுவில் கூர்மையான உச்சியுடன் கடும்பாறைகளால் ஆன ஒரு கூம்புமலை.

அந்த ஏரிக்கு மேலே மலையைச் சுற்றி நிறைய குண்டரப் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பறக்கும் பொழுதே வாயைத் திறந்து குரல் வெளியே கேட்காமல் தொடர்ந்து கத்தின. மற்றபடி வேறு எந்தப் பறவையும் அந்தப் பகுதியில் தென்படவில்லை.

குண்டரப் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பார்க்க எப்படியிருக்குமென்று சொல்கிறேன். கால்கள் இல்லாத பறவை அது. இறக்கைகளும் கிடையாது. பளபளக்கும் பொன்மஞ்சள் நிறம். மற்றபடி பார்க்க வாத்து போலவே இருக்கும். ஆனால் உருவத்தில் மூன்று நான்கு மடங்கு பெரியதாக இருக்கும். இது உட்கார்ந்த இடத்திலிருந்து இறக்கையில்லாமலே அப்படியே மேலே எழும்பிப் பறக்கும். இந்தப் பறவைகளுக்கு உணவு நெருப்புக் குழம்பு. அந்தக் குழம்பின் ஆற்றலால் இவை பறக்கின்றன. அப்படிப் பறக்கையில் அவைகளின் பின்னால் சிறிது புகையெழும்பும். இதனுடைய மற்றைய சிறப்புகளைப் பிறகு பார்ப்போம். முதலில் கூம்புமலைக்குள் நுழைவோம். அங்கு என்ன நடக்கிறதென்று தெரிய வேண்டாமா!


இந்த மலை யாருக்குச் சொந்தமானது தெரியுமா? ஊழிவாயனுக்குச் சொந்தமானது. ஊழிவாயன் கதையைப் பிறகு பார்க்கலாம். முதலில் அவன் கோட்டைக்குள் நுழைவோம். கூம்புமலைக்குள் நுழைய இரகசிய வழி மட்டுமே உண்டு. ஆனால் பார்க்கும் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கிறது.

அந்த மலைக்குள் நிறைய பூகன்களும் பூகிகளும் ஊழிவாயனிடம் வேலைக்கு இருக்கிறார்கள். இவைகள் பூதங்கள். ஆனால் குள்ள பூதங்கள். ஆண் பூதங்களுகுப் பூகன்கள் என்றும் பெண் பூதங்களுக்குப் பூகிகள் என்றும் பெயர். குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும். ஆனால் அபார சக்தி பெற்றவை. ஊழிவாயனால்தான் அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை செய்ய வைக்க முடிந்தது. நிலத்தைக் குடைந்து சென்று பூமியின் நடுவில் இருக்கும் நெருப்புக் குழம்புகளை குண்டரப் பட்சிகளுக்கு உணவாகக் கொண்டு வருவதும் பூகன்களின் வேலைகளில் ஒன்று.

சரி. அந்த மலைக்குகைக்குள்ளே போவோம். அதுவும் ஊழிவாயனின் அறைக்குள்ளே. வட்டமாக இருந்த அறையின் சுவற்றில் மாயத்தீவட்டிகள் எரிந்தன. நெருப்பு எரிகையில் சுடுமல்லவா. அப்படிச் சுடாமல் இருக்கத்தான் இந்த மாயத்தீவட்டிகள். வேறொரு அறையில் பூகிகள் நெருப்பு உண்டாக்குவார்கள். ஆனால் தந்திரமாக அந்த நெருப்பின் ஒளியை மட்டும் மந்திரக்கயறுகளின் வழியாக மாயத்தீவட்டிக்குக் கொண்டு வந்திருக்கிறான் ஊழிவாயன். அந்த அறையிலேயே குமிழ் பொறிகளும் வைத்திருக்கிறான். அவைகளைத் திருகி வெளிச்சத்தின் அளவைக் கூட்டவும் குறைக்கவும் கூட அவனால் முடியும்.

அப்படிப் பட்ட ஊழிவாயன் எப்படியிருப்பான் தெரியுமா? ஏழு அடி உயரம். பரந்து விரிந்த உடற்கட்டு. இடுப்பில் ஒரு ஆடை. அது குண்டரப்பறவைகளின் தோலால் ஆனது. பொன்னிறத்தில் பளபளத்தது. தலைமுடி வளர்ந்து இடுப்புவரை தொங்கியது. அதே நேரத்தில் உச்சந்தலையில் கூம்புக்குடுமி ஒன்று. நெஞ்சில் உள்ளங்கையளவு பெரிய வைரம் பதித்திருந்தான். அமைதி காணாத முகமும் உள்ளமும். தேவையில்லாத பரபரப்பும் வெறுப்பும் முகத்தில்.

அறைக்குள் நுழைந்தவன் முதலில் மாயத்தீவட்டிகளின் ஒளியைக் குறைத்து இருட்டாக்கினான். ஆனாலும் அவன் அந்த அறைக்குள் அவனால் மிக எளிதாக நடமாட முடிந்தது. கையில் வைத்திருந்த தடியால் தரையில் ஒரு இடத்தில் மூன்று முறை தட்டினான். உடனே தரை திறந்து உள்ளிருந்து ஏழு ஆளுயர கருப்பு உருளைகள் மேலே வந்தன. முதல் உருளையின் முன் சென்று கைத்தடியை நீட்டினான். உருளையின் மேல் பகுதியில் சிறிய செவ்வகம் திறந்தது. அதன் வழியாக ஊதாநிறத்தில் வெளிச்சம் வந்தது. செவ்வகச் சன்னலில் ஒரு அழகான பெண்ணின் முகம் தெரிந்தது. ஊதா நிறத்திலுள்ள அவளுடைய மேனியிலிருந்துதான் அந்த ஒளி வந்தது. அவள் வாய் திறந்து பேசினாள்.

"ஊழிவாயா...ஆழி போல் ஏரிசூழ் கூம்புமலைத் தலைவா...வைர நெஞ்சம் என்று ஊரார் சொல்வர். அந்த வைரத்தையே நெஞ்சில் பதித்தவா...என்னைப் பாரு...என்னைச் சேரு. நீயின்றி வாழ்க்கை சேறு. நல்ல மறுமொழி ஒன்று கூறு." கேட்ட குரலில் தாபமும் மோகமும் பொங்கிப் பெருகின.

கேட்கும் பொழுதே ஊழிவாயன் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்திற்குச் சென்றான். படக்கென்று தடியைக் காட்டி உருளையை மூடினான். அடுத்த உருளைக்குச் சென்று அதே போலத் திறந்தான். இந்த முறை கருநீலநிற ஒளி வந்தது. மீண்டும் பெண்ணின் முகம். ஆனால் அதே முகம். ஆனால் மேனி கருநீலநிறத்தில் இருந்தது. வாய் திறந்து பேசினாள்.

"தலைவா....வானம் காத்திருக்கிறது. அந்த வானத்தில் நிலவு காத்திருக்கிறது. நிலவில் ஒளியும், ஒளிக்குள் குளுமையும், குளுமைக்குள் ஆசையும் காத்திருக்கின்றன. காத்திருப்பது சுகம்தான். அந்தச் சுகத்திற்குச் சுகத்தைக் கொடுக்க நீ வா!" குரலில் மோகத்தின் அளவு கொஞ்சம் குறைந்திருந்தாலும் காதல் எக்கச்சக்கமாக இருந்தது.

மேலே பேச்சைக் கேட்காமல் மூடினான். அடுத்த உருளையைத் திறந்தான். அதே முகம். ஆனால் நீலநிறம். அந்த அறை முழுவதும் நீலம் பரவியது. "தலைவன் ஒருவன் இருந்தால் தலைவி ஒருத்தி வேண்டும். இந்தக் கூம்புமலை தலைவியைக் காண்பது எப்பொழுது? உனது அரியணையிலே நானும் அமர்ந்து தலைவியாகி உன்னுடைய கூம்புமலையை ஆள்வது எப்பொழுது?" கேட்கும் பொழுதே நெஞ்சில் நஞ்சு சேர்வது போல இருந்தது ஊழிவாயனுக்கு. படக்கென்று மூடிவிட்டு அடுத்த உருளையைத் திறந்தான்.

ஆம். அதே பெண். ஆனால் பசுமை நிறம். அந்த அறை அழகிய வசந்தகாலப் புல்தரைபோலத் தோன்றியது. "ஊழிவாயா, நீ வாழ்வதற்கு நல்லதொரு வழியைச் சொல்கிறேன். இந்த வையகம் புகழும்படி நீ மெச்சப்படும் நிலையை அடைவதற்கான வழிமுறை நான் அறிவேன். நீ அதைக் கேள்." மோகம் காணமல் போய்....காதல் கறைந்து போய்....ஆசை அற்றுப்போய்...ஆனால் நல்லது சொல்லும் திறம் மட்டுமே பேச்சில் இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து கேட்காமல் உருளையை மூடிவிட்டு அடுத்த உருளைக்குச் சென்றான்.

மஞ்சள் பளபளக்க அதே பெண்ணின் முகம் மீண்டும் தோன்றியது. அந்த அறையே பொன்னறையாக மிளிர்ந்தது. அவள் பேசினாள். நல்ல பொன்மொழிகளைச் சொன்னாள். அவைகளைக் கேட்டும் மனநிலை அவனுக்கு இருக்கவில்லை. அடுத்த உருளைக்குச் சென்றான். இந்த முறை ஒளிர்காவி நிறம். பொன்மொழிகள் மறைந்து குரலில் சீற்றம் தெரிந்தது. "ஊழிவாயா...என்னை அடைத்து வைத்திருப்பது உனக்கு நல்லதைத் தராது. அழிவையே தரும். ஆகையால் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்னை விடுவிப்பாய்." அந்தப் பெண்ணின் பேச்சை மதிக்காமல் கதவை மூடிவிட்டு கடைசி உருளைக்குச் சென்றான்.

செக்கச் செவேல் என்ற ஒளி அறையை நிறைத்தது. குருதி பெருகிய போர்க்களத்தில் இருப்பது போல உணர்ந்தான் ஊழிவாயன். "மூடனே. என்னைப் பிடித்து வைத்திருப்பதனால் நீ உன்னுடைய இறுதி முடிவுக்கு அழைப்பிதழ் விடுத்திருக்கிறாய். வீணாய் மண்ணோடு மண்ணாகும் முன்னே என்னை விடுதலை செய்து பிழைத்துப் போவாய். இல்லையேல் உனது அறிவிழந்து ஆற்றலிழந்து....உனக்காக வேலை செய்யும் பூகன்களையும் பூகிகளையும் இழந்து குண்டரப் பறவைகளையும் கூம்புமலையையும் சுற்றியுள்ள ஏரியையும் இழந்து பிண்டமாகத் திரிவாய்."

தொடரும்....

அன்புடன்,
ஜிரா என்ற கோ.இராகவன்

Monday, January 14, 2008

தங்க மரம் - 1

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கல் அன்று இந்தப் புதிய தொடரை இடுகிறேன். இது காதல், ஆன்மீகம் என்றில்லாமல் விட்டலாச்சார்யா படம் போலச் செல்லும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். சரி கதைக்குப் போகலாம்.

---------------------------------------------------------

"கதிரவா, இன்றோடு உனக்கு வயது பதினெட்டு. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேனப்பா. உன்னுடைய தந்தை உனக்கென்று ஒதுக்கி வைத்திருந்த பொறுப்பை உன்னிடம் இந்த நாளில் ஒப்படைக்கச் சொன்னார்."

கதிரவனிடம் சொன்னது அவனது அன்னை அமுதம். பொறுப்பு என்று முதன்முதலாகக் கேட்டதும் திகைத்தான் மகன். "என்னம்மா பொறுப்பு? தந்தை எனக்கிட்ட கட்டளைதான் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?"

அவனுடைய தலையைக் கோதியவர், கையைப் பிடித்து மச்சு வீட்டிற்குள் அழைத்துச் சென்றால். பட்டிக்காடுகளில் பெரிய வீடுகளில் மச்சு வீடு என்று உள்ளறை இருக்கும். உள்ளே முக்கியமான பொருட்கள் பல இருக்கும். கதிரவன் பலமுறை சென்ற அதே அறைதான். சுவற்றின் ஒரு பக்கம் மஞ்சளும் குங்குமமும் இட்ட வேல்கள். ஒரு பக்கம் பல பெட்டிகள். அவைகளுக்குள் மதிப்புள்ள பல பொருட்கள். ஒருபுறம் பெரிய குலுக்கை. அந்தக் குலுக்கை நிறைய கம்பு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மணம் மச்சுவீடு முழுவதும் நிறைந்திருந்தது. அந்த நறுமணத்தை அனுபவித்தவாரே இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கிருந்த பெரிய பெட்டி ஒன்றிலிருந்து சிறிய பெட்டி ஒன்றை எடுத்தார் அமுதம். அந்தப் பெட்டிக்குப் பூட்டே இல்லாமல் இருந்தது. பார்த்தால் எல்லாப்புறமும் மூடியிருந்தது போல இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ரம்பப்பல் போல வரிசையாகச் செதுக்கியிருந்தது. அதை மகனிடம் கொடுத்தார். "இந்தாப்பா. உன்னிடம் அவர் கொடுக்கச் சொன்ன பெட்டி."


பெட்டியை வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான். எப்படித் திறப்பதென்றே தெரியவில்லை. "என்னம்மா இது? இதை எப்படித் திறப்பதென்றே தெரியவில்லையே. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?"

மகனின் கேள்வியைக் கேட்டு சிறிதாகச் சிரித்தார். "கதிரவா, அது எனக்குத் தெரியாதே. உன்னிடம் ஒப்படைக்கச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே. ஆனால் இதைப் பொறுப்பு என்றுதான் சொன்னார். நீ அறிவுள்ளவனாக இருந்தால் இதைச் செய்து முடிப்பாய் என்று அவர் நம்புவதாகச் சொன்னார்."

கேட்கக் கேட்க கதிரவனின் படபடப்புக் கூடியது. "அம்மா....வணிகம் செய்யச் சென்ற தந்தை ஆண்டு பலவாகியும் நாடு திரும்பவில்லை. அப்படியிருக்க இது எப்பொழுதம்மா நடந்தது?"

கவலைப்பனி அமுதத்தின் முகத்தை மூடியது. "ம்ம்ம்ம்....என்னை மன்னித்து விடப்பா. வணிகம் சென்ற தந்தை திரும்பவில்லை என்று உன்னிடம் பொய் சொன்னேன். உன்னுடைய பாட்டனார் செங்கையார் ஒரு மருத்துவர். உயிர்தொடுச் செங்கையார் என்று ஊர் புகழ்ந்தது. அவர் தொட்ட இலை மூலிகை. மிதித்த வேர் சஞ்சீவி என்று சொல்வார்கள். அத்தோடு விவசாயமும் செய்து வந்த குடும்பம். அப்படியிருக்க உன்னுடைய தந்தை செங்கோமான் மட்டும் ஆனைகளின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். பெருஞ் செல்வந்தர்கள் வீடுகளிலும் அரண்மனைக் கொட்டடியிலும் இருக்கும் ஆனைகளோடு பழகினார்.

ஆனாலும் அவருக்கு மருத்துவப் பயிற்சியை உனது பாட்டனார் முறையாகக் குடுத்தார். பொருத்தமான சமயத்தில் என்னையும் திருமணம் செய்து வைத்தார். முருகன் அருளால் நீயும் பிறந்தாய். மருத்துவத்தில் உன் தந்தை சிறப்பாக தேர்ந்திருந்தாலும் ஆனைப் பழக்கம் அவரை விடவில்லை. அவரும் அவருடைய உற்ற தோழர் இளங்கோவும் ஆனைப் பயிற்சியிலும் போர்ப் பயிற்சியிலும் கூட ஈடுபட்டிருந்தார்கள்."

இடைமறித்தான் மகன். "இளங்கோ என்றால் சித்திரையின் தந்தைதானே அம்மா?" சித்திரை என்பவன் கதிரவனின் தோழன். வயதொத்தவன்.

"ஆம். சித்திரையின் தந்தையேதான். இந்தப் பெட்டியை என்னிடம் கொடுக்கும் பொழுது உனக்கு வயது மூன்று. அப்பொழுது உன் தந்தை தோழருடன் ஆனை வணிகம் நடந்த களிற்றூருக்குச் சென்றார். அதாவது அப்படித்தான் ஊரிலும் வீட்டிலும் சொன்னார். என்னிடம் மட்டும் இந்தப் பெட்டியைக் கொடுத்து, ஏதோ கடமை இருப்பதாகவும் அதை முடித்து விட்டுத் திரும்புவதாகவும், எவ்வளவு நாளானாலும் மாதங்களானாலும் ஆண்டுகளானாலும் அவர் வருகைக்காக் காத்திருக்குமாறும் சொல்லிச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். இன்னும் வரவில்லை. இதைத்தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாதப்பா. அவருக்காகவும் அவர் கொடுத்த பொறுப்பு உன்னால் முடிக்கப் படவும்தான் காத்திருக்கிறேன்." சொல்லும் பொழுதே விசும்பினார் அமுதம்.

தாயின் பழைய நினைவுகளைக் கண்ணீரில் காணச் சகிக்காத கதிரவன் அவரது கண்களைத் துடைத்தான். "வருந்தாதீர்கள் அம்மா. தந்தை கொடுத்த கடமையையும் நிறைவேற்றி...அப்பா எங்கிருந்தாலும் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேனம்மா. நீங்கள் அழாதீர்கள். உங்கள் வருத்தம் என்னையும் துன்புறுத்துகிறதம்மா."

மகனின் உறுதிமொழி அவரின் உள்ளத்தை நெகிழ வைத்திருக்க வேண்டும். "கதிரவா, உன் மீது நம்பிக்கை இருக்கிறதப்பா. தாத்தா இருக்கும் வரை அவரிடம் மருத்துவமும் ஓரளவு கற்றிருக்கிறாய். பாட்டியும் நானும் கற்றுக் கொடுத்த உழவும் உனக்குத் தெரியும். ஊரில் அனைவரும் உன்னைப் புகழ்கின்றனர். நீ தந்தை கொடுத்த பொறுப்பைச் சிறப்பாக முடிப்பாய் என்று நம்புகிறேன். சரி...முதலில் உணவு. உனக்குப் பிடித்த விரால் மீன் குழம்பும் செந்நெற்சோறும் கெட்டித் தயிரும் காத்திருக்கிறது."

பிறந்த நாளன்று நல்ல உணவு உண்டு திண்ணையில் வந்தமர்ந்தான். உண்ட சுவையுணவும் அணிந்திருந்த புது வேண்டியும் தோளில் போட்டிருந்த புதுத்துண்டும் அவனுக்கு மகிழ்ச்சியைக் குடுக்கவில்லை. தந்தை கொடுத்த பொறுப்பும் தாயார் கொடுத்த பெட்டியும் அவன் மனதைக் குழப்பிக் கொண்டேயிருந்தன. துண்டையெடுத்து தலையில் கட்டிக்கொண்டு தோழன் சித்திரையைப் பார்க்கலாம் என்று குதித்துக் கிளம்பினான். சித்திரையிடம் அவனுக்கு இன்னொரு வியப்பான செய்தியை காத்துக் கொண்டிருந்தது.

தொடரும்....

Saturday, January 12, 2008

மொக்கையாகப் பரணி

மொக்கை நன்றே மொக்கை நன்றே என்று உஷா பதிவு போட்டு...நம்மளையும் இழுத்து விட்டுட்டாங்க. 2008ல போடுற மொதப் பதிவு அதுவும் மொக்கையாப் போகனுமா.. பொக்கையாப் போகனுமா யோசிச்சி யோசிச்சி...மூளை மொக்கையானது. மொக்கையைச் சக்கையாகக் காண்பர் சக்கையை மொக்ககயாகக் காணணதவர்-னு தெருவள்ளுவர் சொன்னது நெனவுக்கு வந்துச்சு. அப்படியே முருகன் கிட்ட கேட்டேன். ஐயா....எதாச்சும் சொல்லிக் குடுன்னு. அப்ப ஒரு தொடுப்பு குடுத்தான். அதுல இது இருக்கு!!!!!!




மூனு பேரைக் கூப்புடுடனுமாமே...

கப்பிப் பயல்
தேவ தேவ தேவாதி தேவ்
பொன்ஸ்

வாங்க வாங்க வாங்க... மொக்கைப் பதிவோட...

மொக்கையுடன்,
ஜிரா என்ற கோ.இராகவன்

Monday, December 17, 2007

நஒக - மஞ்சனத்தி

இந்தா பாத்தீகளா....இந்த மஞ்சனத்தி மரம். இதுக்குப் பின்னால நெறைய கதைக இருக்குல்ல. கொஞ்ச நஞ்சமா? எங்க தாத்தா சின்னப்பிள்ளைல இருந்து இருக்காம். அவருஞ் சரி எங்கப்பாவுஞ் சரி..இந்த மரத்துல ஏறித்தாம் வெளையாடுவாகளாம். கலியாணம் ஆனவுட்டுத்தான் ரெண்டு பேருமே ஊர்ப்பேச்சுக்குப் பயந்து ஏறாம இருந்திருக்காக.

எங்க பாட்டி கெடா வளத்தாகளாம். அந்தக் கெடாயெல்லாம் இதே மஞ்சனத்தி மரத்துலதான் கெட்டி வெப்பாகளாம். அகத்திக் கொப்புகள வெட்டியாந்து கொச்சக்கயிறு வெச்சி மரத்துல கெட்டி வெச்சிருவாகளாம். ஆடுக அப்படியே கடிச்சிக்கிட்டும் அச போட்டுக்கிட்டுமிருக்குமாம். கருவேலக் காய்களும் பறிச்சிப் போடுவாகளாம் கெடாக்களுக்கு.

இருந்தாலும் பழுத்து விழுகுற மஞ்சனத்திப் பழத்துக்கு ஆடுக அடிச்சிக்கிருமாம். கொம்பக் கொண்டு முட்டிக்கிட்டு பழத்துக்குச் சண்ட போடுறதப் பாத்து எங்கப்பா குதிப்பாருன்னு பாட்டி சொல்லீருக்காக. ஆனாலும் ஊர்ப்பிள்ளைக வந்து பழத்தப் பெறக்கீருவாகளாம். அப்பிடிப் பெறக்கியும் பெறக்க மாட்டாம எக்கச்சக்கமா பழங்க உதுந்து கெடக்கும்னு எங்கம்மா சொல்லுவாக.

கலியாணமாகி வந்தப்ப பழம் பெறக்க வந்த பிள்ளைகள வெரட்டுவாகளாம். ஆனா நெறைய கெடக்கக் கண்டு அப்புறமா சும்மா விட்டாகளாம். எனக்கு மஞ்சனத்திப் பழம் பிடிக்காது. கருப்பாயிருக்கும். வீச்சமடிக்கும். நசிக்கிப்புட்டம்னா பிசுபிசுன்னு இருக்கும். எப்படித்தான் திங்காகளோ சாமி.

சாமிங்கவுந்தான் நெனவுக்கு வருது. ஏனோ எதுக்கோ தெரியாது....காதோல கருகமணி வாங்கி பொங்கலுக்குக் கட்டுவாக பாட்டி. ஏன்னு கேட்டா சின்னப்பிள்ளைக அதெல்லாம் கேக்கக்கூடாதுன்னு வெரட்டுவாக. ஆனா பொங்கலுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா முந்திரிக்கொத்து அதுரசம் சுசியமெல்லாம் அப்பத்தான கெடைக்கும். மரத்தடில பாவாடைல வெச்சிக்கிட்டுத் திம்பேன். மரத்தடியில உக்காந்து திங்காதடின்னு வஞ்சாலும் கேப்பமா?

மரத்துல அப்பப்ப கொப்பு ஒடிச்சி காய வெச்சிருப்பாக பாட்டி. பொங்க வெக்கிறப்போ அதுல ஒரு கொப்பு வெச்சித்தான் அடுப்பு பத்த வெக்கிறது. தைப்பொங்கலு மட்டுமில்ல. ஐயனாரு கோயிலுக்குக் கெடா வெட்டுனாலுஞ் சரி...காச்சக்கார அம்மனுக்கு காச்சலுக்கு நேந்துக்கிட்டு பொங்க வெச்சாலும் சரி...மஞ்சனத்திக் கொப்பில்லாம பொங்க பொங்கனதேயில்லை. அதுனாலதான்...ஊர்ப்பிள்ளைக பழம் பெறக்க விட்டாலும் கொப்பொடிக்க விட மாட்டாக வீட்டுல. தப்பித் தவறி யாராச்சும் கெளையக் கிளைய ஒடிச்சிப்புட்டாக....ஒரு வருசத்துக்கு அந்த வழிய போயிக்கிற முடியாது. பாட்டி வசவு வஞ்சே அவுகள அசிங்கப்படுத்தீரும்.

மஞ்சனத்திக் கட்டைய வெட்டுனா மஞ்சமஞ்சேர்னு இருக்கும். அதுக்குத்தான் மஞ்சனத்தின்னு பேரு வெச்சாகளாம். நானும் கொப்பு ஒடிச்சிப் பாத்துருக்கேன். பாட்டிக்குத் தெரியாமத்தான். உள்ள மஞ்சளத்தான் இருந்துச்சு. அத வெச்சி மஞ்சப் பூசுனா என்னன்னு அம்மீல ஒரசி மூஞ்சீல பூசீருக்கேன். ஹா ஹா ஹா...அடி விழாத கொறதான். மஞ்சளுன்னா என்ன மஞ்சனத்தின்னா என்ன? மஞ்சப் பிடிச்சா சரிதான?

இப்பிடித்தான் ஒருவாட்டி கயிட்டம் வந்துருச்சின்னு மரத்த வெட்டிப்புடலாம்னு சொன்னாராம் தாத்தா. அப்பாவும் பாட்டியும் குறுக்க விழுந்து தடுத்தாகளாம். அப்படி வெட்டித் திங்கனும்னு தேவையில்லைன்னு முடிவெடுத்தாகளாம். அப்புறந்தான் அப்பா வெவசாயத்தோட நிக்காம வெளிவேலைக்கும் போகத் தொடங்குனாரு. அப்புறந்தான் அவருக்குக் கலியாணம்...நாம் பொறந்தது..எல்லாமே.

இப்பல்லாம் ஊருல வெவசாயங் கொறஞ்சு போச்சு. மழையே சரியா இல்லியே. மஞ்சனத்தி மரத்துல பாதிக்கு மேல மொட்டையா நிக்கி. அப்புறம் எங்குட்டுப் பழம் பழுக்க. மொத்த மரத்தயே உலுப்புனாலும் பிஞ்சா மொக்கா ரெண்டு மூனு விழும். முந்தி கணக்கா விழுறதுக்குப் பழமும் இல்ல. பழுத்து விழுந்தாலும் பெறக்க ஊர்ப்பிள்ளைக வர்ரதுமில்லை. நாகலாபொரத்துல கான்வெண்ட்டு இருக்குல்ல. வேன்ல ஏறிப் பாதிப்பிள்ளைக போயிருது. உள்ளூர் பள்ளிக்கூடத்துக்குப் பாதிப் பிள்ளைக போயிருது. மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக. இதுல எங்க பழம் பெறக்க?

ஆடுங் கெட்டுறதில்லை. பாட்டிதான் இல்லையே. அம்மாவுக்கு ஆடு பாக்குறது பட்டிக்கி விடுறது..கறிக்கி விக்குறதுல பழக்கமில்லை. அதுனால அதுவும் நின்னு போச்சு. சாமி கும்புடுறதுன்னா இப்பல்லாம் கோயிலுதான....கன்னத்துல போட்டுக்கிட்டு துந்நூரு வாங்கிப் பூசிக்கிறது. அம்புட்டுதான். காதோலையாவது கருகமணியாவது.

அப்பாக்கு இப்பல்லாம் ஒடம்புக்கு ரொம்ப முடியலை. பொழுதன்னைக்கும் வீடுதான். திண்ணதான். அம்மா பொங்கிப் போடுறத தின்னுட்டு கெடக்காரு. வயசாச்சுல்ல. திண்ணைல படுத்தாலும் சொவத்தப் பாத்துதான் திரும்பிப் படுப்பாரு. மூஞ்சீல காத்தடிச்சிரக்கூடாதாம். அவரு கயிட்டம் அவருக்கு.

இந்தா...இப்பிடித்தான் அம்மா அப்பப்ப வெளிய போகைல வரைல மரத்தப் பாப்பாக. அவ்வளவுதான். தாவுண்டு தாம் வேலையுண்டுன்னு போயிருவாக. இன்னைக்கென்னவோ கூடக் கொஞ்ச நேரம் மரத்தப் பாக்காக.

என்னம்மா...மஞ்சனத்தி மரத்த அப்படிப் பாக்க? நாந்தான் சொன்னேன்ல.....எம் பேச்ச நீ கேக்கவேயில்லையே. மாமாவோடத்தான கலியாணம் வேண்டாம்னேன். சின்னப்புள்ள ஒனக்கென்ன தெரியும்னு வாய மூடீட்டியே. ஒரு வார்த்த கேட்டிருந்தா இப்பிடி மரத்தப் பாக்க வேண்டியிருக்காதுல்ல. ம்ம்ம்ம். ஏம்மா?

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 14, 2007

கேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்

ஒக்க பிருந்தாவனம் இது தமிழில் அக்னி நட்சத்திரம் என்ற படம். தெலுங்கில் கர்ஷனா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழில் பாடியவர் ஜானகி. தெலுங்கில் வாணி ஜெயராம். இருவருமே அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை இளையராஜா. வாணி ஜெயராமின் மிருதுவான குரல் பாவமும் தவறில்லாத தெலுங்கு உச்சரிப்பும் மிகமிக அருமை.




மற்றொரு தெலுங்குப் பாடல். இயக்குனர் கே.விஷ்வநாத்தின் ஸ்வர்ண கமலம் என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில். இசையரசி பி.சுசீலாவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் குரலால் இழைத்துப் பாடிய பாடல். நிச்சயம் ரசிப்பீர்கள்.



கொலுவை உன்னாடே -- தஞ்சை சரபோஜி மகாராஜா மணிபவழத் தெலுங்கில் எழுதிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் இசையரசியும் பாலுவும் பாடியிருக்கிறார்கள். பானுப்பிரியாவின் நடனம் மிக அழகு. இதைக் கண்டிப்பாகப் பாருங்கள். இதுவும் ஸ்வர்ண கமலம் படம்தான்.


நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே - ஒரு அருமையான பாடல் ஜெயச்சந்திரனால் அழகாகப் பாடப்பட்டுள்ளது. பனி தீராத வீடு என்பது படம். மெல்லிசை மன்னரின் இசையோடு இயக்கியுள்ளார் சேதுமாதவன். மலையாளிகள் எப்பொழுதும் மறக்காத...மறக்க முடியாத பாடல் இது.



நீராட நேரம் நல்ல நேரம் - துள்ளலிசை எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகவும் பொருத்தமான பாடல். ஆனால் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். அவருடை தமிழ்த் திரையிசைப் பயணத்தின் துவக்கத்தில் வந்த ஒரு பாடலிது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வைரநெஞ்சம் படத்திற்காக. படக்காட்சியமைப்பினை விட்டுவிட்டு பாடலைக் கேட்டு ரசியுங்கள். மிகவும் அருமை.



நல்லா நல்லானி கள்ளு பில்லா - காதல், விளையாட்டு எல்லாம் கலந்தடிச்ச பாட்டு இது. சை அப்படீங்குற தெலுங்கு படத்துக்காக நிதினும் ஜெனீலியாவும் நடிச்ச பாட்டு. கீரவாணி (மரகதமணி) இசைன்னு நெனைக்கிறேன். கேளுங்க...கேட்டுக்கிட்டேயிருப்பீங்க. பாருங்க. பாத்துக்கிட்டேயிருப்பீங்க.



கர் சே நிக்கல் தேஹி - இந்திப் பாட்டுகள் அவ்வளவு பழக்கமில்லை. ஆனாலும் இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாப்பா கெஹத்தா ஹே என்ற படத்திற்காக உதித் நாராயண் பாடியது. அருமையோ அருமை.



அன்புடன்,
கோ.இராகவன் (ஜிரா)

Thursday, December 06, 2007

பூர்ணிமா

ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.

ஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே! இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான்.

"எக்ஸ்கியூஸ் மீ" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.

பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.

அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். "வாட் இஸ் யுவர் நேம்?" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.

"பேர் சொல்லும்மா." மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

"எம் பேர் புண்ணிம்மா" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.

"அவ பேர் பூர்ணிமா." மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.

"பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்." தத்துவமாக நினைத்தது மனது.

இரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "குழந்தைதானே. இருக்கட்டும்."

"சாரி." அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.

"பூர்ணிமா! சாக்லேட் சாப்பிடுவையா? மாமா தரட்டுமா?" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். "வேண்டாம்" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.

அதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.

அதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் "நான்வெஜ்" கேட்டார். நானும் "நான்வெஜ்" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.

உணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.

அவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.

அந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை ·போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த ·போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் ·போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.

நான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க."

என்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற்குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.

இறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.

யாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். "தாத்தா" என்று சைகை காட்டினாள். "போய்ட்டு வர்ரோம்" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.

காரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.

"ஏன் ரகு? நமக்கு மட்டும் இப்படி? டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான்? நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா? நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா? அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு?" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.

அன்புடன்,
கோ.இராகவன்

நண்பர்களே, இந்தக் கதை ஒரு மீள்பதிவு. தோழர் தேவ் கேட்டுக்கொண்டதற்கிணங்க. :) படித்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Monday, December 03, 2007

காதல் குளிர் - 11

விமானம் வானத்தில் மிதந்தது. அதில் ரம்யாவும் ப்ரகாஷாவும் காதலில் மிதந்தார்கள். வந்த வேலையெல்லாம் (நேர்முகத் தேர்வுக்குத்தானே வந்தார்கள்!!!!!!!!!!!!!!!!!!) முடிந்து பெங்களூர் திரும்பல். ரம்யாவின் சீட் பெல்ட்டாக ப்ரகாஷாவின் கை. முன்பும் இதே நெருக்கத்தில் ப்ரகாஷாவோடு உட்கார்ந்திருக்கிறாள் ரம்யா. ஆனால் இப்போது நிலமையே வேறு.

அவளது ரோஜாக் கைகளை கைக்குள் புதைத்துக் கொண்டு கேட்டான். "ரம்யா....I love you so much. I will love you forever. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம். சாய்ங்காலா என் லவ்வ ரிஜெக்ட் பண்ணீட்டு.....ராத்ரி எப்படி? ஆறு மணி உளகடே என்னாச்சு?" கைக்குளிருந்த ரோஜாப்பூக்களை முத்தமிட்டான்.

ப்ரகாஷாவின் கைகளை இதழால் நனைத்தாள். "டேய். நீ காதல்னு சொல்றப்போ எனக்கு உள்ள சந்தோஷமா இருந்தாலும்.....பயம்தான் வந்துச்சு. நீ என் கூட இருக்கும் போது வர்ர சந்தோஷம்...நீ இல்லாதப்ப வருத்தமாகும்னு புரிஞ்சது. நீ இல்லாமப் போயிருவியோங்குற பயத்துல உங்கிட்ட உறுதிமொழி வாங்கனும்னுதான் தோணுச்சு. அந்த பயத்துலதான் காதலைச் சொல்லத் தோணலை. அதுக்குதான் நானும் கேட்டேன். ஆனா நீயும் சொல்லலை. அப்ப நீ முழிச்சது.......... நான் அழாம இருந்தது பெரிய விஷயம். ஆனாலும் முகத்தை மறைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. உன் பக்கத்துல உக்காந்தா கண்டிப்பா அழுதிருப்பேன். அதுவும் உண்யைக் கட்டிப்புடிச்சிக்கிட்டே. அதுனாலதான் கார்ல முன்னாடி போய் உக்காந்தேன்."

ரம்யாவின் முகத்தில் விழுந்த முடியை விரலால் ஒதுக்கினான். அவ்வளவு மென்மையாக அவன் இதற்கு முன் எதையும் கையாண்டதில்லை. என்ன? நேற்றா? ஹி ஹி. இது மென்மைங்க. மென்மை. "ரம்யா....எனக்கும் அழுகே பந்த்து. தும்ப கஷ்டா பட்டு அழாம இருந்தேன். அது சரி. பிராமிஸ்னு சொன்னியே. நானு குடுக்கலையே? அது எப்பக் கெடைச்சது?"

"தெரியலடா. ஆக்சிடெண்ட் ஆனப்புறம் ரொம்பவே distrubed-ஆ இருந்தேன். அப்ப பயத்துல உங்கிட்டதான் ஓடனும்னு தோணிச்சு. அது ஏன்னு எனக்குத் தெரியலை. அப்புறம் ஆட்டோல போறப்போ என்னைப் பாதுகாப்பா வெச்சிருந்தியே....அப்பதான் நீ என்னை கஷ்டப்பட விடமாட்டன்னு தோணிச்சு. உன்னோட நெருக்கம்...உன்னோட வாசம்... உன்னோட சுவாசம்....எல்லாத்தையும் புதுசு புதுசா ரசிச்சேன். நீ எனக்கு வேணும்னு...எப்படியாவது வேணும்னு தோணுச்சு. ஆனா என்னோட கேள்விகளுக்கு இன்னமும் நேரடியான பதில் நீ சொல்லலை. ஆனா பிரச்சனைன்னு வந்தா அது உனக்கு மட்டுமல்ல நம்ம ரெண்டு பேருக்கும்னு காதல் சொல்லுச்சு. ஒங்கம்மா அழுதாங்கன்னா அத எப்படிச் சமாளிக்கிறதுன்னு நம்ம ரெண்டு பேரும் யோசிப்போம். ஒரு வழி கண்டுபிடிப்போம்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அப்பவே நீ என்னோட ப்ரகாஷாவாயிட்ட.

அப்புறம் எப்படி நீ தனியா தூங்குறது? ஆனா உண்மையச் சொல்றேன்.....உன் கிட்ட எப்படிக் காதலைச் சொல்றதுன்னு தெரியாமதான் முத்தத்தால சொன்னேன். அது...முத்தத்துக்குப் பதில் முத்தம்...அதுக்குப் பதில் முத்தம்னு நடந்து மொத்தமும் நடந்துருச்சு. Well....I liked it. I expressed my love in the best possible way and you reciprocated as a man. I am fine with it. டேய்....உன்னால என்னை விட்டு எங்கயும் போக முடியாது."

ரம்யாவின் கன்னத்தை ஒரு கையால் தாங்கிக் கொண்டு கட்டை விரலால் இதழ்களை வருடினான். அட....அதென்ன...அப்படித்தான் பூ பூக்குமா? ரம்யாவின் முகமாற்றத்தைச் சொன்னேன். படக்கென்று ப்ரகாஷாவின் விரலைக் கடித்து விட்டாள்.

"டேய்....இது பிளேன்....எத்தனை பேர் இருக்காங்க. ஒழுங்கா என்னோட கேள்விக்குப் பதில் சொல்லு. அப்புறம் மிச்சத்த வெச்சுக்கலாம். ஒங்கப்பா கிட்ட சண்ட போட்டுட்டு வந்துருவ. ஒங்கம்மா அழுதா என்னடா செய்வ?" போலி மிரட்டல் விடுத்தாள் ரம்யா.

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....சொல்றேன். அம்மா அழுதா......ம்ம்ம்ம்ம்ம்ம்.....We are ready to accept them as they are. But why cant they accept us as we are? Just because i love you, I dont deserve to be hated. Certainly I will not be happy to start my life without her blessing. She has to understand me and accept us. If she is not understanding, I will assure her my love and affection to her. Also I will be waiting till she understands me. And I will nurture the confidence in her heart by promising the open doors for her and appa. I want them...but I cant loose you. I will gain you first and then my parents soon after that."

"இத இத இதத்தான் நான் அப்ப எதிர்பார்த்தேன். இப்ப எப்படி உனக்கு பதில் தெரிஞ்சதோ. அதே மாதிரி எனக்கும் தெரிஞ்சது மாமா."

"என்ன மாமாவா?"

"ஆமாண்டா மாமா...." முத்துக் கொட்டிச் சிரித்தாள் ரம்யா.

"மாமா எல்லா பேடா....ப்ரகாஷான்னு கூப்டு. அது போதும்."

"மாமா வேண்டாமா...சரி. பேர் சொல்லியே கூப்புடுறேன். ஆனா...அப்பா அம்மா இருக்குறப்பவும் ப்ரகாஷான்னுதான் கூப்புடுவேன்."

"சரி...சரி....கூப்டா சரிதான்." இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். சிலிர்த்தார்கள். பின்னே...ரம்யாவின் கன்னத்தில் முத்தம் வைத்தானே.

"Execuse me sir. PDA not allowed inside the flight sir" விமானப் பணிப்பெண் பணிவுப்பெண்ணாகச் சொன்னாள்.

பொய்யாக ஆச்சரியப்பட்டாள் ரம்யா. "Sorry. I didnt know PDA is not allowed inside the flight. My husband doesnt understand all these things. He is always mischevous and playful. I will ensure he is controled at leaset inside your flight. Is that fine?"

"Thatz fine madam."

"Thank you" என்று சொல்லிவிட்டு விமானப் பணிப்பெண்ணிற்கு கோவமும் அதை மீறிய பொறாமையும் வரும் வகையில் ப்ரகாஷாவின் இதழ்களில் மெத்தென்று ஒரு முத்தமிட்டாள் ரம்யா.

தொடரும்...கதையல்ல. ரம்யா ப்ரகாஷாவின் இனிய வாழ்க்கை.

பின்குறிப்பு

எச்சில் பண்டம் விலக்கு
அதில்
முத்தம் மட்டும் விலக்கு


இதுவரை முத்தமிடாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ப்ரகாஷா எழுதிய தமிழ்க்கவிதை.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, November 27, 2007

வீட்டோடு மருமகளாகப் போகலாமா?

மகாமடமை பொருந்திய தமிழ்ப் பெண்களே!

என்ன மடமைன்னு திட்டுறேன்னு பாக்குறீங்களா? அது பெருமைமிகு தமிழ்ப் பெண்ணின் அருங்குணங்கள்ள ஒன்னு மடமை. அப்படியாகப் பட்ட மடத் தமிழ்ப் பெண்களேன்னு ஒங்களைப் பெருமையால்ல கூப்புடுறேன். சந்தோஷப் படுங்க. அப்படிக் கூப்புட்டு உங்களுக்கு எழுதுனதுதான் இந்தக் கடிதம். ஆகையால அடுத்த அருங்குணமான அச்சத்தோடு இந்தக் கடிதத்தைப் படிங்க.

ஆமா...வீட்டோட மருமகளாப் போகலாமா? அது சரிதானா? மூன்றாவது அருங்குணமான நாணத்தோட அதக் கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க. வீட்டோட மருமகனாப் போறதுங்குறது ஒவ்வொரு ஆம்பளைக்கும் எவ்வளவு கவுரவக் கொறைச்ச்சலா இருக்கு. அதக் கிண்டல் செஞ்சு எத்தனையெத்தனை நகைச்சுவைகள். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஆம்பளைக்குள்ளையும் ஒரு பெருமை இருக்கு பாத்தீங்களா! அந்தப் பெருமைலயும் சூட்டுலயும் சொரணைலயும் கொஞ்சங்கூடவா ஒங்களுக்கு இல்லை? அதெப்படி வெக்கமில்லாம ஒரு வீட்டோட போய்த் தங்கிக்கிட்டு அங்கயே வேலையையும் செஞ்சு...சமைச்சுப் போட்டு...துணி துவைச்சு அது இதுன்னு இருக்க முடியுது? சாப்புடுறதுக்குச் சோறு கெடைக்குதுன்னா? இல்ல "எல்லா" விஷயத்தையும் கவனிச்சுக்க ஒரு ஆம்பளை கிடைக்கிறதாலயா?

இதையே ஒரு ஆம்பளைகிட்ட கேட்டுப் பாருங்க. வாங்கய்யா...சோறு கிடைக்கும். "எல்லா" விஷயமும் கிடைக்கும். வீட்டோட வந்து இருங்கன்னு கூப்புடுங்க. ஒங்களைத் திமிர் பிடிச்சவன்னு சொல்வான். நீங்க ஏங்க ஆம்பளைங்களத் திமிர் பிடிச்சவன்னு சொல்ல மாட்டேங்குறீங்க? மடமைக் குணம் நல்லாவே வேலை செய்யுது போல.

இப்பல்லாம் வீட்டுக்கு வர்ர குலமகள்...அட இப்படியெல்லாம் சொன்னாத்தான ஒங்களுக்குப் பெருமையா இருக்கும். அப்பத்தான கேள்வி கேக்க மாட்டீங்க. வீட்டை விளங்க வைக்க வந்தவள்..குலமகள்...தெய்வம்னு சொன்னா உங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு. இதையே வீட்டுக்கு வந்த குலமகன்..விளங்க வைக்க வந்தவன்...தெய்வம்னு சொல்லிப் பாருங்க... ஒரு பய கட்டிக்க வர மாட்டான். அது சரி. அவன் மானஸ்தன். நீங்கள்ளாம் வெறும் நாணஸ்தர்கள்தானே.

வீட்டுக்கு வர்ர மருமகள் வேலைக்கும் போனா இப்பல்லாம் சந்தோஷப் படுறாங்களாம். வீட்டு வேலையும் பாத்து....சம்பாதிச்சும் போட ஒரு இளிச்சவாய் கெடைச்சா சந்தோஷப் படாம யார் இருப்பா? அப்படி இளிச்ச வாய்னு நேரடியாச் சொல்லாமத்தான் மகாலட்சுமின்னு சொல்லீர்ராங்க. நீங்க என்னடான்னா ஒங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிசேகம் செஞ்சு படையலா பொங்கலும் பஞ்சாமிர்தமும் வெச்சாப்புல குளுந்து போய் சிரிச்சிக்கிட்டே எல்லா வேலையும் பாக்குறீங்க.

குடும்ப விளக்கு நீங்கதானாமே? விளக்குன்னா ஏத்தி வைக்கனும்ல....அதான் ஏத்தி வைக்கிறாங்க. எதை? வீட்டுப் பொறுப்பை. அட பொறுப்பை ஏத்துக்குறதும் செய்றதும் நல்லதுதானே. மாமனார் மாமியார் மனங்கோணாம நடந்துக்கிறனுமாமே குடும்ப விளக்கு. ஒங்க அப்பாம்மா மனங்கோணாம ஒங்க கணவரு நடந்துக்குவாரான்னு கேட்டீங்களா? கணவனோட தம்பி தங்கச்சிங்களைப் பாத்துப் படிக்க வைக்கனுமே....ஒங்க தம்பி தங்கச்சிங்கள ஒங்க வீட்டுக்காரர் பாத்துக்குவாரா?

ஆமா...இன்னோன்னு கேக்கனும்னு நெனச்சேன். எவனாவது கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா அப்பாவை விட்டு வர்ரானா? நீங்க மட்டும் ஏங்க கல்யாணம்னா அப்பாம்மாவை விட்டுட்டு அவன் பின்னாலயே போகனும். என்னது? இப்பப்ப மாறிக்கிட்டு வருதா? வேலை பாக்குறவங்க வெவ்வேற ஊர்ல நாட்டுல இருக்காங்களா? அப்படியா...ரொம்ப சந்தோசம். அப்படி வெளியூர்லயோ வெளிநாட்டுலயோ வேல பாக்குற ஆம்பளைங்களுக்குப் பொம்பளைங்க பொட்டி தூக்குறாங்களா? இல்ல வெளிநாட்டுல வேலை பாக்குற பொம்பளைங்களுக்கு ஆம்பிளைங்க பொட்டி தூக்குறாங்களா? அட...என்ன இருந்தாலும் நீங்க புகுந்தவங்கதான. அதுக்காச்சும் பயிர்ப்புன்னு ஒன்னு வேணும்ல.

என்னது? காலம் மாறுமா? கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருதா? ஹி ஹி. முந்தி வீட்டு வேலை மட்டுந்தான். இப்ப வீட்டு வேலை. அலுவலக வேலை ரெண்டும். அதுல கணவனார் வேற ஊர்ல நல்ல வேலை கெடைச்சிப் போகனும்னு வெச்சுக்கோங்க...நீங்க உங்க வேலையத் தியாகம் செஞ்சுக்கிட்டு பின்னாடியே போகனும். தேவைப்பட்டா அங்க ஒரு வேலையத் தேடிக்கனும். இல்லைன்னா...குடும்பம் என்னத்துக்காகுறது! குடும்பத்திற்காக உழைத்து உழைத்து மெழுகாக உருகும் பெண்மணி அவள் கண்மணீன்னு பட்டம் கெடைக்காதுல்ல.

என்னவோ சொல்வாங்களே...ஆங்....நாற்றாங்கல்ல இருந்து எடுத்து வயல்ல நட்டாத்தான் நெல் செழிக்கும்னு. அது மாதிரி பெண்கள் பிறந்தது ஓரிடம். நெல் போலச் செழிப்பது ஓரிடம்னு பெருமையாச் சொல்வாங்கள்ள. நெல்லுக்கு ஒரே எடத்துல வளர்ர தெறமை இல்லை. வளந்தா ஒழுங்கா நெல்லு குடுக்காது. அது மாதிரித்தான் நீங்கன்னு சொன்னா...அதக் கூடப் பெருமையா ஏத்துக்கிட்டு...அடடா என்ன பெருந்தன்மை..என்ன பெருந்தன்மை... பெண்ணின் பெருந்தக்க யாவுள?

ஆகையால...பெண்களே வெட்கம் சூடு சொரணை ஆகிய தீய பண்புகளை ஆண்களுக்குக் கொடுத்து விடுத்து...மிகவும் பெருமை வாய்ந்த பண்புகளாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய நற்குணங்களோடு மகாலட்சுமியாகவும் சரசுவதியாகவும் இருந்து....குடும்ப விளக்காகவும் பொறுமையின் சிகரமாகவும் அடிமைத் திலகமாகவும் இருந்து வரும்படி அனைத்து சாதி மத இன இந்திய ஆண்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க மென்மை என்னும் பெண்மை என்னும் அருங்குணம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, November 26, 2007

காதல் குளிர் - 10

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

"என்னது ப்ரகாஷாவைக் காணமா? என்ன சொல்ற?" தூக்கக் கலக்கத்திலும் கடுகடுத்தான் சப்யா.

"ஹலோ...என்ன கடுகடுப்பு? காணம்னு சொல்றேன்." பதில் கடுகடுப்பு சித்ராவிடமிருந்து.

"சரி... மொபைல்ல கூப்புடு. வெளிய வாக்கிங் போயிருப்பான்."

"அதான் இங்க இருக்கே. நேத்து அவன் மெடிக்கல் ஷாப் போனப்புறம் பாத்தேன். டேபிள்ளயே வெச்சிட்டுப் போய்ட்டான். அது அங்கயே இருக்கு. எனக்கென்னவோ அவன் திரும்பி வந்தானோன்னே தெரியலை. பயமாருக்கு சப்யா?"

சப்யாவையும் கவலை கொஞ்சம் கட்டிப்பிடித்தது. "ரம்யா கிட்ட சொல்லீட்டுப் போயிருப்பானோ? அவ கிட்ட கேப்போமே"

"ம்ம்ம்ம்... கேக்கலாம். இரு நானே கேக்குறேன்." லேசாகத் திறந்திருந்த கதவைத் தள்ளியவள் அப்படியே திரும்பவும் மூடிவிட்டு வந்தாள்.

"என்னது கேக்காம... கதவ மூடீட்டு வந்துட்ட? தூங்குறாளா இன்னும்?"

சத்தம் போடாதே என்று சைகை காட்டி விட்டு சப்யாவின் கையைப் பிடித்து கிச்சனுக்குள் கூட்டிச் சென்றாள் சித்ரா. கிசுகிசுக்குரலில் சொன்னாள்.

"ப்ரகாஷாவும் உள்ளதான் தூங்குறான். அதான் கதவை திரும்பவும் மூடீட்டேன்."

"ஓ உள்ளதான் தூங்குறானா? அதுக்கு ஏன் இந்த கிசுகிசுப்பு?"

"ஐயோ...மெதுவாத்தான் பேசேன். தூங்குறான்னா....தூங்குறான். புரிஞ்சிக்கோடா மரமண்டை."

நறுக்கென்று கொட்டினான். "மண்டு....ஒடனே அதான் நெனப்பா ஒனக்கு....நம்மள மாதிரியே எல்லாரையும் நெனச்சா எப்படி? உள்ள சும்மா தொணைக்குப் படுத்திருப்பான்."

சப்யாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு காதருகில் சொன்னாள். "ஆமாமா....சும்மா தொணைக்குப் படுத்திருக்கிறவந்தான் சட்டையக் கழட்டீட்டுப் படுத்திருக்கான். அவன் நெஞ்சுல தலைய வெச்சு இவளும் கட்டிப் புடிச்சிக்கிட்டு தூங்குறாளா? ஜீன்ஸ் ஏன் தரைல இருக்கு? ரம்யாவோட டாப்சும்தான். வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா? இந்த விஷயத்துல என்னையவே நம்ப மாட்டேன். ரம்யாவையும் ப்ரகாஷாவை மட்டும் நம்பீருவேனா?"

சித்ராவை அணைத்துக் கொண்டான் சப்யா. நினைக்கும் பொழுதே அவனும் காதல் டிரெயினுக்கு டிக்கெட் எடுத்தான். "அப்படியா சொல்ற. இருக்கும். இருக்கும்." சித்ராவின் நெற்றியை எச்சில் படுத்தினான். "சரி.. இப்ப என்ன செய்யலாம்?"

"அட...ஒன்னுமே தெரியாதோ என்னோட ஷோனோர் பங்ளா ராஜாவுக்கு. அவங்களா வெளிய வரட்டும். கடைக்குப் போகனும்னு நீ ப்ரகாஷாவை வெளிய கூட்டீட்டுப் போ. அவனே ஏதாச்சும் சொல்வான். எங்கிட்ட காட்டுன பேச்சுத் திறமைல கொஞ்சத்த அவன் கிட்ட காட்டு. சரியா? நான் ரம்யாவை ஒரு வழி பண்றேன்."

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ப்ரகாஷா வெளியில் வந்தான். எதுவும் நடந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. சித்ரா குடுத்த டீயைக் குடித்தான்.

"சப்யா, என்னோட பிரஷ் காணோம். ஹொசா பிரஷ் வாங்கனும். வர்ரியா கடைக்குப் போகலாம்?" அவனே சப்யாவைக் கேட்டான்.

"புது பிரஷ்ஷா...வீட்டுலயே இருக்கே. எப்பவுமே ரெண்டு ஸ்பேர் பிரஷ் வெச்சிருப்போம். இரு எடுத்துட்டு வர்ரேன்." பெருமிதத்தோடு எழுந்தான் சப்யா.

பெட்ரூமுக்குள் நுழையப் போனவனை முறைப்போடு தடுத்தாள் சித்ரா. "அந்த பிரஷ் அன்னைக்கு ஒங்க காக்கா வந்தப்ப குடுத்துட்டேனே. புது பிரஷ் வீட்டுல இல்ல." புரிந்து கொண்டு வழிந்தான் சப்யா. "ஆமா ப்ரகாஷா...அன்னைக்கு சித்தப்பா வந்தப்போ சித்ரா எடுத்துக் குடுத்துட்டா. வா..கடைக்குப் போகலாம்."

சொல்லி வைத்த மாதிரி அவர்கள் வெளியே சென்றதும் ரம்யா வெளியே வந்தாள். அவள் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத மகிழ்ச்சி அவள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்து போனது. மறைக்க மறைக்க வெளியே தெரிந்தது.

"என்னடி...இப்ப ஒடம்பு எப்படியிருக்கு?"

கேட்ட சித்ராவை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ஏய்...நான் சித்ரா. ப்ரகாஷா இல்ல." சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்ரா.

"ஆமா....என்னடி இது? நேத்து சாந்தரந்தான் அவ்ளோ பேசுன? என்னென்னவோ கேட்ட. கதையப் படிச்சவங்கள்ளாம் ஒன்னைய பெரிய அறிவாளின்னு வேற பாராட்டீட்டாங்க. பாத்தா அன்னைக்கு ராத்திரியே இப்பிடி? என்னாச்சு? எல்லாமே முடிஞ்சிருச்சா?"

தலையை ஆட்டி ஆமாம் என்றாள் ரம்யா.

"அடிப்பாவி. வெச்சாக் குடுமி...செரச்சா மொட்டையா? இப்ப அவங்க அம்மா அழ மாட்டாங்களா? அழுதா என்ன செய்வ?"

ரம்யாவின் வெட்கப் பனி விலகியது. "நீ கேக்குறது சரிதான். நேத்து அவன் எலக்ட்ரால் கொண்டு வந்து குடுத்தான். குடிச்சப்புறம் பக்கதுல கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டுத்தான் வெளிய போனான். போனவனை நாந்தான் போக விடலை. எனக்கு ரொம்ப பயமாயிருந்தது. அவனையும் உள்ளயே இருக்கச் சொன்னேன். அவன் இருக்குறது பாதுகாப்பா இருந்துச்சு. அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்.....எப்படி தொடங்குச்சுன்னு தெரியலை. ஆனா நடந்துருச்சு."

"நடந்ததெல்லாம் சரிதான். எந்த நம்பிக்கைல இப்பிடி செஞ்ச? அவன் விட்டுட்டுப் போய்ட்டான்னா?"

"போக மாட்டான்" ரம்யாவின் குரல் பெல்ஜியன் வைரமானது.

"எப்படிச் சொல்ற?"

"தெரியாதுடி. அவனை நான் நம்புறேன். நேத்து சாந்தரம் அவனை என்னால நம்ப முடியலை. ஆனா இப்ப முடியுது. நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா இதுக்கு நானே பொறுப்பு. என்னோட ப்ரகாஷா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு."

"என்னது....உன்னோட ப்ரகாஷாவா? ம்ம்ம்ம்...நல்லாரு தாயே." சிரித்துக்கொண்டே ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தொடரும்....

இதுவரை கதையைப் படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த பகுதியில் கதை முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுவரை படித்துப் பாராட்டி நிறைகுறைகளை எடுத்துச் சொன்ன நீங்கள் அடுத்த பகுதியையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

பின் குறிப்பு

ரம்யாவின் காதில் ப்ரகாஷா சொன்ன கன்னடக் கவிதை. மொழி மாற்றப்பட்டு உங்களுக்காக.

சர்க்கரை நோயாளிக்கும் பரிந்துரைப்பேன்
முத்தத்தை விருந்தென
தித்தித்தாலும் மருந்தென

- மொழிபெயர்ப்பாளர் (ப்ரகாஷாவின் ரம்யா)

Saturday, November 24, 2007

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 4

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்


ஆம்பல் யார்? ஏன் சுரேஷ்களோடு மட்டும் ஆர்க்குட் நட்பு. அதிலும் ஒவ்வொரு சுரேஷுக்கும் ஒரு ஆம்பல் ஐடி? அதெப்படி ஒரு ஆம்பல் புரொபைலில் மட்டும் மனைவி அஞ்சலியின் புரொபைல்? மைக்ரோசாப்ட் நுழைவுத் தேர்வை விட கடினமான கேள்விகள் சுரேஷின் மூளைக்குள் மணியடித்தன.

விக்கிரமாதித்தன் கதைகள் படித்திருக்கின்றீர்களா? கதைக்குள் கதை. அந்தக் கதைக்குள் கதை என்று போகும். சுரேஷின் மூளைக்குள் திட்டம். திட்டத்துக்குள் திட்டம். அந்தத் திட்டத்துக்குள் திட்டம் என்று வலை விரிந்தது.

முதல் திட்டம் உடனே செயலானது. ஆர்க்குட்டில் சுரேஷ் என்று இன்னொரு புரொபைல் உருவாக்கினான். படம் போடவில்லை. தன்னைப் பற்றிய தகவல்களை மாற்றிக் கொடுத்தான். வலையை விரித்து வைத்துவிட்டு தேனையும் தெளித்து வைத்துவிட்டு வண்ணத்துப்பூச்சிக்குக் காத்திருந்தான்.

வந்தது வண்ணத்துப் பூச்சி. ஆம்பல்தான். ஆனால் புது புரொபைல். அவளுடைய படத்தோடு.

"ஹாய் சுரேஷ். ஒர் ஹாய் சொல்லலாம்னு வந்தேன்." இதுதான் ஸ்கிராப் புக்கில் ஆம்பல் எழுதியிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பதில் அனுப்பாமல் மூன்றாம் நாள் இப்படி எழுதினான். "ஹாய்".

பத்தே நிமிடத்தில் மறுமொழி. "ஒரு ஹாய் சொல்லவா ரெண்டு நாள் :)))))))))))))))))))))))))))))))))"

உடனே மறுமொழிந்தான். "இல்ல நீங்க யார்னு தெரியாது. அதான்....யோசிச்சுச் சொன்னேன். :)" ஸ்மைலியைக் கடைசியாகச் சேர்க்க மறக்கவில்லை.

இப்படி அப்பாவி போல நடித்தான். இவன் அப்பாவியாக ஆக அவள் அடிப்பாவியானாள். விரைவிலேயே ஒரு நட்பு உருவாகி விட்டது. அட நட்பு மாதிரி. இவன் நடிக்கிறான் என்று நமக்குத் தெரியுமே. அவள் கதைதான் தெரியாது.

நினைவிருக்கிறதா? பழைய சுரேஷிடம் ஒரு கதை சொன்னாளே.....பணக்கார அப்பா..சித்தி....சித்திக்குத் தம்பி...தம்பிக்கு நாற்பது வயசு....நாற்பது வயசுக்குக் கல்யாணம்...கல்யாணத்திற்கு ஆம்பல்..ஆம்பலுக்குச் சொத்து என்று. அந்தக் கதையை இங்கே சொல்லவில்லை. வேறொரு கதை.

"சுரேஷ், நம்ம பழகி ஒரு வாரம் ஆயிருக்குமா? ஆனா நெருங்கிய நட்பாயிட்டோம். உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். எனக்கு வாழப்பிடிக்கலை சுரேஷ். வாழப்பிடிக்கலை. I am a corporate. நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சொத்து. எல்லாமே இருக்கு. ஆனா அதை விட உள்பகை நெறைய இருக்கு. ஒரு சின்னப் பொண்ணு நம்மள வேலை வாங்குறதான்னு பெரிய பெருச்சாளிகள் நெனைக்கிறாங்க. ஷேர்களை எல்லாம் பிராடு பண்ணி திருடப் பாக்குறாங்க. அதுவுமில்லாம பேங்க் அக்கவுண்ட் கூட ஹாக் பண்ண முயற்சி செய்றாங்க. என்னோட லாக்கரைக் கூட யாரோ திறக்கு முயற்சி செஞ்சிருப்பாங்கன்னு சந்தேகமா இருக்கு. இப்பல்லாம் சாப்பிடவே பயமா இருக்கு. எதையாவது கலந்திருவாங்களோன்னு. உங்களைத் தனியா பாத்துப் பேசனும். வருவீங்களா? நீங்க நல்லா பழகுறது எனக்குக் கொஞ்ச சந்தோஷமாவது இருக்கு" கொஞ்ச சந்தோஷத்தில் கொஞ்சல் தெரிந்தது.

இங்கே இந்தக் கதை இப்படி ஓடிக்கொண்டிருக்க...பழைய புரொபைல் கதையும் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே அந்தக் கதை. இங்கே இந்தக் கதை. மர்மம் தெரியும் வரை அவனும் விடுவதாக இல்லை.

அப்பொழுதுதான் அவனுக்குக் கிடைத்தது வாய்ப்பு. ஆம். இந்தியாவிற்கு வேலை தொடர்பாக ஒரு மாதம் செல்ல. ஆம்பலைச் சந்திப்பதென்றே முடிவு செய்தான். அஞ்சலியையும் சந்திக்கப் போவது அப்பொழுது தெரியாது.

தொடரும்...

அடுத்த பாகத்தை எழுத காதல் இளவரசன் ஜியை அழைக்கிறேன். காதல் இளவரசன் ஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.:)

Tuesday, November 20, 2007

பெருமிகு தமிழ்ப் பண்பாட்டின் இன்னொரு முகம்

இந்த வீடியோவைப் பாருங்க. நம்மூரு ஆளுங்கதான். என்ன சொல்றதுன்னே தெரியலை...

அடுத்தவன் சோத்துல திங்க வெக்கமா இல்லை...எப்படிடா காசு குடுன்னு வெக்கமில்லாம கேக்குறீங்க? சீச்சீ மானங்கெட்ட மடையங்களா! வரதட்சண வாங்குன ஒவ்வொரு கணவனும் கண்ண மூடிக்கோங்க. இல்லைன்னா வெக்கமாயிருக்கும்.

இந்தச் சுட்டிக்குப் போங்க வெவரம் புரியும்.

வெறுப்புடன்,
கோ.இராகவன்

Monday, November 19, 2007

காதல் குளிர் - 9

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

பக்கத்தூர் என்பது ஏதோ பெரிய ஊர் என்று எண்ணிவிட வேண்டாம். பட்டிக்காட்டிலிருந்து பட்டிக்காட்டிற்கு வந்தார்கள். அங்கும் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. இருட்டும் குளிரும் மட்டுமே கூடியது. என்ன செய்வதென்று யாருக்கும் தோன்றவில்லை. பெராவை வைத்துக் கொண்டும் பயந்து போயிருக்கும் ரம்யாவை வைத்துக் கொண்டும் விழித்தார்கள். தங்குவதற்கு ஒரு விடுதியும் இல்லை.

அப்பொழுதுதான் ப்ரகாஷாவிற்கு அந்தத் திட்டம் தோன்றியது. அவர்கள் வந்த ஆட்டோவிடம் போனான். மதுராவிற்கு ஆட்டோ வருமா என்று கேட்டான். ஒப்புக்கொள்ளாத டிரைவரிடம் பேசிச் சரிக்கட்டினான். அறுபது கிலோமீட்டர் தொலைவு. முந்நூற்று ஐம்பது ரூபாய்களுக்குப் பேரம் பேசி ஆட்டோவை மதுராவுக்குத் திருப்பினான்.

விதி...அல்லது கடவுள்...எப்படி விளையாடுகின்றார் பார்த்தீர்களா? நான்கு மணி வாக்கில் ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார விரும்பாமல் முன்னால் சென்று உட்கார்ந்தாள் ரம்யா. ஆனால் இப்பொழுது கிடுகிடு ஆட்டோவின் பின்னால் பிரகாஷாவை ஒட்டிக்கொண்டு...சாய்ந்து கொண்டு...கட்டிக்கொண்டு....அட. அதே ரம்யாதான். அப்பொழுது நொந்து பாடிக்கொண்டிருந்த ப்ரகாஷாவின் உள்ளம் இப்பொழுது காதற் சிந்து பாடிக் கொண்டிருந்தது.

ரம்யாவின் நிலையோ வேறுவிதம். படபடப்பும் பயமும் அடங்காமல் அவன் அணைப்பிலே அடங்கியிருந்தாள். இதே நெருக்கத்தில் அவள் இதற்கு முன்பும் உட்கார்ந்திருக்கிறாள். ஆனால்...இன்றைய நெருக்கத்தில் வேறு எதையோ உணர்ந்தாள். சரி. எதையோ உணர்ந்தார்கள். அதுக்குப் பேர் காதல்தானா!

ஆட்டோ ஜக்கடிஜக்கடியென ஒருவழியாக மதுராவிற்குள் நுழைந்தது. பெரிய பட்டிக்காடு அது. கோயில் உள்ள ஊர். புகழ் பெற்ற ஊர். ஆனால் பட்டிக்காடு போல இருந்தது. பெட்டிக்கடைகளும் மஞ்சள் பல்புகளும் அழுது வடிந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையம் என்பது நான்கே பேருந்துகள் நிற்கக் கூடிய இடமாகவே இருந்தது. அதிலும் இருந்தது ஒரே ஒரு பேருந்து. பெரிய வேன் என்று சொல்லலாம். அதுவும் வேறொரு ஊருக்கு. டெல்லிக்கோ நொய்டாவிற்கோ எதுவும் இருப்பது போலவே தெரியவில்லை.

"ரம்யா இல்லே இரு. பத்து நிமிசத்துல வர்ரேன். சப்யா பாத்துக்கோ" சொல்லிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் எதையோ சொல்லி அழைத்துச் சென்றான். சரியாகப் பத்து நிமிடத்தில் ஒரு ஜீப்போடு வந்தான். இரண்டாயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்திருந்தான். ஏனென்றால் வேறு ஒரு வண்டியும் இல்லை. அதுவுமில்லாமல் ஏற்கனவே எட்டரை மணியாகியிருந்தது. தங்க நல்ல இடமும் இல்லை. ஆகையால் எப்படியாவது நொய்டா போவதுதான் நல்லது என்று முடிவு செய்தான் ப்ரகாஷா. அதனால்தான் வண்டியைப் பிடித்து வந்தான்.

வண்டியில் பிரகாஷாவின் மடியில் படுத்துக் கொண்டாள் ரம்யா. அப்பொழுதுதான் சித்ரா கேட்டாள்.

"ஏய்....எங்கடி நீ வாங்குன தாஜ்மகால்? அந்தப் பைய மட்டும் காணோமே. மித்ததெல்லாம் இருக்கே."

"அத ஆட்டோலயே விட்டுட்டேண்டி."

"ஆட்டோலயா?"

"ஆமா. அத வாங்குனதுனாலதான் இப்படியெல்லாம் ஆச்சோன்னு தோணிச்சு. அதான் ஆட்டோலயே விட்டுட்டேன். என்ன இருந்தாலும் அது காதல் கல்லறை....அதுனால எனக்குப் பிடிக்கலை. அந்தத் தாஜ்மகால் எனக்கு வேண்டாம். அதுனாலதான் ஆட்டோலயே வெச்சிட்டேன்."

சொல்லி விட்டு தூங்கிவிட்டாள் ரம்யா. படபடப்பு லேசாகக் குறைந்தது போல இருந்தது. தலைவலி மட்டும் லேசாக இருந்தது. ஒருவழியாக நொய்டா வந்து சேர்ந்தார்கள். அதுவும் பதினொன்னரை மணிக்கு. வெளியே குளிர் கும்மியடித்துக் கொண்டிருந்தது. சப்யா ஹீட்டர்களைத் துவக்கினான்.

ரம்யா தொண்டையத் தடவிக்கொண்டு எதுக்களித்தாள். "என்னடி மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு?"

"வாந்தி வர்ர மாதிரி இருக்கு." லேசாக உமட்டினாள்

அந்நேரம் பெரா அழத் தொடங்கினான். தூக்கத்திற்குத்தான். ப்ரகாஷாவிடம் சொன்னாள் சித்ரா. "டேய். பக்கத்துத் தெருவுல மெடிக்கல் ஷாப் இருக்கு. எலக்ட்ராலும் அவாமினும் வாங்கீட்டு வா. போக ரெண்டு நிமிஷம். வர ரெண்டு நிமிஷம். பட்டுன்னு வந்துரு. இந்தா சாவி." வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே போனான் அவன். பெராவின் அழுகை கூடியது.

சித்ராவை ரம்யா அழைத்தாள். "ஏய். நீங்க போய்ப் படுங்க. எனக்கு இப்பத் தேவலை. அவன் வந்ததும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கிறேன். இப்ப உள்ள போய்ப் படுக்கிறேன்.

ரம்யா அவள் அறைக்குச் சென்று கதவைச் சும்மா மூடிக்கொண்டு படுத்தாள். சித்ராவும் சப்யாவும் பெராவைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்கள்.

தூங்கிக் காலையில் எழுந்த சித்ராவிற்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சப்யாவை எழுப்பினாள். "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."

-----------------------------------------------------
பின்குறிப்பு

சித்ரா எப்பொழுதோ மனதில் எழுதி மறந்து போன கவிதை

விடிவது என்றால் என்ன?
உனது நிழல்
என் மீது படிவதுதான்
இல்லையென்றால் மடிவதுதான்


தொடரும்

Sunday, November 18, 2007

பாட்டு கண்டுபிடிங்க பாக்கலாம்?

ரெண்டு பாட்டு தர்ரேன். கேளுங்க. ஆனா தெலுங்குல உந்தி. அந்தத் தெலுங்குப் பாட்டுகள் தமிழ்லயும் உந்தி. அது என்னென்ன பாட்டுன்னு கண்டுபிடிங்க பாக்கலாம். ஆனா போட்டி அவ்ளோ லேசாவா இருக்கும். 1975லிருந்து 1980க்குள் வந்த பாட்டுகள் ஒங்களுக்குத் தெரியும்னா இந்த ரெண்டு பாட்டடயுமே கண்டுபிடிச்சிரலாம். ஒன்னு பெரிய நடிகரோட படம். இன்னோன்னு பெரிய இயக்குனரோட படம்.

இப்ப மொதப் பாட்டு. இது எல்.ஆர்.ஈஸ்வரியும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடியிருக்காங்க தெலுங்குல. தமிழ்லயும் பாலு உண்டு. ஆனா ஈஸ்வரி கிடையாது. இன்னொரு பிரபல ஆண் பாடகர். தமிழில் ஒரு போட்டிப் பாட்டு இது.


அடுத்தது இந்தப் பாட்டு. இசையரசியும் பாலுவும் பாடியிருக்காங்க தெலுங்குல. தமிழ்ல இசையரசி இல்லை. பாலுவின் தனிக்காட்டு ராஜாங்கம். இந்தப் பாட்ட லேசாக் கண்டுபிடிச்சிருவீங்கன்னு நெனைக்கிறேன்.


இங்க குடுத்துருக்குற ரெண்டு பாட்டுமே...தெலுங்குல ஒரே படத்துல வருது. சிம்ஹ பாலுடு அப்படீங்குற படம். என்.டி.ராமாராவ் நடிச்சது.

ரெடி. ஸ்டார்ட்...1...2....3

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 12, 2007

காதல் குளிர் - 8

சென்ற பகுதி இங்கே

ஏன் கத்தினாள் ரம்யா? அப்படியென்ன நடந்தது? இதுதானே உங்கள் கேள்வி. இதோ சொல்கிறேன்.

காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும் கே.ஆர்.எஸ்சின் கவனம் ரம்யா மேல் இருந்தது. வடக்கத்திய ஆலூ சாட்டுகளையும் வெளிநாட்டு பர்கர்களையுமே பார்த்திருந்த அவனுக்குத் தென்னாட்டுத் தேங்காய்ச்சாதம் புதுமையாகத் தெரிந்தது. அந்தப் பார்வையில் காரோட்டுவதில் இருந்த கவனம் சிதறியது.

அவனுடைய கெட்ட நேரம்...சட்டென்று ஒரு மொபெட் குறுக்கே..........அந்த மொபெட்டின் பின்னால் பெரிய கேனில் பெட்ரோல் வேறு. அந்த மொபெட் குறுக்கே வருவதைப் பார்த்துதான் கத்தினாள் ரம்யா. கே.ஆர்.எஸ் சுதாரித்து பிரேக்கை அழுத்தினான். அந்தப் பெரிய சாலையில் அந்த வேகத்தில் கீஈஈஈஈஈச்சென்று கருப்புக்கோடுகளைத் தேய்த்தது கார். சத்தத்திலும் பரபரப்பிலும் அரைத்தூக்கத்தில் இருந்த சப்யா, சித்ரா, ப்ரகாஷாவும் எழுந்து விட்டார்கள்.

ஆனாலும் நடந்ததைத் தடுக்க முடியவில்லை. கார் மொபெட்டில் பின்னால் இடிப்பதைப் பார்த்தாள் ரம்யா. அடுத்த நொடியில் மொபெட் சாய்ந்தது. ஓட்டிக்கொண்டிருந்த முகம் தெரியாதவர் மேலே தூக்கி வீசப் பட்டார். கீழே விழுந்த மொபெட் காருக்கடியில் சிக்கிக்கொண்டு காரின் வேகத்தைத் தடுத்தது. அதற்குள் தூக்கி வீசப்பட்ட நபர் காருக்குப் பின்னால் சென்று சொத்தென்று விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. சாலையைப் பெட்ரோல் கழுவியது.

கே.ஆர்.எஸ் காரை வேகமாக ஓட்டித் தப்பிக்க நினைத்தான். ஆனால் காரில் சிக்கிக்கொண்ட மொபெட் காரை நகரவிடவில்லை. அதற்குள் பெருங்கூட்டம் கூடி காரை மறித்தார்கள். வேறு வழியேயில்லாமல் கார் மண்ணில் ஒதுங்கியது.

போத்தீஸ் ஆடித்தள்ளுபடிக் கூட்டம் போல காரைச் சுற்றிக் கூட்டம். ஒருவன் படக்கென்று கதவைத் திறந்து ரம்யாவை வெளியே இழுத்தான். ஆனால் காரை அவள் ஓட்டவில்லை என்று தெரிந்ததும் இரண்டு மூன்று பேர் கே.ஆர்.எஸ்சை வெளியே பிடித்து இழுத்தார்கள். குனிய வைத்து தரும அடிகளை அள்ளி வழங்கினார்கள் அந்தக் கலியுக வள்ளல்கள்.

ரம்யா இழுபடுவதைப் பார்த்ததும் ப்ரகாஷா படக்கென்று இறங்கி வந்தான். ரம்யா ஓடிப் போய் அவனிடம் ஒட்டிக்கொண்டாள். அவள் தன்னிலையிலேயே இல்லை என்று சொல்லலாம். அவள் கண் முன்னால் மொபெட்டில் இருந்தவர் தூக்கி வீசப்பட்டு விழுந்த காட்சியே திரும்பத் திரும்ப வந்தது. பயம். உடம்பு வெடவெடவென நடுங்கியது.

அதற்குள் சப்யாவும் சித்ராவும் ஃபெராவைத் தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். அவர்கள் பைகள் அனைத்தையும் இறங்கினார்கள்.

ஆனால் இவர்களை யாரும் கவனித்தது போலத் தெரியவில்லை. செமையாக கவனிப்பதற்குக் கே.ஆர்.எஸ் இருக்கும் பொழுது இவர்களைக் கவனித்து என்ன செய்ய! அதற்குள் ஒருவர் கார்ச்சாவியை கே.ஆர்.எஸ்சிடமிருந்து பிடுங்கி காரில் ஏறினார். கே.ஆர்.எஸ்சையும் உள்ளே ஏற்றினார்கள். கீழே விழுந்திருந்தவரையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு ஓட்டினார்கள்.

ரோட்டில் இருந்த ரத்தத்தைப் பார்த்ததும் ரம்யாவிற்குக் கண்ணைக் கட்டியது. ப்ரகாஷாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மறுகையில் இருவருடைய பைகள் வேறு.

"ஒங்க காரா இது? எங்கயிருந்து வர்ரீங்க?" இந்தியில் கேட்டார் ஒருவர். ப்ரகாஷாதான் இந்தியில் பேசினான். "அது வாடகைக்காரு. நொய்டால இருந்து வர்ரோம். இப்ப கார எங்க கொண்டு போயிருக்காங்க?"

"ஆஸ்பித்திரிக்கு. ஒங்க கார் இல்லையா அது? வாடகையா? அப்ப நீங்க கெளம்பீருங்க. டிரைவரத்தான் பிடிச்சாச்சுல்ல."

அதற்குள் அதே ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர்...பெட்ரோல் வழுக்கி விழுந்தார். "அடடா...இது சபிக்கப்பட்ட ரோடு போல இருக்கே. ஏய்...எல்லாரும் மண்ண அள்ளிப் போடுங்கடா" என்று ஒருவர் குரல் குடுக்க..அனைவரும் மண்ணை அள்ளிப் போட்டனர்.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய ப்ரகாஷா, சப்யாவையும் சித்ராவையும் அழைத்தான். கூட வரச்சொன்னான். ரம்யாவையும் கூட்டிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் நடந்தார்கள்.

எந்த ஊரென்று தெரியவில்லை. பேரும் தெரியவில்லை. ஏதோ பட்டிக்காடு என்று மட்டும் புரிந்தது. ஆக்ராவிலிருந்து வருகின்ற பேருந்துகள் எல்லாம் அப்படித்தானே வர வேண்டும். வந்தன. ஆனால் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் குளிரத் தொடங்கிவிடும். பெரா வேறு நசநசக்கத் தொடங்கியிருந்தான்.

அங்கிருந்த ஒருவரிடம் ப்ரகாஷா டெல்லி செல்ல பஸ் கிடைக்குமா என்று கேட்டான். அவர் சிரித்து விட்டு, "இங்க எங்க பஸ்சு? அதோ ஆட்டோ இருக்கு பாருங்க. ஷேர் ஆட்டோ. அதான எங்களுக்கு பஸ்சு. அதுல போனா பக்கத்தூரு போகும். அங்க பஸ்சுக நிக்கும்."

அவரிடம் நன்றி சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினான். அது ஷேர் ஆட்டோ. உள்ளே கொஞ்ச பேர் உட்காரலம். வெளியே பின்னாடி பார்த்துக் கொண்டும் கொஞ்ச பேர்...டிரைவருக்குப் பக்கத்திலும் கொஞ்ச பேர் உட்காரலாம். ஒருவழியாக எல்லாரும் உட்கார்ந்து கொண்டார்கள். தடதடவென ஆடிக்கொண்டே ஆட்டோ பக்கத்தூருக்குக் கிளம்பியது. ப்ரகாஷாவை இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ரம்யா. கொஞ்சம் பேதலித்த நிலை. வெறும் பயம்தான்.

வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருள் வரத் தொடங்கியிருந்தது. பேர் தெரியாத ஊரிலிருந்து பேர் தெரியாத ஊருக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார்கள். நொய்டா போனார்களா?

பின்குறிப்பு

ப்ரகாஷாவின் டையில் இருந்து திருடப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட காதல் கவிதை...அதாவது ப்ரேம கவிதே...எதுவும் புரிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.

வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை


தொடரும்...

Monday, November 05, 2007

காதல் குளிர் - 7

சென்ற பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.

ரம்யா கேட்ட கேள்வி புரிந்ததா புரியவில்லையா என்றே ப்ரகாஷாவுக்குப் புரியவில்லை. ஆத்திரப்படும் அப்பாவை நினைக்க முடிந்தது. ஆனால் அழும் அம்மாவை. வேண்டாம் மகனே என்று சொல்லி அம்மா அழுதால்.... நினைப்பதற்கே அவனுக்கு அசிங்கமாக இருந்தது. அந்த அசிங்க நினைப்பே அவன் வாயையும் மூடி வைத்தது.

"என்னடா அமைதியாயிட்ட?" கேட்ட ரம்யாவைப் பாவமாகப் பார்த்தான் ப்ரகாஷா. முகத்தில் குழப்பமும் கவலையும் கூட்டணி அமைத்திருந்தன.

"பாத்தியாடா....அப்படி ஒரு நெலமை வந்தா என்ன முடிவை நீ எடுப்பன்னு உன்னால யோசிச்சுக்கூடப் பாக்க முடியலை. அதுனாலதான் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்குற. சப்யா காதலைச் சொன்னதும் சித்ரா ஒத்துக்கிட்டா. ஏன்? சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."

சப்யாவிற்கும் சித்ராவுக்கும் ரம்யா சொல்ல வருவது புரிந்தது. ஆனால் ப்ரகாஷா ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

ரம்யா அவனது கன்னத்தில் கை வைத்து முகத்தை நிமிர்த்தினாள். அவள் தொட்டது கங்கு கன்னத்தில் பட்டது போல இருந்தது அவனுக்கு. படக்கென்று நிமிர்ந்தான். "டேய். நீ நல்லவன். அதுல எந்தச் சந்தேகமும் எனக்கு இல்ல. உன் மேல உண்மையான அன்பு எனக்கும் இருக்கு. ஆனால் காதல் வரனும்னா...உன்னுடைய அன்பும் அழகும் மட்டும் போதாதுடா...ஏதோ குறையுது. உன்ன இன்னைக்குக் காதலிக்கத் தொடங்கீட்டு....நாளைக்கு அம்மா அழுதாங்க ஆட்டுக்குட்டி உழுதாங்கன்னு சொல்லி வேற எந்த முடிவு எடுத்தாலும் கஷ்டம் எனக்குத்தான். உனக்குந்தான் கஷ்டம். ஆனா அது நீ எடுத்த முடிவு. அதுக்காக நானும் ஏன் கஷ்டப்படனும்?"

"ரம்யா...உனக்கு இப்ப பதில் இல்ல. எனக்குத் தெரியலை. ஆனா நன் ப்ரீத்தி நிஜா. அது நிஜா ஆகுத்தே. இனி இது பகே பேசலை. பேச வேண்டாம்."

தாஜ்மகால் கல்லறையாமே. அதனால்தான் அங்கு வைத்துக் காதலைச் சொன்னதும் சோகம் உண்டானதோ. ம்ம்ம்..என்னவோ...இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? ரம்யாவின் கேள்விகளும் சரியாகத்தான் தெரிகின்றன. அப்படி எதுவும் யோசிக்காததால் ப்ரகாஷாவின் காதல் பொய்யான காதலாகி விடுமா என்ன?

சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரும் கிளம்பி வெளியே வந்தனர். ரம்யா தாஜ்மகால் பொம்மைகள் வாங்க விரும்பினாள். அழகாக பளிங்குக் கற்களில் செய்திருந்த தாஜ்மகால்கள் ஈர்த்தன. ஆனால் பேரம் பேசி வாங்க வேண்டுமே. ப்ரகாஷாதான் பேரம் பேசினான். யோசித்து யோசித்து ஒன்று..இரண்டு...மூன்று..நான்கு என்று வாங்கினாள். அட்டைப்பெட்டியில் காகிதச்சுருகளை வைத்துக் கட்டிக் குடுத்தார்கள். வாங்கிக் கொண்டு டாக்சியை நோக்கி நடந்தார்கள்.

கே.ஆர்.எஸ் சிரித்துக் கொண்டே வரவேற்றான். "ஆயியே சாப். முடிஞ்சதா? அடுத்து எங்க போகனும்?" மணி நான்குதான் ஆகியிருந்தது. வேறெங்கும் போவார்கள் என்று நினைத்துக் கேட்டான்.

அன்றைய திட்டப்படி பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து விட்டதால் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்தான் சப்யா. அதற்கு முன் அலைந்த களைப்பில் முதலில் டீ குடித்தார்கள்.

காரில் ஏறப் போகையில் ரம்யா உள்ளே உட்கார கதவைத் திறந்தான் ப்ரகாஷா. "நான் முன்னாடி உக்கார்ரேன் ப்ரகாஷா. வரும் போது பேசீட்டே வந்ததால ஊரெல்லாம் பாக்கலை. இப்பப் பாத்தாத்தானே உண்டு. இதுக்காகன்னு எப்ப வரப் போறோம்." சொல்லிக் கொண்டே முன்னால் ஏறினாள் ரம்யா. ஏறியவளைப் பார்த்துச் சிரித்தான் கே.ஆர்.எஸ். அவனைக் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தாள்.

சப்யாவும் சித்ராவும் பின்னாடி ப்ரகாஷாவோடு உட்கார்ந்து கொண்டார்கள். ரம்யா ப்ரகாஷா விஷயத்தைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். வேறொரு நல்ல சமயமாகப் பார்த்துப் பேசி முடிவுக்கு வர விரும்பினார்கள்.

தன்னோடு உட்காராமல் முன்னாடி சென்று ரம்யா உட்கார்ந்தது ப்ரகாஷாவுக்கு வலித்தது. என்னென்ன அவன் மனதில் ஓடின என்பதே அவனுக்குப் புரியாத அளவுக்கு வேகமான சிந்தனைகள். வீடு வர இன்னும் மூன்று மணி நேரங்கள் ஆகும். அதுவரை இப்படித்தான் சிந்தித்துக் கொண்டே இருக்கப் போகிறானா? அதற்கு அப்புறமும் சிந்திக்காமலா இருக்கப் போகிறான்?

ஆனால் ஒன்று. நடந்த நிகழ்ச்சி அவனுக்குள் எதையோ மாற்றி விட்டது. அது என்னவென்று அவனுக்கும் புரியவில்லை. பழைய ப்ரகாஷா இல்லை அவன். காதல் வந்தால் ஒருவன் மாறித்தான் ஆக வேண்டுமா என்ன? யாரய்யா கண்டுபிடித்தது இந்தக் காதலை. அவர் மட்டும் கண்ணில் பட்டால் அவரைச் சப்பாத்தி மாவு பிசைந்திருப்பான். என்ன செய்வது..கடவுள் எல்லாருக்கும் எப்பொழுதும் கண்ணில் தெரிவதில்லையே. ஏதோ அவருக்கு நல்ல நேரம்.

ரம்யாவின் மனதிற்குள் வேறு விதமான சிந்தனைகள். சற்று அதிகமாகவே பேசி விட்டோமோ என்றும் கூட யோசித்தாள். ஆனாலும் அவளது கேள்விக்கு விடை கிடைக்காதது ஏமாற்றமாகவே இருந்தது. "யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று அவன் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள். அப்படி அவன் சொல்லியிருப்பான் என்று நினைப்பதே இனிமையாக இருந்தது. ஆனால் சொல்லவில்லை என்ற அப்பட்டமான உண்மை கசந்தது.

இப்படி ஒவ்வொரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்கையில் கார் நொய்டாவை நோக்கி விரைந்தது. அப்பொழுதுதான் கத்தினாள் ரம்யா.

தொடரும்