---------------------------------------------------------
"கதிரவா, இன்றோடு உனக்கு வயது பதினெட்டு. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேனப்பா. உன்னுடைய தந்தை உனக்கென்று ஒதுக்கி வைத்திருந்த பொறுப்பை உன்னிடம் இந்த நாளில் ஒப்படைக்கச் சொன்னார்."
கதிரவனிடம் சொன்னது அவனது அன்னை அமுதம். பொறுப்பு என்று முதன்முதலாகக் கேட்டதும் திகைத்தான் மகன். "என்னம்மா பொறுப்பு? தந்தை எனக்கிட்ட கட்டளைதான் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?"
அவனுடைய தலையைக் கோதியவர், கையைப் பிடித்து மச்சு வீட்டிற்குள் அழைத்துச் சென்றால். பட்டிக்காடுகளில் பெரிய வீடுகளில் மச்சு வீடு என்று உள்ளறை இருக்கும். உள்ளே முக்கியமான பொருட்கள் பல இருக்கும். கதிரவன் பலமுறை சென்ற அதே அறைதான். சுவற்றின் ஒரு பக்கம் மஞ்சளும் குங்குமமும் இட்ட வேல்கள். ஒரு பக்கம் பல பெட்டிகள். அவைகளுக்குள் மதிப்புள்ள பல பொருட்கள். ஒருபுறம் பெரிய குலுக்கை. அந்தக் குலுக்கை நிறைய கம்பு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மணம் மச்சுவீடு முழுவதும் நிறைந்திருந்தது. அந்த நறுமணத்தை அனுபவித்தவாரே இருவரும் உள்ளே சென்றனர்.
அங்கிருந்த பெரிய பெட்டி ஒன்றிலிருந்து சிறிய பெட்டி ஒன்றை எடுத்தார் அமுதம். அந்தப் பெட்டிக்குப் பூட்டே இல்லாமல் இருந்தது. பார்த்தால் எல்லாப்புறமும் மூடியிருந்தது போல இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ரம்பப்பல் போல வரிசையாகச் செதுக்கியிருந்தது. அதை மகனிடம் கொடுத்தார். "இந்தாப்பா. உன்னிடம் அவர் கொடுக்கச் சொன்ன பெட்டி."

பெட்டியை வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான். எப்படித் திறப்பதென்றே தெரியவில்லை. "என்னம்மா இது? இதை எப்படித் திறப்பதென்றே தெரியவில்லையே. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?"
மகனின் கேள்வியைக் கேட்டு சிறிதாகச் சிரித்தார். "கதிரவா, அது எனக்குத் தெரியாதே. உன்னிடம் ஒப்படைக்கச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே. ஆனால் இதைப் பொறுப்பு என்றுதான் சொன்னார். நீ அறிவுள்ளவனாக இருந்தால் இதைச் செய்து முடிப்பாய் என்று அவர் நம்புவதாகச் சொன்னார்."
கேட்கக் கேட்க கதிரவனின் படபடப்புக் கூடியது. "அம்மா....வணிகம் செய்யச் சென்ற தந்தை ஆண்டு பலவாகியும் நாடு திரும்பவில்லை. அப்படியிருக்க இது எப்பொழுதம்மா நடந்தது?"
கவலைப்பனி அமுதத்தின் முகத்தை மூடியது. "ம்ம்ம்ம்....என்னை மன்னித்து விடப்பா. வணிகம் சென்ற தந்தை திரும்பவில்லை என்று உன்னிடம் பொய் சொன்னேன். உன்னுடைய பாட்டனார் செங்கையார் ஒரு மருத்துவர். உயிர்தொடுச் செங்கையார் என்று ஊர் புகழ்ந்தது. அவர் தொட்ட இலை மூலிகை. மிதித்த வேர் சஞ்சீவி என்று சொல்வார்கள். அத்தோடு விவசாயமும் செய்து வந்த குடும்பம். அப்படியிருக்க உன்னுடைய தந்தை செங்கோமான் மட்டும் ஆனைகளின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். பெருஞ் செல்வந்தர்கள் வீடுகளிலும் அரண்மனைக் கொட்டடியிலும் இருக்கும் ஆனைகளோடு பழகினார்.
ஆனாலும் அவருக்கு மருத்துவப் பயிற்சியை உனது பாட்டனார் முறையாகக் குடுத்தார். பொருத்தமான சமயத்தில் என்னையும் திருமணம் செய்து வைத்தார். முருகன் அருளால் நீயும் பிறந்தாய். மருத்துவத்தில் உன் தந்தை சிறப்பாக தேர்ந்திருந்தாலும் ஆனைப் பழக்கம் அவரை விடவில்லை. அவரும் அவருடைய உற்ற தோழர் இளங்கோவும் ஆனைப் பயிற்சியிலும் போர்ப் பயிற்சியிலும் கூட ஈடுபட்டிருந்தார்கள்."
இடைமறித்தான் மகன். "இளங்கோ என்றால் சித்திரையின் தந்தைதானே அம்மா?" சித்திரை என்பவன் கதிரவனின் தோழன். வயதொத்தவன்.
"ஆம். சித்திரையின் தந்தையேதான். இந்தப் பெட்டியை என்னிடம் கொடுக்கும் பொழுது உனக்கு வயது மூன்று. அப்பொழுது உன் தந்தை தோழருடன் ஆனை வணிகம் நடந்த களிற்றூருக்குச் சென்றார். அதாவது அப்படித்தான் ஊரிலும் வீட்டிலும் சொன்னார். என்னிடம் மட்டும் இந்தப் பெட்டியைக் கொடுத்து, ஏதோ கடமை இருப்பதாகவும் அதை முடித்து விட்டுத் திரும்புவதாகவும், எவ்வளவு நாளானாலும் மாதங்களானாலும் ஆண்டுகளானாலும் அவர் வருகைக்காக் காத்திருக்குமாறும் சொல்லிச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். இன்னும் வரவில்லை. இதைத்தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாதப்பா. அவருக்காகவும் அவர் கொடுத்த பொறுப்பு உன்னால் முடிக்கப் படவும்தான் காத்திருக்கிறேன்." சொல்லும் பொழுதே விசும்பினார் அமுதம்.
தாயின் பழைய நினைவுகளைக் கண்ணீரில் காணச் சகிக்காத கதிரவன் அவரது கண்களைத் துடைத்தான். "வருந்தாதீர்கள் அம்மா. தந்தை கொடுத்த கடமையையும் நிறைவேற்றி...அப்பா எங்கிருந்தாலும் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேனம்மா. நீங்கள் அழாதீர்கள். உங்கள் வருத்தம் என்னையும் துன்புறுத்துகிறதம்மா."
மகனின் உறுதிமொழி அவரின் உள்ளத்தை நெகிழ வைத்திருக்க வேண்டும். "கதிரவா, உன் மீது நம்பிக்கை இருக்கிறதப்பா. தாத்தா இருக்கும் வரை அவரிடம் மருத்துவமும் ஓரளவு கற்றிருக்கிறாய். பாட்டியும் நானும் கற்றுக் கொடுத்த உழவும் உனக்குத் தெரியும். ஊரில் அனைவரும் உன்னைப் புகழ்கின்றனர். நீ தந்தை கொடுத்த பொறுப்பைச் சிறப்பாக முடிப்பாய் என்று நம்புகிறேன். சரி...முதலில் உணவு. உனக்குப் பிடித்த விரால் மீன் குழம்பும் செந்நெற்சோறும் கெட்டித் தயிரும் காத்திருக்கிறது."
பிறந்த நாளன்று நல்ல உணவு உண்டு திண்ணையில் வந்தமர்ந்தான். உண்ட சுவையுணவும் அணிந்திருந்த புது வேண்டியும் தோளில் போட்டிருந்த புதுத்துண்டும் அவனுக்கு மகிழ்ச்சியைக் குடுக்கவில்லை. தந்தை கொடுத்த பொறுப்பும் தாயார் கொடுத்த பெட்டியும் அவன் மனதைக் குழப்பிக் கொண்டேயிருந்தன. துண்டையெடுத்து தலையில் கட்டிக்கொண்டு தோழன் சித்திரையைப் பார்க்கலாம் என்று குதித்துக் கிளம்பினான். சித்திரையிடம் அவனுக்கு இன்னொரு வியப்பான செய்தியை காத்துக் கொண்டிருந்தது.
தொடரும்....








